• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க் கொடியில் பூத்தவளே! 2

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
157
அத்தியாயம் 2




கண்மணி அந்த மாளிகையின் பிரம்மாண்டமான வரவேற்பறையின் ஒரு கோடியில் இருந்த விருந்தினர் அறையை அவளுக்குக் காண்பித்தாள். அதற்குள் ஏற்கனவே யாரோ தங்கியிருப்பது போலத் தோன்றியது. ஒரு பயணப்பை இருந்தது. படுக்கை மீது சில சாமான்கள் சிதறிக் கிடந்தன.

“ இந்த ரூம் உனக்கும் அந்தப் புது நர்ஸுக்கும் சேத்துக் கொடுத்திருக்காங்க. இப்போதைக்குத் தான். சீக்கிரமே வேற ரூம் கொடுப்பாங்க. அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா. நீ ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கறதுனால, நீ, வா, போன்னு பேசலாம்னு மனசுக்குத் தோணுது. அதுவும் அக்கான்னு நீ கூப்பிட்டது மனசைத் தொட்டுருச்சு. நீ ஒண்ணும் தப்பா நினைக்கலையே? என்னடா இது வந்தவுடனே ரொம்ப உரிமை எடுத்துக்கறான்னு நெனைச்சுராதே” என்று கண்மணி சொன்னாள்.

“ இல்லைக்கா. கூடப் பிறந்தவங்க யாரும் இல்லாமல் தனியா வளந்துட்டேன். என்னவோ உங்களைப் பாத்ததுமே அக்கான்னு கூப்பிடச் சொல்லி மனசு சொல்லிச்சு. என் பேரு மாதுரி. நீங்க மாதுரின்னு தாராளமாக் கூப்பிடலாம்” என்று அவள் சொல்லிவிட, கண்மணி இன்னமும் நெருங்கி வந்தாள்.

“ அப்புறம்மா, அந்தப் புது நர்ஸ் கூடச் சின்னப் பொண்ணாத்தான் இருக்காங்க பாக்க. ஆனால் உன்னை மாதிரி சாந்தமா இல்லை பாக்கறதுக்கு. தடார் புடார்னு எடுத்தெறிஞ்சு பேசறாங்க. வந்து ரெண்டு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள அதிகாரம் தூள் பறக்குது. கொஞ்சம் பாத்து கவனமா நடந்துக்கோ. அவங்களோட தங்கப் பிடிக்கலைன்னா பெரியம்மா கிட்டத் தயங்காமல் சொல்லிடு. அவங்க மாத்து ஏற்பாடு ஏதாவது செய்வாங்க ” என்று அறிவுரை தந்துவிட்டுச் சென்றாள்.

நல்லவேளையாக இரண்டு கட்டில்கள் இருந்தன. இரண்டு அலமாரிகளும் இருந்தன. தற்போதைக்குத் தன் பயணப்பையைக் கட்டிலின் கீழே வைத்துவிட்டு, குளியலறையை நோக்கிச் சென்றாள். குளித்து முடித்து எளிமையான உடையை அணிந்துகொண்டு வெளியே வந்தாள்.

வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறிய பூக்கள் போடப்பட்டிருந்த கமீஸ், பாசிப் பச்சை நிறத்தில் ஸல்வார். தலையை வாரி, ஒரு க்ளிப்பில் அடக்கியிருந்தாள். அலை அலையாக அடங்காமல் சிலிர்த்து நின்ற சுருட்டை முடி அவளுடைய முகத்திற்கு அழகு சேர்த்தது. முகத்தில் அசாதாரணமான அமைதி தெரிந்தது. சமையலறைக்குச் சென்று, கண்மணியிடம் பேசியபடியே நின்று அவள் கொடுத்த வெண் பொங்கல், வடை, சட்னியை ருசித்து உண்டு நீண்ட நேரமாகப் பசியுடன் அலறிக்கொண்டிருந்த வயிற்றை அமைதிப்படுத்தினாள் மாதுரி.

“ கண்மணி அக்கா, உங்க கையில ஏதோ மேஜிக் இருக்கு. இவ்வளவு ருசியான
வெண்பொங்கல் நான் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை” என்று சொன்னபோது, கண்மணி மனம் குளிர்ந்துபோனாள்.

