• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இருபுனலும் வருபுனலும் 13

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168
இருபுனலும் வருபுனலும் 13

என்ன நடந்தாலும் பேசாமல் இருந்து கொள்வது, பிரச்சனை ஏதும் வந்தால் வேறு பூட்டோ அல்லது புதிய மேஜையோ கூட வாங்கித் தந்து விடலாம், கண்ட திருட்டுப் பயல்களும் மிரட்டுகிறார்கள், பயப்படக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இந்த களேபரங்களுக்கு நடுவில் எனது வங்கிக்கணக்கில் சம்பளம் வரவாகியிருந்தது. முதல் சம்பளம். "எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டைக் கேக்கும்" என்று வாய்க்குள் பாடியபடியே அலுவலகத்துக்குப் போனேன். அன்றும் குமார் ஏதோ கடிந்து சொல்ல வந்தார்.

"ஆமா சார்.. தொலைச்சுட்டேன். இப்ப என்னங்கறீங்க? நீங்க வேணா ஆக்ஷன் எடுத்துக்கங்க சார்.. நெஜமாவே அதுல இருக்கிற லெட்டர் தான் வேணும்னா பூட்டை உடைக்க இதுக்குள்ள ஒத்துக்கிட்டு இருந்திருப்பீங்க. இது வேற ஏதோ.. எனக்கு எதுவும் பனிஷ்மென்ட் கொடுக்கணும்னாக் கூட குடுத்துக்கோங்க சார்" என்றேன்.

"என்ன தம்பி அப்படிச் சொல்றீங்க.. உங்க நல்லதுக்குத் தானே சொல்றேன்.. அதுவும் நீங்க டிஎஃப்ஓவுக்கு ரொம்ப வேண்டியவரு.. உங்களப் போய்த் திட்டுவேனா?" என்றார் குமார். 'அந்தர் பல்டி அடிக்கிறார்.. நம்பாதே நம்பாதே' என்றது என் மனசாட்சி. டிஎஃப்ஓவை என் ஊருக்குக் கூட்டிச் சென்று வந்ததற்கு இப்படியும் யாராவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்துத்துத் தான் இருந்தேன்.

அருணகிரி சார் அன்று வந்து காலையிலேயே அலுவலகத்தில் அமர்ந்து கொண்டார். "அந்தப் பெட்டிசனுக்கு என்குயரியை கண்டிப்பா திங்கட்கிழமை நடத்தியாகணும். சும்மா சாக்குப் போக்கு சொல்லாதீங்க.. நானும் விசாரிச்சுட்டேன். சண்முகநாதன், சமூக ஆர்வலர், தூத்துக்குடின்னு போட்டாலே தபால் போயிருமாம்.. நம்ம போஸ்ட்மேனைக் கேட்டேன், அட்ரஸ்ஸச் சொல்லிட்டார்.. இதோ அட்ரஸ் நோட் பண்ணி வாங்கியிருக்கேன், இன்னைக்கே லெட்டர் போடுங்க" என்றபடி ஒரு துண்டு காகிதத்தை குமாரிடம் நீட்டினார்.

இந்த அளவு சுறுசுறுப்பாகவும் கெடுபிடியாகவும் அருணகிரி சார் வேலை செய்வார், தன்னிடம் கடிந்து கொள்வார் என்று எதிர்பார்க்காத குமார் அவர் கொடுத்த முகவரியை வாங்கி என்னிடம் கொடுத்தார். நான் அதை அன்று அடித்து வைத்திருந்த கடிதத்தில் பெறுநர் பகுதியில் டைப் அடித்து உடனடியாக பிரிண்ட் அவுட் எடுத்து கையெழுத்துக்குக் கொண்டு சென்றேன். குமார் முறைத்துக்கொண்டே சுருக்கொப்பம் இட்டார். அதன்பின் அருணகிரி சாரும் வாசித்துப் பார்த்து கையொப்பமிட்டு விட்டு,

"பேச்சியப்பன்! உடனடியா நீங்களே போய் இந்தத் தபாலை ரிஜிஸ்டர் போஸ்ட்ல அனுப்பிட்டு வந்திருங்க. மறக்காம அக்னாலஜ்மென்ட் கார்ட் வைக்கணும்" என்றார். அவர் சொன்ன படியே செய்தேன். அன்று முழுவதும் முறைத்துக் கொண்டே திரிந்தார் குமார். ஆனால் மறுநாள் என்னிடம் வந்து, "தம்பி பெரிய அதிகாரிகளுக்குத் தான் உங்க ஊர்ல ரூம் அரேஞ்ச் பண்ணித் தருவீங்களா.. எங்களுக்கெல்லாம் பண்ண மாட்டீங்களா?" என்றார்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடந்த சாவி விஷயத்தையே மறந்து விட்டது போலிருந்தது அவர் பேச்சு. "அப்படி எல்லாம் இல்ல சார். எப்ப வரீங்கன்னு சொல்லுங்க. ஏற்பாடு பண்ணிரலாம்" என்றேன். சரி அவராக வந்து பேசுகிறாரே, யாரையும் ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும்.. முடியாது என்று சொன்னால் இன்னமும் எதிர்த்த மாதிரி இருக்குமே.. உடன் வேலை பார்க்கும் ஒருவருடன் ஏன் மனக்கசப்பு என்று நல்லவிதமாகவே பேசினேன். ஒருவேளை அந்த சாவி விஷயத்திலிருந்து என்னைக் காப்பாற்றி விட்டு விடுவாரோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளூர இருந்திருக்கலாம்.

"இந்த வாரம் வெள்ளி, சனி அங்க தங்கற மாதிரி வேணும். ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் வரைக்கும் இருப்போம். டிஎஃப்ஓ இருந்தாரே, அதே இடத்துல தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க தம்பி. மூணு பேர் போறோம்" என்று சொன்னார். அருணகிரி சார் தன் குடும்பத்துடன் அங்கு சென்றுவந்த அனுபவங்களைப் பலரிடம் சிலாகித்துச் சொல்லியிருந்தார் என்று நானும் கேள்விப்பட்டிருந்தேன். அதனால் உயரதிகாரி போன இடத்திற்குத் தானும் போகவேண்டும் என்று தோன்றியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

ராதிகா தான், "திங்கட்கிழமை என்குயரியை வச்சுக்கிட்டு டூர் போக பிளான் போடறாரு. திமிரப் பாரு" என்றாள். அதானே என்று எனக்கும் தோன்றியது. 'சரி இவர்கள் பார்க்காத என்குயரியா' என்று நினைத்துக்கொண்டு அப்பா, கண்ணன் இருவரிடமும் ஐ.பி.யில் அறை கிடைக்குமா என்று விசாரிக்கச் சொன்னேன்.

"நாள் கம்மியா இருக்கே, கேட்டுப் பாப்போம்" என்றார் அப்பா. எனக்குமே கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாரம் வேண்டுமானால் முயல்கிறேன் என்று சொல்லிவிடலாம் என்ற எண்ணம்தான். ஆனால் யாருடைய நல்ல நேரமோ, அந்த வாரம் வேறு யாரும் பதிவு செய்யவில்லை. அறை ஏற்பாடு செய்யப்பட்டதைக் குமாரிடம் கூறினேன். கண்ணன் நம்பரையும் அப்பாவின் நம்பரையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். குமாரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போதே, 'கால் வெயிட்டிங்' என்று வந்தது. சத்யா தான் அழைத்திருந்தாள். வேகமாக அவள் அழைப்பை எடுத்த நான், அத்துடன் குமாரை சுத்தமாக மறந்தே போனேன். ஏனென்றால் சத்யா கூறிய விஷயம் அப்படி.

எடுத்த எடுப்பிலேயே, "தங்கம், வைரம், செல்லம் உம்மா!!" என்றாள் சந்தோஷம் கலந்த உற்சாகத்துடன். ஒருகணம் சந்தேகம் வந்தது எனக்கு. அவளது தோழிகள் யாருக்காவது அழைப்பதற்குப் பதில் எனக்கு அழைத்து விட்டாளா, என்று.

"நான் பேச்சியப்பன் பேசுறேன்" என்றேன்.

"தெரியுது தெரியுது! உனக்குத் தானே போன் அடிச்சேன்.. அப்ப நீ தானே பேசுவ" என்றுவிட்டு அவள் சொன்ன விஷயங்களைக் கேட்டபின், எனக்குமே மகிழ்ச்சியில் ஒரு குதி குதிக்கலாம் போலிருந்தது.

சத்யா அன்று கொஞ்சம் கடைசல் பொருட்கள் பார்சலுடன் டவுன் பஸ்சுக்காக பஸ் ஸ்டாப்பில் நின்றிருக்கிறாள். என் அப்பா அந்தப் பக்கமாக ஆட்டோவில் வந்தவர் இவளைப் பார்த்துவிட்டு, "வாம்மா வண்டியில ஏறிக்கோ" என்று ஏற்றியிருக்கிறார். போகும் வழியில் 'என்ன பார்சல், எங்க போறே?' என்று அவர் கேட்டதற்கு, "லாரி ஆஃபீசுக்கு பார்சல் அனுப்பப் போறேன் மாமா" என்று கூறியிருக்கிறாள்.

"எவ்வளவு பொறுப்பான பொண்ணும்மா நீ.. எனக்கும் பொம்பளப் பிள்ளை வேணும்னு ரொம்ப ஆசை. கண்ணனுக்குப் பதில் ஒரு பொண்ணு பொறந்திருந்தா உன்னை மாதிரிதான் இருந்திருப்பா" என்று என் அப்பா கூற, சட்டென்று சத்யா,

"ஏன் மாமா நானே உங்க வீட்டுக்கு வந்துரவா?" என்று கேட்டு விட்டாளாம். சும்மா விருந்துக்கு வருவது போல கேட்கிறாள் போல என்று நினைத்துக்கொண்டு, "தாராளமா வாயேன்.. அப்பா அம்மாவையும் கூட்டிட்டு வந்து ரெண்டு நாள் தங்கிட்டுப் போ.. அவங்களுக்கும் ரெஸ்டா இருக்கும்" என்றாராம் அப்பா.

"இல்ல மாமா.. நான் நிரந்தரமா வர்றதப்பத்தி கேக்குறேன்" என்றாளாம் சத்யா. அப்பா புரியாமல் பார்க்கவும், "உங்க மகனை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. ரெண்டு மூணு தடவை பார்த்தேன்ல.. உங்கள மாதிரியே அமைதியானவரா, நல்லவராத் தெரியிறார். அம்மா கூட எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொன்னாங்க. அதான் கேட்டேன். நீங்களும் அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர் தானே.. பக்கத்துல இருந்தேன்னா அவங்களையும் கவனிச்சுக்கிடலாம்ல.. தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க மாமா" என்றாளாம்.

"சேச்சே! தப்பால்லாம் நினைக்கலம்மா.. இப்போ உள்ள பொம்பளப் புள்ளைங்க பொறுப்பா வீட்டுக்கு சம்பாதிச்சு போடுறீங்க.. அப்பா அம்மாவ கவனிக்கிறீங்க. உங்க அப்பாவை விட உனக்கு விவரம் ஜாஸ்தியா இருக்கிற மாதிரி இருக்கு. உன் வாழ்க்கைக்கு எது நல்லதுன்னு யோசிச்சுப் பாத்து இப்படி நேரடியா கேட்டதுல ரொம்ப சந்தோஷம். நானே உங்க அப்பாட்ட கேக்குறேன். அவரும் ரொம்ப கெடுபிடியான ஆள் எல்லாம் இல்ல" என்றாராம் என் அப்பா.

என்னால் நம்பவே முடியவில்லை. நிஜமாகவே இப்படியெல்லாம் நடந்ததா என்று மீண்டும் மீண்டும் சத்யாவிடம் கேட்டேன். ஆம் என்றாள்.

இனிமேல் என் காதல் நிறைவேறுவதற்கு மெனக்கெடத் தேவையில்லை. யாருக்காவது காதல் இப்படி ஒரு வழியில் வெற்றி பெற்றிருக்குமா என்பது தெரியவில்லை. குறைந்தபட்சம் என் அப்பா, 'அவங்க அம்மாட்ட கேட்டுச் சொல்றேன்' என்று கூடவா சொல்லியிருக்க மாட்டார்.. இதே கதைக்கு அப்பாவின் கோணம் என்ன என்பதைக் கேட்க வேண்டும். நானாகக் கேட்டால் நாங்கள் காதலித்தது தெரிந்துவிடும். அவராகச் சொல்லட்டும், அப்போது பார்ப்போம். முதலில் அம்மா ஒத்துக் கொள்ளட்டும் என்று கற்பனைக் கோட்டைக் கட்ட ஆரம்பித்தேன்.

அந்தக் கோட்டையின் கட்டுமானப் பணி வேகவேகமாக நடந்து கொண்டிருக்கையில், "நூறு ரூபாய்க்கு சில்லரை இருந்தா குடுங்க சார்" என்று வந்தார் ரங்கசாமி. நான் பையில் இருந்த ரூபாய் நோட்டுகளைத் துளாவி ஒரு ஐம்பது ரூபாயையும் ஐந்து பத்து ரூபாய்களையும் எடுத்துக் கொடுத்தேன். பதிலாக ஒரு நூறு ரூபாய் நோட்டைத் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரங்கசாமி வேகமாக எடுக்க, அது டக்கென்று கிழிந்து விட்டது. "அடடா கிழிஞ்சுருச்சே.. நாளைக்கு வேற நோட் மாத்தித் தரேன் சார்" என்றபடி நான் கொடுத்த பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு போனார். முருகேசனுக்கு, இட்லிப் பாண்டிக்கு, கரடிப் பாண்டிக்கு ஒவ்வொருத்தருக்காக அழைத்து சத்யாவின் சாகசத்தைப் பெருமையுடன் சொன்னேன். அந்த உற்சாகத்தின் நடுவில் எனக்கு நானே குழி வெட்ட ஒரு மண்வெட்டியைத் தூக்கியிருக்கிறேன் என்பதை நான் உணரவில்லை.

மாலையில் ஷாகுலும் சரவணனும் கூட என் உற்சாகத்தைப் பார்த்துவிட்டு, "அன்னைக்கே ட்ரீட் வைக்காம ஏமாத்திட்டீங்க பாஸ்" என்று கேட்க, அன்று என் செலவில் இருவருக்கும் இரவு உணவு வாங்கிக் கொடுத்தேன்.

நடுவே கண்ணனிடம், "எங்க ஆபிஸ் ஸ்டாஃப் மூணு பேர் நாளைக்கு வராங்கடா. உன் நம்பரைக் குடுத்துருக்கேன்" என்று போனில் கூற, "அடுத்த அஞ்சு நாளைக்கு மழை இருக்கும்னு சொல்றான் டிவில. இப்பப் போய் யாருக்கு ரூம் அரேஞ்ச் பண்றீங்க ஜி!" என்றார் சரவணன்.

"எங்க ஆபீஸ் ரவுடிகளுக்குத் தான் சார்.. அதுக அங்க ரூம்ல உக்காந்து தண்ணி அடிக்கத் தானே போகுதுங்க.. அதுக்கு மழை பெஞ்சா என்ன, பெய்யலேன்னா என்ன?" என்றேன்.

"அதானே.. வெளியே போறவங்கல்ல மழை பெய்யுறதையும் வெறிச்சிருக்குறதையும் பத்தி யோசிக்கணும்" என்றார் ஷாகுல். தென்மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என்று செய்திகளிலும் கூறியிருந்தார்கள் போலும். நான் இதையெல்லாம் அவ்வளவாகக் கவனிப்பதில்லை.

கண்ணனிடம் பேசும்போது சத்யா விஷயமாக அப்பா எதுவும் சொன்னாரா டா என்றும் கேட்டிருந்தேன். "பெரியவனுக்கு சட்டுன்னு கல்யாணம் முடிச்சிரலாம்.. தெரிஞ்சவரோட மக ஒரு பொண்ணு இருக்கு.. ஜாதகம் தரேன்னாரு.." என்று அப்பா அம்மாவிடம் சொல்லி வைத்தாராம். ஏதோ ஒரு வகையில் விஷயம் முன்னேறுவதில் எனக்கு மகிழ்ச்சி. அன்று இரவு வெகு நேரம் சத்யாவிடம் போன் பேசிக் கொண்டிருந்தேன். என்ன பேசினோம் என்றே தெரியவில்லை. நான் ஏற்கனவே கட்ட ஆரம்பித்திருந்த கற்பனைக்கோட்டையின் தொடர்ச்சியாகவே அந்தப் பேச்சும் இருந்தது.

இரவிலேயே குளிர்காற்று இலேசாக வீசத் தொடங்கியிருந்தது. மறுநாள் காலை முதல் லேசாகத் தூறல் போடத்துவங்க, சரவணன், "ஜி! என் வண்டியை எடுத்துட்டுப் போங்க ஜி! ரெயின்கோட் கூட இருக்கு" என்றார்.

"தூத்துக்குடி ஊர்ல அப்படியா மழை வந்துரப்போகுது.. விளையாடாதீங்க சார்" என்றேன்.

"குடையாவது கொண்டு போங்க ஜி" என்றார் விடாமல். முந்தையநாள் கையில் இருந்த சில்லரை அனைத்தையும் ரங்கசாமியிடம் கொடுத்துவிட்டதால் என் பையைத் துழாவி ஏதேனும் சில்லறை தென்படுகிறதா என்று பார்த்தேன்.

ஷாகுல் பண விஷயத்தில் சரவணனிடம் கவனமாக இருங்கள் என்று சொல்லியிருந்ததால் கையில் காசு வைத்திருப்பதில்லை. மிஞ்சிப்போனால் 200 அல்லது 300 ரூபாய் வைத்திருப்பேன். அவ்வளவுதான். மெஸ்சுக்கு அக்கவுண்ட் தான், அது போக பெரும்பாலான செலவுகளுக்கு ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்திக் கொள்கிறேன். முந்தையநாள் ஹோட்டலுக்குக் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை தான்.

"பேனா எதுவும் வேணுமா ஜி! என்ன தேடுறீங்க?" என்றார் சரவணன். 'இவரு வேற தொணதொணன்னு..' என்று எரிச்சலாக வந்தது. எனக்குக் காலை வேளையில் யாராவது நச்சுநச்சென்று பேசினாலே பிடிக்காது.

"சில்லறை இருக்கான்னு பார்த்தேன் சார். இருந்த நூறு ரூபாயை சில்லறை வேணும்னு ப்யூன் வாங்கிட்டாப்ல.. பதிலுக்குக் காசு தரல" என்றேன் அரைகுறை கவனத்துடன்.

"ஓகே ஜி! என்கிட்டயும் காசில்லை" என்றார். அதான் எனக்குத் தெரியுமே என்று நினைத்தபடி கிடைத்த இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு அலுவலகத்துக்குப் போனேன்.

அன்றைய முன்காலைப் பொழுது அமைதியாகவே கழிந்தது. ராதிகா மட்டும், "அவ்வளவு சொல்றேன்.. அந்த ஆளுக்கு ரூம் போட்டு குடுக்குறீங்க.. அப்புறம் என்கிட்ட என்ன பேச்சு?" என்று ஒருமுறை திட்டினாள்.

போகிறாள்.. இவளை மாதிரி எல்லாரையும் முறைத்துக்கொண்டே திரிய முடியுமா? வேலை செய்யும் இடத்தில் ஓரளவுக்கு இணக்கமாக இருப்பதில் என்ன தவறு என்று நினைத்தேன்.

அன்று டெண்டர் நோட்டீஸ் விடுவதற்கான தட்டச்சுப் பணிகள் நிறைய இருந்தன. பழைய கடித நகல் ஒன்றைக் கொடுத்து அதேபோல் தேதியை மட்டும் மாற்றித் தட்டச்சு செய்யச் சொல்லியிருந்தார்கள். ராதிகா சொன்ன அந்த குளத்தோர மரங்களை வெட்டுவதற்கான ஏல அறிவிப்பு தான் அது. நல்லவேளை ஒரு புகாருக்குப் பிறகாவது அதற்கான வேலைகள் நடக்கின்றனவே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

எட்டுப் பிரதிகள் எடுத்து நான்கைந்தைப் பத்திரிகைகளுக்கு, ஒன்றைத் தலைமை அலுவலகத்துக்கு, ஒன்றை மாவட்ட நிர்வாகத்துக்கு என்று தனித்தனியே உறையில் போட்டு முகவரி எழுதி வைத்தேன். மேஜை டிராயரைத் திறக்க முடியாததால் மேஜை மேலே வைத்துவிட்டு ராதிகாவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி வேகமாக சாப்பிட்டு வந்தேன். அப்போதே நல்ல மழை. தெருவில் நிறைய தண்ணீர் ஓட ஆரம்பித்திருந்தது.

அதுவரை எல்லாம் சரியாகத்தான் நடந்தது. அன்று குமார் வரவேயில்லை. மாலைத் தபாலுக்கு அனைத்தையும் ரிஜிஸ்டர் செய்து அனுப்ப வேண்டிய வேலையும் என்னுடையது தான். வேலையில் சேர்ந்தது முதல் நான் செய்ததிலேயே ஆகப்பெரிய வேலை இதுதான்.

எல்லாவற்றையும் முடித்து கையைத் தூக்கி சோம்பல் முறிக்கவும், ரங்கசாமி போனில் அழைக்கவும் சரியாக இருந்தது. அவர் இவ்வளவு நேரம் அலுவலகத்தில் இல்லை என்பதையே நான் உணரவில்லை. அவ்வளவு மும்மரமாக வேலை பார்த்திருந்தேன். "என்னோட தம்பி ஒருத்தன்ட்ட நூறு ரூபா குடுத்து விட்டுருக்கேன்.. வாங்கிக்கோங்க சார்... நேத்து சில்லறை குடுத்தீங்கள்ல.. குமார் சார் என்னையும் கூப்பிட்டாரு.. உங்க ஊருக்குத்தான் கிளம்பிப் போய்க்கிட்டு இருக்கோம்" என்றார் ரங்கசாமி.

"மெதுவாவே தரலாமே.. என்ன அவசரம்" என்று நான் கேட்டதற்கு, "உங்களுக்கும் செலவு இருக்கும்ல. நேத்தே குடுத்துருக்கணும்.. வாங்கிக்கோங்க சார்.." என்று கூறிவிட்டு வைத்தார்.

வாசலில் இரண்டு பேர் நின்றிருந்தனர். பார்த்தால் மழைக்கு ஒதுங்கியவர்களைப் போல இருந்தது. வெளியில் இருந்து குடையோடு ஒருவன் வந்து, "ரங்கசாமி அண்ணன் குடுத்துவிட்டாரு" என்று நூறு ரூபாயை நீட்டினான். அதை வாங்கியது தான் எனக்குத் தெரியும். மழைக்கு ஒதுங்கியிருந்த இரண்டு பேரும் வேகவேகமாக என் அருகில் வந்தனர். ஒருவர் என் வலது கையைப் பிடித்தார், அடுத்தவர் என் இடது கையில் விலங்கை மாட்டினார். எங்கிருந்தோ வந்து இரண்டு நபர்கள் 'கிளிக்' என்று
இந்தக் காட்சிகளைப் படம் பிடித்தனர்.

அன்று இரவு மழை குறித்த செய்திகளுக்கு நடுவில் ஏதாவது ஒரு பாடாவதி செய்தி சேனலில் மழை குறித்த செய்திகளுக்கு நடுவே "ஏல அறிவிப்பு குறித்த தபாலை அனுப்பாமல் இருப்பதற்காக நூறு ரூபாய் லஞ்சம் வாங்க முயன்ற தட்டச்சர் தூத்துக்குடி வனத்துறை அலுவலகத்தில் கைது. லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி நடவடிக்கை" என்று ஒரு செய்தி கீழே ஓடியிருக்கும், நீங்களும் பார்த்திருக்கலாம். ஆனால் அந்தத் தட்டச்சர் நான்தான் என்பதை சத்தியம் செய்தாலும் நம்பியிருக்க மாட்டீர்கள்.
 

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom