• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இருபுனலும் வருபுனலும் 15

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
167
இருபுனலும் வருபுனலும் 15

தாமிரபரணி எனக்கு நிஜமாகவே இன்னொரு தாய் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டாள். சனிக்கிழமை முழுவதும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் ஞாயிறன்று காலையில் கண்ணன் என்னைத் தொடர்பு கொண்டான். அம்மா லைனில் வந்தாள். "பிரகாஸு.. நல்லா இருக்கியாடா? தூத்துக்குடியிலயும் கூட வெள்ளம்னு டிவில சொல்லுதானே.." என்றாள் வருத்தத்துடன்.

"வீட்ல தான் இருக்கோம்மா.. சனி ஞாயிறு தானே.. லீவுதான்" என்றேன். அதற்குள் லைன் கட்டானது. மீண்டும் நான் அழைக்க முயல, சத்யாவின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. சரி சத்யாவிடம் வேகமாகப் பேசி முடித்துவிட்டு, பின் அம்மாவுக்கு அழைப்போம் என்று நான் நினைக்க சத்யாவின் எண்ணிலிருந்து பேசியதும் என் அம்மாதான்.

"டேய் பிரகாஸு.. இது யாரு நம்பருன்னு பாக்கியா.. சத்யான்னு ஒரு பிள்ளை.. உங்க அப்பாவுக்கு ஃப்ரெண்டு மவ.. அம்பைல இருக்காங்க.. இந்தப் புள்ளைய தான் உனக்குப் பாக்கலாம்னு இருக்கோம்.. எனக்கு ரொம்பப் புடிச்சிருக்குடா.. நல்ல புள்ளையா இருக்கு.. அவங்க வீட்லதான் இருக்கோம்.. இப்ப நம்ம வீட்டைச் சுத்தி வெள்ளம் வந்துருச்சு.. நம்ம ஈபி ஆபீஸ் லேயே தங்கிக்கிடலாம்னு தான் எல்லாரும் சொன்னாங்க.. நான்தான் உன்னை வயித்துக்குள்ள வச்சுக்கிட்டு நான் பட்டது போதும்.. கீழே போகலாம்னு சொன்னேன். மருமகளையும் கூட்டிட்டு எல்லாரும் வந்துட்டோம்டா.. வந்த இடத்துல புது மருமக கிடைச்சிருக்கா. நீ வந்து ஒருக்கப் பாருடா.. பிடிச்சா வெத்தலை பாக்கு மாத்திக்கிடுவோம். என்ன?" என்றாள்.

"சரிம்மா.. உனக்குப் புடிச்சா சரிதான்.." என்றேன் பாந்தமாக. நான் படித்த கதைகளில் வருவது போல எனக்கும் நடந்துவிட்டது. நினைக்காதது ஒன்று நடந்து என்னைக் கலக்கத்தில் ஆழ்த்தியது போல, இப்படி ஒன்று நடந்து என்னை மகிழ்ச்சிக் கடலில் தள்ளிவிட்டதை நினைத்துப் புன்னகைத்தேன். அம்மாவிடமிருந்து ஃபோனை வாங்கிய கண்ணன், தனியே போய், "டேய் சிரிப்பா வருது டா எனக்கு. எத்தனை நாள் டா ஒன்னும் தெரியாத மாதிரியே நானும் நடிக்கிறது.. இங்கே தங்கம் அண்ணி கிட்ட போயி, 'அக்கா உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. நீங்க எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?' அப்படிங்கிறா.. பாத்து நாலு நாள் தானே ஆச்சுன்னு சொல்ல வாய் வரை வார்த்தை வந்துச்சு.. முழுங்கிக்கிட்டேன்.. இவ இப்படின்னா உன் மாமியார், மாமனார் அதுக்கு மேல இருக்காங்க டா.. உங்க மாமியாரு, 'மாப்பிள்ளைத் தம்பி போட்டோ இருந்தா காமிங்க.. ஒருக்கா பார்த்துக்கிடுதேன்' அப்படிங்காங்க.. ஒலக நடிப்புடா சாமி.. தூத்துக்குடில பத்து நாளும் தினமும் பார்த்த மூஞ்சிய போட்டோல வேற பார்க்கணுமாக்கும். ஆனா ஒன்னுடா.. உன் குடும்பமும் டுபாக்கூர் தான்குறதுல எனக்கு ரொம்ப சந்தோசம்" என்றான். நானும் வாய்விட்டுச் சிரித்தேன்.

"அப்புறம் உங்க ஆபீஸ் காரங்க கதையைச் சொல்லலியே.. யாருடா அது சரியான காமெடி பீஸுக.. இவனுங்கள எப்படிடா பிடிச்ச? வரும்போதே அரை போதையில் தான் வந்திருக்காங்க. கீழே டிப்போ செக்போஸ்ட்லேயே, 'சார் மேல ரொம்ப மழை இருக்கு.. போக வேண்டாம்னு சொல்லிருக்காங்க.. இவங்க கேக்கல.. நாங்க ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் தான், எங்களுக்குத் தெரியாத மழையா அப்படி இப்படின்னு சலம்பி இங்க ஐபி ல வந்து உக்காந்துட்டானுக. அங்க முழுநேரமும் தண்ணில மிதந்துருக்கானுங்க.. மழை ஜாஸ்தியாகி கரண்ட் போயிடுச்சு. கூரையில் ஒரு எடத்துல மரம் விழுந்ததுல ரூமுக்குள்ளயும் தண்ணி போல.. வெள்ளம்னா எப்படி இருக்கும்னு தான் உனக்கு தெரியும்ல.. ரெண்டு பாம்புகள் வேற உள்ள புகுந்துருச்சு.. நாங்க கிளம்பி இங்க வர முன்னாடி எதுக்கும் இருக்கட்டும்னு போய்ப் பார்த்தோம். பயந்து போய் கட்டில்ல ஏறி ஒதுங்கி உட்கார்ந்திருந்தாங்க. நம்ம அப்பா வெளிச்சத்துக்காக ஒரு தீப்பந்தத்தைப் பிடிச்சிட்டு உள்ள போனாரு.. பூச்சிக நிறைய இருக்குன்னு ஒரு கைல சாம்பிராணி கொண்டு போயிருக்காரு.. ஒரு கனத்த ஆளு, மீசை வச்சவரு, 'சார் செய்வினை வச்சுராதீங்க சார். என்னை மன்னிச்சுருங்க சார். உங்க மகனை நான் நல்லா பார்த்துக்கிறேன் சார்' அப்படின்னு கதறியிருக்கார். மந்திரம் எதுவும் போட்றாதீங்க அப்படின்னு திரும்பத் திரும்பச் சொல்றாரு.. எங்களுக்கு ஒண்ணுமே புரியல" என்று அவன் கூறினான். ஆனால் எனக்குப் புரிந்து விட்டது. என் அப்பா மாந்திரீகம் செய்பவர் என்று நான் சொன்னதை நினைவில் வைத்து குமார் தான் அப்படி அலறியிருக்கிறார்.

"அப்புறம் ரெண்டு பாம்புங்க உள்ள வந்துருச்சுன்னு அவங்க புலம்பவும் தங்கம் களத்துல இறங்கி ஒரு பாம்பைக் கையில புடிச்சு அந்தப் பக்கமா போட்டுட்டா.. இன்னொன்னைக் காணல.. ஒரு ஒல்லியான ஆள் இருந்தாரே.. அவரு ஒரே அலறல். 'அம்மா நாகாத்தம்மா.. வந்து பாலு ஊத்தறேம்மா.. நூறு ரூபாய்க்கு பதில் பத்தாயிரம் ரூபாய்க்கு ஏதாவது நல்லது செஞ்சுருதேன்மா' அப்படின்னு ஒரே புலம்பல். அப்புறம் நாங்க வந்த ஜீப்லயே இன்னொரு ட்ரிப் அவங்களையும் ஏத்திட்டு வந்து கீழே விட்டோம். அவங்க வந்த காரு பாதி வழில ரிப்பேராப் போச்சு. இன்னும் மேல தான் நிக்குது" என்றான்.

எப்படியும் அந்த கோஷ்டி நாளை இங்கு வந்துதான் ஆகவேண்டும். இது இல்லாவிட்டாலும் இன்னொரு புகாரில் மாட்டுவார்கள். என் அம்மா அடிக்கடி சொல்வது போல பகடை எப்போதும் பன்னிரெண்டு போடாது. அவ்வப்போது இரண்டும் மூன்றும் கூட பகடையில் விழும். கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது போல இயற்கையை அழிக்க நினைப்பவனுக்கு இயற்கையே பதில் சொல்லும் போலும்.

நான் இப்படி மனதில் நினைத்ததை ஷாகுலிடமும் சரவணனிடமும் சொன்னபோது, "ஆமா ஜி! இங்க பாருங்க ஸ்ரீவைகுண்டம் ஆத்துல மணல் அள்ளப் போன ஒரு ஆளு மணல் லாரி சக்கரத்திலேயே சிக்கிச் செத்துப் போயிட்டாருன்னு ஒரு நியூஸ் வந்துச்சு" என்றபடி தன் ட்ரங்குப் பெட்டியின் அருகில் போனார்.

"பெட்டில ஒரு புதையலே இருக்கும் போல சார்! எந்த நியூஸைக் கேட்டாலும் எவிடன்ஸோட குடுக்குறீங்க" என்றேன்.

"நம்ம 'ஜி' ஒரு என்சைக்ளோபீடியா பாஸ்" என்று ஷாகுல் சொல்ல,

"நம்ம பாஸ் ஒரு வன உயிரியல் என்சைக்ளோபீடியான்னா நான் ஒரு அரசியல் என்சைக்ளோபீடியா அவ்வளவுதான்.. சில டாபிக் மட்டும் என்னை அப்படி ஈர்க்கும்.. அதுல இந்த தாமிரபரணி பத்தின விஷயம் ஒண்ணு. அது பத்தி நியூஸை எல்லாம் கட் பண்ணி வெச்சிருப்பேன்.. இதைப் பாத்தீங்களா.. கால்டுவெல்னு ஒரு அறிஞர் நம்ம நதிகளெல்லாம் தடம்மாறி கிட்டே இருக்கும்னு சொல்றாரு ஜி.. இதை வாசிங்க ஜி. கொற்கைன்னு ஒரு கிராமம்.. இங்கேதான் பக்கத்துல.. ஒரு காலத்துல பாண்டிய மன்னர்களோட தலைநகரமாக, துறைமுகமா வச்சிருக்காங்க.. காலப்போக்குல அதாவது 2000 வருடகாலத்துல நதியே தடம் மாறி இப்ப ஊரு கடல்லேருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி இருக்குதாம். தாமிரபரணி ஆறு தன்னோட பாதையில் இருந்து தென்கிழக்கா விலகிப் போயிருக்குது. முன்னாடி தூத்துக்குடி ஊர்லயே தான் ஆறு கடல்ல கலந்திருக்குதாம். இப்ப அந்த கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளிதான் ஆறு ஓடுது" என்று ஒரு பழைய மேப்பைக் காட்டினார்.

"அதனாலதான் கொற்கை வழியில்னு ஒரு வரி அந்தப் பாட்டுல வருதோ…?" என்று உரக்க யோசித்தவாறு தன் மொபைலை அலசினார் ஷாகுல்.

"தாமிரபரணி கலைக்குழுன்னு ஒரு வாட்ஸ்அப் குரூப்ல நான் இருக்கேன் பாஸ். அதுல குழந்தைகள் பாட்டு, நாட்டுப்புறப் பாடல் எல்லாம் வரும். இந்தப் பாட்டைக் கேளுங்க.. அதில் இந்த ஒரு வரி எனக்குப் புரியாம இருந்துச்சு. இப்பத்தான் புரியுது" என்றபடி அந்தப் பாடலை ஒலிக்கச் செய்தார்.

"பொதிகை மலை உச்சியிலே பூங்குளத்தில் கண்விழித்து
குதியாட்டம் போடுகிற அழகம்மா உன்னைக் கும்பிட்டு வணங்குகிறோம் நதியம்மா

பொருநை நதியென்று புலவர் நாவில் நின்றவளே
காரையாறு வழியாக கால்நடையாய் நடந்தாயே
பாறைகளில் துள்ளி வந்து பாணதீர்த்தம் என்றாயே
அகத்தியர் அருவியாகி ஆனந்தத்தைத் தந்தாயே
மூலிகை நீருக்கெல்லாம் மூச்சாகி நின்றவளே
பாபநாசம் தேடிவந்து பச்சை வனம் தருபவளே
பாடுபடும் உழவரிடம் பாராட்டுப் பெறுபவளே

தமிழகத்தில் கருவாகி தமிழருக்கே உரமாகி
கொற்கை அலை வழியில் குதித்துக் குதித்துக் காப்பவளே
அகவையை அறிவதற்கே ஆராய்ச்சி நடக்குதம்மா
ஆனாலும் வணிகர் கையில் அகப்பட்டுக் கொண்டாயம்மா

பொதிகை மலை உச்சியிலே பூங்குளத்தில் கண்விழித்து குதியாட்டம் போடுகிற அழகம்மா
உன்னைக் கும்பிட்டு வணங்குகிறோம் நதியம்மா"


நான்கைந்து சிறுவர்கள் சேர்ந்து பாடிய பாட்டுப் போல. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

"நானே அந்த கொற்கைங்கிற ஊருக்குப் போயிருக்கேன். அங்க விவசாயத்துக்காக, வீடு கட்டுறதுக்காக பூமியைத் தோண்டும் போது நிறைய பொருட்கள் கிடைச்சிருக்கு. அப்புறம் அகழ்வாராய்ச்சி எல்லாம் பண்ணியிருக்காங்க. இங்க பாருங்க ஜி! என்று ஒரு பாலிதீன் கவரைத் தன் டிரங்க் பெட்டியில் இருந்து எடுத்தார் சரவணன். அதில் பொட்டலம் பொட்டலமாக ஏதோ இருந்தது. கவனமாகப் பிரித்தார். சின்னச் சின்ன மண் பானை ஓடுகள், ஒரு வடிவான வளையம், சில கல்லாலான ஆயுதங்கள், சில ஆதி எழுத்துக்கள் அடங்கிய செப்புப்பட்டயங்கள், இதெல்லாம் இருந்தது. இந்த வளையத்தைப் பாருங்க.. பிரிமனைன்னு சொல்லுவோம்ல.. பானையை வைக்கிற ஸ்டாண்ட். எவ்வளவு அழகா இருக்கு பாருங்க. இதெல்லாம் அந்தக் கால அணிகலன்கள்.. இந்த கொற்கை ஊர்ல முத்து வாணிபம் நிறைய செஞ்சிருக்காங்க. அதற்கான ஆதாரம் கிடைச்சிருக்கு, முதுமக்கள் தாழி எல்லாம் கூட கிடைச்சிருக்கு" என்றார் சரவணன்.

"எங்க ஊர்ல கூட செப்டிக்டேங் தோண்டும்போது முதுமக்கள் தாழி கிடைச்சுது.. நானே போய்ப் பாத்துருக்கேன்" என்று ஷாகுல் சொல்ல,

"சூப்பர் ஜி! அதெல்லாம் எங்கேயாவது ஒரு மியூசியத்துல மதிப்பா வச்சிருப்பாங்க.. ஆனா பக்கத்துல உள்ள ஊர்க்காரங்களுக்கு மதிப்புத் தெரியாது. போட்டோ எடுத்து வைக்கணும், ஆவணப்படுத்தணும்" என்றார் சரவணன்.

"இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே.. நீங்க ஏன் இதையெல்லாம் ஒரு தொடராவோ புக்காவோ எழுதக் கூடாது?" என்றேன் நான் சரவணனிடம். ஷாகுலுக்கு வனவிலங்குகள் மேல் ஆர்வம் இருப்பதைப்போல இவருக்கு நதிக்கரை நாகரிகத்தின் மேல் ஒரு தனி பிரியம் இருப்பதைப்போல எனக்கு தோன்றியது. இவர் ஏன் ஒரு அறைக்குள்ளேயே முடங்கி, என்றோ நடக்கப்போகும் விசாரணையை எதிர்பார்த்து உளைச்சலுடன் அமர்ந்திருக்க வேண்டும்.

"நானெல்லாம் எழுதுனா யார் ஜி படிப்பாங்க.."

"அதெல்லாம் ஆள் இருக்கு.. நீங்க இப்ப சொன்னதையே எழுதித் தாங்க.. நான் எங்க தாமிரபரணி கலைக்குழு குரூப்ல அனுப்புறேன், உங்களையும் சேர்த்து விடுறேன்.. எத்தனை பேர் பாராட்டுறாங்க பாருங்க" என்றார் ஷாகுல். அவருக்குமே சரவணன் மேல் ஒரு தனி மதிப்பு அன்று தோன்றியது போல் இருந்தது.

"அப்படியா ஜி!" என்ற சரவணனின் முகத்தில் அப்போதே எழுதுவதற்கான முனைப்பு ரேகை தோன்றத் தொடங்கியிருந்தது.

என்னிடம், "ஜி உங்க ஊருக்குக் கூட்டிட்டுப் போங்க.. கேரளால இருக்கிற வனப்பகுதி, அப்புறம் தாமிரபரணியின் கிளை நதிகள் குற்றாலத்தில் இருந்து சிற்றாறு வருது, வாசுதேவநல்லூர் பக்கமா நிட்சேப நதின்னு ஒன்னு வருது. அந்த நதிக்கரை ஓரங்கள்ல இருந்தும் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் எடுத்திருக்காங்க. மாங்குடிங்குற ஊர்ல இப்படிப் பல பொருட்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.. அங்கேயும் போகனும்" என்றார் ஆர்வமாக.

"வாங்க! அது எங்க பாட்டி ஊருக்குப் பக்கம் தான். எப்படியும் கூடிய சீக்கிரம் எனக்கு கல்யாணம் வச்சிருவாங்க. ஒரு மாசம் லீவு போட்டுட்டுப் போவேன். உங்களையும் கூட்டிட்டுப் போறேன்.. கனகராஜ் அண்ணன் தெரியும்ல உங்களுக்கு.. இந்த ரூமையே எனக்கு அவர் தானே ஏற்பாடு செஞ்சு தந்தாரு.. அவர் ஒருத்தரைப் புடிச்சீங்கன்னாப் போதும்.. உங்க படைப்பு ரொம்ப சிறப்பானதா வரும், பாருங்களேன்" என்றேன்.

"கரெக்ட் கரெக்ட்! தகவல்கள் உதவின்னு சொல்லி உங்க எல்லார் பேரையும் போட்டுர்றேன்" என்றார் சரவணன்.

"தூத்துக்குடி மாவட்டத்துக்குள்ள தாமிரபரணி நுழையிற இடத்துல இருந்து கடல்ல கலக்குற இடம் வரை நான் கூட்டிட்டுப் போறேன் வாங்க.. இங்கே உள்ள எல்லா இடங்களும் நமக்கு அத்துப்படி. குறிப்பா அந்த கழிமுகப்பகுதி. சூப்பராப் பண்ணிடலாம் பாஸ்!" என்று ஷாகுலும் ஊக்கமளிக்க,

"கண்டிப்பா! நம்பிக்கைதானே வாழ்க்கை.. நம்ம பேச்சியப்பன் நதியை அவரோட அம்மாங்குறாரு.. நாமளும் அப்படியே எடுத்துக்குவோம். சரிதானே.. நாம என்ன செய்யப்போறோம்.. நமக்குப் பிடிச்ச விஷயத்தை இன்னும் கொஞ்சம் அலசி ஆராய்ஞ்சு மத்தவங்களுக்கு ப்ரயோஜனப் படுற மாதிரி சொல்லப் போறோம். நம்ம ஆறும் காடும் நல்லா இருந்தாத் தானே மனுஷனும் நல்லா இருப்பான். என்ன சொல்றீங்க?" என்றார் சரவணன்.

நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்.. என்னைப் போல நீரை, மழையை, தாயாக நினைப்பவனை நீரும் மலையும் சேயாய் மடியில் தாங்கும். என் பிறப்பை, வேலையை, என் துணையை, என் நண்பர்களை எனக்குத் தந்தது போல, என் துயரங்களில் கரை சேர்த்து துணை நிற்பது போல, எந்நாளும் உடனிருந்து என் தாமிரபரணி அன்னை என் மீதி வாழ்வையும் வளமாக்கித் தருவாள். அந்த நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.



இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு


(நிறைந்தது)
 

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Anuradha GRSR

New member
Joined
Nov 20, 2024
Messages
10
Excellent writing...
நதியை வணங்குவது ..தாயாய் போற்றுவது...
மக்கள் பேச்சு மொழி...
வனச்சரக வேலை ...
எல்லாம் விவரித்த வகை அருமையாக இருந்தது...
பேச்சி யின் இளமைக்கால நிகழ்வுகள்...ஆறு..
.நீச்சல் ..அருவி...தோசை சாப்பிட்ட போட்டி...25 எண்ணிக்கை எல்லாம் ரொம்ப விரும்பிய அழகான எழுத்து...
தங்கம்...சத்யா...என்ற இரு பெண்களையும் அருமையாக காட்டி எழுதி இருந்தீங்க..
பாம்பு பிடிக்கிறது..
பைக் ஓட்டுவது...
பஜ்ஜி வியாபாரம்...
காதல் ஜோடிக்கு arranged marriage நிகழ்வு எல்லாம் ரொம்ப ரொம்ப அழகான காட்சி அமைப்புகள் ..வர்ணணைகள்...
உரையாடல்கள்..
பல பல பதிவுகள் மிக மிக ஆச்சார்யமாகவும்...enlightening ஆகவும் இருந்தது...
என் தந்தை பிறந்த ஊர்...
ஆனால் இப்போது தான் இரண்டு வருடமாக தாமிர பரணி நதிக்கரை திவ்ய தேசங்களை தரிசிக்க முடிந்தது...

தலைப்பு "இருபுனலும் வருபுனலும்" தான் ஈர்த்தது...
என்ன அழகு தமிழ்...

கதை முழுவதும் உங்கள் இனிய தமிழ் கொள்ளை கொண்டது

இது தான் முதன் முறையாக படித்த கதாசிரியரின் கதை...
Super..
Thanks for the wonderful

story...
Keep on your good work...
 

Akhilanda bharati

New member
Joined
Jun 30, 2024
Messages
3
Excellent writing...
நதியை வணங்குவது ..தாயாய் போற்றுவது...
மக்கள் பேச்சு மொழி...
வனச்சரக வேலை ...
எல்லாம் விவரித்த வகை அருமையாக இருந்தது...
பேச்சி யின் இளமைக்கால நிகழ்வுகள்...ஆறு..
.நீச்சல் ..அருவி...தோசை சாப்பிட்ட போட்டி...25 எண்ணிக்கை எல்லாம் ரொம்ப விரும்பிய அழகான எழுத்து...
தங்கம்...சத்யா...என்ற இரு பெண்களையும் அருமையாக காட்டி எழுதி இருந்தீங்க..
பாம்பு பிடிக்கிறது..
பைக் ஓட்டுவது...
பஜ்ஜி வியாபாரம்...
காதல் ஜோடிக்கு arranged marriage நிகழ்வு எல்லாம் ரொம்ப ரொம்ப அழகான காட்சி அமைப்புகள் ..வர்ணணைகள்...
உரையாடல்கள்..
பல பல பதிவுகள் மிக மிக ஆச்சார்யமாகவும்...enlightening ஆகவும் இருந்தது...
என் தந்தை பிறந்த ஊர்...
ஆனால் இப்போது தான் இரண்டு வருடமாக தாமிர பரணி நதிக்கரை திவ்ய தேசங்களை தரிசிக்க முடிந்தது...

தலைப்பு "இருபுனலும் வருபுனலும்" தான் ஈர்த்தது...
என்ன அழகு தமிழ்...

கதை முழுவதும் உங்கள் இனிய தமிழ் கொள்ளை கொண்டது

இது தான் முதன் முறையாக படித்த கதாசிரியரின் கதை...
Super..
Thanks for the wonderful

story...
Keep on your good work...
Thank you sooo much. Iam honoured. 2021ல் எழுதிய கதை இது.. இப்போது இப்படி ஒரு பாஸிட்டிவ் கருத்துரை வரும்னு எதிர்பார்க்கல.. ரொம்ப நன்றி மேடம் ❤️❤️❤️
 
Top Bottom