• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
24
தோற்ற மயக்கங்கள் 1


திருவையாற்றுக்கும் தில்லைஸ்தானம் என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் திருநெய்த்தானத்துக்கும் நடுவே இருந்த அந்த பரந்துபட்ட பண்ணை, மாலை மயங்கும் வேளையில், உச்சபட்ச பரபரப்பில் இருந்தது.

பழையகால முறைப்படி தென்னங்கீற்றுப் பந்தல் வேய்ந்து, வெள்ளை வேட்டியால் விதானம் அமைத்து, வாழை மரங்கள், குருத்தோலைத் தோரணங்கள், சர விளக்குகள், குழல் விளக்குகள், சுற்றிலும் உயரமான கம்பங்களில் அமைக்கப்பட்ட ஃப்ளட் லைட்டுகள் என ஆதவன் இருக்கும்போதே கண்ணைக் கூசியது வெளிச்சம்.

உறவினர்கள், நண்பர்கள், பண்ணை மற்றும் ரைஸ் மில்லில் ஊழியம் செய்பவர்கள், ஊர் மக்கள், தொழிலதிபர்கள், கட்சித்தொண்டர்கள், கட்சி சார்பைத் தாண்டிய கரைவேட்டிகள் என ஏராளமான கூட்டம்.

தலைமுறைகளாகப் பாரம்பரிய தேசியக் கட்சியைச் சேர்ந்த, அறுபதாண்டு கால அரசியல்வாதியும், மத்தியில் நிதி, தொழில், பொருளாதாரம், ரயில்வே, இவ்வளவு ஏன், உள்துறை, ராணுவம் என பல துறைகளில் அமைச்சர் பதவி வகித்தவரும், தேர்தலில் ஒன்பது முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான, புருஷோத்தமனின் பொன்விழா திருமண நாள் மற்றும் அறுபதாண்டு கால அரசியல் வாழ்வுக் கொண்டாட்டம் அதிரி புதிரியாகக் களைகட்டியிருந்தது.

நெருங்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கட்சியின் பலத்தை, தனது செல்வாக்கை நிரூபிக்க இந்த கொண்டாட்டங்கள் அவருக்கு ஒரு சாக்கு.

புருஷோத்தமனின் பரம்பரைச் சொத்து அந்தப் பண்ணை. சுத்துப்பட்டு கிராமங்களில் இதைத் தவிரவும் நிறைய நிலபுலன்கள், வீடுகள், தோப்புகள் என ஏராளமான சொத்து. இதையெல்லாம் விடப் பெருமை கோவில் கட்டளைதான்.

புருஷோத்தமனின் தந்தை பிரிட்டிஷ் காலத்திலேயே.
தங்கள் நிலபுலன்களை, பரம்பரைப் பெருமையை காத்துக் கொள்ளவென கட்சியில் சேர்ந்தவர். பிறகு தஞ்சையில் அறுபதுகளில் பெண்களுக்கான கலைக்கல்லூரி ஒன்றைத் தொடங்கினார்.

புருஷோத்தமன் பொருளாதாரமும் சட்டமும் படித்து விட்டு, அமெரிக்கா சென்று மேலாண்மை படித்தவர். படித்த, பணக்கார, செல்வாக்கான குடும்பம். அவர் மனைவி துளசி மட்டுமென்ன, வடபாதிமங்கலம் ஜமீன் குடும்பத்துப் பெண். மகப்பேறு மருத்துவர்.

ஓரளவு பணம் சேர்ப்பதுதான் கடினம். சேர்த்துவிட்டால், அந்தப் பணமே பணத்தை சேர்க்கும். பணம் பணத்தோடு மட்டும்தான் சேரும்.

வெள்ளை வேட்டியும் முழுக்கை சட்டையும் கறுப்பு ஃபரேமிட்ட கண்ணாடியும் (எளிமை!) நெற்றியில் விபூதியுமாக ஹாலில் வந்து அமர்ந்த புருஷோத்தமன் “துளசிமா, ரெடியா, நேரமாகுது பாரு” என மனைவியைத் துரிதப்படுத்தினார்.

