• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இருபுனலும் வருபுனலும் 12

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168
இருபுனலும் வருபுனலும் 12


அன்றும் மறுநாளும் கூட சாவி எங்கே போனது என்றே தெரியவில்லை. மறுநாளும் குமார் என்னைத் திட்டி ரேஞ்சரிடமும் போட்டுக் கொடுத்தார். அவரும், "பொறுப்பா வேலை பாருங்க தம்பி.. இப்பவே இப்படியா?" என்ற ரீதியில் சில அறிவுரைகளை வழங்கினார். ரங்கசாமியிடம் "பூட்டு ரிப்பேர்க்காரன் யாரையாவது தெரியுமா?" என்றேன்.

"அப்படில்லாம் செய்யக் கூடாதுங்க.. அரசாங்கப் பொருளைக் கள்ளச்சாவி போட்டுத் திறக்குறது தப்பு" என்றார், ஏதோ அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் போல. எனக்கு கடுப்பு ஏறிக்கொண்டே போனது.

மாலை அறைக்குத் திரும்பிய போது யார் முதலில் கண்ணில் பட்டாலும் புலம்பித் தள்ளி விட வேண்டும், சரவணனும் அரசுத்துறையில் எனக்கு சீனியர் தானே, அவருக்கு இது மாதிரி விஷயங்களில் விபரம் தெரிந்திருக்கும் என்று நினைத்துப் போனேன். மனிதர் தீவிரமாக ரமணா படம் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் கண்ணீர் வேறு. அதைத் துண்டால் துடைத்துக் கொண்டவர், "பாருங்க ஜி! செஞ்சா இப்படிச் செய்யணும்.. ஊழல் பேர்வழிகளை அப்படியே பிடிச்சுக் கொன்னு போடணும்.. இந்த ஒரு படத்துல நடிச்சே விஜயகாந்த் அரசியல்ல இறங்குறதுக்கான எல்லா தகுதியும் தனக்கு இருக்குன்னு நிரூபிச்சுட்டார் ஜி!" என்றார்.

"நீங்க விஜயகாந்த் ஃபேனா?" என்று கேட்டால், "இல்ல ஜி! நல்ல படம் யார் நடிச்சாலும் பார்ப்பேன்.. இங்க பாருங்க" என்று தன் டிரங்க் பெட்டியைத் திறந்து ஒரு பழைய நக்கீரன் இதழை எடுத்துக் காட்டினார்.

"ரமணா படம் ரிலீஸானப்பவே நான் மாவலி பதில்கள் பகுதியில கேட்டுருக்கேன் பாருங்க.." என்று அந்தப் பக்கத்தை புரட்டினார்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற பெயரில் கேள்வி இருந்தது. "விஜயகாந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் போலிருக்கிறதே?" என்று கேள்வி இருக்க,

"யார் யாரோ வரும்போது அவர் வந்தால் என்ன?" என்று பதில் கேள்வி இருந்தது.

"உங்களுக்கு புதுக்கோட்டையா சார்?" என்று நான் கேட்க, "பக்கத்துல ஒரு ஊர்.. இங்கதான் தூத்துக்குடி அவுட்டர். அது பேரும் புதுக்கோட்டை தான். ஏர்போர்ட் பக்கம்" என்றார் சரவணன். "பொருத்தமா தனுஷ் பட பேர் மாதிரி அமைஞ்சிருச்சே சார்" என்றவன், என் விஷயத்தைச் சொன்னேன்.


"ஜி! முதல்ல நல்லா ஞாபகபடுத்திப் பாருங்க, சாவியை வேற எங்கேயும் வச்சீங்களான்னு.. உங்க சைட் எதுவும் தப்பில்லைன்னு தெரிஞ்சா நாம எதுத்து நிக்கணும் ஜி!.. எங்க டிபார்ட்மெண்ட்லயும் இப்படி நிறைய பேர் டுபாக்கூரா இருந்தது தான் எனக்குப் பிரச்சனையே. நான் மட்டும் சின்சியரா இருக்க, சுத்தி உள்ள மத்தவன் பூராவும் வேலை எதுவுமே செய்யாம இருப்பான், செய்ற நமக்குக் கெட்ட பேரு.." என்றார்.

"ஆமா சார்.. கரெக்ட் சார்!" என்றேன்.

"நமக்கு பிரஸ் கான்டாக்ட்ஸ் ஜாஸ்தி ஜி! எங்க ஆபிஸ்ல நடக்குற அநியாயத்தைக் கொஞ்சம் ரிப்போர்ட்டர்ஸுக்குத் தகவல் குடுத்தேன், செய்தியா வந்து ண்அது பெரிய பரபரப்பைக் கிளப்புச்சு.. எங்க மேலதிகாரிங்க கடுப்பாகிட்டாங்க. அதான் இப்ப சஸ்பெண்ட் ஆகி உக்காந்து இருக்கேன். கவலைப்படாதீங்க ஜி! நான் ஃபீனிக்ஸ் பறவை மாதிரி திரும்பியும் மொளச்சு வருவேன், எல்லாரையும் பழிவாங்குவேன். இப்ப உங்க விஷயத்துக்கு வருவோம்" என்றார். இவ்வளவு உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுகிறாரே, இவர் சொல்வது போல் எதிர்த்து நிற்கலாமா என்று ஒரு நிமிடம் யோசிக்கும் முன் இரண்டு நாள் முன்பு அவர் அன்பே சிவம் படம் பார்த்துவிட்டுப் பேசியது ஞாபகம் வந்தது.

"நமக்குக் கெட்டது செய்றவங்களுக்கும் நல்லது செய்யணும்னு நினைக்குற நல்ல மனசு தான் ஜி கடவுள். அதனால என்னை இப்படி சஸ்பெண்ட் ஆகி உட்கார வச்சிருக்கிறவங்களை நான் மன்னிக்கப் போறேன் ஜி!" என்றிருந்தார்.

"எல்லா எடத்துலேயும் நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க.. ஆனாலும் உங்க டிபார்ட்மென்ட் ரொம்பவே மோசம் தான். என்கிட்ட கூட ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி பிரச்சனை பண்ணாங்க பாஸ்.. அதுக்காகத்தான் நான் வீடு கூட மாறினேன்.. ஃபேமிலிய ஊருக்கு அனுப்பிட்டு இப்படி பேச்சுலர் ரூம்ல இருக்கேன்" என்றார் ஷாகுல். அவர் திருமணமானவர் என்பது எனக்குத் தெரியும். இரண்டு குழந்தைகளும் மனைவியும் சொந்த ஊரில் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் இங்கு குடியிருந்து விட்டுத் தான் போனார்கள் என்பது புதுத் தகவல்.

"என்னாச்சு சார்?" என்று நான் கேட்க,

"இப்ப ஒரே ஒரு சின்ன மீன் தொட்டி தானே வச்சிருக்கேன்.. அப்ப நாலஞ்சு பெரிய தொட்டிங்க வச்சிருப்பேன். கடல் மீன் தொட்டியும் உண்டு. குழந்தை மாதிரி பாத்துக்குவேன். புதுசு புதுசா ட்ரை பண்றதுல எனக்கு ஒரு இன்ட்ரஸ்ட். கடல் மீன் தொட்டில எப்பயுமே அழகுக்காக சில உயிரில்லாத பவளப்பாறைகள் வச்சிருப்போம்.. கடற்கரையில் மீனவர்கள் வலையில் மாட்டுன சின்ன சின்னக் கல்லு, கரையில தானாவே ஒதுங்குனதுன்னு உயிரில்லாத பாறைகளைத் தான் எடுத்துட்டு வந்து வச்சிருப்போம். நம்ம தொட்டில வாட்டர் கண்டிஷன் நல்லா இருந்தா உயிரில்லாதது அப்படின்னு நாம நெனச்சு எடுத்துட்டு வர்றதுல இருந்து கூட உயிருள்ள பாறைகள் டெவலப் ஆகும். ஆக்சுவலா இப்படித் தன்னாலேயே பவளப் பாறைகள் வளர்றது எங்களைப் பொறுத்தவரை பெருமைக்குரிய விஷயம்.. பெரிய சாதனையா நினைப்போம். ஆஸ்திரேலியா மாதிரி வெளிநாடுகள்ல எல்லாம் பவளப்பாறை வேட்டையாடப்பட்ட இடங்களில் என்னை மாதிரி ஹாபியிஸ்ட்ஸ் (hobbyists) போய் இப்படிப் பாறைகளை நட்டு வச்சு பரவலா வளர வைப்பாங்க.. உலகம் பூராவும் மரைன் லவ்வர்ஸ் நிறைய பேர் ஒரு க்ரூப்பே இருக்கோம். அவங்க எல்லாம் என் கிட்ட மீன் வளர்ப்பு பத்தி ஐடியா கேப்பாங்க.. அந்த ஸ்டேஜ்ல இருக்கும்போது திடீர்னு ஃபாரஸ்ட் ல இருந்து ஒருத்தர் வந்தாரு. 'நீங்க பவளப்பாறைகள் வளக்குறீங்களாமே.. அது இல்லீகல்.. நான் நினைச்சா உங்கள அரெஸ்ட் பண்ண முடியும்' அப்படின்னு வீட்டுக்குள்ள வந்து எல்லாத் தொட்டிகளையும் போட்டோ எடுத்துட்டு நாளைக்கு வந்து என்னை ஆபீஸ்ல பாருங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அரெஸ்ட் அது இதுங்கவும் ஒய்ஃப் பயந்துட்டாங்க.. அவங்க அப்ப ரெண்டாவது குழந்தையை மாசமா இருந்தாங்க.. அன்னிக்கே அவங்களை ராத்திரியோட ராத்திரியா ஊருக்கு அனுப்பிட்டேன். திருடன் மாதிரி ஒரு ஃபீலிங்ல தள்ளிட்டாங்க" என்றார். பழைய நினைவுகள் வலி அவர் முகத்தில் தெரிந்தது.

"மீன்வளர்ப்புல்லாம் எங்க டிபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்டதா சார்?" என்றேன்.

"நியாயப்படி பாத்தா மீன்வளத் துறைக்குக் கீழே தான் வரணும். ஆனா 1972 வைல்ட் லைஃப் ப்ரொடக்ஷன் ஆக்ட்னு ஒரு சட்டம் வந்திருக்கு. அந்த சட்டத்துல அனுமதி இல்லாம பவளப்பாறைகள் வச்சிருக்கிறது தப்புன்னு இருக்கு. இல்லீகலா நிறைய பாறைகளை எடுத்து விக்கிறாங்கள்ல.. அவங்களால கடல் வாழ் உயிரினங்களுக்குக் கெடுதல்.. அவங்களைக் கட்டுப்படுத்த வந்த சட்டம் அது. அதை வச்சு என்னை மாதிரி ஆர்வலர்களை டார்கட் பண்ணினா என்ன நியாயம்?"

"அப்புறம் என்ன ஆச்சு சார்" என்று நான் அதிர்ச்சியுடன் கேட்டேன்.

"இது தப்புன்னு சொன்னதையே என்னால ஏத்துக்க முடியல. நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பிஷெரீஸ் காலேஜுக்கு போய் அங்க உள்ள மியூசியம், ரிசர்ச் சென்டர் எல்லாம் சுத்திப் பார்த்திருக்கோம். அங்க உள்ள ப்ரஃபஸர்ஸ் கூட எல்லாம் காண்டாக்ட் இருக்கு. அதுல ஒருத்தரை காண்டக்ட் பண்ணி, வனத்துறையில ஸ்டேட் லெவல் மேலதிகாரிகளைப் பிடிச்சு, நானே அவங்களுக்கு என்னோட தொட்டிகளோட படங்களை அனுப்பினேன்.. இது ஹாபி தான் இல்லீகலா எதுவும் பண்ணல ன்னு அவங்களை நம்ப வச்சேன். அப்புறம் பேர்ட் வாட்சிங், புலிகள் கணக்கெடுப்பு, ஆமைகளோட முட்டைகளை சேகரிச்சு பொரிக்க வைக்கிறது, இப்படி நான் கலந்துக்கிட்ட வனவிலங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதாரத்தோடு அத்தனை பேருக்கும் சொன்னேன். அன்னைக்கு ராத்திரி மட்டும் எத்தனை பேருக்கு போன் பண்ணினேன், யார் யாரைப் பாத்தேன்னு கணக்கே இல்ல.. மறுநாள் அந்த ஆள் கூப்பிட்டாரேன்னு உங்க ஆபிசுக்குப் போனா அந்த ஆளு, "ஏங்க.. இதெல்லாம் சின்ன விஷயம்.. நமக்குள்ளே முடிச்சிருக்க வேண்டியது.. இதுக்கு ஏன் மேலதிகாரிக வரைக்கும் போனீங்க.. இப்ப பாருங்க விஷயம் பெருசாயிடுச்சு'ங்குறார்.. அது எப்படி மேலதிகாரிங்கட்ட போனதுனால விஷயம் எப்படி பெருசாகும்னு புரியலை.. நானும் அந்த ஒரு ராத்திரில கலெக்ட் பண்ண டீடைல்ஸையெல்லாம் அவர் கிட்ட சொல்லி என் மேல தப்பில்லைன்னு நிரூபிக்கப் பாக்குறேன், 'உங்க மேல கம்ப்ளைன்ட் வந்தது. அதை விசாரிக்கத் தான் வந்தேன். அது என் கடமை தான்'னு சொல்றாரு. ஆனால் பொய் சொல்றாருன்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சுது.. யாரு கம்ப்ளைன்ட் பண்ணாங்க, அந்த லெட்டர் காட்டுங்கன்னு சொன்னதுக்கு ஏதோ மழுப்பிட்டாரு.. அப்புறம் அவரு சைடு ஸ்ட்ராங்கா இல்லன்னு தெரிஞ்சிருச்சு போல.. 'தெரியாம வளத்துட்டேன், இனிமே வளக்க மாட்டேன்'னு எழுதி வாங்கிட்டு அனுப்பினார். அவரு லஞ்சத்தை எதிர்பார்த்து செஞ்சிருக்காரு.. அதைக் குடுக்காமத் தப்பிச்சுட்டேன்னு எனக்குப் பெருமைதான். ஆனா அத்தோட கடல் மீன் வளர்க்குற ஆசையே போச்சு" என்றார் ஷாகுல்.

"இப்படி எத்தனை பேரை ஏமாத்திக் காசு பாத்தானுகளோ.."என்றேன்.

"ஆமா.. ஆனா அது தெரியாம அன்னைக்கு நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அரெஸ்ட் பண்ணுவேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாரு.. வக்கீலைப் பார்த்து முன் ஜாமீனுக்குக் கூட ரெடி பண்ணி பண்ற அளவு யோசிச்சேன். என் ஒய்ஃப் ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங் டைப் தான். ஆனா மிடில் கிளாஸ், மாச சம்பளக்காரனுக்கு இதெல்லாம் தேவையான்னு ஒரு கேள்வி கேட்டா.. அதிலேயே எனக்குக் கடல் மீன் வளக்குற ஆசையே போயிருச்சு" என்றார்.

ஷாகுலுடன் இத்தனை நாள் பழகியதில் உயிரினங்கள் மேல் அவர் கொண்ட பிரியம் எனக்கு நன்றாகப் புரிந்திருந்தது. ஒரு ஆளின் பேராசை எப்படி இன்னொரு மனிதனின் கனவை சிதைத்து விட்டது என்பதை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருந்தது. "என் மூத்த பையனும் ஆர்வமா இந்த விஷயத்துல என் கூடவே நிப்பான். அவனப் பெருசா வளத்து ஃபிஷரீஸ்ல பெரிய கோர்ஸ் படிக்க வைக்கணும்னு கனவு கண்டதெல்லாம் கனவாவே போயிடுச்சு" என்றார்.

"யார் சார் அது? எங்க டிபார்ட்மெண்ட்ல இருந்து வந்தது?" என்று இப்போது இருக்கும் ரேஞ்சர் பெயரைச் சொல்லி அவரா என்று கேட்டேன்.

"இல்ல.. இன்னொரு ஆளு. அவர் இப்ப டிரான்ஸ்ஃபர் ஆகிப் போயிட்டாரு.. டிரான்ஸ்பர் ஆயிடும்னு தெரிஞ்சு தான் போக முன்னாடி என்னை மாதிரி நாலு பேர்கிட்ட விளையாடிருக்காரு.. ஆனா காசு கொடுக்காமல் தப்பிச்சது நான் ஒருத்தன் தான்" என்றார். "ஆனா குமார்னு ஒரு ஆளச் சொல்றியே.. அவர்தான் இதுக்கெல்லாம் மூளை. யார் யார்கிட்ட போய் காசு புடுங்குறதுன்னு பிளான் போட்டுக் குடுக்கிறது எல்லாமே அவர் தான்"

"சும்மாவே தான் இருக்கிறான், அதுக்கு அரசாங்கம் கொடுக்குற சம்பளமே தண்டம் தான். இதுல இப்படி வேற சம்பாதிச்சு என்ன பண்ணப் போறாங்க.. ஒருவேளை பணத்தை அடுக்கி வச்சு அது மேல படுத்துக்குவாங்களோ?" என்றேன்.

"எல்லாம் பேராசைதான்.. என்ன செய்ய? பாப்போம்.. காலம் அவங்களுக்கு என்ன வச்சிருக்குன்னு.." என்று பெருமூச்சுடன் சொன்னார். இந்த மனிதர்களிடம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. ஆனால் என்னுடைய மிகச்சிறிய கவனக்குறைவு என்னைப் பேராபத்தில் தள்ள போகிறது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.

சாவி விஷயம் என் தலையைக் குழப்பியவாறு இருக்க, மறுநாள் ரங்கசாமி வெளியே போகும் தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தேன். இன்று ராதிகாவிடம் கேட்டுவிட வேண்டியதுதான். அவளுக்கு நிச்சயம் ஏதாவது தெரிந்திருக்கும் அல்லது ஒரு ஊகமாவது இருக்கும். சொல்லவில்லை என்றால் காலில் கூட விழுந்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அன்று முதல் என்னைக் கடிந்து கொண்டே தான் இருந்தாள். என்னை நெருங்கி விடாதே என்பது போல்தான் இருந்தது அவளது செயல். இருந்தாலும் வெட்கம் மானத்தை விட்டுவிட்டு ரங்கசாமி டீ சாப்பிடப் போன நேரத்தில் ராதிகாவிடம், "மேடம் எனக்கு இந்த சாவி விஷயம் ஒண்ணுமே புரியல.. நல்லா நினைவிருக்கு. இங்கதான் வச்சுட்டுப் போனேன்.. நீங்களும் அடுத்த வாரம் கிடைக்கும்ங்குறீங்க.. ப்ளீஸ் சொல்லுங்க.. இல்லைன்னா தலையே வெடிச்சிரும்" என்றேன். என்னைப் பார்க்க நிச்சயம் அவளுக்குப் பாவமாக இருந்திருக்கவேண்டும்.

"இங்க பாருங்க.. விஷயம் நீங்க சம்பந்தப்பட்டதே இல்லை.. ஆனா உங்கள ஃபோக்கஸ் பண்ற மாதிரி சில பேச்சுக்களைக் கிளப்பி விட்டுட்டு அவங்க எஸ்கேப் ஆகப் பாக்குறாங்க அதான் மேட்டர்" என்று தெளிவாகக் குழப்பினாள் ராதிகா.

பின் அவளே, "சண்முகநாதன்னு ஒருத்தர்.. சமூக ஆர்வலர்.. நிறைய சோஷியல் சர்வீஸ் பண்றவர்.. தப்பு நடந்துச்சுன்னா பெட்டிஷன், கம்ப்ளைன்ட்னு அனுப்பிட்டே இருப்பார். அவர் செய்றதெல்லாம் ஆதாரத்தோட தெளிவா இருக்கும். இப்ப அவர் ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிருக்காரு. அந்தப் புகாருக்கு அடுத்த வாரத்துக்குள்ள என்குயரி வைக்கச் சொல்லி மேலிடத்து உத்தரவு. அந்த என்கொயரியைத் தள்ளிவைக்கத் தான் இந்த நாடகம்.." என்றாள்.

"என்னைக் கூட ஒரு லெட்டர் டைப் பண்ணச் சொன்னாங்களே.. அதுவா?"

"ஆமா"

"ஆனா பெறுநர் அட்ரஸை அப்புறம் சொல்றேன்னு சொன்னாரே குமார் சார்?" என்றேன்.

"அதே தான். சண்முகநாதன் அட்ரஸ் இவங்களுக்கு நல்லாத் தெரியும்.. அவரோட நடவடிக்கை குடும்பத்திலுள்ளவர்களை பத்தின விஷயம்னு ஜாதகமே தெரியும்.. நம்ம குமாரே அவர் வீட்டுக்கு பத்து தடவையாவது போயிருப்பாரு.. அவரும் இன்னைக்கு நேத்தா பெட்டிஷன் போடுறாரு.. எந்த பெட்டிஷன் வந்தாலும் முதல்ல அதை மறைக்கப் பார்ப்பாங்க. சண்முகநாதன் மாதிரி விவரமான ஆளுன்னா நம்ம ஆஃபிசுக்கு மட்டும் புகார் அனுப்பாம மேலே இருந்து கீழே வரை கொறஞ்சது அஞ்சு இடத்துக்காவது அனுப்பி இருப்பாங்க" என்றாள்.

"புரியலையே.." என்றேன். "தப்பு நடக்கிறது நம்ம ஆபீஸ்ல.. இங்கேயே கம்ப்ளைன்ட் அனுப்புனா இவங்க தபால் வந்தவுடனேயே அமுக்கிருப்பாங்க. அப்படி ஒரு லெட்டரே வரல அப்படின்னு சொல்லுவாங்க. அதனாலதான் உன்னை ரிஜிஸ்டர் விஷயத்தில் கவனமா இருக்கச் சொன்னேன். இப்படி இவங்க பண்றதைத் தெரிஞ்சிக்கிட்டு தான் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாநில வனத்துறை இயக்குனர், மாவட்ட கலெக்டர் இப்படி பல பேருக்கு ஒரே புகாரைக் காப்பி போட்டு அனுப்பிருவாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல கூட ஒரு கம்ப்ளைன்ட் குடுத்து வச்சிருப்பார். இந்த விஷயம் ரொம்ப சென்சிடிவ். பேப்பர், புலனாய்வுப் பத்திரிகைகள்ள கூட வந்துச்சு.."

"என்ன விஷயம் இது?" எனக்கும் ஆர்வம் கூடிக்கொண்டே போனது.

"சமூக வனக்காடுகள்னு கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றாள் ராதிகா.

"கேள்விப்பட்டிருக்கேன். ஆனா என்னன்னு தெரியாது"

"குளத்தங்கரைகள்ல முள்ளு மரம் நிறைய நட்டுருப்பாங்க பாத்திருக்கியா?"

"ஆமா.. அதுவா மொழச்சதுன்னு தான் நினைச்சேன்.. விறகுக்காக நட்டு வச்சது.. ஒடமுள்ளுன்னு சொல்வாங்க.. அதை வெட்டுறதுக்கு கவர்மெண்ட் ஏலம் விடும். இத்தனை மாசத்துக்குக் குத்தகை அப்படின்னு.. சிலர் குத்தகை முடிஞ்சு பல மாசம் ஆன பிறகும் வெட்டிக்கிட்டே இருப்பாங்க.. திரும்பி டெண்டர் விடாம இருக்க நம்ம ஆபீஸ்காரங்களை கவனிச்சிக்குவாங்க. அவங்களுக்கு லாபம், கவர்மெண்ட்க்குக் கட்ட வேண்டிய பணம் நஷ்டம். போன மார்ச்சிலேயே குத்தகை முடிஞ்சிருச்சு.. பத்து மாசம் ஆச்சு, இன்னும் ரினியூ பண்ணல" என்றாள்.

"அதெல்லாம் நாம தான் பண்ணனுமா?" என்றேன் நான்.

"அதுக்கான தேதி வந்தவுடனே குமார் தான் எடுத்துச் சொல்லணும்.. ரேஞ்சர் ஓக்கே பண்ண உடனே, நீ டைப் அடிச்சு பத்திரிக்கைகள், நோட்டீஸ் போர்டு இதுல போடணும்.. சமூக வனக்காடுகள்ங்கிறது ஒன்‌ ஆஃப் த பிரச்சனை தான்.. அப்படி பல பிரச்சனை இருக்கு. சண்முகநாதன் பழைய டெண்டர் நோட்டிஸ், குத்தகைதாரர் இப்ப மரங்களை வெட்டிக்கிட்டு இருக்குற போட்டோ, எடுத்துட்டுப் போற லாரி நம்பர், அதை எடைபோட்ட எடை நிலைய ரசீது, டோல்கேட் தாண்டிப் போன ரசீது வரைக்கும் பக்காவா சப்மிட் பண்ணித்தான் புகார் குடுத்துருக்கார்.. ஒழுங்கா விசாரணை நடந்தா சில பேர் அரெஸ்ட் ஆவாங்க.. பலர் டிரான்ஸ்ஃபர் ஆவாங்க" என்றாள்.

அவள் சொல்லச்சொல்ல பிரமித்துப் போய் நின்றிருந்தேன். ரொம்பவும் யோசித்து, "இதுக்கும் என் சாவி காணாமப் போனதுக்கும் என்ன சம்பந்தம்? சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நிக்கும்கிற மாதிரி..?" என்று அறிவாளித்தனமாக ஒரு கேள்வியைக் கேட்டேன்.

"ரொம்ப விவரமாக் கேட்டதா நினைப்பா?" என்ற ராதிகா, "மேலிடத்துல இருந்து என்குயரி‌ வர்றதுக்கு ரெண்டு மூணு மாசம் ஆகும்.. அதுக்குள்ள நம்ம டிபார்ட்மெண்ட் லெவல் என்குயரிய முடிச்சு ரிப்போர்ட் அனுப்பச் சொல்லி உத்தரவு. அடுத்த திங்கட்கிழமை என்குயரி வச்சே ஆகணும், சண்முகநாதனை வரச் சொல்லுங்கன்னு சொல்லிட்டார் அருணகிரி சார். இப்ப அவரோட அட்ரஸ் கிடைக்கல, அவர் அனுப்பின புகாரோட காப்பியக் காணும் அப்படின்னு சொல்லித் தள்ளிப் போடலாம்ல.."

"அதுக்குத் தான் இவ்வளவு தலையை சுற்றி மூக்கை தொடணுமா.. அந்தக் கம்ப்ளைன்ட் லட்டர்‌ என் டிராயர்ல தான் இருக்கா என்ன?" என்றேன்.

"அதெல்லாம் தெரியாது.. எப்படியாவது அங்க தான் இருக்குனு ஒரு கதையை உருவாக்குவாங்க"

"இப்ப தப்பிச்சாலும் அடுத்த பெரிய என்குயரில மாட்டுவாங்கள்ல?" மாட்டிக்கொள்ள வேண்டுமே என்ற ஆதங்கத்தில் நான் கேட்க,

"அதுக்கு இன்னும் டைம் இருக்குல்ல..
அதுக்குள்ள பெட்டிஷனரைக் கலைக்கப் பாப்பாங்க.." என்றாள்.

அவள் கூறும் வாசகங்களில் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்வதற்குள் எனக்குப் போதும் போதும் என்றானது. "பெட்டிஷனரை எப்படிக் கலைக்கிறது?" என்றேன்.

"உஷ் அப்பா! உனக்கு ஆனா ஆவன்னால இருந்து எல்லாம் சொல்லித்தர முடியாது.. இவங்க செய்றதை எல்லாம் சொன்னாலே உனக்கு ஒரு ட்ரெய்னிங் அட்டன்ட் பண்ணின ஃபீலிங் இருக்கும்.. அவ்வளவு சொல்லலாம்" என்றபடி வாசலைப் பார்த்தாள். ரங்கசாமி டீ குடித்துவிட்டு வரும் நேரம் வந்து விட்டது என்று எனக்குப் புரிந்தது. "ப்ளீஸ் ப்ளீஸ்! இத மட்டும் சொல்லுங்க" என்றேன்.

"முதல்ல, புகார் கொடுத்த ஆள் கிட்ட போய் கெஞ்சிப் பாப்பாங்க.. அப்புறம் அவரோட சொந்தக்காரங்க, சாதிச் சங்க தலைவர்கள் யாரையாவது விட்டு பேசிப் பார்ப்பாங்க.. இல்ல இவ்வளவு பணம் குடுக்கிறேன்.. புகாரை வாபஸ் வாங்குங்கன்னு சொல்லுவாங்க.. ஒன்னும் நடக்கலன்னா அந்த மரம் வெட்ட காண்ட்ராக்ட் எடுத்துருக்கானே.. அவனுக்கு 50 லாரி ஓடுது, பெரிய அரசியல் சப்போர்ட் உள்ளவன். அவனை வெச்சு மிரட்டுவாங்க.. எப்படியாவது ஓகே பண்ணிருவாங்க. ஒண்ணுமே முடியலையா குடும்பத்தையே கூட்டிகிட்டு போய் பெட்டிஷனர் கால்ல கூட விழுந்துடுவாங்க.. குமார்லாம் இப்படி பல பேரு கால்ல விழுந்துருக்காரு" என்றாள். எனக்குக் குமாரின் பெரிய மீசை ஞாபகம் வந்தது. காலில் விழுகையில் அதில் ஒருவேளை மண் ஒட்டியிருக்குமோ என்று நினைத்துக்கொண்டேன்.

"சண்முகநாதனும் லேசுப்பட்டவர் இல்லை.. இந்த தடவை தரமான சம்பவங்கள் பல இருக்கு" என்றாள் ராதிகா, டேபிளில் தாளம் போட்டபடியே. அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியை நான் அதுவரை பார்த்ததில்லை. ரங்கசாமியின் சைக்கிள் மணியோசை கேட்க, என்னை சீட்டுக்குப் போ என்பது போல் கையை அசைத்தாள் ராதிகா.

"ஒண்ணே ஒண்ணுக்கு மட்டும் பதில் சொல்லுங்களேன்.. நம்ம அருணகிரி சார் நல்லவர் தானே.." என்றேன். அவர் நல்லவராகத் தான் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் வனப்பேச்சி, சொரிமுத்தையனார், திருச்செந்தூர் முருகன் இன்னும் பலரிடம் வேண்டியபடியே.

ரங்கசாமி வாசலில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ராதிகா, "இந்த பழைய விஜயகாந்த் படம், சத்யராஜ் படம் அதெல்லாம் பாத்திருக்கீங்களா.. கீழே உள்ள மினிஸ்டர், எம்எல்ஏ, கட்சிக்காரன் எல்லாம் கெட்டவனா இருப்பான்.. ஆனால் சீஃப் மினிஸ்டர், பிரைம் மினிஸ்டர் மட்டும் நல்லவங்களா இருப்பாங்களே.. தெரியுமா?" என்றாள். "ஆமா" என்றேன். எனக்கு சாருஹாசன் கேரக்டர் நினைவுக்கு வந்தது. "அதேமாதிரி தான் நம்ம அருணகிரி சாரும்.. நல்லவரு தான். இங்கே நடக்கிறது எல்லாம் தெரியும்.. ரொம்பப் புலம்புவார், ஆனால் எதிர்த்து எதுவும் செய்ய ரொம்பவே தயங்குவார்" என்றாள். அப்பாடா! அவர் விஷயத்திலாவது என் கணிப்பு சரியாகிவிட்டதே என்று மகிழ்ந்தேன்.
 

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom