அத்தியாயம் -18
இராமநாதபுரம் அரண்மனை.
அந்தப்புர வளாகத்தில் உள்ள மகாராணியாரது அறை.
ஹம்சதூளிகா மஞ்சகி கட்டிலில் ஒரு புறத்தில் சாய்த்து வைக்கப்பட்ட தலையணைகள்
மீது முதுகைச் சாய்த்தவாறுமகாராணியார் அமர்ந்திருந்தார். பல மாதங்களாக நலிவுற்ற நோயாளி போன்ற தோற்றம்.
அருகில் நின்று கொண்டிருந்த தோழியின் கரங்களில் பால் கிண்ணமும் குவளையும் இருந்தன.
"ராணி மூன்று நாட்களாக தங்களது வாயில் பச்சைத் தண்ணிர் கூடப் படவில்லை, ஒரு மடக்கு பாலாவது அருந்துங்கள்." தோழியின் பேச்சில் கெஞ்சுதலுடன் வருத்தமும் குழைந்து வந்தன.
"வேண்டாம். இப்பொழுது எனக்கு மிகவும் தேவையாக இல்லை. பசி...
தாகம்... தூக்கம் எதுவுமே தேவையாக இல்லை."
ராணியின் பலவினமான உடலில் இருந்து வந்த வேதனை மிகுந்த சொற்கள் அவரது தோழிக்கு மேலும் வேதனையைத்தாண் தந்தன.
ஆனாலும் தன் முயற்சியை விடாது ராணியைக் கெஞ்சிங் கொண்டிருந்தாள். அப்போது அறைக்குள் சேதுபதி மன்னர் வந்தார். அவரைக் கண்டதும் வணங்கிய தோழிப் பெண் "உடல்நிலை இவ்வளவு பலவீனமான நிலையிலும் ராணியார் பாலைக் கூட அருந்த மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்.
"என்ன சேது! பாலைக்கூட குடிக்காவிட்டால் உடல்நிலை மேலும்
மோசமாகவல்லவா போய்விடும்" என்று சொல்லியவாறு ராணியாரது கட்டிலில் அமர்ந்து ராணியையும் தோழியையும் மாறி மாறிப் பார்த்தார்.
"மகாராஜா எனக்குப் பசியும் இல்லை. தாகமும் இல்லை. நான்
எப்படி பாலை அருந்துவது?" மிகவும் மென்மையான குரலில் மகாராணியார் சொன்னார்.
கைநீட்டி பால் குவளையைப் பெற்றுக்கொண்ட மன்னர், "இதோ சிறிதளவு பாலாவது குடியுங்கள்!” என்று ராணியாரது வாயருகில் குவளையைக் கொண்டு போய் பாலைக் குடிக்குமாறு வற்புறுத்தி வாய்க்குள் ஊற்றினார். ஓரளவு பால்தான் ராணியின் வாயில் இறங்கியது. இன்னொரு பகுதி கடைவாயிலிருந்து வழிந்துசொட்டியது.
"சேது! இரண்டு முக்கியமான செய்திகளை உன்னிடம் தெரிவிக்கத்தான் இங்கே வந்தேன்."'
"சொல்லுங்கள் மகாராஜா"
"திருப்புல்லாணி பெருமாள் கோவில் திருப்பணி முடித்து விட்டது. இன்னும் சில நாட்களில் குடமுழுக்கு நடக்கு இருக்கிறது. உன்னால் கலந்துகொள்ள முடியுமா என்பது எனது கவலை."
"எல்லாம் இறைவன் செயல் நான் கலந்துகொள்ளாவிட்டால் என்ன? தங்களது மிகப்பெரிய சாதனை இன்று நிறைவேறுவதைக் கேட்க எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது. மகாராஜா கலந்துகொண்டாலே போதுமானது” என்று சொன்ன ராணியார், சற்று தயக்கத்துடன் தனது பேச்சைத் தொடர்ந்தார்
.
"ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் எனக்கு உள்ளது. அதனை மகாராஜா நிறைவேற்ற வேண்டும்." மகாராணி என்ன சொல்வார் என்று புரிந்து அமைதியாக அமர்ந்து கொண்டார் மகாராஜா.
"சில மாதங்களாகவே பிள்ளைப் பூச்சியைப் போல எனது சிந்தனையைக் குடைந்து கொண்டிருக்கும் அந்த அந்தரங்கஆசையைத் தங்களிடம் எப்படிச் சொல்வது எனத் தயக்கம். ஒரு வேளை மகாராஜா அதை மறுத்துவிட்டால். .”
“நான் மறுப்பது போல எதையோ கேட்கப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன்.”
"இப்பொழுது மகாராஜா திருப்புல்லாணி ஆலய குடமுழுக்குப் பணியில் மிகுதியாக ஈடுபட்டு? இருக்கிறீகள். அதனால் பிறகு சாவதானமாகச் சொல்கிறேன். சரி... இன்னொரு விசயம் என்ன?" என்று மகாராணி கேட்டார்.
"ஆம். மறந்துவிட்டேன். என் மீது கட்டாரி வீசி கொலை செய்ய இருமுறை நடந்த முயற்சியை உன்னிடம் சொன்னேன் அல்லவா? அந்தக் குற்றவாளி இப்பொழுது பிடிபட்டுவிட்டான், தான் செய்த அந்தக் குற்றத்தையும் விசாரணையில் ஒப்புக்கொண்டிருக்கிறான். எட்டையபுர சம்ஸ்தானத்தை சேர்ந்தவன் அவன்."
“அபாயம் இல்லையல்லவா? . . . அவனை என்ன செய்தீர்கள்?”
"சிறையில் தான் இருக்கிறான். இன்னமும் தண்டனை கொடுக்கவில்லை."
"அந்தக் குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறீர்கள்? மன்னித்து விடுதலை செய்துவிடுங்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டான் அல்லாவா? அந்த மன்னிப்பு அவனது வாழ்நாள் முழுவதும் அவனை உறுத்திக்கொண்டிருக்கும். வேறு
குற்றம் செய்வதையும் தடுத்துவிடும்."
"ஆம். அப்படியே செய்கிறேன்."'
மன்னர் சென்றுவிட்டார்.
****************
நீராவி மாளிகையை ஒட்டிய அறைக்கு மன்னர் சென்றபொழுது பிரதானி அங்கே காத்துக்கொண்டு இருந்தார். வழக்கமான மரியாதையை ஏற்றுக்கொண்ட மன்னர், நாட்டுநடப்புகளைப் பற்றி பிரதானியுடன் .ஆலோசனை கலந்தார். அடுத்த
இரண்டு கிழமைகளில் நடக்கவிருக்கும் திருப்புல்லாணிப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா பற்றிய ஏற்பாடுகள், தேவையான பொருள்கள் சேகரிப்பு, அன்னதானம், நாங்குநேரி, திருக்கோட்டியூர், அழகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து பண்டிதர்கள், அத்யாயனப் பட்டர்கள், அரையர்கள், நம்பிகள் ஆகியோரை அழைத்து உபசரித்தல், அன்றைய தினம் பெருமாளுக்கும், தாயாருக்கும்சாத்த வேண்டிய அலங்காரம், பட்சணங்கள் தயாரிப்பு ஆகியவைபற்றி விவரமாக தகவல்களை மன்னரும் பிரதானியும் பரிமாறிக் கொண்டார்கள்.
அரண்மனை அலுவலர்கள் இத்தகவலை ஏடுகளில் பதிவுசெய்துகொண்டு வந்தபின்னர், பேச்சின் முடிவில் அவைகளை மன்னருக்கு படித்துக்காட்டி ஒப்புதல் பெற்றனர். அடுத்து கோடங்கி நாயக்கர் பற்றிய பேச்சினை எழுப்பினார் மன்னர்.
"நேற்று காலை அவன் சொல்லிய வாக்குமூலத்தில் இருந்து அவனது குற்றச் செய்கைக்கு அவனது மான உணர்வு மட்டும்தான் காரணமென்று நினைக்கிறீர்களா? வேறுயாரும் சம்மத்தப்படவில்லையா?" மன்னர் பிரதானியைக் கேட்டார்.
"அப்படித்தான் நினைக்கிறன் மகாராஜா!"
"எட்டையபுரம் பிரதானிக்கு உடனடியாக ஓலை அனுப்பி இருந்தீர்களே, அவரது பதில் என்ன?”
“எட்டையபுரம் பாளையக்காரர் மிகவும் வருந்திக் கடிதம் எழுதி இருக்கிறார். அவரது கடவுச் சீட்டு கூட வேறு ஏதோ பிரயாணிக்கு வழங்கப் பட்டது என்றும் அவரது பெயர் விஜயதேவ நாயக்கர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது செயல்பாடுகளுக்கும் எட்டையபுரம் சமஸ்தானத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.”
“அப்போது பெயரைத் தவிர மற்ற அனைத்தும் உண்மை தான் என்று தெரிகிறது. அவனை விடுவித்து விடுங்கள். ராணியார் கூட அதைத் தான் பரிந்துரைத்தார்” என்று முடித்தார் மன்னர்.
"உத்தரவு!” என்று பிரதானி விடைபெற்றுச் சென்றார்.
************
இராமதாதபுரம் கோட்டை.
அன்று காலையில் கண்விழித்ததுமே அந்தப்புரத்தில் இருந்து அவசரச் செய்தி ஒன்று வந்து விட்டது. சேதுபதி மன்னர் விரைவாக தமது காலை கடன்களை முடித்துக் கொண்டு அந்தப்புரம் நோக்கிச் சென்றார். மன்னர் வந்ததும் அவருக்கு வழி விட்டு வாயில் அருகே இருந்த பணிப்பெண்கள் ஒதுங்கி நின்றனர். ஏதோ ஒரு விதமான களை இழந்த அவலக் காட்சி போல அந்த சூழல் மன்னரது மனதில் பட்டது.
ராணி படுத்திருந்த கட்டில் அருகே மன்னர் சென்றதும் அவரை மிகுந்த ஆவல் நிறைந்த கண்களுடன் ராணியார் நோக்கினார். அதை கூர்மையாக கவனித்த மன்னர் “என்ன சேது உடல்நலம் எப்படி இருக்கிறது? நன்றாக உறங்கினாயா? சாப்பிட்டாயா?” என்று ஆதாரத்துடன் கேட்டார்.
“ம்” என்ற ராணியாரது மௌனத்தில் திருப்தி அடைந்த மன்னர் அறையைச் சுற்றிலும் பார்த்தார். அரண்மனை வைத்தியர், பிரதானி போன்றோர் கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.
ராணியுடைய அந்தரங்கத் தோழி வந்து, “மகாராஜா! ராணியார் பால் அருந்தி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. நேற்று மாலையில் அரண்மனை வைத்தியர் வந்து நாடியை பார்த்துவிட்டு ராணியாரது நாக்கில் தடவுமாறு ஒரு சூரணத்தை கொடுத்தார். அதையும் வெளியே துப்பி விட்டார்கள் அதன் பிறகு அவர்களது உடல்நிலை நன்றாக இல்லாததால் இரவு முழுவதும் வைத்தியர் கொடுத்த களிம்பை அவர்களது கால்களிலும் கைகளிலும் தடவிக் கொண்டிருந்தேன். இன்று அதிகாலையில் அரை நாழிகை நேரம் மட்டுமே உறங்கினார்கள்” என்றாள்.
இருவரையும் மாறி மாறி பார்த்த சேதுபதி மன்னர் என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறி போனார். சில நொடிகளுக்குப் பிறகு “சேது” என்று அழைத்த மன்னரது குரல் தழுதழுத்தது. இதற்குப் பிறகும் இந்த காட்சியை காணச் சகிக்காதவராக மகாராணியார், “மகாராஜா இனிமேல் நான் எத்தனை நொடி நேரம் தங்களது பார்வையில் உயிரோடு இருப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை. தங்களது அன்பு மனைவி என்ற உன்னதமான அந்தஸ்துடன் தங்களிடமிருந்து விடை பெறுவதற்காக தங்கள் வரவுக்காக காத்திருந்தேன் நழுவிக் கொண்டிருக்கும் உயிருக்கு உயிரை நிறுத்தி வைப்பதற்கு படாத பாடு பட்டு விட்டேன்.”
அதற்கு மேலும் பேச முடியாமல் ராணியாருக்கு மூச்சு வாங்கியது அவரது பேச்சைக் கேட்டு விட்டு பல போர்க்களங்களில் மரண காயம் பட்ட போது கூடக் கலங்காத சேதுபதி மன்னரது மனம் பயத்தால் சிலிர்த்து நடுங்கியது. எத்தனையோ போர்க்களங்களைக் கண்டவர், எதிரிகளின் எண்ணற்ற ஆயுத தாக்குதல்களை தூசு போல நினைத்து சுழன்று போராடி வெற்றிகளை குவித்தவர். மராத்தியரது படைகள், நெல்லை சீமை பாளையக்கார படைகள், மைசூர் படைகள் என எதிரிகள் அச்சம் இல்லாமல் அவர்களை துவம்சம் செய்த வீராதி வீரர். கலக்கம் பயம் என் மனம் போன்ற சொற்கள் அவர் இதுவரை அறிந்திடாதவை.
இப்பொழுது மரணம் என்ற சொல் மனைவியின் வாயிலிருந்து வந்த போது கலங்கி நிலை தடுமாறி நின்றார். மன்னரது நிலை கண்டு வருந்திய மகாராணியார் அவரது எண்சாண் உடலில் எஞ்சி இருந்த சக்தி அனைத்தையும் திரட்டிக்கொண்டு கவலையுடன் அழைத்தார்.
“மகாராஜா எனக்காக இவ்வளவு வேதனைப்படுகிறீர்கள் இன்பமாக எத்தனை ஆண்டுகளை நாம் கழித்திருக்கிறோம். அவைகளை நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள். தங்களது தெய்வத் தொண்டுகளும் அறக்கொடைகளும் எனது பிரிவினால் தடை பெற்று விடக்கூடாது. இது எனது பணிவான வேண்டுகோள். அத்துடன்… அத்துடன்.. எனது பிரிவு எந்த வகையிலும் தங்களது வாழ்க்கையை பாதிக்க கூடாது.”
மகாராஜா ராணியின் கைகளைப் பற்றிக் கொண்டு அமைதியாக இருந்தார். மன்னரையே பார்த்துக் கொண்டிருந்த மகாராணியின் கண்கள் தாமாக மூடிக்கொண்டன. சுற்றி இருந்தவர்கள் பதற, மகாராஜா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. தன் கைகளுக்குள் இருந்த ராணியின் கைகள் நழுவவதைப் பார்த்து திகைத்துப் போனார்.
மகாராணியின் மூடிய விழிகள் திறக்கவே இல்லை. ராணியின் அறையில் கேட்ட புலம்பல், அழுகை எல்லாம் சற்று நேரத்தில் கோட்டை முழுவதும் பரவி மகாராணியார் காலமாகிவிட்டார் என்ற செய்தி பரவிக்கொண்டிருந்தது.
சிறு குழந்தை போல அழுத மன்னரை அந்தப்புரத்திலிருந்து கை தாங்கலாக வெளியே அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தார் பிரதானி. ஒரு நாழிகை நேரம் கழித்து தம்மைத்தானே தேற்றிக்கொண்டு பிரதானியிடம் மேலும் நடக்க வேண்டியதை கவனியுங்கள் என்று மெதுவாகச் சொன்னார் மன்னர் உத்தரவு மகாராஜா என்று சொல்லிய பிரதானி தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு ராணியின் அந்திம யாத்திரைக்கு உண்டான ஏற்பாடுகளை செய்யப் போனார்.
**********
வைகறை நேரம்.
இராமேஸ்வரம் அரண்மனை. காலை பூஜைக்கான ஆலயமணி ஓசை ஓய்ந்து அடங்கியது. வழக்கமாக ஆலய வழிபாட்டில் தவறாது கலந்து கொள்ளும் மன்னர் இன்னும் உறக்கத்திலிருந்து எழுந்து அறையை விட்டு வெளியே வராதது கார்வார்க்கு ஆச்சரியமாக இருந்தது. மன்னரது அறைக்கு வெளியே உள்ள பெரிய கூடத்தில் கார்வாரும் மற்றும் சில பணியாளர்களும் காத்திருந்தனர்.
மன்னரை எதிர்பார்த்து அறைக்குள் பிரதானி காத்திருந்தார். சூரியன் உதயம் ஆகி இரண்டு நாழிகைக்கும் மேலாகிவிட்டது. மன்னர் ஒரு பட்டுப் போர்வையை மட்டும் உடம்பில் போர்த்தியவாறு அறைக்கு வந்தார். கார்வாரும் தொடர்ந்து வந்தார். காத்திருந்த பிரதானியும் பணியாளர்களும் மன்னரை பணிந்து கும்பிட்டனர்.
தமது கரங்களைக் குவித்து அவர்களது மரியாதையை ஏற்றுக் கொண்டவாறு மன்னர் வழக்கமாக அமரும் இருக்கையில் அமர்ந்தார். மன்னரது முகத்தில் இயல்பான சாந்தமும் பொலிவும் இல்லாததை பிரதானி கவனித்தார்.
“நேற்று அர்த்த சாம பூஜையில் கலந்து கொண்டு திரும்பிய பிறகு உறங்க முடியவில்லை ஏதோ நினைவுகளில் ஒரே குழப்பம் காலையில் விழித்தெழ இவ்வளவு நேரம் ஆகிவிட்டது” என்றார் மன்னர்.
“மகாராஜா அவர்கள் தனிமையாக வந்ததின் விளைவு இது. மகாராணியாரின் இழப்பினை மறப்பதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும். இயன்றவரை தனிமையாக பொழுதை கழிப்பதை தவிர்ப்பது நல்லது. ராமநாதப் பிரபுவின் கருணையினால் நாளடைவில் இயல்பு ஏற்பட்டு விடும்” என்றார் பிரதானி.
“எல்லாம் அவன் செயல்” என்ற மன்னரது பேச்சில் விரக்தி வெளிப்பட்டது.
மன்னரும் பிரதானியும் சற்று நேரம் நாட்டு நடப்பு, அரசியல் இவற்றைக் கலந்து ஆலோசித்தனர். அதன் பிறகு மன்னர், “சென்ற முறை இங்கிருந்தபோது வடக்கே பத்தினி கோயில் என்ற ஒரு சிறிய வழிபாட்டுத் தலம் பற்றிக்கேள்விப்பட்டோம். அதைப் பற்றி விவரங்கள் விசாரித்தீர்களா?”
“விசாரித்துப் பார்த்ததில் அங்கு ஒரு சிறு கோவில் மட்டுமே இருக்கிறது. குடியிருப்புகள் எதுவும் இல்லை. அந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் தனது கற்பை காத்துக் கொள்ள உயிரிழந்ததின் விளைவாக அந்த பத்தினிக்கு சம்பந்தப்பட்ட வழியினர் அமைத்த வழிபாட்டுத்தலம் அது. குறிப்பிட்ட சில காலங்களில் சிலர் அங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள் என்று தெரிகிறது. உச்சிப் பொழுது கழிந்த பிறகு பத்தினி கோவிலுக்கு போய் பார்த்து விட்டு வரலாம், மகாராஜா!” என்று பிரதானி மன்னரை வணங்கி விட்டு எழுந்தார்.
“திருப்புல்லாணி கோவில் உற்சவத்துக்கான நாளைக் குறித்து விடுங்கள். கலங்கி இருக்கும் மனதை அந்த பெருமாள் சரி செய்வார் என்று நம்புவோம்” என்றார் மன்னர்.
“அப்படியே செய்கிறேன் மகாராஜா!” என்று பிரதானி விடைபெற்றுச் சென்றார்.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.