• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ! 14

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
21
இழைத்த கவிதை நீ! 14


ழ்ந்து, சமநிலையோடு சிந்திக்கும், பகுத்தாயும், கணவனுடனான மிக இளக்கமான, நெருக்கமான பொழுதுகளில் கூட, எத்தனை மயங்கிக் கிறங்கினாலும் சிரித்தாலும் கம்பீரம் குறையாத, அழுத்தமான, யதார்த்தமான ரேஷனலான, பிராக்டிகலான ருக்மிணி பிடிவாதமும், ஆர்ப்பாட்டமும், கொஞ்சலும் மிஞ்சலுமாக மாறி சௌமித்ரனைக் கலங்கடித்தாள்.

இரண்டு பேட்ச் ட்ரெய்னீக்களுக்கு ஆறு வாரங்களுக்கு வகுப்பெடுக்க வந்தவள், இரண்டாவது பேட்ச்சுக்கு வர முடியாததற்கு மன்னிப்புக் கேட்டாள். சௌமித்ரனின் வற்புறுத்தலோடு கூடவே
அவளுக்கே அது தேவை எனவும் தோன்றியதில் உடல் நிலையைக் காரணம் காட்டி இரண்டு மாதங்கள் பிரேக் எடுத்துக் கொண்டாள்.

ருக்மிணிக்கு மெலிதான உதிரப்போக்கும் அடிவயிற்றில் வலியும் இருந்தது. யோகா, விளையாட்டு, ஜாகிங் என ஆரோக்கியமான பழக்கங்களினால் விளைந்த திடத்தை மீறி சோர்வாக இருந்தது.

கணவன் மீது இன்னும் தீராத கோபம், ஏற்றுக் கொண்ட வேலையை முடிக்காதது, கவனம் தவறிய கர்ப்பம், கருச்சிதைவு, அதனால் விளைந்த உடல் அயர்ச்சி என எல்லாமாக சேர்ந்து புரட்டியதில் ருக்மிணி சௌமித்ரனை மிரட்டினாள்.

அமெரிக்கா வந்து இறங்கியதுமே ஜெட்லாகைக் கூடப் பொருட்படுத்த நேரமின்றி, நேரே ஹாஸ்பிடல் சென்று, பின் மாலையில் வீடு வந்து, குளித்து, ருக்மிணிக்குத் தேவையான உதவிகளைச் செய்து, சமைத்து, சாப்பாடு போட்டு, சுத்தம் செய்த களைப்பில் அடித்துப் போட்டது போல் உறங்கியவனை மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் எழுப்பியவளின் கையில் ரேஸரும் கத்தியும்.

தூக்கக் கலக்கத்தில் புரியாது விழித்தவனிடம் “சௌ, தாடிய ஷேவ் பண்ணி விடறேன், வா“ எனவும் அரண்டவன்,

“மினி பேபி, ஆர் யூ ஓகே?”

“ஓகே, ஓகே, நீ வா”

“அதெல்லாம் அப்புறம்” என மீண்டும் போர்வைக்குள் புகுந்தவனை உலுக்கியவள்,

“ஏன் சௌ, பிரேர்ணா ஊருக்குப் போய்ட்டாளேன்னா தாடி வளர்க்கற?”

விருட்டென எழுந்து ருக்மிணியிடமிருந்து ரேஸரைப் பிடுங்கியவன் மீசையையும் சேர்த்தே வழித்த பிறகுதான் ஓய்ந்தான்.


“இங்க வா சௌ” என கையைப் பிடித்து இழுத்துச் சென்று அமர வைத்து அவன் மேலே சாய்ந்து கொள்வதும் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொள்வதும், அவன் சமைக்கையில் வந்து முதுகில் சாய்ந்து கொள்வதுமாக இருந்தவளின் சோர்வும் அமைதியின்மையும் கண்டு சௌமித்ரனின் கைகள் தன்னிச்சையாக அணைத்துக் கொள்ள நீள்கையில் தட்டிவிடுவாள்.

