• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லற வீணை 9

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
140
இல்லற வீணையின் இனிய சங்கீதம்

அத்தியாயம் 9

திருமணத்திற்கு முதல் நாள் விருந்தினர் வந்து குவிந்தனர். புதிய ஆட்களின் அறிமுகம், வகை வகையான ருசியான உணவு, புத்தம் புது ஆடைகளின் பளபளப்பு, கலகலப்பான சூழ்நிலை, காற்றில் பரவிய உற்சாகம் என்று கல்யாண வீட்டிற்கே உரிய குதூகலத்துடன் நிகழ்ச்சிகள் நடந்தேறிக் கொண்டிருந்தன.

கல்யாணத்தன்று காலை. பெண் அழைப்பு முடிந்து மேடையில் மணமக்கள் வீற்றிருந்தார்கள். கல்யாண மண்டபத்தில் சற்றே பின் வரிசையில் இருந்த நாற்காலியில் அதிகக் கூட்டமில்லாத இடமாகப் பார்த்து பத்மினி உட்கார்ந்து கொண்டிருந்தாள். பிரசாந்த், மேடைக்கு அருகில் தன்னுடைய குருவுடன் நின்று கொண்டு முடிந்த உதவிகளை ஓடியாடிச் செய்து கொண்டிருந்தான். நடுநடுவே அவனுடைய கண்கள், மனைவியின் எழிலைக் கண்டு இரசித்துக் கொண்டிருந்தன.

கல்யாண வீட்டினர் கொடுத்த பட்டுப்புடவையில் அழகுப்பதுமையாகக் காட்சியளித்தாள் பத்மினி. மரகதப் பச்சை நிறத்தில் அரக்கு பார்டர் போட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவை. அதற்கு மேட்சிங்காக, பச்சைக்கல் நெக்லஸ், பச்சைக்கல் தோடு, சிவப்புக்கல் வைத்த ஜிமிக்கி, தலை நிறைய மல்லிகைப்பூ என்ற அட்டகாசமான அழகு அவனை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது. காதோரம் காற்றில் ஊஞ்சலாடிய
ஜிமிக்கி கன்னங்களில் உரசி உரசி, அவனோடு காதல் சேதி பேசின. அந்தச் சேதி தந்த போதையில் கிறங்கித் தடுமாறித் தான் நின்றான் பிரசாந்த்.

கணவனின் பார்வை தன்னைத் தொட்டுத் தொட்டு மீள்வதைப் பார்த்து இரசித்தபடி, கல்யாண நிகழ்வுகளைச் சிரித்த முகத்துடன் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மினி. அவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்தாலும், பாரம்பரிய முறையில் நடக்கும் பல திருமணங்களை ஏற்கனவே பார்த்துக் களித்திருக்கிறாள் பத்மினி. இருந்தாலும் இயற்கைத் தாயின் மடியில் வீற்றிருந்த அந்தச் சூழலில், ஏற்கனவே மணமான ஒரு பெண்ணாக இந்த விழாவில் கலந்து கொள்வதால் ஒவ்வொரு சடங்கு, சம்பிரதாயத்தின் பொருளும் அவளுக்குப் புரிந்தது.

' நமது முன்னோர் ஏற்படுத்தி உள்ள சாங்கியம் ஒவ்வொன்றும் முக்கியமானதாகத் தான் இருக்கிறது. ஆனால் அவற்றின் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ளாமல் வீண் செலவுகளில் பணத்தை வாரி இறைக்கிறார்கள். தேவையில்லாத படாடோபங்கள், உறவினர் மற்றும் நண்பர் மத்தியில் நம் வீட்டுக் கல்யாணத்தை பிரம்மாண்டமாகக் காட்டும் ஆசை என்று வெட்டிச் செலவுகள். இதைப் பார்க்கும் போது பிரசாந்த் எளிமையான திருமணம் என்று என்னையும், அம்மாவையும் ஒத்துக் கொள்ள வைத்தது எவ்வளவு உன்னதமான செயல்! " என்று சிந்தித்த பத்மினியின் மனம், கணவனின் புகழ் பாடிக் கொண்டிருந்தது. அந்த நொடி அப்படியே உறைந்து போயிருக்கக் கூடாதா? பாவம் பிரசாந்த்!

அலை பாய்ந்து கொண்டிருந்த பத்மினியின் செவியில் அவளுக்கு முன் வரிசையில் உட்கார்ந்திருந்த இரண்டு பெண்களின் உரையாடல் விழுந்தது. மேடையில் அருளானந்தம் தன்னருகே நின்றிருந்த பிரசாந்தை அழைத்து ஏதோ சொல்ல, அவனும் அங்கிருந்து உடனே கிளம்பி உள்ளே சென்றான். ஏதோ முக்கியமான பொருளை எடுத்து வரச் சொன்னது போலத் தோன்றியது பத்மினிக்கு.

அப்போது தான் முன்னால இருந்த பெண்கள் பிரசாந்தைச் சுட்டிக் காட்டித் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். மேளச்சத்தம் அந்த சமயத்தில் சற்றே குறைவாக இருந்ததால் அவர்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் பத்மினியின் செவிகளில் மிகவும் தெளிவாக இறங்கியது. அனல் துண்டாக தகித்தது.

" இப்போ அந்த ஐயா கிட்டப் பேசிட்டுப் போறானே, அவனுக்குத் தான் அருள் ஐயா தன்னோட மகளைக் கட்டித் தரப் போறதாச் சொன்னாங்க இல்லையா? "

" அப்படியா, எனக்குத் தெரியாது? ஆளு பாக்க டீஸன்டா நல்லாத் தான் இருக்கான். நிச்சயமா நல்ல வேலையிலும் இருப்பான். இதில் தப்பு இல்லையே? அவரோட ஸ்டூடன்டா அவன்"

" தப்புன்னு நானும் சொல்லலையே? அவர் கிட்டப் படிச்சவன் தான். ரொம்ப புத்திசாலின்னு கூடப் பேசிக்கிட்டாங்க. அது மட்டுமா? வசதியானவனும் கூட. உறவுன்னு சொல்லிக்க யாரும் அதிகம் இல்லையாம். தன் மகளும் பிக்குப் பிடுங்கல் இல்லாமல் புகுந்த வீட்டில் ராஜ்ஜியம் செய்வான்னு அவரும் ஆசைப் பட்டிருக்கலாம். பொண்ணைப் பெத்தவங்களோட
கோணத்தில் இருந்து பாத்தா அதுவும் ஒரு விதத்தில் சரி தான் "

" ஆனாலும் நடக்கலையே? இன்னார்க்கு இன்னார் என்று தேவன் இல்லை எழுதி வைக்கிறார். 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகின்றன' அப்படின்னு தெரியாமலா சொல்லாறாங்க? பிரம்மன் படைக்கும் போதே முடிச்சும் போட்டுடறான் போல இருக்கு. ஆமாம், ஏன் அவர் நினைச்சது நடக்கலைன்னு சொல்லு. ஸஸ்பென்ஸ் தாங்கலை! ஒருவேளை பொண்ணுக்கு இதில் இஷ்டம் இல்லையோ? "

" சேச்சே, அதெல்லாம் இல்லை. அப்பா சொல்லை மீறாது அந்தப் பொண்ணு. லட்டு மாதிரி சம்பந்தம், அதுவும் தெரிஞ்ச இடத்தில்! கசக்குமா பொண்ணுக்கு? "

" அப்புறம் என்ன ஆச்சு? சீக்கிரம் சொல்லு. முகூர்த்த நேரம் நெருங்குது. அப்புறம் மேளச்சத்தத்தில் அதிகம் பேச முடியாது " என்று பேசியவர்களில் ஒருத்தி, இன்னொருத்தியை அவசரப் படுத்த, பத்மினியும் அவர்களுடைய உரையாடலைக் காது கொடுத்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். பிரசாந்த் பற்றிய விஷயம், அதுவும் அவனை வேறொரு பெண்ணோடு இணைத்து அவர்கள் பேச ஆரம்பித்தபோதே மனதில் பொறாமை உணர்வு தலையெடுக்கத் தொடங்கியதும் இயல்பு தானே? பெண்களுக்கே உரிய உடைமைக் குணமும் அதாவது பொஸஸிவ்னெஸ்ஸும் தலைதூக்கி நின்றது.

" அந்தப் பையன் ஏதோ போலீஸ் கேஸில் சிக்கிக்கிட்டானாம். கொஞ்ச நாள் ஜெயிலில் கூட இருந்தானாம்" என்று அந்தப் பெண் சொன்ன போது தூக்கிவாரிப் போட்டது பத்மினிக்கு. ' ஐயோ, இவங்க பேசறது நிச்சயமா பிரசாந்த் பத்தி இருக்காது. வேறு யாரையோ மனசில வச்சுக்கிட்டுத் தான் பேசறாங்க. நாம தான் தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருப்போம்' என்று அவள் மனம் பதைபதைக்க ஆரம்பித்தது. அதற்குள் உள்ளே சென்ற பிரசாந்த் திரும்பி வந்து அருளானந்தத்திடம் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான்.

" என்ன சொல்லறே நீ? அந்தப் பையன் முகத்தைப் பாத்தா நம்பவே முடியலையே? இப்பக் கூட பாரு, அருள் ஐயா கிட்ட எப்படிப் பணிவாப் பேசிட்டிருக்கான்? நீ வேற யாரையோ பத்தித் தானே சொல்லறே? இவனைப் பாத்தா கிரிமினலாத் தெரியலை எனக்கு" என்று அந்தப் பெண் சொன்னது, பத்மினியின் மனதில் ஓடிய எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தது போல இருந்தது. பத்மினியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தற்காலிகமாகக் கிடைத்த நிம்மதி என்னவோ அடுத்த நொடியில் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டது.

" இல்லை இல்லை, எனக்கு நல்லாத் தெரியும். இதே பையன் தான். காரை ஓட்டி ஆக்ஸிடன்ட் பண்ணிட்டானாம். யார் மேலயோ மோதி அந்த மனுஷன் ஸ்பாட்டிலயே இறந்து போனாராம்" என்று அந்தப் பெண் சொன்னபோது பத்மினியின் உடலே நடுங்கத் தொடங்கியது.

' விபத்து, இறந்து போனார்' என்ற தகவல்கள் அவளுடைய மூளையில் பதிந்த போது எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அபாயச் சங்கும் சேர்ந்து ஒலித்தது.

" சரி, சரி, மேலே சொல்லு, அப்புறம் என்ன ஆச்சு? "

" இரு, பொறுமையாக் கேளு. நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்? இறந்து போனவர் கூட இந்தப் பையனோட ஃப்ரண்டோட அப்பாவாம். கேஸ் நடந்து இவன் பேரில் தப்பில்லைன்னு தீர்ப்பாகி வெளியே என்னவோ வந்துட்டானாம். பணம் இருந்தால் கேஸ் எல்லாம் எந்த மட்டுக்கு? பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயுமே? ஜட்ஜ் வரைக்கும் பாயாதா? எப்படியோ அருள் ஐயா நினைச்சதை வேண்டாம்னு விட்டுட்டார். அவ்வளவு தான். கோர்ட், கேஸ்னு ஆனதால் இந்தப் பையன் லாயக்கில்லைன்னு முடிவெடுத்திருப்பார் ஒருவேளை."

" விட்டுத் தள்ளு. நமக்கென்ன? யார் யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நமக்கென்ன கிடைக்கப் போகுது? கல்யாணத்துக்கு வந்தமா, மொய் எழுதினமா, விருந்துச் சாப்பாடு சாப்பிடமான்னு போயிட்டே இருக்கலாம் " என்று ஒன்றுமே செய்யாதது போல் மேடைப்பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பிக் கொண்டார்கள் அந்தப் பெண்கள். ஆனால் அவர்கள் குருட்டாம்போக்கில் ஏதோ திசையில் எய்த அம்புகள் அனைத்தும் சரியான இலக்கைச் சென்று அடைந்து மிகப் பெரிய காயத்தை உண்டு பண்ணி விட்டன.

பத்மினிக்கு உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல இருந்தது. தரை நழுவியது. அமிலத் துளிகள் உடல் மீது பட்டது போலத் துடித்துப் போனாள். தன்னைத்தானே
ஒருநிலைப் படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டாள்.

'ஃப்ரண்டோட அப்பான்னா நம்ம அப்பாவைப் பத்தித் தான் பேசறாங்களா? சாந்தனு தான் எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட் னு பிரசாந்த் சொல்வானே? இல்லை இல்லை, இது எல்லாமே பொய். யாரோ பேசறதை வச்சு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துரக் கூடாது. நிதானமா யோசி. கோபப்படாதே'
என்று அவளுடைய அறிவு அவளுக்கு இடித்துரைத்தது.

இடிந்து போய் உட்கார்ந்திருந்த அவளால் அதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சிகளில் மனம் செலுத்த முடியவில்லை. யாரிடமும் சிரித்துப் பேச முடியவில்லை. தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் இரசிக்க முடியவில்லை. பிரசாந்தோ தனக்கு அடுத்தடுத்து அளிக்கப்பட்ட வேலைகளில் மூழ்கிப் போயிருந்தான். பத்மினியின் வாடிய முகத்தையும், சோர்வையும் அவனால் கவனிக்க முடியவில்லை.

' பிரசாந்தா இப்படி செஞ்சிருக்கான்? என்னோட அப்பாவை, அதுவும் என்னை உசுருக்கு உசுராப் பாத்துக்கிட்ட அப்பா, என்ன ஒரு தேவதையா நெனைச்சுக் கொண்டாடின அப்பா, என் கண்ணில இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வராமல் பாத்துக்கிட்ட அப்பா, பிரசாந்தாலயா இறந்து போனார்? ஒருவேளை அது ஒரு விபத்தாவே இருந்தாலும், தெரியாம நடந்த விபத்தாவே இருந்திருந்தாலும் என் கிட்ட ஏன் அந்த விஷயத்தை மறைக்கணும்?

அம்மாவும் இந்தக் காரணத்தால் தான் முதலில் கல்யாணத்துக்கு ஒத்துக்கலையோ? அம்மாவாவது என் கிட்ட மறைக்காமல் சொல்லி இருக்கலாம். இந்த சாந்தனுவுக்கு என்ன ஆச்சு? பெத்த அப்பாவை விடவா நண்பன் ஒசத்தியா இருக்க முடியும்? ஏன், ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? இந்த சந்தேகத்தை மனசில் வச்சுக்கிட்டு என்னால் பிரசாந்த் கிட்ட இயல்பா இனிமேல் பேசக் கூட முடியாதே?' என்று யோசித்துத் தான் பத்மினி கலங்கிப் போயிருந்தாள்.

கல்யாண விருந்து சாப்பிடும் போது கூட, சரியாகச் சாப்பிட முடியாமல் சாப்பாட்டைக் கைகளால் அளைந்து கொண்டே இருந்தாள் பத்மினி. சாப்பாடு தொண்டைக் குழிக்குள் இறங்கவில்லை.

" என்ன ஆச்சு பத்மினி? டயர்டா இருக்கா? ரூமில் போய் ரெஸ்ட் எடுக்கறயா? " என்று பிரசாந்த் அவளிடம் பரிவுடன் விசாரித்தான்.
" ஹ்ம்" என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விட்டு அவர்களுடைய அறைக்குச் சென்று விட்டாள். அடுத்த நாள் காலையில் தேக்கடி செல்வதற்காக பிரசாந்த் ஏற்பாடு செய்திருந்தான்.

