• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -13

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
320
நான் போடுற கோட்டுக்குள்ளே -13

ஆளாளுக்கு நடந்ததை எண்ணி வருந்திக் கொண்டிருக்க, பேச்சினூடே சேஷாத்ரி பேரனின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளைக் கழுகுப் பார்வையில் பார்த்துக் கொண்டு இருந்தார். விட்டத்தை வெறித்துக் கொண்டு அமைதியாக இருந்தான் சம்பத்.

"நாகரீகம் வளர வளர எல்லாமே மாறிண்டு வருது. இது நல்லதுக்கு தானான்னு புரியலையே?"

"மொபைல மாத்தற மாதிரி இப்போ பார்ட்னர மாத்தற பழக்கம் வந்தாச்சு பாட்டி. சின்ன விஷயத்துக்கு ஒத்து வரலேன்னா கூட, பிடி டைவோர்ஸ் தான். இப்போ இருக்கற நிறைய யங்ஸ்டர்ஸோட டிக்ஷனரில அடாப்ட், அட்ஜஸ்ட், காம்ப்ரமைஸ் இதெல்லாம் கெட்ட வார்த்தைகள். அதை எடுத்துச் சொல்றவா எல்லாரும் பூமர்ஸ்."

"அட ராமா! சண்டை சச்சரவுகளுக்கு நடுல ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து போறது தானே வாழ்க்கை. அப்படி இல்லேன்னா வாழ்க்கை எப்படி நன்னா இருக்கும்? ஆ..ஊன்னா வக்கீலைத் தேடிண்டு போனா என்ன ஆறது? பெத்தவா என்ன தான் பண்றா?"

"அவாளும் குழந்தைகளோட தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆடறா.. வேறென்ன பண்ண முடியும் பாட்டி" என்ற அரவிந்த் இன்றைய இளைஞர்களின் மனநிலையைப் பற்றி ஒரு லெக்சர் கொடுக்க ஆரம்பித்தான். ராஜஸ்ரீயும் கணவனின் லெக்சருக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுத்து உதவி செய்தாள்.

"இன்னைக்கு பசங்க எல்லாரும் அம்மாவைப் போல் கவனித்துக் கொள்ளும் பெண் தேவைன்னு கேட்கறா. அம்மா மேல இருக்கற பிரியம்னு நீங்க நினைச்சிடக் கூடாது. அம்மா என்ன பண்ணுவா.. பிள்ளை என்ன செய்தாலும் அதை எல்லாம் தாங்கிக்கொண்டு அனுசரித்துப் போவா. பிள்ளைக்கு ஆத்துல ராஜ உபசாரம் கிடைக்கும். சாப்பிட்ட தட்டைக் கூட அலம்பாமல் ஜாலியா இருப்பான். அதே மாதிரி வைஃபும் வரணும்னு எதிர்பார்க்கறா"

"இது காலங்காலமா நடக்கற விஷயம் தானே மாப்பிள்ளை. அம்மாவைப் போல பொண்ணு வேணும்னு பிள்ளையார் மாதிரி உட்கார முடியுமா?" என்றார் ராஜலக்ஷ்மி.

"கரெக்ட் தான் பாட்டி. ஆனால், முன்னாடி மாதிரி இல்லாமல் இப்போ கேர்ள்ஸூம் எங்களை அப்பா நன்னா கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போல மாப்பிள்ளை வேணும்னு` கேட்கறா. Dad's little princessனு கேள்விப்பட்டு இருக்கேளா? அவா எல்லாரும் பொறந்த ஆத்துல துரும்பைக் கூட அசைக்காதவா தான். சொல்லப் போனால் அப்பா சப்போர்ட்டோட அம்மாவை வேலை வாங்கறவா. தப்பித் தவறி சமையல் பண்றேன்னு வந்தாலும், எல்லாம் continental தான். சாதம் குழம்புன்னு எதுவும் அந்த சமையல்ல வராது. இது போக, இப்போ இருக்கற சில கேர்ள்ஸூக்கு 'கமிட்மென்ட் போபியா’ இருக்கு. குடும்பம், குழந்தைன்னு எந்த ஒரு responsibilityயும் ஏத்துக்க அவா தயாரா இல்லை" என்று மூச்சு வாங்கினான் அரவிந்த்.