“ ஆறிப்போன பொங்கலையே இப்படி சொன்னேன்னா, சுடச்சுட சாப்பிட்டிருந்தா என்ன சொல்லிருப்பயோ? ” என்று கூறிய கண்மணி வெட்கத்துடன் மாதுரியின் புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டாள்.

குளித்ததால் பெற்ற புத்துணர்ச்சி, மற்றும் வயிற்றில் போடப்பட்ட ருசியான பொங்கல் தந்த நிறைவுடன் மேடத்தின் அறையை அடைந்தவளை அதிர்ச்சிதான் எதிர்கொண்டது. நுழையும்போது கேட்ட பேச்சுக்குரல், வெளியே சென்றிருந்த நர்ஸ் திரும்பி வந்துவிட்டதை மாதுரிக்கு உணர்த்தியது. கதவைத் தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழைந்தவளை ஏளனச் சிரிப்புடன் எதிர்கொண்டாள் மந்திரா. ஆமாம், மந்திராவே தான். சில மாதங்களுக்கு முன்பு வரை அவளுடைய கல்லூரி வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருந்த அதே மந்திராதான்.

‘ இவள் எப்படித் தற்காலிக நர்ஸாக இங்கு வந்து சேர்ந்தாள்? ‘ என்ற கேள்வியும் மாதுரியின் மண்டையைக் குடைந்தது.

“ வா மாதுரி, இவ தான் மந்திரா. இங்க டெம்பரரியா நர்ஸ் வேலை பாக்க வந்துருக்கற பொண்ணு. நர்ஸுன்னு கொறைச்சலா எடை போட வேண்டாம். டாக்டருக்குப் படிக்கற பொண்ணு. எங்களுக்குத் தெரிஞ்ச குடும்பம். ஒரு விதத்தில் சொந்தம்னு கூடச் சொல்லலாம். சொல்லச் சொல்லக் கேக்காம எங்களுக்கு உதவி பண்ண இங்கே வந்துருக்கா” என்று மந்திரா பற்றிய அறிமுகம் செய்து வைத்தார் அந்த மேடம்.

“ எனக்கு இவங்களைத் தெரியும் ” என்கிற சொற்கள், நாக்கின் நுனி வரை வந்துவிட்டன. கஷ்டப்பட்டு நாவை அடக்கினாள். மந்திரா எதிரில் அவளுக்குப் பிடிக்காதபடி பேசிவிட்டால் விளைவுகள் என்னவாகும் என்று மாதுரிக்கா தெரியாது?

‘ மந்திராவுடன் ஒரே அறையில் தங்குவது என்பது நடக்காத காரியம். நான் ஒத்துக் கொண்டால் கூட அவள் ஒத்துக்கொள்ளவே மாட்டாள்’ என்று நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்தது மாதுரியின் மனது.

“ மந்திரா, இந்தப் பொண்ணு பேரு மாதுரி. எங்களுக்கு உதவி பண்ண நம்ம துகிலனோட ரெகமண்டேஷன்ல வந்துருக்கற பொண்ணு. பாக்க ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கா இல்லையா மந்திரா? “ என்றார் அந்தப் பெண்மணி.

“ தோற்றத்தை வச்சு எடை போடாதீங்க அத்தை, ஸாரி மேடம். நான் இப்ப இங்க உங்க மருமகளா வரலை, வெறும் நர்ஸாத் தான் வந்துருக்கேன்னு மறந்துட்டேன். எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ? யாருக்குத் தெரியும்? கடுகு சின்னதா இருக்கலாம். ஆனால் காரம் கடுமையா இருக்கலாம் ” என்று பேசிய மந்திராவின் குரலில் எச்சரிக்கை தெரிந்தது.

அந்தக் குடும்பத்தோடு நெருங்கிய உறவு தனக்கு இருக்கிறது என்பதை மாதுரிக்குத் தெரிவிக்கும் நோக்கம் அவளுடைய பேச்சில் ஒளிந்திருந்தது. மாதுரியின் அப்பாவியான முகத்தை வைத்து அவளிடம் மென்மையான அணுகுமுறை காட்ட வேண்டாம் என்கிற எச்சரிக்கையும் மறைமுகமாக, இல்லை இல்லை நேரடியாகவே தெரிந்தது. மாதுரியின் முகம் சுருங்கிப் போனது.

