• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ! 2

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
4
இழைத்த கவிதை நீ! 2

காஃபி மக்குடன் சற்றே அகலமான ஒற்றை சோஃபாவின் குறுக்கே கால்களை ஒடுக்கி அமர்ந்து கொண்டு கையில் இருந்த டெக்கான் க்ரானிகளை (Deccan Chronicle) பிரித்த ருக்மிணி கண்கள் விரிய சுடச் சுட ஒரே முழுங்காக காஃபியை விழுங்கிவிட்டு, தடதடவென பெட்ரூமுக்கு ஓடினாள்.

பெங்களூரின் மழை பெய்யும் மந்தமான காலைவேளையும் வார இறுதியும் சேர சுகமான உறக்கத்தில் இருந்த கணவனைப் பிடித்து உலுக்கினாள்.

“ம்… தூங்க விடுமா”

“ எழுந்திரு சௌ, இதைப் பாரேன்”

“புதுசா என்ன, ராத்திரிதானே பார்த்… ஆ… முனீஸ்வரி, ஏன்டீ கிள்ற”

“பேப்பர்ல உன் ஃபோட்டோவும், டோர்னமென்ட் பத்தின நியூஸும் வந்திருக்கு. ஆசையா காட்ட வந்தா… நான் உனக்கு பழசா, போடா”

சௌமித்ரன் எழுந்து அமர்ந்து பார்க்க, அவன் ஸ்க்வாஷ் ராக்கெட்டால் பந்தை சர்வீஸ் செய்வது போல் ஒரு படமும், வெற்றிக் கோப்பையுடன் ஒரு படமும் செய்தியுடன் வந்திருந்தது.

“ஸாரி டி முனீம்மா” என்றபடி தன்னைத் தொட வந்தவனை முறைத்தாலும் “ஸோ ஹேப்பி சௌ” என அவன் கன்னத்தில் முத்தம் தந்தவளைத் தன்னிடம் இழுத்தவன், கிசுகிசுப்பாக “இப்ப பாக்கட்டுமா?”

“ஆளை விடு. பத்து மணிக்கு எனக்கு Zoom மீட்டிங் இருக்கு. சாட்டர் டே கூட ஃப்ரீயா விடாம இந்த ஊர்ல இது ஒரு இம்சை.”

“Gosh! நீ பத்து மணின்னதும்தான் ஞாபகம் வருது. இன்னைக்கு ஒரு பெரிய ஆர்டர் இருக்கு. விஐபி ஈவென்ட்டாம். அதோட டீம் மீட்டிங்கும் இருக்கு. லஞ்ச் வேணாம். டின்னருக்கு வெளில போகலாம். ஒரு காஃபி மட்டும், ப்ளீஸ்” என்றவன் அடுத்த இருபதாவது நிமிடம் ஷார்ட்ஸ், டீ ஷர்ட்டுடன் பளிச்சென்ற தோற்றத்தில் புறப்பட்டுச் சென்றான்.

சௌமித்ரன், ருக்மிணி இருவரது நண்பர்கள் பலரும் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளால் இருவரது மொபைல் மெமரியும் நிரம்பி வழிய, இன்னும் நெருங்கிய நட்புகள் சிலர் அலைபேசியில் அழைத்து வாழ்த்தினர்.

சௌமித்ரனுடன் சிறுவயது முதலே நட்பில் இருப்பவர்களும் குடும்ப நண்பர்களும், இப்போது அவனது ஸ்டார்ட் அப்பில் கூட வேலை செய்பவர்களுமான கோகுலும் நிரஞ்சனும், இன்னும் சிலரும் ருக்மிணியிடம் ட்ரீட் கேட்டனர்.

“டன்” என்றவள், எதிர்பாராத விதமாக பன்னிரண்டரைக்கே மீட்டிங் முடிந்துவிட, கணவனுக்கு சர்ப்ரைஸ் தர எண்ணி அவனைத் தேடிச் சென்றாள்.

********************

அம்புக்குறியுடன் ‘நிதிவன் ஆர்க்கிட்ஸ்‘ (Nidhivan Orchids) என்ற சிறிய பெயர்ப் பலகையைத் தாங்கிய பாதையில் நுழைந்ததுமே எப்போதும் போலவே மரங்கள் எல்லாம் தன்னை நெருங்கி வருவதைப் போல் தோன்றியது ருக்மிணிக்கு.


