• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இருபுனலும் வருபுனலும் 11

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168
இருபுனலும் வருபுனலும் 11


'சத்யா யாருடா?' என்று கேட்டது வேறு யாருமில்லை என் தம்பி கண்ணன் தான்.

"வாடா காதல் இளவரசா! உன் அண்ணனும் காதல்ல விழுந்துட்டான தெரியுமா?" என்று முருகேசன் சொல்ல,

"அப்படியா? எனக்கு இப்பதான் நிம்மதி. எங்க இவன் மட்டும் அம்மாப்பா பாக்குற பொண்ணைக் கட்டிக்கிட்டு எனக்கு கெட்ட பேரு வாங்கிக் குடுத்துருவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். யாருடா அது? உங்க ஆபீஸ்ல வேலை பாக்குற பொண்ணா?" என்று என்னைக் கேட்டான் கண்ணன்.

"இல்லைடா.. இங்கதான் அம்பாசமுத்திரம்" என்று நான் வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னேன். சொந்தத் தம்பி, நான் பார்த்து வளர்ந்த பையனிடம் வெட்கப்பட்டுக் கொண்டு நிற்பது எனக்கே ஒரு மாதிரி இருந்தது.

"ஓஹோ! இங்க இருக்கும் போதே ஆரம்பிச்சாச்சா.."

"இல்லேடா.. ஒண்ணு ரெண்டு தடவை பாத்திருக்கேன்.. அவ்வளவு தான்"

"அப்ப நாளைக்கு அம்பைக்குப் போறோம்.. அண்ணியப் பாக்குறோம்" என்றான் கண்ணன் உற்சாகமாக.

"டேய் இன்னும் அப்பா அம்மாக்கு தெரியாதுடா" என்று நான் பதறி,

*நானும் தங்கத்தைக் கூட்டிகிட்டு நாளைக்கு செக்கப்புக்கு போகணும்டா. அப்போ எங்களுக்கு மட்டும் காட்டு என்ன" என்று சொல்லிவிட்டு என் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்து விட்டுப் போனான் கண்ணன்.

"போச்சு சீக்கிரம் வீட்டுக்கு விஷயம் தெரியப் போகுது... என்ன புயல் வீச போகுதோ.. நீ வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம இப்படிக் கண்ணனைக் கிளப்பி விட்டுட்டியே?" என்று நான் முருகேசனிடம் கடிந்து கொள்ள,

"எப்படியும் தெரியத் தானே செய்யணும்?" என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்.


நாங்கள் எல்லாரும் ஐபி வராண்டாவிலேயே படுத்துக்கொண்டோம். அரைவட்ட வடிவில் மார்பிள் தளம் போட்ட அருமையான இடம் அது. எல்லாரும் அலைந்த அசதியில் தூங்கி விட, நான் மட்டும் ஏதேதோ யோசித்தபடி தாமதமாகவே உறங்கினேன். மறுநாள் அருணகிரி சார் குடும்பம் கிளம்பியது. இரண்டு நாட்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. "எங்களுக்குப் போகவே மனசில்லை. இனிமே அடிக்கடி வருவோம்" என்று கூறிவிட்டுச் சென்றனர்.

"ஒரு நாள் லீவு போட்டுட்டுக் குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வாங்க" என்று கூறிவிட்டுச் சென்றார். அன்று திங்கட்கிழமை. ஏற்கனவே நான் லீவு சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தேன்.

காலையிலேயே கண்ணன் என்னைக் கிளம்பச் சொல்லி ஜாடை காட்டினான். "நெஜமாவாடா?" என்று நான் கேட்க, "சத்தியமா டா இன்னைக்குப் பார்த்தே ஆகணும்" என்று கூறி கண் சிமிட்டிச் சிரித்தான்.

அவனே அம்மாவிடம், "அம்மா அண்ணனையும் வரச் சொல்லிருக்கேன். கோயிலுக்குப் போகணும்.. முடிஞ்சா சினிமாவுக்குப் போயிட்டு வாரோம்" என்றான். கோயில் என்றவுடன் அம்மா சம்மதித்து விட்டாள். "சினிமா எல்லாம் எதுக்குடா... சரி பார்த்துப் போய்ட்டு வாங்க" என்றாள்.

