• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ ! 7

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
15
இழைத்த கவிதை நீ ! 7

ஷேக்ஸ்பியரின் பிரபல கதாபாத்திரமான ஆர்ஸினோ பிரபு என்பவன் ஒரு காதல் கிறுக்கன். தன்னை ஆகச்சிறந்த காதலனாக எண்ணியவனுக்கு, அவனைப் போல் யாரும் காதலிக்க முடியாதென்ற பெருமிதம்.
தன் காதலியை விட தான் காதலில் திளைப்பதான எண்ணத்தைக் காதலித்தவன். ‘கனகச்சிதமான காதல்’ என்ற மாயக் கற்பனையை உருவகித்து உருகியவன்.

ருக்மிணி, சௌமித்ரன் இருவருமே அந்த ஆர்ஸினோவைப் போல்தான் இருந்தனர்.

இவர்களுடையது பருவத்தில் வரும் பதின்மக் காதலில் இருக்கும் வெள்ளந்தித்தனமும், கல்லூரிக் காதலில் இருக்கும் கனவுகளும் இல்லாத பரிசுத்தமான கார்ப்பரேட் காதல்.

இருவரது ஈர்ப்பும் நேசமும், காதலும் கருணையும், அன்பும் அக்கறையும் எத்தனை நிஜமோ, அதே அளவு அவர்களது காதலை, கல்யாணத்தை, அதற்குப் பின்னான வாழ்க்கையை, தங்களது வேலையை, எதிர்காலத் திட்டங்களை, உறவுகளைப் பேணுவதை, குடும்பம் என்பது குறித்தான அவரவர்களது அபிப்பிராயத்தை, பிரமைகளை, பார்வைகளை , அதை கட்டமைப்பது எப்படி என்பதை கிட்டத்தட்ட அடுத்த ஜென்மத்திற்கும் சேர்த்தே திட்டமிட்டதும் நிஜம்.

இருவரது வருமானம், அதற்கான வழிமுறைகள், தொழிலில் உயர்வு, முதலீடு, லாப நஷ்டங்கள், ஆசைகள், பயணங்கள் என எந்தவிதமான ‘பக் (bug)’ எனப்படும்
பிசிறோ, பிழையோ அறவே இல்லாத, அவர்களது ஐடி கம்பெனியின் ப்ராஜெக்ட்டுகளை கையாளுவதைப் போன்றே வாழ்க்கை ப்ரோக்ராமையும் வெற்றிகரமாக ரன் செய்யத் திட்டமிட்டனர்.

காலக்கெடுவையோ காலாவதியாகும் நாளையோ குறிப்பிடவிடல்லை என்பதுதான் ஒரே ஆறுதல். (Deadline & expiry date)

ஏற்பாட்டுத் திருமணங்களே காதல் திருமணங்களாக உருமாற்றம் செய்யப்படும் காலத்தில், காதல் வயப்பட்ட இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ ஆசைப்பட்டதில் தவறொன்றுமில்லைதான். அதுதான் சரியும் கூட.

அதேநேரம், பரபரப்பான சாலையில் நான் என் இஷ்டப்படிதான் வண்டியை ஓட்டுவேன், யாரும் குறுக்கே வரக்கூடாதென்றால், ஆகிற காரியமா என்ன?

நூல் பிடித்தாற் போன்ற வாழ்க்கை அமைந்தால் வரம்தான். அது தானாக அமைய வேண்டும். நூலை நூற்றவனும் வேண்டாம், ஆடையும் நெய்ய மாட்டேன் என்றால், அந்த நூல்கண்டிலேயே சிக்கித் தவிக்க வேண்டியதுதான்.

இளமையும், கல்வியும், பணமும் பயணமும் கொடுத்த தன்னம்பிக்கையாலும் சுதந்திர உணர்வாலும் அடிக்கோடிடப்பட்ட ஆசைகளே அவர்களது இல்வாழ்வின் லட்சியமானது.

