• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
அத்தியாயம் -16



இராமநாதபுரம் கோட்டை.



நீராவி மாளிகை. மாலையில் மன்னர் தமது இருக்கைக்குச் சென்ற போது பிரதானியும் பணியாளர்களும் காத்திருந்தனர். மன்னரை வணங்கிய பிரதானி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பொறுப்பாளர்கள் மற்றும் குடிமக்களிடம் இருந்து வந்திருந்த ஓலைகளை வாசித்துக் காண்பித்தார்.



சில இடங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. அருகில் இருந்த பிற இடங்களின் பண்டக சாலைகளில் இருந்து தானியங்களை உடனடியாக அனுப்புமாறு கட்டளையிட்டார்.



ஏற்கனவே அளித்திருந்த மான்யங்கள் உரியவருக்குச் சரிவரச் சென்று சேர்கிறதா என்று பொறுப்பாளர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.



சில பகுதிகளில் கோவில்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் சிதலமடையும் நிலையில் இருப்பதை அறிந்தவர் அங்கெல்லாம் கோவில் திருப்பணிகள் தவறாது நடைபெற தேவையான கட்டளைகளை பிறப்பித்தார்.



அடுத்து, “மகாராஜா இது வரையில் நடந்திராத ஒரு விஷயம் தற்போது சேது நாட்டில் நடைபெற்று இருக்கிறது” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார் பிரதானி.



‘என்ன?’ என்பதாக மன்னர் பார்க்க, “தொண்டி கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கருமருந்துப் பொதிகளை இறக்குவதற்கு சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடி விட்டார்கள்” என்று பிரதானி ஓலையை வாசிக்கும் போதே மன்னர் மிகவும் ஆத்திரமடைந்தார்.



“பரங்கியர்கள் நமது நாட்டில் சிலருக்கு நண்பர்களாகி விட்டார்கள் என்பது நன்றாக விளங்குகிறது. இரண்டு கிழமைக்கு முன்னர் யாழ்ப்பாணம் பகுதியில் கருமருந்தைக் கொள்முதல் செய்திருக்கிறார்கள். நமது நாட்டில் எமக்கு எதிராக செயல்படுபவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. இனிமேலும் மெத்தனமாக இருப்பது என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல்” என்று கொதித்தெழுந்தார். மன்னரது பேச்சில் முன் எப்போதும் இல்லாத கடுமை தொனித்தது.



“உளவுத்துறையை இனிமேல் நானே நேரடியாக கவனிக்கிறேன் மகாராஜா. நமது நாட்டின் கடற்கரை மொத்தமும் உன்னிப்பாக கவனித்து வரவும் ஏற்பாடு செய்கிறேன்” என்று பொறுப்பேற்றுக்கொண்டு மன்னரைச் சமாதானம் செய்தார் பிரதானி.



மன்னரும் அந்தச் சமாதானத்தை ஏற்றுக்கொண்டார். “அதனுடன், சில குதிரை வீரர்களை கடற்கரையில் உலாவி வருமாறு செய்யுங்கள். ஏதேனும் செய்தி இருந்தால் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லி விடுங்கள்.”



“அப்படியே ஆகட்டும் மகாராஜா!’ என்றார் பிரதானி.



அனைத்து ஓலைகளையும் வாசித்து முடித்த போது இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் சாயரட்சைக்கான மணி ஒலித்தது.‌



கோட்டைக்குள் குடியிருக்கும் அம்மனைத் தினந்தோறும் வழிபடும் வழக்கம் வைத்திருக்கும் சேதுபதி மன்னர் எழுந்து சென்றார். பிரதானியும் மற்ற அலுவலர்களும் கூட அவரைத் தொடர்ந்தனர்.



************



மறு நாள் காலை, நீராவி மாளிகையின் முகப்பில் இருந்த அறையில் ரகுநாத சேதுபதி அமர்ந்திருந்தார்.



