உசுரே நீதானே - 1
மீனா இன்று வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்ப மிகுந்த தாமதமாகி விட்டது. அவசர அவசரமாக வெளியில் வந்தாள்.
ஆட்டோ எதுவும் வருகிறதா என்று சாலையின் இரண்டு பக்கங்களிலும் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை.
தன் கைப்பேசியில் மணி பார்த்தாள். நேரம் இரவு எட்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது.
வேக வேகமாக அவனுடைய எண்ணைத் தேடியெடுத்து அழைத்தாள். அவன் அழைப்பை எடுக்கவில்லை.
'மானங்கெட்டப்பய! எங்க போய்த் தொலஞ்சானோ?' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே தன் தம்பி பூபதியின் எண்ணுக்கு அழைத்தாள்.
"என்னக்கா! லேட்டாயிருச்சா?" என்று பூபதியின் குரல் கேட்டதும் நிம்மதியடைந்தாள்.
"ஆமாண்டா! இங்க ஆட்டோ ஒன்யும் காணம்.." என்று அவள் ஆரம்பிக்கும்போதே,
"நீ அங்கியே நில்லுக்கா.. நா பக்கத்தில வண்ட்டேன்.." என்றான் பூபதி.
"ம்!" என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.
சில நிமிடங்களில் மீனாவின் முன்னால் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.
"சாப்ட்டியாடா!" என்று கேட்டுக் கொண்டே ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.
"இல்லக்கா.. நீ?" என்று பதிலுக்குக் கேள்வி கேட்டபடியே வண்டியைக் கிளப்பினான் பூபதி.
"உன்ன வுட்டுட்டு எப்டிடா சாப்டுவேன்?" என்று மீனாவும் பதில் கேள்வி கேட்டாள்.
"ஏன்க்கா? நீ சாப்ட வேண்டியதுதானே? உனுக்கு கண்ணாலம் வருதுல்ல.. நீ கரீட் டயத்துக்கு நல்லா சாப்ட வோணாமா?" என்று கடிந்து கொண்டான்.
"அக்காங்! அது ஒண்ணுதான் கேடு! அந்தாளுக்கு உன்னும் பொறுப்பே வர்ல. பேசாம கண்ணாலத்த நிப்பாட்டிடலாமான்னு தோணுது." என்று சலித்துக் கொண்டாள்.
"அட ஏன்க்கா! மாமாவுக்கு சீக்ரம் வேல கெடக்கும். அவரும் பொறுப்பானவருதான்னு உனுக்கு புரியும்." என்று கூறினான் அவன்.
"ஆமா போடா! நம்ம ரெண்டு பேரும் எத்தனி எடத்தில வேல வாங்கி வெச்சோம்.. எதுக்காவது போனானாடா அந்தாளு? இந்த வேல செய்ய மாட்டேன். அந்த வேல எனுக்கு செட்டாவாதுன்னு வெட்டி நாயம் பேசிகிட்டு எல்லா வேலையும் வுட்டுட்டு வுட்டுட்டு வண்ட்டான். சரி! அத்த வுடு! புட்ச்ச வேலையோ புடிக்காத வேலையோ.. சம்பாரிச்ச துட்ட பத்திரமா வச்சிருக்கணும்ல.. என்னடா! நமக்கும் கண்ணாலம் ஆவப் போவுதே! நம்மள நம்பி ஒரு பொண்ணு வரப் போவுதேன்னு கொஞ்சமாவது நெனப்பிருக்காடா அந்தாளுக்கு? சம்பாரிச்ச மொத்த துட்டையும் எவ கிட்ட குடுத்து அயிக்கறானோ.." என்று அங்கலாய்தாள்.
"அப்டிலாம் சொல்லாதக்கா! மாமாவுக்கு அந்த மாரி பயக்கம்லாம் இல்ல.. மெய்யாலுமே மாமா உன் மேல ரொம்ப ஆசையா கீராரு.. உன்னிய ராணி மாரி வெச்சிப்பேன்னு எப்பயும் சொல்லிட்டு திரியிராரு க்கா.." என்றான் அவன்.
"ஆமா.. ராணி மாரியாம்.. இந்த வெட்டிப் பேச்சுக்கு ஒன்யும் கொறச்சல் இல்ல.. ஒயிங்கா வேலைக்கு போயி சம்பாரிச்சி சாதா மனுசியா வச்சிகிட்டா போதும்.. ம்க்கும்.." என்று கூறி கழுத்தை நொடித்துக் கொண்டாள்.
