• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Sungudi

Moderator
Joined
Apr 6, 2025
Messages
20
உருகியோடும் மெழுகு போல 4

4. சிட்டுக்கு சிறகு முளைத்தது

“இருந்தாலும் நம்ம பிள்ளைங்க ரெண்டு பேரும் இப்படி செஞ்சிருக்க வேண்டாம் அண்ணி, என் பையன் தான் இதுக்கெல்லாம் காரணமா இருப்பான். சின்னப் புள்ள.. அதோட மனச கலைச்சிட்டான். மன்னிச்சுக்கோங்க” திருமணம் முடிந்த மறுநாள் விடிந்திருந்தது. முந்தைய நாளின் கலக்கங்கள் அவர்களிடம் இருந்து மறைவதாக இல்லை. நினைத்து நினைத்து சத்தியபாமா, சித்திரை வடிவுவின் அம்மா சுப்பம்மாள் இருவரும் பேசி மனதை ஆற்றிக் கொண்டனர். அல்லது, அப்படி ஆற்றிக் கொண்டதாக நினைத்தனர்.

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க அண்ணி. எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்குவோம். கிட்டத்தட்ட நம்ம ரெண்டு பேரு குடும்பமும் ஒரே நிலைமைல தான் இருக்கு. நானும் ஒத்தப் பொம்பளை, நீங்களும் ஒத்த பொம்பளை. பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கோம்.. அதுலயும் நீங்க தங்கமான மாமியாரா இருக்கீங்க. இப்படி வேற வீட்ல நடந்திருந்தா என்ன சொல்லி இருப்பாங்க என் பொண்ணை? மயக்கிட்டா, மனசைக் கலைச்சிட்டா அப்படின்னு பொம்பளப் புள்ளையத் தான் குறை சொல்லுவாங்க. உங்க நல்ல மனசு.. நீங்க உங்க மகன் மேல குறை சொல்றீங்க. ஒரே ஒரு ஆதங்கம்.. நம்மகிட்ட வந்து சொல்லி இருந்தா நாமளே பேசி பொறுமையா முடிவெடுத்து கட்டி வச்சிருக்கலாம்.. இப்படித் திருட்டுக் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம். சொந்த பந்தம் கேட்டா என்ன சொல்லுவேன்” என்று பெருமூச்சு விட்டார் சுப்பம்மாள். முந்தைய நாள் முகுந்தனின் அணுகுமுறை பார்த்த பின்பு அவர் மனதில் பட்டதெல்லாம், மருமகன் அழகன், நல்லவன், நம்மை விடக் கொஞ்சம் வசதி அதிகம் உள்ளவன்.

சத்தியபாமா அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை. இப்போதுதானே சம்மந்தியாகி இருக்கிறோம், இப்போது போய் மகனின் குறைகளைச் சொல்வதா, மருமகனை மாமியார் தப்பாக நினைக்கும்படி பேசக் கூடாது, நொந்து போயிருப்பவரை மேலும் மனம் வருந்தும்படியும் செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் சத்தியபாமா ஒன்றும் கூறாமல் வாய் மூடி அமர்ந்திருந்தார்.

அதுவும் போக அவருக்கு வேறு ஒரு எண்ணமும் கூட. ‘நேத்து பூரா அந்த பிள்ளையை யாரும் ஒரு சொல்லு சொல்லிடக் கூடாதுன்னு சுத்திச் சுத்தி வந்தான். அப்படியே அந்தப் பொண்ணு வந்த நேரம் திரும்பி நல்லபடியா தொழிலைப் பார்த்தா நல்லது தான்.. அப்படி நடந்துட்டா இவங்க முன்னாடி நாம கையைப் பிசைஞ்சுகிட்டு நிக்க வேண்டி வராது’ என்று எண்ணிய சத்தியபாமா தெரிந்த கடவுள்களுக்கு எல்லாம் உடனடியாக இன்னொரு வேண்டுதலை வைத்தார்.

எழுந்ததில் இருந்து மகனின் அறை வாசலைப் பார்ப்பதும் கண்களை அகற்றுவதுமாக இருந்தார் சத்தியபாமா. சுப்பம்மாளுக்கும் அவ்வப்போது பார்வை அங்கு தான் போய் வந்தது. முதல் நாள் இரவு பிள்ளைகளுடன் தன் வீட்டிற்குப் போய்விட்ட சுப்பம்மாள் விடிந்ததும் முகுந்தன் வீட்டிற்கு வந்து விட்டார்.

திருமணம் முடிந்தவுடன் கோவிலில் வைத்து சத்யபாமா முகுந்தனைப் பார்த்ததும், அதிர்ந்து நின்றதும் எல்லாம் ஒரு நிமிடம் தான். முகுந்தனுக்கும் கொஞ்ச நேரமே அதிர்ச்சி. அவன்தான் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் கையாளப் பழகியவன் தானே, சித்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு, “சித்ரா இது தான் எங்க அம்மா, நல்ல வேளை நம்ம கல்யாணத்தை எங்க அம்மாவாவது பார்த்துட்டாங்க” சிரித்தபடியே, “கால்ல விழு” என்றான்.

அவனும் சித்ராவும் இணைந்து கைகோர்த்து சத்தியபாமாவின் கால்களில் விழுந்தனர். கண்ணைத் துடைத்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தார் சத்தியபாமா. அவருக்குப் பின்னாலேயே வந்து அவன் ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியில் அவரையும் வலுக்கட்டாயமாக ஏற்றி வீட்டுக்கு வந்து ஒரு அரை மணி நேரப் போராட்டத்தில் எப்படியோ சத்தியபாமாவை மலையிறங்கி வரச் செய்தான்.

அக்கம் பக்கத்து வீடுகளின் கேள்விப் பார்வைகளைக் கண்டு கொள்ளவில்லை. “வாங்கம்மா அப்படியே இவளோட அம்மாவையும் கூட்டிட்டு வந்து, இங்க வெச்சே பேசிரலாம்” என்றான்.

“எல்லாம் பிளான் பண்ணி தான்டா பண்ணுவ நீ. என்னவோ பண்ணு. எங்கேயும் வந்து நான் கைகட்டி நிக்கல.. வந்தவுடனேயே இந்த பிள்ளையை தனியா விட்டுட்டு போறதா” என்று அவனை முறைத்தார் சத்தியபாமா.

என்னென்னவோ நினைத்து பயந்தபடி வந்த சித்ராவிற்கு சத்யபாமா அப்படிப் பேசியது ஆறுதலாக இருந்தது. ‘சே! மணிமேகலை அக்கா சொன்னது கரெக்ட் தான்.. அவசரப்பட்டுருக்க வேண்டாம்’ என்ற எண்ணம் லேசாகத் தோன்றியது. சித்ராவை முகுந்தன் தன் வீட்டிலேயே விட்டுவிட்டு காலையில் ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியை எடுத்துக்கொண்டு அவளது வீட்டிற்குச் சென்றான்.

சுப்பம்மாள் எப்போதும் போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அமர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்தார். உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு வந்தவன், தன் வீடு, தொழில் இதைப்பற்றி எல்லாம் சொன்னவன், “அம்மா உங்க கிட்ட பேசணும்னு சொல்றாங்க. கொஞ்சம் அவசரம், என்கூட காரில் வர முடியுமா? பயப்படாதீங்க” என்றதும் சுப்பம்மாளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. முகுந்தன் அணிந்திருந்த புது வெள்ளை வேஷ்டி சட்டை, நெற்றியிலிருந்த குங்குமம் இதெல்லாம் பார்த்ததும் அவருக்கு மனதைப் பிசைய ஆரம்பித்தது. “என்ன விஷயம் தம்பி நான் எதுக்கு உங்க வீட்டுக்கு வரணும்?”

“எல்லாம் நல்ல விஷயம் தான். என்னை உங்க மகன் மாதிரி நினைச்சுக்கோங்க. வருவீங்களா மாட்டீங்களா?”

சித்ராவின் தம்பியும் தங்கையும் பள்ளிக்கூடம் போயிருந்தார்கள். “பிள்ளைங்க பள்ளிக்கூடம் போயிருக்குதே…” என்று அவர் இழுக்க, “அதெல்லாம் அந்த நேரத்துக்குள்ள வந்துடலாம். பக்கம்தான் மிஞ்சிப் போனா ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கும். வாங்க” என்று சொன்னவன் சுப்பம்மாளைக் கையோடு அழைத்து வந்திருந்தான். ஊரில் பலரும் நம்பிக்கை கொள்ளும் அவனது தோற்றத்தைப் பார்த்து அவரும் நம்பிக்கை கொண்டார். ‘நல்ல மாதிரியாத் தான் இருக்கான்’

வீடு வந்ததும் ஓரிரு நிமிட மௌனத்திற்குப் பின், சத்தியபாமாவே விஷயத்தை விளக்கும்படியாக நேர்ந்தது. அதன் பின் உள்ளே அமர்ந்திருந்த சித்ராவை வெளியே கூட்டி வந்தான் முகுந்தன்.

காலையில் தன்னிடம் சில்லறை வாங்கி முடிந்து கட்டிக்கொண்டு சென்ற புதுச்சேலை லேசாகக் கசங்கியிருக்க, புதிதாகக் கழுத்தில் தாலி மின்ன இருந்த மகளைப் பார்த்து பொலபொலவென்று கண்ணீர் வடித்தார் சுப்பம்மாள்.

சித்ராவை அடிப்பதற்காக அவர் கையை ஓங்க, கையைப் பிடித்துக் கொண்டார் சத்தியபாமா. “ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க விட்டுருங்க.. இனிமே ஆக வேண்டியதைப் பாப்போம்” என்று சத்தியபாமா கூற,

“ஏழு எட்டு வருடம் எங்க குடும்பத்துக்காக உழைச்சு போட்டவ அவ. அவளை நான் எப்படி அடிக்கிறது.‌ நான் தான் அடிச்சுக்கணும்” தன் தலையில் அடித்துக் கொண்டார் சுப்பம்மாள்.

சித்ரா வந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு அழ, கொஞ்ச நேரத்தில் “ஏதோ அழுகைச் சத்தம் கேட்டுச்சே?” என்று அக்கம்பக்கத்தினர் வந்தனர். அவ்வளவு நேரம் அவர்கள் ஆர்வத்தை அடக்கிக் கொண்டிருந்ததே பெரிது.

ஒருவர் வந்ததும், அடுத்து ஒவ்வொருவராக எட்டிப் பார்க்க, அதையும் சந்தித்துத் தானே ஆக வேண்டும் என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தார் சத்தியபாமா. அண்டை வீட்டில் எது நடந்தாலும் எனக்கென்ன என்று இருக்கும் நகரப் பகுதியில்லை அது. சற்றே வளர்ந்த கிராமம். ஒரு பெரிய டவுன் என்று சொல்லலாம்.

“வாங்க உட்காருங்க” என்று விட்டு “இந்தப் பையன் அவனே போய் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான், என்ன செய்யலாம்னு சொல்லுங்க” என்று அவர்களிடமே கேட்டார்.

மூன்று தலைமுறையாக இங்கே வசிக்கிறார்கள், எல்லா கஷ்டத்திலும் இவர்கள்தான் துணை நிற்கிறார்கள்.

வந்தவர்களில் ஒரு சிலர் இடக்கு மடக்காகப் பேசினாலும் வேறு சிலர் “இரண்டு நாள்ல ஒரு ரிசப்ஷன் வச்சு முடிச்சிடுவோம், உங்க தரப்பு ஆளுங்கள நீங்க கூப்பிடுங்க, எங்க தரப்புல நாங்க பாத்துக்குறோம்” என்று சுப்பம்மாளிடமும் பேசி கடகடவென்று திட்டம் போட்டுவிட்டு விடைபெற்றுச் சென்றனர்.

மதிய உணவு நேரத்திற்கு வெளியே சென்ற முகுந்தன் எல்லாருக்குமாக உணவை வாங்கி வந்தான். மனதே இல்லாமல் நால்வரும் சாப்பிட்டார்கள்‌.

மாலை சரியாக பள்ளி விடும் நேரமானதும், “அத்தை வரீங்களா? உங்க பிள்ளைகளைப் போய் கூட்டிட்டு வந்துருவோம்” என்றான் முகுந்தன்.

தானாக யோசித்து திட்டமிட்டு எதையும் செய்யும் நிலையில் அன்று சுப்பம்மாள் இல்லை. அதற்குள்ளாகவே இவன்தான் மருமகன், வீட்டின் மூத்த ஆண் மகன் என்ற நிலைக்குப் பழகிக் கொண்டார். பள்ளி விட்டு வரும் சின்னப் பிள்ளைகள் இருவரையும் கூட்டி வருவதற்காக அவரும் சென்றார்.

முதலில் அதிர்ந்தாலும், ‘எங்க அக்காவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. ரிசப்ஷன் வருது’ என்றே தம்பி, தங்கை மகிழ்ந்தனர். இப்படியாக அன்றைய மாலைப் பொழுது கழிந்தது.

பெரும்பாலான திருட்டுக் கல்யாணங்களில் உறவினர்கள் மணமக்களை ஏற்றுக் கொள்வது தான் பெரும்பாடாக இருக்கும் அவர்களே ஏற்றுக் கொண்டாயிற்று. இனிமேல் என்ன பிரச்சனை என்று தோன்றியது முகுந்தனுக்கு. அதே நினைப்புடன் தான் சித்ராவும் வெளியில் வந்தாள். எத்தனை மனச் சங்கடங்கள் வந்திருந்தாலும் அந்த வயதும் கனவுகளும் சேர்ந்து அவர்களது முதலிரவு இனிதே கழிந்தது. அம்மா மற்றும் மாமியாரின் முகத்தைக் கீழ்க் கண்ணால் பார்த்துக் கொண்டாள். அவர்களுக்கு நடுவில் இணக்கம் நிலவுகிறது என்று புரிந்து நிம்மதியானாள். வேலை செய்யலாமா என்று சமையற்கட்டில் புகுந்து பார்த்தாள்.

ஏதாவது இனிப்பு செய்யலாம் என்ற யோசனையுடன், “சாமி! கேசரி செய்யப் போறேன்.. நான் செஞ்ச கேசரியை எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்கன்னா உனக்கு ஒருநாள் சர்க்கரைப் பொங்கல் போடுறேன். சரியா?” நேற்றைய நாளில் தொலைத்திருந்த குழந்தைத்தனம் அன்று அவளிடம் மீண்டும் எட்டிப் பார்த்தது.

முகுந்தனுக்கு ஒரு அழைப்பு வர, அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

“இல்லைங்க சார், ஏமாத்தல்லாம் மாட்டோம்.. ரெண்டு நாள்ல முடிச்சுக் குடுத்துடுவோம். யார்கிட்ட வேணா கேட்டுப் பாருங்க, இந்த முகுந்தன் சொன்ன வார்த்தையைக் காப்பாத்துறவன்.. ஐயோ, போலீஸ்க்கு எல்லாம் போகாதீங்க, அதெல்லாம் பிரச்சினையே இல்லை.‌ நீங்க வேணா பாருங்களேன். நாளைக் கழிச்சு உங்களுக்கு வேலை முடிஞ்சுரும்”

பீரோவில் இருக்கும் தன் ஒற்றைச் சங்கிலியை எடுத்து அடகு வைத்து ரிசப்ஷன் வைக்கும் வேலைகளைப் பார்க்கலாம் என்று எண்ணி ஸ்டோர் ரூமிற்கு சத்யபாமா வந்த சமயம் ஜன்னலுக்கு வெளியே முகுந்தன் பேசிய வார்த்தைகள் அவர் காதில் துல்லியமாக விழுந்தன.‌

‘ரெண்டு நாள்ல முடிச்சுக் கொடுக்கப் போறானா? ரிசப்ஷன்னு பேசி வச்சிருந்தோமே.. எப்பவும் படம் எடுத்து ஆடுறவன், இப்ப பணிஞ்சு, குழைஞ்சு பேசுறானே.. திரும்பியும் ஏதும் சிக்கலா?’ என்று யோசித்தார். ‘அவன் பிரச்சனையை அவன் பார்த்துக்குவான். நமக்குத் தலைக்கு மேல வேலை இருக்கு. திடீர்னு எல்லா பொறுப்பும் நம்ம தலைல விழுந்திருக்கு. அந்த சம்மந்தி அம்மாவுக்கு ஒன்னும் விவரம் தெரியல. சேலை துணிமணி வாங்கணும், சாப்பாட்டுக்குச் சொல்லணும், ரெண்டு நாள்ல ரிசப்ஷன் வைக்கிறதுன்னா சும்மாவா? ஆண்டவா, நீ தான்பா கூட இருக்கணும்’ என்றவராக அந்த அலைபேசி உரையாடலை அத்துடன் மறந்து போனார்.

ரிசப்ஷன் வைப்பதற்குப் போராடுவதற்குப் பதிலாக அது என்ன அழைப்பு என்று கொஞ்சம் கவனித்துப் பார்த்திருந்தால் அடுத்து வரவிருக்கும் விளைவுகள் பலவற்றை அவரால் தவிர்த்திருக்க முடியுமோ?

-தொடரும்
 

Author: Sungudi
Article Title: உருகியோடும் 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Uppada

New member
Joined
Mar 27, 2025
Messages
20
முகுந்தன் மாட்டியது என்னவா இருக்கும்??🤔
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
நடந்த நிகழ்வை
நல்ல விதமாக எடுக்கும்
நல்ல மாமியார்
நல்ல அம்மா.... 🤩🤩🤩
 
Top