“மார்னிங்ல அரக்கப் பறக்க, நேரமாச்சு, நேரமாச்சுன்னு கோபமா கத்தி, அவசரமா சமைச்சு, சண்டை போட்டுன்னு கடிகாரத்தைத் துரத்தக் கூடாது சௌ”

“கரெக்ட், அதே போல, கல்யாணம் ஆகிட்டதனால நாம இப்ப ஃபாலோ பண்ற ஃபிட்னஸ் ரொட்டீனை விட்டுடக் கூடாதுடா முனீஸ். ஆஃப்டர்ஆல், ஹெல்த் ஈஸ் வெல்த் யூ நோ.

எப்பயாவது ரொம்ப பிஸின்னா தவிர, நிதானமா எழுந்து, பொறுமையா யோகா, ஜாகிங், காஃபி, சமையல்னு ரிலாக்ஸ்டா சேர்ந்தே வேலை செய்யலாம்டா”


எதிரே இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்திருந்த ருக்மிணி, சௌமித்ரனின் கூற்றில் உணர்ச்சிவசப்பட்டவள், சடாரென எழுந்து வந்து, அவனது கன்னங்களைப் பிடித்து, பின்னோக்கி முகத்தை உயர்த்தி, அழுத்தமாக, சத்தமாக அவன் நெற்றியில் தன் முதல் முத்திரையைப் பதிக்க, சௌமித்ரன் திகைத்தான்.

“ம்ம்ம்…” என்று கண்களை மூடியவனுக்கு தன்னை சமன்படுத்திக்கொள்ள சிறிது நேரமெடுத்தது.

“சௌ”

“முனீம்மா…” என்றவனின் குரல் கரகரத்து நெகிழ்ந்திருந்தது. நம்பிக்கையும் நிமிர்வும் நிறைந்த ருக்மிணி, அத்தனை எளிதாக உணர்ச்சிவசப்பட மாட்டாள்.

வேலையில் எதிர்ப்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் அபாரமான வேகமும் ஆற்றலும் ஆளுமையும் உடையவள்.

திருச்சி போன்ற சம்பிரதாயமான ஊரில், கட்டுப்பாடான, பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்தில், ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற பெற்றவர்களின், பெரியவர்களின் வேண்டுதலையும் எதிர்பார்ப்பையும் மீறி, மூன்றாவது பெண்ணாகப் பிறந்த ருக்மிணிக்குத் தெரிந்த எந்த ஆணும் இதுபோல் பேசி அவள் கேட்டதில்லை.

வருடக் கணக்கில் துவைத்து, பெருக்கி, பொங்கினாலும், ஊரிலிருந்து மனைவி என்ற கேரக்டரை அழைத்து வந்ததுமே, வீட்டு வேலைக்கு முழுக்கு போடும் ஆண்கள் அமெரிக்காவிலும் உண்டு .

எட்டு வருடங்களுக்கு மேலாக, தன் வேலைகளைத் தானே செய்து பழகிய சௌமித்ரன் இயல்பாகச் சொன்னாலுமே, அதை அவன் சொல்லிய விதம் அவளை அசைத்தது.

அவளது பள்ளித் தோழி ஒருத்தி திருமணமாகி, இர்வைனில் (Irvine) இருக்கிறாள். இரண்டு வயதில் ஒரு குழந்தை கூட இருக்கிறது. அவளது கணவனை உதவி கேட்டால் ‘உன் சோம்பேறித் தனத்திற்கு நான் ஆள் இல்லை’ என்பானாம். இத்தனைக்கும் அவள் ஒரு பன்னாட்டு வங்கியில் அதிகாரியாக இருக்கிறாள்.

காதலைச் சொன்ன தினத்திலிருந்து பெரிய பெரிய திட்டங்களும் சின்னச் சின்ன தீண்டல்களுமாய் மூன்று வாரங்கள் கடந்திருந்தது.