தன் மீதான கோபத்தையும் ஆதங்கத்தையும் மீறி, தன்னிடமே ஆறுதலும் அடைக்கலமும் தேடுபவளின் உணர்வுகள் புரிய, பிரேர்ணா பற்றி மனைவியிடம் சொல்லாததற்காக உண்மையாகவே வருந்தியவன், ருக்மிணியின் ஒட்டாரங்களுக்குத் (Tantrums) தன்னை ஒப்புக் கொடுத்தான்.

ஆனாலும் நாலைந்து நாட்களுக்குப் பின், சௌமித்ரனின் உணர்ச்சிகள் எளிதில் தூண்டப்படும் கேந்திரங்களை சீ(தீ)ண்டி இம்சித்தவளை, அவளது கட்டளைகளை மீறி வேகமாக இழுத்து அணைத்து இதழில் பதிந்த வேகத்தில் தொய்ந்து விழுந்தவளிடம் இருந்து பட்டென விலகியவன்

“முனீஸ். மிஸ்கேரேஜ் ஆகி ஆறு நாள்தான் ஆறது, என் பொறுமையை சோதிக்காத சொல்லிட்டேன்” என்று கத்தி, கண்களை மூடி மனதை ஒருமுகப் படுத்தி ‘ஊஃப்’ என ஊதித் தலையைக் கோதிக்கொண்ட வனையே
சிறிது நேரம் பார்த்த ருக்மிணி

“பிரேர்ணா கிட்ட இது மாதிரி கோபமா பேசுவியா சௌ?”

ஆத்திரத்துடன் கண்களைத் திறந்தவன், மனைவியின் ஓய்ந்த தோற்றத்தில் நீர் தெளித்த பாலைப் போல் அடங்கி, அருகில் சென்றான்.

“சௌ?”

“மினி, பிரேர்ணா பத்தி நான் என்ன சொன்னேனோ அதுக்கு மேல அதுல எதுவும் இல்லை, பீரியட்”

“...”

“இல்ல, தெரியாமதான் கேக்கறேன், போற, வரவளெல்லாம் அடிச்சுட்டுப் போக நானென்ன ஆராய்ச்சி மணியாடீ?”

“!?!”

“என் கோபமும் ஆசையும், ரவுடித்தனமும் ரொமான்ஸும், மயக்கமும் முரட்டுத்தனமும் உன்னோடதான், உங்கிட்ட மட்டும்தான், ஆம் ஐ க்ளியர்?”

“...”

“இப்ப நான் சட்டுனு ரியாக்ட் பண்ணினதும் உன்னாலதான், நீன்றதாலதான் ”

“...”

“பன்னெண்டு வருஷம்டீ முனீம்மா… ம்யூஸிக் மாதிரி, we are well tuned to each other”

“...”

“நாம ரெண்டு பேரும் வாழ்க்கையை சீரா, அமைதியா, ரசிச்சு வாழணும்னு நினைக்கற நானே வம்பை விலைக்கு வாங்குவேனா மினி?”

“...”


“சௌமித்ரன் சௌமினியாகி ரொம்ப வருஷமாச்சுடா முனீஸ், என்னை நம்பு”

கண்ணில் நீர்வழிய தன்னை அண்ணார்ந்து பார்த்தவளைக் கண்ட சௌமித்ரன் பதறினான்.
இத்தனை வருடங்களில் திடமான, ஆளுமை நிறைந்த அவன் மனைவி இப்படி அழுததாக அவனுக்கு நினைவில்லை, அதை அவன் விரும்பவுமில்லை.

“ம்ப்ச்… இப்ப எதுக்குடா அழற?”

அவனை அருகில் இழுத்து இடுப்பைக் கட்டிக்கொண்டவள், அவனது டீ ஷர்ட்டில் முகத்தை வைத்துத் தேய்த்தாள். வயிற்றில் குறுகுறுக்கவே “என்னடீ பண்ற?” என நெளிந்தவனை மேலும் இறுக்கி, முகத்தை மறைத்து அழுகையில் குலுங்கினாள்.

பயந்து போன சௌமித்ரன், அவளது கட்டளையை மீறி தொடத் தயங்கி “மினி…”

“நான் அழுதா கூட ஹக் பண்ணிக்க மாட்டியாடா, அதையும் நானே சொல்லணுமா?”

“சிஸ்டம் அப்டேட் ஆகலடீ, கமாண்டை (command) மாத்து”

கண்கள் வீங்கி, வைர மூக்குத்தி மின்னிய மூக்கு நுனியும் முகமும் சிவந்திருக்க, நிமிர்ந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன்,

“என்னடா முனீஸ் குடையறது உன்னை, ஏன் டிஸ்டர்ப்டா இருக்க?”

“தெரியல சௌ”

“சரியாயிடும்டா”

****************

வார இறுதியில் இளங்கோ, கார்த்திகேயன், ரவிகுமார் மூவரும் மனைவி, குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

பாட்லக் (potluck) என முன்பே தீர்மானித்ததில், சௌமித்ரன் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் செய்து வைத்திருக்க, கூட்டு, பொரியல், சனா, சப்பாத்தி, ஸ்நாக்ஸ், ஸ்வீட் என அவர்கள் எடுத்து வந்திருந்தனர்.

இட்லி மாவை அரைத்து எடுத்து வந்த சௌம்யாவை “யூ ஆர் அன் ஏன்ஜல் டியர்” என்றாள் ருக்மிணி.


ரவிகுமாருக்கு ஒரு மகன் இருக்க ஏழு வயது இடைவெளியில் பிறந்த ஒன்பது மாத குட்டிப் பெண், சுருள் சுருளான கேசமும் கரிய, பெரிய விழிகளும் பால் சதையுமாக எல்லோரிடமும் பழகி, சிரித்தே மயக்கியவள், அன்றைய பார்ட்டியின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருந்தாள்.

குழந்தையுடன் தரையில் அமர்ந்து விளையாடிய ருக்மிணியின் அருகே மற்ற மூன்று பெண்களும் வந்து அமர்ந்து கொண்டனர்.

ருக்மிணி முதல் முறை கருவுற்றது யாருக்குமே தெரியாததால், அவர்களைப் பொறுத்தவரை, நீண்ட வருடங்களுக்குப் பிறகு உருவான குழந்தையை இழந்ததாக நினைத்து சொன்ன ஆறுதல் சடுதியில் ஆலோசனையாக மாறியது.

முதல் கருவை கலைக்கச் சொன்னபோது “திருமணமாகி ஆறு வருஷம் ஆகுது, இப்ப ஏன்?” என்ற மருத்துவரிடம் “நாங்க DINK (Double Income No Kids) கப்புள் என்றது போல், அம்மாக்களிடம் பட்டென உடைத்ததுபோல் எதுவும் சொல்லாமல் ருக்மிணி இப்போது அமைதியாக இருந்தாள்.

“உனக்கு டி&ஸி செஞ்ச டயானா ஸ்மித் பெஸ்ட் டாக்டர் மினி. பே ஏரியா ஃபுல்லாவே ஃபேமஸ். சரியா அட்வைஸ் தருவாங்க. பேசாம, நீங்க ரெண்டு பேரும் இங்கேயே தங்கி ட்ரீட்மென்ட் எடுத்துக்கங்களேன்”

இவர்களின் பேச்சு ஸ்வாரஸ்யத்தில் குழந்தை ஆண்களின் பக்கம் சென்றிருக்க, சௌமித்ரன் துக்கிப் போட்டுப் பிடித்ததில் ஜொள்ளு வடிய கிளுக்கிச் சிரித்த குழந்தையை முத்தமிட்டதைக் கண்ட கார்த்திகேயனின் மனைவி,

“மினி, மித்ரனை பாரு, எத்தனை ஆசையாய் குழந்தையைக் கொஞ்சறார். டி &ஸி பண்ணாலே நிறைய பேருக்கு குழந்தை நிக்கும்”

“நிறைய வால்நட், கீரை சாப்பிடு மினி”

குரலைத் தழைத்துக் கொண்ட ரவிகுமாரின் மனைவி “விடிகாலைல ரிலேஷன் வெச்சுக்கிட்டா நல்லது மினி. அதோட பில்லோ …”

ருக்மிணியின் மீது ஒரு கண் வைத்திருந்த சௌமித்ரன், அவளது ‘என்னைக் காப்பாத்தேன்’ பார்வையில் கையில் குழந்தையுடன் கிச்சனுக்குள் சென்றவன் “மினி, ரோஸ்ட்டட் முந்திரி எங்க ” எனவும் “எக்ஸ்கியூஸ் மீ” என்றபடி தப்பி ஓடினாள்.

சௌமித்ரன் ஃப்ரிட்ஜில் இருந்த ஐஸ்க்ரீமை விரலால் வழித்து குழந்தையின் வாயில் ஈஷ, அது விரலை விடாது சப்புக் கொட்டியது.

“முனீஸ், இங்க பாரேன்” என்று சிரித்தவனை கண்சிமிட்டாது பார்த்த ருக்மிணி,

“இப்ப இப்டி அபார்ஷன் ஆகலைன்னா என்ன சௌ பண்ணி இருப்ப?”

“???”

“இல்ல, இத்தனை ஆசையா பேபியை கொஞ்சறயேன்னு கேட்டேன்”

“ஏன், நீயும்தானே மினி ரசிச்சு விளையாடின, நீ என்ன பண்ணி இருப்ப?”

“...”

“மினி, டிஷ்யூ கொண்டு வாயேன்” என்ற குரலில் ருக்மிணி வெளியே செல்ல,

‘ என்ன ஆச்சு இவளுக்கு?’ என சௌமித்ரன்தான் குழம்பி நின்றான்.

அடுத்தவரைக் கேள்வி கேட்டனரே தவிர, இருவருமே அதற்கு மேல் எதையும் யோசிக்கத் தயாரில்லை.

*******************

டாக்டர். டயானா ஸ்மித்தின் க்ளினிகல் அறை. இரண்டு வாரங்கள் கடந்திருக்க ருக்மிணிக்கு செக் அப் காக என வந்திருந்தனர். ருக்மிணியின் அலைப்புறுதலைக் கண்ணுற்ற சௌமித்ரன், அவரிடமே கவுன்சிலிங்கிற்கும் சேர்த்து அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்தான்.

டயானாவிற்குக் குறைந்தது அறுபத்தி ரெண்டு வயதிருக்கும். அனுபவம் மிளிர, தன் எதிரே அமர்ந்திருந்தவர்களை எடை போடுவது தெரியாது புன்னகையுடன் பார்த்திருந்தார்.

“ஹவ் ஆர் யூ ஃபீலிங் டியர்?”

வயது வித்தியாசமின்றி மிஸ்டர், மிஸஸ், மிஸ் போட்டு எல்லோரையும் பெயரிட்டு அழைக்கும் அமெரிக்கக் கலாச்சாரத்தில் தன்னை டியர் என்றவரை ருக்மிணி புன்னகையும் வியப்புமாகப் பார்த்தாள்.

“மச் பெட்டர்”

“நவ் யூ ஆர் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட். கருப்பையும் ஓவரிகளும் ஆரோக்யமாக இருக்கிறது”

“தேங்க் யூ மிஸஸ் ஸ்மித்”

“குட், போனதை விடுங்கள். இனி என்ன?”

ருக்மிணியும் சௌமித்ரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ருக்மிணி “எது குறித்து?”

புன்னகைத்த மருத்துவர் “நீங்கள் DINK தம்பதியா?”

சரியாகக் கணித்துக் கேட்டவரிடம் ஆமோதித்தனர்.

டயானா “நாம் சிறிது உரையாடலாமா?”

“நிச்சயமாக”

“இந்த கருச்சிதைவைப் பற்றி இருவரும் என்ன நினைக்கிறீர்கள்?”

இருவரும் “எதிர்பாராதது”

“அவ்வளவுதானா?”

தயக்கமாக “வருத்தம் என்று சொல்ல முடியாது. ஆனால், ஏனோ என்னால் எளிதாக ஏற்க முடியவில்லை. கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றமாக உள்ளது” என்ற ருக்மிணியின் கையைப் பிடித்து அழுத்தினான் சௌமித்ரன்.

அதைப் பார்த்த மருத்துவர் புன்னகையுடன் சௌமித்ரனிடம் “உங்களுக்கு?”

“அதேதான்”

“ஒருவேளை கருச்சிதைவு ஆகாமல் இருந்திருந்தால்?”

“...”

“...”

“உங்களுக்கு இது இண்டாவது அபார்ஷன், ரைட்?”

“ஆம்”

“கருச்சிதைவு பிரசவத்தை விட கடினமானது, தெரியுமா?”

“...”

“நான் இதைச் சொல்லலாமா என்று தெரியவில்லை, ஆனாலும் என் அனுபவத்தில் சொல்கிறேன்…

குழந்தை கடவுள் கொடுக்கும் வரம். எட்டு, பத்து பிள்ளைகள் பெற்றுக்கொண்ட காலத்திலும் கூட குழந்தை இல்லாமல் இருந்தவர்கள் பலர்”

“...”

“உங்கள் வாழ்க்கை, உங்கள் உடல், உங்கள் உரிமை. இது எதையுமே நான் மறுக்கவில்லை. DINK தம்பதியாக இருப்பது உங்கள் சாய்ஸ் மற்றும் விருப்பம். அதே நேரம் நீங்கள் இழக்கும் சொர்க்கத்தின், அனுபவத்தின் அளவு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”

“...”

“மழலைச் செல்வம், வரம்னு சொல்றோம். குழந்தை பிறந்தா ஆசீர்வதிக்கப்பட்டதா சொல்றாங்களே, ஏன்?”

“...”

“அதை விடுங்க. நீங்க குழந்தை வேணாம்னு முடிவு செய்த காரணம்?”

ருக்மிணி “நிறைய டூர் போகணும், சுதந்திரமா இருக்கணும், மாசுபட்ட இந்த உலகத்துல, குழந்தையை ஹெல்த்தியா வெச்சுக்கவும், படிக்க வைக்கவும், ஒழுக்கமா வளர்க்கவும்…”

“ஸ்டாப், ஸ்டாப், ஸ்டாப்… பிறக்காத, பெத்துக்கவே போகாத குழந்தை மேல இத்தனை அக்கறை வெச்சிருக்கற நீங்க ஏன் நல்லபடியா ஒரு குழந்தையை
பெத்து வளர்க்கக் கூடாது?”

“மிஸஸ் ஸ்மித்…”

“கூல் மிஸ்டர் சௌமித்ரன், உங்க ருட்டீன், நீ செய்யற உங்க தொழில்கள்ல இருந்தே உங்களோட பொறுப்பும் கமிட்மென்ட்டும் புரியுது. அது ஏன் குழந்தை மேல வரலை?”

“...”

“Are you afraid? (பயப்படுகிறீர்களா?)”

“...”

“ஓகே, உங்களோட ஹாபி, பொழுதுபோக்கு என்ன, எனி பெட்ஸ்?”

சௌமித்ரன் “ஸ்போர்ட்ஸ், வாசிப்பு, இசை, ட்ராவல், என்னோட ஆர்க்கிட் ஃபார்ம்”

ருக்மிணி “ஜிஞ்சர்னு ஒரு பூனை”

“ம்…. பிள்ளைக்கு பதிலா பூனையையும் பூவையும் வளர்க்கறீங்க… இதுக்கு பேர் என்ன தெரியுமா?”

