அத்தியாயம் -19
திருப்புல்லாணி.
அன்று பொழுது விடிந்த போது, அந்த சின்னஞ்சிறு ஊர் முழுவதும் மகிழ்ச்சி பொழிவுடன் காணப்பட்டது. சேதுபதி சீமையில் அமைந்துள்ள இத்தலம் இதிகாச பெருமை பெற்றது இங்கு ‘நன்னூல் நெறிப்படுத்திய புல்லில் கருணையங் கடல் துயிறனன் கருங்கடல் நோக்கி’ என கம்பராமாயணம் கடல் சீரிய படலத்தில் குறிப்பிட்டுள்ள கருணையங்கடல் தர்ப்பாசன அழகியராகக் காட்சியளிக்கிறார். இந்தத் திருத்தலத்தை சரணாகதி தலம் எனவும் குறிப்பிடுவார்கள்.
இந்த துணைக்கண்டம் முழுவதிலும் திவ்ய தேசம் எனப் போற்றப்படும் நூற்றியெட்டு திருப்பதிகளில் ஒன்றான இந்த தலத்தை திருமங்கையாழ்வார் சிறப்பித்து பாடியுள்ளார். மணவாள மாமுனிகளும் பெரிய நம்பியும் இந்த பெருமாளது திருக்கோலத்தில் பெரிதும் ஈடுபட்டவர்களாக இந்த தலத்திலேயே பல காலம் தங்கிப் பணி செய்துள்ளனர்.
இவ்வளவு சீரும் சிறப்புமான இந்த திருக்கோவிலில் முதன்முதலாக தேரோட்டம் நடைபெறுகிறது .முதல் நாள் இரவே மக்கள் திரள தொடங்கினர். மிகச் சிறிய ஊராக இருப்பதால் சில நூறு பேர் கூடி விட்டாலே பல ஆயிரம் பேர் திரண்டு விட்டது போன்ற தோற்றமளிக்கும். இந்த ஊர் பெருமாளுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த விழாவின் கடைசி நாளில் திருமண வைபவமும் பெருமாளும் பிராட்டியும் புதிதாக சேதுபதி மன்னரால் செய்யப்பட்ட தேரில் ஆரோகணித்து கோவிலை சுற்றி உள்ள நான்கு தெருக்களிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் பவனியும் அங்கே நடைபெற இருந்தது.
காலை வெயில் மிகவும் இதமாக இருந்ததால் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடுகளை முடித்து திருமண மண்டபத்தில் குழுமி இருந்தனர். நாதஸ்வரம் சுகமாக ஒலித்துக் கொண்டிருந்தது குறித்த நேரத்தில் சேதுபதி மன்னரும் பிரதானியும் மண்டபத்தின் மேடைக்கு பக்கத்தில் அமர்ந்தனர். பெருமாளையும் பாராட்டியையும் மிகச் சிறப்பாக அலங்கரித்து மேடையில் கொண்டு வந்து வைத்தனர். அவர்கள் புது மணமக்கள் அல்லவா?
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடையவன் நாரண நம்பி செம்மை உடைய திருக்கையால் பிராட்டியின் கைத்தலம் பற்றும் ஒப்பில்லாத மகிழ்ச்சி அது.
அத்யயனப் பட்டர்கள் வேத மந்திரங்களை உச்சரித்தனர். மணமக்களுக்கு முன் இருந்த ஹோம குண்டத்தில் அக்னி கொழுந்து விட்டு எரிந்தது. பஞ்சகச்சமாக வெள்ளை பட்டு வேட்டி உடுத்தி, சிவப்பு நிறத்தில் நீளமான துண்டை இடுப்பில் அணிந்திருந்த இரு பட்டர்கள், இருபுறமும் நின்று அந்தத் தெய்வங்களின் சார்பாக எல்லா சடங்குகளையும் நிறைவேற்றினர். இறுதியாக தாரை வார்த்துக் கொடுத்து அக்னி சாட்சியாக பெருமாள் பிராட்டிக்கு மங்கள சூத்திரம் அணிவித்ததும் திருமண வைபவம் முடிவடைந்தது.
மண்டபத்தில் மக்கள் “கோவிந்தா! கோவிந்தா!” என மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்
.
அதன் பின்னர் தெய்வத் திருமேனிகளை மங்கள வாத்தியம் முழங்க திருக்கோவில் முகப்பில் உள்ள காங்கேயம் மண்டபம் வழியாக வடக்கே அலங்கரிக்கப்பட்டு நின்ற புதிய தேருக்கு எடுத்துச் சென்றனர். தேர்நிலை மண்டபம் வழியாக தேருக்குள் சென்றனர்.
அதன் கீழ் பகுதியில் நாதஸ்வர குழுவினர் அமர்ந்து நாயனத்தை இசைக்க தொடங்கினர். தேரின் நான்கு சக்கரங்களுக்கும் அடியில் எலுமிச்சம்பழங்களை வைத்தனர். தேரின் முன் நின்று கொண்டிருந்த பட்டர் தேருக்கு தீபாராதனை நடத்தி முடித்ததும் கோவில் அலுவலர் ஒருவர் தேருக்கு முன்னர் வந்து பெருமாளைத் கும்பிட்டு சிதறுகாயாக தேங்காயைத் தேரின் முன் உடைத்தார்.
தேரின் வலது இடது புறங்களை இணைத்த வடங்களில் இழுக்க நூறு கஜ தூரம் வரை மக்கள் நின்றுகொண்டிருந்தனர். ஒருவர் பின் ஒருவராக கோயில் பணியாளர்கள் தேர் செல்ல இருக்கும் வீதிகளில் மக்கள் ஒதுங்கி நின்று தேர் இழுப்பவருக்கு இடைஞ்சல் இல்லாதவாறு உதவுமாறு வீதியின் இரு பக்கங்களிலும் சொல்லிக் கொண்டே சென்றனர்.
திருக்கோயிலுக்குள் இருந்து வெளியே வந்த சேதுபதி மன்னர், வடக்கே தேர் நிலைக்குச் சென்றார். மன்னரைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்தனர். மன்னரது முகத்தில் வழக்கமான மகிழ்ச்சி காணப்படவில்லை.
தேரோட்டம் தொடங்கப் போகிறது என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக, தேருக்குத் தென்பகுதியில் உள்ள சக்கர தீர்த்தக் கரையில் இருந்து இரண்டு வெடிகள் பெரும் ஒலி எழுப்பின. சேதுபதி மன்னர் தேரில் ஆரோகணித்திருந்த பெருமாளையும் பிராட்டியையும் சேவித்து விட்டுத் தேரின் புது வடங்களைத் தொட்டுக் கொடுத்தார்.
ஆங்காங்கே நின்றவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் “கோவிந்தா! கோவிந்தா!” என்று பெருமுழக்கம் செய்தனர். மக்கள் வடங்களைப் பற்றி இழுத்தனர். தேர் மெதுவாக ஒயிலாக அசைந்தது. அதன் உச்சியில் பிணைக்கப்பட்டு இருந்த அலங்கார சிகரமும் மெதுவாக அசைய தொடங்கியது. கம்பீரமாக ஊர்ந்த தேர் கிழக்கே சென்று சேதுக்கரை வீதியில் திரும்பி பிறகு மேற்கு தெற்கு வீதிகளில் சென்றது. பின்னர் வடக்கு ரத வீதியைக் கடந்து கிழக்கே சென்று நிலை கொள்ள வேண்டும்.
உச்சி வேலை நெருங்கிக் கொண்டிருந்தது வெயில் களைப்பு இவைகளினால் அங்கிருந்த மக்களின் உற்சாகம் குறையவில்லை. ஒரு வழியாக தேரை இழுத்து வந்து விட்டனர். தேர் நிலைக்கு வந்து கொண்டிருந்தது அதனை எதிர்பார்த்து அங்கு நின்று கொண்டிருந்தார் சேதுபதி மன்னர். அவர் அருகில் பிரதானியும் கோவில் பணியாளர்களும் காத்திருந்தார்கள். சக்கர தீர்த்த கரையில் இருந்து மீண்டும் அதிர்வேட்டுகள் தேரோட்ட முடிவு வருவதை குறிப்பிடும் வகையில் இரண்டு முறை ஒலித்தன.
மன்னர் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியான நிலையில் காணப்பட்டார். பெருமாளைக் கண்கொளிர சேவித்தார். அந்த திவ்ய தரிசனத்திற்கு மேலான ஒன்று உண்மையான பக்தருக்கு இருக்க முடியாது அல்லவா.
அண்ட சராசரங்களையும் ஆட்டி படைக்கும் இந்த பெருமாளைச் சரணடைந்த பிறகு எதைப் பற்றியும் ஏன் கவலைப்பட வேண்டும். சேதுபதி மன்னர் இத்தகைய மனோபாவத்தை வெளிப்படுத்துவது போல பிரதானிக்கு தோன்றியது.
மன்னர் பக்தி பரவசத்தில் மூழ்கியவராக கண்களை மூடி எதனையோ முணுமுணுத்துவராக காணப்பட்டார். அடுத்த வினாடி மூர்ச்சையுற்றவராக தரையில் சாய்ந்தார். இதனை எதிர்பாராத பிரதானி மன்னரை தாங்கிப் பிடிக்க அங்கு நின்று கொண்டிருந்த கோவில் அலுவலர்களும் பிரதானியுடன் சேர்ந்து மன்னரை மெதுவாக தரையில் கிடத்தினர்.
புனித சேது நாட்டின் அரசியலுக்கு பெருமையும் புகழும் சேர்த்த சேதுபதி மன்னரது ஆன்மா பெருமாளின் பேரழகில் சொக்கி சுவைத்த பேரின்ப கடலில் ஆழ்ந்து மறைந்து விட்டது. பிரதானியும் மற்றவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
அதற்குள் மன்னரது மறைவறிந்த மக்கள் கூட்டம் தேரின் அருகே அலை மோதியது. வீரர்கள் அவர்களை ஆசுவாசப்படுத்தினார்கள். அங்கு வந்து இறக்கி வைக்கப்பட்ட பல்லக்கில் மன்னரைக் கிடத்தியதும் பல்லக்கு தூக்கிகள் அதனை சுமந்தவாறு புறப்பட்டனர். பிரதானியும் வீரர்களும் மன்னர் பயணத்திற்கு பாதுகாப்பாக குதிரைகளில் ராமநாதபுரம் கோட்டை நோக்கி சென்றனர்.
மறவர் சீமை மன்னர்களில் மிகச்சிறந்த வரலாறு படைத்து, கொடையின் சிகரமாக, வீரத்தின் திருவுருவமாக, சமயச் செல்வராக, கலைப்பிரியராக, தமிழ்ப்புரவலராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் இறைவனுடன் ஐக்கியம் ஆகிவிட்டார்.
சேது மார்க்கத்தில் ஆங்காங்கு சத்திரங்களை அமைத்த “அன்னசத்திர கோமான்” “இராமேசுவரத்தையா” என்று மக்களால் அன்புடன் விளிக்கப்பட்ட திருமலை ரகுநாத சேதுபதி அந்த ஆதி ஜெகநாதன் சன்னிதியில் அந்தப் பெருமாளோடு கலந்து விட்டார்.
*நிறைந்தது*
Author: SudhaSri
Article Title: இறுதி அத்தியாயம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: இறுதி அத்தியாயம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.