• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இருபுனலும் வருபுனலும் 10

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168
இருபுனலும் வருபுனலும் 10

ராதிகா ஒரு பெரிய பாரத்தை என் தலையில் இறக்கி வைத்துவிட்டு அவள் பாட்டுக்கு இருந்தாள். வேலையில் சேர்ந்து இரண்டு வாரம் கழித்து ஒரு முறை ஊருக்குப் போய் வந்திருந்தேன். அடுத்த மாதம், "இந்த வெள்ளி, சனி ஞாயிறுல உங்க அப்பாட்ட பேசி அந்த ஐபி ல (கண்காணிப்பு மாளிகை) தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணுப்பா" என்றார் எங்கள் டிஎஃப்ஓ அருணகிரி சார்.

அப்பாவிடம் சொன்னேன். அவருக்குக் கால்கள் தரையில் பாவவில்லை. அது இது என்று ஏற்பாடுகளைப் பிரமாதப்படுத்தி வைத்திருந்தார். நானும் டிஎப்ஓவுடன் கிளம்பி ஊருக்குப் போனேன். அவர் மனைவி, மகள், மகன் சகிதம் வந்திருந்தார்.

முதல் நாள் முழுவதும் அம்பை கோயில்கள், பாபநாசம் கோயில், வனப்பேச்சி அம்மன் கோவில் எல்லாம் காட்டிவிட்டு ஈபி யில் தங்கினோம். மறுநாள் காலையிலேயே அகஸ்தியர் அருவியும் சேர்வலாறு அணையும் பார்த்துவிட்டு சொரிமுத்தையன் கோயிலுக்குப் போனோம். அங்கு போய் பொங்கல் வைத்து அபிஷேகம் செய்து திருப்தியுடன் வழிபட்டார்கள்.
மரியாதை நிமித்தம் வனத்துறை அலுவலர்களும் வந்து அவரை சந்தித்து விட்டு போனார்கள். "நம்ம கெஸ்ட் ஹவுஸில் மெயின்டனன்ஸ் நடக்குதுங்க ஐயா.. இல்லேன்னா அங்கேயே தங்கி இருக்கலாம் ஐயா. ஆறு மாசத்துல ரெடி ஆயிரும். திரும்பக் கண்டிப்பா வாங்க ஐயா" என்று ஏகப்பட்ட 'ஐயா' போட்டார்கள்.

தூத்துக்குடிக்காரர்களை விட இங்கு உள்ளவர்கள் அருணகிரி சாரை அதிக மதிப்புடன் நடத்துவது போல் தோன்றியது. என்னுடன் அவர் வந்ததில் எனக்கு உள்ளூரில் புதிதாய் ஒரு பெரிய மரியாதை தோன்றியிருந்தது. அவரது மகன் நரேன் கல்லூரியில் படிக்கிறான். சாகச விரும்பியாக இருப்பான் போலும்.

"மீன்பிடிக்கக் கூட்டிட்டுப் போங்க.. ராத்திரில புலியைப் பாக்கக் கூட்டிட்டுப் போங்க.." என்று பல திட்டங்களைப் போட்டான். என் நண்பர்களுக்கு மிகுந்த உற்சாகமாகப் போய்விட்டது. அவன் கூறிய இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்றார்கள். ஐபியில் ஒரு வார்டனும், ஒரு சமையலரும் உண்டு. சமையலர் மிக நன்றாகச் சமைப்பார்.

ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு மாலை காப்பிக்கு வந்தவர்களை, "ராத்திரி சாப்பிட்டுட்டுத் தான் போகணும்" என்று அம்மா கேட்டுக் கொண்டள். "சாப்பாடை எடுத்துட்டு அங்கே வந்துடுங்களேன்.. எல்லாரும் பேசிக்கிட்டே சாப்பிடலாம்" என்றார் அருணகிரி சாரின் மனைவி. அவரும், தான் பெரிய அதிகாரியின் மனைவி என்ற பந்தா இல்லாமல் இயல்பாகப் பழகினார்.

ஐபியில் தங்க வேண்டும் என்று தங்கத்துக்கு ரொம்ப நாள் ஆசையாம். விஐபிகளுக்கு மட்டும் தான் புக்கிங் கிடைக்கும். நாங்கள் மட்டும் விருந்தினர் இல்லாத சமயங்களில் சில சமயம் அங்கு சென்று அங்குள்ள பணியாளர்களுக்குத் துணையாக பேசிக்கொண்டு அங்குள்ள வராண்டாவில் படுத்துக் கொள்வோம். காற்று பிய்த்துக் கொண்டு போகும். சிலசமயம் காட்டுப்பன்றிகள் வரும், ஆனால் நம்மை எந்தத் தொந்தரவும் செய்யாமல் போய்விடும். நாங்கள் எங்கள் ஐபி சாகசங்களைக் கூறிய போது தானும் போய் ஒரு முறையாவது தங்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசையாக இருப்பதாக தங்கம் பலமுறை கூறியிருக்கிறாள்.

அருணகிரி சார் தன் மனைவி கூறியதை ஆமோதித்து, "ஆமா! எல்லாரும் வாங்க.. உங்களை மாதிரி இயல்பான மனுஷங்களைப் பார்த்துப் பழகியே ரொம்ப நாள் ஆயிடுச்சு" என்றார். இதுதான் சாக்கென்று தங்கம் சிறுபிள்ளை போலக் குதித்தாள். அம்மா சரி என்று சொல்லவும், இட்லி, பூரி, தயிர்சாதம் மூன்றும் அவசரமாக தயார் செய்து எடுத்துக்கொண்டு அனைவரும் ஐபிக்குப் போனோம்.

அது சற்றே உயரமான பகுதி என்பதால் அங்கிருந்து பார்த்தால் எங்களுடைய க்வாட்டர்ஸ் தெரியும். அன்று நிலாவும் பிரமாதமாக இருந்தது. பௌர்ணமிக்கு மறுநாள் போலும், அகலமான தட்டு போல இருந்தது நிலா. வட்டமாக அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டோம். எங்கள் வீட்டிலேயே அப்படி அமர்ந்து சாப்பிட்டு வெகு நாட்கள் ஆயிற்று. பேச்சு நடு இரவு வரை நீண்டது.

நாங்கள் எங்களுடைய வீரதீர பராக்கிரமங்களைக் கூறினோம். சிறுத்தையைப் பார்த்த கதை, ஜட்டி ஆற்றோடு போன கதை, குளிக்கும் போது டேமைத் திறந்துவிட்ட கதை இப்படி நாங்கள் பேசப் பேச, கண்ணன் தானும் ஒரு கதை சொன்னான். அவன் என்னை விட மூன்று வயது சிறியவனாதலால் அவனுக்கு வேறு நட்பு வட்டம். அவர்களுடன் சேர்ந்து பல இடங்களுக்குச் சுற்றுவான். என்னைப் போல நடந்ததையெல்லாம் அம்மா அப்பாவிடம் சொல்ல மாட்டான்.

அன்று ஏதோ உணர்ச்சி வேகத்தில் முன்பு நடந்த சம்பவம் ஒன்றை விவரித்துச் சொல்ல ஆரம்பித்தான். "நாங்க மூணு பேர் ஒரு நாள் சாணலுக்கு நடந்து போனோம்" என்று அவன் ஆரம்பிக்கவும் "சாணல்னா?" என்றான் அருணகிரி சார் மகன் நரேன் கேட்டான்.

"அங்கிருந்துதான் மெஜுரா கோட்ஸுக்குத் தண்ணி போகும். தண்ணி ஓடுற இடத்துல கொஞ்சம் அகலமாக்கி தண்ணியைத் தேக்கி வச்சிருப்பாங்க.. குளம் மாதிரி.. அதுலருந்து கீழே பைப்லைன் போகும்" என்றேன் நான். "சேனல் (channel) டா" என்றார் அருணகிரி ஞ. 'ஓ சேனலா.. புக்ல படிப்போமே.. அதைத்தான் இவ்வளவு நாளா சாணல் சாணல்னு சொல்லிருக்கோமா.. என்ன இருந்தாலும் படிச்சவர் படிச்சவர் தான் டா' என்று வியந்து கொண்டேன்.

அந்தச் சாணலுக்குப் போகும் பாதை சற்று நீளமானது. வழியில் நான்கு இடங்களில் நீரோடை குறுக்கிடும். அதுதான் எங்களுக்கு வழிகாட்டும் மைல் கல் மாதிரி. சாதாரண நாட்களில் முட்டிக்குக் கீழே தான் அந்த ஓடைகளில் நீர் போகும். எளிதாகக் கடந்து விடலாம். அதிக மழை பெய்யும் காலங்களில் பாதையே தெரியாது. அவ்வளவு அகலமாக நீர் போகும். அங்குதான் ஏதோ சாகசத்தைச் சந்தித்திருக்கிறான் கண்ணன்.

"இரண்டு ஓடை கடந்து போய் மூணாவது ஓடை கிட்ட போயிட்டோம். நானு மாரிமுத்து, சங்கரு மூணு பேரு.. ஒரு ஒத்த யானை நிக்குது. நாங்க இங்க நிக்கோம்னா யானை அங்க நிக்குது.." என்றவாறு ஐபி காம்பவுண்ட் சுவற்றைக் காட்டினான். "சரியான பெருசு.. பெரிய கொம்பன். மாரிமுத்து சொல்றான், டேய் காதுக்குப் பின்னாடி நீர் வடியுத மாதிரி இருக்குடா ன்னு.. பயபுள்ள நிஜமாவே பாத்தானோ இல்ல பயங்காட்டுனானோ தெரியல.. நாங்கள்லாம் வெடவெடன்னு நடுங்க ஆரம்பிச்சுட்டோம்.."

"அடப்பாவி ஒத்த யானைகிட்ட மாட்டப் பார்த்திருக்க.. சொல்லவே இல்ல.." என்றாள் அம்மா. ஒற்றை யானை மிகவும் ஆபத்தானது. அப்படியான யானை ஒன்றைப் பார்த்து விட்டால் அதன் கவனத்தை கவராமல் ஓடி விடுவதே நல்லது. அதுவும் மனிதனை கவனித்து‌ விட்டால் அசையாமல் நிற்கும். காதைக் கூட ஆட்டாது. காதுக்குப் பின்னால் நீர் வருகிறது என்றால் மதம் பிடித்த யானையாக இருக்கலாம். அந்த நேரத்தில் அதனிடம் மாட்டிவிட்டால் தொலைந்தோம். அன்றே வாழ்நாள் முடிந்தது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இட்லிப் பாண்டி தங்கத்தைப் பார்த்துக்கொண்டே, "கண்ணன் எதைத்தான் வீட்ல சொன்னான்.." என்று சொல்ல, தங்கம் கொன்று விடுவேன் என்பது போல் ஒற்றை விரலைப் பாண்டியிடம் காட்டி மிரட்டினாள்.

"என்ன ஆச்சுன்னு சொல்லுடா.." என்றேன் நான் ஆர்வம் தாங்காமல்.

"அப்பத்தான் இந்த சங்கர்ப் பய ஒன்னுக்கு அடிக்கப் போறேன்னு ஓரமா ஒதுங்குதான்.. அவனை அப்படியே அமுக்கி பின்பக்கமாக் கூட்டிட்டு வந்தா.. எனக்கு கால்ல முள்ளு குத்திருச்சு" என்றான் கண்ணன்.

"ஐயையோ! அப்புறம்..?" என்றாள் அம்மா பதட்டத்துடன். தங்கத்துக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் போல, நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தாள். அப்புறம் என்ன நொண்டிக்கிட்டே நாலு கிலோமீட்டர் பம்மிப் பம்மி வந்தோம்" என்றான் கண்ணன்.

"எப்பா திருச்செந்தூர் முருகா! என் புள்ளயக் காப்பாத்திட்டப்பா!" என்று அம்மா தெற்குத் திசையைப் பார்த்துக் கும்பிட்டாள். "அடுத்த தடவ வரும்போது…" என்று அம்மா ஆரம்பிக்க,

"ஐயோ அம்மா!" என்றான் கண்ணன். எங்கே என்றோ நடந்த சம்பவத்துக்கு இப்போது மொட்டை போடுவதாக வேண்டப் போகிறாளோ என்ற பயம் அவனுக்கு. "உன் கையால நூறு ரூபா உண்டியல்ல போடறேன்னு வேண்டப் போறேன் டா" என்றாள் அம்மா.

"அது... அந்தப் பயம் இருக்கட்டும்!" என்று கண்ணன் சொல்லவும், எல்லாரும் சிரித்தோம். பின் அம்மாவின் திருச்செந்தூர் பக்தி, எனக்குப் போடப்பட்ட மொட்டைகள் என்று பேச்சு போனது.

"சரி எதுக்கு அந்தச் சாணலுக்குப் போனீங்க?" என்று மறுபடி பேச்சை விட்ட இடத்துக்கே இழுத்து வந்தான் நரேன் .

"அங்க மீன் நிறைய வளர்ப்பாங்க.. அப்பப்ப ஏலத்துக்கு விட்டு, ஏலம் எடுத்தவங்க மீன் பிடிச்சு விக்கிறதுக்காக.." என்றான் முருகேசன்.

"அது மட்டும் இல்ல.. அங்க ஒரு சின்னக் குன்று மேல ரெட்டப்பனை இருக்கும்.. ரெண்டுமே பெண்பனை. அதுல நுங்கு காய்ச்சுத் தொங்கும் பாரு.. அவ்வளவு அருமையா இருக்கும். அதை சாப்பிடத் தான் போவோம். யாராவது ஒருத்தன் பனையேறுத ஆளாப் பார்த்து கூடவே கூட்டிட்டுப் போயிருவோம்" என்றேன் நான்.

ஆற்றில் தான் அவ்வளவாகக் குளிப்பதில்லையே தவிர, இந்த மாதிரி இடங்களுக்கு நானும் தவறாமல் போய் விடுவேன். நுங்கு சாப்பிடப் போகும்போது கூர்மையான அரிவாள் மட்டும் கொண்டு போவார்கள். ஒரு நொடியில் நுங்கைச் சீவி அரை நொடியில் விரலால் தோண்டி டபக் டபக் என்று விழுங்கி விடுவார்கள். நான் மட்டும் ஸ்பூனும் ஒரு ஸ்ட்ராவும் கொண்டு போவேன். ஸ்பூனால் நுங்கைத் தோண்டி எடுத்து விட்டு, அதில் சேர்ந்திருக்கும் நீரை ஸ்ட்ரா கொண்டு உறிஞ்சுவேன். இரட்டைப் பனையில் நுங்கு இல்லாத நேரத்தில் பனங்காட்டிற்குப் போய் விடுவோம்.


பனங்காடு என்பது முண்டந்துறையிலிருந்து காரையாருக்குப் போகும் வழியில் வலதுபுறம் சற்று தூரத்தில் உள்ளது. அங்கு முழுவதுமே பனை மரங்கள் தான். எப்படிப் பார்த்தாலும் 400 முதல் 500 மரங்கள் வரை இருக்கும். பாதி மரங்களை யானைகள் சாய்த்துப் போட்டு குருத்தை சாப்பிட்டிருக்கும். பனம்பழங்களை மிதித்து உடைத்து அவற்றையும் சாப்பிடும் என்பார்கள். நான் இதுவரை ஒற்றை யானையையோ அல்லது யானைக் கூட்டத்தையோ பார்த்ததில்லை.