நான் சத்யாவுக்கு மெசேஜ் அனுப்பினேன், 'அம்பைக்கு வருகிறோம் எங்கே இருப்பாய்' என்று. இப்போதெல்லாம் இருவரும் குறுஞ்செய்திகளில் இலகுவாக உரையாட ஆரம்பித்து விட்டோம். 'லோக்கல்ல தான் இருப்பேன், சொல்லுங்க' என்று பதில் அனுப்பி இருந்தாள்.

நாங்கள் பஸ்ஸில் போய் இறங்கி, மருத்துவமனைக்குப் போக ஆட்டோ பிடித்தோம். அப்போதுதான் அப்பா அம்பையில் இருந்தாலும் இருப்பாரே என்று தோன்றியது. கண்ணனிடம், "அப்பா கண்ணுல பட்டா என்னடே செய்றது?" என்று கேட்டேன். அப்பா கண்ல பட்டா அவரு ஆட்டோல போக வேண்டியது தான்" என்று சாதாரணமாகச் சொன்னான் கண்ணன்.

"அப்பா ஆட்டோ ஓட்டுறாங்களா? யாரு தம்பி? பேர் என்ன?" என்றார் ஆட்டோ டிரைவர். அப்போதுதான் நான் தேவையில்லாமல் வாய் விட்டது புரிந்தது. ஆனால் கண்ணன் அலட்டிக் கொள்ளவில்லை. "எங்க அப்பாவா.. ஆமாண்ணே.. ஆட்டோ தான் ஓட்டுறாரு.. பெருமாள்னு பேரு.. பாபநாசம் ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும். வனப்பேச்சி துணைன்னு கூட போட்டுருக்கும்" என்றான் கண்ணன்.

"அட ஆமா! தெரிஞ்சவர் தான். என்ன இருந்தாலும் சொந்த ஆட்டோ இருக்கும் போது வேற ஆட்டோவுல போனா அவருக்கு வருத்தமாத் தானே இருக்கும்.." என்று ஆரம்பித்தவர் வேறு ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார். அப்பாடி! நான் சொன்னதைச் சரியாக வேறுமாதிரி புரிந்து கொண்டிருக்கிறார் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

மருத்துவமனைக்குச் சென்று இறங்கியவுடன், "நாங்க அரை மணி நேரத்துல வந்துருவோம்.. அண்ணிகிட்ட சொல்லி வையி.. எந்த கோயில்ன்னு முடிவு பண்ணி வைங்க. சும்மா இப்படி பயந்துக்கிட்டே இருந்தா, உன் முழியே நீ ஏதோ தப்பு பண்ணுறேன்னு காட்டிக் குடுத்துரும்.. அப்படியே அப்பாவோ வேற யாரோ பார்த்தாத் தான் என்ன? நான் லவ் பண்ற பொண்ணு இதுன்னு தைரியமா சொல்லு.. புரிஞ்சுதா?" என்று அதட்டாத குறையாக அறிவுரை வழங்கி விட்டுச் சென்றான். பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டினேன். என்ன இருந்தாலும் அவன் காதலில் என்னை விட சீனியர் அல்லவா? அவன் சொன்னதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

அவர்கள் மருத்துவமனைக்குள் செல்ல, நான் சத்யாவின் எண்ணை அழுத்தி விட்டுக் காத்திருந்தேன். ஊருக்கு வந்தபின் அவளிடம் பேசவில்லை. தனியாக அறையில் இருக்கும்போது பேசத் தயங்காத நான், வீட்டுக்கு வந்தால் மட்டும் ஏன் தயங்குகிறேன் என்று தெரியவில்லை. சத்யா எப்போது என்னிடம் பேசுகிறாள், அம்மா அப்பா அருகில் இருக்கும்போதா அல்லது இல்லாத போதா என்று ‌அவளைப் பார்க்கும் போது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவள் பங்குக்கு அவளும் கண்ணனைப் போல ஏதாவது அறிவுரை வழங்குவாள். கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.