கார் சத்தம் கேட்ட நிமிடத்தின் இறுதியில், வேக நடையில் உள்ளே வந்தான் அவரது மகன் அன்புநேசன் (எ) நேசப் புருஷோத்தமன் எம். பி.

“ரெடியாப்பா, தலைவர் தஞ்சாவூர்ல இருந்து கிளம்பியாச்சு. சரியான நேரத்துல வந்துருவார். அம்மா எங்க, இன்னுமா ரெடி ஆகுறாங்க?”

தன் புடவையின் கரையை நீவியபடியே அவனது அம்மா துளசி வர, உடன் வந்த அவனது அக்கா பொன்னி “அம்மா ரெடியாகறது இருக்கட்டும். நீ போய் உடுப்பை மாத்திட்டு, சீக்கிரமா உம் பொண்டாட்டியையும் பொண்ணையும் கூட்டிட்டு வா”

“தம்பி, அருள்மொழிய முதல்ல அனுப்பு. அவன்தான் தலைவருக்கு முதல் மாலை போடணும்” என்றார் புருஷோத்தமன்.

“ம்..ம்” என்ற நேசன் வீட்டினுள்ளே சென்று மாடியேறினான்.

தன் மனைவி, மக்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்தவனின் எதிர்பார்ப்பு பொய்க்காமல், அவனது மனைவி அபர்ணா தயாராகி ஊஞ்சலில் அமர்ந்திருக்க, இருபது வயது மகன் அருள்மொழியும், பதினேழு வயது மகள் அமுதாவும் தங்கள் மொபைலில் ஆழ்ந்திருந்தனர்.

இன்னும் அரைமணியில் அவர்களது தேசியக் கட்சியின் தலைவர் வரவிருக்க, மாலை போட வேண்டிய மகனும், தனிப்பட்ட விழா என்பதால் கடவுள் வாழ்த்துப் பாடவேண்டிய மகளும், உடை கூட மாற்றாது சோஃபாவில் சரிந்திருந்ததைக் கண்டவனுக்கு சுருசுருவெனக் கோபம் ஏறியது.

பிள்ளைகளின் பார்வையிலேயே மறுப்பு தெரிய, மனைவியை ஏறிட்டான். அவளது உணர்வற்ற பார்வையில், மகளிடம் அம்முக்குட்டி, போய் க்விக்கா ரெடியாயிட்டு வா, அப்பாவோட தங்கப்பொண்ணுல்ல, போடா”

“ப்ளீஸ் டாடி, லீவ் மீ டாடி, எனக்கு உங்க கட்சி ஆட்களைப் பார்த்தாலே அலர்ஜியா இருக்கு”

மகனிடம் “அருளு, தலைவர் வர சமயமாச்சுடா, நீதான்டா தாத்தாவோட முன்னுக்கு நிக்கணும்”

“எங்களுக்கு இந்த கூட்டம், கும்புடு போடறது, கால்ல விழறது, கட்டிப் புடிக்கறது, லைம்லைட் இதெல்லாம் வேணாம்னா விடுங்களேம்ப்பா”

மகள் சென்னையின் பிரபலமான பள்ளியிலும், மகன் கோவையிலும் படித்தாலும், அவர்களது சுதந்திரம் கெடக் கூடாதென பள்ளி, கல்லூரி நிர்வாகத்தையும், சில ஆசிரியர்களையும் தவிர, தங்கள் பின்னணியை அதிகம் வெளிக் காட்டாதவர்களை, இந்த நிகழ்ச்சி மூலம் ஒரே நாளில் உலகிற்கே அவர்கள் யாரன்று தெரிவதை அபர்ணாவும், பிள்ளைகளும் விரும்பவில்லை.

