அத்தியாயம் -17
இராமநாதபுரம் அரண்மனை.
இராமதாதபுரம் கோட்டைத் தளபதியும் பிரதானியும் அமர்ந்துநாட்டு நிலைமை பற்றிக் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது சிறைச்சாலை. சேர்வைக்காரர் வந்து இருவருக்கும் வணக்கம் சொன்னார்.
"என்ன செய்தி?" என்று தளபதி கேட்டார்.
"அந்தக் கம்பளத்து நாயக்கன் அட்டகாசம் சகிக்க முடியவில்லை. ஏற்கனவே
வாங்கிய உதை, குத்து பொறுக்க முடியாமல், முடங்கிக் கிடத்தவன், நேற்று இரவு ஜாமத்தில் இருந்து ஜக்கம்மா, ஜக்கம்மா என்று புலம்பிவந்தான். அழுகிறான், பாட்டுப்பாடுகிறான். என்னை விட்டுவிடுங்கள். ஜக்கம்மா உத்தரவு கொடுத்துவிட்டாள் என்று அலறுகிறான்."
"அவனுக்கு எப்படியோ மனமாற்றம் ஏற்பட்டது போலத் தெரிகிறது. எதற்கும் அவனை விசாரிக்கலாம்" என்று பிரதானி சொல்லிவிட்டு எழுந்தவுடன், தளபதியும், சிறைக்காவலரும் அவருடன் சென்றனர். அங்கு அந்தக் கைதியைப் பார்த்துப் பிரதானி கேட்டார்.
"என்ன கோடங்கி நாயக்கரே! செளக்கியம்தானா?”
"ஆமாம் ஐயா, எல்லாம் ஜக்கம்மா கருணை"
"உங்கள் ஜக்கம்மாவிடம் கேட்டு உண்மையைச் சொல்லலாம் அல்லவா?”
"சொல்கிறேன் ஐயா" அவனது பேச்சு மிகவும் வித்தியாசமாக இருந்தது. உண்மையைச் சொல்லிவிடுவான் போல அவருக்குப் பட்டது.
"தாயே! ஜக்கம்மா சொல்லட்டுமா தாயே. . . .சொல்லிவிடுகிறேன். . . சொல்லிவிடுகிறேன். . . . " என்று சொன்னவன் உணர்ச்சிவசப்பட்டவனாக மூர்ச்சையுற்றுத் தரையில் சாய்ந்துவிட்டான்.
"இது என்ன புதிய தொல்லை" என்று ஏமாற்றத்துடன் சொல்லிய பிரதானி காவலாளிகளை அழைத்து அவனது முகத்தில் தண்ணீர் தெளிக்குமாறு செய்தார். மூர்ச்சை தெளிந்தவன் எழுந்து அமர்ந்தான்.
"அதுசரி... நீங்கள் யார்? என்ன காரியமாக இங்கே வந்தீர்கள்? அதைச் சொல்கிறீர்களா?"
"ஜக்கம்மா. சொல்லிவிடுகிறேன். நாங்கள் கிருஷ்ணபரமாத்மாவின் வாரிசுகள். இஸ்லாமிய படையெடுப்பில் எங்களது ஸ்திரீகளுக்குப் பங்கம் ஏற்படும் என நினைத்து விஜயநகருக்கு வந்தோம். இது ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாலே, அப்பொழுது எங்களது பெரிய தனக்காரராக இருந்த 'நல்லமநாயக்கர், விஜயநகரத்தின் தெற்குவாசலைக் காவல்காத்து வந்த மிகப்பெரிய முரடனான சோமனைப வென்று
வெட்டி வீழ்த்தியதுடன் அவனது தம்பி எட்டுப் பேரையும்உயிர்பிழைத்து ஓடுமாறு செய்தார். இத்த வீர சாகசத்தைக் கேள்வியுற்ற விஜயநகர சேனாதிபதி தம்பி மகாராஜா நல்லமனுடைய, வீரத்தை மெச்சி அவனுக்கு பல அணிமணிகளை அளித்தார். தம்பிகள் எட்டுப் பேர்களை உடையவன் என்ற பொருளில் எட்டப்பன் என்ற விருதையும் வழங்கினார். சந்திரகிரி என்ற பாளையத்தின் அதிபராகவும் ஆக்கினார். அன்றிலிருந்து அவர் வழக்கமாக அணியும் வெள்ளிக் காப்புகளுடன் தங்கத்தினால் சோமனது தலை உருவம் பொறித்த பொற்காப்பு ஒன்றை அவரது இடது காலில் அணிந்து வந்தார்."
"அந்தப் பழைய கதைகளெல்லாம் இன்னொரு நாளில் பேசிக்சொள்ளலாம். இப்பொழுது நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும்!” பிரதானியின் சொற்கள் பொறுமை இழந்து கடுமை தொனித்தது.
"ஜக்கம்மா! அது சொல்வதற்குத்தான் இதையெல்லாம் சொல்ல வேண்டியதிருக்கு. நல்லமநாயக்கர் நாற்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், அங்கு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக அவர்களது மக்கள் தெற்கே குடிபுகுந்தனர்.
அவர்களில் மூத்தவரான குமாரமுத்து எட்டப்பன் காவிரியை கடந்து மதுரைக்கு வந்து அதிவீரராமபாண்டிய மன்னரது அரசியல் பணியில் சேர்ந்தார். இவரதுமகன் குமார எட்டப்பன், பாண்டியனை எதிர்த்த மூவரையனை வென்று பாண்டியமன்னரது பல பரிசுகளைப் பெற்றார்.”
“இவ்விதம் பல வீரசாகசங்கள் புரிந்தவர்கள் எட்டயபுரம். எட்டப்ப நாயக்கர்கள். இவர்களில் இருபத்தாறாவது பட்டத்திற்கு வந்த ஜகவீரராம கெச்சிலியப்ப எட்டப்ப நாயக்கருக்கும் மதுரை நாயக்கருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் பொழுது தங்களது சேதுபதி மன்னர், திருமலை நாயக்கரது வேண்டுகோளுக்கிணங்கி எங்களது எட்டப்ப நாயக்கனை வென்று கைது செய்து திருமலை நாயக்கரிடம் ஒப்படைத்தார். ஒரு வீரன் மற்றொரு வீரனை வெல்வது போற்றத்தக்கதுதான். ஆனால், எங்களது முன்னோர்களது வீரச்சின்னமாக, எட்டப்ப நாயக்கர் அணிந்திருந்த சோமனது தலை உருவத்துடன் கூடிய பொன்னாலான வீர வெண்டையத்தை கைப்பற்றி அதில் சோமனது தலைக்குப்பதில் எங்களது எட்டப்ப ஐயனது தலை உருவத்தைப்
பொறித்து அந்த வெண்டையத்தை தங்களது மன்னர் தமது இடதுகாலில் அணிந்து வருவது என்ன நியாயம்? எட்டப்ப ஐயனது தலையுடன் கூடிய வெண்டயம் சேதுபதி மன்னரது இடம் பெற்று இருக்கும்வரை தாங்கள் எவ்விதம் ஐக்கம்மாவின் பக்தர்களாக
இருக்கமுடியும்? இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பழியை களைந்து மானத்துடண்
வாழ ஜக்கம்மா எனக்கு அருள் புரிவதாக வாக்களித்தாள். எனக்கு ஐக்கம்மாள் துணையாக வந்து இருச்கிறாள். . . . வெற்றி! வெற்றி! ஐக்கம்மா! ஜக்கம்மா!”
அதுவரை படபடவென்று பேசியவன் மூர்ச்சையாகி விட்டான்.
அவன் பேசிய விஷயங்களை நன்கு உள்வாங்கிக் கொண்ட பிரதானி இதை மன்னரிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்.
அப்பாழுது அறையில் மன்னர் இருப்பதாகவும் பிரதானியை அழைத்துவருமாறு சொன்னதாகவும் ஒரு சேவகர் செய்தி சொன்னார். பிரதானி தமது தலைப்பாகையை எடுத்து தலையில் அணிந்து சட்டைக்கு மேலாக சால்வையைப் போட்டுக்கொண்டு மகாராஜாவைச் சந்திக்கச் சென்றார்.
"மகாராஜா நமஸ்காரம்" எண்று சொல்லிவிட்டு பிரதானி மன்னரின் முன்பு பணிவாக நின்றார்.
"பிரதானியாரே எட்டையாபுரம் உளவாளி பற்றிய விவரங்கள் ஏதும் கிடைத்ததா?"
"இன்னும் அவன் செய்த செயலுக்குப் பொருத்தமான தகவல்களைச்
சொல்லவில்லை. இன்று காலையில் கூட சிறைக்குச் சென்றுஅவனைச் சந்தித்தேன். ஏதோ மந்திர உச்சாடனம் செய்பவன் போல பேசுகிறானே தவிர உண்மையைச் சொல்ல மறுக்கிறான். இன்னும் சில நாட்கள் பொறுத்துப் பார்க்கலாம் என்பது எனது கருத்து." என்ற பிரதானி அவன் சொன்ன விஷயங்கலளைப் பகிர்ந்து கொண்டார்.
அதைக் கவனமாகக் கேட்ட மன்னர், “அப்படி என்றால் இவன் எட்டப்பனது உளவாளியாக இருக்க முடியாது. ராஜவிசுவாத்தைக் காட்டுவதற்காக ஏதோ செய்கிறான். எதற்கும் எட்டையபுரம் பாளையக்காரருக்கு ஓலை அனுப்பி இவனைப் பற்றிய தகவல்களைப் பெறலாம்.” என்றார் மன்னர்.
“அப்படியே செய்யலாம் மகாராஜா” என்று தலையசைத்தார் பிரதானி. அவரே தொடர்ந்து பேசினார்.
“அந்த குமாரத்தேவனையும் அவனது கூட்டாளிகளையும் என்ன செய்வது மகாராஜா? அனைவருமே சேதுபதியாகும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.”
“நமது படையில் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.”
“தேசத் துரோகிகளைப் படையில் சேர்ப்பதா?” என்று திகைத்தார் பிரதானி.
“ஆம். படையில் சேர்த்துக் கடுமையான பயிற்சி கொடுக்கச் செய்யுங்கள். அப்போது தான் நாட்டைப் பாதுகாப்பது அவ்வளவு சுலபமல்ல என்பது தெரியும். இளைஞர்கள், கூடவே நாட்டையும் நேசிப்பவர்கள் ஆதலால் எளிதில் நமக்கேற்ப வளைத்து விடலாம். அதைத்தான் அந்தப் பெரியவரும் தமது காரியத்திற்காகப் பயன்படுத்திகொண்டுள்ளார்.”
“தாங்கள் சொல்வது மிகவும் சரியானது மகாராஜா. இளைஞர்களை சரியாக வழிநடத்தினாலே போதும். ஒரு நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.”
“அவர்களிடமிருந்து கைப்பற்றிய துப்பாக்கி போன்ற ஆயுதங்களை நமது ஆயுதக்கிடங்கில் சேர்த்தாயிற்று அல்லவா?”
“ஆம் மகாராஜா!”
"சரி, கன்னிவாடி நாயக்கரிடமிருந்து ஓலை. வந்துள்ளது. மதுரை சொக்கநாத நாயக்கரது சேதுநாட்டு படையடுப்புப் பற்றி வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். நமது
சீமைக் கோட்டைகளைத் தாக்கிய பிறகு மைசூருடன் மோதியதில்பெருத்த நட்டமாம். கொங்கு நாட்டின் பெரும் பகுதியை மைசூர் மன்னர் தேவராஜர் கைப்பற்றிக்கொண்டாராம். கோயம்புத்தூர், சேலம் பகுதிகள் மைசூர் சீமையாகி விட்டனவாம். திருமலை நாயக்கர் இறத்து ஐந்து வருடங்களுக்குள் மதுரைச் சீமையின் பெருமை நிலைகுலைந்து இருப்பது வருத்தமாக இருக்கிறது."
"உண்மைதான் மகாராஜா! அடுத்து தஞ்சை மீது பெரும் படையெடுப்பிற்கு ஏற்பாடுகள் நடக்கிறதாம். தஞ்சை ரகுதாத நாயக்கர் சொக்கநாத நாயக்கருக்கு பெண் கொடுக்க மறுத்ததுடன் சொக்கநாத நாயக்கரை இழிவாகப் பேசிவிட்டாராம். மதுரை நாயக்கருக்கு இன்னும் பைத்தியம் தெளியவில்லை. மீண்டும் நமது நாட்டின் மீதான படை எடுப்பாரா என்பதை தீவிரமாக ஆராய வேண்டும். பைத்தியக்காரனது நடவடிக்கைகள் விபரீதமாகத்தான் இருக்கும்."
"பெரும்பாலும் தஞ்சைப்படையெடுப்பின் முடிவை ஒட்டி நமது நாட்டின் மீதான படையெடுப்பு அமையலாம். எதற்கும் உளவுத்துறை தளபதியை எச்சரிக்கை செய்துவைக்கிறேன். தஞ்சைக்கும் மதுரைக்கும் நமது உளவாளிகள் சென்று வந்த பிறகு இன்னும் தீவிரமாக இது விஷயமாக ஆலோசிக்கலாம்."
"ஆமாம். இன்றைக்கே உளவாளிகள் புறப்படட்டும். வழக்கமான அசுரப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்."
"உத்தரவு மகாராஜா"
"இன்னொரு முச்கியமான விஷயம். இத்த ஆண்டு சாகுபடி எப்படி இருக்கும் என்பதற்கு நமது பாளையக்காரர்களது அறிக்கைகள் பெறவும். நமது தானியக்கிடங்கில் தான்யங்களின் இருப்பையும் சரிபார்க்க வேண்டும். அத்துடன் நமது ஆயுதச் சாலையில் இருப்பதையும் சரிபார்த்தல் அவசியம்."
"உத்திரவு" என்று பிரதானி அடக்கத்துடன் பதில் சொன்னார்.
"திருப்புல்லாணிக் கோயில் திருப்பணிகள் எப்படி
நடைபெற்று வருகின்றன என்பதை நாளை நேரில் பார்த்து
வாருங்கள்."
"உத்திரவு. நேற்று முன்தினம் அந்த கோயில் பேஷ்கார் இங்கு வந்திருந்தார். கல்தச்சர்கள் நன்றாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்."
"சரி. நாளை பார்க்கலாம்"
"உத்திரவு" பிரதானி விடைபெற்றுச் சென்றார். கையில் இருந்த சுவடிகளில் தமது சுவனத்தை செலுத்தி படிப்பதில் முனைந்தார் மன்னர்.
******************
இராமநாதபுரம் கோட்டை. பாதுகாப்பு வீரர்களின் சிறு அணிஒன்று ஆயுதம் தாங்கியவர்களாக அரண்மனையைச் சுற்றி வந்து
கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அன்று இரவு இரண்டாவது முறையாக அந்த அணியினர்அரண்மனையைச் சுற்றி வந்தனர். டமாரம், பம்பை, பறை ஆகிய வாத்தியங்களை முழங்கியவர்களாக ஒருவர் முன் செல்ல அவர்களை அடுத்து தீவெட்டிகளைத் தூக்கிச் செல்லும் தீவெட்டிப் பணியாட்கள். அவர்களின் பின்னே போர் வீரர் குழு சென்றது.
டம்.. டம்..டம்
அந்தக்குழுவினர் செல்வதைக் குறிக்கும் குறியீட்டு இசை, இராமநாதபுரம் கோட்டையில் உள்ளவர்கள் "பாரி'' என்று அதனைச் சொல்வார்கள். அது அவர்களுக்குப் பழக்கமான இசைதான். ஆனால் அந்த இசையை நள்ளிரவில் கேட்பவர்களுக்கு சற்று பயங்கரத்தை ஏற்படுத்தி மனத்தில் பீதியை நிரப்பும். இன்றும் அப்படித்தான் இருந்தது.
டம்... டம்... டம்...டம்...
சாதாரண பறையோலிதான் என்றாலும் அந்த இரவில் அப்பட்டமான அமைதியைக் குலைக்கும் பயங்கரத்தின் எக்காளம் போன்று கோட்டைப் பகுதிக்குள் எதிரொலித்தது.
கோட்டைக்கு வெளியே இருந்து வேகமாக வந்த குதிரை அணியினை இனத்தெறிந்து கொண்ட காவலாளிகள் கோட்டையின் உயரமான கனத்த கதவுகளில் ஒன்றை மிகவும் சிரமப்பட்டு திறந்து அந்த அணியினை உள்ளே வருவதற்கு அனுமதித்தனர்.
அந்தக்குழு கோட்டைவாசலின் உட்பகுதியில் இருந்த, கோட்டைத் தளபதியின் அலுவலகத்தருகே போய் நின்றது. குதிரையில் இருந்து முதலில் இறங்கிய இருவர் மட்டும் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அணிந்து இருந்த
மேலாடைகளைக் களைத்து பிறகு ஏற்கனவே அணித்திருந்த அங்கிகளில் அவர்களைப் பார்த்தபொழுதுதான் அவர்கள் சேதுபதி மன்னரும் பிரதானியும் எனத் தெரிந்தது. இரவு நகர்வலம் சென்று வந்த பிறகு மாறுவேட உடைகளைத்தான் இவ்விதம் கழற்றி அங்கு வைத்தனர். ஆனால் அவர்கள் முகத்தில் ஒட்டிவைத்த தாடி மட்டும்
அப்படியே இருந்தது.
அப்பொழுது அங்கு வந்து பணிந்த கோட்டைத் தளபதியுடன் அவர்கள் மெதுவாகப் பேசினார்கள். ௮வர் உடனே அறைக்கு வெளியே சென்று நான்கு வீரர்களை தீவெட்டிகளுடண் அழைத்துவந்தார். பின்னர் அரசரும் பிரதானியும் கோட்டைத்
தளபதியும் அந்த தீவெட்டிகளைத் தொடர்த்து தென்பக்கமிருந்த சிறைச்சாலைக்கு சென்றனர். கோடங்கி நாயக்கர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றனர்.
கோடங்கி நாயக்கர் "ஜக்கம்மா! ஜக்கம்மா!" என்று ஜெபித்துக்கொண்டிருந்தார்.
"என்ன கோடங்கி நாயக்கரே! இன்னும் உனது பாராயணம் முடியவில்லையே! புறப்படலாமா!"'
"எங்கு போகவேண்டும்?"
"என்ன தளபதியாரே! இவருக்கு தகவல் கொடுக்கவில்லையா? என பிரதானி தளபதியிடம் கேட்டார்.
"எல்லா விபரமும் காலையிலேயே அவருக்கு தெரிவித்து விட்டேன்" என்று பதிலுரைத்தார் தளபதி.
"தளபதி சொன்னதைக் கேட்டீரா? இன்று என்ன நாள்?" மீண்டும் கோடங்கி நாயக்கரிடம் கேட்டார்.
"ஜக்கம்மா! இன்று அமாவாசைதாள்"'
"இன்று இங்குள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு உம்மைபலியிடப் போகிமீறாம். உமக்கு இதுவரை போதுமான அவகாசம்கொடுத்தும் நீர் உண்மையைச் சொல்லி தப்பித்துக்கொள்ள உமக்கு விருப்பமில்லை. ஆதலால் நீர் பகைவனது உளவாளி என முடிவு செய்து அதற்கான மரணதண்டனையை திறைவேற்ற இருக்கிறோம்.
விரைவாக தளபதி கொடுத்த மஞ்சள் நனைத்த வேட்டியை அணிந்து கொண்டு எங்களுடன் அம்மன் கோவிலுக்குப் புறப்படும்."
பிரதானி சொல்வதைக் கட்ட கோடங்கி நாயக்கரது முகத்தைக் கூர்மையாக கவனித்தார் சேதுபதி மன்னர்.
"ஜக்கம்மா! எனது இலட்சியம் நிறைவேறாமல் குற்றவாளியாகத்தான் சாக வேண்டுமா? எனக்கு இப்படியொரு இழிவான சாவா? எங்களது வீரப்பரம்பரையின் இரத்தம் வீணாகச் சிந்த வேண்டுமா? சொல்தாயே. . . சொல்!"
கோடங்கி நாயக்கர் சில நிமிடங்கள் மெளனமாக ஜக்கமாளின் உத்தரவை எதிபார்ப்பவர்போல் நின்றார். அவரது மெளனம் எப்பொழுது முடியும்?
"உம்! இவருக்கு மஞ்சள் வேட்டியை அணிவித்து கையில் விலங்கு போடுங்கள்'' பிரதானி சற்று கடுமையாகச் சொன்னார்.
"பொறுங்கள். ஐக்கம்மாள் சொல்லிவிட்டாள். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை வேறாரருவருக்கு கொடுத்து விட்டாளாம். அதுவும் சரிதான். நான் ஊர் திரும்ப
உத்தரவாகிவிட்டது. நான் ஊர் திரும்பலாமா?"
"என்ன சொல்கிறீர்?"
"சொல்லிவிடுகிறேன். ஜக்சும்மா!...."
பிரதானி அங்கிருந்த சிறைச்சாலை பணியாளர்களை சைகை செய்ததும் அவர்கள் அங்கிருந்து அகன்றுவிட்டனர் இப்பொழுது கோடங்கி நாயக்கர் முன்னால் பிரதானியுடன் கோட்டைத் தளபதியும் சேதுபதி மன்னர் மட்டும் நின்று
கொண்டிருந்தனர். தூணில் பிணைக்கப்பட்டிருந்த தீவெட்டிகள்
பிரசாசமாக எரிந்தன.
"உம்..." மீண்டும் பிரதானியின் குரல்.
"ஜக்கம்மா!" கோடங்கி நாயக்கர் தனது வாக்குமூலத்தைச்
சொன்னார்.
"எங்களது பாரம்பரிய பெருமைக்கு ஏற்பட்ட களங்கத்தைஎப்படி தீர்ப்பது என யோசித்தேன். ஏற்கனவே சொன்னேன் அல்லவா? இதற்கு என்ன பரிகாரம் என்று ஜக்கம்மாவிடம் கேட்டேன். இதற்காக விரதம் இருந்தேன். மூன்றாவது நாள் இரவு கனவில் ஜக்கம்மா எனக்கு குங்குமம் கொடுத்தாள். விபூதிக்குப் பதிலாக
கும்குமப்பிரசாதம். இரத்த நிறம் பிரதிபலிப்பது. பரம்பரைகௌரவத்தை நிலைதாட்ட பழிவாங்கு என்பது அவளது உத்தரவு. அதுவும் குங்குமம் இரத்தம்! அவளது கட்டளையை நிறைவேற்ற மூன்று வருடமாக முயன்றுவருகிறேன். திருச்சுழியல் நடன நிகழ்ச்சிக்கு பிறகு விட்டெரிந்த கட்டாரி என்னுடையது தான். இருட்டில் குறி தவறிவிட்டது. வேறு யாரும். அங்கு வந்து எறிந்துவிட்டு ஓடவில்லை. நான் அங்கேதான் இருந்தேன்."
"அது எப்படி சாத்தியமாயிற்று?" பிரதானி கேட்டார்.
“சேது நாட்டு வீரனைப் போல உடைதரித்து அவர்களில் ஒருவனாக இருந்தேன். அவர்களில் சிலரிடம் மூன்று கட்டாரிகளைதனித்தனியாக வாங்கி இருந்தேன்."
"அப்புறம்..." பிரதானி தொடர்ந்தார்.
"இரண்டாவது முறையாக சென்ற விஜயதசமி விழாவின்பொழுது எனது அஜாக்கிரதையால் எனது திட்டத்தை நிறைவேற்ற இயலாமல் போய்விட்டது."
“ஏன்?”
"அன்றைக்கு முதல்நாள் இரவு ஜக்கம்மாவிற்கு படையலிட்டிருந்த சாராயம் இருந்த குவளையை எடுத்து தண்ணீர் என நினைத்துக் குடித்துவிட்டேன். அதனால் ஏற்பட்ட போதையினால் திட்டம் பாழாகிவிட்டது. தங்களது கோட்டைக்காவலாளிகளின் எச்சரிக்கையினால் மூன்றாவது முறையும் எனது திட்டம் நிறைவேற்றப்பட முடியவில்லை." என்று வருத்தத்துடன் சொல்லி முடித்தார் கோடங்கி நாயக்கர்.
"உமது திட்டத்தில் சம்பத்தப்பட்டவர்கள் வேறு யாரும்இருக்கிறார்களா!"
"இல்லை. இந்தத் திட்டம் என்னுடையது. இது வேறுயாருக்கும் தெரியாது. வேறு யாரையும் சேர்த்துக் கொள்ளவில்லை."'
"ஆமாம். நீர் எட்டையாபுரம் சமஸ்தானத்தை சேர்ந்தவர் தானே!"
"ஆம். தற்பொழுதைய எட்டையாபுரம் சமஸ்தானாதிபதி செச்சிலப்ப நாயக்கருக்கு உறவினன் தான்."
"சமஸ்தானதிபதியான அவருக்கே அவரது குடும்ப கெளரவத்தைப் பற்றி அக்கறை கொள்ளாதபொழுது நீங்கள் மட்டும் ஏன் இவ்விதமான தீவிர நடவடிக்கையில் முனைந்தீர்?"'
"மனிதன் என்றால் அவனது ஆறறிவில் மான உணர்வும் மறைந்து இருக்க வேண்டும். அந்த உணர்வு இருந்தால் ஒழிய, அவன் தனது குடும்பத்தையும் நாட்டையும் காப்பற்றும் நல்ல மனிதனாக விளங்க முடியாது. இப்பொழுதுள்ள எட்டையபுரம் சமஸ்தானதிபதி மதுரை திருமலை நாயக்கரது தண்டனைக்கு ஆளாகி பல சிரமங்களை அனுபவித்தவர். தங்கள் மன்னரது போர் நடவடிக்கையில் கைதாகி திருமலை நாயக்கரின் முன் நிறுத்தப்பட்டு, மன்னிப்புப் பெற்று மீண்டும் சமஸ்தானாதிபதி ஆனவர். தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். அதற்கு விலையாக தனது பாரம்பரியம், எத்தனையோ தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்த எட்டப்பன் என்ற
பெருமையின் சின்னமான இந்த இடைக்கால சின்னத்தை, இழந்துவிட்டார். அதைப்பற்றி அவர் பெரிதாக வருத்தப்படவில்லை. அவர் அப்படி இருக்கிறார். என்பதற்காக அந்தப் பரம்பரையைச் சேர்ந்த நான் கைகட்டிக் கொண்டு சும்மா
இருக்கமுடியாது அல்லவா? அது எனது கடமை. அவ்வளவுதான்."
மன்னரது சைகையைப் புரிந்துகொண்ட பிரதானி அவரதுவிசாரணையை மேலும் தொடராமல் அத்துடன் முடித்துவிட்டார்.
"கோடங்கி நாயக்கரே நன்றாகத் தூங்குங்கள் "என்று சொன்ன பிரதானியும் கோட்டைத் தளபதியும் சேதுபதி மன்னரைப் பின்தொடர்ந்தனர். சிறைக் காவலர் வழக்கம்போல பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மரியாதைக்காக அரண்மனை அந்தப்புரம் வரை மன்னருடன்
சென்றுவிட்டு பிரதானியும் கோட்டைத் தளபதியும் கோட்டைவாசல்
பகுதிக்குத் திரும்பினர்.
அமாவாசை இரவின் இருள் கோட்டைவளாகம் முழுவதையும்
அணைத்திருப்பது போலக் குவிந்து இருந்தது.
ஆனால், சேதுபதி மன்னரது சிந்தனையில் படர்ந்திருந்த குழப்பமான இருள் விலகத் தொடங்கியது.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.