ருக்மிணி தன் வீட்டினருடன் பேசி சமாதானம் செய்ய செய்த முயற்சிகள் அனைத்தும் பலனின்றி போனது.

வெளிநாட்டுப் படிப்பும் பணமும் தானே மாப்பிள்ளை தேடிக்கொள்ளும் திமிரையும் துணிவையும் கொடுத்ததாகச் சொன்ன அவளது தந்தை, இவளது பக்கத்தைக் கேட்கவே மறுத்தார். அம்மாவும் அக்காக்களும் அப்பாவின் கோபத்தில் குளிர் காய்ந்தனர்.

வெளிப்படையாகப் புலம்பி, வருந்தாவிடினும், சௌமித்ரனால் ருக்மிணியின் மனதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“அன்னிக்கு நான் அவசரப்படாம இருந்திருக்கலாம் மினி. ஏதோ ஒரு வேகத்துல, உன் மேல இருந்த பொஸஸிவ்நெஸ்ல…”

“ஐ லவ்ட் தட் மொமெண்ட் சௌ. மனசுக்குள்ள எவ்ளோ தரம் ரீப்ளே பண்ணி பார்த்திருக்கேன் தெரியுமா?”

“முனீஸ்வரி, நிஜமாவாடீ?”

என்று கிறங்கியவனிடம் ருக்மிணியின் நெற்றியும் விரல்களும் பெற்ற முத்தங்கள் எண்ணிலடங்காது.
அத்தனை அண்மையிலும் நெருக்கத்திலும் கூட வார்த்தையில் சீண்டுவதைத் தவிர, தவறான பார்வையோ, தொடுகையோ இல்லாத சௌமித்ரனை அவளாகவே மென்மையான அணைக்கையிலும், அவனது தோள் சாய்கையிலும் சௌமித்ரன் மோனமடைந்தான்.

“உனக்குத் தெரியுமா முனீஸ், என்னோட ரொட்டீன், ஸ்போர்ட்ஸ்ல இருக்கற இன்ட்ரஸ்ட், ஊர் சுத்தற ஆசை, ம்யூஸிக், புக்ஸ், யாரோட தலையீடும் இல்லாம அமைதியா நேரம் செலவழிக்கறதுனு எனக்குன்னு தனிப்பட்ட விருப்பும், என் வீடு இப்படிதான் இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பும் இருக்கு. அதை யாருக்காகவும் மாத்திக்கவும் விட்டுக் கொடுக்கவும் நான் விரும்பலை. ஐ மீன்…”

“...”

“அது போல எல்லாருக்கும் இருக்கும். ஆனா, அது என்னோட விருப்பங்களோட ஒத்து வரணும்னு எதிர் பாக்கறதும் தப்புதானே? அதனாலயே கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன்”

“...”

“அதே சமயம், இதுவரைக்கும் யார் மேலயும் எந்த ஈர்ப்பும் வரலை. என் ரசனைகளோட ஒத்துப் போற மாதிரி ஒரு பொண்ணை சந்திப்பேன், என் பெட் (pet) மாதிரி கூடவே கூட்டிட்டு சுத்துவேன்னு கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணலைடீ முனீம்மா”

“...”

“அன்ட், ஐ ப்ராமிஸ் யூ முனீஸ், யார் கிட்டயும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன். நாம காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டாம் மினி,
ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”

திருமண உறவில் சமத்துவம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஆணின் ஆளுமையும், பெண்ணின் மென்மையும் கூட அவசியம்தான்.

குடும்பம் என்று வருகையில் எந்நேரமும் சமத்துவம், சகோதரத்துவம் என முழங்க முடியாது.

சூழலைப் பொறுத்து ஆண்மையும் அடங்கலாம். பெண்மையும் ஆளலாம்.
அந்தச் சிறு ஏற்றத் தாழ்வில், ஆண், பெண் வித்தியாசத்தில், இயற்கையின் குண பரிமாற்றத்தில் இருக்கிறது, தாம்பத்யத்தின் ரஹஸ்யமும் அழகியலும்.

********************

தங்களின் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை, நண்பர்களை நிறுத்த வேண்டிய இடம் எது என்பது வரை விவாதித்த ருக்மிணியையும் சௌமித்ரனையும் விலக்கி நிறுத்துவது எப்படி என்ற தீவிர ஆலோசனையில் இருந்தனர் ருக்மிணியின் பெற்றோர்.

சௌமித்ரனின் வீட்டைப் பொறுத்தவரை, அவனது அம்மா மைதிலிக்கு பெண்ணை, தான் பார்த்துப் பரிந்து, தேர்ந்தெடுக்கவில்லையே என்ற மனத்தாங்கல்தானே தவிர, யாரைக் காட்டினாலும் வேண்டாமென்றவன், மினி, மினி என்று ஜபிப்பதிலேயே அவனது மனம் புரிந்தது.

அது மட்டுமின்றி, ரேகா, குமார் இருவரும் அடித்த வேப்பிலையும், கணவர் ரகுநாதன் ‘இங்க பாரு மைதிலி, பொண்ணு பார்க்க அழகா இருக்கா, உன் புள்ளைய விட அதிகம் படிச்சிருக்கா. நல்ல வேலை, சம்பாத்யம். அந்த ஊரும் பழகி இருக்கு. எல்லாத்துக்கும் மேல, மித்ரனுக்கு புடிச்சிருக்கு. நாம சந்தோஷமா சம்மதிச்சா, நமக்கான மரியாதை கிடைக்கும். இல்லைன்னாலும் எப்படியும் அவன் அந்தப் பொண்ணைதான் கல்யாணம் பண்ணிக்கப் போறான். அதனால நாம ரெண்டு பேரும் காலண்டர்ல இருக்கற மஹாலக்ஷ்மி மாதிரி ஆசீர்வாதம் பண்ற போஸ்ல கையை ரெடியா வெச்சுப்போம்” என சீரியஸாகத் தொடங்கி, சிரிப்புடன் முடித்தாலும், அவர் சொன்னது முற்றிலும் உண்மை என்பது மைதிலிக்கும் தெரிந்துதான் இருந்தது.

ஜீன்ஸ், ஜெர்கினில் இருவரும் இயல்பாக இணைந்து இருந்த சுயமி ஆகட்டும், அலுவலகத்தில் ஃபுல் ஃபார்மல்ஸில் கோட் சூட்டுடன் இருந்ததாகட்டும், தீபாவளி கெட் டு கெதரில் வெள்ளை வேஷ்டி, சட்டையில் இருந்த சௌமித்ரனுடன் மெல்லிய ஜரிகைக் கரையிட்ட ஆர்மி க்ரீன் நிற மஹேஸ்வரி சில்க் புடவையில் இருந்த படமாகட்டும், ருக்மிணி பார்க்க பாந்தமாகத்தான் இருந்தாள்.


உருவப் பொருத்தத்தை தாண்டி, இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது படத்திலேயே தெரிந்தது.

ருக்மிணியின் பெற்றோருக்கு செய்தி தெரிந்து முழுதாக இரண்டரை மாதங்கள் கடந்த பின், இந்துவின் கணவரிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. ஆர்வத்தோடு எடுத்தவளிடம் “என்ன ருக்கு, இப்படி பண்ணிட்ட, அமெரிக்கால வேலை பார்க்க உனக்கு சிபாரிசு பண்ணின என்னைப் போய் வில்லனாக்கிட்டியே”

“ஸாரி… ஸாரி ஜீ (அப்படித்தான் அழைத்தாள்!)“ என்றாள் உள்ளே போன குரலில்.

