• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -14

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
320
நான் போடுற கோட்டுக்குள்ளே -14

"ஹேய் சுபிக்ஷா! உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? இன்னைக்கும் ஆஃபீஸ் வந்திருக்க?" மிகவும் ஆச்சரியமாகக் கேட்டாள் ஒருத்தி. அலுவலக காண்டீனில் இருந்தார்கள் அவர்கள்.

அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் சுபிக்ஷா தனது சாப்பாட்டில் கவனமாக, "என்ன டி சொல்ற? இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?" என்றாள் மற்றொருத்தி.

"உனக்கு விஷயமே தெரியாதா? இன்னைக்கு ஈவினிங் அவளுக்கு எங்கேஜ்மென்ட்" என்று முதல் பெண் விளக்கம் கொடுக்க, இப்போது டேபிளில் இருந்த அனைவரும் சுபிக்ஷாவைக் கேள்வியாகப் பார்த்தனர்.

"ம்ச். எங்கேஜ்மென்ட கேன்சல் பண்ணிட்டேன். அதான் லீவைக் கேன்சல் பண்ணிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன்" என்று சர்வசாதாரணமாகச் சொன்னவளை அதிர்ச்சியுடன் அனைவரும் நோக்க, அவளோ அது ஒரு விஷயமே இல்லை என்பது போன்ற ரியாக்ஷன் கொடுத்தாள்.

"என்ன டி இப்படி சொல்றா? இவ சொல்றதைப் பார்த்தால் இவ தான் எங்கேஜ்மென்ட்ட நிறுத்தின மாதிரி இருக்கு. அப்படி என்ன தான் நடந்திருக்கும்?" என்று ஆளாளுக்குக் கேள்வி எழுப்பி அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். சுபிக்ஷாவிடம் கேட்க யாருக்கும் தைரியம் இல்லை என்பதே உண்மை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு தோழி தனது திருமணத்தை நிறுத்தி இருந்தாள். என்ன விஷயம் என்று கேட்ட போது, "ஆரம்பத்திலேயே எனக்கும் சமையலுக்கும் ஆகவே ஆகாதுன்னு தெளிவா சொல்லிட்டேன். எல்லாம் ஓகே ஆன பிறகு தான் எங்கேஜ்மென்ட்னு போனோம். அப்புறமும் ஃபோன்ல பேசிட்டு இருக்கும் போது வீட்டிலே அம்மா சமையல் பண்ணுவாங்களா இல்லை குக் இருக்காங்களான்னு கேட்டேன். அதுக்கு அந்தப் பையன் குக் இருக்காங்க. ஆனா அவங்க லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்னு சொன்னான்.

அது எனக்கு சுத்தமா பிடிக்கலை. எங்க வீட்டில கிச்சன் எப்படி இருக்கும்னு கூட நான் பார்த்தது இல்லை. குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே, நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இத்தனை நாள் அவங்க அம்மா தானே செஞ்சிருப்பாங்க.

இவ்வளவு பெரிய கம்பெனியிலே வேலை பார்த்து எவ்வளவு சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு(!) பேசறான். சமைக்கணுமாம், காஃபி போடணுமாம். பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியது தானேன்னு நல்லா கேள்வி கேட்டேன். அப்புறம் இரண்டு நாள் பேசவே இல்லை. இப்படிப் பட்ட ஆள் எனக்கு செட் ஆகாதுன்னு அப்போ தான் புரிஞ்சது. அதான் கல்யாணத்தை நிறுத்திட்டேன்" என்று அவள் சொன்ன போது மற்றவர்கள் எல்லாம் அவரவர் கருத்தைச் சொல்ல, சுபிக்ஷா கண்களால் சபாஷ் போட்டாளே தவிர வாய் திறந்து எதையும் பேசவே இல்லை.

வேலையில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த பின்னரும் அவள் அனைவரிடமும் ஒரு எல்லையோடு தான் பழகினாள். நீ உன் பெர்சனல் விஷயத்தைச் சொன்னால் நானும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பது போலவே நடந்து கொள்வாள்.
அதன் காரணமாக மற்றவர்கள் பேச்சை வேறு திசையில் திருப்ப நினைக்க, சுபிக்ஷா தானே முன்வந்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்தாள்.

"என்ன ஃப்ரண்ட்ஸ், இவ எதுக்காக எங்கேஜ்மென்ட்ட நிறுத்தி இருப்பான்னு யோசிக்கிறீங்களா? இட்ஸ் ஸோ சிம்பிள். லாஸ்ட் ஃபிப்டீன் டேஸ் பேசினதுல நிறைய conflicts (கருத்து வேறுபாடுகள்). பரவாயில்லைன்னு விட்டுட்டு தான் இருந்தேன். பட், போன சன்டே அவன் கேட்ட கேள்வி.. I simply can't tolerate" என்று நிறுத்தியவள் அடுத்து சொன்ன ஆங்கில வார்த்தைகளை எல்லாம் அவளது தோழிகள் டிக்ஷனரியில் கூட பார்த்ததில்லை போலும். அவ்வளவு அதிர்ச்சி அவர்கள் முகத்தில்.

இருப்பினும் ஒருத்தி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேள்வி கேட்டாள். "எதையும் நேரடியா சொன்னாலே எங்க‌ மண்டையில ஏறாது. இதுல நீ தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டால்.. அதுவும் சசி தரூர் கிட்ட கத்துக்கிட்ட வோர்ட்ஸ் எல்லாம் எங்க கிட்ட யூஸ் பண்ணினா நாங்க தாங்க மாட்டோம். கொஞ்சம் புரியும்படி சொல்லிடுப்பா ப்ளீஸ்."

"ஓகே..‌ஓகே.. பார்த்த முதல் நாளே நான் என் சைட் கண்டிஷன்ஸை சொல்லிட்டேன். அவனும் எல்லாத்துக்கும் சரின்னு மண்டையாட்டி வச்சான். பட் எதுவுமே அவன் மண்டைக்குள்ள போகலைன்னு அப்புறம் தான் தெரிஞ்சது.

நேரம் காலம் பார்க்காமல் ஃபோன் பண்ணி நிறைய பேசினான். மினிட்ஸ் ஆஃப் மீட்டிங் மாதிரி ஒவ்வொரு மினிட் நடந்ததையும் எக்ஸ்ப்ளைன் பண்ணான். என் கிட்டயும் அதையே எதிர்பார்த்தான் போல. நான் எப்போதுமே என் ப்ரைவஸிக்குள்ள யாரும் வர்றது எனக்குப் பிடிக்காதுன்னு தெளிவா சொன்னேன்.
அதுக்கப்புறம் இரண்டு நாள் அவன் பேசவே இல்லை.

போன சன்டே ஈவ்னிங் நான் என் ஃப்ரண்ட்ஸோட ஷாப்பிங் போன போது நிறைய கால்ஸ். நான் அட்டென்ட் பண்ணவே இல்லை. அன்னைக்கு நைட் பத்து மணிக்கு மேல் தான் ரிட்டர்ன் கால் பண்ணினேன்.

எத்தனை தடவை கூப்பிட்டேன், என் ஃபோன் அட்டென்ட் பண்ண முடியாமல் அப்படி என்ன வேலை பார்த்தன்னு ஏகப்பட்ட கொர்ரீஸ்(queries) . ஷாப்பிங் போயிருந்தேன்னு சொன்னா, யார் கூட போனேன்னு அடுத்த கேள்வியைக் கேட்டான்.

இந்த மாதிரி கேட்கக் கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே அவனுக்கு. ஐ வாண்ட் மை ஸ்பேஸ் ஆல்வேஸ். இப்படி ப்ராட் மைண்ட் இல்லாத பையன் கூட எப்படி லைஃப் பூராவும் இருக்க முடியும். அதான் எங்கேஜ்மென்ட நிறுத்திட்டேன்" என்றாள் கூலாக.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட தோழிகள் அடுத்த கேள்வியை கேட்டார்கள்.

"உங்க பேரன்ட்ஸ் ஒன்னும் சொல்லலையா?"

"அப்பா தான் கொஞ்சம் அடம் பிடிச்சார். இந்த விஷயத்தில் அம்மா எப்போதும் என் பக்கம் தான். அவ சொல்றதும் நியாயமாத் தான் படறது. இப்பவே பிடிக்கலேன்னா இன்னும் எவ்வளவோ இருக்கேன்னு அப்பாவை கன்வின்ஸ் பண்ணிட்டா. தட்ஸ் இட்" என்று தோளைத் குலுக்கினாள் சுபிக்ஷா.

"அதுவும் சரி தான். உனக்கான ஆள் இனிமேலா பிறந்து வரப் போறான். கொஞ்சம் தேடிப் பார்த்தால் போச்சு. யார் கண்டது, நம்ம கண்ணு முன்னாடி கூட நடமாடிட்டு இருக்கலாம்" என்று ஒருத்தி தத்துவம் பேச, அவர்களுக்கு அடுத்த டேபிளில் சம்பத் வந்து அமர்ந்தான்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட தோழிகள் கூட்டம் சத்தம் இல்லாமல் சிரித்தது. "ஹேய் சுபிக்ஷா! நீ ஏன் லவ் மேரேஜ் பண்ணிக்கக் கூடாது? உனக்கேத்த ஆளு இங்கே பக்கத்திலேயே இருக்கான் பாரு" என்று கிசுகிசுத்தாள் ஒருத்தி.

சுபிக்ஷா கடனே என்று திரும்பிப் பார்க்க, சம்பத்தும் அதே நேரத்தில் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று சுபிக்ஷாவைத் திரும்ப வைத்தது.

"என்ன டி? உனக்கு ஓகே தானே? ஃபேமிலி, ட்ரடிஷன் எல்லாமே ஒத்துப் போகும். இவனை விட உனக்கு மேட்சா யாரும் கிடைக்க மாட்டாங்க."

"ஹார்வர்ட்ல படிச்ச ஆளு, இந்த வயசிலயே பெரிய பதவி, கை நிறைய.. இல்லை இல்லை.. பை நிறைய சம்பளம், உலகம் பூராவும் சுத்தறான். இதை விட என்ன வேணும்?"

"ஏய், முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்களே? ஸ்மார்ட் அன்ட் ஹேன்ட்ஸமான ஆளு.." என்று கண்ணடித்தாள் ஒருத்தி.

"குணமும் சொக்கத் தங்கமாக்கும். எங்க பாஸ் மாதிரி யார் வருவாங்க. வேலை வாங்கறதுலயும் சரி, நம்ம வொர்க்க அப்ரிஷியேட் பண்றதுலயும் சரி.. அவரை யாரும் அடிச்சுக்க முடியாது.."

"அதாவது பழகறதுக்கு ரொம்பவே ஸ்வீட்டான ஆளாக்கும்"

"மொத்தத்தில் நம்ம பாஸ், அக்மார்க் முத்திரை பதித்த எலிஜிபிள் பேச்சிலராக்கும். நீ தாராளமா கன்சிடர் பண்ணலாம்" என்று ஆளாளுக்கு சம்பத்தின் அருமை பெருமைகளை எடுத்து விட இப்போது சுபிக்ஷா நன்றாகவே திரும்பி அவனைப் பார்த்தாள்.

'ம்ம்.. இவா சொன்னதெல்லாம் சரி தான்.. இவனைப் பார்க்கலாம் தான்' என்றது அவள் மனது.

தனது உணவில் கவனமாக இருந்த சம்பத்தின் காதுகள் பக்கத்து டேபிளில் நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தன. 'ஓ மை காட்.. என்னமா பேசுறாங்க?' என்ற நினைப்பினூடே தன்னை எலிஜிபிள் பேச்சுலர் என்று சொன்னதை நினைத்துச் சிரித்துக் கொண்டான்.

ஒரு புன்னகையுடன் எழுந்து அவனது அறைக்குள் சென்றவன் செய்த முதல் வேலை சுபிக்ஷாவின் முழுப் பெயர் என்ன என்று கண்டுபிடித்தது தான்.

"சுபிக்ஷா ரங்கராஜன்" என்று சத்தமாகப் சொல்லிப் பார்த்தான். அதன் பின்னர் அலுவலக வேலைகள் இழுத்துக் கொண்டாலும் இடையிடையே மனம் வேறு பாதையில் சென்றது. பார்த்த முதல் நாளே அவனை ஈர்த்தவள் என்றாலும் அன்றொரு நாள் காண்டீனில் திருமணம் பற்றிய அவளின் கருத்துக்களைக் கேட்ட பிறகு, தனது ஆர்வத்தைப் பூட்டி வைத்து விட்டான். இன்றோ மனம் அடங்க மறுத்தது. 'என்ன தான் நடக்கறது பாத்துடுவோம்' என்று முடிவு செய்து விட்டான்.

ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த பேரனைப் பார்த்த ராஜலக்ஷ்மி ஆச்சர்யத்தில் விழி விரித்தார். அங்கே இருந்த சேஷாத்ரிக்கு ஜாடை காட்ட, அவருக்கும் ஒரே ஆச்சர்யம் தான்.

பேரனின் கவனமோ இங்கே இல்லை. வழக்கமாக தாத்தா பாட்டியிடம் பேசிவிட்டு அவனது அறைக்குச் செல்பவன் இன்று இருவரையும் கண்டுகொள்ளாமல் சென்று விட்டான்.

சில நிமிடங்களில் குளித்து உடை மாற்றி வந்தவன் அமைதியாகவே இருந்தான். உதடுகள் புன்னகைத்தபடி இருந்தன.

"என்ன டா ராஜா? ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியறது, என்ன விஷயம். எனக்கும் சொன்னா நானும் கொஞ்சம் சந்தோஷப் படுவேனே" பேரனின் கையில் காஃபி டம்ளரைக் கொடுத்து விட்டு விசாரித்தார் பாட்டி.

பேரனோ, 'அவளுக்கு காஃபியாவது போடத் தெரியுமா இல்லை அவ ஃப்ரண்ட்ஸ் பேசிண்டிருந்த மாதிரி கிச்சன்னா என்னன்னு கேட்பாளா?' என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

சேஷாத்ரி பேரனின் நடவடிக்கையின் பிண்ணனி பற்றி யோசிக்க ஆரம்பித்தார். அவருக்குச் சட்டென்று தோன்றியது ஒரேயொரு விஷயம் தான்.

"கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்.." என்று பாடிக் கொண்டு பேரனுக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் பாடிய பாடலைச் சரியாகப் புரிந்து கொண்ட அவரது தர்மபத்தினியும் பேரனை ஆர்வமாகப் பார்த்தார்.

டம்ளரில் இருந்த காஃபி தீரும் வரை காஃபி ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்த பேரன், கையில் இருப்பது வெறும் டம்ளர் என்பதைச் சற்று நேரம் கழித்தே உணர்ந்தான். தலையை உலுக்கிக் கொண்டபடி டம்ளரை அலம்பி டேபிள் மேல் வைத்தவன், அப்போது தான் அங்கே இருந்த தாத்தா பாட்டியையும் அவர்களின் முகத்தில் இருந்த ஆர்வத்தையும் பார்த்தான்.

சேஷாத்ரியின் முகத்தில் இருந்த குறும்புப் புன்னகையைப் பார்த்தவனுக்கு மண்டைக்குள் மணி அடித்தது. 'அச்சோ இந்த தாத்தா எதையோ ஸ்மெல் பண்ணிட்டார் போல இருக்கே. வளைச்சு வளைச்சு கேள்வி கேட்பாரே! எப்படியாவது எஸ்கேப் ஆகிடுடா சம்பத்' என்றது அவனது மைன்ட் வாய்ஸ்.

ஆபத்பாந்தவனாக அவனது கையில் இருந்த மொபைல் ஃபோனில் அழைப்பு வர தப்பிக்க வழி கிடைத்தது என்று ஓடிவிட்டான்.

தனித்து விடப்பட்ட மூத்த தம்பதியர் இருவரின் சிந்தனையும் பேரனைச் சுற்றி வந்தது. "ஏன்னா! அவன் முகத்தைப் பார்த்தேளா? என்ன ஒரு ஜொலிஜொலிப்பு. என்ன காரணமா இருக்கும்?"

"வேறென்ன? ஏதோ பொண்ணு தான் காரணமா இருக்கும். உலகத்தையே மறந்து வெறும் டம்ளரை ஆத்திண்டு இருக்கும் போதே தெரியலையா? இதுக்கெல்லாம் ஒரேயொரு காரணம் தான்" மனைவியின் சந்தேகத்திற்கு மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் சேஷாத்ரி.

"என்னதிது, இப்படிச் சொல்றேள்? அவனே பொண்ணு பாத்துட்டான்னு சொல்றேளா? நம்ம ராஜாவா?" பாட்டிக்கு நம்ப முடியவில்லை.

"ராஜி! உடனே உணர்ச்சி வசப்படாதே. உடனே குலம் கோத்திரம்னு ஆரம்பிக்காதே, எதையும் தெரிஞ்ச பின்னாடி அதைப் பத்தி பேசலாம். இப்போ, அவனுக்கு யாரையாவது பிடிச்சிருக்கலாம். அவனுக்கே இன்னும் உறுதியா தெரிய வேண்டியதா இருக்கலாம். அவனுக்கு ஓகேன்னு தோணினா நம்ம கிட்ட சொல்லுவான். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு" மனைவிக்கும் தனக்கும் சேர்த்தே அந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டார்.

அன்று இரவு உணவுக்கான நேரம் வழக்கத்திற்கு மாறாக வெகு அமைதியாகக் கழிந்தது. முரளிதரன் மற்றும் தேவிகாவிற்கும் விஷயம் தெரியாததால் மகனின் அமைதிக்கான காரணம் புரியாமல் விழிக்க, பெரியவர்கள் கண்களால் பதில் சொல்லி அவர்களைச் சமாளித்தனர்.

சாப்பிட்ட உடன் அறைக்குள் நுழைந்து கொண்டான் சம்பத். வெகு தீவிரமாக அலசி ஆராய்ந்து பார்த்து அவளது மெட்ரிமோனியல் புரோஃபைலைக் கண்டுபிடித்தான். "யுரேகா!" என்று சத்தம் வராமல் கத்தியவன் அவளது புரோஃபைலைக் கவனமாக உள் வாங்கினான். அவள் கொடுத்திருந்த சில விஷயங்களைப் பார்த்து ஆடிப் போனவன் இது சரி வராது என்ற முடிவுக்கு வந்து விட்டான். மனதின் ஏதோ ஒரு மூலையில் வலித்தது.

ஆனாலும்.. என்று பெருமூச்சுடன் படுத்தவன் தூக்கத்தைத் தொலைத்தான். மறுநாள் காலையில் சிவந்த கண்களுடன் சுரத்தே இல்லாமல் வந்த பேரனைக் கண்ட சேஷாத்ரி, மனைவியை அர்த்தத்துடன் பார்த்தார். ராஜலக்ஷ்மி யின் முகமும் சோர்வைக் காட்டியது.

"ராஜா! இன்னைக்கு எனக்கு ஒரு செக்கப் போயிட்டு வந்தால் தேவலாம்னு தோணறது. ராஜிக்கும் ராத்திரி எல்லாம் பிபி ஜாஸ்தியாகி தலைசுத்தல்னு அவஸ்தைப் பட்டா. முரளிக்கு வேலை இருக்காம். நீ லீவ் போட முடியுமா?" என்ற கேள்வியுடன் பேரனின் முன் நின்றார்.

தாத்தாவின் சூட்சமம் எதையும் அறியாத பேரனும் அவர் விரித்த வலையில் எளிதாக விழுந்தான்.

தாத்தா பாட்டியின் திறமை அடுத்த பதினைந்து நாட்களில் தெரிந்தது. சேஷாத்ரியின் குடும்பம் மொத்தமும் இதோ சுபிக்ஷாவின் வீட்டில்...

—-----
நிச்சயதார்த்தம் நின்ற பிறகு, ரங்கராஜன் வீட்டில் மௌனம் காத்தார். மகளைத் தூண்டும் மனைவியின் நடவடிக்கைகள் அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும் என்ற பேச்சை மனைவியின் வாய்மொழியாகக் கேட்ட பிறகு வாய் திறந்து எதையும் பேசவே இல்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்கப் பழகிக் கொண்டார்.

பத்மாசனியும் மருமகளிடம் இருந்து நிறைய வாங்கி இருந்தார். பல வருடங்களாக அனுராதா மனதுக்குள் புதைத்து வைத்திருந்த ஆற்றாமை எல்லாம் ஒரு நாள் எரிமலை போல் வெடித்துச் சிதறியதில் கப் சிப் என்று ஆகிவிட்டார்.

வீட்டில் இருந்த நால்வரில் இருவர் அமைதியின் சிகரமாக மாற மற்ற இருவரும் ரகசியப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதோ இப்போது கூட, அனுராதாவும் சுபிக்ஷாவும் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம், மகளிடம் தனது கல்யாணத்தின் கதையை உப்பு புளி காரம் எல்லாம் சேர்த்துச் சொல்லிக் கொண்டு இருந்தாள் அனுராதா.

"உங்க அப்பாவுக்கு அப்போதெல்லாம் பெத்தவாளும் கூடப்பிறந்தவாளும் சொல்றது தான் வேத வாக்கு. உனக்கு எங்க ஜானவாஸ கதையைச் சொல்றேன் கேளு" என்று அந்தக் காலத்திற்குப் போனாள் அனுராதா.

அவர்களது திருமணம் கும்பகோணத்தில் நடந்தது. அன்றைய தினம் ஏதோ அரசியல் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால் மாப்பிள்ளை ஊர்வலத்தை பெரிய அளவில் நடத்த முடியவில்லை. அதை ஒரு பெரிய குறையாக பத்மாசனியும் அவரது புதல்விகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

வேறு வழியின்றி, இருவீட்டாரும் கோவிலுக்குச் சென்று சம்பிரதாயமாக அர்ச்சனை செய்து விட்டு மண்டபத்திற்குத் திரும்பி விட்டனர். மண்டபம் இருந்த தெரு வாசலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடப்பதாக இருந்தது. அன்னம் போல அழகாக அலங்கரிக்கப்பட்ட காரில் ரங்கராஜனையும் அனுராதாவையும் அமர வைத்து ஃபோட்டோ எடுக்க மட்டுமே அனுமதித்த பத்மாசனி, மகனை உடனே காரில் இருந்து இறங்கி வரச் செய்து விட்டார்.

தாய் சொல்லைத் தட்டாத தனயனாக இறங்கி விட்ட ரங்கராஜன் தன் வீட்டாருடன் நடந்து சென்று மண்டப வாசலில் நின்று கொண்டார். அனுராதாவின் தந்தை என்ன நடந்தது என்று தெரியாமல் மாப்பிள்ளை வீட்டாரை சமாதானம் செய்ய வேண்டி அவர்களின் பின்னோடு போனார்.

காரில் தனித்து விடப்பட்ட அனுராதா செய்வதறியாது திகைத்தாள். அவளது தாய் மண்டபத்தின் உள்ளே வேலையாக இருக்க, அவளது தோழிகளும் மேலும் சில உறவினரும் தான் அங்கே இருந்தனர்.

திரண்ட கண்ணீரை மறைக்க முயன்று தோற்றவளை ஒரு தோழி தாங்கிக் கொள்ள, அமைதியாகக் காரில் இருந்து இறங்கினாள். அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்குப் பேசுவதற்கான வாய்ப்பு எங்கே இருந்தது.

அவளது தந்தை பத்மாசனியின் முகத் திருப்பலைப் பொருட்படுத்தாது பணிவுடன் பேசிக்கொண்டிருக்க அனுராதா மெதுவாக நடந்து மண்டப வாசலுக்கு வந்து சேர்ந்தாள். போனால் போகிறது என்று இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைத்த பத்மாசனி முகத்தைத் தூக்கிக் கொண்டு தான் உள்ளே நுழைந்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் இன்னும் ஒரு பிரச்சினை கிளம்பியது.
நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்க, ரங்கராஜன் மேடையில் இருந்து இறங்கி விட்டார். காரணம் இது தான், மாப்பிள்ளைக்கு செயினும் மோதிரமும் போட்ட மாமனார் வாட்ச் போடவில்லை.

திருமணத்திற்கு முன் மோதிர அளவும் வாட்ச் மாடலும் விசாரித்த போது, "என் கிட்ட ஏற்கனவே இரண்டு வாட்ச் இருக்கு மாமா. இரண்டுமே ரீசன்டா வாங்கினது தான். இன்னொரு வாட்ச் எல்லாம் தேவையில்லை. நான் அம்மா கிட்ட சொல்லிக்கறேன்" என்று பெருந்தன்மையுடன் பேசிய ரங்கராஜன் இன்று கொஞ்சம் கூட குற்றவுணர்வு இன்றித் தாயின் தாளத்துக்கு ஏற்ப ஆடினார்.

ஆளாளுக்கு பெண்ணைப் பெற்றவரைத் துச்சமாக பார்க்க, அவரவர் கற்பனையில் என்ன நடந்திருக்கும் என்று கதை கட்டி விட, மாப்பிள்ளைக் கோலத்தில் நின்றவரிடம் கேள்வி கேட்க முடியாத நிலையில் தலைகுனிந்து நின்றார் அனுராதாவின் தந்தை. உறவுகள் அந்நேரம் கை கொடுக்க, அடுத்த அரைமணி நேரத்தில் புதிய வாட்ச் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தது.

மனைவியுடன் சென்று சம்பந்தி வீட்டாரிடம் கெஞ்சி நின்றார் பெண்ணைப் பெற்றவர். போனால் போகிறது என்பது போல அடுத்த நிகழ்வுகளுக்கு ஒப்புதல் அளித்தார் பத்மாசனி. அவரது கணவர் மனைவி சொல்லே மந்திரம் என்பது போல நடந்து கொண்டார்.

இப்படித் தை மாதம் நடந்த கல்யாணத்தில் ஆரம்பித்த கலாட்டா ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்ந்தது. அனுராதாவின் தலை தீபாவளியில் பெரிதாக வெடித்தது. மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவது வழக்கம் என்று மகனிடம் சொல்லி அனுப்பி வைத்தார் பத்மாசனி. இதையறியாத அனுராதா வீட்டினர் பெண்ணுக்கு பட்டுப் புடவை மாப்பிள்ளைக்கு டிரஸ் என்று நிறைய செலவழித்து வாங்கி இருந்தனர்.

தீபாவளி அன்று காலையில் மனைவியின் அருகில் மனையில் அமர்ந்த ரங்கராஜன் தட்டில் மோதிரம் இல்லாததைக் கண்டுகொண்டார். உடனே அதைப் பற்றிக் கேள்வியும் எழுப்பினார். இதென்ன புதுப் பிரச்சினை என்று மாமனார் திகைத்து நின்ற வேளையில் மோதிரம் வராமல் எண்ணெய் தேய்த்துக் கொள்ள மாட்டேன் என்று வராண்டாவில் போய் அமர்ந்து கொண்டார் ரங்கராஜன்.

அந்த அதிகாலை நேரத்தில் எந்தக் கடைக்குச் செல்வது? வேறு வழியின்றி தனது மோதிரத்தை மாப்பிள்ளைக்கு அணிவித்து அவரைச் சாந்தப் படுத்தினார், மாமனார்.

தனது மனக்குமுறலை அவ்வப்போது சில சாம்பிள்களுடன் மகளிடம் கொட்டிய அனுராதா, "இப்படி உங்க அப்பாவோட ஆரம்ப காலத்து அட்ராசிட்டி எல்லாம் பேச ஆரம்பிச்சா ஒரு நாள் போதுமானன்னு பாட்டு பாட வேண்டியதாயிடும். நியாயமா பார்த்தா அவருக்கு ஒரு பையன் பிறந்து பொண்ணாத்துக்காரா கிட்ட பாடா பட்டிருக்கணும். எப்படியோ தப்பிச்சிட்டார்" என்று பெருமூச்சு விட்டாள்.

"அதுக்காக யாரோ எவரோ நம்ம கிட்ட படணுமான்னு நீ யோசிக்கலாம். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான். எங்க காலத்தில் பொண்ணுக்கு சாய்ஸ் இல்லை, இப்போ அப்படி இல்லை. உன் இஷ்டப்படி உன் வாழ்க்கையை அமைச்சுக்க சான்ஸ் இருக்கு இப்போ.
நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீ படக்கூடாதுன்னு தான் இவ்வளவு மெனக்கெடறேன்" என்று ஒரு தகவலையும் கூடுதலாகக் கொடுத்தாள்.

தாயின் போதனைகளை சுபிக்ஷா எந்த அளவுக்கு மனதில் ஏற்றி இருக்கிறாள் என்பது போகப் போகத் தான் தெரியும்.

ஆனால் அனுராதா எதையும் மறந்து விடவில்லை என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருந்தாள். இதோ இப்போது கூட பெண் பார்க்க வந்த
ராஜலக்ஷ்மியிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிக் கொண்டு இருந்தாள் அனுராதா.

‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால தான் பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பார்த்தோம். அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலை பார்க்கற மாதிரி பார்த்தோம். எங்க நேரம் அப்படி எதுவும் சரியா அமையலை’’

‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று பெருமையாக அறிவித்தாள்.

‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபென்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லி வைத்தாள்.

இது மாதிரி நிறைய விஷயங்களை அனுராதா பேசிக்கொண்டு இருக்க, அறைக்குள் இருந்த சுபிக்ஷாவோ அரவிந்துடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த சம்பத்தை முறைத்துக் கொண்டு இருந்தாள். அவனைச் சுற்றிலும் கேலி செய்து கொண்டிருந்த இளைஞர் பட்டாளத்தை அந்த நொடியில் அவளுக்குப் பிடிக்காமல் போனது.

இவனும் தான் பொண்ணு பார்க்க வந்த இடத்தில் வழி மேல் விழி வைத்து அவளுக்காகக்
காத்திராமல் அக்கா, தங்கை, தம்பி என்று கதை பேசிக்கொண்டிருக்கலாமோ?? ஒளி மயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தான் அவன்
.
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
68
என்ன அதிசயம்? அதுக்குள்ள பொண்ணு பார்க்க வந்துட்டான்?😍😍

ஆனால் பொண்ணு முறைக்குதே?🤔
 
Top Bottom