இருபுனலும் வருபுனலும் 7
அன்று எங்கள் க்வார்ட்டர்ஸில் படம் போடும் நாள். அருகில் தியேட்டர் எதுவும் இல்லாததால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஸ்க்ரீன் கட்டி, ப்ரொஜக்டர் வைத்து படம் போடுவார்கள். ஒரு புதிய படம், ஒரு சற்றே பழைய ஹிட் படம் இரண்டும் இருக்கும். திறந்தவெளியில் இரவு உணவை வீட்டிலிருந்து கொண்டுவந்து வைத்து குடும்பம் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே படம் பார்ப்போம்.. மாலை ஆறு மணி முதலே கூட்டம் சேர ஆரம்பிக்கும். ஏழு மணியைப் போல படம் போடுவார்கள். பஞ்சு மிட்டாய், பாப்கார்ன் விற்பனை கூட நடக்கும்.
நண்பர்கள் எனக்கு வேலை கிடைப்பதற்காக ஏதோ சர்ப்ரைஸாகத் திட்டமிட்டிருப்பார்கள் போல. காலையிலேயே என்னைத் தவிர்த்துவிட்டு குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அனேகமாக கேக் வெட்டுவார்கள் என்று நினைக்கிறேன். சின்ன வயதில் இருந்தே கேக் வெட்ட வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. ஆனால் இதுவரை என் பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை. சமீபத்தில் பிறந்த நாள் பற்றிய பேச்சு வந்தபோது, என் நிறைவேறா ஆசையைச் சொல்லியிருந்தேன்.. அதை நினைவு வைத்து இப்போது திட்டமிட்டு இருக்கிறார்கள் போலும்.
இட்லிப் பாண்டி, "அம்பைல ஒரு வேலை இருக்கு" என்று கூறிக் கிளம்ப, நானும் வரேன் என்று நானும் தயாரானேன். என்னைத் தவிர்க்க முடியாமல் விழித்தான். பின்னே எப்படி கேக் வாங்குவது என்று அவன் யோசிப்பது போல் தோன்றவும், "எனக்கு ஒரு அரை மணி நேர வேலை இருக்கு.. நீ இறங்கி வண்டியைக் குடு.. நான் போயிட்டு வந்துடறேன்" என்று நான் கூற, வேறு வழி இல்லாமல் சரி என்றான்.
சினிமா போடும் நாளன்று தின்பண்டங்கள் நிறைய விற்கும் என்பதால் எங்கள் பகுதியில் பெட்டிக் கடை வைத்திருந்த அண்ணன் என்னிடம் அம்பையிலிருந்து கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி வரச் சொல்லி காசு கொடுத்து விட்டார். தேன்மிட்டாய், கமர்கட், கல்கோனா, பால்பன் போன்றவற்றை இன்னும் சிறு ஊர்களில் விரும்பி சாப்பிடுகிறார்கள். குடிசைத்தொழில் போல செய்து கடைகளுக்கு விற்கும் வீடுகளும் உண்டு.
பாண்டி பஸ் ஸ்டாண்ட் அருகில் இறங்கிக் கொண்டான். நான் மிட்டாய்களை அதற்கான ஹோல்சேல் கடையில் வாங்கிக்கொண்டு சத்யா தென்படுகிறாளா என்று பார்க்க சின்னச் சங்கரன்கோயிலுக்குச் சென்றேன்... இருந்தாள். இன்று அவளது அம்மாவும் உடன் இருந்தார். அருகில் அமர்ந்து காய் நறுக்கிக் கொண்டிருந்தது அவளது அம்மாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எப்படி ஆரம்பிக்கலாம் என்ற தயக்கம் இன்று இல்லை. "அப்பா இல்லீங்களா?" என்றேன். நிமிர்ந்து பார்த்த சத்யா, "ஓ! கவர்மெண்ட் வேலை சாரா?" என்று கேட்டு என்னை வெட்கப்பட வைத்தாள்.
"யார் சத்யா இது?" என்று அவள் அம்மா கேட்க, "அப்பாவுக்கு தெரிஞ்சவரோட மகன்மா.. என்ன சார்? குளிக்க வரலையா?" என்று கேட்டாள்.
உள்ளடங்கிய ஆற்றங்கரைக்கு வருபவன், குளிக்க, துவைக்க எதுவும் முன்னேற்பாட்டுடன் அல்லவா வந்திருக்க வேண்டும்? என்ன சொல்வது என்று யோசித்து, "ஃப்ரண்டு வந்தான்.. வேற ஒரு வேலையா போயிருக்கான்.." என்று தடுமாறினேன். சட்டென்று தடம்மாறி, "வேலைக்கு ஆர்டர் வந்துருச்சு.. உங்க அப்பா கிட்ட சொல்லிடுங்க" என்றேன்.
"யாருக்குன்னு சொல்லணும்?" என்றாள் சத்யா.
"ஆட்டோ பெருமாள் மகனுக்குன்னு சொல்லுங்க.."
"பேர் எல்லாம் கிடையாதா உங்களுக்கு?" என்று அவள் கேட்க, 'அன்னைக்கே சொன்னேனே?' என்று மனதில் நினைத்த நான், "பேச்சியப்பன்" என்றேன்.
"தம்பி பேர மாத்தி சொல்றீங்களோ?" என்றார் சத்யாவின் அம்மா. நான் புரியாமல் விழிக்க, "இல்ல அப்பா பேரு பேச்சியப்பன்.. உங்க பேரு பெருமாளோன்னு கேட்டேன்" என்றார்.
"இல்லங்க.. என் பேரு தான் பேச்சியப்பன். வனப்பேச்சி பேரு" என்று நான் கூற, "நல்ல பேரு தான்" என்றார் சத்யாவின் அம்மா.
"வேலைக்கு ஆர்டர் வந்துருக்குன்னு சொல்ல வந்துருக்கீங்க.. ஸ்வீட்டு, கீட்டு வாங்கிட்டு வரலாம்ல?" என்று சத்யா கேட்க, "எதேச்சையா வந்தேன்" என்று கூறிய என் குரலில் வலுவே இல்லை.
சத்யாவின் பார்வை 'எதேச்சையாவா வந்த?' என்பது போல் இருந்தது.
"அப்பாட்ட சொல்றேன்.. ஆனா அவருக்கு உங்கள மறுபடி ஞாபகம் இருக்குமான்னு சொல்ல முடியாது.. உங்க அப்பா பேரைக் கூட இந்நேரம் மறந்திருப்பார்" என்றார் சத்யா.
"அன்னிக்கு பஜ்ஜி கூட ஃப்ரீயா குடுத்தாரேங்க.. அதுவும் பத்து பஜ்ஜி! நீங்க என்ன இப்படி சொல்றீங்க?" என்றேன் நான்.
"அப்படித்தான் செய்வாரு.. எல்லார் கிட்டயும் ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசுவாரு.. அப்புறம் கேட்டா நினைவிருக்காது"
"எங்க அப்பா கூட அப்படித்தான்.. அந்த வகையில் தான் ரெண்டு பேரும் பிரண்டா ஆயிருப்பாங்க போல.." என்று சொன்னேன். எப்படியாவது ஆழமான நட்பாக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை எனக்குள் தோன்றியது. இப்போது சத்யாவுடன் இயல்பாகப் பேச வருவது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. "வரேன்ங்க, வரேன்மா!" என்று சொல்லிவிட்டுக் கிளம்புகையில் வண்டியிலிருந்த இனிப்புகள் கண்ணில் பட்டன.
இரண்டு தேன் மிட்டாய்ப் பாக்கெட்டுகளை எடுத்து, "இந்தாங்க! இப்போதைக்கு ஸ்வீட்" என்றேன். "அம்மா உனக்குப் பிடிக்கும்ல.. தேன் மிட்டாய். இந்தா!" என்று தன் அம்மாவிடம் சத்யா நீட்ட, அதை வாங்கிக்கொண்ட அம்மா, "எப்ப இளைப்பு வரும்னு தெரியல.. எதைச் சாப்பிடவும் பயமா இருக்கு" என்று கூறினாலும் வாயில் போட்டுக் கொண்டாள். "தம்பி கிட்ட கேட்டு நீயும் கவர்மெண்ட் வேலைக்கு மனு போடேன் சத்யா" என்று அம்மா கூறியதைக் கண்டுகொள்ளாமல்,
"அம்மா நாம கூட இந்த தேன் மிட்டாய் கடலை மிட்டாய் இதுல்லாம் வாங்கி விக்கலாம்ல.. சின்னப் பிள்ளைங்க நிறைய பேரு ஆத்துக்கு வராங்க.. பெரியவங்க பஜ்ஜி வாங்கினா சின்னப் பிள்ளைங்க மிட்டாய் கேப்பாங்கல்ல.." என்றாள் சத்யா.
நான் முந்திக் கொண்டு, "கவர்ல விக்காதீங்க. பாட்டில்ல போட்டு வைங்க.. கவர்னா எல்லாரும் கீழே போடுவாங்க.. ஆத்துல தானே போய் விழும்" என்று கூற, 'எவ்வளவு கருத்தாப் பேசுது தம்பி..' என்பது போல அம்மா பார்த்தாள்.
"ஆமா அதனாலதான் நான் சாக்லேட் கூட வாங்கி வைக்கிறது இல்ல.. பேப்பரைக் கீழே போடுவாங்கள்ல.." என்று சொல்லி என் கருத்தை எதிரொலித்த சத்யா, "ஏகப்பட்ட ஐடியா வச்சுருப்பீங்க போல.. அப்படியே.. ஏதோ ஆன்லைன் வியாபாரம்னு சொன்னீங்களே.. அது பத்தி அப்பா கேக்கச் சொன்னாரு" என்றாள்.
'இப்பதான் உங்க அப்பாவுக்கு என்னை ஞாபகம் இருக்காதுன்னு சொன்ன? அப்புறம் எப்படி என்கிட்ட கேக்க சொல்லிருப்பாரு' என்ற கேள்வி என் வாய் வரை வந்தாலும் அதைக் கேட்காமல், "எனக்கு நிறைய விவரம் தெரியாதுங்க.. விசாரிச்சுட்டு ரெண்டு நாள்ல சொல்றேன்" என்றேன். சரி என்று தலையாட்டினாள். விடைபெற்றுக் கிளம்புகையில் விசிலடித்துக் கொண்டே போனேன். எனக்கு அவ்வளவாக விசிலடிக்க வராது இருந்தாலும் சும்மாவேனும் 'உப்' என்று வாயை ஊதிக்கொண்டே வண்டியில் போனேன்.
அந்த வார விடுமுறைக்கு பின் நானும் அப்பாவும் சில உடைமைகளை எடுத்துக் கொண்டு தூத்துக்குடிக்குப் போனோம். அலுவலகத்தை விசாரித்து வேலையில் சேருவதற்காகப் போகும் முன்பாகவே அலுவலகம் இருந்த பகுதிக்கு அருகிலேயே ஒரு சிறிய வீட்டில் இரண்டு பேருடன் சேர்ந்து தங்குவதற்கு அப்பா ஏற்பாடு செய்திருந்தார். கனகராஜ் அண்ணன் மூலமாகத்தான் இந்த ஏற்பாடு.
சினிமாவில் காட்டும் ஆபீஸ் போல நான் பரபரப்பாக ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு போக, அங்கு ஆள் அரவமே இல்லாத ஒரு வளாகத்தில் தூங்கி வழிந்த ஒரு அலுவலகம் எங்களை வரவேற்றது. யாராவது சீனியர்களை நட்பாக்கிக் கொள்ள வேண்டும், வேலை தெரியாது விழித்தால் அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற முடிவில் நான் போயிருந்ததால் அதற்குத் தோதான ஆள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணைச் சுழற்றிப் பார்த்தேன்.
"புதுசா வேலைல சேரவா? ஐயா வருவாங்க.. இருங்க" என்றபடி செல்போனில் மூழ்கிவிட்டார் ப்யூன் போல இருந்த ஒருவர். சற்று நேரத்தில் ஒருவர் பரபரப்பாக உள்ளே வர நான் எழுந்திருக்க முயன்றேன். ப்யூன் அவர் பின்னாலேயே அலைந்துகொண்டு "குமார் சார், குமார் சார்" என்று அழைத்தபடி பேசிக்கொண்டிருந்தார். அந்த குமார் என்பவர் பரபரப்பாகத் தன் பீரோவை திறந்தார், மூடினார், சாவியை அதிலேயே வைத்துவிட்டு வெளியே போனார். பின் மீண்டும் வந்து அந்தச் சாவியை எடுத்து விட்டுப் போனார். அவரது செயல்களில் அதிகப் பதட்டம் தெரிந்தது. கையும் நடுங்குவது போலத் தெரிந்தது. "சரியான தண்ணி வண்டி போல.. ஜாக்கிரதையா இருந்துக்கோடே! ஜாஸ்தி பேச்சுவார்த்தை வச்சுக்கிடாதே" என்றார் அப்பா. மொத்தமே அங்கு நான்கு மேஜைகளும் நாற்காலிகளும் தான் இருந்தன. எப்படி பேச்சுவார்த்தை வைக்காமல் இருப்பது என்று எனக்குப் புரியவில்லை. இருந்தும் தலையாட்டிக் கொண்டேன்.
சற்றுத் தாமதமாக அந்த அலுவலகத்தின் தலைவர் வந்து சேர, அவருடனே இன்னொரு அதிகாரியும் பவ்வியமாக வந்தார். என்னை அழைத்துச் சென்று பியூன் உள்ளே விட, "புது அப்பாயின்ட்மெண்ட்டா? வாழ்த்துக்கள்.. நல்லா வேலை பாருங்க" என்றார் மேலதிகாரி. "குமார் எங்கப்பா?" என்று அவர் பியூனைக் கேட்க, "சார் டீ சாப்பிடப் போயிருக்காருங்கய்யா.." என்றான் பியூன்.
"டீயா? சரிதான்!" என்று வாட்சைப் பார்த்தவர், "எப்படியோ தொலஞ்சு போங்க.. எனக்கு இன்னும் நாலு மாசம் தான். அதுவரைக்கும் வில்லங்கம் வராம இருக்கனும். கடவுளே!" என்று முணுமுணுத்து விட்டு "தம்பி பார்மலிடீஸ் எல்லாம் முடிச்சாச்சா? எந்த ஊரு சொன்னீங்க? என்றார் என்னிடம்.
"பாவநாசம் இருக்குல்ல சார்.. அதுக்கு மேல லோயர்கேம்ப்" என்றேன். "கொஞ்சம் பாத்துக்கோங்க சார்.. அதிகமாக வெளி உலகம் தெரியாம வளர்ந்தவன்" என்று என் அப்பா கூற, "அதெல்லாம் பார்த்துக்கலாம் சார்.. உங்க ஏரியால தான் சொரிமுத்தையன் கோயில் இருக்காமே.." என்றார் அப்பாவிடம். "ஆமா சார்! சக்தி வாய்ந்த தெய்வம்" என்றார் அப்பா.
அருகில் இருந்த பவ்ய அதிகாரியிடம், "எங்களுக்கு குலதெய்வம் எதுன்னே தெரியாம இருந்துச்சு.. ஒரு ஜோசியரைக் கேட்டப்போ அவர் ஏதேதோ கணக்குப் போட்டு சொரிமுத்தையனார் கோயில் தான் உங்க குல தெய்வம் என்று சொன்னாரு.. அங்க ஒரு வேண்டுதல் இருக்கு. போகணும்" என்றார் மேலதிகாரி.
"வாங்கய்யா! நான் கூட்டிட்டுப் போறேன். நம்ம வீடு இருக்கு. அங்கேயே தங்கிக்கிடலாம்" என்றார் அப்பா, உற்சாகமாக. நான் அப்பாவைச் சுரண்டினேன். மெதுவாக, "சார் பெரிய ஆபிஸர். பாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸ்ல தங்குவாரு" என்றேன்.
"அதான் இப்ப இடிஞ்சு கிடக்காம்ல.. நம்ம ஐபில தங்க வைப்போமா?" என்றார் அப்பா. ஐபி என்பது மின்சார வாரியத்தின் கண்காணிப்பு மாளிகை.. இன்ஸ்பெக்ஷன் பங்களா. மிக அழகான கட்டிடம்.
"அவங்களுக்குத் தெரியாத ஆளா? சும்மா இருங்கப்பா" என்று நான் மீண்டும் கூற, "இருக்கட்டும் தம்பி. அப்பா பிரியமா கூப்பிடுறாருல்ல.. கண்டிப்பா உங்க வீட்டுக்கு வரேன் ஐயா. நீங்கதான் என்னைக் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறீங்க. சரியா?" என்றார். அப்பாவுக்கு வாயெல்லாம் பல்லாக ஆனது. அப்போது எனக்கும் அவரை அவ்வளவு பிடித்தது. அவர் மேல் மரியாதையும் பிறந்தது.
அதன்பின் எனக்கு ஒரு மேஜையும் நாற்காலியும் ஒதுக்கப்பட்டு, நான் அதில் அமரவும் அப்பா ஒருவித பூரிப்புடன் பார்த்து ரசித்து விட்டு விடைபெற்றுப் போய் விட்டார். என் மேஜையில் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது. அதை இயக்கிப் பார்த்தேன், மிகவும் மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தது. என்ன செய்வது.. எனக்கு என்ன வேலை என்று யாராவது சொல்வார்களா என்று வெகு நேரம் காத்திருந்தேன்.
மதிய உணவு நேரம் நெருங்க பியூன், "சார்! சாப்பாடு எதுவும் கொண்டு வந்தீங்களா?" என்றார். "இல்ல.. வெளியே தான்" என்று நான் கூற, ஒரு மெஸ் பெயரைச்சொல்லி, "சாப்பிட்டுப் பாருங்க. ஒத்து வந்தா மாசத்துக்கு ரேட் பேசிக்கிடலாம்" என்றார். நடந்து போய் மெஸ்ஸைக் கண்டுபிடித்து சாப்பிட்டுவிட்டு வந்தேன். உணவு நன்றாகவே இருந்தது.
நான் மீண்டும் அலுவலகத்துக்கு வந்த போது காலியாக இருந்த இன்னொரு மேஜையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். நான் வணக்கமும் இல்லாத சல்யூட்டும் இல்லாத ஏதோ ஒரு மரியாதை செய்கையை அவள் முன்வைத்தேன். "புதுசா? பேர் என்ன? எந்த ஊர்?" என்று மட்டும் கேட்டவள் பின் கொஞ்சம் எழுத்து வேலை பார்த்தாள். நடுநடுவே போனில் பேசினாள். "தங்கம், செல்லம்.." என்று அழைத்து "அம்மா வந்துருவேன் டா.. ஹோம் வொர்க் செய்.. பிஸ்கட் சாப்பிடு" இப்படி ஒரு முறை பேசினாள். பின் நாலரை நாலே முக்கால் அளவில் ஒரு இளைஞன் வந்து வாசலில் பைக்கில் நின்று ஹார்ன் அடிக்க பரபரப்பாகக் கிளம்பிப் போய் விட்டாள்.
எந்த வேலையும் இல்லாமல் சும்மா உட்கார்ந்திருப்பது என்னவோ போல் இருந்தது. ஒரு போஸ்ட்மேன் மட்டும் வந்து ஒரு தபாலை என்னிடம் கொடுத்து விட்டு போய்விட்டார். அதை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திருதிருவென்று விழித்தேன். இதற்குள் ப்யூனின் பெயர் ரங்கசாமி என்று மட்டும் தெரிந்து வைத்திருந்தேன். அவர் பக்கவாட்டில் ஒரு நியூஸ் பேப்பரை விரித்து படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
யாரும் நமக்கு வேலை சொல்வது போல் இல்லை. ரங்கசாமியிடம் தான் கேட்க வேண்டும். அவர் எப்போது விழிப்பார் என்று யோசிக்கையில், காபி விற்பவர் போலும், வாசலில் ஒருவர் வந்து சைக்கிளில் மணி அடித்தார். அந்தச் சத்தத்தில் விழித்த ரங்கசாமி வெளியே போய் காபி வாங்கி குடித்து விட்டு வந்தார். என்னை பார்த்து, "இன்னும் போகலையா சார் நீங்க?" என்றார் ஆச்சரியமாக. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "போகலாமா? அவ்வளவுதானா?" என்றேன்.
"ஒரு வேலையும் இல்லாம எதுக்கு இங்க சும்மா காவல் காத்துக்கிட்டு.. போயிட்டுக் காலைல வாங்க. குமார் சார் தான் சூப்பரெண்டு.. அவர் ஏதாவது வேலை சொன்னாத் தான் உங்களுக்கு வேலை" என்று அவர் கூற, நான் கிளம்பிவிட்டேன்.
காலையிலேயே அறையைப் பிடித்து அதில் பையை வைத்துவிட்டு வந்திருந்தது நல்லதாகப் போய்விட்டது.
அரை கிலோ மீட்டர் தூரம் தான், அதனால் நடந்தே போய்விடலாம். அங்கு இருந்த இருவரில் ஒருவர் அரசு ஊழியர், இன்னொருவர் மெடிக்கல் ரெப். காலையில் இருவரிடமுமே அரைகுறையாகத்தான் பேசியிருந்தேன். இப்போது அறைக்குச் சென்றபோது அரசு ஊழியர் மட்டுமே இருந்தார்
காலையில் அணிந்திருந்த அதே லுங்கி பனியனில் இருந்தார். வேலைக்குப் போனாரா என்று தெரியவில்லை. அறையில் ஒரு சிறிய மீன் தொட்டியும் அதில் நான்கைந்து மீன்களும் இருந்தன. கூடவே ஜன்னல் அருகில் ஒரு ஜோடி லவ் பேர்ட்ஸ்ஸுடன் ஒரு கூண்டு.
"வாங்க ஜி! வேலையெல்லாம் எப்படிப் போச்சு.. ஜாயின் பண்ணியாச்சா?" என்ற அரசு ஊழியர், சரவணன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
நான், "ஒரு வேலையும் பார்க்கல சார்.. சும்மா இருந்து இருந்து மண்டையே வெடிச்சிரும் போல ஆயிருச்சு" என்றேன். கடந்த எட்டு மணிநேரத்தில் இப்போதுதான் வாயார ஒரு வார்த்தை பேசி இருக்கிறேன். அதிலேயே அவ்வளவு ஆசுவாசம் எனக்கு.
"விடுங்க ஜி! கவர்மெண்ட் ஜாப்னா அப்படித்தான்.. சிலருக்குத் தலைக்கு மேல வேலை இருக்கும். சிலருக்கு வேலையே இருக்காது. ஆனா ரெண்டு பேருக்கும் ஒரே சம்பளம்" என்றவரின் போன் அடிக்க, "என் ஆளு கூப்பிடுறா.. இந்தா பேசிட்டு வரேன்.. உங்களுக்கு ஆள் இருக்கா ஜி?" என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் வெளியே போய்விட்டார்.
எனக்கு ஆள் இருக்கா என்ன என்று யோசித்தபடியே நான் முகம் கழுவி, உடைமாற்றி அங்கிருந்த ஷெல்பிலிருந்த நான்கைந்து புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன்.

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் - 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.