"மாமா கை நெறைய சம்பாரிச்சி உன்னாண்ட எடுத்தாந்து குடுக்கதான் போறாரு.. நீ அவர நெனச்சி பெரும பீத்திக்க தான் போற.." என்றான் பூபதி சிரித்துக் கொண்டே.
'ம்க்கும்.. அப்டியே குடுத்துட்டாலும்..' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள்,
"சரி! சரி! அந்தாள் பேச்ச வுடு! நம்ம மொதலாளி எப்டி கீராரு.. ஆஸ்பத்ரில ருந்து வூட்டுக்கு வண்ட்டாரா?" என்று கேட்டு பேச்சை மாற்றினாள்.
"உன்னும் இல்லக்கா! நாளக்கி யாரோ பெரிய டாக்டரு வந்து பாப்பாராம்.. அவரு வந்து மொதலாளியோட ஒடம்பு கன்டீசன பாத்து சொன்னப்றம்தான் வூட்டுக்கு அனுப்புவாங்களாம்.. மொதலாளியம்மாவுக்கு சாப்பாடு வாங்கி குடுத்துட்டு வரும்போது அவங்க சொன்னாங்க.." என்றான்.
"பாவம்! நல்லவங்கள தான் ஆண்டவன் ரொம்ப சோதிக்கறான்." என்று தத்துவம் பேசி வருந்தினாள் மீனா.
ஆட்டோ நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடம் பயணித்தால்தான் மீனா, தன் தம்பி பூபதியுடன் குடியிருக்கும் குப்பத்தை அடைவார்கள்.
மீனாவும் பூபதியும் அக்கா தம்பி. அவர்களுக்கு பெற்றோர் இல்லை. பூபதிக்கு ஐந்து வயதிருக்கும்போது ஒரு சாலை விபத்தில் பலியாகிவிட்டார்கள்.
மீனா பன்னிரெண்டாம் வகுப்பும் பூபதி பத்தாம் வகுப்பும் படிக்கும் வரை அவர்கள் இருவரையும் அவர்களுடைய சித்தப்பாவும் (அவர்களுடைய தந்தையின் தம்பி) மாமாவும் (அவர்களுடைய தாயின் தம்பி) மாறி மாறி பராமரித்தார்கள்.
அதன் பிறகு வந்த ஒரு குடும்ப சண்டையில் இருவரும் முறுக்கிக் கொண்டு போக, மீனாவும் பூபதியும் அவர்களால் புறக்கணிக்கப்பட்டார்கள்.
அதனால் வேறு வழியின்றி இருவரும் இந்தக் குப்பத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
மீனா தன் படிப்பை பன்னிரெண்டாம் வகுப்புடன் நிறுத்திக் கொண்டு பூபதியை மேலே படிக்க வைத்தாள். ஆனால் அவனால் பன்னிரெண்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. அவன் கவனமும் படிப்பில் லயிக்கவில்லை.
ஆனால் நல்ல வேளையாக அவன் தவறான சகவாசம் எதையும் பற்றிக் கொள்ளவில்லை. அதற்கு மீனாவின் அன்பும் கண்டிப்பும் கூட ஒரு காரணம் எனலாம்.
பெரிதாகப் படிப்பு இல்லாத காரணத்தால் அவன் ஒரு பஜ்ஜி கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.
வரும் வாடிக்கையாளர்களுக்கு வேண்டியது கேட்டு, அதை பஜ்ஜி மாஸ்டரிடம் சொல்லி, அவர் செய்து கொடுக்கும் பஜ்ஜிகளை தட்டில் வைத்து எடுத்து வந்து கேட்டவர்களிடம் கொடுத்து அவர்கள் எத்தனை பஜ்ஜிகள் வாங்கினார்கள் என்று கணக்கு வைத்து கல்லாவில் அமர்ந்திருக்கும் முதலாளியிடம் சொல்லி சரியான தொகையை வாடிக்கையாளர்களிடம் வசூலித்து பாக்கி சில்லறை மாற்றிக் கொடுத்து அவர்களை இன்முகத்துடன் அனுப்பி வைத்து எச்சில் தட்டுகளை எடுத்துப் போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து அடுத்த வாடிக்கையாளரை வரவேற்று என அவன் பம்பரமாய்ச் சுற்றி வேலை செய்யப் பழகிக் கொண்டான்.
மேலும் பாத்திரம் கழுவும் பெண் வரவில்லையெனில் மனம் சுணங்காமல் தானே அந்த வேலையையும் எடுத்துப் போட்டு செய்தான்.
இதனால் கடை முதலாளியிடம் விரைவிலேயே நல்ல பெயர் வாங்கினான்.
அவனுடைய சுறுசுறுப்பும் துறுதுப்பும் பார்த்து ஒரு பெரியவர் அவனை கார் ஓட்ட கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
புது வாய்ப்பு வந்துவிட்டதால் பஜ்ஜிக் கடை முதலாளியை விட்டு விட அவனுக்கு மனமில்லைதான்.
ஆனால் பஜ்ஜிக் கடைக்காரரே,
“டே பூபதி! எத்தினி நாளிக்கு இப்டி நீ எச்சி தட்டு களுவிகினு ருப்ப.. நீயும் மேல வர வோணாமா? உன்னிய நம்பி ஒங்கக்கா வேற கீரா! அக்காளுக்கு நல்லது செய்ய ஒன் கையில துட்டு வோணாவா? சார் உனுக்கு நல்ல வளி சொல்றாருல்ல.. அப்டியே கப்புனு புட்சிக்க.. போ! இங்க எச்சி தட்டு களுவ வேற யாராவது வருவான்.. ஆனா அக்காவுக்கு நீ மட்டும்தான கீர?” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அவரே அவனுக்காக செலவு செய்து ஓட்டுநர் உரிமமும் வாங்க உதவி செய்தார்.
கார் ஓட்ட உரிமம் கிடைத்ததும் புது முதலாளி தன்னிடம் ஓடும் ஆட்டோக்களில் ஒன்றைக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற வழி செய்தார்.
அவனுடைய நேர்மையும் நாணயமும் அவனுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க, முதலாளி வீட்டுக்கு அவர் அழைக்கும் நேரத்தில் கார் ஓட்டுநராகவும் செல்லத் தொடங்கினான்.
அன்றிலிருந்து பூபதி காலையில் சில மணி நேரங்கள் முதலாளிக்காக கார் ஓட்டுவதையும் அதன் பின்னர் மற்ற நேரங்களில் தனக்காகவும் தன் தமக்கைக்காகவும் ஆட்டோ ஓட்டுவதையும் வழக்கமாக்கிக் கொண்டான்.
அப்படி ஒரு நாள் முதலாளி வீட்டுக்காக கார் ஓட்டப் போகும் போது தன் அக்கா மீனாவையும் அழைத்துச் செல்ல நேர்ந்தது.
மீனா முதலாளியம்மாவுக்கு சமையலில் உதவி செய்யப் போக, அவள் வைத்த மீன் குழம்பு அவர்கள் வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவருக்கு மிகவும் பிடித்துப் போனது.
அந்த நண்பர் தன் ஹோட்டலில் மீனாவுக்கு மீன் குழம்பு செய்யும் வேலையைக் கொடுத்தார்.
அன்று முதல் மீனாவும் ஹோட்டலில் சமையல் செய்து சம்பாதிக்கத் தொடங்கினாள்.
ஆட்டோ இன்னும் ஓடிக்கொண்டிருந்தது.
சாலையில் மின்விளக்குகள் இருந்தும் வெளிச்சம் அதிகமில்லாமல் இருட்டாகவே காட்சியளித்தது.
"சரி! ரோட்டப் பாத்து ஓட்டுடா.. சீக்ரம் வூட்டுக்குப் போய் சாப்ட்டு படுக்கணும்.. நாளிக்கி எங்க ஓட்டல்ல ஏதோ விசேசமாம்.. சீக்ரம் வர சொல்லிருக்காங்க.." என்றாள் மீனா.
"சரிக்கா!" என்ற பூபதி வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.
வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவளின் கண்களுக்கு சாலையின் வலப்பக்கத்து இருட்டில், அந்தரத்தில் ஏதோ பளபளப்பாய் மின்னுவது போல தெரிந்தது.
‘இது.. இது.. அது ல்ல..’ என்று அவள் யோசிக்கும்போதே வண்டி நின்றது.
மீனா அவசரமாக இறங்கி அது என்ன பளபளப்பு என்று கண்ணால் பார்த்தறிய வலப்பக்கம் செல்லத் தொடங்க, பூபதி இடப்பக்கத்தில் கீழே விழுந்து கிடந்த உருவத்தின் அருகில் ஓடினான்.
