• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உனதன்பின் கதகதப்பில் 7

Dhakai

New member
Joined
Mar 23, 2025
Messages
25
'என்ன இவ்ளோ சின்ன வீடா இருக்கு?'

சென்னை வடபழனியில் திருமணத்தை முடித்து விட்டு செந்திலுடன் மனைவியாய் அவனது வீட்டிற்கு வந்திருந்த சுந்தரலட்சுமிக்கு அவனது வீட்டைப் பார்த்ததும் அப்படித் தான் தோன்றியது.

திருமணத்திற்கு முன்பு சுந்தரலட்சுமியின் தாய் தந்தையர் மட்டுமே வந்து செந்தில் வீட்டை நேரில் பார்த்து விட்டு சென்றிருந்தனர். ஆனால் அவர்களுமே அவளிடம் அவனின் வீட்டைப் பற்றி ஏதும் கூறாது இருந்தனர்.

செந்திலின் வீட்டில் தரைத்தளத்திலும் முதல் மாடியிலும் வாடகைக்கு வசிப்பவர்கள் இவனின் வீட்டிற்கு வந்து மணமக்களைப் பார்த்து வாழ்த்தி விட்டுச் சென்ற பிறகு, மணமக்களுக்குப் பாலும் பழமும் வழங்கப்பட்டன.

திருமணச் சம்பிரதாயங்கள் அனைத்தும் நிறைவுப்பெற, செல்லத்துரையும் காஞ்சனாவும் கிளம்பிச் சென்றுவிட, முகுந்தனும் செல்வராணியும் அங்கே இருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த இவர்களின் உற்றார் உறவினர்கள் அனைவரும் கோவிலில் இருந்தே விடைபெற்றுச் சென்றிருந்தனர். அவர்கள் வழக்கப்படி அன்றைய நாளில் இதற்கு மேல் திருமணச் சடங்குகள் என்று ஏதும் இல்லாமல் இருக்க மற்ற வேலைகளைப் பார்த்திருந்தனர்‌.

மீனாவிற்கு மகனின் திருமணத்தில் மனம் மகிழ்வுற்ற போதும், சுந்தரலட்சுமி மருமகளாய் தன்னிடம் எப்படி நடந்து கொள்வாளோ என்ற பயம் இருந்தது ஆயினும் சம்பந்தியிடமும் மருமகளுடனும் இணக்கமாகவே பேசினார் மீனா.

செந்திலும் முகுந்தனும் காரிலிருந்து சுந்தரலட்சுமியின் பெட்டியை எடுத்து வந்து படுக்கையறையில் வைக்கும் பணியைச் செய்து கொண்டிருக்க, முகப்பறையில் இருந்த சோபாவில் சோர்வாய் படுத்து விட்டார் மீனா.

தாயுடன் படுக்கையறையில் அமர்ந்திருந்த சுந்தரலட்சுமி, அங்கே அந்த அறையின் முக்கால்வாசி இடத்தைத் தனது பெட்டியும் பைகளும் அடைத்திருந்ததைப் பார்த்தவளாய், "நம்ம வீட்டை விடச் சின்ன வீடு தான்னு ஏன்மா என்கிட்ட சொல்லலை நீ?" எனக் கேட்டாள்.

"ஏன் இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்?" எனக் கேட்டார் செல்வராணி.

"இல்லம்மா நம்ம வீடு மாதிரி இல்லயே" படுக்கையறையில் மென்குரலில் தாயிடம் அவள் உரைத்திருந்தது துல்லியமாய் விழுந்திருந்தது முகப்பறையில் இருந்த மீனாவுக்கு.

'காஞ்சனா அண்ணி சொன்ன மாதிரி இந்த வீடு பிடிக்கலைனு வேற வீட்டுக்கு என் பையனைப் பிரிச்சி கூட்டிட்டுப் போய்டுவாளோ' என்று சிந்தித்தவாறு படுத்திருந்தார் மீனா.

மகள் கூறியதைக் கேட்டு அவளை முறைத்த செல்வராணி, "மெதுவா பேசுடி! உன் மாமியார் காதுல விழுந்துடப் போகுது" என்றவராய் கதவைப் பாதி மூடியவர், "இனி இது தான் உன் வீடு! நம்ம வீடு மாதிரி இந்த வீட்டைப் பெரிசா மாத்துறது உன் கைல தான் இருக்கு. நீயும் உன் புருஷனும் பணத்தைச் சேர்த்து வச்சி கட்டுங்க" என்றார்.

"ஹ்ம்ம் சரி தான். என்னம்மா இவ்ளோ மெல்லமா பேசினாலும் ஹால்ல கேட்குமா என்ன?" என்று ஹஸ்கிக் குரலில் சுந்தரலட்சுமி கேட்க,

"கதவைச் சாத்தாம இருந்தா கேட்கும்டி" என்றார் செல்வராணி.