" தேக்கடி பார்க்கற இன்ட்ரஸ்ட் இப்ப எனக்கு இல்லை. ஊருக்குத் திரும்பலாம் " என்று பத்மினி சொல்லி விட, 'அவளுக்கு உடம்பு ஏதோ சரியில்லை போல இருக்கு' என்று அனுமானித்த பிரசாந்த், அடுத்த நாளே அவளுடன் சென்னை திரும்பி விட்டான். ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்குப் போகும் போது பத்மினி,

" என்னை அம்மா வீட்டில் விட்டுரு. எனக்கு அம்மாவோட இருக்கணும் போல இருக்கு" என்று சொல்லி விட்டாள். 'அலைஞ்சது ஒத்துக்கலை போல' என்று நினைத்த பிரசாந்தும், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் பத்மினியை அவளுடைய அம்மாவிடம் கொண்டு சேர்த்து விட்டு, தான் மட்டும் வீட்டுக்குத் திரும்பினான். 'அதன் பிறகு பத்மினி அவர்களுடைய வீட்டுக்கு வரவே போவதில்லை; அதற்கான முகாந்திரம் தான் இது' என்று பாவம் அவனுக்கு அந்த நிமிடம் தெரிந்திருக்கவில்லை.

காமாட்சி தான் பத்மினியைப் பார்த்துப் பதறிப் போனாள்.

" என்னடி ஆச்சு? வாடி வதங்கின பூ மாதிரி இவ்வளவு சோர்வாத் திரும்பி வந்திருக்கே? எங்கேயும் அதிகம் சுத்தலைன்னு வேற சொல்லறீங்க? அதுக்கே இவ்வளவு சோர்வா? இதுக்குத் தான் ஒரு பாடு அடிச்சுக்கிட்டேன் நான்? பெரியவங்க சொன்னதை மதிச்சாத் தானே? " என்று வகை வகையாகப் புலம்பத் தொடங்கினாள்.

" அய்யோ அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா. என்னவோ உன் கூட ரெண்டு நாள் இருந்துட்டுப் போலாம்னு தோணுச்சு. கல்யாண வீட்டில் எல்லாரும் சொந்தங்களுடன் சேந்து இருந்தாங்களா? அதைப் பாத்ததிலிருந்து எனக்கும் என்னோட செல்ல அம்மாவோட இருக்கணும்னு மனசில ஆசை. உங்களுக்குப் பிடிக்கலைன்னா சொல்லுங்க. இதோ கெளம்பிடறேன். நான் என்னவோ உங்க கையால, ரெண்டு நாட்களாவது வாய்க்கு ருசியாச் சாபாபிடலாம்னு நினைச்சேன். பரவாயில்லை, கெளம்பிடறேன் " என்று சொன்னாள். காமாட்சியின் பலவீனத்தை உபயோகித்து இமோஷனல் பிளாக் மெயில் செய்ததும், காமாட்சி கிடுகிடுவென இறங்கி வந்து விட்டாள். மனம் குளிர்ந்து போய் அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். பிரசாந்தும் சிரித்தபடி கிளம்பிப் போனான்.

அடுத்த நாள் காலையில் காலை உணவைச் சாப்பிட்டு விட்டு பத்மினி பரபரப்பாக எங்கோ கிளம்பினாள்.

" என்னடி இது? டயர்டா இருக்கு. ஆஃபிஸ் போகலை. ரெஸ்ட் எடுக்கறேன்னு சொல்லிட்டு இப்போ எங்கே கெளம்பறே? தனியாப் போகாதே. நானும் வரட்டுமா? " என்று காமாட்சி கேட்டதும்,

" ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு மதியம் சாப்பிட வந்துடறேன். நான் பாத்துக்கறேன். நீங்க வரத் தேவையில்லை." என்று சொல்லி விட்டுத் தனது திட்டத்தின் முதல் பகுதியை வெற்றிகரமாகத் தொடங்கினாள்.

எழும்பூரில் இருக்கும் கன்னிமரா நூலகத்தை நோக்கித் தனது முதல் அடியை எடுத்து வைத்தாள். கன்னிமராவின் நுழைவுப் பகுதியில் அருண், அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: இல்லற வீணை 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
175
என்னமோ பிரசாந்தை மீறி நடந்திருக்குமோ 🤔🤔🤔🤔
 
Top Bottom