என்றென்றும் வேண்டும்-18
பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா
பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும் பிரேத நிலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர். பித்ருக்களை நினைத்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம்.
நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள். மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ச்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.
ஸ்ரார்த்தம் செய்வதினால் யாருக்கெல்லாம் திருப்தி?
1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.
3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்.
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.
பித்ருக்களின் அனுக்ரஹம்
நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள். இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவ்ருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை-மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.
மந்திரங்கள்
ஸ்ரார்த்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம். அதே மாதிரி கர்த்தா கூடியமானவரையில, அப்யாசம் இல்லாவிட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம். சிரத்தையுடன் ஸ்ரார்த்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதீக கர்மாக்களில் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரார்த்த இறுதி கட்டத்தில் சிரார்த்த பிராஹ்மண்ர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்னத் தெரியுமா? நாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும். எங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது. வேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும். உணவு நிறைய கிடைக்க வேண்டும். அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் கோரி ஆசி பெறுகின்றோம்.
இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு
ஸ்ரார்த்த நியமம்
இரண்டாவடி ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் இறந்த அதே மாதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தம்.
ஸ்ரார்த்ததில் ஸ்ரத்தை மிகமிக முக்கியம். கர்த்தா ஸ்ரார்த்த மாதம் அலல்து ஸ்ரார்த்த பக்ஷம் முழுவதும் நிபமத்துடன் இருக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் குறைந்த பக்ஷம் முன் 3 நாளாவது நிபமத்துடன் இருக்க வேண்டும். நியமம் என்றால் அந்த நாட்களில் வெளியில் சாப்பிடவதாக இருந்தால் சகோதரர், குரு, மாமா, மாமியார் வீட்டில் அல்லது மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது. வபனம் [க்ஷவரம்] அப்யங்கம் [எண்ணை தேய்த்துக் குளித்தல்] ஸ்த்ரீ ஸங்கமம் முதலியவை கூடாது.
காயத்ரி ஹனிமூன் போவதைப் பற்றி கேட்பதையே விட்டு விட்டாள். விஸ்வநாதன் முடியாது என்று அதுவும் அம்மா சொல்லியும் கூட முடியாது என்று சொன்ன பிறகு அவனை அவன் முடிவில் இருந்து இம்மி கூட அசைக்க முடியாது என்பது அவளுக்கு அனுபவம் சொன்ன பாடம்.
அலுவலகத்தில் நளினா கூட கேட்டு விட்டாள்.
"என்னடி..? உன் ஹப்பி பத்தி அவ்வளவு பெருமையா பேசுற? உன்ன ஒரு மூணு நாள் ஹனிமூன்க்கு கூட்டி போறதுக்கு கூட யோசிக்கிறாரு? இதுக்கும் பைசா செலவில்ல. எல்லாம் நம்ம கம்பனிலயே ஏத்துக்கறாங்க...அப்புறம் போறதுக்கு என்ன?"
காயத்ரி என்ன காரணம் சொல்லுவாள்? அவளுக்கு தெரிந்தால் தானே?
"அவருக்கு வேலை அதிகமா இருக்காம். அதனால முடியாதுன்னு சொல்லிட்டார்..."
அப்படியும் கணவனை விட்டுக் கொடுக்க முடியவில்லை.
"ஆமாம்டி... உன் புருஷன் கவர்னர் வேலை பாக்கறார் பாரு...." என்று நக்கலாக சொன்னவளை முறைத்து விட்டு அங்கிருந்து போவதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியவில்லை.
ஒரு புறம் கணவனை சொன்னால் பிடிக்கவில்லை. அதே நேரம் அவன் ஏன் எப்போதும் அவன் நினைப்பதே சரி என்று நினைக்கிறான் என்ற கோபம். தன்னை என்னவோ அந்த வீட்டில் குழந்தையாகவே நடத்துவதாக ஒரு உணர்வு.
அவள் மாமியாரோ அத்தையோ அப்படி நினைப்பதில் அவளுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
ஆனால் அவள் கணவனும் அப்படியே தான் நினைக்கிறானோ?
யோசித்து பார்த்தால் எப்போதுமே அவள் எதாவது கேட்க வந்தாலே அவள் வாயை எதோ ஒரு விதத்தில் அடைத்து திசை திருப்பியிருக்கிறான்.
சீனிவாச ராகவன் இருவரும் இருக்கும் போது பேச்சு வாக்கில் இதைப் பற்றி கேட்கும் போது கூட விஸ்வநாதன் எதோ சொல்லி மழுப்பி விட காயத்ரிக்கு ரோஷம் வந்தது.
'இனி இதைப் பத்தி உன்கிட்ட வந்து கெஞ்சறேனா பாத்துக்கோ?'
என்று கேட்பதையே விட்டிருந்தாள்.
முதல் வாரம் நடந்த விபத்தால் பத்மா காயத்ரியை தலைக்கு குளிக்க அழைக்கவே இல்லை.
"உடம்பு சூடு போக தலைக்கு குளிம்மா. ஷாம்ப்பூ கூட வாங்கி வெச்சிருக்கேன்..." என்று சொன்னதோடு நின்று விட்டார். அந்த காயம் ஆற ஆன நான்கு நாட்களும் காயத்ரி பட்ட கஷ்டத்தை பார்த்து அதற்கு மேல் அவளை வற்புறுத்த அவருக்கு மனமில்லை.
ஆனால் அடுத்த வாரம் காயத்ரியே பின்னலை அவிழ்த்துக் கொண்டு "அம்மா..! எண்ணெய் தேச்சு விடறேளா?" என்று அவரிடம் வந்து விட மாமியார் மருமகளின் உறவு இன்னும் நெருக்கமானது.
வாரம் முழுவதும் அவளுக்கு பிடித்த உணவை செய்து கொடுக்கும் பத்மா சனி ஞாயிறில் கீரை மசியல், பிரண்டைத் துவையல், பாகற்காய் கூட்டு, ஐங்காயப்பொடி, சுண்டைக்காய் வத்தக்குழம்பு என உடம்புக்கு நல்லது என்று செய்து வைத்து விடுவார்.
"வாரம் முழுக்க அந்த இத்துனூண்டு டப்பா சாதத்தை சாப்பிடறே? அது எந்த மூலைக்கு காணும்?"
என்று சொல்லி சூடான சாதத்தில் நெய் ஊற்றி பிசைந்து அவளை சாப்பிட வைத்து விடுவார். சாப்பிட நேரமானால் ஊட்டியும் விட்டு விடுவார். விஸ்வநாதன் கிண்டலாய் சிரிப்பதை இருவருமே கண்டு கொள்ள மாட்டார்கள்.
இந்த இரண்டு மாதங்களில் மாமியாரும் அத்தையும் அவளை கவனித்துக் கொண்ட விதத்தில் மெலிந்து இருந்தவள் லேசாக சதை போட்டு நிறம் இன்னும் மெருகேறி அழகும் கூடியிருந்தாள்.
அந்த வார இறுதியில் எல்லோரும் இருக்கும் போது பத்மா பேச்சை ஆரம்பித்தார்.
"விச்சு! அப்பாவோட ஸ்ரார்த்தம் (திதி) இந்த வாட்டி வர வியாழன் அன்னிக்கி வருது.. நீ பாத்தியோ?"
அதுவரை சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த விஸ்வநாதன் முகம் இறுக்கமாக "பாத்தேன் மா.." என்றதோடு நிறுத்திக் கொண்டான்.
நீளமான நூலில் இருந்து மஞ்சள் சரடு வெட்டி வைக்கும் வேலையில் கவனம் செலுத்துவது போல தலையை குனிந்து கொண்டான்.
பத்மா அவன் முகம் பார்த்து விட்டு அதற்கு மேல் பேசாமல் ஒரு பெருமூச்சோடு எழுந்து போக அதுவரை சாதாரணமாக இருந்த சூழல் இறுக்கமாகி இருப்பது போல காயத்ரி உணர்ந்தாள்.
அங்கிருந்த அத்தையும் மேலே எதையும் பேசாமல் தன் ருத்ராட்ச மாலையை எடுத்து வைத்துக் கொண்டு "சிவ..சிவ ..சிவ.." என்று கண்களை மூடிக் கொள்ள காயத்ரிக்கு தான் எதுவும் புரியவில்லை.
விஸ்வநாதனின் அப்பா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. இது மூன்றாம் ஆண்டு திவசம்.
ஒரு வேளை எல்லோரும் அவரை நினைத்து வருத்தமாய் இருக்கிறார்களோ என்று நினைத்தவள் யாரிடம் என்னவென்று கேட்பது என்று புரியாமல் பேசாமல் இருந்து விட்டாள்.
திருமணமாகி வரும் முதல் திவசம். திவசத்தின் போது காயத்ரியும் கர்மாவை செய்ய வேண்டும் என்று பத்மா முதலிலேயே அவளை அன்று லீவ் போட சொல்லி விட்டார்.
புதன் இரவு அவர்கள் சாப்பாடு சாப்பிடக் கூடாது என்பதால் பத்மா எளிமையாக டிபன் செய்திருந்தார்.
அன்று அவர் கேட்டதில் இருந்தே அந்த வீட்டில் ஒரு அமைதி. யாரும் தேவைக்கு மேல் பேசவில்லை. யாரிடமும் சிரிப்பு இல்லை. காயத்ரிக்கு தான் என்னவென்று புரியாமல் மண்டை வெடித்தது.
தினமும் சவரம் செய்பவன் இந்த மூன்று நாட்களாக செய்யாமல் போக விஸ்வநாதன் முகம் மிகவும் களைத்து தெரிந்தது. வெயிலில் அலைவதால் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பவன் அதையும் விட்டிருந்தான்.
இரவில் அவர்களின் அறையில் கூட விஸ்வநாதன் அவளை நெருங்கவில்லை. எப்போதும் அவளை குறும்பாய் சீண்டி விளையாடி கொண்டாடுபவன் அமைதியாய் இருந்தான்.
அவன் விலகி இருந்தாலும் தானே போய் பேசவோ என்னவென்று கேட்கவோ காயத்ரிக்கு துணிவில்லை. அவன் இறுகிய முகம் அவளை தள்ளி நிறுத்தியது.
ஸ்ரார்த்தம் (நினைவு நாள்) அன்று காலையில் வாசலை பெருக்கி நீர் மட்டும் தெளித்து கோலம் போடாமல் விட்டிருந்தார் அத்தை. அதன் பிறகு நேரே குளிக்கப் போய் விட பத்மா சமையலறையில் காய் நறுக்கிக் கொண்டிருந்தார்.
காயத்ரி அவள் வீட்டில் அப்பா செய்யும் போது எவ்வளவு வேலை என்று பார்த்திருக்கிறாள். அதனால் யாரும் சொல்லாமலே காலையிலேயே அலாரம் வைத்து எழுந்து கொண்டிருந்தாள்.
எப்போதும் இது போல அவள் வீட்டுக்கு பொறுப்பாய் இருக்கும் போதெல்லாம் அவளை கொண்டாடும் விஸ்வநாதன் அன்று அவள் காலையில் எழுந்த போது படுக்கையிலேயே இல்லை.
அவளுக்கு முன்பே எழுந்து விட்டிருந்தான்.
கூடத்தில் இருந்த சோபா நாற்காலிகளை நகர்த்தி இடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான். காயத்ரி போய் தூய்மை படுத்திக் கொண்டு வரவும் பத்மா "காஃபி குடிக்கிறியா? காயத்ரி?" என்று கேட்டார்.
எப்போதும் எழுந்ததும் அவள் காபி கேட்பாள் என்று தயாராக வைத்திருப்பார்.
"இருக்கட்டும் மா! அவர் ஹாலை ஒழிச்சிண்டு இருக்கார். அங்க பெருக்கி மொழுகிடவா? அப்புறம் ரெண்டு பேருமா குடிக்கிறோம்..."
பத்மா அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர் "இன்னிக்கி அவன் எதுவும் சாப்பிட மாட்டான்..." என்றவர் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. அவள் அப்பாவும் காலையில் காபி குடித்த பிறகு திவசம் முடியும் வரை எதுவும் குடிக்க மாட்டார் சாப்பிட மாட்டார் தான்.
ஆனால் இது அதிகமா இருக்கே...?
காயத்ரி துடைப்பத்துடன் கூடத்துக்கு போன போதும் விஸ்வநாதன் மௌனமாய் அவளுக்கு இடம் கொடுத்து விட்டு கொல்லைப்பக்கம் போய் விட காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை.
திவசம் என்றால் பேசக் கூட கூடாதா என்ன? அவனை கேட்பதற்கு சூழல் சரியாக இல்லாததால் தன் வேலையில் கவனமானாள்.
அவள் மீண்டும் சமையல் அறைக்கு வந்த போது பத்மா சமையலுக்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். விஸ்வநாதன் மீதம் இருந்த காய்களை நறுக்கிக் கொண்டிருக்க அங்கு எப்போதும் இருக்கும் இதமான சூழல் இல்லை.
ஒரு வேளை தான் தான் தப்பாக யோசிக்கிறோமோ என்று நினைக்கும்படி முகம் வாடியிருந்தாலும் பத்மா அவளிடம் சாதாரணமாகவே பேசினார்.
அப்போதும் விஸ்வநாதன் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. தன் வேலையிலேயே கவனமாக இருந்தான். காயத்ரி அடுத்து மாமியார் சொன்னபடி திவசம் செய்யத் தேவையான பொருட்களை கூடத்தில் வைத்தவள்
"அம்மா! நானும் குளிச்சிட்டு வந்துடறேன். நீங்க சொல்ல சொல்ல சமையலை செய்யறேன் மா." என்றவள் அவர் பதிலை எதிர்பார்க்காமல் குளிக்கப் போனாள். பத்மாவும் அவளை தடுக்கவில்லை.
"காயத்ரி! இன்னிக்கி திவசம் முடியற வரைக்கும் நெத்தில பொட்டு வெச்சுக்கப்படாது. தெரியுமோல்லியோ? இந்தா மஞ்சப்பொடி. நெத்தில பூசிக்கோ " என்று மஞ்சள் பொடியை அவள் கையில் கொடுத்தவர்
"குளிச்சிட்டு அத்தைக்கு குரல் குடு... மடியா உணத்தி இருக்கற துணிய எடுத்து தருவா. மடிசாரை அப்புறமா கட்டிக்கலாம்.." என்று சொல்லி விட்டார்.
அவருமே தேவைக்கு மேல் பேசவில்லை. காயத்ரி குளித்து ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு வர அரவிந்த் வீட்டுக்குள் நுழைந்தான்.
அவனைப் பார்த்ததும் காயத்ரிக்கு சந்தோஷத்தில் எல்லாம் மறந்து போனது.
"டேய் அரவிந்த்..! வா! எப்போ வந்தே? என்ன திடீர்னு வந்திருக்கே? என் கிட்ட சொல்லவே இல்ல..."
என்று ஆர்வமாக பேசியபடி அவனருகே போக பத்மா தான் குரல் கொடுத்தார்.
"அவன் மேல படாதே காயத்ரி. அவன் இன்னும் குளிக்கல...."
காயத்ரி அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டாலும் அவள் தோழனிடம் பேச வேண்டியது இருந்தது. அவனுக்கும் தான்.
அரவிந்த் சற்று தள்ளி நின்று கொண்டு மெல்லிய குரலில் அவள் நலத்தை விசாரித்தவன் "மன்னி! நான் போய் குளிச்சிட்டு வந்துடட்டுமா? அப்புறமா பேசுவோம்! " என்று சங்கடமான குரலில் சொல்லி விட்டு பின்னால் விரைய காயத்ரிக்கு எல்லாம் புதிராய் இருந்தது.
அதற்கு மேல் அவளுக்கே நின்று பேச நேரம் கிடைக்கவில்லை. அவ்வளவு வேலை இருந்தது.
வாழைக்காய், பாகற்காய் பொரியல், பச்சடி, மோர்க்குழம்பு, பொரிச்ச கூட்டு, ரசம், இதோடு கறிவேப்பிலை துவையல், வடை, அல்வா, முறுக்கு, சொஜ்ஜி அப்பம் என்னும் ரவை பூரணம் வைத்து செய்யும் அப்பம் என ஏகப்பட்ட வகை.
எப்போதுமே அந்த வீட்டில் வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அதோடு இன்று எதிலும் புளி, மிளகாய் கிடையாது. காரத்திற்கு ஜீரகம், மல்லி, கடலைப்பருப்பு வறுத்து அரைத்த பொடி தான்.
எல்லாம் செய்து முடிக்கவும் சாஸ்திரிகள் கூடவே இரண்டு பேரோடு வந்தார்.
வந்தவர்களுக்கு குளிக்க தேவையான பொருட்கள் எல்லாம் கொடுக்க அவர்கள் குளிக்க சென்றனர். சாஸ்திரிகள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க விஸ்வநாதன் அவரிடம் மெல்லிய குரலில் எதோ பேசிக் கொண்டிருந்தான்.
மூன்று நாட்களுக்கு பிறகு சேர்ந்தார் போல ஐந்து நிமிடங்களாக வந்தவரிடம் அவன் பேசுவதை பார்த்த காயத்ரிக்கு பயங்கர கோபம் வந்தது.
'அப்ப என்னை பாத்தா ஆளா தெரியலியா இவருக்கு..? இருக்கட்டும் ராத்திரி வெச்சுக்கறேன் ...' என்று முணுமுணுத்தவள் அதன் பிறகு அவனிடம் பேசவே இல்லை.
அவனைப் போலவே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தவளை எப்போதும் சமாதானம் செய்யும் விஸ்வநாதன் அன்று கண்டு கொள்ளவே இல்லை.
இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் முறுக்கிக் கொண்டு இருந்தனர். விஸ்வநாதனும் குளித்து விட்டு வர பத்மா காயத்ரியை இன்னொரு முறை குளித்து மடிசார் புடவை அணிந்து வர சொன்னார். அத்தையின் உதவியோடு புடவை அணிந்து வந்த காயத்ரிக்கு அதன் பிறகு வேலை சரியாக இருந்தது.
அம்மா செய்வதை பார்த்திருக்கிறாள் தானே?
அதனால் வாத்தியார் சொல்ல சொல்ல ஹோமம் செய்ய அடுக்கி வைத்திருந்த செங்கல் மேல் கோலம் போட்டு சங்கல்பம் செய்யும் போது விஸ்வநாதன் பின்னால் நின்று அவன் மேல் படும்படி தர்ப்பை பிடித்துக் கொண்டு ஹோமம் வளர்க்க தீ மூட்டி என வரிசையாக வேலை இருந்தது.
வந்திருந்த இருவருக்கும் விஸ்வநாதன் பாத பூஜை செய்யும் போது நீரூற்றியவள் கவனமாக தள்ளி நின்று கொண்டாள்.
விஸ்வநாதனோடு அரவிந்தும் பக்கத்தில் அமர்ந்து கொள்ள இருவருமாக அப்பாவுக்கு திதி செய்தனர்.
ஏற்கனவே தாடியோடு சோர்ந்து தெரிந்த விஸ்வநாதனின் முகம் ஹோமப்புகையில் இன்னும் களைப்பை காட்டியது.
கண்கள் இரண்டும் புகையால் சிவந்திருக்க முகம் நெருப்பு சூடு பட்டு சிவந்து போயிருந்தது. நேரம் ஆக ஆக அவன் களைத்த முகம் பார்த்து காயத்ரியால் தன் கோபத்தை இழுத்து பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லை.
அந்த முகத்தில் சோகமோ கோபமோ என்னவென்று புரியாத ஒரு உணர்வு காயத்ரியை என்னவோ செய்தது.
அவன் தோளை அணைத்து 'என்ன தான் உங்கள் பிரச்சனை..?' என்று கேட்டு ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
எப்போதும் கம்பீரமாய் ஆணழகனாய் இருப்பவனை இப்படி அவளால் பார்க்க முடியவில்லை.
அவன் மனபாரம் அவளையும் அழுத்துவதை உணர்ந்தவள் தான் எப்போதோ அவனை முழு மனதாய் ஏற்றுக் கொண்டு விட்டதை உணரவில்லை.
திவசம் முடிந்து வந்திருந்தவர்கள் சாப்பிடும் போது கவனித்து அனுப்பும் வரை இருந்தவன் அவர்கள் சாப்பிட்ட இலைகளை கொண்டு போய் எங்கோ போய் மண்ணில் புதைத்து வைத்து விட்டு வந்தான்.
அதன் பிறகு விஸ்வநாதன் சாப்பிடக் கூட இல்லாமல் தன் அறைக்கு சென்று விட்டான். அவன் பின்னால் போய் பார்க்க முடியாதபடி காயத்ரியை இங்கிருந்த வேலைகள் ஆக்கிரமித்தன.
அத்தையும் மாமியாரும் கூட சோர்ந்து தெரிய இருந்து அவர்கள் மூவருக்கும் வற்புறுத்தி சாப்பாடு பரிமாறினாள். அரவிந்த் சாப்பிட்ட பிறகு தன் அறைக்கு போய் விட்டான்.
அத்தையும் மாமியாரும் எப்போதும் அவளை கவனிப்பவர்கள் கூட அவள் சாப்பிட்டாளா என்று பார்ப்பவர்கள் அன்று மௌனமாய் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டனர்.
விஸ்வநாதன் சாப்பிடாமல் தங்கள் அறைக்கு போயிருக்கும் நிலையில் காயத்ரிக்கு தான் மட்டும் சாப்பிட பிடிக்கவில்லை. ஒரு கிண்ணத்தில் சிறிது ரசம் சாதத்தை கரைத்து எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு போனாள்.
விஸ்வநாதன் வழக்கம் போல தங்கள் படுக்கையில் படுக்காமல் தரையில் படுத்திருந்தான். கீழே எந்த விரிப்பும் இல்லாமல் தன் கையை மடித்து தலைக்கு அடியில் வைத்து படுத்தபடி எங்கேயோ வெறித்தபடி படுத்திருந்தவனை பார்க்க காயத்ரிக்கே தாங்கவில்லை.
அவன் அருகில் போய் அமர்ந்தும் கூட அவளை விஸ்வநாதன் திரும்பியும் பார்க்கவில்லை.
"ஏன்னா காத்தாலேந்து கொலை பட்டினியா இருக்கேளே? கொஞ்சம் ரசம் சாதம் கொண்டு வந்திருக்கேன். சாப்பிட்டு படுத்துக்கோங்கோ..." என்று அவள் சொன்னது கூட அவன் காதில் கேட்டதா என்றே தெரியவில்லை.
அசையாமல் படுத்திருந்தவனை நெருங்கி அவன் தோளை அசைத்த காயத்ரியை அவன் கண்கள் பார்த்தாலும் பார்வை அவள் மேல் இல்லை. எங்கோ இருந்தது. முகம் அப்படி ஒரு வேதனையை காட்டியது.
அவன் இப்போது இருக்கும் மனநிலையில் எதுவும் கேட்க முடியாது என்று "உங்களைத் தான்னா? சாப்பிடுங்கோ..." என்றவளை "ம்ச் .." என்று தட்டி விட்டு திரும்பிக் கொள்ள காயத்ரி அவனை விடவில்லை.
முயன்று அவன் தலையை தூக்கி தன் மடியில் வைத்தவள் வற்புறுத்தி தான் கொண்டு வந்த சாதத்தை அவனுக்கு ஊட்டினாள். முதலில் மறுத்தாலும் அதன் பிறகு அவள் வற்புறுத்தலில் சாப்பிட்டவன் அதன் பிறகு கண்களை மூடிக் கொண்டான்.
அவன் வேதனையை தூக்கத்திலாவது மறக்கட்டும் என்று காயத்ரியும் அவனை தொந்தரவு செய்யவில்லை.
மாலையிலும் அவன் உறக்கம் கலைந்து எழுந்து வர காயத்ரியே அன்று எல்லோருக்குமாக காபி போட்டுக் கொடுத்தாள்.
அத்தையும் அவள் மாமியாரும் கூட வழக்கமான மலர்ச்சியில்லாமல் சோர்வாக தெரிந்தார்கள். காயத்ரி இரவு உணவு செய்ய வந்த மாமியாரை தடுத்து விட்டு தானே அரவிந்துக்கு இட்லி ஊற்றினாள்.
திவசம் செய்த அன்று இரவு மதியம் செய்த பலகாரங்களை சாப்பிடுவது தான் வழக்கம் என்பதால் மீதம் இருந்த எல்லாவற்றையும் சூடு செய்து கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தாள் .
விஸ்வநாதனையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். பிறகு எல்லாம் எடுத்து வைத்து விட்டு சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு வருவதற்குள் விஸ்வநாதன் படுக்க போயிருந்தான்.
அவள் அறைக்குள் வந்த போது எதிர்புறம் திரும்பி கண்களை மூடி படுத்திருந்தவன் அவளை கண்டு கொள்ளவேயில்லை.
அப்படியே கண்களை மூடி படுத்திருந்தவனை ஒரு நிமிடம் பார்த்தவள் அவன் இப்போது எதுவும் பேசும் மனநிலையில் இல்லை என்று புரிந்து கொண்டாள்.
அவளும் அவன் பக்கத்தில் படுத்துக்கொள்ள அறையில் நீண்ட மௌனம். அவள் திருமணம் செய்து வந்த நாளில் இருந்து ஒரு நாளும் இப்படி நடந்ததில்லை.
எப்போதும் அவன் அணைப்பில் அரவணைப்பில் தூங்குபவளுக்கு தூக்கமே வரவில்லை.
புரண்டு புரண்டு படுத்தவள் அசையாமல் படுத்திருந்தவன் தானே ஏதாவது சொல்வானோ என்று அவன் முதுகை பார்க்க அவனிடம் எந்த அசைவும் இல்லை. ஆனால் அவன் தூங்கவில்லை என்று நிச்சயமாக தெரிந்தது.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் என்ன ஆனாலும் சரி என்று அவன் தோளை தொட்டு பலமாய் தன் பக்கம் திருப்ப இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவன் கண்களில் கண்ணீர்.
காயத்ரி அவன் கண்ணீரை பார்த்து திகைத்துப் போனாள்.
Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்றென்றும் வேண்டும்-18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.