சமீபத்தில் என் அறையில் சரவணன் உபயத்தால் சில சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க நேர்ந்தது. அதில் சில கதைகளில் இருவர் காதலிப்பார்கள். வீட்டுக்கு விஷயம் தெரிந்திருக்காது. இருவர் வீட்டிலும் வரன் பார்க்கும் படலம் நடக்கும். சம்மதமில்லாமல் பெண் பார்க்கும் படலத்திற்கு இருவரும் தயார் ஆகி வர, இனிய அதிர்ச்சியாகத் தன் காதலன் அல்லது காதலியே வீட்டில் பார்த்த வரனாகவும் அமைந்து விடுவார்கள். இப்படியே இரண்டு மூன்று கதைகளில் வந்திருந்தது. அப்படியே இப்போது எனக்கும் நடந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசையாக இருந்தது. மறுமுனையில் சத்யா அழைப்பை ஏற்று, "ஹலோ, ஹலோ! சொல்லுங்க!" என்றாள்.

"தம்பியும் தம்பி வைஃப்பும் இப்ப ஹாஸ்பிடலுக்குள்ள போயிருக்காங்க.. உன்னைப் பாக்கணுமாம். நீ எப்ப ஃப்ரீ?" என்றேன். "ஒரு ஒரு மணி நேர வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு வரேன்.. இடம் யோசிச்சுச் சொல்லுங்க" என்றாள்.


கண்ணனும் தங்கமும் வந்த பிறகு, எந்தக் கோயிலுக்குப் போகலாம் என்று பல இடங்களை விவாதித்து பின் அருகிலிருக்கும் பிரம்மதேசத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். உள்ளூரில் என்றால் தெரிந்த நபர்கள் பார்த்து விடுவார்களோ என்ற பயம் எனக்கு. 'நீ எல்லாம் லவ் பண்ணி கிழிச்சிட்டாலும்…' என்பது போல் ஒரு பார்வையை வீசினான் கண்ணன். எனக்கும், ஏன் தான் லவ் பண்ணினோமோ.. ஒரு சந்திப்பைக் கூட ஒழுங்காக ஏற்பாடு செய்ய முடியவில்லையே என்று தோன்ற ஆரம்பித்திருந்தது.

அம்பையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பிரம்மதேசம் என்ற ஊரில் இருக்கும் பழமையான சிவன் கோயிலுக்குச் சென்றோம். அந்தக் காலத்தில் மக்கள் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தார்கள், குறிப்பாக நெல்லை சீமை எவ்வளவு சுபிட்சமாக இருந்திருக்கிறது என்பதை இந்த ஊரைச் சுற்றிலும் உள்ள கோவில்கள் சொல்லிவிடும். அவ்வளவு கலைநயம்; அத்தனை சொத்துக்கள்.
சில உறவினர்கள் கோவில்களுக்கு போகவென்றே எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை அப்பா தவறாமல் பிரம்மதேசத்திற்கும் கூட்டி வந்து விடுவார்.

"இந்த சிற்பங்கள் எல்லாம் பாருங்க.. அவ்வளவு அற்புதமா இருக்கும்.. அந்த ராஜகோபுரத்தோட நிழலு அப்படியே தெப்பக்குளத்துல விழுது பாருங்க.. இங்கதான் மர்மதேசம்னு ஒரு சீரியல் கூட எடுத்தாங்க.. ரொம்ப ஃபேமஸ்.." என்பார் அப்பா.

"சன் டிவில போட்டாங்களே.. கருப்புக் கலர்ல ஒரு நாய் வருமே.. நவபாஷாண லிங்கம்னுல்லாம் சொல்லுவாங்களே.. அதுவா?" என்பார்கள் வந்தவர்கள். "ஆமா.. அதுவே தான்" என்றால்,

"நவபாஷாண லிங்கம் இங்க இருக்கா இப்ப?" என்பார்கள் ரகசியமாக.

"அதெல்லாம் இல்லைங்க.. அது சும்மா கதைக்காக வச்சிருந்தது…" என்று அப்பா சொல்ல,

கண்ணன், "சும்மா சொல்றாருங்க அப்பா.. இந்த கோயில்ல புதையல் கூட இருக்கு.. நவபாஷாண லிங்கமும் இருக்கு" என்பான் தானும் ரகசியமாக.

அந்த கோயிலுக்குத்தான் சென்றோம். போய்ச் சேருவதற்குள்ளாகவே தங்கமும் சத்யாவும் சிறுவயதுத் தோழிகள் போலப் பேச ஆரம்பிக்க, நானும் கண்ணனும் பின்னால் நடந்தோம். அதற்குள் பிரசாத ஸ்டால் ஓனர் எங்களை நோக்கிக் கைகாட்டினார். இவர்தான் பாபநாசம் கோயிலிலும் பிரசாத ஸ்டால் காண்ட்ராக்ட் எடுத்திருப்பவர். நன்கு பழகியவர். தங்கம் முதலில் பிரசாத ஸ்டால் அருகே போக,

"தங்கம்! யாரும்மா இது?" என்று அவர் சத்யாவைக் காட்டிக் கேட்டார்.

"என் ஃபிரண்டு.. பள்ளிக்கூடத்துல கூடப் படிச்சவ.." என்றாள் தங்கம் சத்யாவின் கையைப் பாசமாகப் பிடித்துக்கொண்டு. இந்தாங்கம்மா என்று ஆளுக்கு ஒரு லட்டைக் கொடுத்தார் அவர்.

தங்கம் லட்டை வாங்கிக் கடித்தபடியே.. "என்ன மாமா? இப்பல்லாம் உங்க பாபநாசத்துக் கடை‌ முறுக்கு முன்ன மாதிரி இல்லையே..? பாமாயில்லயா போடுதீங்க?" என்றாள்.

"எந்தப் பள்ளிகூடத்துல ஒண்ணாப் படிச்சீங்கன்னு அவர் கேக்க முன்னாடி என் பொண்டாட்டி எப்படி பேச்சை மாத்துனா பாத்தியா?" என்றான் கண்ணன் பெருமையுடன்.

"அதானே இவ காணிப் பள்ளிக்கூடத்துல படிச்சது தான் ஊருக்கே தெரியுமே.. அங்க வேற யாரும் படிச்சிருக்க முடியாதுல்ல.. புருஷனும் பொண்டாட்டியும் சரியான டுபாக்கூர் டுப்ஸாக்கள் தான். ஜாடிக்கேத்த மூடி! புள்ளைங்களையாவது உண்மையா வளப்பீங்களாடே? பொய் சொல்றதுக்கு உங்கள்ட்ட தான் ட்ரெய்னிங் எடுக்கணும் போலயே…" என்றேன்.

பின் நான்கு பேரும் தெப்பக் குளத்தின் படிகளில் அமர்ந்து ராஜகோபுரத்தின் பிரதிபலிப்பை ரசித்தபடியே என் காதலை அடுத்த படிக்கு எப்படிக் கொண்டு செல்வது என்று விவாதித்தோம். ஆளாளுக்கு ஒரு வழியைச் சொல்ல, எனக்கு ஏனோ ஒவ்வொரு வழிமுறையையும் ஒரு திரைப்படத்தில் பார்த்த மாதிரி உணர்வு இருந்தது. சரி, கண்ணனிடமும் தங்கத்திடமும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஜாலியாகக் காதலிக்க மட்டும் செய்யப்போகிறேன் என்று நான் சத்யாவிடம் ரகசியமாகக் கூறினேன். 'யாரு நீயா? ஜாலியா?' என்பது போல ஒரு முறை முறைத்தாள்.