முதல் கேட்டில் செக்யூரிட்டியைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் இடப்புறத்தில் நிதானமான அளவில் ஒரு அலுவலகம் இருக்க, அதன் பின்னே நான்கு ஏக்கரில் விரிந்திருந்தது நிதிவன். இருநூறடி தொலைவில் ஒரு கண்ணாடியால் ஆன ஒரு கட்டிடம் (Glass house) இருந்தது. அதன் வாயிலில் ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட டெலிவரி வேன் ஒன்று நின்றது. அந்த இடமே பரபரப்பாக இருக்க, ருக்மிணி அதைநோக்கி நடந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, சௌமித்ரன் அங்கேதான் நின்றிருந்தான். வேன்டா , டென்ட்ரோபியம், ஆன்சிடியம், கேட்டில்யா என ரக வாரியான ஆர்க்கிட் மலர்களை சரியாக பாக்கிங் செய்து அடுக்குவதைக் கணக்கிட்டபடி நின்றிருந்தான்…

பின்னாலிருந்து அவன் தோளில் தட்ட, வேகமாகத் திரும்பியவன் விழிகள் விரிய “ஹேய், என்ன திடீர்னு?”

“மீட்டிங் சீக்கிரம் முடிஞ்சுது. அதான் வந்துட்டேன்”

“உட்கார்றியா, இன்னொரு இருபது நிமிஷம். இந்த லோட் வெளில போனதும் இன்னைக்கு ஃப்ரீதான். மீட்டிங் கேன்ஸல்ட்”

“அதெல்லாம் வேணாம், நான் ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்” என்றவள் தோட்டத்தின் உள்பக்கமாக நடந்தாள். இரண்டு புறமும் வரிசை வரிசையாக , விதவிதமாக பெங்களூர் தட்பவெப்பத்தில் வளரக்கூடிய செடிகள், மரங்கள், அவற்றைச் சுற்றிப் படர்ந்து வளரும் கொடிகளில் எல்லாம் பல நிலைகளில், நிறங்களில் அணிவகுத்திருந்த ஆர்க்கிட் பூக்களைப் பார்த்தபடி நடந்தாள்.

ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான கண்ணாடிக் கட்டிடங்களும் அதன் உள்ளே வளர்க்கப்படும் செடிகளும் தென்பட்டன.

மழையில் மண் ஈரித்து நசநசவென இருந்தாலும், இன்னும் சற்றுத் தொலைவு நடக்க, அங்கே பார்வைக்கு எட்டின வரை பூத்திருந்த லேவண்டர் பூக்களைப் பார்த்ததில், கண்ணும் மனதும் புத்துணர்வு பெற்ற உணர்வு.

பூக்களையே பார்த்தபடி நின்றவளுக்குப் பழைய நினைவுகள். ஆறு வருடங்களுக்கு முன் இது போன்ற ஒரு பூந்தோட்டம் அமைப்பது பற்றி அவளிடம் யாராவது சொன்னால் சிரித்திருப்பாள்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்,
சௌமித்ரனின் தந்தை திடீர் மாரடைப்பால் காலமான செய்தி வர, இந்தியா விரைந்தனர். தந்தையின் மறைவுக்குப் பின், தாயைத் தன்னுடன் அழைக்கவும் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார்.

கோரமங்கலாவில் வசதியானதொரு அபார்ட்மெண்டில் வசித்த அவனது பெற்றோர், இரண்டு மூன்று முறை மகன் மருமகளுடன் தங்கி இருக்கவென அமெரிக்கா வந்து சென்றனர்தான். ஆனால், அவர்களால் பரபரப்பான அமெரிக்க வாழ்க்கை முறையை சில நாட்களுக்கு மட்டுமே ரசிக்க முடிந்தது.

“எனக்கென்னடா மித்ரா, அம்பத்தெட்டு வயசுக்கு தெம்பாதான் இருக்கேன். பெரிய சொஸைட்டி. எல்லாரையும் பழக்கம். நவராத்ரி, நியூ இயர், பொங்கல் , பாட்டு, பஜனை, அரட்டை, டீவி, கோவில், புஸ்த்தகம்னு பொழுது போய்டும். நீ கவலைப்படாம போய்ட்டு வா”

அம்மாவைத் தனியே விட விருப்பம் இன்றித் தவித்தான் சௌமித்ரன். தன்னோடு சேர்ந்து மனைவியும் அழைத்தால், அம்மா இசைவாரோ என்ற ஆதங்கத்தில் ருக்மிணியைப் பார்க்க அவள் அவனைத் தவிர, அனைத்தையும் பார்த்தாள்.

இருவருக்கும் அவ்வளவாக ஒத்துப் போகவில்லை என்பதும், இதுநாள்வரை சந்திக்க நேர்ந்தபோதெல்லாம், தான் மனைவியை ஆதரித்தே பேசியிருக்க, இந்த நிலையிலும் அவளது பாராமுகம் வருத்தமளித்தது.