“...”

“ மருத்துவ மொழில அட்டாச்மென்ட் தியரின்னு சொல்லுவோம். புது தம்பதிகளா இருக்கும்போது பேசிப் பேசித் தீராத, மன, உடல் ரீதியா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கக் காட்டும் ஆர்வம் நாளடைவுல பழகிப் போயிடும்”

“...”

“கணவன், மனைவி ரெண்டு பேரும் பழகி அந்யோன்யமா ஒரே பக்கம் வந்த பிறகு அவங்களுக்கான பற்றுக்கோடுதான் குழந்தை. அந்தக் குழந்தையோட இடம் காலியா இருக்கறதாலதான் பூனையும் நாயும் பூவும் உள்ளே வருது”

“...”

“ஸாரி, கார்டனிங் செய்யறவங்க, பெட் வெச்சுக்கறவங்க எல்லாரும் இப்படின்னு நான் சொல்ல வரலை. ருக்மணி, நீங்களே சொல்லுங்களேன், உங்களுக்கு பெட்ஸ் மேல சின்ன வயசுல இருந்தே ஆர்வமா, உண்மையை சொல்லுங்க”

ஓரிரு நிமிட அமைதிக்குப் பின், ருக்மிணி “அப்படி எதுவும் இல்லை. குழந்தை வேணாம்னு அபார்ட் செஞ்சு கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் நான் நாய் வளர்க்கத் தொடங்கினேன். சௌ ஆர்க்கிட் கல்ட்டிவேஷன் உள்பட நிறைய க்ளாஸஸ்க்கு போனார். மே பீ, யூ ஆர் ரைட் மிஸஸ் ஸ்மித்” என்றவளின் முகம் யோசனையில் சுருங்கிக் கறுத்தது.

கையை நீட்டி ருக்மிணியின் கையில் ஆதரவாகத் தட்டிய டாக்டர் டயானா “டோன்ட் ஒர்ரி, உங்கள் இருவருக்கும் சரின்னு பட்டா எதுவுமே தப்பு கிடையாது”

“...”

“அட் தி ஸேம் டைம், ஏதோ ஒரு உப்பு பெறாத கொள்கையைப் புடிச்சு தொங்கிக்கிட்டு, அதைக் காப்பாத்தறேன்னு நம்மோட சந்தோஷத்தைக் கெடுத்துக்கக் கூடாது”

“டாக்டர்….”

“வெய்ட் மிஸ்டர் சௌமித்ரன், நீங்க அப்படின்னு நான் சொல்ல வரலை. ஆனா, அப்படி எதுவும் இருந்தா, தயக்கத்தை உதறி ஈகோவைத் தள்ளி வெச்சுட்டு மனசு விட்டுப் பேசுங்க”

“...”

“எப்படி குழந்தை வேணாம்னு ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு செய்தீர்களோ, அதேபோல வேணும்னாலும் நீங்கதான் முடிவு செய்யணும்”

சௌமித்ரனும் ருக்மிணியும் மற்றவரைப் பாராது, டாக்டரை நோக்கி மெதுவே தலையசைத்தனர்.

“நீங்க இப்ப இந்தியாவில்தான் வசிக்கிறீர்கள், இல்லையா?”

“யெஸ்”

“என் கிட்ட வர அநேக இந்தியர்களிடம் ரொம்ப பாரம்பரியமும் உறுதியான குடும்ப அமைப்பும் உறவும் இருக்கறதைப் பார்த்திருக்கேன். எல்லாருக்குமே டெலிவரி நேரத்துலயும், பேபி சிட் பண்ணவும் யாராவது ஒருத்தரோட அம்மா வந்து ஹெல்ப் செய்வாங்க. அக்கறையா பார்த்துப்பாங்க. உங்க வீட்டில் எப்படி, எதுவும் கேக்கலையா?”

ஒரு பக்க உதடு வளைய சிறிதாகப் புன்னகைத்த சௌமித்ரன் “அஃப்கோர்ஸ், நிறைய கேக்கறாங்க”

புரிதலோடு புன்னகைத்த மருத்துவர் “பெரும்பாலான தூரக்கிழக்கு (Oriental countries) நாடுகளில் நம்புவதைப் போல் இல்லாது, இங்கேயும் (அமெரிக்காவில்) இணைந்த, அக்கறையான குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. என் குடும்பமும் அவற்றில் ஒன்று. என் கணவரின் தாய் எங்களோடுதான் இருக்கிறார். என் மகனது குடும்பமும் அருகில்தான்”

“இங்கே உங்களைப் போல குழந்தை வேண்டாமென வருடங்களைக் கடத்தும் தம்பதிகளில் பலரும் நாளடைவில் பிரிந்து விடுகின்றனர். லிவிங் இன் எனில் கேட்கவே வேண்டாம்”

“நம் இணையை நம்முடன் இருத்திக்கொள்ளவும், நம் அன்பைத் தரவும் பெறவும் பெருக்கவும் ஒரு குழந்தையால்தான் முடியும்.
கணவன், மனைவிக்குள் ததும்பும் நேசமும் அன்பும் மடை மாறும் முன் பிள்ளைகளின் பொறுப்பை ஏற்க வேண்டும். அன்பு மிகப் பெரிய சொத்து, அது வாரிசுகளுக்குப் போக வேண்டுமே தவிர, வெளி ஆட்களுக்கு அல்ல. ஹோப் யூ அன்டர்ஸ்டான்ட்?”

டாக்டர் டயானா எழுந்து நிற்க, தம்பதியும் எழுந்தனர்.

“ஆரோக்யமும் வயதும் இருக்கும்போது சுதந்திரத்தைத் தேடுவதும் வயதான பிறகு மனிதர்களைத் தேடுவதும் மனித இயல்பு”

“...”

“தன் குழந்தையைச் சுமையாக நினைப்பவர்களால் பெற்றவர்களை எப்படி ஆதரிக்க முடியும்?”

ருக்மிணி மறுப்பாகத் தலையசைக்க, டாக்டர் ஸ்மித் சிரித்தார்.

“நான் உங்களைக் குற்றம் சொல்லவில்லை டியர். இது சைக்காலஜி”

இருவருக்கும் கை கொடுத்தவர்

“கடைசியாக ஒன்று. * “Don't get emotionally attached to a logical idea. பகுத்தறிவாளராகக் காட்டிக் கொள்ள DINK என்ற வறட்டுக் கொள்கையைப் பிடிவாதமாகப் பற்றிக்கொண்டு, உங்கள் சுயத்தையும் மகிழ்ச்சியையும் இழப்பதில் லாபமில்லை. யோசியுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். இது அறிவுரை அல்ல, ஆலோசனை மட்டுமே , அதுவும் நீங்கள் கேட்டதால். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். ஆல் தி பெஸ்ட்!”

“தேங்க் யூ ஸோ மச் டாக்டர் ஸ்மித்”

******************

ருக்மிணியும் சௌமித்ரனும் இந்தியா திரும்பி மூன்று மாதங்களுக்குப் பின்னும், இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்தனரே தவிர, எதையும் பேசிக்கொள்ளவில்லை.

இவர்களது இயல்பான, வழக்கமான பேச்சு, பாவனைகளில் ரேகாதான் குழம்பி நின்றாள்.

பிரேர்ணாவிடமிருந்து வந்த ஓரிரு மெஸேஜ்களை ருக்மிணியிடமே கொடுத்த சௌமித்ரன் “நீ பதில் போடு இல்ல ப்ளாக் பண்ணு. என்னை சித்ரவதை மட்டும் பண்ணாத”

“இத்தனை வருஷத்துல உன்னை டீஸ் பண்ண கிடைச்ச ஒரே சான்ஸை நான் எப்படி விட முடியும் மிஸ்டர் ஆல்மோஸ்ட் பர்ஃபெக்ட்?”

