என்றென்றும் வேண்டும்-16
ரிக் வேதத்துடன் நெருங்கிய தொடர்புடையது சாம வேதம். சாம வேதத்தின் 1875 சுலோகங்கள் ரிக் வேதத்தினின்று வந்தவையே.
யாகங்களில் சோமபானத்தைப் (சோமம் என்னும் கொடியின் சாற்றுடன் பால் மற்றும் வேறு சில பொருட்கள் சேர்த்துத் தயாரிப்பதே சோமபானம்.) பல்வேறு தேவதைகளுக்கு அர்ப்பிக்கும் பொழுது, உத்காதா எனப்படும் அந்தணர்கள் இசைக்க வேண்டிய கானங்களே பெரும்பாலும் சாம வேதத்தில் உள்ளன.
சாம வேதத்தோடு இணைந்த உபநிடதங்கள் சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் கேன உபநிடதம் ஆகும். இவை பிரம்மத்தைப் பற்றியும் உலகத் தோற்றத்தைப் பற்றியும் ஆராய்கின்றன. வேதாந்திகள் இவைகளை ஆர்வமுடன் கற்கிறார்கள்.
இந்தியாவின் சாஸ்திரீய சங்கீதம் மற்றும் நடனம் இவைகள் சாம வேதத்தையே ஆதாரமாகக் கொண்டவை. பாடல்கள், மந்திரோச்சாரணம் இவைகளோடு சாம வேதம் இசைக் கருவிகளையும் குறிப்பிடுகிறது.
கீதையில் கிருஷ்ண பரமாத்மா இப்பிரபஞ்சத்தில் உத்கிருஷ்டமான வஸ்துக்கள் யாவும் தன் சொரூபமானவே என்று கூறி, அவைகள் எவையெவை என்றும் விளக்குகிறான். அப்போது தான் வேதங்களில் சாம வேத வடிவமாக இருப்பதாகக் கூறுகிறான்.
அது மட்டுமல்ல, மணிவாசகப் பெருமான், "சங்கரனை சந்தோக சாமமோதும் வாயானை" என்று குறிப்பிடுகிறார். சிவனாரின் திருவாயில் எப்போதும் சாம வேதம் முழங்கிக் கொண்டே இருக்கிறதாம்!
இவை இரண்டிலிருந்தே சாம வேதம் முதன்மையானதும் சிறந்ததுமாய் விளங்குகிறது என்பது புலனாகும்.
தூய்மை யோகம் ஆயினாய்! துழாய் அலங்கல் மாலையாய்!
ஆமை ஆகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவ! நின்
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல; ஆகிலும்
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே?
- திருமழிசையாழ்வார்
அன்று இரவு காயத்ரி தங்கள் அறைக்குள் நுழைந்த போது விஸ்வநாதன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.
இந்த சுமங்கலி பிரார்த்தனைக்காக வந்திருந்த அவள் பெற்றோரிடம் காயத்ரி முகம் கொடுத்து பேசவில்லை. கேட்ட கேள்விக்கு பதில் என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.
அன்று அவர்கள் வீட்டில் போட்டுக் கொண்டு வந்த சண்டையை அவள் இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்?
தன்னோடு இவ்வளவு நாட்களாக பழகியும் அவளுக்கு தன்னைப் பற்றிய எண்ணம் மாறவில்லை என்பது தானே?
தன்னை விட தன் தோற்றம் தான் இன்னும் அவளுக்கு முக்கியம் என்று தானே அர்த்தம் ஆகிறது? அப்போது தன் அன்புக்கும் அக்கறைக்கும் காதலுக்கும் என்ன மரியாதை?
அவளுடைய நடவடிக்கை அவன் தன்மானத்தை சீண்ட அந்த கோபத்தில் காயத்ரி தங்கள் அறைக்கு வந்த போது அவன் திரும்பியும் பார்க்கவில்லை.
மகளின் அலட்சியத்திலும் பாராமுகத்திலும் மிகவும் வருந்தினாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் பத்மா இருக்க சொல்லியும் அவள் பெற்றோரிருவரும் மாலையே கிளம்பி விட்டிருந்தனர்.
ஆனால் காயத்ரிக்கு அவன் கோபமாய் இருப்பதெல்லாம் கண்ணுக்கே தெரியவில்லை. அவளுக்கு விஸ்வநாதனின் இன்னொரு பக்கத்தை பார்த்த ஆச்சரியம்.
அதைக் கொண்டாடியே ஆக வேண்டுமே அவளுக்கு. அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டவள் அவன் பாராமுகத்தை எல்லாம் சட்டை செய்யவே இல்லை.
அவன் மேல் உரிமையோடு கை போட்டு அணைத்துக் கொண்டவள் அவன் கன்னத்தை பற்றி தன் பக்கம் திருப்பினாள்.
"ஏன்னா? உங்களுக்கு இன்னும் என்னல்லாம் தெரியும்னு சொல்லிடுங்கோ? நேக்கு காபி கூட ஒழுங்கா போடத் தெரியாது. எங்காத்துல அம்மா தான் சமையல் எல்லாம் பண்ணுவா.
அப்பா தூத்தம் குடிக்கணும்னா கூட அடுப்படி பக்கம் வர மாட்டா. கூடத்துல ஒக்காந்துண்டு குரல் குடுப்பா. அம்மா தான் கொண்டு போய் குடுக்கணும்.
நீங்க மட்டும் எப்படின்னா இவ்வளவு சமத்தா இருக்கேள்? எந்த காயை எப்படி நறுக்கணும்? எவ்வளவு நறுக்கணும் எல்லாம் தெரியறதுன்னா. என் செல்லக்குட்டி ரொம்ப சமத்து."
என்றவள் விரல்களால் அவன் கன்னம் வருடி அதற்கு முத்தம் கொடுக்க விஸ்வநாதனுக்கு அதற்கு மேல் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
அவள் கொஞ்சிய விதம் சின்னக் குழந்தையை கொஞ்சுவது போல இருக்க அவனையும் மீறி அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தன.
அதுவரை அவள் முகத்தைக் கூட பார்க்காமல் இருந்தவன் நெருக்கமாய் தன்னருகே இருந்த அவள் முகத்தை பார்த்தான்.
ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் கண்கள் விரிந்திருக்க கன்னங்கள் புன்னகையில் மலர்ந்திருக்க சிவந்த உதடுகள் அவள் மோவாயை அவன் நெஞ்சில் வைத்திருந்ததால் குவிந்து அவனை அழைப்பது போலிருந்தது.
அவன் பாராமுகத்தை பொருட்படுத்தாமல் அவள் உரிமையாய் அவனை நெருங்கி அவன் செய்ததை பாராட்டியதில் அவள் மேல் கோபமாய் இருப்பதே அவனுக்கு மறந்து விட்டது.
"என் மொக்கள குட்டி கூட தான் சூப்பரா கோலம் போட்டு அசத்தினா..." என்று அவளைப் போலவே சொல்லி அவனும் அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட காயத்ரியின் முகம் பெருமையில் மலர்ந்தது.
"நான் போட்ட கோலம் அவ்வளவு நன்னா இருந்துதான்னா..?"
அவனிடம் விரிவான பாராட்டை எதிர்பார்த்து ஆவலாய் அவள் முகம் பார்க்க அவன் வாய் விட்டு சிரித்தான்.
"உன்ன மாதிரியே அவ்வளவு அழகா இருந்தது போறுமா?"
அவன் பாராட்டியதும் அவளுக்கு உச்சி குளிர்ந்து போனது.
"நிறைய பொம்மனாட்டிகள் அழகா கோலம் போடுவான்னா. அதுல என்ன அதிசயம் இருக்கு? (தன்னடக்கமாம்...) ஆனாலும் எனக்கு நீங்க வேலை பாத்தது தான் ஆச்சரியம்." என்று மீண்டும் அவனை பாராட்ட ஆரம்பித்தாள்.
அவள் பார்த்தவரை ஆண்கள் சமையலோ சமையல் சம்பந்தப்பட்ட வேலையோ பார்த்ததே இல்லை. விஸ்வநாதன் அவ்வளவு நேர்த்தியாக வேலை செய்ததில் அவளுக்கு அப்படி ஒரு ஆச்சரியம்.
"ஆனாலும் நீங்க எப்படின்னா அவ்வளவு நீட்டா அழகா காரியம் பாக்கறேள்?"
அவள் வியப்பில் அவனுக்கு கூச்சம் வந்தது.
"ஏன் அதுல என்ன அதிசயம்? பொம்மனாட்டிகள் எல்லாம் வேலைக்கு போறா! ஆம்பளேள் (ஆண்கள்) செய்யற காரியத்தையெல்லாம் அனாயாசமா செய்யறப்போ இதெல்லாம் பிரமாதமா?"
என்று முடிக்க நினைத்தான்.
"இல்லன்னா...இருந்தாலும் .." என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க பேச்சால் அவள் வாயை மூட முடியாது என்று அவனுக்கு தெரிந்த வேறொரு வழியால் மூட அதன் பிறகு தான் அவள் பேச்சு நின்றது.
காயத்ரி வேலையில் சேர்ந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
காயத்ரி லீவு முடிந்து வேலையில் சேர்ந்ததுமே சீனிவாச ராகவன் அழைத்து அவளையும் தாங்கள் செய்யப் போகும் ஆராய்ச்சியில் அவள் கணவனோடு சேர்ந்து கொள்ளும்படி சொல்லி பதவி உயர்வும் சம்பள உயர்வும் கொடுக்க அவளை கையில் பிடித்துக் கொள்ள முடியவில்லை.
அதுவும் அவள் கம்பெனியில் விஸ்வநாதனுக்கு கொடுக்கப்படும் மரியாதையை பார்த்து அவளுக்கு அவ்வளவு பெருமை.
வீட்டிலோ பத்மா, அத்தை இருவருக்கும் அவள் தான் செல்லப் பிள்ளை. வீட்டை பெருக்குவது, சுத்தம் செய்வது என்று அவர்கள் வேலையை பிடுங்கி இவள் செய்தாலும் இன்னும் சமையல் செய்ய மட்டும் அவர்கள் அவளை விடுவதில்லை.
அவளே கேட்டாலும் "இருக்கட்டும்டி கோந்தே! காலம் பூரா இருக்கவே இருக்கு. கொஞ்ச நாளாவது பிரீயா இருடிம்மா.." என்று இருவருமே தடுத்து விட்டனர்.
வார நாட்களில் அவளை கவனிக்க முடியாததை எல்லாம் சேர்த்து வைத்து வார இறுதியில் இருவரின் கவனிப்பும் இருக்கும்.
சனிக்கிழமை காலையிலேயே ஒரு பக்கம் வேப்பிலைக் கொழுந்து காத்திருக்கும். இன்னொரு பக்கம் பத்மா காலையிலேயே இலுப்பை கரண்டியை அடுப்பில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அதில் மிளகாயை போட்டு நன்றாக காய்ச்சி தயாராக வைத்திருப்பார்.
காலை தூங்கி எழுந்து காஃபிக்காக சமையல் அறைக்கு வருபவளை மடக்கி விடுவார்.
"காயத்ரி..! காபி சித்த நாழி கழிச்சு குடிக்கலாம். இப்ப வெறும் வயத்துல இந்த வேப்பங்கொழுந்தை சாப்பிடு. ஜானகி என்ன உன்னை கவனிச்சாளோ? உடம்பு நேந்து இருக்கு. பூச்சி எதுவும் வயித்துல இருக்கோ என்னமோ? இதை சாப்ட்டேன்னா எல்லா பூச்சியும் போய்டும்.."
என்று ஆரம்பிப்பார்.
காயத்ரியின் முகம் வேப்பிலைக் கொழுந்தை பார்த்ததுமே அஷ்டகோணலாகி விடும்.
"அம்மா..! இது ரொம்ம்ம்ம்ப கசக்குமே.... வேண்டாமே மா. எனக்கு கொமட்டறது ...வயித்த வலிக்கிற மாதிரி இருக்கு...வேண்டாம் மா..."
அழமாட்டாத குறையாக மாமியாரை கெஞ்ச ஆரம்பித்து விடுவாள். பத்மா.
அதை கையில் எடுத்துக் கொண்டு "இப்ப நீயா சாபிடறியா? இல்ல நானே உன் வாயில இதை அரைச்சு போட்டவா?" என்று மிரட்டியதும் மிகுந்த சிரமத்துடன் உள்ளே போகும்.
அடுத்து கொஞ்ச நேரம் அவளை விட்டு விடுவார் பத்மா. அவள் கேட்ட காபியை கொடுப்பவர் கொஞ்ச நேரம் கழித்து அடுத்து குரல் கொடுப்பார்.
"காயத்ரி! எண்ணை காஞ்சிடுத்து பார்..தலையை அவுத்துண்டு வா.. இங்க.."
இலுப்பை கரண்டியில் நல்லெண்ணெயை மிளகாயோடு காய்ச்சி ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்.
அவள் தைரியம் எல்லாம் அத்தையிடம் மட்டும் தான். அதனால் அவரிடமே சிபாரிசுக்கு போவாள்.
"அத்தை..! அம்மா எண்ணெய்ல மொளகா எல்லாம் போட்டு காச்சிருக்கா. அதை தலையில தேச்சிண்டா தலை எப்படி எரியும்? நீங்க சொல்லுங்கோ அத்தை, நான் ஷாம்பூவே தேச்சிக்கறேனே ...?""
பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சுபவளைப் பார்த்து அத்தைக்கு மனமிறங்கி விடும்.
"ஏண்டி பத்மா! கோந்தே தான் வேண்டாங்கறாளே. வேண்டாட்டா விடேன்.."
"அக்கா! நீங்க அவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டறேள். அதான் உங்க கிட்ட சிபாரிசுக்கு வரா.
வாரம் பூரா அந்த கம்ப்யூட்டர கண்ணு கொட்டாம பாத்து உடம்பும் கண்ணும் ஏகத்துக்கு சூடாகிப் போய் கிடக்கு.
இதுல அடிக்கிற வெயில்ல அத்தனாந்தூரம் (அவ்வளவு தூரம்) ஆபிஸ் போய்ட்டு வரதுல ஊர் வெயில் பூரா அவ தலை மேல தான்...பாருங்கோ..அவ மொகத்த..!
கொழந்த முகம் அப்படியே கெரங்கிப் போய் கெடக்கு..."
இதையெல்லாம் விஸ்வநாதன் சிரிப்புடன் வேடிக்கை பார்க்க பொறுக்குமோ காயத்ரிக்கு?
"அம்மா! உங்க புள்ளையும் தானே வெயில்ல போயிட்டு வரார். அவரையும் தேச்சிக்க சொல்லுங்கோ. வேப்பங்கொழுந்து குடுங்கோ..”
அம்மா என்ன சொல்லுவார் என்று தெரிந்ததால் விஸ்வநாதனின் முகத்தில் புன்னகை மாறாமல் இருக்க அதே போல பத்மா "அவன் கிடக்கான். அவன் பாட்டை அவனே பாத்துப்பான். நீ வா" என்று சொல்லி அவள் எண்ணத்தில் மண்ணைப் போட்டார்.
அதற்கு மேல் மாமியாரிடம் எதிர்த்துப் பேச துணிவில்லாமல் காயத்ரி வந்து அமர அந்த எண்ணையை அவள் தலையில் சூடாய் தேய்த்தார். அவர் அழுத்தி தேய்த்ததில் காயத்ரியின் தலையில் சூடு பறக்க காயத்ரிக்கு வலியில் கண்ணீர் வந்தது.
பத்மா தேய்த்து முடிக்க அரைமணி ஆக அதன் பிறகும் தலையில் முடி இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்தாள் காயத்ரி.
"காயத்ரி..! இந்த ட்ரெஸ் மாத்திண்டு ஒரு பாவாடை கட்டிண்டு பாத்ரூம்லயே உடம்புக்கும் எண்ணெய் தேச்சிக்கோ. இதோ வெந்நீர் எடுத்துண்டு வந்துண்டே இருக்கேன்..." என்று பத்மா எழுந்து போக சுருங்கிப் போன முகத்துடன் காயத்ரி பாத்ரூமுக்கு போனாள்.
பழங்கால வீடு அது. அங்கு கெய்சர் எல்லாம் இல்லை. பாத்ரூமே அவள் வந்த பிறகு தான் கட்டியது. குளிக்கவும் தண்ணீரை வெளியில் இருந்து கொண்டு வந்து அங்கிருக்கும் அண்டாவில் கொட்டி தான் குளிக்க வேண்டும்.
காயத்ரி உம்மென்ற முகத்துடன் எண்ணையை ஏனோதானோவென்று தேய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
"அம்பி! அந்த வெந்நீர் தவலையை கொண்டு போய் அண்டாவுல கொட்டு..." என்று குரல் கொடுக்க விஸ்வநாதன் வெந்நீர் இருந்த தவலையை காயத்ரி இருந்த பாத்ரூமுக்கு கொண்டு வந்தான்.
அதுவரை அலட்சியமாக உட்கார்ந்திருந்த காயத்ரி விஸ்வநாதனை எதிர்பார்க்கவில்லை. அவன் வெந்நீர் தவலையோடு உள்ளே வந்ததும் சட்டென்று தன்னை மறைத்து உடலை குறுக்கி அமர்ந்து கொண்டாள்.
அவனை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாக இருக்க விஸ்வநாதனுக்கோ அவள் நிலையை பார்த்து இன்னும் சிரிப்பு வந்தது.
அவ்வப்போது கண்ணில் வழிந்த எண்ணையை துடைத்துக் கொண்டு அவள் பெரிய கண்களை சிமிட்டியபடி இருந்தது பார்க்க எண்ணையில் முக்கிய கோழிக்குஞ்சை போலவே இருந்தது.
ஆனாலும் அவள் சங்கடப்படுகிறாள் என்று சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
தவலையை அங்கே வைத்து விட்டு வெளியே வரப் போனவனை பத்மாவின் குரல் நிறுத்தியது.
"அம்பி! அந்த தவலைய அப்படியே வெச்சிட்டு வராம அண்டால ஊத்தி வ்ளாவு..."
விஸ்வநாதன் கொதி நீரை அண்டாவில் கொட்டி சூடு சரியாக இருக்கிறதா என்று பார்க்க கை நீட்ட "ஏன்னா! எவ்ளோ நாழி இங்க நிப்பேள்? நீங்க மொதல்ல வெளில போங்கோ..." என்று காயத்ரி அவனை விரட்டினாள் .
ஏற்கனவே அவன் நக்கலாய் சிரித்ததில் கோபமாக இருந்தவளுக்கு அந்த சின்ன அறையில் அவனோடு இருப்பது வேறு சங்கடமாக இருக்க அவன் வந்த வேலையை செய்யவே விடவில்லை.
அவள் தன் அம்மாவின் ஆதரவு இருக்கும் தைரியத்தில் தான் பேசுகிறாள் என்று அறிந்த விஸ்வநாதன்
"ஏ கோழிக்குஞ்சு! இன்னிக்கி ரூமுக்கு வா. நான் போடற மந்திரத்துல அதுக்கப்புறம் நீ வாயே திறக்கக்கூடாது..." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவளை ஒரு பார்வை 'நீ வா! உன்ன வெச்சிக்கறேன்...' என்று பார்த்து விட்டு வெளியே போனான்.
அவசரமாய் அவனை விரட்டி விட்டு மாமியார் அவள் தலையில் இறக்கிய எண்ணையை எடுக்க எத்தனை பாக்கெட் ஷாம்பு தேவைப்படுமோ என்று காயத்ரி யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அவள் எண்ணத்தில் இடியைப் போட்டபடி பத்மா கையில் ஒரு பெரிய கிண்ணத்துடன் வந்தார். வீட்டில் எல்லா பொருளும் போட்டு அரைத்த சீயக்காய் அந்த கிண்ணம் நிறைய இருந்தது. அதைப் பார்ததுமே காயத்ரிக்கு கண்ணைக் கட்டியது.
'மறுபடியும் மொதெல்லேந்தா...' என்று மனதுக்குள் அலறினாலும் தன் பாச்சா மாமியாரிடம் பலிக்காது என்று வாயே திறக்கவில்லை.
'ஸ்டார்ட் முஜிக் ..' என்று மனதுக்குள் நினைத்தவள் தானே வாலண்டியராக தலையைக் காட்ட "காயத்ரி! ரொம்ப சமத்து நீ. பாரு சித்த நாழிக்குள்ள தேச்சு விட்டுடறேன்..." என்று பத்மா வந்த வேலையை ஆரம்பித்தார்.
அவர் முடிப்பதற்குள் தலையே கழன்று விட்டது போல தலை கிறுகிறுக்க அவள் சனி நீராட்டு அதோடு முடியவில்லை.
விஸ்வநாதனை திட்டி அனுப்பியதில் அவன் தண்ணீரை சூடு பார்த்து விளாவாமலே சென்றிருந்தான். பத்மா அப்படியே வெந்நீரை எடுத்து அவள் தலையில் ஊற்றவும் சூடு தாங்காமல் காயத்ரி "ஐயோ அம்மா!" என்று அலறியபடி எழுந்தவள் பயத்தில் பத்மாவை பிடித்துக் கொள்ள அவர் புடவை முன்பக்கம் முழுதும் நனைந்தது.
ஆனாலும் ஊற்றிய பிறகே அதிக சூட்டை உணர்ந்த பத்மாவும் பதறி விட்டார்.
" ஐயோ தங்கம்! ஜலம் ரொம்ப கொதிக்கிறதா?" என்றவர் அங்கிருந்த பச்சை தண்ணீரை எடுத்து மேலே ஊற்றினார். கண்களை எரிச்சலில் மூடியிருந்த காயத்ரிக்கு இது தெரியாமல் போக அவளுக்கு மூச்சு திணறி விட்டது.
பயத்தில் மீண்டும் பத்மாவையே கட்டிக் கொண்டாள். அதற்குள் இங்கு நடந்த களேபரத்தில் என்னவோ எதோ என்று அத்தையும் விஸ்வநாதனும் பதறியடித்து ஓடி வந்தனர்.
Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்றென்றும் வேண்டும்-16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.