திருமணமாகி ஆறேழு மாதங்களிலேயே மைத்துனியின் பட்டமளிப்பு விழாவிற்கு வந்ததோடு, அவள் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லி, அவள் வீட்டினரிடமே பேசி, சம்மதிக்க வைத்தவனின் மீது ‘உங்க வார்த்தையை நம்பிதான் அவளை அனுப்பினேன். இப்ப இதுக்கு யார் பொறுப்பு?” என அவளது தந்தை இப்போது குற்றம் சுமத்துகிறாராம்.

மீண்டும் மன்னிப்பு கேட்டவளை “அதை விடும்மா, இப்போ என்ன செய்யறதா உத்தேசம், எந்த முடிவுக்கும் வராம எத்தனை நாள்தான் இழுத்தடிக்கறது, சொல்லு. நான் சங்கர் (மாலாவின் கணவர்) கிட்டயும் பேசி இருக்கேன். உங்கப்பா, அம்மா கிட்ட பேசிப் பார்க்கலாம்னு இருக்கோம்”

சொந்த சகோதரனாக இருந்தால் கூட பெற்றோருடன் சேர்ந்து திட்டி, ஏன், நேரில் இருந்தால் கை கூட ஓங்கி இருப்பானாக இருக்கும். திருமணமாகி இன்னும் இரண்டு வருடங்கள் கூட நிறையாத அக்கா கணவரின் பேச்சும் செயலும் ருக்மிணியை நன்றியில் வாயடைக்கச் செய்தது.

“ஜீ…”

“இமோஷனல் ஆகாத ருக்கு, அவரைப் பத்தி சொல்லு”

“...”

“அட, பெங்களூர்தானா, நான் வேணா போய் பேசிப் பார்க்கவா?”

“அவர் கிட்ட கேட்டு…”

“பார்றா!” என உரக்கச் சிரித்தவன், இந்து கிட்ட பேசறியா, ஏதோ சொல்லணுமாம்”

“இந்துவா! என்ன சொல்…. ஜீ கங்கிராட்ஸ்” என்றாள், பல்பு எரிய.

“தேங்க்யூ ருக்கு சித்தி” என்று சிரித்தவனிடமிருந்து ஃபோனைப் பிடுங்கிகா கொண்டாள் இந்து.

வாழ்த்தை ஏற்ற பின் அழுதவள், பிறகு “அம்மா கூட பரவாயில்லடீ ருக்கு. அப்பாதான் ரொம்ப பிடிவாதமா இருக்கார். பெரியப்பாக்கு விஷயம் தெரிஞ்சு, அவரே பரவால்லைன்னு சொல்லிட்டார். இந்த அத்தை ரெண்டு பேரும்தான்…”

“அதை விடு இந்து, நீ எப்படி இருக்க, எத்தனாவது மாசம்?”

“நாலு முடியப் போறதுடீ. அறுபது நாள்லதான் நாங்க பிரெக்னென்ட்னு கன்ஃபர்ம் பண்ணினோம்”

“அடடா, நாங்க ப்ரெக்னென்ட்டா… எங்க, திரும்ப சொல்லு, திரும்ப சொல்லு”

“ச்சீ…போடீ, வாந்தி, தலைசுத்தல், தூக்கம்னு ஹெவி மசக்கை. அதனால வேலையை விட்டுட்டேன்”

“நீயுமா, இப்பவே ஏன்?”

சுத்தமா ட்ராவல் பண்ண முடியலடீ. என்னைப் பாத்துக்கறேன்னு உன்னோட ஜீதான் பாதிநாள் ஒர்க் ஃப்ரம் ஹோம்ல இருக்கார்.

இந்துவிற்கு மாமியார், நாத்தனார் கிடையாது. மாமனார் சென்னையில் மூத்த மகனுடன் இருக்கிறார். ஆஸ்த்துமா இருப்பதால் நான்கு நாட்களுக்கு மேல் அவருக்கு பெங்களூர் ஒத்து வராது.

“என்ஜாய் இந்து. டேக் ரெஸ்ட், நிறைய பாட்டு கேளு”

“சரிடீ நூத்துக்கிழவி”

எத்தனை தைரியமாக , அலட்சியமாக இருந்தாலும் அல்லது அப்படிக் காட்டிக் கொண்டாலும், தன் ரத்த உறவுகளிடம் பேசியதில் ஆறுதலாக இருந்தது. அவர்களாகவே தொடர்பு கொண்டதில் ‘அக(ம்)’ மகிழ்ந்தாள்.

இருந்தும் ருக்மணி, தன் தந்தையால் தன் பிடிவாதத்தை, அறிவித்த முடிவை அவ்வளவு எளிதில் மாற்றிக்கொள்ள அவரது ஈகோ இடம் தராது என
நன்கறிவாள்.

அதனாலேயே உடனடியாக அற்புதங்கள் நிகழுமென்ற எதிர்பார்ப்பு எதுவும் அவளிடம் இல்லை. அவள் நினைத்தது போலவே, இவர்கள் முட்டி மோத, மோத அவர் இறுகினார்.

தனது உபயோகத்துக்கென சிறிய கார் ஒன்றை வாங்கிய ருக்மிணியால், அந்த மகிழ்ச்சியைக் கூடத் தன் வீட்டினருடன் பகிர முடியவில்லை. மாறாக, சௌமித்ரனின் வீட்டில் பச்சை விளக்கு எரிந்ததில், ரேகா ருக்மிணியுடன் நட்பானாள்.

அலுவலகத்தில் சௌமித்ரனின் டீம் செய்த ப்ராஜெக்ட் முன்பே முடிந்து விட, ஐடி துறையின் எழுதாப்படாத சட்டத்தின்படி, அவன் கம்பெனி மாறினான்.

சௌமித்ரனின் வேலை என்னவோ இங்கேயேதான் எனினும், முதல் இரண்டு வாரங்கள் ஒரியன்டேஷன் என்ற பெயரில் நியூயார்க் சென்றான்.

அலுவலகத்தில் இன்னும் புது ப்ராஜக்ட் எதுவும் தராத நிலையில், ருக்மிணி அந்த இரண்டு வாரங்களை நானோ நொடிகளாக உந்தித் தள்ளினாள் என்றுதான் சொல்லவேண்டும்.

சௌமித்ரனுடன் தினமும் இருமுறை பேசினாலும், எண்ணற்ற குறுஞ்செய்திகளை அனுப்பினாலும் ருக்மிணிக்கு ஏதோ குறைவதாக, எதையோ இழந்ததாகத் தோன்றியது.

சரியாக வார இறுதியில் கார்த்திகைத் திருவிழா வர, கோவிலுக்குச் சென்று, அவர்களது நட்பு வட்டத்துடன் கதைத்தாள், கோவிலில் விளக்கேற்றினாள்.

சௌமித்ரன் இல்லாத தனிமையைப் போக்கவென கோவிலுக்குச் சென்றவளை மீனாக்ஷி, இளங்கோ, கார்த்திகேயன் என எல்லோரும் அவனைப் பற்றியே விசாரித்ததில் மேலும் மனம் சோர்ந்தாள்.

காலை நேர ஓட்டமும், மாலை விளையாட்டும் அவனின்றி சௌம்யமாக இல்லை.

அதிக வேலையின்மையும், பெற்றோருடன் கூடத் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் தனிமையும் அவளது இயல்புக்குச் சற்றும் பொருந்தாத கற்பனைகள், அது தந்த காட்சிகள் என தவித்துதான் போனாள்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், சான் ஃப்ரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் வந்து இறங்கி, தன் உடமைகளைப் பெற்றுக்கொண்டு வெளியில் வந்து கேப் புக் செய்ய மொபைலைத் திறந்த சௌமித்ரன் பின்னாலிருந்து யாரோ தன் மீது சாய்ந்ததில், அதிர்ந்து திரும்பியவன், ருக்மிணியைக் கண்டு உண்மையிலேயே அதிர்ந்து, திகைத்து, திணறினான்.

“மு…. முனீம்மா, மணி ராத்திரி ரெண்டுடீ, நீ எப்டி இங்க?

“ம்ப்ச்… எதுவும் பேசாத சௌ” என்று தன்னை இறுக அணைத்தவளின் தவிப்பு புரிய,

“ரிலாக்ஸ் மினி, த்ரீ மினிட்ஸ்ல கேப் வந்துடும், வா போகலாம்”


“கேப் வேணாம், கார்லதான் வந்தேன்”

“வாட், அறுபது கிலோ மீட்டர்டீ…. முதல் முதல்ல இவ்வளவு தூரம், தனியா, அதுவும் ராத்திரில… ஏம்மா?”

“...”

“சரி, வா” என்றவன் கார் சாவியைப் பிடுங்கிக் கொண்டான். அடுத்து வந்த நாட்களில் தன் பின்னாலேயே சுற்றியவளைக் கண்டவன்,
“கிறிஸ்துமஸ், நியூ இயர்ல இருந்து ஒரு மாசம் போல லீவ் போடு மினி, நாம இந்தியா போகலாம்”

“...”

“முனீம்மா”

“அங்க போய் நான் என்ன சௌ செய்வேன், எங்க தங்குவேன்?”

“நான் உன்னை என்னோடதானே வரச்சொல்றேன்?”

“அது சரியா வராது சௌமி”

“பெங்களூர்லதானே உங்க அக்கா இந்து…”

“ம்ப்ச், அவளுக்கு ப்ரெக்னென்ஸினால சுகர், பிரஷர்லாம் ஏகத்துக்கு ஜாஸ்தியானதுல அவ திருச்சிக்கே போய்ட்டா”

“அப்ப பேசாம என்கூட வா”

ருக்மிணிக்கு பயம் இல்லை. ஆனால், திருமணத்திற்கு முன்பே எந்தவித ஆதரவுமின்றி அவன் வீட்டிற்கு செல்லத் தயங்கினாள்.

“நீ வா, பார்த்துக்கலாம்”

“கார் வாங்கினதுல நிறைய பணம் போயிருக்கு சௌ. இப்ப திரும்பவும்…”

அவளைக் கூறு போடும் அளவு முறைத்தவன் “நான் செலவு பண்றேன், வட்டியோட திருப்பிக் குடு”

“...”

“எங்கிட்ட என்னடீ ஈகோ?”

“ஈகோ இல்ல, ஆனாலும், கல்யாணத்துக்கு முன்னால எதுக்குன்னுதான்”

“அப்டி என்மேல நம்பிக்கை இல்லைன்னா, வர்ற சன் டே நம்ம கோவில்ல தாலி கட்டிட்டு ஊருக்குப் போவோமா?”

“சௌ!!!”

“போய் லீவைப் போட்டு பேக் பண்ற வழியைப் பாரு, போ”

********************

பெங்களூர் வந்து இறங்கியவர்களை வரவேற்ற ரேகாவும் குமாரும், ஏர்போர்ட்டில் இருந்தே ருக்மிணியைத் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

இரண்டு நாட்கள் ஜெட்லாகில் கழிய, மூன்றாம் நாள் காலையிலேயே வந்த சௌமித்ரன், அவளது உடமைகளுடன் முதலில் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

மைதிலி மட்டும் சிறிது எடைபோடும் பார்வை பார்த்தாலும் சாதாரணமாகவே பேசினர். ருக்மிணி தன்னைப்போல் அவர்களை நமஸ்கரித்ததில் பெரியவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும் மெச்சுதலும் தெரிந்தது.

உணவுக்குப் பின் சௌமித்ரனின் தந்தையின் சான்ட்ரோ காரில் திருச்சியை நோக்கிக் கிளம்பினர். சில்க் போர்டு அருகே சிறிது நேரம் காரை நிறுத்திக் காத்திருந்தவனைக் கேள்வியாகப் பார்க்க, சில நிமிடங்களில் “ஹாய் கைஸ்” என்றபடி வந்து இணைந்து கொண்ட மிஸ்டர் இந்துவைக் காட்டினான். கலகலத்தபடியே சென்றனர்.

திருச்சியை நெருங்க, நெருங்க கலக்கமாகப் பார்த்தவளைக் கண்டு சௌமித்ரன் கண்களை சிமிட்டினான். கார் நேரே மாலாவின் வீட்டில் போய் நின்றது. இந்துவும் அங்கு வந்திருந்தாள்.

ஹோட்டலுக்குச் செல்வதாகச் சொன்னவனைத் தடுத்து நிறுத்தினர். சௌமித்ரனின் தோற்றமும், பேச்சும், ருக்மிணியை ‘மினி, முனீம்மா’ என இயல்பாக அழைப்பதும் அவர்களைக் கவர்ந்தது.

இரண்டு நாட்கள் கரையாய்க் கரைத்ததில் ருக்மிணியின் தந்தை அரைமனதாகப் பச்சைக்கொடி காட்டினார்.

பொங்கல் முடிந்து, முதல் முஹூர்த்தத்தில் திருச்சியில் கல்யாணம், இரண்டு நாட்களில் பெங்களூரில் ரிஸப்ஷன் என முடிவானது.

இடைப்பட்ட நாளில் ருக்மிணியை சைபர் செக்யூரிடி பிரிவுக்கு மாற்றியதாகத் தகவல் வந்தது. எம்எஸ்ஸில் அவளது முக்கியப் பாடமே அதுதான் என்பதால் மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவித்து மெயில் அனுப்பினாள்.

பட்டும், நகையும் சரசரத்து, கலகலக்க, திருமணத்திற்கு இன்னும் மூன்று நாள்கள் இருக்கையில், சௌமித்ரன் “முனீம்மா, எனக்கு உன்னைப் பார்க்கணும்டீ”

ருக்மிணி “நானும்” என்றதில் திருச்சி வந்த சௌமித்ரன், அவளுடன் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றான்.

தரிஸனம் முடித்து, பாறைச் சரிவில் அமர்ந்தனர். அமைதியான சில நிமிடங்களுக்குப் பிறகு, இருவரும் ஒரே நேரத்தில் “நாம குழந்தை பெத்துக்க வேண்டாம்” என்றதற்கான காரணங்களாக அவர்கள் அடுக்கியதெல்லாம்….
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ ! 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
30
இவ்வளவு திட்டமிட்ட நீங்க குழந்தை பற்றி வேன்டாம் முடிவெடுக்க உச்சி பிள்ளையார் கோவில்தான் கிடைச்சதா?
 
Last edited:
Joined
Jun 19, 2024
Messages
12
😍😍😍

கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பெத்துக்க வேண்டாம்னு முடிவு எடுத்த நீங்க, கல்யாணத்துக்கு பிறகு அதுக்கான பாதுகாப்பை செய்ய தவறி, அபார்ஷன் வரை போனீங்களே..😏😏
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
15
😍😍😍

கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பெத்துக்க வேண்டாம்னு முடிவு எடுத்த நீங்க, கல்யாணத்துக்கு பிறகு அதுக்கான பாதுகாப்பை செய்ய தவறி, அபார்ஷன் வரை போனீங்களே..😏😏
ஒரு பதட்டத்துல🙈🙈😍
 

vijaya mahesh

New member
Joined
Jun 20, 2024
Messages
7
ரொம்ப தெளிவா இருக்கிற மாதிரி தான் இருக்காங்க. ஆனால் குழந்தை விசயத்தில் ஏன் இந்த குழப்பம்???
 
Top Bottom