நீண்ட விளக்கம் கொடுத்தவனை, அடப்பாவமே என்று பார்த்தார் பாட்டி.
அரவிந்த் விட்ட இடத்திலிருந்து அவன் மனைவி தொடர்ந்தாள்.

"இந்த பாயிண்ட்ல தான் பிரச்சினை ஆரம்பிக்கறது பாட்டி. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார். அதனாலயே நிறைய கல்யாணங்கள் நின்னு போறது. அதைப் பத்தியும் யாரும் கவலைப் படறதே இல்லை.

இதையெல்லாம் தாண்டி அம்மா அப்பா பார்த்த பையனை ஓகே பண்ணினாலும் அவாளுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு ஒரு வழி ஆக்கிடுறா. நிச்சயத்துக்கு அப்புறம் பேசிப் பழகும் போது சின்னச் சின்ன விஷயங்கள் கூட பிடிக்காமல் போறது. முன்னாடி மாதிரி கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு பெண்கள் ரிஸ்க் எடுக்கத் தயாரா இல்லை. ஸோ, கல்யாணத்தையே நிறுத்திடறா.

இதுல கவனிக்க வேண்டிய பாயிண்ட் என்னன்னா கேர்ள்ஸ் எல்லாரும் சம்பாதித்து பேரன்ட்ஸூக்குக் கொடுக்கற நிலையில் இருக்கா.. அதனால அவா சொல்றதைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் பேரன்ட்ஸ் இருக்கா. கல்யாணத்தை நிறுத்துன்னு அவ சொன்னா அதை அப்படியே கேட்கறதைத் தவிர வேற ஆப்ஷனே கிடையாது."


அது வரைக்கும் அந்த விளக்கங்களை எல்லாம் பொறுமையாகக் கேட்ட ராஜலக்ஷ்மி பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தார். "காலம் அப்படியே தலைகீழா மாறிப் போச்சு. ஒரு காலத்தில் மாப்பிள்ளை ஆத்து மனுஷா ஆடின ஆட்டம் தான் பொண்ணைப் பெத்தவாளை இப்படி மாத்திடுத்து."

"அதெப்படிம்மா அவ்வளவு உறுதியா சொல்றேள்? மாப்பிள்ளையே பொண்ணுக்கு எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணிண்டு வந்த காலமும் உண்டே. அப்போ இந்த பிரச்சனை இருந்திருக்க முடியாதே" என்று மாமியாரின் பேச்சை மறுத்தார் தேவிகா.

"நீ சொல்றது கரெக்ட் தான். எங்க தாத்தா, அப்பா காலத்துல எல்லாம் பெரிய போக்குவரத்து வசதி கிடையாது. பெரும்பாலும் உள்ளூர்லயே வரன் பார்த்துடுவா. பொண்ணுக்கு மாப்பிள்ளை ஆத்துல இருந்து நகையெல்லாம் போட்டு கல்யாணம் பண்ணிப்பா. எவ்வளவுக்கு எவ்வளவு பொண்ணைப் பிடிச்சிருக்கோ அவ்வளவு நகை வரும்."

"அட.. இது இந்த ஐடியா நன்னா இருக்கே.. அந்தக் காலத்தில நான் பொறக்காமல் போயிட்டேனே" என்று ஏகத்துக்கும் வருந்தினாள் ராஜஸ்ரீ.

"ரொம்ப ஃபீல் பண்ணாத. இப்பவே கிட்டத்தட்ட அது தான் நடக்கறது.
உன் பொண்ணு காலத்தில கன்ஃபர்ம்டா அது தான் நடக்கப் போறது. பொண்ணுக்கு பதிலா நீ உன் மாட்டுப் பொண்ணுக்குச் செய்ய வேண்டி இருக்கும்" என்று இடைபுகுந்தான் சம்பத்.

"ம்ச்…"

"சரி சரி.. அக்காவும் தம்பியும் பாட்டியோட ஃப்ளோவ டிஸ்டர்ப் பண்ணாதீங்கோ. நீங்க கன்டிநியூ பண்ணுங்கோ பாட்டி" என்ற அரவிந்தனுக்காகத் தனது பேச்சைத் தொடர்ந்தார் பாட்டி.

சட்டென்று இடைபுகுந்த சம்பத், "உன் கல்யாணக் கதை மாதிரி லாங் ஆன்சரா இல்லாமல் ஷார்ட்டா முடி பார்க்கலாம்" என்று சவால் விட்டான்.

"ஹா ஹா ஹா.. " என்று சிரித்த சேஷாத்ரி, "அது ஒரு கல்யாணம் தான். இது நிறைய ஜெனரேஷனோட கல்யாணம். அவ்வளவு சீக்கிரம் முடிச்சிடுமா உங்க பாட்டியோட ஆராய்ச்சி. பி.எச்டி. லெவலுக்குப் போயிண்டே தான் இருக்கும்.‌நீயே கட் பண்ணினால் தான் ஆச்சு" என்று பேரனைப் பார்த்துக் கண்ணடித்தார்.

கணவரையும் பேரனையும் முறைத்தாலும் ராஜலக்ஷ்மி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

"அப்படி ஒரு வேளை வரன் எதுவும் உள்ளூர்ல அமையலேன்னா அக்கம் பக்கம் இருக்கற ஊர்கள்ல தேடுவா. ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்ச குடும்பமாத் தான் இருக்கும். அப்படி அமையற மாப்பிள்ளைகள், ஆத்துக்காரியோட குடும்பத்தின் மேலயும் பிரியமா இருந்தா. பாரபட்சம் பார்க்காமல் இரண்டு குடும்பத்துக்கும் செஞ்சா.

அடுத்து வந்த எங்க காலத்தில் மாப்பிள்ளைகள் எல்லாரும், தன் மாமனார் தனக்கு நன்றாக வரதட்சிணை, சீர் வரிசை செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தா .

ஆனால் அதுக்காக ஆத்துக்காரிய கொடுமைப் படுத்தலை .
ஜாடைமாடையா தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள் .

மாமனார் தான் எதிர்பார்தபடி செஞ்சா சந்தோஷம். செய்யலேன்னாலும் பரவாயில்லை, கிடைத்தவரைக்கும் போதும்னு தான் நினைச்சா.
மாமியார், மாமனார் கூட இன்னமும் சீர் வகைகளை சேர்த்துச் செய்து இருக்கலாம், எங்க பையனுக்கு இது ரொம்பவே கம்மின்னு அப்பப்போ பேசி ஆதங்கப்படுவாளே தவிர மாட்டுப் பொண்ணை வதைக்கலை. விதிவிலக்குகள் அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்திருக்கலாம். மெஜாரிட்டி மனுஷனா நல்லவாளாத் தான் இருந்தா.

1980கள்ல வந்த அடுத்த தலைமுறைல தான் பிரச்சனையே ஆரம்பிச்சது.
அவா எல்லாரும் பொண்ணை பொண்ணாவே மதிக்கலை. பெண்ணுக்கு ஆடத் தெரியுமா ? பாடத்தெரியுமா ? என்பது முதற்கொண்டு பொண்ணுக்கு கிலோ கணக்கில் தங்கம் , வெள்ளி சீர்வரிசை செய்யவேண்டும். கல்யாணம் பொண்ணாத்துல ஆடம்பரமா பண்ணனும்.

மாப்பிள்ளைக்கு ஸ்கூட்டர் வேணும், கார் வேணும்னு ஆரம்பிச்சு, ஒரு வரையறையே இல்லாமல் ஏகப்பட்ட அடக்குமுறைகளையும் அராஜகங்ககளையும் சர்வ சாதாரணமா பொண்ணைப் பெத்தவா மேல் அள்ளிதெளிச்சுட்டா.

அவா கேட்டதையெல்லாம் செஞ்சு கொடுத்து, கூடவே அவா செஞ்ச அவமரியாதைகளையும் பொறுத்துக் கொண்டு , தான் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன் பொண்ணு நன்னா வாழணும்னு பெத்தவா நிறைய சிரமப்பட்டா.
மாப்பிள்ளை வீட்டார் கேட்டபொழுதெல்லாம் பணத்தை வாரிக் கொடுத்தா. கையில் பணமே இல்லாமல் போனாலும் பொறந்தாத்துல பட்டினியே கிடந்தாலும் கடனை உடனை வாங்கி மாப்பிள்ளையைத் திருப்திப் படுத்தி விட்டா. ஹூம்.. அந்த மாதிரி எத்தனையோ பேரை நானே பார்த்திருக்கேன்" என்று நிறுத்தினார் பாட்டி.

மாமியார் விட்ட இடத்திலிருந்து மருமகள் தொடர்ந்தாள்.

"நானும் என் ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரான்னு நிறைய பெண்களோட லைஃப பாத்திருக்கேன் மா. ஒரு கட்டத்துக்கு மேல பெத்தவாளாள மாப்பிள்ளை ஆத்து பணப் பேராசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய் இதுக்கு மேல கடவுள் விட்ட வழின்னு இருந்தவா நிறைய பேர். எல்லாம் நம்ம பொண்ணோட தலையெழுத்து இல்லேன்னா இப்படியொரு கொள்ளைக்காரக் கும்பல்ல போய் சிக்கி இருப்பாளா? கடவுள்தான் அவளைக் காப்பாத்தணும்னு ஒதுங்கின பெத்தவாளும் இருந்தா.
மகளே! உன் சமர்த்துன்னு, பொண்ணு எப்படியாவது வாழட்டும்னு தங்கள் பாட்டைப் பார்த்துண்ட பெத்தவாளும் இருந்தா.

அந்தப் பொண்ணோ தினம் தினம் மாமியார் மாமனார் நாத்தனார் ஆத்துக்காரர்னு எல்லார் கிட்டயும் வார்த்தையால வதை பட்டுப் போக்கிடம் இல்லாமல் பட்டபாடு இருக்கே, அதையெல்லாம்
சொல்லி மாளாது." தேவிகா நிறுத்த ராஜஸ்ரீ தொடர்ந்தாள்.

"நான் கூட எங்க ஆஃபீஸ் சீனியர்ஸ் கிட்ட கேள்விப்பட்டு இருக்கேன் மா. ப்ரெக்னன்ட்டா இருந்தாலும் மாமியார், மாமனார் முன்னாடி தரைல கூட உட்காரக் கூடாதுன்னு பல மணி நேரம் ஆனாலும் நின்னுன்டே தான் இருக்கணும்னு சொல்லுவா. ஹஸ்பன்டடோட தம்பி, தங்கை கல்யாணத்துக்கு எல்லாம் மாங்கு மாங்குன்னு வேலை பார்க்கணும், அதே நேரத்தில் கூடப்பிறந்வா கல்யாணத்துக்கு கெஸ்ட் மாதிரி போயிட்டு வரணும்னு கூட கண்டிஷன்கள் இருந்ததாம்.

இன்னும் ஒரு விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சது. ஹஸ்பன்ட்டை விட லைஃப் கொஞ்சம் அழகா இருந்துட்டா கேட்கவே வேண்டாம். ஏகப்பட்ட கண்டிஷன்கள், கட்டுப்பாடுகள் அவளுக்கு. தனியா வீட்டைவிட்டு எங்கேயும், பக்கத்தில் இருக்கும் கடைக்கு கூட போகக் கூடாது. ஏன் ஆத்து வாசல்ல கூட நிற்கக்கூடாதுன்னு..
அதே மாதிரி ஹஸ்பன்ட் கொஞ்சம் குட்டையா இருந்துட்டா, அவன் கூட சரிசமமாக நடந்துவரக்கூடாது. பின்னால தான் நடந்துவரணும் அதுவும் கூனிக்குறுகி தன் உயரம் தெரியாதவாறு நடந்து வரணும்னு கூட சட்டம் போட்டு இருக்கா..அட்ராசியஸ்"
என்று பல்லைக் கடித்தாள் ராஜஸ்ரீ.

"இன்னும் கூட இருக்கு.. ஆண் குழந்தை தான் பெத்துக்கணும். பெண் குழந்தையை பிறந்துட்டா அப்படியே பொறந்தாத்துல அவள் இருந்துட வேண்டியதுதான். அப்படியே அவளைச் சேர்த்துண்டாலும் அதுக்கும் பொண்ணைப் பெத்தவா தான் தண்டம் அழணும்."

"இந்த பீரியட்ல தான் நிறைய ஸ்டவ் வெடிச்சது, பொண்ணு மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்திண்டா, நிறைய அடி உதைன்னு சித்திரவதை. பொண்ணா பிறந்ததே பாவம் தான்..'

மாறி மாறிப் பேசிய பெண்கள் மூவரும் போதும் என்று நிறுத்தி விட்டனர்.

"ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கா. விஷயம் என்னன்னா, இதையெல்லாம் செஞ்ச மாப்பிள்ளைகளோட ஜெனரேஷன் தான் இப்போ அப்பாக்களா இருக்கா. முன்னாடி எல்லாம் சொசைட்டிக்குப் பயந்து பெண்வீட்டார் அடிமையாவே இருந்துடறதுன்னு முடிவெடுத்து இருந்துட்டா. இப்போ அப்படி இல்லை

பொண்ணும் சரி பெத்தவாளும் சரி, ஒரு முடிவிக்கு வந்தாச்சு. கல்யாணமே நடக்காட்டாலும் பரவாயில்லை. அராஜகம் பண்ற மாப்பிள்ளை கிட்ட சிக்கிடக் கூடாதுன்னு தெளிவா இருக்கா. அதனால தான் பாரபட்சம் பார்க்காமல் எல்லாரையும் சந்தேகமாவே பாக்கறா. அவாளையும் குறை சொல்ல முடியாது . அவளோட சூழ் நிலை அப்படி" என்று முடித்தான் அரவிந்த்.

"அப்போ அவா அப்படிப் பண்ணினா, இப்போ எங்க டர்ன். நாங்களும் அதையே தான் பண்ணுவோம்னு சொன்னா எப்படி? அது தப்புன்னா இதுவும் தப்பு தானே. இப்படி கண்டிஷன்களோட ஸ்டார்ட் பண்ற வாழ்க்கை எப்படி நன்னா இருக்கும்?" என்றான் சம்பத். என்ன செய்வது, அவன் கவலை அவனுக்கு.

"எல்லாரும் அப்படி இருந்துட மாட்டா ராஜா. நம்ம யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலை. நமக்கு நல்லதே நடக்கும்னு நம்புவோம். அதுக்கு மேல பெருமாள் விட்ட வழி" என்று பேரனைச் சமாதானம் செய்தார் ராஜலக்ஷ்மி.

"பேசாமல் நீயே ஒரு ஆளைப் பாத்துடேன் சம்பத" என்று அவனது அக்கா ஆலோசனை கொடுக்க சம்பத்தின் மனம் பெர்மிஷன் கேட்காமல் அவனது அலுவலகம் சென்றது. 'அவளை எனக்குப் பிடித்திருக்கிறதோ? அதனால தான் கல்யாணம் பற்றிய அவளது எண்ணத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்ததோ?' என்ற யோசனை தோன்றும் போதே மனம் அவளது கண்டிஷன்கள் என்னவாக இருக்கும் என்று ஆராயத் தொடங்கி இருந்தது.

"ஹேய்.. சம்பத் நீ யோசிக்கறதைப் பார்த்தால் ஏதோ விஷயம் இருக்கும் போலத் தெரியறதே? ஹூ இஸ் த கேர்ள்?" என்று ஆர்வமாக வினவிய அரவிந்த்திற்கு ஒரு புன்னகையைப் பரிசாக அளித்தான்.

"அது சரி.. கத்திரிக்காய் முத்தினா கடைக்கு வந்து தானே ஆகணும்" என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்ட அரவிந்த், "வி ஆர் வெயிட்டிங் மேன்" என்று ஒரு பஞ்ச்சுடன் முடித்தான்.

இரவு வெகு நேரம் கண்விழித்து லேப்டாப் சகிதம் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தவன், "யெஸ்.. ஷி இஸ் மை கேர்ள்!" என்ற உற்சாகத்துடன் உறங்கிப் போனான். கனவுகளை எல்லாம் அவளே கலர் கலராக ஆக்கிரமித்தாள்.

அவனது விதியாகப் பட்டது, 'நீ கனவு கண்டு கொண்டிரு மகனே..!' என்று சிரித்தது.

*******
அந்தப் பிரபல மெட்ரிமோனியல் ஓனர் நடத்திய நேர்முகத் தேர்வில் அனுராதா சொன்ன விஷயங்கள் ஏராளம். நினைக்கவே வேடிக்கையாக இருந்தது ரங்கராஜனுக்கு.

"நிறைய விஷயங்கள் நாங்க ஆன்லைன்ல சொல்ல முடியலை. அதுக்கான ஆப்ஷன் இல்லை. மாப்பிள்ளை ஆத்துக்காரா கிட்ட நீங்க சொல்லிடுங்கோ. எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போற பழக்கம் கிடையாது. அதனால் தனிக்குடித்தனம் போற மாதிரி குடும்பமா இருந்தால் தேவலாம்" என்று ஆரம்பித்து, "அவளுக்கும் சமையலுக்கும் ஏக பொருத்தம். அதனால சமையலுக்கு ஆள் இருந்துட்டா பரவாயில்லை,
எங்க பொண்ணு ரொம்ப இன்டிபென்ட்டன்ட். யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறக்காமல் பையன் ஆத்துல சொல்லிடுங்கோ" என்று அவள் சொன்ன விஷயங்களில் தலை சுற்றியது ரங்கராஜனுக்கு.

இதையெல்லாம் தாண்டி ஒரு வரன் மாட்டியது. ஜாதகப் பொருத்தம் பார்த்த பிறகு, சென்னையில் உள்ள காபி டே ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பரஸ்பர அறிமுகத்திற்கப் பிறகு பெற்றோர் ஒரு டேபிளில் அமர, அருகில் இருந்த டேபிளில் சுபிக்ஷா அமர, மாப்பிள்ளை பையன் எதிரில் அமர்ந்து கொண்டான். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, "எனக்கு சில எக்ஸ்பெக்டேஷன்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்கு. என் புரோஃபைல்லயே போட்டு இருந்தேன்" என்று விஷயத்துக்கு வந்தாள்.

"ஹான்.. யெஸ்..‌ பார்த்தேன். எனக்கு எல்லாமே ஓகே தான்" என்று அவசரமாகச் சொன்னவனை வித்தியாசமாகப் பார்த்தாள் இவள்.

"அதுல சொல்லாமல் விட்ட விஷயம் ஒன்னு இருக்கு. நேர்ல தான் அதைப் பத்தி பேச முடியும்றதால சொல்லலை. இப்போ சொல்லலாமா?"

ஏற்கனவே இருந்த கண்டிஷன்களையே கடவுள் விட்ட வழி என்று ஒத்துக் கொண்டிருந்தவன், இப்போது என்ன வரப்போகிறதோ என்று பார்த்தான்.

அவனது வாய் தன்னிச்சையாக "ப்ளீஸ் கோ அகெட்" என்றது.

சுபிக்ஷா பக்கத்து டேபிளில் இருந்த தாயைப் பார்த்தாள். அவள் தலையசைக்கவும் தனது பேச்சைத் தொடர்ந்தாள். கேள்விகளை என்று சொல்ல வேண்டுமோ??

"உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?" என்று இவள் கேள்விகளை அடுக்க, அவன் திடுக்கிட்டுப் போனான்.

இத்தனைக்கும் அந்தப் பையன் வீட்டுக்கு ஒரே வாரிசு. உடன்பிறந்தார் என்று யாரும் இல்லாதவன். அப்படி இருக்க எதற்காக சொத்தைப் பிரிக்க வேண்டும். எல்லாமே அவனுடையது தானே.

"யூ ஸீ மிஸ்.சுபிக்ஷா. நீங்க என் டீடெயில்ஸ் சரியா பார்க்கலைன்னு நினைக்கிறேன். நான் எங்க வீட்டுக்கு ஒரே பையன். சொத்தைப் பங்கு போடற அளவுக்கு அங்கே யாரும் இல்லை. ஹோப் யூ அன்டர்ஸ்டாண்ட்" என்று பொறுமையாகவே விளக்கம் கொடுத்தான்.

"Yeah. I know. ஆனால், பேரன்ட்ஸா இருந்தாலும் ஃபினான்ஸியல் விஷயத்தில் க்ளியரா இருக்கறது பெட்டர்" என்று ஒரு அரும் பெரும் தத்துவத்தை வாய் மொழிந்தாள் அவள்.

இவள் சொத்தைப் பிரிக்க நினைக்கிறாளா இல்லை தாய் தந்தை உறவையா? அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரைப் பார்த்தான். இவளது கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கும் அதிர்ச்சி தான். அது அவர்களின் முகத்தில் பிரதிபலித்தது. அதைப் பார்த்தவன் பதில் சொல்லத் தயங்கினான். அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பில்லுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சட்டென்று எழுந்து போய்விட்டாள். அத்தோடு அந்தப் பேச்சுவார்த்தை முடிந்தது.

அனுராதா பெண்ணின் தைரியத்தை மெச்சி பெருமிதத்துடன் நிற்க, ரங்கராஜனுக்குத் தான் மாப்பிள்ளை வீட்டார் முகத்தில் விழிக்கத் தயக்கமாக இருந்தது. ஒரு தலையசைப்போடு வெளியே வந்து விட்டார். அனுராதாவும் சுபிக்ஷாவும் நிறைய ஆராய்ந்து தேடிக் கண்டுபிடித்த பையன் அவன். அடுத்து வருபவனுக்கு எத்தனை ஆராய்ச்சி நடக்குமோ என்ற கவலை அவருக்கு. அவரது கவலைக்கெல்லாம் அவசியம் இல்லாது, அடுத்த வரன் சீக்கிரமே முடிவாகி நிச்சயதார்த்தம் வரை சென்றது.

பெண்ணுக்குப் புடவை, மாப்பிள்ளைக்கு டிரஸ் இருவருக்கும் மோதிரம் என்று இரு வீட்டாரும் சேர்ந்து தி.நகரைப் பலமுறை வலம் வந்தனர். சுபிக்ஷா தோழிகளுடன் ஊரைச் சுற்றி ஏதேதோ வாங்கினாள். மண்டபம் கிடைக்க வேண்டுமே என்ற கவலையில் திருமண நாளைக் குறித்தவர்கள் மண்டப வேட்டையிலும் இறங்கி இருந்தார்கள்.

ஒரு நாள் இரவு மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டே வந்த சுபிக்ஷா, "அம்மா! Stop the engagement. I don't think that he is suitable for me" என்றாள் கூலாக.

அதாவது இந்தப் பையன் எனக்கு ஏற்றவன் அல்ல, நிச்சயத்தை நிறுத்து என்றாள்
.
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
68
என்னம்மா இது? சுபியோட கண்டிஷன்கள் சொல்லி இந்த சின்ன மனச இப்படிக் காயப்படுத்திட்டீங்க?🥺🙄

சம்பத் உனக்கு கல்யாண யோகம் இல்லடா😄😄
 
Top Bottom