நுங்கு சாப்பிடப் போனது பற்றிய எங்கள் அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருந்த என் அப்பா, "நான் இங்க வந்த புதுசு. அப்ப கல்யாணம் ஆகல. எங்க அண்ணனுக்கு அப்பத்தான் வேலை கிடைச்சிருப்துச்சு. நான் நீச்சல், மரம் ஏறுறது இதெல்லாம் படிச்ச புதுசு. இதே மாதிரி சாணலுக்குப் போயிட்டுத் திரும்புனோம். இருட்டுற நேரம் ஆயிருச்சு.. வழியும் மாறிப் போயிட்டோம். அங்கிருந்து பாத்தா லோயர் டேம் தெரியுது. இதை நீந்திக்கடந்தா நம்ம மெயின் ரோடு வந்துரும்.. இனிமே திரும்பிப் போய், பாதைக் கண்டுபிடிச்சுப் போறது கஷ்டம். அதுவும் போக புலி, யானை எதுவும் வந்துருச்சுன்னா ஆபத்துன்னு பசங்க சொல்லவும், சரி நீந்திருவோம்னு டேம் தண்ணிக்குள்ள எறங்கிட்டோம்.. ஒன்னரை கிலோ மீட்டர் அகலம் இருக்கும் லோயர் டேம்.. எத்தனை அடி ஆழம் இருக்கும்னு கேட்டேன். பசங்க ஒரு பத்து பதினஞ்சு அடி வேணா இருக்கும், அவ்வளவுதான்னு சொன்னாங்க. நானும் அவ்வளவு தானேன்னு தம் கட்டி நீந்திக் கரையேறிட்டேன். வந்து கரையேறுன பெறகு சொல்றாங்க.. 'டேய் பதினஞ்சு அடி இல்லடா நாப்பது அடி ஆழம்னு.. பயத்துல புல்லரிச்சுப் போச்சு எனக்கு" என்றார்.

"அன்னைக்கு மாமா முங்கியிருந்தா, இன்னைக்கு நாம எல்லாம் இப்படி உக்காந்து பேசிகிட்டு இருக்க முடியுமா?" என்றாள் தங்கம்.

"சீ வாயக் கழுவு! அபசகுனமாப் பேசாதே" என்று, அம்மா மறுபடியும் தெற்கு நோக்கிக் கும்பிடப் போக,

"மாமா! அத்தைக்கு உங்க மேல லவ்ஸ்ஸப் பாருங்க" என்றாள் தங்கம்.

"அடப் போடி!" என்று லேசாக வெட்கப்பட்ட அம்மா, "சரி வா! வீட்டுக்குப் போவோம், நாம ரெண்டு பேரும். காத்துக் கருப்பு அடிச்சிறப் போவுது. வயித்துப் பிள்ளைக்காரில்லா... நீங்க வேணா இருந்துட்டு வாங்க" என்றாள் எங்களை நோக்கி. நாங்கள் போவதில் அருணகிரி சார் குடும்பத்துக்கு விருப்பம் இல்லை.

"நீ வாம்மா! உள்ள வந்து ரூம்ல படு. நாங்க எல்லாம் இங்கேயே காத்தாடப் படுக்கப் போறோம்" என்று கூறி தங்கத்தை உள்ளே அழைத்துச் சென்று சூட் அறையில் பஞ்சு மெத்தையில் படுக்க வைத்தார் அருணகிரி சாரின் மனைவி. தங்கத்துக்கு முகம் கொள்ளா மகிழ்ச்சி, வாய் கொள்ளா பெருமை.

தங்கம் தூங்கப் போனபின் அருணகிரி சார் தன் அனுபவங்களைச் சொன்னார். நாங்கள் காட்டில் வாழ்பவர்கள், எங்கள் பாதையில் மிருகங்கள் குறுக்கிட்ட கதையைத்தான் நாங்கள் பேசினோம். அவர் வனத்துறை அலுவலர் அல்லவா, எங்களை விட அதிகமாக மிருகங்கள் வாழ்விடங்களுக்கே கூட போயிருப்பாரே..

"ஹைவேவிஸ்னு ஒரு இடம் தெரியுமா? தேனில இருந்து போகணும்.." என்று சார் கேட்க, "ஆமா. மேகமலைக்கு மேல.. என் ஃப்ரண்டு அங்க பவர் ஹவுஸ்ல இருக்கான்" என்று கண்ணன் ஆர்வமாகக் கூறினான்.

"அங்கே மொத்தம் ஏழு டேம் இருக்கு. அங்கேருந்து பார்த்தா கேரளாவில் உள்ள கண்ணகி கோயில் கூட தெரியும். அங்க ஒரு நாள் ஒரு யானைக் கூட்டத்தை பாத்தோம். இரண்டு ஆண் யானை, அஞ்சு பெண் யானை, ரெண்டு குட்டிங்க, இவ்வளவும் சேர்ந்த ஒரு கூட்டம். அங்க முழுசும் டீ ப்ளான்டேஷன் தான். நாங்க ஒரு ரோட்டுல போயிக்கிட்டு இருக்கோம், ஒரு டீ ப்ளேன்டேஷனைத் தாண்டி அந்தப் பக்கம் இந்த யானைக் கூட்டம் நிக்குது. என் மச்சினன், அதான் இவளோட தம்பி.. பெரிய போட்டோகிராபி பைத்தியம். அவன் ஒரு பெரிய கேமராவைத் தூக்கிக்கிட்டு ஜீப்ல இருந்து கீழே இறங்கிட்டான்.. வாடா போகலாம்ன்னு கூப்பிட்டா வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்துட்டு அரை மணி நேரம் கழிச்சுத் தான் ஜீப்பில ஏறினான். யானைக் கூட்டம் லேசா இந்தப் பக்கம் திரும்பி எங்களைப் பார்க்க வர்ற மாதிரி தெரியுது. அவன் ஏறின பிறகு பாத்தா ஜீப் ஸ்டாட் ஆகல.. பயந்து போய் நின்னோம்"

"அப்புறம்…?" என்றார் அவர் மனைவி. இவரும் மனைவியிடம் உண்மையைச் சொல்வதில்லையா என்ற எண்ணத்தில் எனக்கு சிரிப்பு வந்தது.

"அப்புறம் என்னாச்சு.. எங்களை ரொம்ப நேரமாக் காணும்னு எங்க வாட்சர் சைக்கிள்ல வந்தார். அவர் ஏதோ செஞ்சு சரி பண்ண ஜீப்பை எடுத்துட்டு வந்தோம். அது ஆச்சு அஞ்சாறு வருஷம்.."

"ஒ! அப்போ கூட ஏதேதோ கதை விட்டீங்களே.. லேட்டா வந்ததுக்கு?" என்றார் அவர் மனைவி ஞாபகமாக.

இன்னும் ஏதேதோ கதைகளைப் பேசிவிட்டு நாங்கள் கலைந்தபோது சத்யாவும் உடன் இருந்தால் நன்றாக இருக்குமே, என் கதைகளை அவளும் கேட்கலாம், அவளது அனுபவங்களையும் சொல்லலாம். அன்று நீச்சலடித்துக் குடத்தைக் கைப்பற்றியதைப் பார்த்தால் அவளும் சாகசங்கள் பல செய்திருப்பாள் போலத் தான் தெரிகிறது. கைவசம் அவளும் பல கதைகள் வைத்திருப்பாள் என்று நினைத்தேன். அந்த நினைவில் மற்றவர்களின் பின்பகுதி பேச்சில் கலந்து கொள்ளாமல் அமைதியாகவே இருந்தேன்.

என்னை முருகேசன் கவனித்திருக்கிறான் போலும். உறங்கப் போகும் முன் நான் கழிப்பறைக்குச் செல்ல, கூடவே வந்தவன், "என்னடா பேச்சியப்பா! பீலிங்ஸா? அடுத்த தடவை இப்படி குரூப்பா உக்காந்து பேசும்போது சத்யாவையும் இருக்க வெச்சுருவோம். என்னடா?" என்றான்.

"எப்படிடா கண்டுபிடிச்ச?" என்று நான் அவன் கையைப் பிடித்துக்கொண்டு கேட்க, அவன் பதில் கூறும் முன், "யாருடா சத்யா?" என்று ஒரு குரல் கேட்டது. சட்டென்று கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தோம் நாங்கள் இருவரும்.
 

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom