• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உருகியோடும் 9

Sungudi

Moderator
Joined
Apr 6, 2025
Messages
20
9. சித்திரம் பேசுதடி

கல்யாண முருகனுக்கு அபிஷேகம் செய்யவென ஒரு லிட்டர் பாலை வாங்கிக் கொண்டு அன்றைய பொழுது கொஞ்சம் சீக்கிரமாகவே வேலைக்கு கிளம்பினாள் சித்ரா. முகுந்தன் மற்றும் சித்ராவின் திருமணம் நடந்தது அந்த சன்னதியில் தான். ஏனோ அந்த முருகரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டால் உனக்கு பால் ஊற்றுகிறேன் என்று அதே முருகனிடம் எப்படி வேண்டிக் கொண்டோம் என்பது புரியவில்லை. இருந்தாலும் அது அவளது பழக்கமாயிற்றே, சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே, விரைவாக கோவிலுக்குச் சென்று பாலை அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள் சித்ரா.

முகுந்தன் போட்ட கையெழுத்தையும், அவன் மீது காவல்துறையில் இருக்கும் வழக்குகள், ஆதாரங்களையும் வைத்து ஆறு மாதம் அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் விவாகரத்து வாங்கிவிடலாம் என்று சொல்லியிருந்தார் வழக்கறிஞர். சித்ராவுக்கு கடந்த ஓரிரு நாட்களாக அவள் உடலில் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. லேசாகத் தலை சுற்றுவது போலவும் அவ்வப்போது குமட்டுவது போலவும் இருந்தது. அன்று மிகவும் சோர்வாக இருந்தது. முக்கியமான கூட்டம் ஒன்று இருப்பதாக அவளது கம்பெனியில் சொல்லி இருந்தார்கள், அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக வரவேண்டும் என்றார்கள். அதனால் ஓய்வுக்கு கெஞ்சிய உடலைத் தட்டிக் கொடுத்து, எழுப்பி ஆட்டோவில் ஏறி சென்று கொண்டிருந்தாள்.

கோவிலில் பாலைக் கொடுத்துவிட்டு வந்தவுடன் இன்னும் சோர்வு அதிகமாகியிருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் சிரமப்படுவதைப் பார்த்த பூபதி வழக்கமாகச் சொல்லும் கரடுமுரடு வழி இல்லாமல் இன்னொரு சுற்று வழியைத் தேர்ந்தெடுத்தான். “ஏன் பாதை மாறிப் போறீங்க?”

“இல்ல நீங்க டயர்டா இருக்க மாதிரி இருந்துச்சு.. அதுல போன கடமுடன்னு இருக்கும்.. தூங்குறதுனா ஒரு பத்து நிமிஷம் தூங்குவீங்கல்ல.. அதுதான்” என்றான்.

சரி என்று கண் மூடினாள் சித்ரா. அவள் தூக்கத்திற்குள் தான் நுழைந்திருப்பாள், வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. வாயை மூடிக்கொண்டு ஓங்கரிப்பை அடக்கினாள். ஆட்டோவை ஓரமாக நிறுத்தினான் பூபதி. *என்னோட சீட்டுக்கு பின்னாடி இருக்கிற ஜிப்பை கொஞ்சம் திறங்க, அதுல எலுமிச்சம் பழம் இருக்கும் அதை எடுத்து கொஞ்சம் முகர்ந்து பார்த்துக்கோங்க, அப்படியே புளிப்பு சாக்லேட் இருக்கும், எடுத்து வாயில போடுங்க, வாமிட் வராது”

அவன் சொன்னபடியே செய்தாள் சித்ரா. “எனக்கு வாமிட் வரப்போறது உங்களுக்கு எப்படி தெரியும்?”

“ஏங்க நான் என்ன செவிடா? எனக்குத் தான் காது கேட்குமே.. அதுவும் போக எல்லா ஆட்டோவும் பிரசவத்துக்கு மட்டும் தான் இலவசம். என்னோட ஆட்டோ மாசமா இருக்கிறவங்க செக்கப்புக்கு போறதுக்கு இலவசம்.. சொல்லுங்க, உங்களுக்கும் ஹாஸ்பிடல் போறதுன்னா எப்ப வேணா இலவசமாக வந்துக்கலாம்” என்றான்

அப்படி இருக்குமோ என்ற சந்தேகம் பூபதியின் கேள்வியால் உறுதியானது. தான் கர்ப்பம் தானா? அது ஆட்டோக்காரனுக்கு தெரியும்படியாகவா நடந்து கொண்டோம்? சத்தியபாமாவும் சுப்பம்மாளும் கேட்டார்கள் தான். “எப்பம்மா பீரியட்ஸ் வந்துச்சு?”