அன்புநேசனுக்கும் இது தெரியும்தான். ஆனால், இப்போது காரியம்தான் முக்கியம் என்பதால், மூச்சை ஒருமுறை இழுத்துவிட்டான். அபர்ணாவின் அருகில் வந்து “எனக்கு உடுப்பு எடுத்துக்குடு வா”

குழந்தைகளின் பார்வையைத் தவிர்த்தவள் “ஜவ்வாது பொடி முதக்கொண்டு அங்கேயே ரெடியா எடுத்து வெச்சிருக்கேன்”

“பரவால்ல, நீ வா சொல்றேன்” என மனைவியின் முழங்கையை அழுந்தப் பிடித்ததில், வலி தாங்காததோடு, இவன் விட மாட்டான் என்பதால், எழுந்தவளைக் கிட்டத்தட்ட தள்ளியபடி அந்த ஹாலில் இருந்த மூன்று கதவுகளில் ஒன்றைத் திறந்துகொண்டு அவர்களது தனியறைக்குச் சென்றான்.

சில நிமிடங்கள் சென்று அபர்ணா வெளியே வந்தபோது, உடை மாற்றி விழாவுக்குச் செல்லத் தயாராக இருந்த அருள்மொழியும் அமுதாவும் “மாம்” என அருகில் வந்தனர்.

“ரெடியா, குட்” என்றாள்.

“மாம்”

“என்னடா அருள், என்னத்துக்கு இந்த ஆராய்ச்சிப் டார்வை?”

“யூ ஓகே மா?”

வெள்ளை நிற முழுக்கைச் சட்டை மணிக்கட்டுக்கு சற்று மேலே சுருட்டி விடப்பட்டிருக்க, ரோலக்ஸைக் கட்டியபடி வெளியே வந்த அன்பு நேசன்,

“வாங்க, சீக்கிரம்”

அருள்மொழி “மாம்?”

“ஐ’ம் ஃபைன் டா” என்ற அபர்ணாவின் சேலை மாறி இருந்தது. உடலும் மனமும் உள்ளே அவிழ்த்து எறியப்பட்ட சேலையும் வெகுவாகக் கசங்கிக் கிடந்தது.

தன் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலத்தை வெள்ளைவேட்டி, வெள்ளை சட்டையின் அதிகாரத்தில் மறைத்து, மனைவி மக்களுடன் ஹாலுக்குள் நுழைந்தபடி
“வா அபிம்மா” என்று மனைவியின் தோளில் கை வைத்து அழைத்துச் செல்ல, அவனது தாய் துளசி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

புருஷோத்தமனிடம் பேசிக்கொண்டிருந்த பொன்னியின் கணவன் ஐயாரப்பன், பேச்சை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்க்க, பொன்னி தாயிடம் “மானம் போகுதும்மா” என்று முணுமுணுத்தாள்.

அவர்கள் நினைப்பது போல், அது அதீத அன்பு அல்ல, அடக்குமுறை என்பது அதன் சுவடு தெரியாது புன்னகைத்த அபர்ணாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

அரசியல்வாதிகளால், அரசியல்வாதிகளுக்காக, அரசியல்வாதிகளே ஏற்பாடு செய்த அந்தக் குடும்ப விழா(!), புருஷோத்தமர்களின் திட்டப்படியே இம்மி பிசகாது இனிதே தொடங்கியது.

தலைவருக்கு அருள்மொழி மாலை போட, புருஷோத்தமனும் துளசியும் பொன்னாடை போர்த்தி வரவேற்க, அமுதா விநாயகர் துதியைப் பாட, தலைவர் கையால் உயரமான குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.

சந்தன நிறத்தில், ஐந்தடி நாலு அங்குல உயரத்தில், இளமை ததும்பும் பதின்வயது மகளை இந்தக் கூட்டத்தில் முன்னிறுத்துவதை அறவே வெறுத்த அபர்ணா, இதிலிருந்து அவளை விடுவிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் விரயமானதுதான் மிச்சம்.

பாதுகாப்பு, சுதந்திரம் என்ற பெயரில் இதுநாள்வரை அதிகம் ஊடகங்களின் நிழல்படாது வளர்த்த குழந்தைகளை, பரம்பரை விஸ்வாசத்தைக் காட்டித் தேர்தல் வெற்றியைக் குறி வைத்து சபையேற்றிய கணவனையும் மாமனாரையும்…

மாலை, மரியாதை, பொன்னாடை, புகழுரைகள், இவர்களே செலவு செய்து வாங்கிய மோதிரங்களைத் தலைவர் கொடுப்பது போன்ற பாவ்லா என நீண்டது நிகழ்ச்சி.