அப்போது பிரதானி மன்னருக்கு வணக்கம் சொன்னபடியே உள்ளே வந்தார்.

அவரின் பின்னால் விலங்கு பூட்டப்பட்ட நடுத்தர வயதுடைய ஒருவனை வீரர்கள் சிலர் இழுத்து வந்தனர்.



"இவர்தான்‌ நாம்‌ தேடிக் கொண்டிருக்கும் கலகக்‌ கும்பலின்‌ தலைவரா?"



"ஆம்‌. மகாராஜா! சேதுபதி மன்னரது ஆட்சியை அகற்றிவிட்டு புதிய அரசு ஒன்றை அமைக்க கடந்த சில ஆண்டுகளாகத்‌ திட்டமிட்ட செயல்பட்டு வத்ததை அவர் ஒப்புக்‌ கொண்டு சத்தியப்பிரமாண வாக்குமூலம்‌ கொடுத்துள்ளார்‌. இதோஅந்த வாக்கு மூலம்‌ அவர் எழுதி கையெழுத்திட்டது."



மன்னர்‌ அந்த ஓலையை வாங்கிப்‌ படித்துப்‌ பார்த்தார்‌. அவரது கண்கள்‌ இரையைத்‌ தாக்க விழையும்‌ புலியின்‌ கண்களைப்‌ போல சினத்தால்‌ சிவந்து பிரகாசித்தன.



"உம்‌... சரி. ஐயா தலைவரே! எமது ஆட்சியில்‌ உமக்கு ஏற்பட்டுள்ள பாதகம்‌ என்ன என்று சொல்வீரா?"



"எனக்கு மட்டுமா? மகத்தான இந்த மறவர்‌ சீமைக்கே தங்களது ஆட்சி மாபெரும்‌ பாதகங்களைப்‌ புரிந்து இருக்கிறது. சுயநலத்தின்‌ வடிவம்‌ தங்களது ஆட்சி என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்‌. காளையார்‌ கோவிலில்‌ தம்பித்‌ தேவர்‌ இறந்த பிறகு அந்த சீமைக்கு அவரது வாரிசுகளை நியமிக்காமல் இணைத்துக்‌ கொண்டது. அதே போல அஞ்சுகோட்டைச்‌ சீமையில்‌ தனுக்காத்த தேவர்‌ வாரிசுகளின்‌ உரிமையைப்‌ பறித்துவிட்டது. இவைகளைக்‌ கூட மன்னித்துவிடலாம்‌.

ஆனால்‌ மதுரைச்‌ சீமையை ஆட்சி செய்யும்‌ வடுகர்களுக்காக, அந்த அரசு நிலைபெறுவதற்காக அவரது ஜன்ம விரோதிகளான கம்பளத்தார்களையும்‌, கன்னடியர்களையும்‌ அடக்கி ஒடுக்க மறவர்‌ சீமையின்‌ ஆயிரக்கணக்கான தாய்மாரது தாலிகள்‌ அல்லவா எட்டயபுரத்திலும்‌ திண்டுக்கல்லிலும்‌ பறிபோயின.

இதைவிடக்‌ கொடுமை, மாபாதகம்‌ இந்த நாட்டு மறவர்களுக்கு என்ன இருக்கிறது? திருமலை நாயக்கர்‌ தாலிக்கு வேலி என்று தங்களைப்‌ புகழ்ந்து பாராட்டும்‌ தங்களது ஆட்சி தொடர்ந்தால்‌ இந்த சேது பூமியிலே மறவர்‌ என்ற இனமே இல்லாமல்‌ போய்விடும்‌."



"மிகச்‌ சிறப்பான கணிப்பு" ஏளனமாக சேதுபதி மன்னர்‌ சொன்னார்‌.



"தாங்கள்‌ திட்டமிட்ட சதியினால்‌, எவ்வளவு மறவர்கள்‌ மிஞ்சுவார்கள்‌ எனக்‌ கணக்குப்‌ போட்டீர்களா?"



"எல்லாவிதமான கணக்கையும்‌ போட்டுத்தான்‌ விடைகாணும்‌ தாளை எதிர்‌பார்த்துக் கொண்டிருக்கிறோம்‌."



“அது தப்புக்‌ கணக்கு என்று இப்பொழுது புரிந்து கொண்டீரா?" என்று கேட்டார் மன்னர்.



"இல்லை. ஒரு தனிப்பட்டவனது அழிவினால்‌ ஒரு இயக்கம்‌ தோல்வியடையாது. ஒரு சிறு முடக்கம்‌ வேண்டுமானால்‌ அதுவும்‌ சிலகாலம்‌ ஏற்படலாம்‌. ஆனால்‌ இறுதி வெற்றி இந்த நாட்டு மறக்குடி மக்களுக்குத்தான்‌! ஏனெனில்‌ இங்குள்ள மறவர்கள்‌ சோழச் சீமையில்‌ இருந்து வந்தேறிய செம்பி நாட்டார்‌ அல்ல. கல்‌ தோன்றி மண்‌ தோன்றாத காலம்‌ முதல்‌ இந்த மண்ணில்‌ முளைத்த வளர்ந்த மூத்த குடியினர்‌. இருமுறை இந்தப்‌ புனித மண்ணில்‌ பாண்டிய மறவர்‌ பேரரசுகளை உருவாக்க உதவிய உத்தமர்கள்‌."



எதிர்பாராத விதமாக இராமேஸ்வரத்தில் மக்களிடையே தமது திட்டம் பற்றிப் பேசிக்கொண்டு இருந்த போது சேது நாட்டின் வீரர்களிடம் மாட்டிக் கொண்டார் மகாராஜா என்று அழைக்கப்படும் பெரியவர். மன்னரது முன் தனது திட்டம் திசை மாறிப் போவதை நினைத்துக் கொதித்தார். அவருடன் இருந்த வீரசிம்மனும் இளஞ்செழியனும் தப்பி ஓடிவிட்டனர். குமாரத் தேவன் யாழ்ப்பாணம் சென்றிருந்தான். இங்கே இருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசனையில் ஆழ்ந்தார் பெரியவர். தனக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று தெரியும். அதன் பின்னர் தனது திட்டத்தைச் செயல்படுத்த யாரும் முனைய மாட்டார் என்றும் அவருக்குத் தெரியும். அதனாலேயே மன்னரின் முன்பு ஆவேசமாகப் பேசினார்.

"சரி. நீங்கள் உளறியவரை போதும்‌ பிரதானியாரே உங்கள்‌ கருத்து என்ன?" பிரதானியைப்‌ பார்த்து மன்னர்‌ வினவினார்‌.



"இந்த மனிதர் எதற்கும்‌ பிடிகொடுக்காமல்‌, பேசுகிறார்‌. ஆனால்‌ ராஜதுரோகச்‌ குற்றத்தை ஒத்துக்கொள்கிறார்‌. இவரை ஒழித்து விட்டால் மற்றவர்கள் தானாக அடங்கி விடுவார்கள். மகாராஜா முடிவு சொல்ல வேண்டியதுதான்‌.”



"இவர்‌ திருந்துவதற்கு வழி இல்லை. வயதாகிவிட்ட போதிலும் நாட்டின் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்குப் பதிலாக ராஜதுரோகத்தைச் செய்யத் தூண்டி இருக்கிறார். இவருக்கு மரண தண்டனை அல்லாமல் வேறு எந்த தண்டனையும் சரியானதாக இருக்க முடியாது. எப்போது எப்படி தண்டனையை நிறைவேற்றுவது என்பதைக் கோட்டைத் தளபதி முடிவு செய்வார். இழுத்துச்‌ செல்லுங்கள்‌ இவரை" என்று கர்ஜித்தார் ரகுநாத சேதுபதி.



அந்த “மகாராஜா”வை வீரர்கள் இழுத்துச் செல்ல, அவர் ஆவேசமாகக் கூச்சலிட்டபடியே அங்கிருந்து சென்றார். பிரதானியும் மன்னரிடம் அவர்களுடன் சென்றார்.



அவரைப் பார்த்துக் கொண்டே சிந்தனையில் இருந்த மன்னர் ஒரு விஷயம் தெளிவானதால் மகிழ்ச்சி அடைந்தார். இந்தச் சதியில் ஒத்துழைப்பு வழங்கிய நாடாள்வார்களை என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

இன்னும் ஒரு விஷயம் மீதம் இருக்கிறது. அவர் மீது கட்டாரி வீசிக் கொலை செய்ய முயன்றவன் இன்னும் அகப்படவில்லை. அவன் யாராக இருக்கும் என்ற யோசனையினூடே மகாராணியின் உடல்நலம் நினைவுக்கு வந்து வருந்தியது.



சில நாட்களாக மகாராணி சேது கங்கை நாச்சியாரின் உடல் நிலை சரியில்லை. நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது. அரண்மனை வைத்தியர் கொடுக்கும் மருந்துகளை அவர் உட்கொள்ள மறுத்தார். மருத்துவரோ, மகாராணியின் உடலில் எந்த வியாதியும் இல்லை. அவரது மனம் தான் வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறது என்றார்.



அதன் காரணத்தை மன்னர் அறிவாரே. ஆனால் இது விஷயத்தில் மகாராணிக்கு உதவ மன்னர் தயாராக இல்லை. மன்னருக்கு வாரிசு இல்லாத காரணத்தால் அவர் மற்றும் ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது மகாராணியின் விருப்பம்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலான இனிய உறவில் புதிய உறவு ஒன்றைப் புகுத்திச் சிக்கலை ஏற்படுத்த மன்னர் தயாராக இல்லை.



இந்த சிந்தனையைக் கலைக்கும் விதமாக அந்தப்புரத்தில் இருந்து அவசரச் செய்தியோடு பணிப்பெண் ஒருத்தி வந்து சேர்ந்தாள்.



அவள் கொண்டு வந்த செய்தியைக் கேட்டவுடன் அவசரமாக எழுந்து அந்தப்புரத்திற்குச் சென்றார் சேதுபதி மன்னர்‌.



அப்பொழுது ராணியார்‌ அறையில்‌, சோர்வாகப் படுத்திருந்தார். பார்க்கும் போதே உடலின் நலிவு நன்றாகத் தெரிந்தது. அதை பார்த்ததும்‌ மன்னர்‌ பதைபதைப்புடன்‌,

"என்ன இவ்வளவு மோசமாக உடல்நிலை இருக்‌கிறதே. என்ன காரணம்‌ ராணியாரே?" என்று கேட்டார்‌.



"மகாராஜா பயணம்‌ புறப்பட்டு போனவுடன்‌ ராணியாருக்குத்‌ திடீரென அசெளக்கியம்‌ ஏற்பட்டுவிட்டது. காரணம்‌ தெரியவில்லை. எப்பொழுதும்‌ அவர்கள்‌ அறியாத பயம்‌ அவர்களது உள்ளத்தில்‌ புகுந்து ஊசலாடிக்‌ சொண்டு இருக்கிறது." என்று ராணியின் அந்தரங்கத் தோழி ஒருத்தி சொன்னாள்.



"என்ன சேது? என்ன பயம்? என்னிடம் எதையும் மறையாது சொல்‌" என்று மன்னர்‌ கேட்டார்‌



"எனக்கு ஒன்றும்‌ இல்லை மகாராஜா" ராணியாரது பதில்‌ உறக்கத்தில்‌ இருந்து எழுந்தவர்‌ போலிருந்தது.



"ஒன்றுமில்லையா? அப்படியானால்‌ எங்கே உனது கலகலப்பு குறுநகை, மனத்தில் என்ன கவலை, என்னிடம்‌ சொல்லக்கூடாதா?"



"எனக்கு எந்த நோய்‌ நொடியும்‌ இல்லை மகாராஜா. ஆனால்‌ எனது மனத்தை இனந்தெரியாத பயம்‌ அழுத்துகிறது. அதனை எப்படிச் சொல்வது என்று புரியவில்லை. அவ்வளவுதான்‌. வேறு ஒன்றும்‌ இல்லை." மகாராணியார்‌ மிகவும்‌ சஞ்சலத்துடன்‌ மெதுவாகச்‌ சொன்னார்‌.



"எதற்கு பயம்‌. இதோ நான் வந்துவிட்டேன்‌. ஒன்றும்‌ பயப்படத்‌ தவையில்லை. காலையில்‌ வைத்தியரை வரச்‌ சொல்லி அவரிடம்‌ கேட்போம்‌. இப்பொழுது அமைதியாக உறங்குங்கள்‌” என்று மன்னர்‌ சொன்னார்‌. ராணியுடனே இருக்குமாறு பணிப்பெண்களுக்கு உத்தரவிட்டார்.



"சரி காலையில்‌ வருகிறேன்‌. நான்‌ வரட்டுமா?"

மன்னருக்கு மெதுவாகத் தலையசைத்து விடைகொடுத்தார்‌ ராணியார்‌.



**************



முற்பகலில்‌ நீராவி மாளிகையில்‌ சேதுபதி மன்னர் மிகவும்‌ சஞ்சலத்துடன்‌ அமர்ந்து இருப்பதைச் அங்கு வந்த பிரதானியும்‌ அரண்மனை வைத்தியரும்‌ கவனித்துவிட்டனர்‌. சில நொடிகள்‌ மெளனமாக நின்றனர்‌. பின்னர்‌, "மகாராஜா வணங்குகிறேன்‌" என்று வணங்கினார்கள்.



பிரதானி வைத்தியர் ஆகியோரது குரல்கேட்டு மன்னர்‌ சுயதினைவிற்கு வந்தார்‌. மன்னர் எதுவும் கேட்பதற்கு முன்னதாசுவே வைத்தியர்‌ முந்திக்கொண்டார்‌.

"மகாராஜா! நேற்று மாலையில்தான்‌ அந்தப்புரத்திலிருந்து தகவல்‌ வந்து ராணியைச்‌ சந்தித்தேன்‌.நாடி பார்த்தேன்‌. நன்றாக இருச்கிறது. உடலில்‌ எந்தக் கோளாறும்‌இல்லை. அவர்கள்‌ எதையோ நினைத்து பீதியடைந்து இருக்கிறார்கள்‌.நல்ல உணவும்‌ அமைதியும்தான்‌ தேவை. பயப்பட ஒன்றுமில்லை."



"தாங்கள்‌ சொல்வது சரிதான்‌. ஆனால்‌ ராணியின்‌ உடல்‌ இளைத்துவிட்டதே.”



"பதினைந்து நாட்களாக அன்ன ஆகாரம் எதுவும் உள்ளே செல்லவில்லை மகாராஜா. அதனால் தான் இந்த மெலிவு. அவர்கள்‌ உடல்‌ தெம்பு ஏற்பட நல்ல லேகியம் ‌கொடுத்து இருக்கிறேன்‌. நாள் தோறும்‌ சென்று கவனித்துக்கொள்‌கிறேன்‌. இப்பொழுதும்‌ ராணியைப்‌ பார்க்கத்தான்‌ செல்கிறேன்‌."



"நல்லது" மன்னரது பதிலை கேட்டதும்‌ வைத்தியர்‌ அந்தப்புரம்‌ சென்றார்‌.

அப்‌பொழுது அங்கு இருந்த கார்வாரும்‌ பிரதானியின்‌ சைகை அறிந்து வெளியே சென்றார்‌. தனித்து இருந்த மன்னர்‌, "என்ன விஷயம் பிரதானியாரே?" என்று கேட்டார்‌.



"இரண்டு! நாட்களுக்கு முன்னர்‌ அந்தி நேரத்தில் நமது கோட்டை வாசலை அடைக்கும் பொழுது நமது களஞ்சியத்திற்குச் சில தானிய வண்டிகள் வந்திருப்பதாகத் தெரிந்து காவலாளிகள் ஒரு கதவைத் திறந்து விட்டிருக்கிறார்கள். அதில் ஒரு வண்டியில் மூட்டைமேல் அமர்ந்திருந்த ஒருவரை பற்றி வண்டிக்காரர்களிடம் பணியாளர்கள் விசாரித்த போது அந்த நபர் அவர்களைச் சேர்ந்தவர் அல்ல என்றும் இராமநாதபுரத்திற்கு வந்த வழிப்போக்கர் என்பதையும் கோட்டை சேர்வைக்காரர் அறிந்து கொண்டார். பின்னர் விசாரணை செய்த போது அந்த ஆள் தான் ஒரு தேசாந்திரி என்று மட்டும் பதில் உரைத்திருக்கிறான். அவனது உடைமைகளை சோதித்த போது அவனிடம் நூறு பொற்காசுகளும் எட்டயபுரம் பிரதானி வழங்கிய கடவுச்சீட்டில் குமாரத்து கோடங்கி நாயக்கர், ராமசேது மற்றும் ஸ்ரீரங்க யாத்திரை செய்கிறார் என்று மட்டும் எழுதப்பட்டுள்ளது. இந்த நபரது பதில் சந்தேகம் கொள்ளச் செய்யும் வகையில் இருந்ததால் அவனை காவலில் வைத்துள்ளனர். எனது விசாரணையின் போது, தான் பெரிய மந்திரவாதி என்று பயமுறுத்தினான். அவனைப் பற்றி மேலும் விசாரிக்கலாம் என்று இருக்கிறேன் என்று சொல்லிய பிரதானி அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடவுச்சீட்டையும் பொற்காசுகளையும் மன்னரிடம் கொடுத்தார்.



அவைகளைப் பரிசோதித்த மன்னர் “இது விஜயநகரப் பேரரசரின் காசுகள். ஏற்கனவே நவராத்திரி விழாவின் போது கட்டாரியுடன் இருந்த காசுகள் போல இருக்கின்றன. அவைகளைக் கொண்டுவரச் சொல்லுங்கள் சரி பார்க்கலாம்” என்றார்.



சில நொடிகளில் அந்த காசுகளை கொண்டு வந்து கொடுத்தார்கள் இரண்டையும் சரிபார்த்த மன்னர், “நிச்சயமாக இவன் எட்டப்பனது உளவாளி. என் மீது கட்டாரியைக் குறி வைத்தவனும் இவன் தான். அன்று கைப்பற்றிய பொற்காசுகளும் இந்தக் காசுகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. மதுரையில் அச்சக சாலை நிறுவி மதுரை நாயக்கர்களுக்கெனத் தனியாக காசுகள் தயாரிப்பதற்கு முன்னர் மதுரை சீமையிலிருந்த பொற்காசுகள் இவை. இதுபோன்ற காசுகள் அடங்கிய பொற்கிழியை திருமலை நாயக்கர் எனக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். ஆதலால் இந்த எட்டயபுரம் உளவாளியைப் பத்திரமாக வைத்து விசாரணை தொடங்குங்கள். மேலும் தகவல்கள் கிடைக்கும். இப்போது தான் எனது மனச்சுமை சிறிதே குறைந்துள்ளது. எல்லாம் இராமநாதசுவாமியின் அருள். வேறு ஏதேனும் விஷயம் உள்ளதா?” என்றார் மன்னர்.



"திருப்புல்லாணிக் கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன மகாராஜா. தேர்த் திருவிழாவை நடத்தி விடலாம்” என்றார் பிரதானி.



“மிக்க மகிழ்ச்சி. பஞ்சாங்கம் பார்த்து விரைவில் நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து அனைவருக்கும் தகவல்‌ கொடுக்கலாம்‌" என்று மன்னர்‌ தெரிவித்தார்‌.



"மகாராஜா! நாளைக் காலையில் சந்திக்கிறேன்” என்று பிரதானி விடைபெற்றார்.

பிரதானி மன்னரிடம்‌ விடைபெற்றுச்‌ சென்றார்‌.



மன்னர் மீண்டும் அந்தப்புரம் சென்ற போது, வைத்தியர் ஒரு மருந்தை உட்கொள்ளும் விதம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். ராணியின் தோழி அவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“மகாராஜா வருகிறார்!” என்று அங்கிருந்த பணிப்பெண்கள் சொல்லி விட்டு வெளியே சென்றனர்.



ராணியின் தோழி எழுந்து நின்று மன்னருக்கு வணக்கம் செலுத்தினாள். வைத்தியர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ராணியின் தலைமாட்டில் மன்னர் அமர்ந்தார்.



“மகாராஜா! தங்களது முகம் வாடி இருக்கிறதே. இரவு தன்றாக உறங்கவில்லையா?"' என்று ஆதங்கத்துடன்‌ வினவினார்‌ மகாராணி.



"உறக்கமா? எனது உறக்கம்‌ கலைந்து பல நாட்கள்‌ ஆகி விட்டன. சேதுதாட்டின்‌ மணிமுடியைச்‌ சுமந்து இருக்கும்வரை உறக்கமும்‌ இல்லை. மனத்திற்கு நிம்மதியும்‌ இருக்காது."



மன்னரது விரக்தியான வார்த்தைகளைக்‌ கேட்ட மகாராணி வேதனைப்பட்டவராக மெளனமாக இருந்தார்‌.



இதயத்தில்‌ சுமந்துள்ள பல சிரமங்களின்‌ வெளிப்பாடாக அவசரப்பட்டு மகாராணியின் சுடு சொற்களை உதிர்த்துவிட்டோம் எண்று நினைத்த மன்னர்‌, அந்த சோகமான சூழ்நிலையை மாற்ற முயன்றார்‌.



"சேது ஒரு நல்ல செய்தி தெரியுமா? விரைவில் திருப்புல்லாணி கோவில் தேர் திருவிழா நடந்தேற இருக்கிறது. திருப்பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன.”



“அப்படியா மிகுந்த சந்தோஷம் நாம் முன்னதாகவே சேதுக்கரை போய்விடலாம்” என்றார் மகாராணி உற்சாகமாக.



“மகிழ்ச்சி. அப்படியே செய்வோம்” என்று மகாராஜா ஒப்புதல் அளித்தார்.



“மகாராணியின் சாப்பாடு விஷயமாக வைத்தியர் ஏதாவது கட்டுப்பாடு வைத்திருக்கிறாரா?” என்று மன்னர் கேட்டார்.



“ஒன்றும் இல்லை.”



“அப்படியானால் இப்பொழுது நாம் விருந்து மண்டபம் செல்லலாமே. மகாராணியாரது கையினால் சாப்பிட்டு மூன்று கிழமைகளாகப் போகிறது” என்றார் மன்னர்.

சிரித்துக் கொண்டே ராணியார் பணிப்பெண்ணை நோக்கினார் அவர் உடனே சாப்பாடு பரிமாறும் ஏற்பாட்டை கவனிக்க சமையல் கட்டிற்கு விரைந்து சென்றார்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top