“குளிச்சியா டீ இந்த மாசம்?”

திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பு மாதவிடாய் வந்த ஞாபகம். அதன் பின் வரவில்லை. இப்போது நான்கைந்து நாட்கள் தள்ளிப் போயிருந்தது. ஏதோ சந்தேகம் வந்து கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தை வாங்கிக் கையில் வைத்திருந்தாள். அதைப் பரிசோதித்துப் பார்ப்பதில் அவளுக்கு ஒரு மனத்தடை. உறுதியாகிவிட்டால் என்ன செய்வது? வைத்துக் கொள்வதா, வேண்டாமா என்று முடிவு செய்துவிட்டு அதன் பின் பரிசோதித்துக் கொள்ளலாம் என்று ஒரு முழு நாளைக் கடத்தியிருந்தாள்.

இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது தான் மட்டுமே என்று அவளுக்கு உறுதியாகத் தோன்றியது. சுப்பம்மாளும், சத்தியபாமாவும் என்ன சொல்வார்கள் என்பது தெரியவில்லை. மகனின் வாரிசு என்பதால் ஒருவேளை வைத்துக் கொள்ளலாம் என்று சத்தியபாமா சொல்ல வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், ‘அவனோட ரத்தம்.. ஒரே ஒரு சதவீதம் வாய்ப்பா அவனை மாதிரி இருந்துச்சுன்னா என்ன பண்றது? வேண்டாம்’ என்று சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர் கணவரையும் மகனையும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்தப் பக்கம் அப்படி என்றால் அம்மாவின் நிலைமையும் அப்படியாகத் தான் இருக்கும். ‘ஒரு உயிரை அழிக்கிறதா?’ என்றும் சுப்பம்மாள் சொல்லலாம், ‘அவனே இல்லைன்னு ஆயிடுச்சு, குழந்தை எதுக்கு’ என்றும் சொல்லலாம்.

வழக்கமாகப் பயணிகள் பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டான் பூபதி‌ இப்போது அவள் பதிலே பேசாமல் வரவும் லேசாகத் திரும்பிப் பார்த்தான். குழப்ப ரேகைகள் ஓடிய அவள் முகத்தைப் பார்த்து, “எனக்குத் தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க.‌ நீங்க விரும்பினா சாயங்காலம் பார்க்கலாம்” என்றான்.

அதிகம் உரிமை எடுத்துக் கொள்கிறானோ என்று கோபமாக வந்தது சித்ராவுக்கு. “அதெல்லாம் வேண்டாம், நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

“அட! தப்பா ஒன்னும் சொல்லலீங்க. சோர்வு அசதிக்குக் கூட வைத்தியம் பாப்பாங்க. என் கஸ்டமர் யாரு கேட்டாலும் அந்த டாக்டர் கிட்ட தான் போகச் சொல்லுவேன். டயர்டா இருந்தீங்களேன்னு சொல்லிட்டேன், மன்னிச்சுக்கோங்க” என்றுவிட்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான். எத்தனை கஷ்டத்தில் கூட நின்றிருக்கிறான், இதுவரை ஒரு வார்த்தை தவறாகப் பேசியிருப்பானா, நல்ல மருத்துவரிடம் கூட்டிப் போகிறேன் என்று தானே சொல்கிறான் என்று நினைத்தவள்,

“உங்க வாட்ஸப் டிபில பூபதி டிஆர்னு போட்டிருந்துச்சு. நான் கூட டிரைவர்னு நினைச்சேன்.. இப்பதானே தெரியுது அது டாக்டர்னு..” என்றாள் சித்ரா.

அவளது சமாதான முயற்சி பூபதிக்குப் புரிந்தது. “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” என்ற பாடல் வரிகளை மெல்லிய குரலில் பாடினான்.

‘நல்லாத்தான் பாடுறீங்க’ என்று சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டு விட்டாள் சித்ரா. திருமண வாழ்க்கை சரியில்லாத பெண் கர்ப்பம் தரித்தால் வெளியில் சொல்வதா வேண்டாமா என்று குழப்பம், ஏதாவது ஒரு ஆண் இயல்பாகப் பேசினால் பதில் சொல்வதா வேண்டாமா என்று குழப்பம். இதைப் போன்ற தயக்கங்கள் எல்லாம் என்னைப் போன்ற நிலையில் இருக்கும் ஒரு ஆணுக்கு இருக்குமா என்று யோசித்தாள்.

அதற்குள் அவளது நிறுவனம் வந்திருந்தது. மணிமேகலையும் அப்போதுதான் வந்திருந்தாள். இருவரும் உள்ளே நுழைய, நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் வழக்கமான வழக்கத்தின்படி தரையில் இருந்த கற்களில் முதல் கட்டம், மூன்றாவது கட்டம் என்று தாண்டித் தாண்டி நடந்தாள் சித்ரா.

“அட! என் குட்டிப் பாப்பா மறுபடியும் எட்டு வச்சு நடக்க ஆரம்பிச்சிருச்சு” என்று அவள் தோளில் கைபோட மணிமேகலை வர, “ஐயோ அக்கா! பார்த்து கோட்டுல மிதிச்சிடப் போறேன்” என்றாள் சித்ரா.

“என்னடி.. ஏதோ மீட்டிங்காம் இன்னிக்கு? இதுவரைக்கும் நம்மை எல்லாம் மீட்டிங் கூப்பிட்டதே இல்ல..?” என்று மணிமேகலை கேட்க, “தெரியலைக்கா” என்றாள் சித்ரா.

குடும்பப் பிரச்சினைகளில் மூழ்கி இருந்ததால் நிர்வாகத்தில் நடக்கும் சில விஷயங்களைஅவள் கவனிக்கவில்லை. மணிமேகலைக்கும் குடும்பத்தில் ஏகப்பட்ட பிக்கல் பிடுங்கல்கள். அவளும் வந்தோமா, வேலையைப் பார்த்தோமா, போனோமா என்று இருக்கத்தான் விரும்புவார்கள்.

முதலாளி ரவீந்திரன் கூட்டத்தில் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்து சுமார் 120 பெண்கள் காத்திருந்தார்கள். அவர்களுடைய நிறுவனம் மொத்தமாக நைட்டிகள் தயாரிக்கும் நிறுவனம். பருத்தித் துணிகளை மில்களில் இருந்து மொத்தமாக வாங்கி வருவார்கள். அதை வெட்டுவதற்கு என்று ஒரு குழு இருக்கும். கைகள் தனியே, உடற்பகுதி தனியே தைப்பதற்கு ஒரு குழு. பட்டன், ஜிப் வைப்பதற்கு இன்னொரு குழு. பரிசோதனை செய்து, தேய்த்து, மடிப்பதற்கு ஒரு குழு. கடைசியாக லேபிள் ஓட்டவும், பேக் செய்யவும் இன்னொரு குழு. இப்படியாக அந்தப் பெரிய கூடம் போல் உள்ளது ஆலையில் அத்தனை பெண்கள் வேலை செய்வார்கள்.

ஆங்காங்கே ஒரு சில ஆண்கள் இவர்களுக்கு கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள். நீண்ட நாட்கள் பணிபுரிந்த சில பெண்களும் அங்கே கண்காணிப்பாளர்கள் தான். மணிமேகலை தான் சித்ராவின் குழுவிற்குக் கண்காணிப்பாளர். இன்னும் ஆறு மாதம் வேலை பார்த்தால் சித்ராவும் பதவி உயர்வு பெற்று விடுவாள். மாநிலம் முழுமைக்கும், சமயங்களில் நான்கைந்து மாநிலங்களுக்கு கூட இவர்கள் நிறுவனத்தில் இருந்து நைட்டிகள் விற்பனை ஆகின்றன.


சித்ராவுக்கு, அளவாக வெட்டப்பட்ட துணியைத் தைக்கும் பணி. அவள் வேலைக்குச் சேர்ந்த போது ஒரு நைட்டி தைப்பதற்கு ஐந்து ரூபாய் தான் கூலியாக இருந்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து பதினைந்து ரூபாய் வந்திருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு பெண் நாற்பது நைட்டி வரை தைப்பார். சமயங்களில் ஐம்பது கூட தைக்க முடியும். எப்பொழுதும் ஸ்விட்ச் போட்டால் போல் ஒரே சீராக வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். இதுவரை இப்படி கூட்டம் என்று யாரையும் கூப்பிட்டதில்லை. முதலாளியைப் பார்த்தே பல நாட்களாகியிருக்கும்.