“அபிம்மா” என்று அருகில் வந்து அழைத்த நேசப் புருஷோத்தமன்
“அப்பா உன்னை பாட சொல்றாரு, தலைவரே கேட்டாராம், வா” என்றது காதில் விழாததுபோல், அசையாது நின்றவளை, நிகழ்ச்சித் தொகுப்பாளரின்

“அடுத்து, பெருமதிப்பிற்குரிய நமது புருஷோத்தமன் ஐயா அவர்களின் தவப்புதல்வரும், நம் அன்பு அண்ணனுமான திரு நேசப் புருஷோத்தமன் அவர்களின் துணைவியார், கானக்குயில், சங்கீத சூடாமணி திருமதி அபர்ணா அன்புநேசனின் இசைப் பெருக்கு உங்களுக்காக ” என்ற அறிவிப்பில் திகைத்துத் திரும்பிய அபர்ணாவிற்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் கிளர்ந்தது.

அவளது கணவன் என்னவோ, அவனுக்கே இப்போதுதான் தெரியும்போல், தலைவருக்காக… அப்பா சொன்னார் என்று உருக, மேடையில் பக்கவாத்தியக் கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளுடன், அவரவரது இடத்தில் அமர்ந்து ஸ்ருதி கூட்டத் தொடங்கி இருந்தனர்.

மேடையின் அருகே வெளிச்ச வெள்ளத்தில் நின்றிருந்தவளால் தன் சினத்தை, பிடித்தமின்மையை, மறுப்பை முகத்தில் காட்ட இயலாது, அவளை விட வள்ளிசாய் ஒரு அடி உயரம் கூடுதலாக இருந்த கணவனை ஏறிட்டுப் பார்க்க, அகலமான புன்னகையுடன், தாழ்வான, அழுத்தமான குரலில், காதருகே குனிந்து
“போடீ” என்றான்.

மேடையில் அமர்ந்தவள் ஒரு கணம் கண்களை முடித் தன்னை சமன்படுத்திக்கொண்டு பாடத் தொடங்கினாள்.

‘யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு…’

ஏது குறை, என்ன குறை? எதிலுமே குறையில்லைதான். சுற்றமும் நட்பும் வியந்து பார்க்கும் நிலையில், இடத்தில், உயரத்தில், பதவியில், தோற்றப் பொருத்தத்தில் என எதிலுமே குறை இல்லைதான். இன்னும் சொல்லப் போனால் பொறாமை என்று கூடச் சொல்லலாம்.

ஆயின், மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்று ஒன்று இருக்கிறதே!

‘கோவிந்தா, கோவிந்தா’ என நிறைவுசெய்ய, எழுந்த கரவொலி அடங்குவதற்குள், மொழி புரியாத பாட்டைக் கேட்ட பாவத்தைத் தீர்க்க, தலைவரே “எனக்காக, ஒரு மீரா பஜன் பாட முடியுமா?” என பொதுவாக மைக்கில் கேட்க, மறுக்கவா முடியும்?

தலைவரின் கோரிக்கையை நிறைவேற்றிய மனைவியைப் பார்த்த அன்புநேசனின் பார்வையில் இருந்த எள்ளலும் எகத்தாளமும் ‘உனக்கேன் இந்த வீராப்பு?’ என்றன.

பெண்கள் விரைவிலேயே வீட்டுக்குத் திரும்பி விட, அபர்ணா மகளோடு மகன் அருள்மொழியையும் கையோடு அழைத்து வந்துவிட்டாள்.

உள்ளே சென்ற இரண்டாவது நிமிடம் கதவு தட்டப்பட, அவசரமாக உடைமாற்றி, வெளியே வந்தவளைக் கட்டிக்கொண்டு ‘ஓ’ வென அழுதாள் அமுதா.

“அம்மு, என்னடா, ஏன் அழற?”

“..”

“வயித்து வலியா, பீரியட்ஸ் வந்துடுச்சா?”

“...”

“அம்மு, எதா இருந்தாலும் என்னன்னு சொல்லிட்டு அழேன்”

“மாம்” என்ற அருள்மொழி, தன் மொபைலை நீட்டினான்.

