அத்தியாயம் 1
நீண்ட நேரமாய் அந்த மர நிழலில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்தாள் கவிபாலா. மதிய நேர வெயில் அங்கே அனைவரையும் கண் கூச வைக்க, கொஞ்சமாய் இருந்த நிழலில் அமர்ந்து தனது நினைவுகளை தூசு தட்டி மேலேழுப்பிக் கொண்டிருந்தாள் அவள்.
பெங்களூருவில் பிரபல தொழில்துறை சார்ந்த பூங்காவின் வெளியே தான் அவள் அமர்ந்திருந்தது. வேலை நேர இடைவெளியில் மனம் தன் பாரத்தை இன்று அதிகமாய் உணரவும் இங்கே வந்து தனியாய் அமர்ந்துவிட்டாள்.
பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அலைபேசி சத்தம் எழுப்பவும் அதில் கவனத்தை கொண்டு வந்தவள் அழைப்பது உடன் பணிபுரியும் தோழி என்றதும் தன் அலுவலகக் கட்டிடத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள் அலைபேசியை எடுத்து,
"சொல்லு அபி!" என்றாள்.
"எங்க டி இருக்க? சாப்பிடவும் கூப்பிட்டேன் வர்ல. கேன்டீன்லையும் இல்ல?" அபிநயா கேட்க,
"ம்ம் வர்றேன்!" என்றவள் அபிநயா பேச வந்ததையும் கேட்காது வைத்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தாள்.
விடுமுறை கேட்டு சென்றுவிடலாமா என நினைக்கும் போதே அன்னையின் நியாபகம்.
'யாரோ யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லாருக்கட்டும். அவங்களும் ஏன் நம்ம மாதிரி கஷ்டப்படணும்?' காலையில் தான் அன்னை யமுனா அழைத்து இப்படி கூறி இருக்க,
'ம்ம்ஹும் அன்னைக்கு பதில் சொல்லி முடியாது! கூடவே தன்னாலும் விடுதியில் நிம்மதியாய் இருக்க முடியாது!' என தோன்றவும்
"ப்ச்!" என வெறுப்பாய் தலையசைத்தவள் எழுந்து கொள்ள நினைக்கும் நேரம் அவளருகில் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஒரு ஆண் அமர்ந்தவன் அவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளியில் தனது நீல வண்ண படிப்பு சார்ந்த கோப்பை வைத்துவிட்டு கால்களை நீட்டி, கழுத்தில் கைவைத்து நெட்டி முறிப்பது தெரியவும் தனது அலைபேசியுடன் எழுந்து கொண்டாள்.
யார் என்னவென்றெல்லாம் கவனிக்க நேரமும் விருப்பமும் இல்லை அவளுக்கு. ஏற்கனவே கோவமும் எரிச்சலும் கூடவே அவளறியாமல் அவளுள் சிறு தவிப்பும் என அவள் ஒரு மனநிலையில் இல்லாமல் இருக்க, அருகில் வந்து அமர்ந்தவனை கவனிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை போல.
ஆனால் அவளை கவனித்திருந்தான் அருகிருந்தவன். என்ன விஷயம் என்று தெரியாது தான். ஆனாலும் அவள் எதுவோ குழம்பிக் கொண்டிருக்கிறாள் என புரியாமல் இல்லை அவனுக்கு.
அருகில் வந்து அமர்ந்ததும் திரும்பிப் பார்ப்பாள் தானே! பேசலாம் தானே! என பல நூறு முறை நினைத்து யோசித்து வந்து அமர்ந்தவனுக்கு அவள் கொடுத்தது வெறும் ஏமாற்றம் தான்.
அதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவன் இல்லையே இவன். தன் தேவைக்காக தான் போராட வேண்டும் தானே என நினைத்தபடி அந்த ஐந்து மாடி கட்டிடத்தினுள் செல்பவளை சிறு புன்னகையுடன் பார்த்தவன் தானும் எழுந்து கோப்புடன் உள்ளே சென்றான்.