'ஓஹோ அதான் செந்தில் மாடில படுத்துக்கிட்டு என்கிட்ட போன்ல பேசினாரா?' என்று யோசித்தவளாய் அவள் நின்றிருக்க,

"என்கிட்ட பேசுற மாதிரி உன் மாமியார்கிட்ட படபடனு துடுக்குத்தனமா பேசி வைக்காத சுந்தரி! உன்னைப் பத்தி அவங்களுக்கு நல்ல அபிப்பிராயம் வர மாதிரி நடந்துக்கோ" தாயாய் அவர் அறிவுரைக் கூற, சரியெனத் தலையசைத்துக் கொண்டாள்.

சுந்தரலட்சுமி அலங்காரத்தைக் கலைத்து விட்டு ஓய்வறைக்குச் சென்று இலகு உடைக்கு மாறி வந்ததும், அவளும் அவளது தாயும் இணைந்து பீரோவில் அவளது உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, அனைத்து பொருள்களையும் காரிலிருந்து எடுத்து வந்ததும் அங்கேயே கட்டிலில் முகுந்தனும் செந்திலும் ஓய்வாய் அமர்ந்தனர்.

"மாப்ள! காரை நான் இங்கேயே விட்டுட்டுப் போறேன். நீங்க யூஸ் செஞ்சிக்கோங்க" என்றார் முகுந்தன்.

"இல்ல மாமா!" என்று அவன் ஏதோ கூற வரும் முன்,

"இந்த காரு என் பொண்ணு அவ சம்பளத்துல வாங்கினது தான் மாப்ள. அவ கார் கம்பெனில அவளுக்குச் சலுகை விலைல கொடுத்தது. இன்னும் அதுக்கு இஎம்ஐ கட்டிட்டு தான் இருக்கா" என்றார்.

"நானே காரைப் பத்தி பேசணும்னு நினைச்சேன் மாமா" என்றவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, செந்திலின் அலைபேசி ஒலியெழுப்ப, "பேசிட்டு வரேன் மாமா" என்றவனாய் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

கைப்பேசியில் அழைத்திருந்த செல்லத்துரையின் மகன் முரளி, "செந்தில் இந்த நேரத்துல கேட்கிறேன்னு தப்பா நினைக்காத! முன்னாடியே கேட்டிருந்தேனே பத்து லட்சம் வேணும்னு! நாளைக்குப் பணம் கட்டனும்" என்று நிறுத்த,

"நாளைக்குக் கடைக்கு வந்து வாங்கிக்கோ முரளி" என்று இணைப்பைத் துண்டித்தவனாய் பலத்த சிந்தனையுடன் வீட்டிற்குள் நுழைந்து முகப்பறைக்கு வந்தவனின் காதில் படுக்கையறையில் சுந்தரலட்சுமி பேசிக் கொண்டிருப்பது கேட்க, அப்படியே நின்று விட்டான்.

மெல்லமாய் எட்டி முகப்பறை சோஃபாவில் படுத்திருந்த தாயைப் பார்த்தான். அவர் நன்றாக உறக்கத்தில் இருப்பதைப் பார்த்து விட்டு பெருமூச்சுடன் நின்றான்.

"நான் எனக்காக வாங்கின காருனாலும் அதை நீங்களும் யூஸ் செய்றீங்க தானே! அதனால அந்தக் கார் உங்ககிட்டயே இருக்கட்டும்ப்பா. நானும் செந்திலும் சேர்ந்து வேற கார் வாங்கிக்கிறோம்" என்று சுந்தரலட்சுமி கூறியதைக் கேட்டு நின்றவன்,

தான் மட்டும் வாங்குவதாய் உரைக்காமல் தன்னையும் இணைத்து அவள் கூறியதில் மகிழ்வுற்றவன், தன்னால் இப்பொழுது அவளுக்குக் கார் வாங்கித் தர முடியாத சூழ்நிலையை எண்ணி வருந்தினான்.

"இல்லம்மா தினமும் கார்ல ஆபிஸ்க்குப் போய்ப் பழக்கப்பட்டவ நீ! இப்ப எப்படிப் போவ?" எனக் கேட்டார் முகுந்தன்.

"அதான் என் டூ வீலர் இருக்கே. அதை இங்கே கொண்டு வந்து விட்டுருங்க. காரு வாங்குற வரைக்கும் அதுல போய்க்கிறேன்" என்றாள்.

இதையெல்லாம் கேட்டவாறு நின்றிருந்த செந்திலுக்கு, 'வீடு கட்ட வச்சிருந்த பணத்துல கார் வாங்கலாம்னு பிளான் செஞ்சி வச்சிருந்தா, அதுக்குள்ள இந்த முரளி பணம் வேணும்னு கேட்டுட்டான். அவன் திருப்பித் தர எப்படியும் மூனு மாசம் ஆகும். அது வரைக்கும் என்ன செய்றது?' என்று சிந்தனை சுழன்றது‌.

மகளிடம் பேசியவாறு அறையை விட்டு வெளியே வந்த முகுந்தன், "என்ன மாப்ள அப்படியே நிக்கிறீங்க?" எனக் கேட்டார்.

"ஒன்னுமில்லை மாமா" என்றவனாய் அறைக்குள் நுழைந்தவன் அங்கே தனது பீரோ முழுவதும் நிரம்பியிருந்த அவளது உடைகளைப் பார்த்து, 'இவ்வளோ துணியா வச்சிருக்கா?' என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே,

"இன்னும் ஒரு பெட்டி நிறையத் துணி இருக்குச் செந்தில்! வைக்க இடமில்லை‌. அதான் கட்டிலுக்கு அடில அந்தப் பெட்டியைத் தள்ளி வச்சிட்டோம். அதெல்லாம் அடுக்கி வைக்க எக்ஸ்ட்ரா கப்போர்ட் தான் வாங்கனும் போல" என்ற சுந்தரலட்சுமியை 'இன்னுமா' என்ற வியப்புடன் பார்த்திருந்த செந்தில், 'சீக்கிரம் பெரிய வீடாகக் கட்டனும். இந்த வீடு இவளுக்குப் பத்தாது' என்று மனத்தோடு நினைத்துக் கொண்டான்.

அதே நேரம் அங்கே தங்களது வீட்டில் அமர்ந்திருந்த காஞ்சனா முரளியிடம், "அந்தப் பைய எப்படி வீடு கட்டுறான்னு நானும் பார்க்கிறேன்‌. மூனு மாசத்துலலாம் அவனுக்குப் பணத்தைக் கொடுத்துடாதடா முரளி! ஆறு மாசம் போகட்டும். பெரிய வீட்டுல சொகுசா வாழ்ந்தவ அவன் பொண்டாட்டி. அந்த வீட்டுல இருக்க முடியாம சண்டைப் போட்டு டைவர்ஸ் கேட்கனும்" என்றார்.

"வீடு வாங்க எனக்குப் பணம் வேணும்னு உனகிட்டயும் அப்பாகிட்டயும் கேட்டா, நீ அவன்கிட்ட வாங்க சொல்லிட்ட! என்னாலயும் மூனு மாசத்துலலாம் இந்தப் பணத்தைக் கொடுக்க முடியாதும்மா. ஆனாலும் நீ இப்படி யோசிக்கிறது சரியில்லமா" என்றவனாய் அங்கிருந்து சென்று விட்டான் முரளி.

இந்தப் பணம் தான் தங்களுக்குள் பெரும் பிரச்சினையை உண்டாக்கப் போகிறது என்று அறியாதவனாய் தனது வீட்டில் அவளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் செந்தில்.

"கார் நீங்க எடுத்துட்டு போய்டுங்க மாமா! நான் சுந்தரிக்குப் புதுசா கார் வாங்கிக் கொடுக்கிறேன்" என்றான் செந்தில்.

நிஜமாவா என்பது போல் செந்திலை அவள் பார்த்திருக்கக் கண்களைச் சிமிட்டி ஆமென்றான்.

அதன் பிறகு சில மணி நேரங்கள் இருந்து விட்டு முகுந்தனும் செல்வராணியும் கிளம்பிச் சென்றுவிட, இயல்பாய்ச் சென்றிருந்த அந்நாளின் இரவை எண்ணி படபடப்பாய் உணர்ந்தான் செந்தில்.

மூவருக்குமாய் அன்றிரவு இரவுணவை கடையிலேயே வாங்கி வந்து கொடுத்து விட்டான் செந்தில்.

இரவுணவை உண்டு விட்டு வழமைப் போல் மீனா முகப்பறை சோஃபாவில் படுத்திருக்க, படுக்கையறையில் அமர்ந்திருந்தாள் சுந்தரலட்சுமி.

கதவைச் சாற்றி விட்டு அறைக்குள் நுழைந்த செந்திலின் முகத்தில் தெரிந்த பயமும் படபடப்பும் பூரிப்பும் கலந்த கலவையான உணர்வில் தனக்குள் சிரித்தவளாய் இயல்பாய் தனது கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரலட்சுமி.

அவளின் அருகில் அமர்ந்தவனாய், "உனக்குப் பயமா இல்லையா சுந்தரி?" எனக் கேட்டான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவளாய், "எதுக்குப் பயப்படனும்? நீங்க என்ன சிங்கமா புலியா?" எனக் கேட்டாள்.

"சரி தான். நீ என்ன செய்யப் போற? நான் தானே எல்லாமே செய்யனும். அப்ப எனக்குத் தானே பயம் படபடப்பு எல்லாமே இருக்கனும்" என்று உரைத்தவனின் உள்ளம் தடதடவென ரயில் தண்டவாளமாய்த் தடதடத்துக் கொண்டிருந்தது.

அவனின் பேச்சில் வாய்க்குள் சிரித்தவளாய், "ஓஹோ அப்ப இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்து ஆகனும்னு முடிவே செஞ்சிட்டீங்களா? என்னோட அனுமதி வாங்கனும், என்னோட மனநிலை என்னவா இருக்கும்னு தெரிஞ்சிக்கனும்னுலாம் தோணலையா உங்களுக்கு?" குற்றம் சுமத்தும் பார்வை அவள் பார்த்து வைக்க,

'அய்யய்யோ நோ மீன்ஸ் நோ-னு டயலாக் பேசுவாளோ' என்று கலவரமானான் அவன்.

அவனின் முக உணர்வுகளைப் பார்த்து உள்ளுக்குள் பொங்கி வந்த சிரிப்பை இதழுக்குள் அடக்கியவளாய், கோப முகம் காட்டி, "சொல்லுங்க செந்தில்" என்றாள்.

"உனக்கு வேண்டாம்னா வேண்டாம் சுந்தரி" புஸ்வானமாய்ச் சுருங்கிப் போன முகத்துடன் உள்ளே போன குரலில் அவன் கூறியதைக் கேட்டு வெடித்துச் சிரித்தாள் அவள்.

அப்பொழுது தான் அவள் விளையாட்டாய்ப் பேசியது அவனுக்குப் புரிய, "அடிக்கள்ளி! நான் பயந்தே போய்ட்டேன்!" என்றவனாய் அவளின் கைப்பிடித்து இழுத்து தனது அணைப்பிற்குள் அவளைக் கொண்டு வந்தவன், இன்னுமாய்க் கண்களில் நீர் வர சிரித்துக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதிக்க, சட்டெனச் சிரிப்பு மறைந்து போக சிலிர்த்துப் போனது அவளது தேகம். அடுத்தடுத்த அவனின் செயலில் உருகியவளாய் அவனுள் கரைந்து கொண்டிருந்தாள் அவள்.

காதல் காற்றில் ஈருயிர்களின் சுவாசங்கள் மட்டுமே நிரம்பியிருக்க, இன்பமாய்த் தொடங்கியது இனிய இல்லறம்.
 

Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
47
நல்லாதான் போகுது திருமண வாழ்கை..அத்தையோட ஆட்ட ஆரம்ப விலை 10 லட்சம்.. பார்போம்.செந்திலின் சாமர்த்த்தை..
 

Dhakai

New member
Joined
Mar 23, 2025
Messages
25
நல்லாதான் போகுது திருமண வாழ்கை..அத்தையோட ஆட்ட ஆரம்ப விலை 10 லட்சம்.. பார்போம்.செந்திலின் சாமர்த்த்தை..
ஆமா சிஸ். என்ன செய்ய போறானோ இந்த செந்திலு‌‌.. மிக்க நன்றி சிஸ் ❤️
 
Joined
Mar 21, 2025
Messages
43
பெற்றவர்களின் அறிவுரையை
பெண்ணும் ஏற்றுக் கொள்ள

புது பெண்ணின் எண்ணம்
படுத்தபடி கேட்ட மாமியாருக்கு
பிடித்தது கிலி

பொண்டாட்டியின்
பிறந்த வீட்டு வசதி
பார்த்துக் கொள்ள
பரிதவிக்கும் கணவன்...

பணத்தை முன் நிறுத்தி
பிரிக்க திட்டமா???

புது வாழ்வை
புரிதலுடன் தொடக்கம்....
 

Dhakai

New member
Joined
Mar 23, 2025
Messages
25
பெற்றவர்களின் அறிவுரையை
பெண்ணும் ஏற்றுக் கொள்ள

புது பெண்ணின் எண்ணம்
படுத்தபடி கேட்ட மாமியாருக்கு
பிடித்தது கிலி

பொண்டாட்டியின்
பிறந்த வீட்டு வசதி
பார்த்துக் கொள்ள
பரிதவிக்கும் கணவன்...

பணத்தை முன் நிறுத்தி
பிரிக்க திட்டமா???

புது வாழ்வை
புரிதலுடன் தொடக்கம்....
அருமை.. மிக்க நன்றி ❤️❤️❤️
 
Top Bottom