“ மேடம், அப்புறம் முக்கியமான விஷயம் ஞாபிப்படுத்தறேன். எனக்கு வேற ரூம் ரெடி பண்ணறதாச் சொன்னீங்களே? ரெடியா? நாங்க ரெண்டு பேரும் ஒரே ரூமில
தங்கறது கஷ்டமா இருக்கும் எனக்கு” என்று சொல்லும்போது, “ எனக்கு” என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்தாள்.

“ என்னடா இது தர்மசங்கடம்னு நினைக்கறீங்களா? சாதாரண நர்ஸா இருக்கேன்னு சொல்லிட்டு இப்படி கன்டிஷன் போடறாளேன்னு நினைச்சுத் திட்டாதீங்க மேடம் ” என்று கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள் மந்திரா. அந்தப் பெண்ணும் உடனே வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார்.

“ என்னம்மா பொண்ணு நீ? ராணி மாதிரி எங்க வீட்ல எப்ப வேணாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கற உரிமை உனக்கு இருக்கு. நீயாத்தான் நர்ஸா வந்து தங்குவேன்னு சொன்னே. என்னை ஒரு சாதாரண நர்ஸா நடத்துங்கன்னும் சொன்னே. இப்ப நீயாவே கண்டிஷன் போட்டுக்கறே, அப்புறம் மாத்தறே! உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலை போ ”என்று செல்லமாக அலுத்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

‘ பாத்தயா மாதுரி? இந்த வீட்ல எனக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்குன்னு புரிஞ்சுக்கோ’ என்கிற பெருமிதம் அவள் மாதுரியைப் பார்த்த பார்வையில் தெரிந்தது.

“ சரி மாதுரி, இங்கே வா. உனக்கு என்ன வேலைன்னு விளக்கமாச் சொல்லறேன் ” என்று மாதுரியை அருகில் அழைத்து அவளுடைய கடமைகளை விளக்கினார்.

“ பெருசா வேலைன்னு ஒண்ணும் இல்லை. அப்பப்ப எனக்குத் தோணற வேலைகளைச் சொல்வேன். அலமாரியில் துணிமணிகளை அடுக்கி வைக்கணும். எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கிச்சனில் இருந்து கொண்டு வந்து நாங்க சாப்பிடற சமயத்தில் கூட இருந்து கவனிச்சுக்கணும். மருந்து, மாத்திரைகளை வேளாவேளைக்குத் தவறாமல் கொடுக்கறது நர்ஸோட வேலை. இருந்தாலும் நீயும் பாத்து வச்சுக்கோ. சமயத்தில் உதவியா இருக்கும். கம்ப்யூட்டர் ஹேன்டில் பண்ண நிச்சயமாத் தெரிஞ்சிருக்கும். எங்களோட இமெயில் பாக்கணும். தேவைப்படற சமயத்தில் ரிப்ளை பண்ணனும். எங்களோட துணிமணிகளை வாஷிங் மெஷினில போட்டு எடுத்து உலர்த்தி மடிச்சுத் தரணும். அப்புறம் காலையில், சாயந்திரம் ரெண்டு வேளையும் என்னைத் தோட்டத்துக்குக் கூட்டிட்டுப் போகணும். இப்போதைக்கு இவ்வளவுதான். மீதியை ஞாபகம் வரும்போது சொல்லறேன். இந்த வேலைகள் உனக்கு ஓகேயா மாதுரி? பிடிக்கலைன்னா இப்பவே நோ சொல்லிட்டு நீ கிளம்பலாம்” என்று நிறுத்தினார் அந்தப் பெண்.

“ மாதுரிக்கு சாய்ஸ்லாம் ஒண்ணும் இருக்காது மேடம். பணம் வேணும்னு தானே வேலை தேடி வந்துருக்கா? நிச்சயமா நோ சொல்ல மாட்டா” என்று மந்திரா, ஏளனப் பார்வையுடன் பேசினாள்.