"அப்படியே போய்ட்டியோனு நினச்சேன்! வந்துட்ட?" வேலையில் இருந்த அபிநயா திரும்பி தன் இடத்தில் அமர்ந்த கவிபாலாவிடம் கேட்க, பதில் கூறவில்லை அவள்.
"திமிரு கூடிப் போச்சுல்ல உனக்கு?" என்று சொல்லி அபிநயா கணினி பக்கம் திரும்ப, அவள் சாப்பிடவில்லை என்பதை அவளருகில் இருந்த அவளின் லஞ்ச் பேக் கூறியது.
"லூசா அபி நீ? சாப்பிட சொல்லிட்டு தானே போனேன்? இவ்வளவு நேரம் என்ன பண்ணின நீ?" கவிபாலா கேட்க,
"மரத்தடில ஞானம் வாங்கிட்டு இருந்தேன்!" என்றவள் நக்கலில் முறைத்த கவிபாலா அபிநயாவின் பேக்கை தூக்கிக் கொண்டு நகர,
"நல்லவேளைக்கு எந்திரிச்சு போனா. இன்னும் அஞ்சு நிமிஷம் சாப்பிடாம இருந்தா என் உசுருக்கு உத்திரவாதம் கிடையாது!" என்று சொல்லி வேகமாய் அவள் பின்னே அபிநயா செல்ல, அனைத்தையும் பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள் கவிபாலா.
கைகழுவி வந்த அபிநயா வேகவேகமாய் உண்ண, "விக்கிக்காம டி! மெதுவா!" என்ற கவிபாலா அதே உணவை தானும் எடுத்துக் கொண்டாள்.
"என்னவாம்? இன்னைக்கு ஆளே சரி இல்ல? பூதம் வந்துச்சா கனவுல?" அபிநயா சாப்பிட்டபடி கேட்க, பதில் கூறவில்லை அவள்.
"உனக்கு பிடிக்கும்னு தக்காளி சாதமும் பொட்டட்டோவும் நானே செஞ்சேன். அம்மா ஹெல்ப் கூட பண்ணல. அநியாய உலகம் தெரியுமா?" அபிநயா சொல்ல,
"பேசாம சாப்பிடு அபி!" என கோபமாய் மட்டுமே கூறினாள் கவிபாலா.
"என்ன பிரச்சனை உனக்கு? இப்பவே சொல்லு! சாப்பிட்டு முடிச்சு பேச எல்லாம் நேரம் இல்ல. ஆல்ரெடி ஒருமணி நேரம் தனியா மரத்தடில தவம் இருந்து காலி பண்ணிட்ட" அபிநயா சொல்ல,
"அதெல்லாம் ஒண்ணுமில்ல!" என்றாள் கவிபாலா.
"ஓஹ்!" என அபிநயா சாப்பிட,
"நான் நல்லா தான் இருக்கேன்!" என்றாள் கோபமாய் கவிபாலா.
"சரி டி! நான் தான் கேட்கலயே! ஏன் கத்துற?" என்றபடி அபிநயா சாப்பிட்டே முடித்திருக்க, இன்னும் கோபம் கவிபாலாவிற்கு.
பக்கத்து டேபிளில் வந்து ஒருவன் அமர, "ஹ்ம்! ஸ்மார்ட் மேன்! நியூ அப்பொய்ன்மெண்ட்டா?" மெதுவாய் முணுமுணுத்து சொல்லி அபிநயா கை கழுவ எழுந்து செல்ல, அதை கவனிக்கவே இல்லை கவிபாலா.
"எல்லாம் என் நேரம்! என் தலையெழுத்து. நான் உண்டு என் வேலை உண்டுன்னு தானே இருக்கேன்! ஏன் என்னையே டார்ச்சர் பன்றாங்க?" என புலம்பித் தள்ளிவிட்டாள் கவிபாலா.
அபிநயா அங்கில்லாதது எல்லாம் அவள் கவனத்தில் இல்லை. இதில் பக்கத்து டேபிளில் இருப்பவனை கவனிக்கவா இவள்? ஆனால் அவன் கவனித்தான். ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனித்தான்.
