• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Sungudi

Moderator
Joined
Apr 6, 2025
Messages
20
8. கால தேவனின் தர்ம எல்லைகள்

“என் மேல உனக்கு கோபமே இல்லையாம்மா? என்னைத் திட்டல.. அடிக்கல.. ஏன்மா?” அம்மாவின் மடியில் படுத்திருந்தாள் சித்ரா. சுப்பம்மாள் அவள் தலையை கோதிக் கொண்டிருந்தார்.

“கோபம், வருத்தம் எல்லாம் இருக்குதும்மா.. ஆனா என்ன பண்றது? நிதர்சனமா யோசிக்கணுமே? எத்தனை வீட்ல இதை விட நிலைமை மோசமா இருக்கு? ஏற்கனவே திருமண வாழ்க்கை சரியில்லன்னு அம்மா மடியில ஆறுதல் தேடி வர்ற பிள்ளைகளை அம்மாவும் கரிச்சுக் கொட்டினா அது ஆறுதலுக்கு எங்கே போகும்? நான் பேச ஆரம்பிச்சா என் கட்டுப்பாடு இல்லாம வார்த்தைகளைக் கொட்டிடுவேன்.. நான் சொல்ற ஏதாவது ஒரு வார்த்தை உன்னைப் புண்படுத்தி, உன்னைக் கஷ்டத்துல இருந்து வெளியே வர விடாம பண்ணிடுச்சுன்னா? அதான் அமைதியா இருக்கேன். ஆயிரம் தான் இருந்தாலும் என்னுடைய மக நீ”

இத்தனை அன்பைத் தாள முடியவில்லை சித்ராவுக்கு. அவளுடைய நிறுவனத்தில் காதல் திருமணம் செய்தவர்களைப் பார்த்திருக்கிறாள். அதற்கு எதிர்வினையாக அவரவர் வீட்டில் இருந்து வந்த மிரட்டல்கள், உருட்டல்கள், சாபங்கள் அத்தனையையும் பற்றிக் கேட்டிருக்கிறாள். தனக்குக் கிடைத்திருக்கும் குடும்பம் எப்பேற்பட்டது? கொஞ்சம் அதை மதித்து நடந்திருக்கலாமோ? பேசி முடிவு செய்து, பின் திருமணம் செய்து கொண்டிருக்கலாமோ? ‘தாலி கட்டிட்டுப் போய் நின்னா எதுவும் சொல்ல மாட்டாங்க’ என்று முகுந்தன் சொன்னதைக் கேட்டிருக்கக் கூடாதோ?, அன்னைக்கும் மேலாக மாமியார், அவருடைய பாசம், அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு இதற்கெல்லாம் தனக்குத் தகுதி இருக்கிறதா? கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது சித்ராவுக்கு.

“அம்மா! வாய்விட்டுத் திட்டும்மா.. ரெண்டு அடியாவது அடிம்மா, அப்பதான் எனக்குக் கொஞ்சம் மனசு ஆறும்”

“எனக்கு ஏற்பட்டிருக்குற வலி பெருசு.. அதைச் சொன்னா உனக்கு இன்னும் மனசு வலிக்கும்.. அதனால இப்படியே இருந்துக்கலாம். விடு!”

அன்னை தூக்கத்தில் புலம்புவதையும், குளிக்கும் பொழுது குழாயைத் திறந்து வைத்துக் கொண்டு அந்த சத்தத்தில் ஏதோ பேசுவதையும் சித்ரா கவனித்திருந்தாள். தன்னைத் திட்டுவதை அடக்கிக் கொண்டுதான் தனியாகப் புலம்புகிறாளோ, அது அம்மாவின் உடல்நலத்தை பாதித்துவிடக்கூடாது என்ற கவலை அவளுக்கு. செய்து வைத்திருக்கும் செயலின் குற்றவுணர்வு இன்னமும் அவளைத் தாக்கியது.

“இட்லிப் பொடி திரிச்சு வச்சிருக்கேன். வேலைக்குப் போகும்போது டப்பால போட்டு ஞாபகமா கொண்டு போ. அத்தை கிட்ட குடுத்துடு. அவங்க வேற தனியா செஞ்சிட்டு இருக்கப் போறாங்க” என்றார் சுப்பம்மாள்.

சத்தியபாமா சிறைக்குப் போய் விட்டு வந்து இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருந்தது. இருந்த பொருட்களை வைத்து ஏதோ சமைத்து, எப்படியோ சாப்பிட்டது குறைந்து, இரண்டு வீடுகளிலும் அவசியமான பொருட்களை வாங்கவும், செலவழிக்கவும் துவங்கியிருந்தனர்.

அத்தையை நம் வீட்டுக்குக் கூட்டிப் போவோம் அல்லது நான் அத்தையுடனே இருக்கிறேன் என்று சித்ரா கூறிய போது சுப்பம்மாள் கை பிசைந்து நின்றார். சத்தியபாமாவே ஒரு தீர்வைச் சொன்னார். “சனி, ஞாயிறு முழுக்க அம்மா கூட இரு. திங்கட்கிழமை அங்கிருந்தே வேலைக்குப் போ. திரும்பி வரும்போது நம்ம வீட்டுக்கு வந்துரு. மூணு நாள் நம்ம வீட்ல இருந்துட்டு, அடுத்து வியாழக்கிழமையோ வெள்ளிக்கிழமையும் மறுபடியும் அங்க போயிரு.. நான் சனி ஞாயிறுகள்ல ஒரு வேலைக்குப் போகலாம்னு இருக்கேன். ஒரு டியூஷன் சென்டர். திறக்குறது, க்ளீன் பண்றது, நிர்வாகம் பாக்குறது எல்லாம் என்னோட பொறுப்பு தான். பரீட்சைகளுக்காக கோச்சிங் கொடுக்குறாங்க. சனி ஞாயிறு மட்டும் தான் அங்கே கிளாஸ் இருக்கும். அதுபோக மத்த நாட்கள்ல இங்கே பக்கத்தில் ஏதாவது வேலையைத் தேடுறேன்” என்றார் சத்தியபாமா. இந்த ஏற்பாட்டின் படி தான் கடந்த சில வாரங்கள் சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

அவ்வளவுதானா, முகுந்தன் வரவே இல்லையா, தொடர்பு கொள்ளவே இல்லையா, சத்தியபாமா சொன்னது பலித்து விட்டதா என்று நீங்கள் கேட்கலாம். தொடர்பு கொண்டான் தான். தெரியாத எண்ணில் இருந்து ஒரு முறை சித்ராவைத் தொடர்பு கொண்டான். எப்படி இருக்கிறாய், மன்னித்துக்கொள் என்றெல்லாம் எதுவும் பேசவில்லை. ‘உன்னோட நகைகளை எடுத்துட்டு வந்துரு, கம்பபெனில எதுவும் லோன் போட முடியும்னா அதையும் போட்டு வாங்கிட்டு வா. நாம எங்கேயாவது போய் இருந்துக்கலாம்’ என்றான். ஒரு முறை பிறந்த வீட்டிலிருந்து ஓடி வந்தாயிற்று, இப்பொழுது பிறந்த வீடும், புகுந்த வீடும் சேர்ந்து தன்னை அரவணைக்கிறது. மீண்டும் இன்னொரு முறை அதே தவறைச் செய்வதா? அதிலும் நகையை எடுத்துக் கொண்டு வா, உன்னால் எவ்வளவு பணம் புரட்ட முடியும் போன்ற வார்த்தைகள் முகுந்தனின் உண்மை முகத்தை மற்றுமொரு முறை அவளுக்குத் தோலுரித்துக் காட்டின.

“ராங் நம்பர்!” என்று சொல்லிவிட்டு வைத்து விட்டாள். சலனம் இல்லாதிருந்த ஒரு தினத்தில் நேரிலும் வந்தான் முகுந்தன். வார இறுதிகளில் சித்ரா அவள் அம்மா வீட்டில் இருப்பதைப் பார்த்துவிட்டு, அங்கு தான் இருக்கிறாள் போலும் என்று நினைத்து ஒரு திங்கட்கிழமை இரவு தன் வீட்டிற்குள் ரகசியமாகப் புகுந்தான்.

அவன் குடியிருந்த வீடு தானே, கள்ளச் சாவி இல்லாமல் இருக்குமா? வைத்திருந்தான். சொந்த வீட்டிற்குள் திருடன் போல் நுழைந்து, மெல்ல சத்யபாமாவின் உடமைகளுக்குள் அவன் துழாவிக் கொண்டிருக்கையில் விளக்கைப் போட்டு அதிர்ச்சி கொடுத்தார் சத்தியபாமா.

“பணம் எதுவும் இருக்கான்னு பார்க்க வந்தேன்” நேரடியாக அவன் சொன்னதும், அங்கு தான் தங்கியிருந்த சித்ராவும் விழித்தெழுந்து வந்தாள். திருடன் போல் சொந்த வீட்டில் நுழைந்திருந்த முகுந்தனைப் பார்த்தது அவளுக்கு வெறுப்பு மண்டியது.

முகுந்தன் வந்தாலும் வருவான் என்பதை சத்தியபாமாவும் சித்ராவும் எதிர்நோக்கியே இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பாக அதே தெருவில் சற்றுத் தள்ளி வசிக்கும் வள்ளி பதுங்கிப் பதுங்கி இரவு கவிழ்ந்த நேரம் அவர்கள் வீட்டுக்கு வந்தார். சத்தியபாமா இந்த உலகில் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் வெகு சிலரில் வள்ளியும் ஒருவர். முன்பு, “நீ நாசமாப் போகணும், உன் வம்சமே விளங்காது” என்றெல்லாம் மண்ணை வாரித் தூவி சாபமிட்டவர்.

தலையை அடமானம் வைத்து சொந்த வீடு வாங்கி இந்தப் பகுதிக்கு வந்த புதிது. இங்கே இனிமேல் தன்னை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைத்திருந்தார் சத்தியபாமா. அங்கும் தூக்கம் வராமல் செய்தவன் வள்ளி கணவன். அவ்வப்போது சத்தியபாமாவிடம் வந்து நூல் விட்டுப் பார்ப்பான். ‘தனியா இருக்கிற பொம்பள, துணை வேண்டாமா?’ என்பான். நன்றாகத் திட்டி விட்டுவிடுவார் சத்தியபாமா. அவனது தொல்லை தாங்க முடியவில்லை என்று மகளிர் காவல் நிலையத்தில் கூட சொல்லி வைத்திருந்தார். ஆனால் வள்ளியோ இருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற கதையை நம்பி விட்டார். அதன் தொடர்ச்சியாகத் தான் பலமுறை சத்தியபாமாவின் வீட்டில் வந்து சாபம் விட்டார் வள்ளி.


இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்வது போல் வள்ளியின் கணவர் இவர்களுக்கு செய்திருக்கும் அநியாயம் கொஞ்சநஞ்சம் இல்லை. முகுந்தனை வழக்கில் மாட்டி விட்டதே அவர்தான் என்றும் சத்தியபாமாவுக்கு ஒரு சந்தேகம் உண்டு. அவன் செய்வது ஒன்றென்றால் இவன் அதைப் பத்தாகப் பேசி ஏரியாவில் முகுந்தன் இப்படித்தான் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறான். அதை சத்தியபாமாவிடம் சொன்னவர்கள் உண்டு.

திடீரென எதிர்பாராத விருந்தாளியாக வள்ளி வந்ததும் கேள்வியாகப் பார்த்தார் சத்தியபாமா. இருந்தாலும் மரபு காரணமாக, “வாங்க உட்காருங்க” என்றார். “இல்ல, இருக்கட்டும்” என்ற வள்ளி, அரவம் கேட்டு உள்ளிருந்து வந்த சித்ராவை பார்த்து, “மருமகளா? நடந்ததெல்லாம் கேள்விப்பட்டேன். இனிமேலாவது நல்லா இருக்கணும்!” என்றார்.

அதன் பின், “நான் வந்தது யாருக்கும் தெரிய வேண்டாம். என் வீட்டுக்காரர் உங்க மகன் கூட கொஞ்ச நாளா ஃபோன்ல பேசுறாப்ல தெரியுது. உங்களுடைய நடமாட்டம் பத்தி எல்லாம் பேசுறார்.. உங்களுக்கு எதிரா எதுவும் செஞ்சுரக்கூடாதுல்ல.. அதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். முன்னாடி உங்களைப் பத்தி தப்பா நினைச்சது நிஜம். அடுத்து உண்மையைப் புரிஞ்சுக்கிட்டேன். உங்களுக்கு சாபம் விட்ட நேரமோ என்னவோ, என்னோட இரண்டு பிள்ளைகளுக்கும் குழந்தை இல்லை. மாறி மாறி கரு உருவாகி கலைஞ்சுடுது. உங்க வம்சம் தழைக்காதுன்னு நான் சாபம் விட்டது தான் காரணம்னு என் கூடப் பிறந்தவங்க சொல்றாங்க. என் வீட்டுக்காரர் கிட்ட குறைய வச்சுக்கிட்டு உங்களைப் பேசியிருக்கேன். பழசை மனசுல வச்சுக்காதீங்க. சூதானமா இருந்துக்கோங்க. ஏதோ இந்த உதவியை உங்களுக்கு செஞ்சாலாவது என்னால நிம்மதியா இருக்க முடியும்னு தோணுச்சு. அதான் சொல்றேன். வரேன்” என்று விட்டுச் சென்றார்.

“எப்பவாவது கடவுள் நமக்கு கைத்தடி மாதிரி யாரையாவது அனுப்புவார்ன்னு நான் சொல்லுவேன் பாத்தியா, எதிரியா இருந்தாலும் அவங்க சொல்றதை கெட்டியா பிடிச்சுக்கணும்” என்றார் சத்தியபாமா சித்ராவிடம். அதிலிருந்து சத்தியபாமாவும் ஜாக்கிரதையாகத் தான் இருக்கிறார். ஏற்கனவே முகுந்தனிடமிருந்தும், அந்தப் பெரிய மனிதனிடமிருந்தும் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ஆட்டோவில் தான் சித்ராவை வேலைக்கு அனுப்புகிறார். அம்மா வீட்டுக்குச் சென்றாலும், அங்கிருந்து வந்தாலும் பூபதியின் ஆட்டோவில் போய் வருமாறு ஏற்பாடு செய்திருக்கிறார்.

மனதில் ஒரு ஓரத்தில் கணவன் திருந்துவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்திருக்க வேண்டும். இப்போதும் இருட்டில் நுழைந்து தன்னைத் தேடாமல் பணத்தைத் தேடியது அவளுக்கு அந்தக் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் துடைத்துப் போட்டது. “ஓ! நீயும் இங்கே தான் இருக்கியா? வசதியாப் போச்சு அன்னைக்கே சொன்னேனே உன் நகைங்களையும் எடுத்துட்டு வா, கம்பெனியில் எதுவும் லோன் போட முடியும்னா அதையும் போட்டுக் கொண்டு வான்னு.. மாட்டேன்னுட்ட.. இப்ப என்ன, என் வீட்ல வந்து சொந்தம் கொண்டாடிக்கிட்டு இருக்க?” என்றான் முகுந்தன். தாலி கட்டியாயிற்று, குடும்பம் நடத்தியாயிற்று என்பதற்காக அவள் தனக்காகக் காத்திருப்பாள், தான் என்ன செய்து விட்டு வந்தாலும் ஏற்றுக்கொள்வாள் என்றுதான் நினைப்பு அவனுக்கு.

பணம் கொண்டு வரச் சொன்னான் என்ற தகவல் சத்யபாமாவிற்குப் புதியது. ஏன் என்னிடம் சொல்லவில்லை என்பதாக சித்ராவைத் திரும்பிப் பார்த்தார். சத்தியபாமாவின் பார்வையை உணர்ந்திருந்தாலும், அவருக்கு நேரடியாக பதிலளிக்காத சித்ரா, “அதான் அன்னைக்கே சொன்னேனே.. ராங் நம்பர்னு.. நீங்க என்ன சொன்னாலும் நம்புற சித்ரா இப்ப செத்துட்டா. என்னால எங்கேயும் வர முடியாது. நான் உங்களை எப்பவோ வெறுத்தாச்சு”

“ஓ! எங்க அம்மாவுடைய போதனையா.. நான் என்ன செஞ்சாலும் தடை சொல்ற முதல் ஆள் அவங்க தான்” என்று சத்தியபாமாவையும் முறைத்தவன், “போனா போ! நான் இப்ப ஹைதராபாத்ல இருக்கேன். அங்கே என்னைச் சுத்தி வர ஆயிரம் பொண்ணுங்க இருக்காங்க. பழமொழி கேள்விப்பட்டதில்லை? மொட்டை மாடியில் சோத்த போட்டா ஆயிரம் காக்காய்னு? காசை வீசினால் யார் வேணா வருவாங்க.. நஷ்டம் உனக்குத்தான்”

எவ்வளவோ மனம் இரும்பாகி விட்ட நிலையிலும் சத்தியபாமாவுக்கு வலித்தது. “நீ எல்லாம் உருப்படவே மாட்ட டா! பூப்போல பொண்ணு டா அது. அதை கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்த நேரம் நீ விளங்கிடுவேன்னு நம்பினேன்.. ம்ஹ்ம்.. என்னைக்குத் தான் நான் நம்பினது நடந்திருக்கு.. உனக்கும் எனக்கும் இனிமேல் சம்பந்தமில்லை. புள்ளையா எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன்னா, போற முன்னாடி இதோ இதுல எல்லாம் கையெழுத்து போட்டுட்டுப் போயிடு. என்னைக்காவது நீ இப்படி வருவேன்னு தெரியும். அதான் விவாகரத்துப் பத்திரம் தயாரா அடிச்சு வச்சிருக்கேன். ஆறு மாசமோ ஒரு வருஷமோ இதை வச்சு கோர்ட்டில் போட்டு, நீ வராமலேயே அவளுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்துடுவேன்.. அதான் போலீஸ், ஜெயில், வக்கீல் எல்லாம் நீ எனக்கு பழக்கிக் குடுத்துருக்கியே.. அடுத்து நானே அவளுக்கு ஒரு நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்.. இனிமே உன் வாழ்க்கையில இந்த அம்மாவும் இல்லை, சித்ராவும் இல்லை. காலம் மாறுது. ஆம்பளைங்க நீங்க நினைச்ச மாதிரி தான் வீட்டுப் பெண்கள் இருக்கணும்னு இனிமே எதிர்பார்க்க முடியாது”

அடுத்தும் ஒரு சில வார்த்தைகளை பேசத்தான் செய்தான் முகுந்தன். கேட்கத்தான் இவர்கள் இருவரும் தயாராக இல்லை. சித்ராவுக்குக் கொஞ்சம் முகுந்தனைப் பார்க்க பாவமாக இருந்தது அவன் எப்படியோ இவள் உண்மையாகக் காதலித்தாளே.. ஆனால் அம்மாவும், மாமியாரும், தோழிகளும் மாற்றி மாற்றி அவள் காதில் சொன்ன விஷயங்கள் அவள் மனதில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது. ‘எப்பவாவது நம்மைத் திருத்திக்கிறதுக்கு வாய்ப்பு அமையும், அதையும் விட்டுட்டு அப்புறம் வருத்தப்படக்கூடாது’. ‘கைத்தடி மாதிரி ஏதாவது மனுஷங்க கிடைப்பாங்க அதை கெட்டியா புடிச்சுக்கணும்‌’

இப்போது சத்தியபாமா தனக்கு வழிகாட்டுகிறார், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். “முருகா! எப்படியாவது இவனை விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட வை”

*என்ன சித்ரா? உன் முடிவும் இது தானா?” முகுந்தன் கேட்க,

“பாத்தா தெரியல.. நீ கையெழுத்து போடணும்னு கடவுள் கிட்ட வேண்டுறேன்”

“அதானே! நீ தான் கடவுள் கிட்ட பேசுவியே.. அவங்ககிட்ட டீல் கூட போடுவியே.. கையெழுத்து போட்டா எனக்கு என்ன தருவீங்க?”

“இப்பவும் டீல் பேசுற பாத்தியா? அதான் உன்னைக் காட்டிக் கொடுக்காமல் விடுறோம்னு சொல்றேனே.. அதுதான் உன் கையெழுத்துக்கு நான் கொடுக்கப் போற விலை” என்று சொன்னார் சத்தியபாமா.

தான் வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்த்தான் முகுந்தன். இது பரம்பரைச் சொத்து இல்லை. சத்தியபாமா நினைத்தால் தான் தனக்குக் கிடைக்கும். இனிமேல் தான் என்றுமே இங்கு வரப்போவதில்லை என்று மனதில் பட்டது. இருவர் முகங்களையும் பார்த்தான். ‘ரொம்பத் தான் கஷ்டப்படுத்திட்டோம் போல’ என்ற எண்ணம் ஒரு சதவீதம்அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். பரபரவென்று கையெழுத்து போட்டுவிட்டுக் கிளம்பினான்.

சத்தியபாமாவும் சித்ராவும் கதவை நன்றாகத் தாழ் போட்டுவிட்டு கூடத்திலேயே படுத்து ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி மீதமுள்ள இரவைக் கழித்தனர். ஏதோ ஒரு வகையில் இருவருக்கும் நிம்மதியாக இருந்தது. இப்படி முகுந்தன் வந்ததையும், கையெழுத்து வாங்கியதையும் சுப்பம்மாளிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சத்தியபாமா. விவாகரத்து வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்பது அவரது முடிவு.

மறுமணம் பற்றி அடிக்கடிப் பேசினார். அதில் சித்ராவுக்கு ஒப்புதல் இல்லை. “அந்தக் கல்யாணம் நடந்தே ஒன்றரை மாசம் தான் ஆச்சு. நினைவிருக்கா? அதுக்குள்ள அடுத்த கல்யாணம் பத்திப் பேசாதீங்க. நீங்களே சொல்லுவீங்கள்ல.. எனக்கு வயசு குறைவுன்னு.. உலக அனுபவத்தைக் கொஞ்சம் நானும் கத்துக்குறேன்” என்று அவர் வாயை அடைத்து விடுவாள்.

வார நாட்களில் பக்கத்தில் ஒரு பாலர் பள்ளியில் ஆயா வேலைக்குச் சேர்ந்தார் சத்தியபாமா. சித்ராவின் நகைகளை கொண்டுபோய் அருகில் உள்ள ஒரு வங்கியில் லாக்கர் துவங்கி அதில் வைத்தார்.

“அத்தை.. வெறும் அஞ்சு பவுன் தானே.. இப்ப எதுக்கு தேவையில்லாத செலவு?”

“இது பாதுகாப்புக்காக நம்ம கொடுக்கிற முதலீடும்மா. தேவைக்கு எடுத்துக்கலாம். இந்த அஞ்சு பவுன், பின்னாடி அம்பது பவுன் ஆகட்டும்”

“தங்க நகை அவ்வளவு முக்கியமா?”

“நம்ம நாட்டு நிலைமையில தங்கத்துக்கு எப்பவுமே மதிப்பு அதிகம் இப்ப உனக்கு நான் உரிமையா இருக்கிறது இது ஒன்றுதான்.. தேவைப்பட்டால் முதலீடாவும் வச்சுக்கலாம், அதே சமயம் கழுத்தில் கையில் இருந்தா ஆபத்து தரக்கூடியதும் அதுதான். பின்னாடி நிறைய பணம் வர்ற மாதிரி இருந்தா பணமா சேர்த்து பேங்க்ல போட்டு வச்சுக்கோ.. மாசா மாசம் சேமிக்கவும் வசதி இருக்கு.. வருமானத்தில் பாதியை சேமிக்கணும்.. அதுதான் நல்லது” தனக்குத் தெரிந்த பொருளாதாரத்தைச் சொல்லிக் கொடுத்தார்.

வங்கியின் மேலாளரும் ஒரு பெண்தான். “பெண்களுக்குக் கம்மி வட்டியில் தங்கக் கடன், தனிநபர் கடன் குடுக்கிறோம்.. எதுவும் சுய தொழில் செய்வதாக இருந்தா பயன்படுத்திக்கோங்க” சொல்லி அனுப்பினார்.

“ஐயோ! அந்த எண்ணமெல்லாம் இப்ப இல்லீங்க மேடம்!” என்று சொல்லி விடை பெற்றார்கள். அவர் சொன்னபடி தான் நடக்கப் போகிறது, விரைவில் முற்றிலும் வேறு பாதையில் பயணிக்கப் போகிறோம் என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை.

-தொடரும்
 

Author: Sungudi
Article Title: உருகியோடும் 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
வீட்டை விட்டு வெளியேறிய பல வஞ்சிகளின்
வாழ்வு இப்படித்தான்
வீணாகி போகிறது....
வாழ்வின் பிடிப்பாக
வாழ்ந்து முடிந்த
வாழ்ந்து கொண்டிருக்கும்
தாயும் அத்தையும் இரு பெண்மணிகள்
வாக்கு உண்மையோ உண்மை....
 
Top