அம்மாவின் ஏளனப் பார்வையில் சுதாரித்தவன், “நான் இருக்கும்போது நீ ஏம்மா தனியா இருக்கணும், அப்பா இருந்தவரை நான் ஏதாவது சொன்னேனா” என தந்தையின் நினைவில் சட்டென கண் கலங்கிவிட, அம்மா மைதிலிதான் அவனைத் தேற்றும்படியானது.

“இதோ, ஒரு கிலோமீட்டர் தூரத்துல ரேகா இருக்கா. (மாப்பிள்ளை) குமார், பேரப் பசங்கனு இங்க எனக்குப் பொழுது போயிடும்டா. அங்க வந்து நீங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போய்ட்டா, முன்னையாவது பேச்சுத் துணைக்கு உங்கப்பா இருந்தார். இப்ப நான் மட்டும் தனியா நாள் முழுக்க கொட்டு கொட்டுனு தேவுடு காக்கணும்.”

சௌமித்ரனுக்கு அம்மா தரப்பு நியாயம் புரிய, ருக்மிணிக்கு அதன் உள்ளர்த்தம் புரிந்தது.

அது மட்டுமா பிரச்சனை? ஊர்ப்பட்ட விரதங்களும் நியதிகளும் கொண்ட மைதிலிக்கும், என் வீடு, என் வாழ்க்கை, என் இஷ்டம் என்னும் ருக்மிணிக்கும் எட்டல்ல எட்டாயிரம் பொருத்தம்.

இதில் தான் வாயைத் திறந்தால், மாமியார் எதுவும் சொல்லுவார். பதில் பேசாதிருக்கத் தன்னால் இயலாது என்பதை உணர்ந்து அமைதி காத்த ருக்மிணி, மாமியாரின் நக்கல் பார்வையில் அறைக்குள் சென்று விட்டாள்.

“அதுக்காக நாங்க இருக்கற இடத்துக்கு நீ வரவே மாட்டியாம்மா?” என்றான் ஆதங்கமும் வருத்தமுமாக.

அவனது அக்கா ரேகா “வராம என்னடா, அப்பா இல்லாததை உள்வாங்கிக்க அம்மாக்கு கொஞ்சம் டயம் கொடு மித்ரா. அம்மாவும் அப்பாவும் எத்தனை க்ளோஸ்னு உனக்கு தெரியும்தானே? புஸ்தகம், கச்சேரி, சினிமா, சீரியல்ன்னு எல்லாமே ரெண்டு பேரும் சேர்ந்துதான். இல்லைன்னா ரெண்டு பேருக்கும் நடுவுல எதாவது பேச்சு ஓடும், ரைட்டா?”

“ம்…”

“ அப்பாவோட இழப்பை தனியா அழுது, ஜீரணிக்க நினைக்கறா அம்மா. அவரோட நினைவுகளை அசை போட விரும்பறா”

“அதனாலதான் ரேக்ஸ் தனியா விட பயம் இருக்கு”

“அம்மாவை நான் பாத்துக்கறேன்டா மித்ரா. நீ கவலைப் படாம போய்ட்டு வா. கொஞ்ச நாள் போகட்டும் ரெண்டு, மூணு மாசம் அங்க வந்து இருக்கறா மாதிரி பேசி அனுப்பறேன். இப்போதைக்கு ஃப்ரீயா விடு. நீயும் நிம்மதியா இரு”

குரலைத் தழைத்துக் கொண்டவள் “ உன்னோட லைஃப் ஸ்டைலை மன்னிக்கற அம்மாவால அதையே ருக்கு செஞ்சா ஏத்துக்க முடியல. உங்களுக்குள்ள ஒத்து போகும்போது தேவையில்லாம ருக்குவோட ஆர்க்யூ பண்ணாத மித்ரா”

“ம்…”

ரேகா கண்ணைக் காட்ட, அவளது கணவன் குமார் “மித்ரா, உங்கம்மா மென்ட்டலி ரொம்ப ஸ்ட்ராங்கான லேடி. இந்த ரெண்டு மாசத்துல எத்தனை பேங்க் பேப்பர்ஸ், ஷேர்ஸ், வாரிசு சர்ட்டிஃபிகேட், பேரை மாத்தறதுன்னு உன்னோட நின்னு எல்லாத்தையும் திடமா செஞ்சதை பார்த்ததானே. நீ நினைக்கறா மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. ஷி வில் பீ ஃபைன். வி வில் டேக் கேர்” என்று சௌமித்ரனின் தோளில் தட்டினான்.