"அண்ணே! என்னாச்சு?" என்று கேட்டுக் கொண்டே அந்த மனிதனைத் தூக்கி அமர வைத்தான்.
அந்த மனிதனின் உடல் கொதித்துக் கொண்டிருக்க அவன் முனகிக் கொண்டிருந்தான்.
பூபதி தன் அக்காவைத் தேட, அவள் சாலையின் எதிர் திசையில் எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுத் திகைத்தான்.
"யக்கா! அங்க இன்னா பண்ற? இங்க வாக்கா! ஒரு கை புடி!" என்று கூவினான்.
மீனா தன் கண்களுக்குக்கு பளபளப்பாகத் தெரிந்தது என்னவென்று புரியாமல் அதைக் கண்டுபிடிக்கவும் முடியாமல் ஏமாற்றத்துடனும் குழப்பத்துடனும் தம்பியின் அருகில் வந்தாள்.
"யார்ரா இந்தாளு?"
"தெர்லக்கா.. செம்மயா காச்சலடிக்கிது.. ஒரு கை புடி.. முக்கு டாக்டராண்ட இட்டுனு போயிடலாம்.." என்றான் பூபதி.
"ஏய்! தண்ணியடிச்சிருக்கானாடா?" என்று சந்தேகத்துடன் கேட்டாள்.
பூபதி உடனே அவன் முகத்தருகே சென்று முகர்ந்து பார்த்துவிட்டு,
"ச்சே! ச்சே! இல்லக்கா! மெய்யாலுமே ஒடம்பு செரியில்ல! பாவம்க்கா!" என்றான்.
"சரி! சரி! வா!" என்று முணுமுணுத்தாள்.
மீனாவும் பூபதியும் சேர்ந்து அந்த மனிதனைத் தூக்கி வந்து ஆட்டோவில் அமர வைத்தனர். அவன் இன்னும் முனகிக் கொண்டிருந்தான்.
மீனா அவனருகில் அமர்ந்து கொண்டதும் ஆட்டோவைக் கிளப்பினான் பூபதி.
அவன் சொன்ன முக்கு டாக்டர் நேரமானதால் தன் கடையைப் பூட்டிக் கொண்டிருந்தார்.
பூபதி வருவதைப் பார்த்துவிட்டு நின்று,
"என்ன பூபதி? யாரு இவன்?" என்று கேட்டார்.
"தெர்ல சார்! ரோட்ல வுயிந்து கெடந்தான்.." என்று பூபதி கூறும்போதே,
"ஐயியோ! அப்ப போலீஸ் கேசாச்சே.. நா பாக்க மாட்டேன்.. நீ வேற எங்கியாச்சு தூக்கிட்டு போப்பா.." என்று அவசரமாகக் கூறினார்.
"சார்! சொம்மா பயந்துக்காத.. மொதல்ல இந்தாளுக்கு இன்னான்னு பாரு.." என்று சலிப்பாகக் கூறினாள் மீனா.
அந்த டாக்டர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அந்த மனிதனைப் பரிசோதித்தார்.
பின்னர் அவனுக்கு ஒரு ஊசியைப் போட்டுவிட்டு ஒரு சீட்டில் மருந்து எழுதி பூபதியிடம் நீட்டினார்.
"காச்சல் குறைய ஊசி போட்ருக்கேன்.. இந்த மருந்த வாங்கி குடுங்க.. காலையில பெரியாஸ்பத்ரில கொண்டு போய் சேர்த்திருங்க.." என்றார்.
"ஐய! மருந்து வாங்க என்னாண்ட எப்டி துட்டு இருக்கும்? நீயே எதுனா பாத்து குடு சார்!" என்றாள் மீனா.
"ஏம்மா? நா என்ன மருந்து கடையா நடத்தறேன்?" என்று அங்கலாப்பாய்க் கேட்டார்.
"சார்! எதுனா சாம்பிள் மருந்து இருந்தா குடு சார்.. இந்தாளுக்கு பாவம் பாத்து நாங்க இங்க தூக்கிட்டு வந்தோம்.. எங்களுக்கு பாவம் பாத்து நீ மருந்து குடு.." என்றாள் மீனா.
"அப்ப எனுக்கு எவன் பாவம் பாப்பானாம்?" என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தார் டாக்டர்.
அவர் மெலிதாய் முணுமுணுத்தாலும் மீனாவின் காதில் அவருடைய முணுமுணுப்பு விழத்தான் விழுந்தது.
"கவலப்படாத சார். ஓன் பொயப்பில மண்ணள்ளி போட மாட்டேன்!" என்று கூறிக் கொண்டே தன் கைப்பையிலிருந்து ஒரு இருநூறு ரூபாய்த் தாளை எடுத்து அவர் கையில் கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்ட அந்த டாக்டர், அவள் கேட்டபடியே சாம்பிள் மருந்துகள் சிலவற்றை எடுத்து பூபதியிடம் கொடுத்தார்.
"பூபதி! இந்த மருந்துகள இன்னிக்கு நைட்டுக்கு குடு.. காலையில இவன பெரியாஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போயிடு.. லேட் பண்ணிடாத.. இந்தாள் நெஞ்சுல ரொம்ப சளி கட்டிகிட்டு ருக்கு.. பாறை மாதிரி.. மூச்சு விட முடியாம கஸ்டப்படறான்.. அதோட பனியில ரொம்ப நாள் இருந்திருப்பான் போல.. அதான் காச்சலும் சேர்ந்துகிச்சு.." என்றார்.
"ரொம்ப தேங்க்ஸ் சார்." என்ற பூபதி அவனை மீண்டும் தன் ஆட்டோவில் ஏற்றினான்.
"இப்ப இந்தாள எங்கடா விடறது?" என்று கேட்டாள் மீனா.
"வாக்கா பாத்துக்கலாம்!" என்ற பூபதி மீண்டும் தன் வண்டியைக் கிளப்பினான்.
தன் வீடு இருக்கும் குப்பத்துக்கு வந்து அங்கே தன் நண்பன் வீட்டில் அந்த மனிதனை பத்திரமாகப் படுக்க வைத்தான் பூபதி.
"யார்ரா இவன்?" என்று கேட்ட நண்பனிடம், விவரங்களைக் கூறிவிட்டு,
"நா காலையில வரண்டா.. இந்தாள பெரியாஸ்பத்ரில வுட்டுடலாம்.." என்றான் பூபதி.
"சர்ரா.. நா பாத்துக்கறேன்." என்று நண்பன் பூபதிக்கு விடை கொடுக்க, தன் தமக்கையுடன் வீடு வந்து சேர்ந்தான் பூபதி.
"ச்சே! என்னா அலச்சல்.. இன்னிக்கு பூரா நிக்க நேரமில்லாம எக்கச்சக்க சவாரி!" என்று கூறிக் கொண்டே தன் கால் சட்டைப் பையிலிருந்து கத்தையாய் பணத் தாள்களை எடுத்து தமக்கையின் கையில் திணித்தான்.
"இந்தாக்கா! இன்னிக்கு ஆட்டோ ஓட்டின வசூல்!" என்றான்.
"நீயே வச்சிக்கடா! இது உன் பணம்!"
"அப்டியே போட்டன்னா எப்டியிருக்கும் தெரியுமா? இது என்ன புதுசா? உன் பணம்? என் பணம்னு? எல்லாம் நம்ம பணம்!" என்று கூறிவிட்டு கழப்பறைக்குள் புகுந்து கொண்டான்.
மீனாவின் இதழ்களில் புன்னகை விரிந்தது. அவன் கொடுத்த பணத்தை எண்ணி ஒரு கவரில் வைத்து பத்திரப்படுத்திவிட்டு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி தோசை சுடத் தொடங்கினாள்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவினை முடித்துவிட்டு அவரவர் இடத்தில் சென்று படுத்தனர்.
பூபதி படுத்ததும் உறங்கிவிட மீனாவின் மனதில் அந்த சாலையோரத்து இருட்டில் கண்ட அந்த பளபளப்பு பற்றியே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
'அது நா வாங்கி குடுத்த டாலர் வச்ச செயினு! அப்ப அந்த இருட்டில நின்னுட்டிருந்தது அந்தாள் தானா? அங்க இன்னா பண்ணிட்டிருந்தான்? ஆனா நா போய் பாக்கறப்ப அங்க யாருமே இல்லியே?' என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தவள் மெல்ல மெல்ல உறங்கத் தொடங்கினாள்.
- தொடரும்....
Author: Bandhini
Article Title: உசுரே நீதானே - 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உசுரே நீதானே - 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.