• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க்கொடியில் பூத்தவளே! 7

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
178
உயிர்க் கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 7


மாதுரியின் வாடிய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி.

“ மாதுரி, நடந்ததை எல்லாம் கெட்ட கனவா நெனைச்சு மறந்துட்டு இயல்பா இருக்கப் பாரு. இந்த உலகம் இப்படித்தான், சும்மா இருக்கறவங்க மேல அநியாயமாப் பழிகளைப் போடும். நம்ம மனசுல எப்போ களங்கம் இல்லையோ, அந்தப் பழிகளைத் தூசா நெனைச்சு உதறித் தள்ளிட்டுக் கடந்து போகணும். அட்வைஸ் பண்ணறது ஈஸி. அதைச் செயல்படுத்தறதுதான் கஷ்டம். சரி வா, கொஞ்சம் இசையில் நம்மை மறக்கலாம். கொஞ்ச நேரம் பாட்டுக் கேக்கலாம் வா” என்ற ராஜேஸ்வரி, அந்த அறையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கால கிராமஃபோனைக் காட்டினாள். அதன் அருகில் இருந்த அலமாரியில் இசைத்தட்டுகள் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

“ எனக்கு ஹிந்துஸ்தானி இசையில் கஜல் கேக்கப் பிடிக்கும். எங்கே நீயா ஒரு ரெகார்டைத் தேர்ந்தெடுத்து ஓட விடு பாக்கலாம். எப்படி ஆபரேட் பண்ணறதுன்னு தெரியுமா? ”

“ தெரியும் மேடம். எங்க வீட்ல கூட இருந்தது ஒரு காலத்துல” என்றாள்.

“ டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிடுச்சு. இவ இன்னமும் கிராமஃபோனில பாட்டுக் கேக்கறாளேன்னு தோணுதா? ”

“ இல்லை மேடம். இதெல்லாம் அவங்கவங்களோட தனிப்பட்ட விருப்பம். சில பேர் வின்டேஜ் கார்கள்னு பழைய கால கார்களை வச்சுக்கறது இல்லையா? அது மாதிரித்தான் இதுவும். பழசுக்குன்னு தனி மவுசு உண்டு” என்று அமைதியாகப் பதில் கூறிவிட்டு, ஜகஜீத் சிங்கின் கஜலைத் தேர்ந்தெடுத்து ஓடவிட்டாள். அவருடைய மென்மையான குரலும், இனிமையான ராகமுமாகச் சேர்ந்து மனதை வருடியதில் மாதுரிக்கும் ஆறுதலாகவே இருந்தது. அமைதியாக ஓடும் நதிக் கரையில் நின்றது போல மனமும் குளிர்ந்துபோனது. பாடல் முடியும் வரை அமைதியாக இருந்தார்கள்.

அனைத்துக் கவலைகளையும் மறக்க வைக்கும் சக்தி, இசைக்கு நிச்சயமாக உண்டு என்பதை நிரூபித்தது அந்தச் செயல்.

“ உனக்கு ஒரு வெளி வேலை தரப்போறேன். இப்படியே வெளியே தெருவில் இறங்கி நடந்தால் கொஞ்ச தூரத்தில் எங்களோட பேங்க் இருக்கு. அங்கே போய் மேனேஜரைப் பார்த்து நான் கொடுக்கற ஒரு ஃபைலைக் கொடுத்துட்டு வரணும். வெளியே நடந்தால் இந்த ஊரையும் பாத்த மாதிரி இருக்கும். உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும் ” என்று சொன்னார் ராஜேஸ்வரி.

சரியென்று சொல்லிவிட்டு அவரிடம் கோப்பை வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.

சரியாக அதே நேரத்தில் கண்மணியும் காய்கறி வாங்கக் கிளம்பியதால் அவளுடன் சேர்ந்தே நடந்தாள் மாதுரி.

கண்மணியே அவளுக்கு வங்கி இருக்கும் இடத்தைக் காட்டிவிட்டாள்.

“ நீ பேங்க் வேலையை முடிச்சிட்டு, மார்க்கெட்டுக்கு வா. ரெண்டு பேருமா சேந்து திரும்பலாம் ” என்று சொல்லி விட்டு முன்னே சென்றாள் கண்மணி.

ராஜேஸ்வரி மேடத்தின் பெயரைக் கேட்டதுமே வங்கியில் தனி மரியாதை கிடைத்தது அவளுக்கு. அவள் வந்த வேலை சீக்கிரமாகவே முடிந்துவிட, காய்கறிக் கடையை நோக்கி நடந்தாள் மாதுரி. மலைப்பகுதியை ஒட்டிய ஊர் என்பதாலோ என்னவோ, காய்கறிகள் எல்லாம் பச்சைப் பசேலென்று அருமையாக இருந்தன. விலையும் அதிகமாக இல்லை. இரண்டு, மூன்று நாட்களுக்குத் தேவையான காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

“ நீங்க எப்படிக்கா இங்கே வேலைக்குச் சேந்தீங்க? ” என்று ஆரம்பித்தாள் மாதுரி.

“ அதையேன் கேக்கறே? அது ஒரு பெரிய சோகக் கதை. சரி, உன் கிட்டச் சொல்லி மனசுல இருக்கற பாரத்தைக் குறைச்சுக்கறேன்” என்றவள் சொல்ல ஆரம்பித்தாள்.

“ தேனி தான் எங்க ஊரு. நான், எங்கப்பா, அம்மா மூணு பேரும் சந்தோஷமா இருந்தோம். நான் ஸ்கூலில் படிச்சிட்டு இருந்தேன். என்னை நல்லாப் படிக்க வைக்கணும்னு எங்க அம்மாவுக்கு ரொம்ப ஆசை. நீ படிச்சுப் பெரிய கலெக்டரா வரணும்னு சொல்லுவாங்க. எனக்கும் படிப்பில் நல்ல நாட்டம் இருந்துச்சு. திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லாமப் போயிப் படுத்த படுக்கையாயிட்டாங்க. ஏதோ கேன்ஸர்னு சொன்னாங்க. ஒருநாள் சிகிச்சை பலனளிக்காம அம்மா இறந்தும் போயிட்டாங்க. நான் அப்போ அஞ்சாம் கிளாஸ் படிச்சிட்டிருந்தேன். அம்மா இறந்ததை என்னால் தாங்கிக்க முடியலை. ஒரு வருஷத்துக்குள்ள அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. நானும் புது அம்மா வந்துட்டாங்கன்னு சந்தோஷமாத்தான் இருந்தேன் ” என்று சொல்லி நிறுத்தினாள்.

அம்மாவைப் பற்றிப் பேசியதாலோ என்னவோ குரல் உடைந்து போயிருந்தது. மாதுரி ஆறுதல் சொல்வது போல கண்மணியின் கையைப் பிடித்துக் கொண்டாள். அம்மாவை இழக்கும் துயரம் பற்றி அவளுக்கா தெரியாது?

“ உங்களை உங்க சித்தி வந்ததில் இருந்து கொடுமைப்படுத்தினாங்களாக்கா? ”

“ இல்லை, அப்படியும் சொல்ல முடியாது. ரொம்பப் பிரியமா இருந்தாங்க. எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் பிறந்தாங்க. அப்பக் கூட அவங்க என் மேல காட்டின பிரியத்துல கொறைச்சலே இல்லை. நானும் தம்பி, தங்கையைப் பொறுப்பாப் பாத்துகிட்டேன். சித்திக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சுகிட்டே ஸ்கூலுக்கும் போயிப் படிச்சேன். எங்கப்பா, ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் டிரைவரா வேலை பாத்தாரு. அடிக்கடி வெளியூர் டிரிப் போயிட்டு வருவாரு. மாசத்துல பாதி நாட்கள் வீட்டில் இருக்கமாட்டாரு. ஆனால் நல்ல வருமானம் வந்தது.
சித்தி வீட்டை நல்லா சமாளிச்சாங்க. திடீர்னு ஒருநாள் அப்பா ஓட்டின லாரி விபத்துக்குள்ளாகிக் கால் போயிடுச்சு. அந்த விபத்துக்கு அப்புறம் வேலையும் போச்சு. வருமானமும் நின்னுபோச்சு. நஷ்ட ஈடா கம்பெனிக்காரங்க கொடுத்த பணத்தை வச்சுக் கொஞ்ச நாள் குடும்பம் ஓடுச்சு. அதுக்கப்புறம் ரொம்பப் பணக் கஷ்டம். சித்தி வீட்டு வேலைக்கெல்லாம் போனாங்க. நானும் அதுக்குள்ள பிளஸ் டூ வரைக்கும் வந்துட்டேன். நல்ல மார்க் வந்தது. காலேஜில் சேரணும்னு நெனைச்சபோது சித்தி முதலில் மறுப்புத் தெரிவிச்சாங்க. முதன்முதலா எனக்கும் அவங்களுக்கும் வாக்குவாதம் நடந்தது” என்று நிறுத்தினாள்.

“ படிக்க வைக்கப் பணம் இல்லைன்னு சொன்னாங்களா? நீங்க நல்ல மார்க் வாங்கினதால ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்குமே? ” என்றாள் மாதுரி.

“ விசாரிச்சாத் தெரிஞ்சிருக்கும். அதைப் பத்திப் பேசவே விடலை என்னை. டீச்சர் டிரெயினிங் போறேன்னு கெஞ்சினேன். கேக்கவே இல்லை அவங்க. வீட்டுவேலைக்கும் போயிட்டு உங்கப்பாவையும் கவனிச்சுட்டு எல்லாப் பொறுப்பையும் என்னால தனியாச் சமாளிக்க முடியலை. எனக்குத் தெரிஞ்ச வீட்டில் சமையலுக்கு ஆளு தேடறாங்க. சின்னப் பொண்ணா வேணும்னு சொல்லறாங்க. நீ போய் அந்த வேலையை எடுத்துக்கோன்னு சொன்னாங்க. அழுதேன், கெஞ்சினேன், பிடிவாதம் பிடிச்சேன். எதுவும் பலிக்கலை. அப்பாவும் வாயைத் தொறக்கலை. வேற வழியில்லாமல் வந்து வேலையில் சேந்தேன்.
என் வயசைப் பாத்து மேடமே கொஞ்சம் தயங்கினாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நான் வேலை செய்யறதைப் பாத்து என்னைத் தொடர்ந்து வேலைக்கு வச்சிகிட்டாங்க. எனக்கும் இந்த வீடு பிடிச்சுப்போச்சு. லீவு கிடைச்சாக் கூட ஊருக்குப் போகமாட்டேன். சித்தி எப்பவாவது வந்து பாப்பாங்க. சம்பளம் வாங்கினதும் உடனே பணத்தை அனுப்பிடுவேன். நானும் வேலையில் சேந்து பத்து வருடங்களுக்கு மேல ஓடிப்போச்சு. இந்த உலகத்தில் பாசம், பந்தம்னு எதுக்கும் மதிப்பு இல்லை. பணம் ஒண்ணு தான் பிரதானம். இந்த வயசுலயே சந்யாசி மாதிரி ஆயிட்டேன். ஆனால், திடீர் திடீர்னு எல்லார் மேலயும் கோபம் வரும்போது என்னால அடக்கவே முடியாது” என்று சொல்லி முடித்தாள் கண்மணி.

“ அப்ப நீங்களும் வயசுல சின்னவங்க தான். நான் என்னவோ நீங்க என்னை விட ரொம்பப் பெரியவங்கன்னு நினைச்சு, அக்கான்னு வேற கூப்பிடறேன். ”

“ நிச்சயமா உன்னை விட வயசுல பெரியவளாத்தான் இருப்பேன். என்ன ஒரு வித்தியாசம்னா, நான் என்னோட தோற்றத்தைப் பத்தியோ, டிரஸ் பத்தியோ ரொம்ப அக்கறை எடுத்துக்கறதில்லை. கண்டதைச் சாப்பிடுவேன். மாடு மாதிரி வேலை செஞ்சுட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்லாத் தூங்குவேன். அதுனால உடம்பு குண்டாயிடுச்சு. என்னை அழகாக் காமிச்சுக்கணும்னு மனசுல ஆசை இல்லவே இல்லை. மானத்தை மறைக்க என்னவோ துணி. அதுவும் மேடம் எடுத்துக் கொடுக்கறதுதான்.
என் சம்பளத்துல ஒரு சின்னப் பகுதியை மேடமே பேங்கில் போட்டு வச்சிருக்காங்க. முழுச் சம்பளத்தைக் கொடுத்தா நீ மொத்தத்தையும் ஊருக்கு அனுப்பிடுவேன்னு சொல்லி இந்த ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அதுல கணிசமாக் கொஞ்சம் சேந்திருக்கு. எனக்கு இங்கே எந்தச் செலவும் இல்லை. உணவு, உடை, தங்கற இடம் எல்லாமே தந்துடறாங்க. நான் பாட்டுக்கு நிம்மதியா இருக்கேன். கல்யாணம், குடும்பம் இதேல்லாம் ஏனோ மனசுக்குப் பிடிக்கலை மாதுரி. எல்லா ஆம்பளைகளும் சுயநலவாதிங்க. சுகவாசிகள்னு மனசுக்குத் தோணுது ” என்று சலித்துக் கொண்டாள் கண்மணி.

“ உங்களோட அனுபவம் உங்களை அப்படி நினைக்க வைக்குது. நீங்க பாத்த, சந்திச்ச ஆம்பளைங்க அப்படிப்பட்டவங்களா இருந்ததுனால உங்களுக்கு அப்படித் தோணுது. ஆம்பளைங்களிலும் நல்லவங்க இருக்காங்க. பெண்களை மதிக்கறவங்களும் இருக்காங்க. எங்கப்பா அந்த மாதிரி தான் இருந்தாரு. அப்படிப்பட்ட ஒருத்தரை நீங்க ஒருநாள் சந்திச்சா உங்களுக்கும் கல்யாணம் செஞ்சுக்கற ஆர்வம் வரலாம்” என்று மாதுரி சொன்னதைக் கேட்டுச் சிரித்தாள் கண்மணி.

“ பாக்கலாம், பாக்கலாம், அது மாதிரி நடக்க வாய்ப்பே இல்லை மாதுரி. நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா முதலில என்னோட சித்தி ஒத்துக்க மாட்டாங்க” என்று கண்மணி சொன்ன வார்த்தைகளில் அவளுடைய வலி தெரிந்தது.

“ சரி, என்னைப் பத்தியே பேசிட்டு இருந்திட்டேன். நீ இப்போ உன்னைப் பத்திச் சொல்லு. உன்னைப் பாத்தா நல்ல குடும்பத்துப் பொண்ணாத் தெரியறே. பேசற விதம், நடந்துக்கற விதம் எல்லாம் பாத்தா நிச்சயமா காலேஜ் வாசலை மிதிச்ச பொண்ணுன்னு தோணுது எனக்கு. படிக்க வேண்டிய பருவத்தில எதுக்காக வேலைக்கு வங்தே? அதுவும் இந்த மாதிரி மலையோரத்தில் கிடக்கற ஊருக்கு? ” என்று கேட்டாள் கண்மணி.

“ சொல்லறேன் அக்கா. இந்த உலகத்தில் நான் தான் துரதிருஷ்டசாலின்னு நெனைச்சேன். உங்களைப் பாத்தா என்னை விட அதிக துரதிருஷ்டசாலியா இருக்கீங்க. எல்லார் வாழ்க்கையிலும் பணத்தேவை திடீர்னு வரும்போது வாழ்க்கையோட திசையே மாறிப் போகுது. நானும் அப்படித்தான் தடுமாறி நிக்க வேண்டிய நிலைமையை ஒருநாள் சந்திச்சேன். அன்னைலேந்து எல்லாமே மாறிடுச்சு” என்று சொன்னவளை கண்மணி, பரிவோடு பார்த்தாள். தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: உயிர்க்கொடியில் பூத்தவளே! 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
48
Nice update
பணத்தை மதிக்கரவன் சொந்தங்களை இகழ்வான். உறவுகளை மதிக்கிரவன பணத்தை பெரியதாக நினைக்க மாட்டாங்க
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
178
Nice update
பணத்தை மதிக்கரவன் சொந்தங்களை இகழ்வான். உறவுகளை மதிக்கிரவன பணத்தை பெரியதாக நினைக்க மாட்டாங்க
நன்றி🙏💕
 
Top Bottom