ஏதோ ஒரு சாக்கு சொல்லிவிட்டு கண்ணனும் தங்கமும் எழுந்து தள்ளிப் போய் விட, சத்யா என்னிடம், "நம்ம ஊர்ப் பக்கம் உங்களுக்கு மாறுதல் கிடைக்குமா?" என்றாள்.

"ஏன் ஆத்தங்கரையில பஜ்ஜிக் கடை போட்டாத்தான் ஆச்சா? கடற்கரையில் போட்டா ஆகாதா?" என்றேன் நான். கையிலிருந்த பையால் என் வலது புற முதுகில் ஒரு போடு போட்டவள்,

"அது பெரிய மெரினா பீச்சு.. பஜ்ஜிக் கடை போட்டு பணக்காரனா ஆகுறாங்க.. படிக்கிறதுக்கு ஐடியா கேட்கிறேன் அப்படின்னு எங்க அம்மா அப்பாவை நம்ப வச்சுக்கிட்டு உங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்.. அதுக்காவது ஐடியா குடுங்க" என்றாள். சத்யா பிளஸ் டூ முடித்திருந்தாள், நான் படித்த புத்தகங்கள், குறிப்பேடுகள் சிலவற்றை அவளுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வந்திருந்தேன்.

"அவனவன் காதலிக்காக என்னென்னமோ குடுப்பான்.. நான் கல்விக் கடவுளைக் குடுக்கேன்.. வாசிச்சுப் பாரு.. பக்கத்துல ஸ்கூல் பிள்ளைங்க இருந்தா ஆறாப்பு, ஏழாப்புப் புஸ்தகங்களை வாங்கிப் பாரு" என்று கூறினேன். 'இதைத்தான் பேசுனீங்களா ரெண்டு பேரும்..' என்று கண்ணன் வந்து இன்னொரு பக்க முதுகில் அடி போடும் முன் கிளம்பி விடலாம் என்று நினைத்து நாங்களும் எழுந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டோம்.

அந்த ஒரு நாள் விடுமுறையும் அப்படியே ஓடிப்போக, என் காதலியை குடும்பத்தில் இருவரிடம் அறிமுகப்படுத்தி விட்ட மகிழ்ச்சியில் நான் மறுநாள் பணிக்குப் போனேன். கனவு உலகத்தில் இருந்து வருபவன் போலப் போனவனுக்கு அன்று ஒரு பிரச்சனை காத்திருந்தது.

அலுவலகத்தில் என் மேஜை டிராயர் சாவியைக் காணவில்லை. அதில்தான் முக்கியமான சில புத்தகங்கள், கோப்புகள் இருந்தன. அதிசயமாக எனக்கு முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தார் குமார்.

"என்ன தம்பி? வேலைக்கு சேர்ந்து ஒரு மாசத்திலேயே லேட்டா வரீங்க?" என்றார் கெத்தாக. அன்று அதிகாலையில் தான் ஊரில் இருந்து கிளம்பி வந்திருந்ததால் ஒரு பத்து நிமிடம், பத்தே நிமிடம் தான் தாமதமாகி இருக்கும். இவர்கள் வரும் நேரத்துக்கு அது ரொம்பவே விரைவு தான்.

"வாங்க! உங்க ட்ராயர் சாவியை எடுங்க. டெஸ்பாட்ச் புக்கைப் பார்க்கணும்" என்றார். எல்லா சாவிகளையும் ரேஞ்சர் அறையில் இருக்கும் கண்ணாடி பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டுப் போவதுதான் வழக்கம். யாருக்கும் கையோடு வீட்டுக்குக் கொண்டு போகும் பழக்கம் இல்லை.

"இங்கேதான் வச்சுட்டுப் போனேன் சார்" என்றேன்.

"ஏன்? எக்ஸ்ட்ராவா ஒரு நாள் லீவ் போட்டீங்கல்ல.. உங்க செக்சன் இன்சார்ஜ்ஜை வேற யார்கிட்டயாவது ஒப்படைச்சு கையெழுத்து வாங்கி சூப்பரிண்டென்ட் கிட்ட இன்ஃபார்ம் பண்ணனும்னு தெரியாது?" என்றார் அதிகாரத்துடன்.

உண்மையில் எனக்கு இதெல்லாம் தெரியாது. அருணகிரி சார் எங்கள் ரேஞ்சரிடம், "தம்பி என் குடும்பத்தை அவரோட ஊருக்குக் கூட்டிட்டுப் போறாப்ல.. ஒரு நாள் எக்ஸ்ட்ரா லீவு குடுங்க" என்று சொல்ல, "அதுக்கு என்ன, தாராளமா எடுத்துக்கிடட்டும்" என்று ரேஞ்சரும் சொன்னார். அப்போதே, 'இங்கு இவர் என்ன வேலை கொடுக்கிறார்? இதில் விடுமுறையை வேறு பெருந்தன்மையாகக் கொடுப்பது போல் சொல்கிறாரே' என்று நினைத்திருந்தேன்.

அவர் சொன்ன உடனேயே நான் ஒரு லீவ் லெட்டர் எழுதி வருகைப்பதிவேட்டில் வைத்துவிட்டுக் கிளம்பியிருந்தேன். அவ்வளவுதான். இப்போது இப்படி எல்லாம் கேட்டால் நான் என்ன சொல்வது? முதலில் குமார் எப்போது வருகிறார், என்ன செய்கிறார் என்றே தெரியாது.. பின் இவரிடம் நான் எப்படி அனுமதி கேட்க முடியும். இவர் என்னவோ எல்லாவற்றையும் முறைப்படி செய்வது போல் பேசுகிறாரே என்று கோபம் கோபமாக வந்தது எனக்கு.

"இல்ல சார் அப்படி எல்லாம் செய்யனும்னு எனக்குத் தெரியாது. இனிமே செஞ்சுர்றேன்" என்றேன். "ஆபீஸ், ஆபீஸ் மாதிரியா இருக்கு? எல்லாரும் இஷ்டத்துக்கு வர்றதும் போறதும். அந்த ராதிகாவ வேற காணும்.. அந்த அம்மா வந்தா அது சாவியப் பார்த்துச்சான்னு கேளுங்க. சரி நான் சொல்ற மாதிரி லெட்டர் டைப் பண்ணுங்க" என்றவர்,

"அனுப்புநர், வனச்சரகர் தூத்துக்குடின்னு போடுங்க. பெறுனர் அட்ரஸ் அப்புறம் சொல்றேன். பார்வைன்னு போட்டு, '20. 9. 2020 தேதியிட்ட உங்களின் கடிதம்'னு எழுதுங்க. 'ஐயா, பார்வையில் காணும் உங்கள் புகார்க் கடிதத்தின் பேரில் விசாரணை நடக்கவிருப்பதால் அது தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு 8.1. 2021 இன்று காலை 10 மணி அளவில் பீச் ரோட்டில் இருக்கும் வனத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்' இப்படி டைப் பண்ணி வைங்க. நான் சொன்ன பிறகு பிரிண்ட் எடுக்கலாம்" என்றார்.

பின் பியூனிடம், "ரங்கசாமி! ராதிகா வந்த பிறகு சாவி பத்தித் தெரியுமான்னு கேளுங்க" என்று கூறிவிட்டு வெளியே சென்றார். போகும்முன், "வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யணும் பேச்சியப்பன்" என்றார் என்னிடம் வந்து. 'வந்து சேந்துருக்குதுக பாரு நொண்டிக்குதிரையும் சண்டிக்குதிரையும்..' என்று முணுமுணுத்து விட்டுச் சென்றார். எனக்கு அழுகையே வந்தது. தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.

ரங்கசாமியிடம் என்ன விஷயம் என்று கேட்கலாம் என்று பார்த்தால், அவர் என்னைக் குமார் திட்டும்போது அற்பப் புழு போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். இப்போது 'எனக்குல்லாம் எதுவும் தெரியாதுப்பா.. நான் ஒரு சாதாரண ப்யூன் தான்' என்ற வழக்கமான உடல் மொழியை வைத்துக் கொண்டு அவரது ஸ்டூலில் அமர்ந்திருந்தார். இவரது இயல்பு தான் இது என்று தெரிந்திருந்தாலும், இன்று இது நான் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கையில் கிடைப்பதை வைத்து மண்டையில் அடித்து விடலாம் போல வெறியே வந்தது.