“ தட் வாஸ் வெரி ரூட் மந்திரா. இந்த ஜெனரேஷனே இப்படித்தான். மனசுல தோணறதை அப்படியே வெளியே துப்ப வேண்டியது. கொஞ்சம் கூட எது பேசணும், எது பேசக்கூடாதுங்கற நினைப்பே இருக்கறதில்லை” என்று கடிந்துகொண்டார் அந்தப் பெண்.

“ மந்திரா மேடம் சொன்னதுல எந்தத் தப்பும் இல்லை மேடம். எனக்கு இந்த வேலை முக்கியம். இதுல கெடைக்கற சம்பளம் முக்கியம். வறுமையில் வாடறவங்களுக்குத் தான் பணத்தோட மதிப்பு தெரியும். நான் ஒண்ணும் தப்பா நெனைச்சுக்கலை” என்று மாதுரி அமைதியாக பதில் சொன்னபோது மந்திராவிற்கே என்னவோ போல் ஆகிவிட்டது.

“ மந்திரா, நீ அந்த ரூமிலயே கண்டினியூ பண்ணு. மாதுரிக்கு இந்த ரூமுக்குப் பக்கத்துல இருக்கற சின்ன ரூமைக் கொடுத்துடறேன். மாதுரி பக்கத்திலேயே இருந்தால் எனக்கும் சௌகர்யமா இருக்கும். மதிய நேரத்தில் நான் தூங்கும் போது நீ உன் சாமானை இங்க மாத்திக்கலாம் மாதுரி. அதுக்குள்ள கண்மணி ரெடி பண்ணித் தருவா. அப்புறம் கண்மணி கொஞ்சம் மூடி டைப். சில சமயங்களில் நல்லாப் பேசுவா. சில சமயங்களில் எரிஞ்சு விழுவா. பாத்து நடந்துக்கோ மாதுரி”

“ சரி மேடம். அதெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். என் கிட்ட நல்லாத்தான் பேசினாங்க கண்மணி அக்கா” என்று மாதுரி பதில் கூறியபோது, “ கண்மணி அக்கா” என்று அவள் கூறியதைக் கேட்டு அந்த முதியவள் முகத்தில் புன்சிரிப்பும், மந்திராவின் முகத்தில் எரிச்சலும் ஒரே சமயத்தில் தெரிந்தன.

‘ பரவாயில்லை, துகிலன் சரியான ஆளைத்தான் ஸெலக்ட் பண்ணி அனுப்பிருக்கான். இவளாவது இங்கு வேலையில் நிலைச்சு இருக்கணும். பாக்க சாந்தமாத் தெரியறா. பொறுமையும், சகிப்புத்தன்மையும் அதே மாதிரி இருந்துருச்சுன்னா நிம்மதியா இருக்கலாம். நடுவில் இந்த மந்திரா வேற ஏதாவது குழப்படி பண்ணாமல் இருக்கணும’ என்று எண்ணினாள் அந்தப் பெண். சிந்தித்தபடி கணவனின் பக்கம் திரும்பியவளின் கண்கள் வியப்பில் விரிந்தன.

கட்டிலில் படுத்துக் கிடந்த முதியவர், தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தார். அவருடைய விழிகள், அந்த அறையில் புதிதாகத் தென்பட்ட மாதுரியின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அதிர்ச்சி, கோபம், வெறுப்பு எல்லா உணர்ச்சிகளும் சேர்ந்து தெரிந்தன முகத்தில். மாதுரியை நோக்கிக் கைகாட்டி, ஏதோ பேச முயற்சி செய்தார். பேச்சு வணவில்லை. ஏதோ வினோதமான சத்தம் எழுந்தது. “ இங்கிருந்து போ, போ, என் எதிரில் நிற்காதே ” என்று அவர் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பது போல மாதுரிக்குத் தோன்றியது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்ணைப் பரிதாபமாகப் பார்த்தாள் அவள்.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்

 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
199
அச்சோ மாதுரியை பார்த்து இவ்வளவு டென்ஷன் அவருக்கு 🤔🤔🤔🤔🤔🤔
 
Top Bottom