“போடீ”

சௌமித்ரனின் மாமா பேத்திக்குப் பிறந்தநாள் என்று அழைத்திருக்க, குடும்பமாக சென்றனர்.

பட்டுப் பாவாடை அணிந்து காது குத்தியதில் அழுது சிவந்த முகத்தோடு, மொபைலை கையில் தந்ததும், முன்னிரண்டு பற்கள் தெரிய சிரித்து, தொடுதிரையை குட்டி விரலால் ஸ்வைப் செய்தது குழந்தை.

கேள்விகளைத் தவிர்க்க சற்று ஒதுங்கியே நின்றவளை நெருங்கி கையைப் பற்றிக் கொண்டான் சௌமித்ரன்.

“ஹலோ ஸார், கையை விடறீங்களா, சுத்தி ஆள் இருக்கு”

“இருந்துட்டுப் போகட்டும், ஒரு வயசுல அந்தக் குட்டி, ஷார்ட்ஸ் பார்க்க ஸ்வைப் செஞ்சதைப் பார்த்தியா முனீஸ்?” என்றான் புன்னகை முகமாக.

ருக்மிணி நிமிர்ந்து சௌமித்ரனின் காதருகே “ஒருவேளை இதுபோல நமக்குப் பொண்ணு பொறந்தா பிரேர்ணான்னு பேர் வைப்பியா சௌ?”

மனைவியை முறைத்தவன் பக்கெனச் சிரித்து விட்டான்.

“சொல்லு சௌ”

“அப்படிப் பார்த்தா என் ஒன்பதாங் கிளாஸ்ல இருந்து பெரிய லிஸ்ட்டே இருக்கேடா மினி”

“சௌ” எனப் பல்லைக் கடித்தவள், அவன் தொடையில் அழுந்தக் கிள்ளினாள்.

“ஆ… சரியான முனீஸ்வரி… முதல்ல பொண்ணு பொறக்கணும், அதுக்கு நீ தடாவை நீக்கணும், என்ன சொல்ற?”

“...”

ருக்மிணியின் கையைப் பிடித்து, ஹாலுக்கு வெளியே இழுத்துச் சென்றவன் “நாம குழந்தை பெத்துக்கலாமாடீ?”
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
14
யப்படா உனக்கு இப்பவது கேட்க தோணுச்சே... ஆனா உன்னோட முனி க்கு எப்போ முனி பிடிக்கும்னு தெரியாது... டாக்டர் ஸ்மித் சொன்னது ரொம்ப சரி...இளமையில் இருக்குற freedom முதுமையில் வெறுமையாக மாறிடும்...
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
58
கடைசியாக குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்று நினைக்கும் அளவுக்கு வந்து விட்டார்கள்.
 

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
136
அப்பாடா, இப்போ தான் பெத்துக்கலாமான்னு நினைக்கிற அளவுக்கு வந்து இருக்காங்க, சட்டுபுட்டுன்னு முடிவெடுங்க
 

saki

New member
Joined
Nov 8, 2024
Messages
5
இதையே அம்மாவும் மாமியாரும் சொன்ன போது டீலில் விட்டாச்சு. அமெரிக்கா டாக்டர் சொன்னது ( of course சரியான சமயத்தில் தகுந்த வார்த்தைகளில்) மனதில் ஏறி முனீக்கு சனி பிடிக்காத பெரியோர்களை மகிழ்விப்பாளா
 
Joined
Jun 19, 2024
Messages
18
😍😍😍

பொட்ட புள்ள பெத்துக் கொடுப்பாளா? 🙈🙈 இல்ல போதும் என்னை விட்டுவிடுன்னு சொல்லுவாளா? 😒😒

 
Top Bottom