ராதிகா வந்தாலாவது அவளிடம் கேட்கலாம், அவளையும் இன்னும் காணோம். அந்த ஒற்றை லெட்டரை, கணினியின் பொத்தான்களை ஒத்தி ஒத்தி அடித்து முடித்தேன். பன்னிரண்டரை மணியைப் போல வந்தாள். வந்தவளிடம், "என்னோட டிராயர் சாவியை பார்த்தீங்களா?" என்று கேட்டேன் நான். ராதிகாவை அக்கா என்று அழைக்க வேண்டும் என்று தோன்றினாலும், அவள் என்ன சொல்வாளோ என்று தயக்கத்தினால் அவ்வப்போது மேடம் என்று ஆழைத்தும் அவ்வப்போது மொட்டையாகவும் பேசி வந்தேன்.

"உன்னோட சாவிய என்கிட்ட கேட்டேன்னா? நான் என்ன, இவ்விடம் தொலைந்த சாவிகள் தேடித் தரப்படும்னு போர்டு போட்டு வச்சிருக்கேனா?" என்றாள் சுள்ளென்று.

'அப்ப சாவி நிஜமாவே தொலைஞ்சே போயிருச்சா?' என்று வருத்தத்துடன் அமர்ந்திருந்தேன். இன்னும் இன்னும் அழுகையாக வந்தது. இரண்டு மூன்று முறை அந்தச் சின்ன அலுவலகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன், எங்காவது கண்ணில் படுகிறதா என்று பார்ப்பதற்கு. கிடைக்கவில்லை. சாப்பிடக் கூடப் போகாமல், பூட்டு ரிப்பேர்காரனைக் கூப்பிட்டு மாற்றுச்சாவி போடலாமா, இல்லை பூட்டை உடைக்கலாமா.. உடைத்தால் வேறு பூட்டு என் செலவில் போட்டுக் கொண்டால் பிரச்சனை முடிந்தது என்றுதானே அர்த்தம்.. இப்படிக் குழம்பி உட்கார்ந்திருந்தேன்.

அது என்ன வகை பூட்டு என்று பார்ப்பதற்காகக் குனிந்தேன். அப்போது, "சாவிய மட்டும்தான் காணுமா.. இல்ல சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்து அதுல எதையும் காணுமான்னு தெரியலையே.." என்றார் என் டேபிளைக் கடந்த ரங்கசாமி. திக்கென்று இருந்தது எனக்கு.

இப்படியும் இருக்குமா? ஐயோ! "அரசாங்கப் பொருள்டே.. குண்டூசிக்குக் கூடக் கணக்கு கரெக்டா இருக்கனும்டே.. பார்த்து நடந்துக்கோ" என்று அப்பா சொல்லியிருந்தாரே.. முக்கியமானதைத் தவற விட்டுவிட்டோமோ.. என் கவனக்குறைவால் தான் இப்படி ஆகியிருக்குமோ என்று பயந்தேன்.

ரங்கசாமி சாப்பிடப் போன பின்னும் நான் அப்படியே அமர்ந்திருக்க, ராதிகா டிபன் பாக்சைத் திறந்து பொறுமையாக சாப்பிட்டாள். இறுதியாக சம்படத்தை மூடி வைக்கும் போது,

"பட்டினியா இருந்தா சாவி கிடச்சுராது.. போய் சாப்பிட்டுட்டு வாங்க… சாவி அடுத்த வாரம் தன்னால கிடைக்கும்" என்று கூறி விட்டுக் கை கழுவச் சென்றாள். அடுத்த வாரமா, அதென்ன அடுத்த வாரக் கணக்கு என்று விழித்தபடி எழுந்து சாப்பிடப் போனேன் நான்.
 

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom