• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ! 3

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
4
இழைத்த கவிதை நீ! 3


‘I was born intelligent, education ruined me’
( அறிவாளியாகப் பிறந்த என்னை கல்வி கெடுத்துவிட்டது)

நகைச்சுவையும் நக்கலும் மிகுத்த இந்தப் பிரபல வாக்கியத்தைப் படித்த கணத்தில் ‘யாருடா நீ’ என ஒரு புன்சிரிப்புடன் கடந்து விடுவோம். ஆனால், அதன் உட்பொருள் ஆழமானது. அர்த்தம் நிறைந்தது.

மனித மூளையில் ஆதிகாலம்தொட்டு இயற்கையாய் எழுந்த காம, குரோத, லோப, மோஹ, மத, மாச்சர்யங்களை, உணர்வுகளை நாகரிகம் என்ற பெயரால் சற்றே எட்டி நிற்கச் செய்தது கல்வி .

பயணமும் கல்வியும் வளர, வளர எல்லாவற்றுக்கும் காரணத்தைத் தேடினான் மனிதன். காரணம் தெரிந்தவை என நம்பப்பட்டவை அனைத்தும் விஞ்ஞானமானது.
பகுத்தறியும் ஆர்வத்தில் உணர்வுகள் பின் மூளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

பகுத்தறிவாளராக இருப்பவரை அறிவாளி, புத்திசாலி என்றும், சிரிப்பு, அழுகை, போன்ற அடிப்படை உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துபவரை உணர்வாளர் என்றும் முத்திரை குத்தினர்.

பகுத்தறிவாளர் vs உணர்வாளர் (Rationalist Vs Sentimentalist) எனும் மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்தின் விளைவாக மிக நெருக்கமான ஆண் - பெண், கணவன் - மனைவி உறவுகளிலும் கூட உணர்வுகளை வெளிக்காட்டாது தன்னுள் அழுத்தி, அம்பலத்தில் ஆடாது, தனியறையில் கூடத் தன்மானம் காப்பதுதான் நாகரிகம் என்றானது.

குறிப்பாக கல்வி வளர்ச்சி கண்ட மகளிர், ஆண் சமுதாயம் உணர்வுகளைக் கொண்டே தங்களை ஆட்டுவிப்பதை உணர்ந்து, வாய்ப்பும் வசதியும் திடமும் வாய்க்கப் பெற்ற பெண்கள் தங்களை பகுத்தறிவு மிக்கவர்களாக மாற்றிக்கொண்டவர்களும், காட்டிக்கொண்டவர்களும் ஏராளம். இதைப் பகுத்தறிவென்றவர்களும் உண்டு, பாசாங்கென்றவர்களும் உண்டு.

எந்த ஒரு மனிதனாலும் நூறு சதவீதம் பகுத்தறிவாளராகவோ அல்லது உணர்வாளராகவோ இருக்க இயலாது என்பதே நிஜம்.

அந்தத்தச் சூழலின் நெருக்கமும் வீர்யமும் தாக்கமுமே நமது எதிர்வினைக்குக் காரணிகளாகிறது. உவப்பாக இல்லாதவற்றை ஏற்க இயலாது, முதலில் அதிர்ந்தாலும், பின் அனிச்சை செயலாக அதை மறுதலிக்கிறது மனம்.

இதில் படித்து, மேற்கத்திய நாட்டில் பல வருடங்கள் வசித்து, முற்போக்கு எண்ணங்கள் அதிகம் கொண்ட ருக்மிணி மட்டும் விதிவிலக்கா என்ன?


இயற்கையின் ரசவாதத்தையும் ஈர்ப்பையும் மீறி, பிரச்சனைகள் ஏதுமற்ற, அமைதியான, ஆகச்சிறந்த, முன் மாதிரியான தம்பதியாகத்
(Tranquil, ideal, perfect couple) திகழ வேண்டும் என்ற உறுதியும் முன்மொழிதலுமாகத் திருமண பந்தத்தில் நுழைந்து, இடையறாது அதற்கான முயற்சியை முன்னெடுக்கும் தங்களுக்கிடையே வேறு யாரும் வரவோ, இருக்கவோ கூடும் என்பதை மனதளவில் கூட நம்பாத, நம்ப விரும்பாத ருக்மிணி, தன் புரிதலைத் தன்னிடமே மறுத்தாள்.


தனது நட்பு வட்டத்தை, தொழில் சார்ந்த விஷயங்களை, பொருளாதாரத்தை, மிக மிக அந்தரங்கமான ஆசைகளைப் பகிர்ந்து கொண்ட கணவனால் தனக்கு மறைத்து ஒன்றை செய்ய முடியும் என்ற சிந்தனையே பதட்டத்தைத் தர, ‘அப்படி எதுவும் இருக்காது’ என தனக்கே பலமுறை கூறிக்கொண்டாள்.

‘அப்ப அந்த மித்து?’ என்ற மனக்குரலை, வீட்ல மித்ரா, ஆஃபீஸ்ல, ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல எல்லாம் மித்ரன்னு சொல்றது போலதானே மித்துவும். யார் எப்படி கூப்பிட்டாலும் எனக்கு மட்டும்தானே அவன் சௌமி’ என அடக்கினாள்.

‘எனக்குத் தெரியாமல் யாரந்த பிரேர்ணா?’

‘ஒரு மாலையை இனிதாகக் கழிக்கும் அளவிற்கு நெருக்கமான நட்பை சௌமித்ரன் என்னிடம் சொல்ல மறந்த அல்லது சொல்லாமல் தவிர்க்கக் காரணம் என்ன?’

‘இருவரும் சேர்ந்து என்ன விளையாடினார்கள்? ஸ்குவாஷ்?
டேபிள் டென்னிஸ்? பில்லியர்ட்ஸ்? சௌ விளையாடுவது இது மூன்றும்தானே?’

ஒரு புதிய நட்புக்காக(!), அது பெண் என்பதாலேயே கணவனை சந்தேகிப்பதும், தவறாக நினைப்பதும் ருக்மிணிக்கே பிடிக்காததோடு, அவனை உடனடியாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரணை செய்ய அவள் விரும்பவில்லை.

சௌமித்ரனின் அந்தரங்கத்தை மேலும் ஆராய விரும்பாததோடு, எங்கே, அவன் எழுந்து வந்தால் எதையாவது பட்டென்று கேட்டு விடுவோமோ எனப் பயந்தாள்.
கதவின் அந்தப்புறம் இருப்பது என்னவென்று காணத் தயங்கினாள்.

ருக்மிணிக்கு சிந்தனையின் அழுத்தம் தாளாது மூச்சு முட்டுவதைப் போலிருக்கவும், வெளிக்காற்றை சுவாசிக்க எண்ணி, ஷுக்களை அணிந்து கொண்டு, சத்தமின்றி சாவியுடன் வெளியேறினாள்.

********************

வீடெங்கும் வெண்ணையும் உரித்த உருளைக் கிழங்கும், சந்தன ஊதுபத்தியும், காஃபி டிகாக்ஷனும் மணக்க, முந்தைய நாள் பார்ட்டியில் உபயோகித்த கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள் அனைத்தும் கழுவித் துடைத்து டைனிங் டேபிளில் காய வைக்கப் பட்டிருந்தது.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து அசரீயாக ஒலித்த “ஹாய் பேபி, இவ்ளோ நேரம் என்னை விட்டுத் தனியா ஏன் வாக்கிங் போன, அதுவும் ஃபோன் கூட இல்லாம?” என்ற சௌமித்ரனின் குரல், அந்தக் கணத்தில் ருக்மிணிக்குத் தந்த நிம்மதியும் நெருக்கமும் அளப்பரியது.

அமைதியாக அமர்ந்தவளின் முன்னே காஃபியை நீட்டினான். அவளது மௌனம் கலையாதிருக்கவே,

“முனீம்மா, எனிதிங் ராங்?”

“...”

“அந்த சர்தார் பய (ருக்மிணியின் பாஸ்) எதானும் சொன்னானா?”

“...”

“மினி”

“நத்திங். சங்கீதா வரலை?”

“அவ வந்து வேலையை முடிச்சுட்டு எப்பவோ போய்ட்டா. அவ வேலை செஞ்ச ரெண்டு மணி நேரமும் நீ வாக்கிங் போயிருக்க, அதுவும் மழைல. ஏனாகிதே பேபி?”

“கொஞ்சம் தலைவலியா இருக்கு. வரும்போது வேற கொஞ்சம் நனைஞ்சுட்டேன்”

“ஆலு பரோட்டாக்கு மசாலாவும், மாவும் ரெடி. கொஞ்சம் ரைஸ் வெச்சுருக்கேன். எனக்கு இப்ப எதுவும் வேணாம். உனக்கு பிரேக்ஃபாஸ்ட் பண்ணட்டுமா?”

இதுதான் சௌமித்ரன். இந்தியாவிற்கு வந்ததுமே, டிபிகல் இந்தியக் கணவனாக மாறாதிருப்பவன். நீ ஏன் செய்யவில்லை என்ற கேள்வியோ, இது உன் வேலை நீதான் செய்ய வேண்டும் என்ற அலட்சியமோ இல்லாதவன்.

“முனீம்மா, என்னடீ யோசிக்கிற?” என்றபடி ருக்மிணியின் கழுத்தை, நெற்றியைத் தொட்டுப் பார்த்தவன், அழுத்தமாகக் கன்னத்தில் முத்தமிட, ருக்மிணியின் மூளை சில நொடிகளுக்கு வேலை செய்வதை நிறுத்தியது (Blackout).

“பேசாம லீவ் போட்டு தூங்கு மினி. நான் ஒரு எட்டு ஃபார்முக்கு போய்ட்டு வந்துடறேன். வந்ததும் உனக்கு ஒரு சர்ப்ரைஸும் கொஞ்சம் வேலையும் இருக்கு” என்று புறப்பட்டான்.

நேரே போய்க் குளித்து, இலகு உடைக்கு மாறியவள், மழையை வேடிக்கை பார்த்தாள். வேலை செய்யவோ, யோசித்து மேலும் குழப்பிக் கொள்ளவோ தெம்பில்லாதது போலிருக்க, அவள் சுலபத்தில் செய்யாததைச் செய்தாள். டைரக்டரை அழைத்து இரண்டு நாள்கள் விடுப்பு வாங்கிக் கொண்டு, ஒரு பாராசிட்டமாலை விழுங்கிவிட்டுப் படுக்கையில் விழுந்தவள், நடையாய் நடந்ததில் தன்னை மீறி உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

****************


ஒரு மணி நேரம் தாமதமாக வந்த சௌமித்ரன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மனைவியைத் தொந்திரவு செய்யாது, கொஞ்சம் தயிர் சாதமாக உண்டு, கணினியில் தன் வேலையைத் தொடங்கியவன், ருக்மிணி எழுவதற்குக் காத்திருந்தான்.

வெப்ப மண்டல நாடுகளில், (tropical countries) இதமான காலநிலை உள்ள இடங்களில் பூக்கும் ஆர்க்கிட் மலர்கள் பல வகைப்பட்டவை. பெரிதான அளவுகளில், விதவிதமான நிறங்களில், மணங்களில் பூக்கிறது.

சில ஆர்க்கிட் வகைகள் தேனீயைப் போல் , குரங்குகளைப் போல், கழுதையின் காதுகளைப்போல், நடனமாடும் பெண்கள், தேவதைகள், பாலே நடனப் பெண்களைப் போல் தோற்றமளிக்கிறது. இன்னொரு உயிரினம் போன்று தோற்றமளிக்கும் இவை மிமிக்ரி (Mimicry) என்று அழைக்கப்படுகிறது.

அழகு, ஆடம்பரம், ரசனை, மன முதிர்ச்சி, காதல், மக்கட்பேறு, மன அமைதி, சமாதானம் என பலவற்றையும் குறிக்கும் ஆர்க்கிட் மலர்களின் விலையும் மதிப்பும் அதிகம். வசதி மிக்கவர்களின் பரிசுப் பொருட்களில் ஆர்க்கிட் பூக்களுக்குத் தனியிடம் உண்டு. அதனாலேயே சந்தையில் அதற்கான மதிப்பும் தேவையும் அதிகம்.

தனது ஸ்டார்ட் அப்பின் மூலம் ஆர்க்கிட் விவசாயத்திற்கான ஆலோசனையும் பயிற்சியும் வழங்கிய சௌமித்ரன், இதுவரை செய்த விற்பனை அனைத்தும் நேரடியாக சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஈவென்ட் மேனேஜர்கள் மூலம்தான்.

சௌமித்ரனே உருவாக்கிய இரண்டு கலப்பின ஹைப்ரிட் ஆர்க்கிட் பூக்களைப் பற்றிய கட்டுரை பிரபல ஆங்கில மாத இதழில் வந்ததை அடுத்து, அவற்றுக்கான தேவை அதிகரித்ததோடு, தனிப்பட்ட முறையில் பூங்கொத்துகளாகக் கிடைக்குமாவெனப் பலரும் கேட்டனர்.

அதனால் பல வருடங்கள் ப்ராடக்ட் கம்பெனியில் டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த அனுபவத்தில் அதன் ஆன்லைன் விற்பனைக்கான செயலியை (app) தானே உருவாக்கும் முயற்சியில் இருந்தான்.

அந்த வேலை முடியவும், முதல் முறை முழுவதுமாக அதை மனைவியுடன் சேர்ந்து செயல் படுத்த விரும்பினான். நேரம் நாலரை எனவும், எரர் இல்லாமல் ஓடுகிறதா என மீண்டும் ஒரு முறை சரி பார்த்த பின், கையில் தயிர்சாதத்துடன்
ருக்மிணியை எழுப்பினான்.

அவள் உண்டு முடிக்க “ச்சாய் போடறியா மினி பேபி?”

சௌமித்ரன் ரொம்பக் குஷியாக இருந்தால் மட்டுமே இப்படி வேறு வேறு பெயர்களில் அழைப்பான்.
‘இப்ப என்ன?” என்று யோசித்தபடி டீயைக் கொடுத்துவிட்டு நகரப் போனவளை “தேங்க்ஸ் டார்லிங்” என்று அருகே இழுத்து அமர்த்தினான்.

“முனீஸ், கண்ணை மூடிக்கோயேன்”

“எதுக்கு?”

“சொன்னா கேக்கணும்”

இரண்டு நிமிடம் போல் சென்றிருக்கும். தன் மேல் அவளை சாய்த்தபடி, கைகளால் அவள் கண்களை மூடி, பின் “பப்பர பப்பர பப்பர பய்ய்ங்…ஓபன் யுவர் ஐஸ் நௌ ருக்ஸ்”

“இதென்ன சௌ சின்னப் பையன் மாதி…” என்றவளின் வாய் மூடி, விழிகள் விரிந்தது.


Phalaenopsis Lady Fantasy என்ற அடர் பிங்க் நிற ஆர்க்கிட் பூவின் நடுவே மின்னும் பொன் நிறத்தில் Rukmi என்று எழுதப்பட்டிருக்க, “ருக்மி, க்ளிக் பண்ணுடி”

செயலியைச் சொடுக்க, நிதிவனில் விளையும் பூக்கள் அனைத்தும் பெயர், விலை, படத்துடன், பாதுகாக்கும் முறை, எத்தனை நாள் ஜாடியில் வைத்திருக்கலாம் போன்ற விவரங்களுடன் குறிக்கப்பட்டிருந்தது.

இணையத்திலும், டெலிவரி ஆப்களிலும் தொடர்பு செய்யத் தயாராக வைத்து இணைப்பின் சுட்டியைக் காட்டி “இனாக்ரேட் மேம்”

ருக்மிணி திரியைச் சொடுக்க, அப்லோட் ஆனது.


“முதல் ஆன்லைன் கிளையன்ட் நீங்கதான் மேடம். உங்களுக்கு என்ன பூ வேணும்?”

“கடையைத் திறந்து வெச்சா பட்டுப்புடவை, பணம், நகைன்னு தர வேண்டாமா சௌ?”

“நான் வேணா ஆர்க்கிட்ல நகை பண்ணித் தரட்டுமா, இல்ல அதுலயே புடவை…” என்று இழுத்தபடி அவளது ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டை பார்த்தவன்,

“ஹேய், முனீம்மா, புடவை வேணாம்டீ, வேற ஏதானும் ஸ்பெஷலா செஞ்சுடுவோம். ஆஹா, கற்பனையே அள்ளுதே” என்று கண்ணைச் சிமிட்டினான்

“டர்ட்டி பாய்” என்றவள் நீண்ட நொடிகள் வரை இமைக்காது அவனையே பார்த்தாள்.

“என்னடா, இன்னி முழுக்க உன் பார்வையே வேற மாதிரி இருக்கு?”

“என்ன மாதிரி இருக்கு, அதை விடு சௌ. App ஐ டிஸைன் செஞ்சது யாரு?”

சௌமித்ரன் “ஏய், என்னைப் பார்த்தா உனக்கு எப்டி இருக்கு? இன்ஜினீயரிங் படிச்ச சர்ட்டிஃபிகேட்லாம் கூட இருக்குடீ” எனவும் பக்கென சிரித்துவிட்டாள்.

அவன் அவளைச் சீண்டுவது வழக்கம்தான் எனினும் அவளது பெயரிலான செயலியும், அதை அவளை விட்டே திறக்கச் செய்ததும், கேலியும் கலகலப்பும், காலை முதல் உழன்று திரிந்த ருக்மிணியின் மனதை பெரிதும் சமன் படுத்தியது.

லேவண்டரும் மஞ்சள் நிற டேன்ஸிங் ஆர்க்கிடும் கொத்தாக ஆர்டர் செய்தவள், அருகில் இருந்த அவனது மொபைலில் இருந்தே கூகுள் பே மூலம் பணத்தைச் செலுத்த “அடிப்பாவி” என்றான் சௌமித்ரன்.

“பூ வாங்கித் தரவன்தான் சௌ புருஷன்”

“இப்ப லேவண்டர் வந்ததும் மரியாதையா தலைல வெச்சுக்கற, அண்டர்ஸ்டாண்ட்?”

அரை மணியில் பூக்கள் டெலிவரியாகி விட, செயலி வெற்றிகரமாகச் செயல்பட்டதை ரோஸ்ட்டட் அல்மண்ட் ஐஸ்க்ரீமுடன் கொண்டாடினர்.


அம்மாவிடம் சொன்னவன், ரேகாவிடம் “பெரிய்ய ஆர்டரா பண்ணு ரேக்ஸ்”

சௌமித்ரன் ஊஞ்சலில் அமர்ந்தபடி தனது வாடிக்கையாளர்களுக்கும், சமூக வலைத்தளங்களிலும் செயலியின் இணைப்பைப் பகிர்வதில் பிஸியாகி விட, விளக்கேற்றி விட்டு, இரவுக்கு டொமேடோ தனியா ஷோர்பா செய்யத் தயார் செய்து, மீண்டும் இருவருக்கும் காஃபியுடன் வந்தவள், கணவனைத் தொந்திரவு செய்யாது, போய் டெர்ரஸ் போர்ட்டிகோவின் ஜூலாவில் அமர்ந்து கொண்டாள்.

எதையும் யோசிக்க விரும்பாது, அமைதியாக இருந்தவளைக்

கலைத்தது அழைப்பு மணியும் அதைத் தொடர்ந்த “ஆஹ்ஹா… இதென்ன டபுள் சர்ப்ரைஸ், கம், கம், கம்” என்ற கணவனின் குரலில் எழுந்து செல்ல, மாமியாரும் அவளது அம்மாவும் சேர்ந்து வந்திருந்தனர்.

தலையசைத்துப் புன்னகைத்து “வாங்கோம்மா, வாம்மா, என்ன தீடீர்னு, எப்ப பெங்களூர் வந்த?”

மைதிலி “கூடவே ஏன் வந்தேன்னும் கேளேன்”

“...”

சௌமித்ரன் “ஏம்மா, மினி, நீ போய் குடிக்க ஏதாவது கொண்டு வா”

அதுதான் சாக்கென நழுவிய ருக்மிணி, ஷோர்பாவுக்கென வெந்நீரில் போட்டிருந்த தக்காளியை தோலுரித்து, இஞ்சி, பூண்டுடன் மிக்ஸியில் போடும் வரை, ஹாலில் அம்மாக்கள் இருவரும் சௌமித்ரனிடம் பேசுவது கேட்டது. மிக்ஸியின் ஓசை கேட்டு, சௌமித்ரன் உள்ளே வந்துவிட்டான்.

ஷோர்பா காயும் மணத்தை நுகர்ந்தவன், சூப் கிண்ணங்களையும், ஸ்பூன்களையும் எடுத்து ஒரு ட்ரேயில் வைத்தான்.

தன்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவளின் அருகே சென்றவன் “அவங்க ரெண்டு பேரும் நம்மோட அம்மாடா முனீஸ். இவ்வளவு டென்ஷன் ஏன்?”

“ம்ப்ச், என்னவாம்?”

“புதுசா ஒன்னுமில்ல. நீ ஏன் தேவையில்லாம டிஃபென்ஸிவ் ஆற?”

“...”

“என்னைப் பார்க்கணும்னா எங்கம்மா நேர இங்க வர வேண்டியதுதானே. உங்கம்மாவோட ஏன் வரணும்?”

“இதை நீ உங்கம்மா கிட்டதான் கேக்கணும்”

“எல்லாம் எத்தனையோ தடவை கேட்டாச்சு. எப்போதும் இந்துவைப் பாக்கதானே முதல்ல போறன்னு கேட்டதுக்கு, அங்கதான் மனசு பொருந்தி பாந்தமா இருக்காம். குழந்தைகளோட பொழுது போறதாம். பாட்டி எப்ப வருவான்னு எதிர்பாக்கற குழந்தைகளை ஏமாத்தக் கூடாதாம். ஏன், நான் மாத்ரம்…”

மனைவி படபடவெனப் பொரிவதை ஹாலில் இருக்கும் அன்னையர் இருவரும் கேட்டுவிடப் போகிறார்களே என, சௌமித்ரன் அவளை நிறுத்தச் செய்த முயற்சிகள் யாவும் பயனற்றுப் போக, சட்டென அவள் இதழில் அழுத்தமாகப் பதியவும், “ம்ம்ம்ம்… ம்ம்…. ம்ம்ம்…” என ஹாலைக் காட்டித் திமிறினாள்.

விலகி அவள் வாயைப் பொத்தி “அப்ப அமைதியா இரு” என்றவன், ருக்மிணி சூப்பின் மீது சீஸ்லிங்ஸைத் தூவவும், ட்ரேயுடன் வெளியேறினான்.

கிண்ணம் காலியான மறுநிமிடம் தொடங்கி விட்டார் மைதிலி.

“மித்ரா, சனிக்கிழமை நீங்க வந்தபோது நான் என்ன சொன்னேன், இன்னைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு கிருஷ்ணன் மாமாவோட கடைசி புள்ளைக்கு நிச்சயம்னு உங்களை அழைக்கலையா, நீங்க ரெண்டு பேரும் ஏன் வரலை?”

அது குறித்த நினைவே இல்லாத கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நினைவில் இருந்தாலும் போய் இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

சௌமித்ரன் “காட், ஞாபகமே இல்லையேம்மா”

“இருந்தா மட்டும் வந்திருப்பியோ? என் கூடப் பொறந்தவன்னு அவன் ஒருத்தன்தான் இருக்கான். எனக்கு ஒண்ணுன்னா, நல்லது பொல்லாதுக்கு விட்டுக் குடுக்காம வரான். நாம விட்டுக் குடுக்கலாமா? ஏதோ ஃபாரின்ல இருந்த வரைக்கும் வரலைன்னா சரி…”

“வரக் கூடாதுன்னெல்லாம் எதுவும் இல்லம்மா…”

“ஆனா வரலை, அப்படித்தானே. அவன் பொண்ணை நீ வேண்டாம்னு சொன்னதைக் கூட மனசுல வெச்சுக்காம, தாய்மாமாவா உனக்குதான் சப்போர்ட்…”

அந்தக் கதையெல்லாம் ருக்மிணிக்கும் தெரியும்தான். ஆனாலும் பதினோரு வருடங்களுக்குப் பிறகும் அதைப்பற்றி மாமியார் பேசியதில் முகம் கடுத்தாள்.

மனைவி முறைப்பதைக் கண்ட சௌமித்ரன் “இப்ப எதுக்கும்மா அதெல்லாம்?”

“இப்ப நான் சொன்னதுனால என்ன, எதானும் மாறவா போறது? ஏதோ, கிருஷ்ணனோட பேச்சு வந்ததனால சொன்னேன். அப்படியே சொன்னாத்தான் என்ன, நல்ல வேலையும், தாங்கற புருஷனும், முத்துப்போல ரெண்டு குழந்தைகளுமா அவ நன்னாத்தான் இருக்கா”

ருக்மிணி விருட்டென எழுந்து உள்ளே சென்று விட, “என்னம்மா நீ…” என்றபடி சௌமித்ரனும் மனைவியைத் தொடர்ந்தான்.

ஒத்து வரவில்லை என இருவரையும் விலக்கி வைத்தும், அவ்வப்போது இது போல் ஏதாவது வழக்கு வந்து சேருகிறது., சில உறவுகளிடமிருந்து தள்ளி இருக்கலாமே தவிர, தவிர்க்க முடியாதே?

அத்தனை இனிமையாக, அமைதியாகக் கழிந்தது இன்று மதியம்தானா என ஆயாசமாக இருந்ததில் சௌமித்ரனுக்கு மண்டை காய்ந்தது.

இருவருக்குமே அவர்களது அம்மாவை அதட்டிப் பட்டென எதுவும் சொல்ல முடியாத படி, மாமியார்கள் வேறு கூடவே இருந்தனர்.

“பேபி, விடுடா ப்ளீஸ்”

“...”

கையில் இருந்த ஹேண்ட் க்ரிப்பரை (hand gripper) வேக வேகமாக அழுத்தியபடி நின்றிருந்தவளை அணைத்துக் கொண்டவன் “கூல் பேபி, ரெண்டு பேரும் சேர்ந்து வந்ததே நம்மை ரோஸ்ட் செய்யத்தான்னு நமக்குத் தெரியாதா, சீக்கிரமா முடிக்கப் பார்க்கலாம், வா”

இருவரையும் அறைவாசலில் கண்டதுமே “ஏன்டீ ருக்கு, ஒருத்தர் பேசும்போதே நீ உள்ள போனா என்ன அர்த்தம்? இதைத்தான் நான் உனக்கு சொல்லிக் குடுத்தேனா? மாமியார்னு கொஞ்சமாவது பயம், மட்டு, மரியாதை வேண்டாமா? இதைத்தான் அமெரிக்கால போய் படிச்சியா?”

என்று சௌமித்ரனின் அம்மா மைதிலியிடமிருந்து ஆட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டார், ஜெயந்தி (ருக்மிணியின் அன்னை).

மகளின் பார்வையில் “என்ன பாக்கற, நாங்க ரெண்டு பேரும் எப்படி சேர்ந்து வந்தோம்னா? நம்ம நாகலக்ஷ்மி டீச்சரோட பொண்ணுக்கும் மாப்பிள்ளையோட மாமா பையனைக்கும்தான் நிச்சயம். அங்க இருந்து ரெண்டு பேரும் நேர இங்கதான் வரோம்”

ருக்மிணி “அதான பாத்தேன். எங்க, நேர என்னைப் பார்க்கதான் இங்க வந்துட்டியோன்னு ஷாக் ஆயிட்டேன்”

சௌமித்ரன் “மினி…”

“அவ பேசட்டும், விடுங்கோ, என்னிக்கு அமெரிக்கா போய் படிப்பேன்னு ஒத்தக்கால்ல நின்னாளோ, அதுல இருந்தே இப்படித்தான். எப்பவும் அவதான் சரி. அவ சொல்றதுதான் சட்டம். மனுஷாளே வேண்டாம்னு தவிர்க்கறதும் தள்ளி நிறுத்தறதும்… எனக்குப் பழகிப் போச்சு”

“அம்மா, வேண்டாமே…” - சௌமித்ரன்.

(ஜெயந்தியை சௌமித்ரும் அம்மா என்றுதான் அழைப்பான்)

“எனக்கோ, உங்கம்மாக்கோ எதுவும் செய்ய வேண்டாம். கல்யாணமாகி பன்னண்டு வருஷம் ஆகப்போறது. இதுநாள் வரைக்கும் குழந்தையைப் பத்தின பேச்சையும் காணும், முயற்சியையும் காணும். அதற்கான ஆசையோ, கவலையோ, பயமோ, வேண்டுதலோ எதுவுமில்லாம எத்தனை நாள்தான் துண்டமாட்டம் ஆட்டம் போடறது?”

“...”

“நேத்திக்கு கூட நீங்க ஏதோ ஸ்போர்ட்ஸ்ல ஜெயிச்சதுக்காக பார்ட்டி நடந்ததா கேள்விப் பட்டேன். சந்தோஷம்தான். இந்த ஜெயிப்பும் சந்தோஷமும், கொண்டாட்டமும் உங்க ரெண்டு போரோடயே நிக்கறது இன்னும் கொஞ்ச நாள்ல அலுத்துப் போயிடும். அதைப் பகிர்ந்துக்க, அதோட பலாபலனை அனுபவிக்க ஒரு குழந்தையாவது வேண்டாமா, சொல்லுங்கோ?”

“...”

“ஒரு தரம் டாக்டரைப் போய்ப் பார்த்து பிரச்சனை எதுவும் இல்லையா, அப்படி எதுவும் இருந்தா சரி பண்ண முடியுமான்னுதானே பார்க்கச் சொல்றேன்”

மைதிலி “நன்னா கேளுங்கோ, நானும் ருக்மிணியை மட்டும் போகச் சொல்லலை. எம்புள்ளையையும் சேர்த்துதான் சொல்றேன்”

“...”

“நேத்திக்கு பார்ட்டிக்கு வந்த, உங்க ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் கல்யாணமாகி, குழந்தை குட்டியோட குடும்பமா இருக்கறதைப் பாத்தும் கூடவா உங்க ரெண்டு பேருக்கும் ஆசை வரலை?”


ஜெயந்தி “ஊரை, உறவை விடுங்கோ. உங்க கூடப் பொறந்தவா கூட ஒரு கட்டத்துல தன் குடும்பம், குழந்தைகள்னு நகர்ந்துடுவா. நாளைக்கு உங்களுக்குன்னு ஒரு பிடிப்பு வே…”

ருக்மிணி “போறும்மா, நானும் பதில் பேசக் கூடாதுன்னு நாசூக்கா எத்தனைதான் ஒதுங்கிப் போனாலும், நீங்க பாட்டு மேல மேல பேசிண்டே போனா என்ன அர்த்தம்?”

சௌமித்ரன் “வேண்டாம் மினி, நான் பேசறேன், யூ ப்ளீஸ், காம் டவுன்” என்றது ருக்மிணியில் காதில் விழவில்லை, அல்லது விழுந்தும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

“லிஸன், எங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பெத்துக்கறதுல உடல் ரீதியா எந்த சிக்கலும் இல்லை. நல்லா ஹெல்த்தியாதான் இருக்கோம்”

மைதிலி “அப்புறமென்ன, குலதெய்வத்துக்கு வேண்டிப்போம். ஒரு நடை போய்ட்டு வந்துடலாம். முதல்ல திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷகாம்பிகா கோவிலுக்கு ஆன்லைன்ல பணம்கட்டி நெய் வாங்…”

சௌமித்ரன் ‘வேணாம்டீ, இது இப்ப தேவையா’ எனப் பார்த்திருக்க, கையை உயர்த்தி அமைதி காக்கச் சொன்னாள் ருக்மிணி.

“உங்க ரெண்டு பேருக்கும் சொல்றேன். குழந்தை பெத்துக்கறதுல எங்க ரெண்டு பேருக்குமே விருப்பம் இல்லை. எங்களுக்குக் குழந்தையே வேண்டாம்னு முடிவு செஞ்ச பிறகுதான் லவ்வே பண்ணினோம். அது மட்டுமில்ல, இந்தியா வரத்துக்கு முன்னால, ஒரு தரம் எதிர்பார்க்காம ப்ரெக்னென்ட் ஆகி, குழந்தையை டெர்மினேட் (அபார்ஷன்) கூட பண்ணி இருக்கோம். போறுமா”

மைதிலிக்கு அதிர்ச்சி என்றால், ‘என் மகளா இப்படி’ என ஜெயந்திக்கு சம்பந்தி மைதிலியைக் காணவே அச்சமாக, அவமானமாக இருந்தது.

குரல் நடுங்க “ருக்கு…” என, மைதிலி ஆத்திரத்துடன் வெகுண்டெழுந்தார்.

“பெத்தவாளும் வேண்டாம், பெத்துக்கவும் வேண்டாம்னு தள்ளி இருக்கறவங்களுக்கு நம்ம ஆசையும் ஆதங்கமும் ஒருநாளும் புரியாது. இதுக்கும் மேலயும் நாம இங்க இருக்கறதுல அர்த்தமில்ல. புருஷனும் பொண்டாட்டியும் அவாளுக்குள்ளேயே சந்தோஷமா, சௌக்யமா இருக்கட்டும். வாங்கோ, போலாம்” என்ற மைதிலி ஜெயந்தியின் கையைப் பற்றியபடி வெளியேறினார்.

ருக்மிணி இறுகி நிற்க, சௌமித்ரன் திசையறியாது குழம்பித் தவித்தான்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
5
😍😍😍

சௌமி இப்படி சொல்ல வாய்ப்பு இருக்கா? 🤔🤔🤗🤗

என்னைப் போலே பெண் குழந்தை
உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி

 
Last edited:

vijaya mahesh

New member
Joined
Jun 20, 2024
Messages
3
என்ன ரெண்டு பேரும் இப்பிடி ஒரு மனநிலையில் இருக்காங்க ####
 

saradhavasan

New member
Joined
Oct 3, 2024
Messages
17
முற்போக்கு எண்ணம் என்ற மாயாஜால வாழ்க்கையில சிக்கியுள்ள ருக்மிணி, அதை ஒட்டிய படி செல்லும மித்ரன் வாழ்வின பொருள் புரியுமா?
 

Anuradha GRSR

New member
Joined
Nov 20, 2024
Messages
8
ஏன் வேண்டாம்?
எந்த அம்மாக்கள் புலம்பாமல் இருந்து இருக்காங்க...?
ஜெயந்தி அம்மா மகளிடம் கேட்டது தப்பே இல்லை...

Fine narration...
Thanks dear vv
 

saki

New member
Joined
Nov 8, 2024
Messages
3
ப்ரேர்ணா என்பது குழந்தையா ? ஒரு வேளை அவனுக்கு குழந்தை ஆசை இருந்து இவ டாமினேஷனில் அல்லது சம உரிமை தியரியில் அது பின்னோக்கி தள்ளப்பட்டதா
 

saki

New member
Joined
Nov 8, 2024
Messages
3
ப்ரேர்ணா ஒரு வேளை குழந்தையோ? செம் குழந்தை ஆசை சம உரிமை தியரியில் பின்னோக்கி சென்றதோ
 
Top Bottom