“வணக்கம் முதலாளி, வணக்கம் முதலாளி!” என்ற குரல்கள் தொடர்ந்து ஒலிக்க, ரவீந்திரன் உள்ளே வந்து அமர்ந்தார். அனைவருக்கும் தேநீர் கொடுத்த பின் முதலாளி தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். “இந்த இடம் எங்க அப்பாவோட பூர்வீக சொத்து. நான்தான் நாற்பது வருஷமா ஃபேக்டரி போட்டு அனுபவிச்சிட்டு வரேன். என் தம்பிக்கு பாதி நிலத்துக்கு வாடகை மாதிரி பணம் குடுத்துட்டு வரேன், ஆனா அவன் இப்ப இந்த நிலத்தில் தான் எனக்குப் பங்கு வேணும்கிறான். எவ்வளவோ பேசிப் பார்த்தாச்சு, முடியல. அதனால இப்ப இந்த ஃபேக்டரி இருக்குற இடத்துல பாதிய அவனுக்கு கொடுக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். அதனால் ஆர்டர், இயந்திரங்களுடைய எண்ணிக்கையைப் பாதியாக் குறைக்கப் போறேன். பாதி பேருக்கு மேல என்னால வச்சு வேலை பார்க்க முடியாது. உங்களுக்கெல்லாம் வேற வேலைக்கு ஏற்பாடு பண்றேன். இதைச் சொல்றதுக்கு ரொம்பவே சங்கடமா இருக்கு. சூழ்நிலை அப்படி. எல்லாரும் என்னை மன்னிக்கணும்”

தொழிலாளர்கள் மத்தியில் குசுகுவென்ற சத்தம் எழுந்து, பலத்த சத்தமாக மாறியது. அனைவரும் ஒருசேர அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு பெண் எழுந்து நின்று, “என்னங்க ஐயா! இப்படி சொல்லிட்டீங்க? உங்க கம்பெனிங்கிறதால தான் வேலைக்கு அனுப்பறாங்க. வேற எங்கேயும் இவ்வளவு பாதுகாப்பு இருக்குமா?” என்க,

“அரை வயிறு கஞ்சி குடிக்கிறதே உங்களால தான் சார்..”

“இங்க பாதி பொண்ணுங்களோட புருஷன்மாரு குடிகாரனுங்க.. இங்க மிஷின் ஓடுறதனால தான் எங்க வீட்ல அடுப்பு எரியுது”

“ஐயா, அப்போ புதுசா வேலைக்கு சேர்ந்தவங்களை வேலையை விட்டு தூக்கிடுவீங்களா? பாதி சம்பளம் கூட கொடுத்தா போதும் ஐயா.. வேலையை விட்டுத் தூக்காதீங்க!” இப்படிப் பல குரல்கள் கிளம்பின.

முதலாளி பதில் பேசாமல் இருந்தார். திடீரென ஒரு மௌனம் அங்கே நிலவியது.

“அப்போ இந்த தையல் மிஷினை எல்லாம் என்ன செய்வீங்க சார்?” என்று ஒரு வித்தியாசமான குரல் மௌனத்தைக் கிழித்துக்கொண்டு ஓங்கி ஒலித்தது.

அனைவரின் பார்வையும் அங்கே திரும்ப, சித்ரா தான் அந்தக் கேள்வியைக் கேட்டவள். “சித்திரை வடிவு தானேம்மா உன் பேரு? இவ்வளவு சத்தமா பேசுவியா நீ? உன் குரலையே இதுவரைக்கும் நான் கேட்டதில்லையேம்மா?” என்றார் முதலாளி. அங்கே இருந்த பலருக்கும் அதே எண்ணம் தான்.

“மிஷன் எல்லாம் வந்த விலைக்கு விக்க வேண்டியது தான். இல்ல குடௌன் மாதிரி ஒரு இடத்தில் அடைச்சுப் போட்டுட்டு, இங்கே ஓடுற மெஷின்கள் பழுதாச்சுன்னா அதுல இருந்து பார்ட்ஸ் எடுத்து மாட்டிக்க வேண்டியது தான். வேற என்ன பண்றது?” என்றார் சீனியர் மேலாளர். அவருக்கும் வயது அறுபதை நெருங்கியிருந்தது. இள வயதுக்காரனான இன்னொரு மேலாளர், சீனியர் சூப்பர்வைசர் ஒருவன் இருந்தான். ஐம்பது, அறுபது எந்திரங்கள் தான் ஓடப் போகின்றன என்றால் முதலில் விழப்போகும் விக்கெட் அவராகத் தான் இருப்பார். அதற்கு மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தார்.


“சார் இடப்பிரச்சினை மட்டும் தானே சார் உங்களுக்கு? பத்துப் பத்து மெஷினா பிரிச்சு வெளிய குடுங்க சார்.. நீங்க வேலையிலே‌ இருந்து எடுக்கப் போறவங்கள அவங்களே ஒரு இடம் ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க. அவங்க வீட்லயோ, இல்ல ஊர்ப் பொது இடத்தில் எடுக்கட்டும். நாலஞ்சு பேர் சேர்ந்து வாடகைக்கு ஒரு கடையோ வீடோ எடுத்து அங்க வச்சு கூட தைக்கட்டும். இப்ப இருக்குற மாதிரியே பத்து மிஷினுக்கு ஒரு சூப்பர்வைசர் மட்டும் குடுங்க சார். முத்துப்பாண்டி அண்ணன் தான் சலிக்காம வண்டியில அங்கேயும் இங்கேயும் அலைவாரே.. அவர் எல்லாம் இடங்களுக்கும் வந்து பார்த்துக்கட்டும்.. மத்த இடத்துல தச்ச நைட்டிகளை நம்ம கம்பெனில கொண்டு வந்து கொடுக்குறோம் சார்” என்றாள் சித்ரா.

ஒரு குண்டூசி விழுந்தால் கூட துல்லியமாகக் கேட்கும் அந்த அளவிற்கு அங்கே ஒரு மௌனம் பரவியது. “கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கும்மா. ஆனா நடைமுறையில் சாத்தியமா? உங்க வீட்ல எத்தனை மெஷின் போட முடியும்? ரெண்டு? மூணு? அங்க வந்து எத்தனை பேர் வேலை செய்வாங்க? அதெல்லாம் இன்னைக்கு சரியா வரும், நாளைக்கு சரியாக வரும், நீண்ட நாளுக்கு ஒத்து வராது” என்றார் முதலாளி.

“சார் முயற்சி பண்ணிப் பாருங்க சார். சும்மா மூளையில் போட போற மெஷின்களை பயன்படுத்திக்கலாம்ல சார். டெபாசிட் எதுவும் கட்டணும்னா நான் கட்டுறேன். எங்க மாமியார் வீட்ல சைடுல பெரிய இடம் இருக்கு. தகர ஷீட், ஓலைக் கொட்டகை எதுவும் போட்டுக்கலாம் சார். இந்த ஃபேக்டரில் கழட்டுற ஷீட் கொஞ்சம் தந்தா கூட பயன்படுத்திக்கலாம் சார். சரியா வரலைன்னா அதுக்கப்புறம் நிறுத்திக்கலாம்” கடகடவென்று சொன்னாள் சித்ரா‌. லேசாக அடி வயிறு வலிப்பது போல் இருந்தது அவளுக்கு.

“சரிம்மா நீ சொல்லச் சொல்ல எனக்கும் ஆசையாத் தான் இருக்கு. இந்த கம்பெனியில பாதியைக் குறைச்சிட்டேன் அப்படிங்கிற பேரை விட புதுசா நாலஞ்சு யூனிட் போட்டுட்டாரு ரவீந்திரன்னு வெளியே பேசினா எனக்குப் பெருமை தான். இன்னும் சுய உதவிக் குழு லோன் அது இதுன்னு நிறைய இருக்கு. தெரிஞ்சவங்க அதிகாரிகளா இருக்காங்க.. நிச்சயம் பண்ணலாம்மா.. இந்த யோசனை எனக்கு வரவே இல்லையே.. இந்தப் பொண்ணு தவிர வேற யார் யாரு இதை மாதிரி செய்றதுக்கு தயாரா இருக்கீங்கன்னு பாருங்க” என்றார்.

பெண்கள் அவர்களுக்குள்ளாகவே, “என்னடி உங்க ஏரியால ஒரு கடைய வாடகைக்கு பிடிச்சுருவோமா? நம்ம சமுதாய நலக்கூடம் இருக்குல்லக்கா? அங்க கேட்டு பார்ப்போமா?” என்று திட்டமிட ஆரம்பித்திருந்தனர்.

“வேற என்ன உதவி நான் உனக்கு பண்ணனும்னு சொல்லு”

“எல்லா உதவியும் நீங்க தான் சார் பண்ணனும். முக்கியமான உதவி, மணிமேகலை அக்காவை எங்க யூனிட்க்கு தந்துடுங்க.. அவங்க இருந்தா எங்களுக்கு யானை பலம்” என்றாள் சித்ரா சிரிப்புடன்.

“வேற யாரும் எதுவும் கருத்து சொல்றீங்களா?”

“எங்க வீட்டுக்காரர் ஏற்கனவே என்னைத் தனியா தையல் கடை‌ ஆரம்பிக்கச் சொன்னாரு சார்.. கேட்டு பார்க்கிறேன்” என்றாள் ஒரு பெண்.

வயதான மேலாளர், “என் மனைவியும், என் பொண்ணுங்களும் தைப்பாங்க சார்.. எங்க வீட்ல கூட மாடியில் ஒரு யூனிட் போடலாம்” இப்படியாக அறுபது பேரை வேலை நீக்கம் செய்வதற்காக என்று கூட்டப்பட்ட கூட்டம், ஆறு ஏழு புது யூனிட்டுகள் துவக்கத்திற்கு வித்திட்டது.

“ரொம்ப சந்தோஷம்மா சித்ரா” என்று முதலாளி ரவீந்திரன் கைதட்ட, எல்லா பணியாளர்களும் மனமுவந்து சித்ராவுக்காகக் கை தட்டினார்கள். தரையில் அமர்ந்து கொண்ட சித்ராவைக் கிள்ளி, “அடி என் தங்கம்! எவ்வளவு அறிவா பேசுது! என்னடி மாயம் நடந்துச்சு?” என்று மணிமேகலை சொல்ல,

‘வயித்துல ஒரு புள்ள வந்தது போல் இருக்கு அக்கா.. அதான் பொறுப்பும் வந்துடுச்சு போல’ என்று சொல்ல நினைத்து தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள் சித்ரா. அவள் மனம் பணத்திற்கு என்ன செய்வது என்று கணக்குப் போட ஆரம்பித்தது. தனக்கு தன் நகைகள் போதும். அதில் ஒன்றிரண்டை அடகு வைத்து விட்டு, அந்த பேங்க் மேனேஜர் மேடம் கொடுப்பதாகச் சொன்ன கடனை மத்த பெண்களுக்கு வாங்கிக் கொடுக்க‌ வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். இந்தப் பயணத்தில் கண்டிப்பாக தனக்கு குழந்தை தேவையா என்று கேள்வி அவளுக்குள் எழுந்தது. வயிறு வலி இன்னும் அதிகமானது போல் இருந்தது.

பின்னால் அமர்ந்திருந்த பெண், “சித்ரா உனக்கு பீரியட்ஸா? கறை பட்டிருக்கிற மாதிரி தெரியுது” என்றாள்.

கூட்டம் முடிந்தது கழிப்பறைக்குள் நுழைந்த சித்ரா அதிகமான ரத்தப்போக்கைக் கண்டு கொண்டாள். குழந்தையா என்ன என்பது தெரியவில்லை, என்றாலும் இப்போது இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அழுகையும் நிம்மதியும் ஒரு சேர வந்தது. அம்மாவை போலவே கழிப்பறை குழாயைத் திறந்து வைத்துக் கொண்டு அந்த சத்தத்தில் அமிழ்ந்து போகிறான் போல் ஓவென்று அழுது தீர்த்தாள்.

“சித்ரா! என்னடி உள்ளே போய் ரொம்ப நேரம் ஆச்சு?” என்று மணிமேகலை கதவைத் தட்ட,

“ரெண்டு நாளா வயிறு கடமுடான்னு இருந்துச்சு.. அப்புறம் சரியாயிடுச்சு” என்றாள்.

பூபதி சொன்ன மருத்துவரைப் போய்ப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும், சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும், நான் நன்றாக இருந்தால் தானே புதிதாக எடுத்துக் கொண்ட பணியை நல்லபடியாகச் செய்ய முடியும், இப்போது ஒன்றுக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன, இரண்டிலும் சிரிப்பு மலரச் செய்ய வேண்டும் என்று நினைத்து, கொண்டு வந்த மதிய உணவை எடுத்து நன்றாக மென்று, ரசித்து உண்ண ஆரம்பித்தாள்.

தொடரும்.
 

Author: Sungudi
Article Title: உருகியோடும் 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
துணை இன்றி
தவிக்கும் தாய்க்கு
தான் பாரம் ஆகாமல்
தானே கலைந்து விட்டது.... 😭
 
Top Bottom