இருபுனலும் வருபுனலும் -6
திருச்செந்தூர் மொட்டையா, வனப்பேச்சி பால்குடமா எதை முதலில் நிறைவேற்றுவது என்று அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சிறு வாக்குவாதம் வந்து அம்மாவே வெற்றிபெற்றாள். "மொட்டைத் தலையோட வந்து பால்குடம் எப்படி எடுப்பான்?" என்று அப்பா கேட்க, பால்க்கொடத்த உடனே எடுத்துத் தான் ஆகணுமா? கொஞ்சம் முடி வளர்ந்த பிறகு எடுத்தாக் காணாதா" என்றாள் அம்மா.
பதிலுக்கு, "ஏன்? மொட்டையை மூணு மாசம் கழிச்சுப் போட்டா ஆகாதா?" என்று அப்பா கேட்க, "என்னமோ திருச்செந்தூருக்கும் என் மகனுக்கும் ராசியே இல்ல.. பெத்த அம்மா ஒண்ண நெனச்சு வேண்டுனா தப்பா?" என்று அம்மா வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்ச ஆரம்பித்தாள். "சரி சரி! அழ ஆரம்பிக்காதே.. திருச்செந்தூருக்கே போகலாம்" என்று அப்பாவே விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.
"பாளையங்கோட்டை அத்தைக்கு போன் போட்டுக் குடுடா பிரகாஸு.. வியாழக்கிழமை ராத்திரிக்கு அங்கே போய்த் தங்கிட்டு வெள்ளிக்கிழமை காலைல திருச்செந்தூருக்குப் போயிருவோம்" என்று புதிதாய் வந்த மகிழ்ச்சியுடன் வேக வேகமாகத் திட்டம் போட்டாள் அம்மா. "உங்க அக்காவுக்கு அதிரசம்னா பிடிக்கும்.. பச்சரிசியை ஊறப் போடுதேன்.. வரும்போது அம்பைல அரைச்சிட்டு வாங்க. அங்க தான் நல்லா மையாத் திரிப்பான்" என்று அப்பாவுக்கும் ஒரு வேலை வைத்தான்.
பாளையங்கோட்டையில் இருந்தது என் ஒன்றுவிட்ட அத்தை ஒருவர். இளம் வயதிலேயே விதவையானவர். வசதி வாய்ப்பு உள்ளவர். கோயில், குளம், பாதி நேரம் புனிதப் பயணம் என்று இருப்பார். கோயிலுக்கு என்று கிளம்பி யார் வந்தாலும் வீட்டில் வைத்து அவ்வளவு அருமையாக கவனித்து, தன் செலவில் கூட்டிப் போய் வருவார்.
எப்போது திருச்செந்தூர் போனாலும் அத்தை வீட்டில் முந்தைய நாளே போய்த் தங்கிவிடுவோம். இதுவரை திருச்செந்தூரில் எனக்கு பத்துக்கும் மேற்பட்ட மொட்டைகள் போட்டிருப்போம். பத்து மொட்டை வரை கணக்கு வைத்திருந்தேன். அதன் பிறகு எண்ணுவதை விட்டுவிட்டேன். என் முதல் மொட்டையை முதல் பிறந்த நாளுக்கு மறுநாள் அங்கு சென்று போட வேண்டும் என்று வேண்டியிருந்தாளாம் அம்மா. ஆரவாரமாக குவாட்டர்ஸிலேயே பிறந்தநாள் கொண்டாடி விட்டு அத்தை வீட்டுக்குப் போய் தங்கி, மறுநாள் காலையில் திருச்செந்தூர் போகலாம் என்றிருக்கையில் ஏதோ கலவரம் என்று பஸ்கள் எதுவும் ஓடவில்லையாம். அம்மா ஓவென்று அழுதிருக்கிறாள். அத்தைதான் சமாதானப்படுத்தி, "ஏட்டி! இதுக்குப் போய் அழுவுத.. குறுக்குத்துறைல போய் மொட்டை போட்டுருவோம்.. திருச்செந்தூர் முருகனுக்கே இங்கிருந்துதான் சிலை செஞ்சு கொண்டு போனாங்களாம் அந்தக் காலத்துல.. அங்க நெனச்ச வேண்டுதலை, போக முடியாத ஜனங்க இங்கேயே நிறைவேத்திக்கிடுவாங்க.. இப்ப என்ன, ஆறு மாசம் கழிச்சு திருச்செந்தூருக்குப் போனாப் போச்சு.." என்று சமாதானப்படுத்தி என் முதல் மொட்டையைக் குறுக்குத்துறையில் போட வைத்தாளாம்.
அம்மா அரை மனதாக ஒத்துக் கொண்டாலும், "மதினி, உங்க தம்பியக் கட்டிகிட்டதுல இருந்து எனக்கு இதேதான் பொழப்பு.. மனசுல நெனச்சு வேண்டுனது ஒண்ணையும் நடக்க விட மாட்டாக.. செந்தில்னு பேர் வைக்கணும்னு ஆசைப் பட்டேன் பேச்சியப்பன்னு வச்சுட்டாக.. இப்பப் பாருங்க.. கடலோரத்துல முடி எறக்கணும்னு வேண்டுனா ஆத்தோரத்துல எறக்குத மாதிரி ஆயிடுச்சு" என்று அழுதாளாம் அம்மா.
"பஸ்ஸு ஓடாததுக்கு அவன் என்னட்டி செய்வான்? பேச்சின்னு ஆத்தா பேரை வச்சா என்ன, செந்தில்னு மகன் பேரை வச்சா என்ன.. ரெண்டு கடவுளும் காப்பாத்தும். சும்மாக் கெட.. இங்க இருக்குற ஆறு தானே அங்க கடலுக்கு போய்ச் சேருது, எங்க வேணா மொட்டை போட்டுக்கிடலாம்.." என்றெல்லாம் அத்தை சமாதானப்படுத்தினார் என்பார்கள்.
அன்றைக்கு விட்டுப்போன மொட்டைக்குப் பதிலாக பலதடவை திருச்செந்தூரில் மொட்டை போட்டு விட்டேன். இந்தக் கதையையும் அம்மா வாயிலாக ஆயிரம் முறையும், அத்தை வாயிலாக நூறு முறையும் கேட்டிருப்பேன். ஏனென்றால் அப்பாவுடன் வாக்குவாதம் ஏற்படும் போதெல்லாம் அம்மா இந்தக் கதையை ஆரம்பிப்பாள். அத்தையை சந்திக்கும்போதெல்லாம் அத்தை கூறி விடுவாள். அதுமட்டுமல்ல குறுக்குத்துறை முருகனின் அருமை பெருமைகளையும் பல முறை அத்தை வாயால் கேட்டிருப்பேன்.
"திருச்செந்தூருக்கு சிலை செஞ்ச சிற்பி தான்டே இந்தச் சிலையையும் செஞ்சாரம்.. இன்னும் முழுசா முடியல.. பெரிய மனுஷி ஒருத்தி.. பக்தி உள்ளவ.. தினமும் ஆத்துக்குப் போவாளாம்.. இந்தச் சிலையைப் பாத்துருக்கா.. அதுலருந்து தினமும் அவ பூப் போட்டுக் கும்பிட ஆரம்பிக்க, பல ஜனங்கள் வந்துச்சாம்.. சக்தி வாய்ந்த சாமின்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க.. அப்படியே சின்னக் கோயிலு, மண்டபம் எல்லாம் கட்டிட்டாங்க.. நடு ஆத்துலயே இத்தனை வருசமா இருக்கு.. வருஷா வருஷம் வெள்ளம் போகுது.. ஆனா கோயிலுக்கு எதுவுமே ஆகலை பாத்தியா?" இப்படி என்னிடமே ஐம்பது முறைக்கு மேல் சொல்லியிருக்கிறாள் என்றால், எத்தனை பேரிடம் எத்தனை எத்தனை முறை சொல்லி இருப்பாள்..
அவள் சொல்வது உண்மை தான். கோயிலின் அமைப்பு படகு போல இருப்பதால் வெள்ளம் வரும்போது கோவிலுக்கு இருபுறமும் பிரிந்து சென்று கட்டுமானத்தை பாதிக்காத அளவில் இருக்கிறது என்று ஒவ்வொரு முறை அதிக மழை நேரத்தில் கோவில் நீரில் மூழ்கும் போது செய்தித்தாளில் போடுவார்கள். அதை வாசிக்கும் போது அத்தையைத் தான் நினைத்துக் கொள்வேன்.
அம்மா, அப்பா, நான் மூன்று பேரும் மாலை பஸ்ஸில் திருநெல்வேலி போனோம். ஏனோ என் தம்பி விஷயத்தில் இத்தனை வேண்டுதல்களும் இத்தனை கதைகளும் அம்மாவிடத்தில் இல்லை. அவனுக்கு ஒன்றோ, இரண்டோ மொட்டைகள் தான் போட்டிருப்பார்கள். வற்புறுத்திச் சொன்னாலும் போட மாட்டான். சிறுவனாக இருக்கும்போதே, 'அதெல்லாம் முடியாது. சும்மாயிரு' என்று அம்மாவை அதட்டி விடுவான். அவன் மட்டும் விதவிதமாக முடி வெட்டி ஸ்டைல் பண்ணுகையில் மொட்டைத் தலையில் கொஞ்சம் முடி முளைத்தவாறு இருக்கும் ஹேர் ஸ்டைலே எனக்குப் பழகிவிட்டது.
அத்தையும் அம்மாவும் ஒரே கதையை நூறு முறை சொல்வது போல அப்பாவும் சில கதைகளை அடிக்கடிச் சொல்லுவார். திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் ஒரு கதை சொல்வார். டவுனில் இருந்து ஜங்ஷன் கலெக்டர் ஆபீஸ் தாண்டிப் போகும் போது ஒரு பெரிய பாலத்தில் பஸ் ஏறி போகும். அதைப் பற்றிய கதை தான் அது.
"சுலோச்சனா முதலியார்னு ஒருத்தரு வெள்ளைக்காரத் துரைட்ட வேலை பார்த்தாராம்.. ரொம்பத் திறமையானவராம்.. ஒரு தடவை துரை கூட வெளிநாட்டுக்குப் போயிட்டு வரும்போது துரை சன்மானமா நிறைய பணம் குடுத்தாராம். முதலியாரு பெருமையா அந்தக் காசைக் கொண்டு வந்து அவங்கம்மா கைல குடுத்திருக்காரு,. அவங்க அம்மா காந்தி கட்சி. வெள்ளைக்காரன்னாலே புடிக்காது. வெள்ளைக்காரன் பணத்தக் கொண்டு போய் ஆத்துல போடுன்னு கோவமா சொல்லுச்சாம். யோசிச்சுகிட்டே இருந்தாராம் முதலியாரு.. அப்பல்லாம் மக்கள் திருநெல்வேலியிலருந்து பாளையங்கோட்டை போக ரொம்ப சங்கடப்பட்டுருக்காங்க. பரிசல்ல தான் போகணும். அதனால அந்தக் காசுல ஒரு பாலம் கட்டுனா என்னன்னு முதலியாருக்கு ஐடியா வந்து தான் இதைக் கட்டுனாராம். இன்னைக்கு வரைக்கும் உறுதியா நிக்குது பாரு. இதை இடிக்கணும்னு சமீபத்துல முயற்சி பண்ணிருக்காங்க.. ஒத்தச் செங்கலைக் கூட பேர்க்க முடியலையாம்" என்பார் அப்பா.
நான் டிகிரி படித்தது பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில். பாலத்தைக் கடக்கும் போதெல்லாம் அப்பா சொன்ன கதையை நினைத்துக்கொண்டே கடப்பேன். அதன்பின் 1999ல் அந்தப் பாலத்தை ஒட்டிய ஆற்றுப் பகுதியில் நடந்த மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டத்தையும் அதில் பதினேழு பேர் உயிரிழந்தது பற்றியும் கேள்விப் பட்டதிலிருந்து சுலோச்சனா முதலியாரின் கதையுடன் சேர்ந்து அந்தப் படுகொலை சம்பவமும் மனதில் ஓடும். ஒவ்வொரு ஜூலை மாதமும் அந்த நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக சில அமைப்புகளில் இருந்து வந்து எங்கள் கல்லூரி மாணவர்களை அழைப்பார்கள். அப்போது அந்த நிகழ்வைப் பற்றி உருக்கமாகப் பேசுவார்கள். அதன் விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நானும் பொது நூலகத்தில் போய் தேடிப் படித்திருந்தேன்.
பல நினைவுகள் அலைமோத அன்று அத்தை வீட்டிற்குச் சென்று மறுநாள் நல்லபடியாக திருச்செந்தூரில் மொட்டை போட்டு பஞ்சாமிர்தமும் சில்லுக்கருப்பட்டி வாங்கிக்கொண்டு ஊர் போய் சேர்ந்தோம். அதன்பின் ஒரு மாதத்திலேயே பால்குடமும் எடுத்து முடித்தாயிற்று. பந்தாப் பாண்டி மட்டும் நடுநடுவே இரண்டு முறை போன் செய்து, "ஒரு ஆளைப் பிடிச்சிருக்கேண்டா.. அம்பதாயிரம் குடுத்திருக்கேன்.. கேட்ட டிபார்ட்மெண்ட் கிடைக்கும்.. நீ என்ன செஞ்சிருக்க?" என்று கேட்டான். நான் எந்த முயற்சியும் செய்யவில்லை என்றவுடன் நம்பியும் நம்பாமலும் விட்டுவிட்டான். அந்த ஆண்டு கவுன்சிலிங் இருக்கிறது, இல்லை என்று இருவேறு பேச்சுக்கள் உலவி வந்த நிலையில் எனக்கு தூத்துக்குடி வனத்துறை அலுவலகத்தில் ஸ்டெனோ டைபிஸ்ட்டாக நியமிக்கப்பட்ட ஆர்டர் வந்து சேர்ந்தது.
"என்னடே! நம்ம எதிரி டிபார்ட்மெண்ட்ல போய் வேலைக்குச் சேருதே?" என்றார்கள் நண்பர்கள். எங்கள் பகுதியில் ஈபிக்கும் ஃபாரஸ்ட்க்கும் ஆகவே ஆகாது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். வெளியிலிருந்து கேட்பவர்களுக்கு இது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம். வெளியூரிலிருந்து வருபவர்களிடம் ஈபி- ஃபாரஸ்ட் சண்டையைப் பற்றி சொன்னால் வினோதமாகப் பார்ப்பார்கள்.
மூர்த்தியின் மாமா ஒருவர், "என்னடே! நீங்க தண்ணிய களவாங்கீங்க.. அவன் மரத்தைக் களவாங்கான்.. ரெண்டுபேருமே களவாணிக தான்" என்பார். மூர்த்தி, "மாமா! அவனுக கண்டிப்பா களவாணிப்பயலுக தான். ஆனா எங்கள களவாணிங்காதீங்க.. நாங்க ஓடுற தண்ணில இருந்து கரண்டை எடுக்கோம்.. அப்புறம் அந்தத் தண்ணிய அப்படியே ஓடவிட்ருவோம்.. ஒரு சொட்டு எடுக்கோமா, விக்கோமா?" என்று வாதாடுவான்.
"இருக்கட்டும் டே துட்டுக்கு வித்தாத் தான் களவாணித்தனமா? இங்கே வந்து உட்கார்ந்துக்கிட்டு பாதி மரத்தை வெட்டிப் போட்டு குவாட்டர்ஸ் கட்டிருக்கீங்க.. அது போக குரங்கை வெரட்ட, கரடியை வெரட்டன்னு என்ன அச்சலாத்தி பண்ணுதீங்க? அதெல்லாம் திருட்டுத் தானே.." என்பார்.
"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்காகத் தானே நாங்க கரண்ட்டு எடுக்கோம்" என்போம் நாங்கள். எங்கள் உறவினர்கள் ஈபி டிபார்ட்மெண்டில் வேலை பார்ப்பதில் நாங்களே கரண்ட் தயாரிப்பது போல் ஒரு பெருமை எங்களுக்கு.
"நாங்க கேட்டோமா கரண்டு வேணும்னு.. எங்க ஆச்சி, தாத்தா எல்லாம் கரண்ட் இல்லாம வாழல? மனுசப் பயலத் தவிர வேற எந்த மிருகமாவது இப்படிக் காட்டை அழிச்சுப்போட்டு அதுக்குப்புறம் காட்டுக்குக் காவல் காக்க மனுஷனையே வேலைக்குப் போடுதா டே?" என்பார்.
அவர் சொன்னது அப்போது புரியவில்லை. ஏதேதோ பேசி வாக்குவாதத்தில் எங்களை வெல்ல முயல்கிறார் என்பது மட்டும் புரியும். இப்போது புரிந்தும் புரியாமலும் இருந்தது. சரி என்ன தான் செய்வது நான் பிறந்தது வளர்ந்தது இங்கே தானே? வேறு எங்கு போவது? என்று யோசிப்பேன். வனத்துறையினரே மரங்களை வெட்டிக் கடத்துவதை நாங்களும் பார்த்திருக்கிறோம். 'வனப்பேச்சி அவங்கள விட மாட்டா..' என்பார் அப்பா. 'புலி அடிச்சு சாவான். ரத்தம் கக்கி சாவான்' என்றும் சொல்வார். அப்படி புலி இதுவரை யாரையும் அடித்து நான் பார்த்ததில்லை. புலியையே இரண்டு முறை தான் பார்த்திருக்கிறேன். அப்பா பலமுறை பார்த்திருப்பதாகக் கூறுவார். ஒருமுறை அப்பா இரவில் ஒரு புலியை பார்த்தேன் என்று எங்களையும் கூட்டிக்கொண்டு போய்க் காட்டினார். நாங்கள் போவதற்குள் அது போய்விட்டது போலும். காணவில்லை..
சிறுத்தையைப் பலமுறை பார்த்திருக்கிறோம். ஒரு முறை முருகேசன் கல் தடுக்கிக் கீழே விழுந்ததில் நெற்றியில் காயம்பட்டு விட்டது. காயம் ஆழமாக இருந்ததால் அடிவாரத்தில் போய் தையல் போட வேண்டியதாயிற்று. ஈபி ஜீப்பில் போனோம்.. ஆறு ஆறரை மணி இருக்கும்.. முக்கால்வாசி இருட்டு. ஒரு வளைவில் திரும்பினோம். நடுச்சாலையில் ஒரு சிறுத்தை நின்றிருந்தது. ஜீப் டிரைவர் வயதானவர்; அனுபவசாலி. சட்டென்று லைட்டையும் இன்ஜினையும் அணைத்துப் போட்டார். நாங்கள் குசுகுசுவென்று பேச, "உஷ்! பேசாம அமைதியா இருங்க.. அதுவா நகரட்டும்" என்றார். முழுதாக மூன்று நிமிடங்கள் நின்று நிதானித்து அங்குமிங்கும் பார்த்தபின் சிறுத்தை ஒரே தாவலில் வலது புறமாகத் தாவிக் காட்டுக்குள் போனபின் தான் ஜீப்பை எடுத்தார்.
வனத்துறையில் வேலை செய்யும் ஒருவர், ஒருமுறை புலித்தோலை வைத்துக்கொண்டு விலை பேசியதாகக் கூடச் சொல்வார்கள். "அது ஏதாவது செத்த புலியா இருக்கும். அதோட தோலை வெட்டி எடுத்துருப்பாங்க" என்று அப்பா கூறியதற்கு, "இல்லப்பா உயிருள்ள புலியத் தான் கொன்னாங்களாம்.. முருகேசோட சித்தப்பா கூட அவன் கூட புலித்தோலை விக்கிறதுக்குப் போனாராம்" என்றேன் நான். "முருகேசோட சித்தப்பா ஒரு டுபாக்கூர் பய.. அவன் கூப்பிட்டான்னு நீ எங்கேயாவது போயிறாத.. என்ன?" என்பார் அப்பா.
வனத்துறையில் ரேஞ்சர், டிஎஃப்ஓ போன்ற பெரிய அதிகாரிகளை நான் அவ்வளவாகப் பார்த்ததில்லை. வனத்துறை வாகனங்கள் போகும்போது தூரத்திலிருந்து பார்த்ததோடு சரி. வாட்ச்சர், கார்டு போன்ற ஆட்கள் தான் எங்களுக்கு அறிமுகம். அவர்களில் ஓரிருவரைப் பார்த்தாலே எங்களுக்குப் பிடிக்காது.. மற்றவர்களை பார்த்தால் நல்லவர்கள் போலத்தான் தெரியும். செக்போஸ்டில் யார் நின்றாலும் கடக்கும் வாகனங்களில் காசு வாங்கத்தான் செய்வார்கள்.. இவர்களும் மான்கறி சாப்பிட்டிருப்பார்களோ, மிளாக்கறி சாப்பிட்டிருப்பார்களோ என்று செக்போஸ்ட் தாண்டும்போது நினைத்துக்கொள்வேன்.
இந்தத் துறையில் ஸ்டெனோ டைபிஸ்ட்டுக்கு என்ன வேலை, எங்கள் காட்டிற்கான வனத்துறைக்கு அலுவலகம் எங்கிருக்கிறது, அதில் என்ன வேலை செய்வார்கள் என்று எதுவுமே எனக்குத் தெரியாது. இந்த ஆர்டர் வந்தபின் கூட எனக்கு எதுவும் தெரியவில்லை. "தூத்துக்குடியில எங்கப்பா இருக்கு பாரஸ்ட் ஆபீஸ்?" என்று நான் அப்பாவை கேட்க,
"தெரியலையே டா. கனகராஜைக் கேட்கலாம். அவரு தான் ஊரு ஊருக்கு அலையுறவரு.. நாளைக்கு விசாரிச்சு சொல்றேன்" என்றார் அவர்.
"தூத்துக்குடியில ஏதுப்பா காடு?" என்றான் கண்ணன். "டேய்! எல்லா மாவட்டத்துலயும் காடு இருக்கும்டா.. வல்லநாட்டுப் பக்கமெல்லாம் காடுதான். கடலோரம் அலையாத்தி காடும்பாங்க.. அதுகூட வனப்பகுதில தான் வரும்.. குலதெய்வம் கோயில்கள் பலது காட்டோட சேர்ந்து தான் இருக்கு.." என்றார். இவ்வளவு நாள் மலைப்பகுதியில் வாழ்ந்து, கல்லூரிப் படிப்பு எல்லாம் முடித்த பின்னும் எனக்கும் இது கூடத் தெரியவில்லையே என்று தோன்றியது.
அப்பாவும் அம்மாவும் சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் என்று பலருக்குத் தொலைபேசியில் அழைத்து எனக்கு வேலை கிடைத்ததைப் பெருமையாகச் சொன்னார்கள். ஓரிருவர் என்னிடமும் பேசி வாழ்த்து தெரிவித்தார்கள். பெரியப்பா "ஏன் டே? ஈபில எதுவும் வேலை கிடைக்கலையா?" என்றார். அவர் இப்போது ரிட்டையர்ட் ஆகி சொந்த ஊருக்கு போய் விட்டிருந்தார். அவருக்கும், இன்னும் பழைய ஆட்கள் நிறைய பேருக்கும் ஈபி வேலை தான் உசத்தி. அப்பா ஒவ்வொருத்தருக்காகப் பேசுகையில் சத்யாவின் அப்பாவிடம் பேசுகிறாரா என்பதை ஓரக்கண்ணால் கவனித்து வந்தேன். அப்படி எதுவும் பேசவில்லை என்றவுடன் ஒருவேளை அவருடன் பார்க்கும்போது மட்டும் ஹாய், ஹலோ சொல்லுமளவுக்கு பழக்கமாக இருக்குமோ, போன் நம்பர் இருக்காது போல என்று நினைத்துக்கொண்டேன்.
"அப்பா அன்னைக்கி ஒருத்தரப் பாத்தோமே? ஆர்டிஓ ஆஃபீஸ்ல உங்க கிட்ட கூட வந்து பேசினாரே?" என்று கேட்டேன்.. "யாரைப் பார்த்தோம்?" என்றார் அப்பா.
"அதான் நான் கம்ப்யூட்டர்ல ரிசல்ட் பார்க்க போகும்போது ஒருத்தர் உங்கள்ட்ட பேசிக்கிட்டு இருந்தாரே.." என்றேன். 'அவர் பொண்ணுகூட பைக் ஓட்டுவேன்னு பிடிவாதமா சொல்லுச்சே..' என்று சொல்லவந்தேன், ஆனால் கவனமாக தவிர்த்துக் கொண்டேன். அப்பா தன் கையிலிருந்த போன் நம்பர்கள் எழுதி வைத்திருந்த குறிப்பேட்டைப் புரட்டிக் கொண்டே, "யாரைப் பாத்தேன்.. ஞாபகம் இல்லையே.. அம்பையில் பாதி பேறு நமக்குத் தெரிஞ்சவங்க தான். பாத்தா பேசாமப் போக மாட்டாங்க" என்றார் அப்பா. லேசாக அறிமுகமானவர்களிடம் கூட ரொம்ப உரிமையானவர் போல் பேசுவார். அப்படி ஒருவராகத்தான் சத்யாவின் அப்பாவும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஒரு நாள் முழுவதும் குழம்பிய நான் நேராகவே அதே ஆற்றுப்பக்கம் போய் பார்ப்போம், வாய்ப்பிருந்தால் அவளிடம் நேரடியாகவே சொல்லி விடுவோம் என்று கூறிக் கிளம்பினேன்.

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் -6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.