அவ்வளவு சத்தமாய் அவள் கூறவில்லை என்றாலும் அவனால் அவள் கூறுவதை புரிந்து கொள்ள முடிந்தது.
"ஒருவேளை சாப்பாடு நிம்மதியா உள்ள இறங்குதா?" என்று சொல்லும் போது தன்னையும் அறியாமல் கவிபாலாவிற்கு கண்ணீர் வர, கை கழுவி வந்த அபிநயா, கவிபாலாவின் முன் இருந்த சாதத்தை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட நீட்டி இருந்தாள்.
"வாங்கு டி! பொசுக்கு பொசுக்குன்னு அழுதுகிட்டு!" என்றபடி நீட்ட, கவிபாலா சத்தமில்லாமல் வாங்கிக் கொள்ள டேபிளில் கைமுட்டியை ஊன்றி இவர்களை கவனித்து இருந்தவனுக்கு அவள் அழுகைக்கு காரணம் புரியவே இல்லை எவ்வளவு யோசித்தும்..
"சாப்பிடாம மரத்தடில இருந்தா எல்லாம் சரியாகிடும்னா நானெல்லாம் தூங்காம கொள்ளாம நைட்டெல்லாம் ஆந்தையா மரத்தடில கிடந்திருப்பேன்! எதுக்குமே வழினு ஒண்ணு இருக்குமேனு யோசிக்க மாட்டியா? ஆஊன்னா அழுகை வேற!" என ஏசியபடி முழுதாய் சாப்பிட வைத்தாள் அபிநயா.
"சரி சீக்கிரம் சொல்லு! நம்ம ஹாண்ட்சம் பாஸ் வந்துட போறாரு!" என்று தனது மேல்பதவியில் இருப்பவனை அபிநயா சொல்லிவிட்டு தற்செயலாய் திரும்ப, இன்னமும் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான் பக்கத்து டேபிளில் இருந்த அவன்.
"த்தோடா! யார் டா இந்த பையன்?" என அபிநயா கேட்க,
"ப்ச்! அபி! நான் ரொம்ப சீரியஸா இருக்கேன்! சும்மா என்னை கூல் பண்ண நினைக்காத!" கவிபாலா கூறவும் அவள் சம்மந்தமில்லாமல் பேசுவதை போல பார்த்து வைத்தாள் அபிநயா.
"அட பைத்தியமே!" என தோழியை கூறிவிட்டு மீண்டும் அவனைப் பார்க்க, இப்போது கவிபாலா கூறியதை கேட்டு சிரித்திருந்தான் அவன்.
"கன்ஃபார்ம் வாட்ச் பண்றான். ஏழரையை இழுத்துக்குறான். ஸ்மார்ட்டா இருக்கான்னு சொன்னேன் தான். அதுக்குன்னு இப்படியா?" என உண்டு முடித்த டப்பாக்களை எடுத்து வைத்தவள்,
"கவி! வா போலாம்!" என்று சொல்ல,
"யார் யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு என்ன அபி? எப்படியோ போகட்டும். எனக்கு எதுவும் பிடிக்கல. எங்கேயாவது போய்டலாம் போல இருக்கு!" என்ற கவிபாலாவின் எண்ணமும் மனமும் சுத்தமாய் இந்த சூழலில் இல்லாமல் வேறு எங்கோ சுற்றி வருவதை உணர முடிந்தது அபிநயாவிற்கு.
"அடியேய்! கேட்கும் போதெல்லாம் சொல்லாம இவ வேற!" என எங்கோ வெறித்து பார்த்து பேசிய தோழியை முறைத்துவிட்டு தங்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த புதியவனையும் முறைத்துவிட்டு,
"கவிஈஈஈ!" என உலுக்கியவள்,
"ஏந்திரி அஞ்சலி ஏந்திரு! அந்த கல்யாண கதையை அப்புறமா கேட்டுக்குறேன். இப்போ கேபின் போலாம் வா!" என கவிபாலாவை பிடித்து இழுத்தாள் அபிநயா.
இன்னும் குறையாத கோபத்துடன் எரிச்சலோடு எழுந்த கவிபாலா கைகளைப் பிடித்தபடி அபிநயா அந்த புதியவனை தாண்டிக் கொண்டு செல்ல,
"ண்ணா! காபி ரெடியா?" என அவர்கள் தன்னை கடந்து செல்லவும் கத்தினான் வேண்டுமென்றே அவன்.
சட்டென்று நின்றுவிட்ட கவிபாலாவின் விழிகள் அங்கும் இங்குமாய் உருள, திரும்பவா வேண்டாமா என ஒரு போராட்டம் மனதில்.
நூறு சதவீதம் நிச்சயம் இது அவன் குரலே தான்! அதை மறக்க முடியாதே! ஆனால் அவன் எப்படி இங்கே? என சில நொடிகளுக்குள் மனம் எங்கெங்கோ சுற்றி கண்கள் சுழல அவள் நிற்க,
"பைத்தியமே! வந்து தொலையேன் டி!" என தோழியை இழுக்க முயன்று தோற்று அபிநயா நின்றுவிட்டாள்.
"இப்ப தான் கவனிக்கிறிங்களா? ஓகே ஓகே! மெதுவாவே வாங்க!" மீண்டும் அவன் குரல்.
"கவி! என்ன டி பண்ற நீ?" அபிநயா அவளின் கன்னம் தட்டி கேட்கவும் அவள் கைகளை விலக்கிய கவிபாலா மெதுவாய் அவன்புறம் திரும்பினாள்.
அவன் தான். அவனே தான். வந்துவிட்டான் என ஒரு மனம் ஆசுவாசம் கொள்ள, இன்னொரு மனமோ எதற்காக வந்திருப்பான் என அடித்துக் கொள்ள அவனைப் பார்த்தபடி கவிபாலா நிற்க, புருவங்களை உயர்த்தி அவளை ஏறிட்டான் அவன்.
"உனக்கு தெரிஞ்சவங்களா?" இவள் பார்வையை வைத்து அபிநயா கேட்க,
"சித்தார்த்!" என்றவள் குரல் கேட்காவிட்டாலும் தன் பெயரை அவள் கூறியதை உணர்ந்தவன் முகத்தில் அத்தனை கனிவான மென்புன்னகை.
"ஓஹ்!" என தலையாட்டி,
"ஆமா சித்தார்த் யாரு?" என அப்போதும் அபிநயா கேட்க,
'கவிபாலா சித்தார்த்! சொல்லு பாலா!' என்று கேட்டு நின்றது சித்தார்த்தின் மனம்.
"அவர்கிட்டயே கேட்டுக்குறேன்!" துறுதுறுவென பேசி அவளே முடிவை எடுத்து சித்தார்த்தின் முன் சென்று நின்ற அபிநயா,
"சார் நீங்க?" என்று கேட்டும் வைக்க, கவிபாலா நின்ற இடத்தில் இருந்து அகலவே இல்லை.
கையில் இருந்த கோப்பை அவன் உயர்த்தி காட்டி "நியூ ஒன்! ஜாயின் பண்ணனும்!" என்று மட்டும் கூறினான் சித்தார்த்.
"பொண்ணுங்களை இப்படி பாக்குறது தப்பு சார்!" அபிநயா சொல்ல, ஒற்றைப் புருவத்தை அவன் கேள்வியாய் உயர்த்த,
"இப்ப இல்ல! கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தீங்க தானே? அக்சுவல்லி நாங்க பேசினதை கூட கேட்டிங்கனு நினைக்குறேன்!" என பட்பட்டென்று அபிநயா பேசிவைக்க, திடுமென்றிருந்தது கவிபாலாவிற்கு தான்.
'கேட்டுக் கொண்டிருந்தானா?' என அவள் விழி விரித்தாள்.
தொடரும்..