புருஷோத்தமனின் பரம்பரை பெருமையும், அமைதியான இல்ல விழாவின் எளிமையான ஆடம்பரமும், விழா நிகழ்வுகளும், அங்கு வந்திருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட விஐபி விருந்தினர்களின் படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் நேரலையானதில், லைக்குகளும் கமென்ட்டுகளும் குவிந்திருந்தன.

‘அசத்திட்டீங்க தலைவரே’

‘பணம் பேசுது’

‘தலைவர் வாழ்க’

‘வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்’

‘மயிருள்ள சீமாட்டி’

பிரமிப்பு, பொறாமை, நன்றியுணர்வு, எளிமையான வாழ்த்து என பல்வேறு வகையான பதிவுகளுக்கு நடுவே, சில வேண்டாத, ஆபாசமான வர்ணனைகளும் விமரிசனங்களும் கலந்திருந்தது.

‘இந்த அரசியல் வியாதிங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகான பொண்டாட்டிங்க கிடைக்கறாளுங்க’

‘உங்கிட்டயும் பணமிருந்தா வருவாளுங்க மச்சி’

கருத்துச் சுதந்திரம் எனும் போர்வையில், எழுபதைத் தாண்டிய துளசியில் தொடங்கி, பொன்னி, அபர்ணா, அமுதா வரை ஆபாச வர்ணனைகள், சைகைகள் கொண்ட இமோஜிக்கள், ஸ்டிக்கர்கள், மீம்கள், GIFகள் என வண்டி வண்டியாக, வண்டை வண்டையாக ஆழ்மன வக்கிரங்களை அரங்கேற்றி இருந்தனர்.

இன்னொருவரின் அந்தரங்கத்தை ஆராய, கடை பரப்ப, பெயரைக் கெடுக்க எத்தனை ஆவலாதி, வேகம்?

பிரபலமாக இருப்பதொன்றும் அபர்ணாவிற்குப் புதிதல்லை. பதின்மூன்று வயதில், இதே திருவையாற்றில், சத்குரு தியாகராஜரின் ஆராதனையில், இருபது நிமிடம் பாடிய முதல் கச்சேரியிலேயே, பத்திரிகையாளர்கள், சபா செயலர்கள், கர்நாடக இசை உலக ஜாம்பவான்களின் கவனத்தைக் கவர்ந்தவள்.

அபர்ணாவின் அழகும், திறமையும், இளமையும் ஈர்த்ததில், அப்போதுமே தொந்திரவுகள் இருந்ததுதான். ஊடகங்கள் இந்த அளவிற்கு வளரவல்லை என்பதால், இதுபோல், எங்கே, எப்படி, என்ன வந்திருக்குமோ என்ற பதைப்பில்லை.

பொதுவாழ்வு என வந்தபிறகு, என்னதான் கடக்கக் கற்றுக்கொண்டாலும், புகைப்படங்களைக் கூட அதிகம் பகிராது, பொத்தி வளர்த்த மகள் அமுதாவை, சமூக வலைத்தளத்தைக் கேடயமாகக் கொண்டு, தங்களை வெளிக்காட்டத் தைரியமில்லாத பொய்முகங்களின் உருட்டும் புரட்டும் கவலையளித்தது.

மகளை முன்னிறுத்த வேண்டாம் என அவள் பயந்து, சண்டையிட்டது இதற்குத்தானே?

அந்த ஐயாரப்பன் சொன்னான் என்றால், இவனுக்கெங்கே போயிற்று புத்தி?

யாரெனக் கண்டுபிடித்து, முடக்கி, அடக்கி விடுவார்கள்தான். அதற்காகத் தனி ஐடி செல்லே வேலை செய்கிறதுதான். ஆனாலும், வருமுன் காப்பதே சிறந்ததல்லவா? இப்பொழுதே எத்தனை பேர்…

கீழே கார்கள் வந்து நிற்கும் சப்தமும், ஆண்கள் உள்ளே வருவதும், செயலர்களும், செக்யூரிட்டி ஆட்களும் வெளியேறுவதும் காதில் விழுந்தது.