குமார் சொன்னது அனைத்தும் உண்மைதான். பதிமூன்றாம் நாள் காரியம் ஆனதுமே, சௌமித்ரன் அமெரிக்கா திரும்பும் முன் ம தேவையான சான்றிதழ்களை வாங்கி, முன்யோசனையுடன் எது எது யாருக்கு என் பிரித்து, ஆவணங்களில் தனக்குப் பின் பிள்ளைகள் இருவரையும் வாரிசாக்கிப் பெயரை மாற்றினார் மைதிலி.

தந்தையின் இழப்பும் தாயின் தனிமையும் தந்த அழுத்தத்துடனே சௌமித்ரனும் ருக்மிணியும் வேறு வழியின்றி கலிஃபோர்னியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

சில மாதங்களுக்குள்ளாகவே, மைதிலிக்கு அரிதிலும் அரிதான ஒன்றாக பின் ஐம்பதுகளில் கருப்பையில் நார்த்திசுக் கட்டி எனப்படும் ஃபிப்ராய்ட் (Fibroid) இருப்பதைக் கண்டறிந்து கருப்பையை அகற்றினர்.

சௌமித்ரனால் போக இயலாத சூழலில் கடமை தவறிய உணர்வில் இன்னதென்று புரியாமல் தவித்தான். மனதை எதுவோ அரிக்கத் தொடங்கியது. இருபத்தி இரண்டு வயதில் அமெரிக்காவிற்கு ஆன்சைட் வந்தது முதல் இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற சிந்தனையே எழாதவனுக்கு அமெரிக்க வாழ்க்கை சலிப்புத் தட்டுவதாகத் தோன்றத் தொடங்கியது.

மனதைத் திசை திருப்ப பியானோ வகுப்புக்குச் சென்றான். காலிகிராஃபி கற்றுக்கொண்டான். ஆர்க்கிட் கல்டிவேட்டிங் கோர்ஸில் சேர்ந்தான். பிளாக் (Blog) ஆரம்பித்துத் தோன்றியதை எழுதினான். தென்னிந்தியர்களின் அமெரிக்க வாழ்வு பற்றி, நமமைப் பிடித்து இழுக்கும் சிலிக்கன் வேலியின் காந்தசக்தியைப் பற்றி இரண்டு குறும்படங்கள் எடுத்தான்.

ஒரு நாள் மாலை நான்கு மணிக்கு ருக்மிணியின் அலுவலகத்திற்குச் சென்று “நாம பெங்களூருக்கே ஷிஃப்ட் ஆகிடலாமா?” என்று கேட்டவனை, அமைதியாக ஏறிட்டவள், சுருக்கமாக

“எதிர்பார்த்தேன்”

சௌமித்ரன் மனைவியுடன் பேசிப் பேசி, கரையாய் கரைத்து, பல கட்ட விவாதங்கள், சண்டைகள், சமாதானங்கள், நிபந்தனைகள், யோசனைகளுக்குப் பின் தாய்நாட்டிற்குத் திரும்ப தீர்மானித்தனர் .

கல்வியும் அனுபவமும் கை கொடுக்க, ருக்மிணிக்கு வேறொரு எம்என்ஸியில், அமெரிக்க சம்பளத்திற்குக் குறையாத அளவில் பெங்களூரிலேயே சைபர் செக்யூரிட்டி அனலிஸ்ட்டாக வேலை கிடைத்த பிறகுதான் ருக்மிணி இங்கு வர சம்மதித்தாள். அதன் பிறகே சௌமித்ரனும் தன் வேலையை பெங்களூருக்கு மாற்றிக்கொண்டான். அவன் முதன் முதலில் வேலையில் சேர்ந்த புதிதில் வாங்கிய ஃப்ளாட்டில் குடியேறினர்.

சௌமித்ரனின் சின்ன வயது ஹாபிகளில் ஒன்று கார்டனிங். அவர்கள் இருந்த க்வார்ட்டர்ஸில் இடமும், பெங்களூரின் காலநிலையும் சேர, விதவிதமான ரோஜாக்களை வளர்த்திருக்கிறான்.

இப்போது கற்றுக்கொண்ட ஆர்க்கிட் வளர்ப்புக் கலையை பரிசோதித்துப் பார்க்க, சிறிதாக ஒரு தோட்டம் அமைக்க விரும்பினான்.

எப்போதும் எதிரணியில் நிற்கும் மைதிலியும் ருக்மிணியும் இதற்கு மட்டும் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர்.

“உனக்கெதுக்குடா இந்தப் பழக்கமில்லாத வேலையெல்லாம்? எவனாவது தெரியாத தொழில்ல கைக்காசைப் போட்டு ரிஸ்க் எடுப்பனாடா மித்ரா?” - அம்மா.

“நான் சொல்லி சொல்லிப் பார்த்து எக்ஸாஸ்ட் (ஆயாசம்) ஆயிட்டேன். உங்க பேச்சையாவது கேட்கட்டும்” - ருக்மிணி.

ருக்மிணியின் அம்மா கூட, ஹாலில் இருந்த சௌமித்ரனின் காதில் விழும்படி “ அழகா வேலையைப் பார்த்தோமா, சம்பளத்தை வாங்கினோமான்னு இல்லாம, இதென்னடீ ஆகாத காரியம்? இதுக்குதான் புள்ளை, குட்டி வேணும்ங்கறது. பொறுப்பு இருந்தா பணத்தை இறுக்கிப் புடிக்கத் தோணும். எங்க, ஆறுமாசத்துக்கு ஒருதரம் ஊரைச் சுத்தறதும், இஷ்டத்துக்கு கண்ல படற சாமானையெல்லாம் வாங்கிக் காசைக் கரியாக்கறதுமே காரியமா இருந்தா?”

மாமியார் சொன்னபோது ஆமோதித்த ருக்மிணி, அவளது அம்மா அவளையும் சேர்த்துக் குற்றம் சொல்லவும்,

“இப்ப என்ன, அவருக்குப் புடிச்ச வேலையை அவர் செய்யட்டுமே. நான் சம்பாதிக்கறதே எங்க ரெண்டு பேருக்கும் போதும்” என பலமாக வக்காலத்து வாங்கவும் சௌமித்ரன் ‘அடிப்பாவி, ஒரு வருஷமா எங்கிட்ட சண்டை போட்டவ, இப்டி ஒரே நிமிஷத்துல 180 டிகிரி தலைகீழாக மாறிட்டாளே’ என்று வாயைப் பிளந்தான்.

இதில் ரேகாவும் குமாரும் வேறு “சொந்த இடம். கடன் கிடையாது. ட்ரை பண்ணிப் பார்க்கட்டுமே” என சௌமித்ரனுக்கு ஆதரவாகப் பேச, என்னவோ செய்யட்டும் என அம்மாக்கள் இருவரும் ஒதுங்கி விட்டனர்.


அவர்களது தந்தை எப்போதோ ஹென்னூரில் இடம் வாங்கி, பிள்ளைகள் இருவரின் பெயரில் எழுதி வைத்திருந்த நான்கு ஏக்கர் நிலத்தை தம்பிக்குத் தர ரேகா முன்பே ஒத்துக் கொண்டிருந்தாள்.

சௌமித்ரன் ரேகாவிடம் அவளது பங்கு பணத்தைக் கொடுத்து அந்த நிலத்தை வாங்கிக் கொண்டான்.

ரேகாவும் குமாரும் தங்கள் பல் மருத்துவ மருத்துவமனையை நவீனமாக்க, சௌமித்ரன் அடுத்து வந்த ஏழெட்டு மாதங்களில் அந்த நிலத்தைச் செப்பனிட்டு, ஆர்க்கிட் பண்ணை அமைப்பதில் வல்லவர்களை அழைத்துப் பயிர் செய்யத் துவங்கினான்.

சௌமித்ரனின் ஆர்வமும் முனைப்பும் இரண்டரை வருடங்களிலேயே நல்ல பலனைத் தரத் தொடங்கியது. வருமானம் பெருகவும் ஐடி வேலையை விட்டவன், ஆர்க்கிட் பூக்களின் வளர்ப்பு, வழிகள், வகைகள், எது எங்கே விளையும், விற்பனை, வழிகாட்டல் என பலவற்றையும் சிந்தித்து, அவன் சிரமப்பட்டுத் தேடிய விவரங்கள் அனைத்தையும் சேர்த்து ஒர் ஸ்டார்ட் அப்பை உருவாக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அவனுடன் அவனது பால்ய நண்பர்களான கோகுலும் நிரஞ்சனும் ஸ்டார்ட் அப்பில் மட்டும் இணைந்தனர்.

திருமணமானது முதல் பயணங்கள் மட்டுமே பெருஞ்செலவாக இருந்த தம்பதிகளிடம் கணிசமான சேமிப்பு இருந்தது. புதிதாகக் கட்டி முடிக்கப்படும் தருவாயில் இருந்த இந்த மூன்றரை (3.5 bhk) பெட்ரூம் லக்ஸுரி அபார்ட்மெண்ட்டை வாங்கி, தங்களுக்கேற்றபடி அமைத்துக் கொண்டனர்.

மைதிலி இங்கும் வர மறுத்து விட்டார். இவர்கள்தான் அவ்வப்போது போய் பார்த்து வருகின்றனர்.

