அதே சிரிப்பு!
ஒரு நோயாளிக்காக நான் அவ்வளவு அலைந்திருக்கிறேன், அத்தனை முறை தொலைபேசி இருக்கிறேன், அவள் பெயரை ஆயிரம் முறை உச்சரித்திருக்கிறேன், வீட்டுக்கு நடையாய் நடந்திருக்கிறேன் என்றால் அது குமாரிக்காகத் தான். பாய், கூடை முடைந்து விற்கும் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவள்.
நான் என் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த நேரம் அது. அப்போது நான் பணிபுரிந்து கொண்டிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தாள் 29 வயது குமாரி. "அம்மா! எனக்கு ஒன்னுக்கு போற இடம் பக்கத்துல இவ்வளவு நீளத்துக்கு ஏதோ வெளியே வந்துருக்கு.. அப்பப்ப வெளிய வருது, அப்பப்ப உள்ள போகுது" என்று ஒரு ஜான் அளவுக்குக் கையை நீட்டிக் காட்டினாள். பரிசோதித்துப் பார்க்க அவளுக்கு கர்ப்பப்பை முழுவதுமாகக் கீழே இறங்கியிருந்தது தெரிந்தது.
"சின்ன வயசுலேயே இப்படியா? எத்தனை பிள்ளைங்க உனக்கு?" என்று நான் கேட்க, ஒரு வகையான சிரிப்புடன் "நாலு.. இல்லல்ல அஞ்சு.." என்றாள். மீண்டும் மீண்டும் கேட்கவும், அவளுக்கு ஐந்து பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் இடையில் இரண்டு, மூன்று முறை கருச்சிதைவு ஆகியிருப்பதாகவும் ஆண் குழந்தை வேண்டும் என்று கணவர் சொல்வதால் குடும்பக் கட்டுப்பாடு செய்யவில்லை என்றும் கூறினாள்.
"கர்ப்பப்பை ரொம்ப இறங்கியிருக்கு. இந்த வயசுல எடுக்கிறதும் நல்லதில்லை.. அதனால கர்ப்பப்பையை மேல தூக்கி வச்சு தைக்கக் கூடிய ஒரு ஆபரேஷன் பண்ணணும். இதுக்குமேல குழந்தை பெறக் கூடாது" என்று கூற அதே சிரிப்புடன் சென்றாள். அதன்பின் அவள் வரவே இல்லை.
அதன்பின் என்னுடைய பிரசவம், தொடர்ந்த மூன்று மாத பேறுகால விடுப்பு முடிந்து பணியில் நான் சேர்ந்தபோது மீண்டும் வந்தாள், தன் மகள்களில் ஒருத்திக்கு ஏதோ உடல் நலமில்லை என்று. "நீ தானே கர்ப்பப்பை இறங்கியிருக்குதுன்னு வந்த? ஆபரேஷன் பண்ணியாச்சா?" என்று நான் கேட்க, "இல்லம்மா அதுவே சரியாயிடுச்சு" என்றாள்.
அவ்வளவு தூரம் இறங்கிய கர்ப்பப்பை மேலே ஏறி விட்டது என்றால் ஒரே காரணம்தான். அவள் கர்ப்பமாகத் தான் இருக்கவேண்டும். படுக்க வைத்து பரிசோதனை செய்ய, நான் நினைத்தது சரி. ஆறு மாத கர்ப்பமாக இருந்தாள் குமாரி. "இது ஒன்பதாம் பேறுகாலம். மிகக் கவனமாகப் பார்க்கவேண்டும், இத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினேன். அவள் தலையசைத்த விதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. சத்து மாத்திரைகள், தொடர் பரிசோதனைகள் எதற்கும் அவள் சரியாக வராததால் கிராம சுகாதார செவிலியருடன் அவள் வீட்டிற்கே சென்றோம். அருகில் உள்ள அரசுப் பள்ளியில் அவளது பிள்ளைகள் நான்கு பேர் படித்தார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் குமாரியைப் போன்ற ஜாடையுடன் நான்கு சிறுமிகள் இருந்தனர். ஐந்தாவது பெண்ணை இடுப்பில் தூக்கிக் கொண்டு தெருவில் நடந்து வந்தாள் குமாரி.
வீட்டிலேயே ஊசி போட்டு, மாத்திரை வழங்கி அவள் மாமியாரிடமும் கணவரிடமும் பேசினோம். மாமியார்தான் வீட்டிலேயே நடக்கும் பிரசவங்களில் துணை இருப்பவள்.
கணவனுக்கு லேசாகக் கால் ஊனம். அதனால் அவன் வேலைக்குப் போவதில்லை. மாமியாரும் குமாரியும் முடைந்து வைத்த கூடைகள் அங்கு அடுக்கப்பட்டிருந்தன. குடும்பக் கட்டுப்பாடு செய்வது பற்றி நாங்கள் ஏதோ கூற, அவள் கணவன், "எனக்கு பன்னிரண்டாவது பிள்ளை ஆம்பள பிள்ளைன்னு ஜோசியக்காரன் சொல்லியிருக்கான். அதனால இப்பல்லாம் ஆபரேஷன் பண்ண முடியாது" என்றான். எவ்வளவோ விளக்கம் கொடுத்து கேட்கவில்லை.
பயந்தபடியே ஒன்பதாம் மாதத் துவக்கத்தில் குமாரிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. மோசமான நிலையில் அவள் கொண்டுவரப்பட, முதலுதவி அளித்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவளை நாங்களே கொண்டு சென்றோம். நாடித்துடிப்பு மிகவும் குறைந்த நிலையில், வேகமாக பிரசவம் பார்க்கப்பட்டது. குழந்தை இறந்தே பிறந்தது. நஞ்சுப்பை கர்ப்பவாயின் அருகில் ஒட்டியிருந்தது (Placenta praevia) தான் அதிக ரத்தப்போக்குக்குக் காரணம். சுயநினைவை இழந்திருந்த குமாரி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டாள்.
பரிசோதிக்கும் விதமாக 'நாக்கை நீட்டு' என்று நான் அவளிடம் கூற, அவள் "என்ன பிள்ளை?" என்று கேட்டாள். "குழந்தை இறந்துடுச்சும்மா" என்றேன். "என்ன பிள்ளை?" என்றாள் மீண்டும். "பொம்பளப் பிள்ளை" என்று நான் கூற, "அப்ப பரவாயில்லை!" என்று கூறி கண்களை மூடிக் கொண்டாள். அப்போதும் அவளுக்குக் குடும்ப கட்டுப்பாடு செய்ய அவள் கணவன் ஒத்துக்கொள்ளவில்லை.
மேலும் சில மாதங்கள் போயிருக்க அதே மருத்துவமனையில் நான் இருக்கும்போதே இன்னொரு குழந்தையும் பெற்றாள் குமாரி. கணக்கிற்கு இது பத்தாவது. அப்போது High risk pregnancy மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்ட காலம். மீண்டும் ஹவுஸ் விசிட், மீண்டும் அதே அறிவுரைகள், இந்த முறை எப்படியாவது உரிய தேதிக்கு முன்பே அவளைப் பெரிய மருத்துவமனையில் சேர்த்து விடுவது என்ற முன்னேற்பாட்டுடன் இருந்தோம். வழக்கமாக வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லும் அவள் கணவன் இந்த முறை சற்றுத் தள்ளி இருந்த ஒரு ஊரில் ஒரு தனியார் மருத்துவரிடம் சென்று பேறுகாலம் பார்த்திருக்கிறான். அங்கே போய் மூன்றாவது பிள்ளை என்று கூறி பிள்ளை பெற்றுக் கொண்டதாகக் கேள்வி. அந்தப் பிரசவத்தில் தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நாங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க, "என்னமோ ரொம்ப பயமுறுத்தினீங்க? நல்லாத் தானே இருக்கா?" என்று மருத்துவமனையில் வந்து கத்தினான் குமாரியின் கணவன்.
"ஏம்பா? அவளுக்கு எதாவது ஆயிட்டா இத்தனை பிள்ளைகளையும் யாரு பாப்பாங்க?" என்று நான் கேட்டேன். "அதான் நான் இருக்கேன்ல.. ரேஷன்ல மாசம் முப்பது ரூபாய்க்கு அரிசி வாங்கி (அப்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். இலவசம் கிடையாது) தினம் ஒரு கிலோ பொங்கிப் போட்டா தின்னுட்டு கெடக்குங்க. பள்ளிக்கூடத்துல மத்தியானம் சோறு போட்ருவாங்க.. பிறகு எதுக்கு அவ?" என்றான். சத்தியமாக இன்று வரை அவன் பேசியது மனதில் முள்போல் குத்திக் கொண்டே இருக்கிறது.
மேற்படிப்பு, அதன்பின் வேறு மருத்துவமனை என்று நான் இடம் மாற நேர்ந்தாலும் குமாரி எப்படி இருக்கிறாள் என்று விசாரித்துக் கொண்டே இருந்தேன். குமாரி அதன்பின் இரட்டைப் பிள்ளைகளைக் கருவில் சுமந்திருக்கிறாள். இறுதிநாள் வரை பரிசோதனைக்குப் போகவில்லை. அண்டை வீட்டிற்குக் கூட அவள் கர்ப்பமாயிருப்பது தெரியவில்லை. ஜோசியர் சொன்னது பலித்து, அந்த இரட்டையில் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக வீட்டிலேயே பிறந்திருக்கிறது. முந்தைய ஒரு முறையைப் போலவே மிக அதிகமான ரத்தப்போக்குடன் கிட்டத்தட்ட நாடித்துடிப்பே இல்லாத நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள் குமாரி. இரண்டு மூன்று மருத்துவமனைகள் மாற்றிப் போய் இறுதியில் மாவட்டத்தின் பெரிய மருத்துவமனையில் மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை நடைபெற்று கருப்பை மொத்தமும் அகற்றப்பட்டு மிகுந்த போராட்டத்திற்குப் பின் காப்பாற்றப்பட்டு இருக்கிறாள்.
இன்றும் அந்த ஊரில் இருந்து யார் வந்தாலும் குமாரியைப் பற்றிக் கேட்கிறேன். அந்த ஊரைக் கடக்க நேர்கையில் தலையில் கூடையுடன் கையில் விளக்குமாறுகளுடன் ஏதாவது ஒரு பெண் வியாபாரம் செய்கிறாளா என்று பார்க்கிறேன். பார்த்தால், "குமாரி தானே? நல்லா இருக்கியா?" என்று கேட்க வேண்டும். இப்போதும் அதே புன்சிரிப்பைத் தான் தருவாள் என்று நினைக்கிறேன். அந்த சிரிப்பின் பின் என்ன சிந்தனை ஓடுகிறது என்று இன்றாவது எனக்குப் புரியுமா என்று தெரியவில்லை. அல்லது அவள் மனதில் ஏதேனும் சிந்தனை ஓடுமா என்பதே தெரியவில்லை.
சமீபமாக எங்கள் வீட்டுக் கோழிகள் சில, குஞ்சு பொரிக்கின்றன. அருகில் வரும் சேவலை ஆக்ரோஷமாக விரட்டி விடுகின்றன. குஞ்சுகள் வளர்ந்த பின் தான் சேவலை அருகில் வர அனுமதிக்கின்றன. சமயத்தில் சேவலும் கோழிகளுடன் அலைந்து அதற்கு உதவுவது போல் தெரிகிறது. முட்டை போடும் கோழிக்கு பொருத்தமான இடத்தைக் கூட சேவல் தான் காட்டுவது போலத் தெரிகிறது. மற்ற நேரத்தில் சாதுவாக இருக்கும் தாய்க்கோழி குஞ்சுகள் வளர்க்கும் நேரத்தில் மட்டும் மனிதனை, கழுகை, நாயை, பறந்து பறந்து கொத்த வரும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. அந்த கோழிக்குப் போராடுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு கூட குமாரி போன்ற மனிதப் பெண்ணுக்கு இருக்கிறதா என்ற கேள்வி எப்போதும் போல மிக ஆழமாக என் மனதில் எழுகிறது.

Author: siteadmin
Article Title: அதே சிரிப்பு!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.