“மாம், என் ஸ்கூல்ல…”

“அழாத அம்மு, நத்திங்டா, அம்மா, அப்பாவெல்லாம் எதுக்கு இருக்கோம்? இப்ப அப்பா வந்துடுவாங்க, என்ன செய்யலாம்னு பாக்கலாம். நீ அமைதியா இரு”

இன்டர்காமில் சமையலறைக்கு அழைத்து “சூடா ரெண்டு கிளாஸ் பாலும், ஃப்ளாஸ்க்ல ஸ்ட்ராங்கா டீயும் வேணும்”

விடுவிடுவெனத் தன் மொபைலைக் கையில் எடுத்தவள், “பாலை குடிச்சிட்டு தூங்கப் போங்க. காலைல ஊருக்குக் கிளம்பணும். அம்மு, டோன்ட் ஒர்ரி” என்றபடி, கீழே செல்லப்போக, மொபைல் ஒலித்தது.

‘நடு ராத்திரில யாரு?’

ராகவன், அவளது வலது கை .துடிப்பான, அதி புத்திசாலியான முப்பத்தேழு வயது இளைஞன், மென்பொருள் வித்தகன். ரிஸர்வ் வங்கியை விட அதிகமாக ரகசியங்களைப் பாதுகாப்பவன்.

“என்ன ராகவன், இந்நேரத்துல?”

“மே..ம், வாட்ஸ் ஆப் பாருங்க”

“பார்த்தாச்சு ராகவன், ஐடி செல்…”

“இது வேற மேம், சம்திங் சீரியஸ், ப்ளீஸ்”

“ஓகே, நான் பார்த்துட்டு சொல்றேன்”

அரைகுறை இருளில் பாதிப் படிகளில் நின்று புலனத்தைப் பார்க்க, எக்ஸ் தளம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என வரிசையாக ராகவன் அனுப்பி இருந்த லிங்க்குகளைப் பார்த்தவள்,
‘எவ அவ?’

மிக நளினமான ஒரு பெண், பின் முப்பதுகளில், இருந்தாள். ஹாஃப் ஒயிட்டில் கருப்பு நிற ஜரிகையிட்ட புடவை, கறுப்பும், சிவப்பும் கலந்த பெரிய பொட்டு, அதற்கேற்ற ஆக்ஸிடைஸ்டு வெள்ளி நகைகள் என படு ஸ்டைலாக, உஜாலாவுக்கு மாறியது போன்று வெள்ளையாக இருந்தாள்.

அவளுக்கும் திராவிட மொழிகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது அவளைப் பார்த்தாலே தெரிந்தது. அருகில் கபூர், சிங் தேஷ்பாண்டே, குப்தா, மிஸ்ரா, கௌல் என எந்தப் பயருக்கும் பொருத்தமாக ஒரு தாடிக்காரன்.

இருவரும் உள்ளே வருவதும், அமைதியாக ஆறாவதோ, ஏழாவதோ வரிசையில் ஒரு ஓரமாகச் சென்று அமர்வதும் ஒரு வீடியோவில் இருந்தது.

சில ஃபோட்டோக்களுக்குப் பின் கூட்டம் இல்லாத இடத்தில் அவர்கள் இருவரும் ஒரு காரில் ஏறக் காத்திருப்பதும், அன்புநேசன், நேசப் புருஷோத்தமன், அபர்ணாவின் கணவன், அந்தப் பெண்ணை ஆரத்தழுவி விடைகொடுப்பதான ஒரு வீடியோவும் இருந்தது.

சட்டென மகள் அமுதாவின் பிரச்சனை சிறிதாகத் தெரிய, எலெக்ஷ்னுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், இதென்ன கூத்து?

‘நேசனுடன் இவ்வளவு நெருக்கமாகப் பழகும் இவள் யார்? வீட்டுப் பெண்கள் யாரிடமும் எதுவும் பேசாது, விழாவிற்கு வந்து செல்லக் காரணம் என்ன?’

‘மாமா, அத்தையை கூட வாழ்த்தினாப் போலத் தெரியலயே’

‘ஏதாவது சென்ட்ரல், அல்லது வேற ஸ்டேட் மினிஸ்டரோட மனைவியா இருக்குமோ?’

‘அவங்களை எல்லாம் கட்டிப்புடிச்சா தர்ம அடிதான்”

“குட் நைட் அன்பு, குட்நைட் மாமா” என்ற ஐயாரப்பனின் குரலும் சில நொடிகளில் கீழ்த் தளத்தின் ஒரு அறைக் கதவு சாத்தும் சத்தமும் கேட்டது.

காலடிச் சத்தம் கேட்க, அசையாது நின்றாள். ஒற்றைச் சலங்கைதான் எனினும், இரவின் நிசப்தத்தில் கொலுசும் வண்டி மெட்டியும் ஊஃபர் எஃபக்ட்டில் எதிரொலிக்குமே!

முற்றத்தில் மாடிப்படியின் அருகே உள்புறமாக இருந்த அறைதான் பெரியவர் புருஷோத்தமனுடையது. உள்பக்கமாக வந்த தந்தையும் மகனும் தாழ்ந்த குரலில் பேசுவது, அபர்ணாவுக்குத் தெளிவாகக் கேட்டது.

“அன்பு, அந்தப் பொண்ணு அல்பா லால்வானியை எதுக்குடா கூப்பிட்ட?”

“நான் எங்கப்பா கூப்பிட்டேன், நீங்கதான் இன்வைட் செஞ்சீங்களோன்னு…”

“ஏன்டா அன்பு, இத்தனை கேர்லஸா இருந்தா, அரசியல்ல அறுபது வருஷமா எப்படிடா என்னால தாக்குப் புடிக்க முடியும்?”

“அப்பா, ஒருக்கால் மாமா வேலையா இருக்குமோ?”

“ஐயாரப்பனா, சேச்சே, அவனுக்கு அவளைத் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லைடா…”

“...”

“அன்பு, இது மீடியா கண்ல பட்டிருந்தா, நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்”

“பாத்துக்கலாம்ப்பா”

“சரி, போய் படு. நாளைக்கே கிளம்பணும்னியே”

“நீங்க?”

“அம்மாவும் நானும் நாலஞ்சு நாள் தள்ளி வரோம்.

தந்தை அறைக்குள் சென்றதும், அன்பு நேசன், தன் மொபைலைப் பார்த்துக்கொண்டே மாடிப்படிகளை நோக்கி வருவது தெரிய, அபர்ணா விறுவிறுவென மேலேறி, அவர்களது அறைக்குள் சென்று டீ ஃபிளாஸ்க்குடன் அமர்ந்துகொண்டாள்.

ராகவன் இன்னும் ஆன்லைனில் இருப்பதாகக் காட்ட, ‘கான்டாக்ட் சாரங்கன். சர்ச் அல்பா லால்வானி’ எனத்தகவல் அனுப்பியள், அவன் திறக்காமலே பார்க்க நேரம் தந்து டெலீட் செய்தாள்.

அபர்ணா டீயை கப்பில் ஊற்றிய நேரம் கதவைத் திறந்து உள்ளே வந்த அன்புநேசன், ஓய்வறை சென்று, குளித்துத் துண்டுடன் வந்து அவள் மேல் உரசியபடி அமர்ந்து நிதானமாக “எனக்கும்” என்றவனைப் பார்த்துத் தலையைக் குனிந்தபடி கோப்பையை நிரப்பினாள்.

“ஒருநாள் அந்தப் புடவைலயே இருந்தாதான் என்ன, எப்பப் பாரு இந்தக் கோஷாவ மாட்டிக்கிட்டு” எனத் தன்னோடு அணைக்க, கண்களை மூடிக்கொண்டாள்.

“என்னைப் பாருடீ”

‘இது ஒரு தொல்லை இவனுடன். அல்லக்கைங்களோட இருந்து இருந்து என்னையும் யோசிக்கவும் பேசவும் விடாம… பெரிய ஜால்ராவா வாங்கி அப்படியே ரெண்டு காதுலயும் பொத்தினாப்பல ஓங்கி…’

மனைவியின் கன்னம், கூந்தல், கழுத்து என உரசி மோப்பம் பிடித்தவனை உதறும் உந்துதலை அடக்கினாள்.

இருபத்தியோரு வருட அனுபவத்தில் சீண்டினால் தனக்குதான் சேதாரம் என்பது தெரியும் என்பதால் ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழி?

“அப்புக்குட்டீ, இன்னைக்குப் பச்சைப் புடவைல உன்னைப் பாக்கப் பாக்க…”

‘அபர்ணா, நீ ஏதும் கேட்டுப் பேசிடக் கூடாதுன்னுதான், இப்படி செய்யறான், அந்த அல்பா அல்பத்தை விடு, அம்முவைப் பத்திப் பேசுடீ, முட்டாள்’

“என்னங்க…”

“நேசான்னு சொல்லுடீ”

அன்புதான். ஆனால், அனுசரித்து, ஆதரிக்காத அன்பு. ஆர்ப்பரித்து ஆக்கிரமிக்கும் அன்பு.

அவளைக் குறி வைத்துத் தேடிக் கண்ணி வைத்துப் பிடித்து, மூச்சை முட்ட வைக்கும் அன்பு.
அன்பு நேசனின் அழுத்தத்தில் அபர்ணாவுக்கு மூச்சு முட்டியது.

“நே…சா”

நேசப் புருஷோத்தமனின் அலைபேசி இடை விடாது அதிர, தன் முயற்சி திருவினை ஆகுமுன் தடைபட்டதில், அழைத்தவனையும் அவனைப் பெற்றவளையும் திட்டிக்கொண்டே, எடுத்தவனின் முகம் ஆத்திரத்தில் சிவக்க, *****லி நாய். இதோ, அஞ்சே நிமிஷம்”

பரபரவென உடையணிந்து, எதுவும் சொல்லாது வெளியேறிய கணவனின் ஆவேசத்திலும் வேகத்திலும் அபர்ணா மீண்டும் கவலை மோடுக்கே சென்றாள்.

அதிகாலை ஐந்தரை மணிக்குள், வீட்டுப் பெண்கள், குறிப்பாக மகள் அமுதா தொடர்பான படங்கள், பதிவுகள் அனைத்தும் இணையத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.

அன்புநேசன், அபர்ணா, அருள் மொழி மற்றும் அமுதா நால்வரும் சென்னையை நோக்கித் சிறிது தாமதமாகக் கிளம்பினர்.

காரில் ஏறியதுமே, தனது மூன்று மொபைல்களையும் மனைவியின் கையில் கொடுத்த அன்புநேசன், இரவு முழுவதும் உறங்காததில், சிறிது நேரத்திற்கெல்லாம் சொக்கிவிட்டான்.

MERCEDES G WAGON ஐ, அவர்களது ஆஸ்தான டிரைவர் கணேசன் ஓட்ட, அமுதா தந்தையின் மடியில் சரிந்து உறங்க, அருள்மொழியின் காதுகளில் ப்ளூடூத்.

சில மெயில்கள், தகவல்களை அனுப்பிய அபர்ணா, தன் மென்பொருள் நிறுவன ஊழியர்களிடம் அன்றைய அலுவல்களைக் கேட்டு, சொன்னாள்.

அபர்ணாவின் தந்தை இறந்திருக்க, இரண்டாவது மகளிடம் அமெரிக்கா சென்றிருக்கும் தாயிடம் பேசினாள்.

கைப்பையிலிருந்து மொபைல் ஒலிக்க, அன்புநேசனின் அன்லிஸ்ட்டட் நம்பரில் அழைத்தது, அல்பா லால்வானி.

 

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
75
அருமை 🥰 ஆரம்பமே அசத்தலா இருக்கு 😍 கதையின் தலைப்பு முதல் அத்தியாயத்திலேயே பொருத்தமா இருக்கு 😜

வித்தியாசம் வித்தியாசமான குடும்ப பின்னணிகளை தோல் உரித்து விவரிக்கும் உங்கள் கதை களத்தில் இப்போது ஒரு அரசியல் குடும்பம். அருமையான ஆரம்பம்.
 
Joined
Jun 19, 2024
Messages
8
😍😍😍

யாரோட மயக்கங்கள் தோற்க போகுதுன்னு பார்க்க வெயிட்டிங்...😌😌

 
Top