மனைவியைப் பின்னிருந்து தழுவிய சௌமித்ரன் “யோசனையெல்லாம் பலமா இருக்கு” எனவும் ருக்மிணி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“எல்லாரும் லஞ்சுக்குப் போயாச்சு. நாமும் போகலாம் வா”

லஞ்ச் முடித்து, ஸ்வீட்டுடன் அம்மா மைதிலியைப் போய்ப் பார்த்தனர். ரேகாவையும் அழைக்க பொழுது பறந்ததே தெரியவில்லை.

பசி மேலிட “சாப்பிட என்னம்மா இருக்கு?” என்று மகன் கேட்டதில் குஷியான மைதிலி, உதவ முன்வந்த மகளையும் மருமகளையும் அடுக்களையின் உள்ளே கூட விடவில்லை. வாங்கி பாத், தயிர்சாதம், உருளைக் கிழங்கு கறி, அப்பளம் என எல்லோருக்கும் இரவு உணவை அவரே தயார் செய்தார்.

அறுபத்தைந்து வயதில் தான் கேட்டதற்காக சிரமம் பாராது சமைத்துவிட்டு, முட்டியைப் பிடித்தபடி சோஃபாவில் வந்து அமர்ந்த அம்மாவைப் பார்த்து நெகிழ்ந்த சௌமித்ரன், தாயைத் தோளோடு அணைத்துக் கொள்ள, ரேகாவின் மகள் “என்னோட பாட்டி” என்று போட்டிக்கு வந்தாள்.

என்னதான் ‘சுதந்திரம் சொர்க்கம்’ என்று பஞ்ச் டயலாக் பேசி, வீம்பாக தனித்திருந்து, பொழுதுகளை உபயோகமாகக் கழித்தாலும், அம்மா தன் மக்களின் அண்மைக்கு ஏங்குவது புரிந்தது.

“என்னோடு வா” என இப்போதும் அழைக்கலாம்தான். எத்தனையோ முறை சொல்லியும் இருக்கிறான். ஆனால், அதன் பின்னான வாக்குவாதங்களை எண்ணி தற்சமயத்துக்கு அமைதியாகி விட்டான். இருக்கும் சுமூகமான சூழலைக் கெடுப்பானேன்?

சௌமித்ரன் ரேகாவின் குழந்தைகளுடன் வெளியே சென்று ஐஸ்க்ரீம் வாங்கி வந்தான். அந்த அரை மணிக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை, ருக்மிணி முட் அவுட்டாக இருந்தாள். பின்னர் அவள் சரியாக உண்ணவும் இல்லை.

ட்ரீட் கேட்ட நட்புகளுக்கு மறுநாள் இரவு டின்னர் தருவதென முடிவு செய்து, அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

ரேகா, குமாரை அழைக்க “யூ கைஸ் கேரி ஆன்” என நாசூக்காக மறுத்துவிட்டனர். மைதிலியைக் கேட்கவே வேண்டாம்.

பார்ட்டி, ட்ரீட் என்றதும் “குடிச்சுக் கும்மாளம் அடிக்க இது ஒரு சாக்கு. இதைத் தடுக்க வேண்டிய ருக்மிணியும் உன்னோட சேர்ந்து ஆடறா. இதெல்லாம் எங்க போய் முடியப் போறதோ?” என்று வசை பாடாமல் அவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டதே பெரிது.

மறுநாளுக்குத் தேவையான சாமான்களுடன் வீடு திரும்பியபோது பத்தரை மணி.

உடை மாற்றி, மடிக்கணினியில் மதியம் தள்ளிப்போட்ட வேலையைச் செய்து கொண்டிருந்தவனின் கைகளுக்குள் நுழைந்து தோளில் சாய்ந்து கொண்டவளைத் தன்னுடன் இறுக்கிய சௌமித்ரன் “என்னடா?”

“...”

“அம்மா ஏதாவது சொன்…”

“ப்ளீஸ் சௌ, நான் இப்டியே கொயட்டா இருக்கேன் நீ உன் வேலையைப் பாரு”

“ஓகே”

‘உங்கம்மா, உங்கக்கா எல்லாரும் எங்கிட்ட வந்து புகார் சொன்னா, நான் என்ன செய்ய? ஏதோ, நான் சொன்னா நீ உடனே கேட்டுடற மாதிரிதான்…'

'அத்தனை சொல்றாளே, உங்கம்மாதானே, அவளோட ஆசையைத்தான் கெடுப்பானேன், ஒரு தரம் அந்த டாக்டரை போய்ப் பார்த்தாதான் என்ன? இல்லையா, பாத்துட்டேன்னு பொய்யாவது சொல்லு. எம்புள்ளை கிட்டதான் பிரச்சனைன்னாலும் சொல்லுன்னு கூட சொல்லியாச்சு. ரெண்டு பேருக்கும் இது என்ன மாதிரி புடிவாதம்னு எனக்குப் புரியலை’

என்ற மாமியாரின் கோபமான பேச்சு, அம்மா மாமியாரிடம் போய் தன்னை விட்டுக் கொடுத்துப் பேசியது தெரிய வந்ததில் மண்டையைக் குடைந்தது.

தலையை உலுக்கியபடி நிமிர்ந்து உட்கார்ந்தவள் “சௌ, லவ்வர்ஸரின்னு பேருதான். பெரிய ஃபார்ம் வெச்சு ஆர்க்கிட், லேவண்டர்னு விக்கற. எனக்கு ஒத்த ரோஸ் கூட தரலை நீ”

லேப் டாப்பை மூடி வைத்துவிட்டு எழுந்தவன் “முனீம்மா, காஃபி?”

“ம்”

“போய் ஃப்ரெஷ் ஆகி ட்ரெஸ்ஸை மாத்து. நான் காஃபி கொண்டு வரேன்”

ஆவி பறக்கும் கூர்க் ஃபில்டர் காஃபி, நறுக்கிய பப்பாளித் துண்டுகள் மற்றும் பாப்கார்ன் சகிதம் வந்தான்.

கருமமே கண்ணாக காஃபியைப் பருகி, பழத்தைப் புசித்த வேகத்தில் அவளது பசி தெரிந்தது. பாத்திரங்களைக் கொண்டு போய் போட்டு, ருக்மிணிக்குப் பிடித்த சற்றே வறுக்கப்பட்ட ஏலக்காய்களுடன் வந்தான்.

“திரும்பு” என்றவன், ருக்மிணியின் விரிந்திருந்த கூந்தலில் பேண்ட் போட்டவன் சைட் டேபிளின் இழுப்பறையில் இருந்து அளவான கண்ணிகளில் கட்டப்பட்ட ஒரு சாண் மல்லிகையும், நாலைந்து செண்பகப் பூக்களையும் வைத்து விட, எதற்கென்றே தெரியாமல் உணர்ச்சி வசப்பட்ட ருக்மிணி, அவனிடமிருந்து அதை மறைக்க முற்பட, சௌமித்ரன் அதைக் கண்டுகொள்ளவில்லை.

மனைவியின் கூந்தலை வாசம் பிடித்தவன் “அழகா இருக்குடீ. கண்ணாடில பாரேன்”

“ம்”

“என்ன நாட்டுத்தனமான்னு கேப்பன்னு நினைச்சா… எனிதிங் ராங் பேபி?”

“ம்ப்ச், நத்திங்”

இருட்டில் தன்னோடு ஒண்டியவளிடம் “ரிலாக்ஸ் டார்லிங், எனக்கு எமோஷனல் மினியைப் பிடிக்காது. தடாலடி முனீம்மாதான் எனக்கு வேணும், க்ளியர்?”

“ம்”

*****************

மறுநாள் காலை வீட்டு வேலைகளில் உதவி செய்யும் சங்கீதாவுடன் சேர்ந்து விருந்தினர் வருகைக்கென ஹால், டைனிங் டெரஸை சுத்தம் செய்து, விரிப்பு, திரைச்சீலைகளை மாற்றி, பூ ஜாடியில் பூக்களை மாற்றி (ஆர்க்கிட்!) என பரபரப்பாக வேலை செய்தனர்.

அமெரிக்காவில் தன் கையே தனக்குதவி என்று செய்து பழகியதில் பாகு பாடின்றி இருவருமே எல்லா வேலைகளையும் செய்வர்.

வறுத்த கடலை, வெள்ளரிக்காய், கேரட், மாதுளை போட்ட ஸ்ப்ரௌட் சாலட், ஃபிங்கர் சிப்ஸ், பனீர் காத்தி ரோல், பாலக் மட்டர் பேட்டீஸ், ஒயிட் பாஸ்தா, ஷெஸ்வான் ஃப்ரைட் ரைஸ், சில்லி பனீர் கிரேவி, ஃப்ரூட் க்ரீம் என ருக்மிணி காய்கறிகளை நறுக்கி, பிசைந்து, உரித்து, கேட்டவற்றை எடுத்துக் கொடுத்து உதவ, சௌமித்ரன்தான் சமைத்தான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகான கெட் டு கெதர் என்பதால், உணவை வெளியில் சொல்ல விருப்பமின்றி, இருவரும் உற்சாகமாகவே சமைத்தனர்.

“சௌமி, நீ ஜெயிச்சதுக்கு எனக்கு என்ன தரப்போற?”

இருவருமே தரவும், பெறவும் நினைத்ததை அவர்கள் உணரவில்லையா, அல்லது அவர்களது முன் தீர்மானம் அவர்களைத் தடுக்கிறதா என்றே புரியாது, சௌமித்ரன் அருகில் நின்றிருந்தவளின் முகவாயை இடது கையால் பிடித்து இழுத்து இதழில் பதிந்தவன் “என்ன வேணும்னு சொல்லு?”

ருக்மிணி “நாம எங்கேயாவது போய்ட்டு வரலாமா?”

“டன், எங்கேன்னு மட்டும் சொல்லு”

மாலை ஏழு மணி முதல் குடும்பத்துடன் நண்பர்கள் வந்து விட, பேச்சு, பாட்டு, சிரிப்பு என வீடே கலகலத்தது.

வந்திருந்த பதினான்கு பேரில் ஐந்து ஜோடிகள் இருந்தனர். அவர்களில் இருவர் மட்டுமே குழந்தைகளுடன் வந்திருந்தனர். மொத்தம் மூன்று குழந்தைகள்.

ருக்மிணி எவ்வளவு கவனமாக இருந்தும் கார்ப்பெட்டில் சாஸ்
சிந்தியதையும், குழந்தைகளுக்கென அழகான நிறத்தில் மெலமைன் கப்புகள், தட்டுகள் எனப் பார்த்துப் பார்த்து தனியாகக் கொடுத்தும் கூட ஒரு சிறுவன் விலை உயர்ந்த கிரிஸ்டல் கிளாஸ் ஒன்றை உடைத்து விட்டான். அவர்கள் இத்தாலி சென்றிருந்தபோது டஸ்கனியில் (Tuscany) வாங்கியது.

வீட்டை ஒதுக்குகையில் புருபுருத்தவளைக் கண்டு சௌமித்ரன் அநியாயத்துக்கு சிரித்து வெறுப்பேற்றினான்.

********************

மறுநாள் காலை. இரண்டு நாள்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் என்பதால், நிதானமாக எழ எண்ணியவள், சௌமித்ரன் அணைக்காது விட்ட மொபைல் அலாரம் விடாது ஒலிக்கவும், எழுந்து அணைத்தவளின் கண்ணில் பட்ட யாரோ ஒரு பிரேர்ணாவிடமிருந்து வந்து விழுந்த

“Top job dear, where is my treat?” என்ற குறுந்தகவலில் தூக்கம் போய் விட, புலனத்தின் உள்ளே சென்று பார்த்தாள்,

‘இன்று என்னால் வர முடியாது’

“you are so soothing and adorable Mithu’

‘நான் ஒரு வார பயணமாக சண்டிகர் செல்கிறேன்’

‘தேங்க்ஸ் ஃபார் தி ஒன்டர்ஃபுல் ஈவினிங்’

‘மிஸ்ட் யுவர் கேம்’

என்பது போன்ற அதன் தொனியை கணிக்க முடியாத விதத்தில் வந்திருந்த தகவல்களில் ருக்மிணியின் புருவம் முடிச்சிட்டது. டிபியில் ஒரு குழந்தையின் படம்தான் இருந்தது.

‘ஹாய்’ என்ற முதல் தகவல் வந்து மூன்று மாதங்களாகி இருந்தது.

‘யார் அந்த பிரேர்ணா, அவளைப் பற்றி கணவன் தன்னிடம் ஏன் சொல்லவில்லை அல்லது அவன் சொல்லி நான் மறந்து விட்டேனா?’ என்ற கேள்விகளோடு கணவனின் இன்ஸ்டா, ஃபேஸ்புக் நட்புகளைப் பார்க்க, அவற்றில் பிரேர்ணா என்ற பெயரில் யாரும் இல்லை.

சௌமித்ரன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ருக்மிணி தன் தினசரி யோகாவைக் கூடத் துறந்து, தெளிவற்று முன் ஹாலை அளந்தாள்.

எல்லாவற்றையும் விட ருக்மிணியை அதிகம் பாதித்தது அந்த ‘மித்து’ என்ற விளிப்பு.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
5
😍😍😍

எல்லாரும் கமென்ட்ல அவ யாருன்னு கேக்குறாங்க? நம்ம வழக்கப்படி பாட்டாவே கேட்டுருவோம்..😁😁

 
Joined
Jun 19, 2024
Messages
5
😍😍😍

"தடாலடி முனீம்மாதான் எனக்கு வேணும்" இவ்வளவு தடாலடி போதுமா? 😜😜

 

saradhavasan

New member
Joined
Oct 3, 2024
Messages
17
முனீம்மா ..முனீயம்மா.. super..ரொம்ப அழகா ரசிச்சு எழுதறீங்க
 
Top Bottom