அத்தியாயம் -15
இராமநாதபுரம் அரண்மனை.
அந்தப்புரத்தின் மேற்கு மதிலையாட்டி அமைந்தநந்தவனம். தெற்கே இருந்து தவழ்ந்து வந்த மாலைத் தென்றல் அங்குள்ள மலர்களின் மணத்தைப் பறித்து அந்தப் பகுதி முழுவதும் பரப்பி மணம் கொள்ளச் செய்தது.
ஏற்கனவே அங்கு அமர்ந்து தனிமையை நுகர்ந்து கொண்டிருந்த மன்னரைச் சந்திக்க மகாராணியார் சேதுகங்கை நாச்சியார் சென்றார். நந்தவனத்தில் மகாராஜா இருப்பதைப் பார்த்த ராணியின் பணிப் பெண்கள் நந்தவனத்திற்குள் நுழையாமல் வெளியே நின்றுவிட்டனர்.
உள்ளே சென்ற மகாராணியார், மன்னர் அமர்ந்திருந்த நாற்காலியின் அருகே சென்றார். அவர் வந்ததைக்கூட உணராத நிலையில் மன்னர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
"மகாராஜா!" முழுமையான அமைதியுடன் விளங்கிய அத்த நந்தவனச் சூழ்நிலையில் ராணியாரின் மிருதுவான குரல் மன்னரது சிந்தனையிலிருந்து அவரை விடுவித்தது.
"மகாராணியாருக்கு இங்கே வருவதற்குக் கூட நேரம் கிடைத்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதே..."
"என்ன செய்வது இராமேஸ்வரம் திருவிழாவிற்குச் சென்று திரும்பிய பிறகு இங்கு நிறைய வேலைகள். நேரம் போனதே தெரியவில்லை."
"ஆமாம்.”
"அதுசரி. இப்பொழுது எந்தக் கோட்டையை பிடிக்க இவ்வளவு பெரிய தனிமைச் சிந்தனை?”
"பிடிக்க வேண்டிய கோட்டையெல்லாம் பிடித்தாகிவிட்டது. இனியும் இந்த நாட்டு மக்களின் குருதி சேது மன்னரது பேராசைக்காக பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடாது. மாறாக, இந்த நாட்டு மக்கள் இயல்பான வாழ்க்கை முறைகளில் ஈடுபட்டு சேதுநாட்டின் அனைத்து வளங்களையும் பெருக்க வேண்டும். வானம் பார்த்த பூமி என்ற வசை மாறி வளம் நிறைத்த பூமி என்ற புகழ் பரவ வேண்டும்."
"மிகவும் மகிழ்ச்சி. இவைகளைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா?"
"இல்லை. இவையெல்லாம் தெளிவாக விரிவாக முடிவு செய்யப்பட்டுவிட்டவை. அனால் எங்கே அத்த திட்டங்கள் தடைபடுமோ என்ற பயம் எனது சிந்தனையில் இருள்போல்கவிழ்ந்து வருகிறது."
"ஏன்? எண்ன காரணம்?" மகாராணியார் மிகுந்த பதற்றத்துடன் கேட்டார்.
“முன்பே சொன்னது தான். வெளியே இருந்து வரும் பகையைப் போரிட்டு அழித்துவிடலாம். உள்ளுக்குள் இருக்கும் பகையை என்ன செய்வது என்று தான் புரியவில்லை” என்றார் மன்னர்.
“புரியவில்லை மகாராஜா. உள்ளுக்குள் பகை என்றால்.. யாரைச் சொல்கிறீர்கள்?”
“மறவர் சீமையின் ரகுநாத சேதுபதி மன்னராக இருக்கக் கூடாது என்று பலபேர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. இவர்கள் ஒரே குழுவினரா இல்லை பல குழுக்கள் இருக்கிநன்றார்களா என்று தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க மன்னர் திருமலை நாயக்கர் மறைந்த பிறகு ஆட்சிக்கு வந்த சொக்கநாத நாயக்கர் மறவர் சீமையைப் பகையாகக் கருதிவருகிறார் என்று அறிகிறேன்.
மதுரை அரசை ஒட்டிய நமது பாளையங்களைக் குறி வைத்து எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்று ஒற்றுச் செய்தி ஒன்று வந்திருக்கிறது. அமைதியாக இருக்கும் மறவர் சீமையை மறுபடியும் போர்க்களம் ஆக்குவதா என்று குழம்பிப் போய் இருக்கிறேன். அந்த இராமநாத சுவாமி தான் இதற்கொரு வழி செய்ய வேண்டும்” என்று மேல் நோக்கிக் கரம் கூப்பினார்.
****************
காலை நேரம்.
இராமேஸ்வரம் கோவில் அருகே உள்ள சத்திரம். அதன் முகப்பில் உள்ள பெரிய அறையில் இருந்த சேதுபதி மன்னரது பிரதானி ஓலை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். திருக்கோயில் பூஜையில் கலந்து கொண்டு பிரசாதங்களுடன் அரண்மனைக்கு சென்று கொண்டிருந்த அரண்மனை கார்வார் சத்திரத்திற்குள் நுழைந்தார்.
“பிரதானியாரே வணக்கம்."
"வணக்கம். பூஜை முடிந்து விட்டதா?"
"ஆம்! இதோ பிரசாதம் பெற்றுக்கொள்ளுங்கள். மகாராஜாவுக்கும் எடுத்துச் செல்கிறேன்."
"இராமநாதபுரம் திரும்புவது பற்றி மகாராஜா ஏதும் தெரிவித்தார்களா?"
"இல்லை. நான் சென்று வருகிறேன்” என்று சொல்லி அதே வளாகத்தில் உள்ள இராமேஸ்வரம் அரண்மனைக்குச் சென்றார் கார்வார்.
அப்போது சிலர் பிரதானியைக் காண வந்தார்கள். “நீங்கள் ஓரியூர் கோட்டை வீரர்கள் தானே?”
"ஆமாம். எங்களது தளபதி தங்களுக்கு ஓர் ஓலை அனுப்பி இருக்கிறார்” என்று நீட்டினார்கள்.
அதைப் பெற்றுக் கொண்ட பிரதானி ஓலையின் முடிச்சு மேலிருந்த அரக்கு முத்திரையை அகற்றி ஓலையைப் பிரித்துப் படித்தார். அவரது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஓலை கொண்டு வந்த வீரர்களைப் பார்த்து,
"ஒன்றும் விஷேசம் இல்லை. நீங்கள் ஊர் திரும்பலாம்" என்றார்.
" உத்தரவு" என்று அத்த வீரர்கள் பிரதானியிடம் விடைபெற்றுச் சத்திரத்திற்கு சென்றனர்.
ஆனால் பிரதானி அந்த ஓலையை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தார்.
சென்றவாரம் பாம்பனில் பிடிப்பட்ட தனுக்காத்த குமாரத் தேவன் சொன்னது. அவனுக்கு இலங்கையில் என்ன வேலை? ஒரு வேளை அவன் சோண்ன பிரகாரம் அவன் அங்கு பிழைக்கச் சென்றிருப்பானா? இல்லை மன்னருக்கு எதிராக நடக்கும் சதியில் அவனுக்கும் பங்கு இருக்குமா? இருக்க வேண்டும் . . . மன்னரது விசாரனையின் பொழுது மன்னருக்கு முன்னே பயமே இல்லாமல் பேசினாலே. அரசரது ஆணைக்குப் பணிந்துதான் அவனது தந்தை மதுரை நாயக்கருக்காகப் போரிட்டு மடிந்தார் என்று.
மதுரை மன்னரது உதவிக்கு சேதுபதி மன்னர் சென்றது, மறவர் சீமை வீரர்களைப் போரில் ஈடுபடுத்தியது, இவையனைத்தையும் மறைமுகமாக எதிர்த்தான். அவனது தந்தைக்கு வழங்கப்பட்ட உதிரப்பட்டி சன்மானத்தை மறுத்து விட்டதாகச் சொன்னதும் அவனது தீவிரவாத சிந்தனையைத்தானே குறிக்கின்றது.
இப்பொழுது அவன் எங்கே? இந்தச் சதிக் கும்பல் எங்கு இருக்கிறது? இப்படிப் பலவாறான சிந்தனையில் பிரதானியார் இருந்தார்.
அன்று மாலையில் பிரதானியார் சேதுபதி மன்னரைச் சந்தித்த பொழுது அவரது ஐயப்பாடுசளை மன்னருக்குத் தெரிவித்தார்.
முந்தைய தளவாய் சேதுபதியின் மருமகன் நாரணத்தேவரது வழியில் ஓரியக் கோட்டைத் தளபதியான ஆளஞ்சாத் தேவர், மன்னரது உறவினர் என்பதையும் மன்னருக்குத் தெரிவித்தார்.
அவர்களைப்போல் இந்த குமாரன் தேவனும், சேதுபதி பட்டத்தின் மீது குறிவைத்து இருக்கிறானா? இல்லை மதுரை சொக்கநாத நாயக்கரது பொறாமையின் தூண்டுதலால் சேதுபதிக்கு எதிராக இயங்கும் சதிகளில் இவனும் ஈடுபட்டு இருப்பானா? அவர்கள் இன்னும் எத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவார்கள்? அவைகளைத் தடுத்து அவர்களது சதித் திட்டத்தை எப்படி முறியடிப்பது?
இருவரும் நீண்டநேரம் இரவுச் சாப்பாட்டினைக் கூட மறந்தவர்களாக ஆலோசனை நடத்தினர்.
*********
கிழக்கு கடற்கரையில் பாம்பனுக்கு மேற்கே உள்ள கடற்கரையில் மக்கள் நடமாட்டமற்றம் இல்லாத ஓர் இடத்தில் ஒரு மண்டபம் இருந்தது.
ஏனோ பல ஆண்டுகளாக அந்த மண்டபம் மக்களால் பயன்படுத்தப் படவில்லை. அதில் இருவர் அமர்ந்து எதிரே அலைமோதிக் கொண்டிருந்த அந்தக் கடலைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர் பெரியவர். அடுத்தவர் வீரசிம்மன் என்ற இளைஞன்.
"வீரசிம்மா! என்ன இருந்தாலும் சரக்குப் பொதிகளை பகல் நேரத்தில் கரையிறக்க முடியாது. நம்புதாளை கிராமத்தில் மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும்.”
"உண்மைதான் மகாராஜா!" நல்ல் வேளை கரையில் இறக்கிய இரண்டு பொதிகளைத் தவிர எஞ்சிய மூட்டைகளை கரை இறக்காமல் வள்ளத்தை திருப்பி சேதுக்கரைத் தோப்பிற்கு கொண்டு சென்றதால் பெருமளவு தஷ்டம் தவிர்க்கப்பட்டுவிட்டது. இன்று இரவு தனுக்காத்த குமாரத் தேவன் வந்ததும் முழு விபரமும் தெரியும்."
"அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து தெளிவான பதிலையும் பெற்று வருவான் என எதிர்பார்க்கிறேன். வரட்டும், பார்க்கலாம். அவருக்கும் சேர்த்துதானே கட்டுச் சோறு கொண்டு வந்து இருக்கிறாய்?" என்று பெரியவர் கேட்டார்.
"ஆமாம் மகாராஜா! நாளை மதியத்திற்குக் கூட சேர்த்து வாங்கி வந்து இருக்கிறேன்."
"ரொம்பவும் நல்லது. நான் கொஞ்சம் உறங்குகிறேன்.”
"உத்தரவு மகாராஜா"
வீரசிம்மன் சொல்லிவிட்டு எழுந்து அந்த மண்டபத்துக்குள்ளேயே உலாவிக் கொண்டு இருந்தான். அந்தி மாலைப் பொழுது முடிந்து அத்த பகுதி முழுவதையும் மெல்லிய இருள் கவிழ்ந்த பிறகு, மண்டபத்தை விட்டு வெளியே வந்தான். நாலா புறமும் கூர்மையாக காதையும், கண்ணையும் ஒருமைப்படுத்தி நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். சற்று தூரத்தில கரிய நிறத்தில் உருவம் ஒன்று வந்து கொண்டிருந்தது. வானத்து நட்சத்திரங்களின் மங்கலான ஒளியில் ஏதோ ஒரு கனவில் இருப்பது போல் பிரமை ஏற்பட்டது.
உண்மையில் அவன் விழித்தவாறு கனவு கண்டு கொண்டு தான் இருந்தான். ஆம் அது ஒரு நீண்ட கனவு. நாலைந்து, வருடங்களாகவே அந்தத் கனவுகளே அவன் வாழ்க்கையாவிட்டது.
**********
இராமநாதபுரம் கோட்டைக்கு மேற்கே பத்து கல் தொலைவில் உள்ள களரி கிராமத்து பெரிய தனக்காரரது மகனான வீரசிம்மன், ராமநாதபுரம் சேதுபதியாக இருந்த தளவாய் சேதுபதியின் மகளை மணந்த காரண தேவருக்கு பங்காளி முறையினன்.
தளவாய் சேதுபதி மறைந்த பிறகு சேது நாடு மூன்றாகப் பிரிக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்தில் தம்பி தேவரும் நாரணத் தேவரும் மரணம் அடைந்தார்கள். அதன் பிறகு ராமநாதபுரம் பகுதி சேதுபதியாக இருந்த திருமலை ரகுநாத சேதுபதி, எஞ்சிய இரு பகுதிகளையும் இணைத்துப் பழைய சேதுபதி சீமையாக மாற்றினார். மக்கள் முழுமையாக இந்த இணைப்பை வரவேற்றனர்.
ஆனால் மன்னரின் பங்காளிகள் காளையார் கோவில் மற்றும் திருவாடானை பகுதிகளுக்கு தொடர்ந்து அவர்களே மன்னர்களாக ஆகிவிடலாம் என ஆசைப்பட்டனர். திருமலை ரகுநாத சேதுபதி அதற்கு இடம் கொடுக்காமல் மக்களை ஒன்றுபட்ட அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முந்தி கொண்டார். அந்த அதிருப்தியாளர்களின் ஒருவரான “மகாராஜா” என்று அழைக்கப்படும் பெரியவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் களரி கிராமத்திற்கு வந்த பொழுது வீரசிம்மனிடம் நீர் பூத்த நெருப்பாக இருந்த பதவி ஆசையை மேலும் தூண்டி விட்டார். கூடவே தனுக்காத குமார தேவனையும் தூண்டிவிட்டார்.
அன்று முதலே சேதுபதி மன்னர் ஆகிவிட்டது போன்ற கற்பனையில் வீரசிம்மன் வாழத் தொடங்கி விட்டான். கடந்த இரண்டு வருடங்களாக இரவு பகல் பாராமல் நாடு முழுவதும் சுற்றி வந்தான். திருமலை சேதுபதி தன் சுயநலம் காரணமாகவே இறந்து போன தம்பி தேவர் மற்றும் நாரண தேவரின் வாரிசுகளை புறக்கணித்து, தர்மத்திற்குப் புறம்பாக சீமை முழுவதற்கும் அவரே மன்னர் ஆகிவிட்டார் என்று பிரச்சாரம் செய்தான். சேதுபதி மன்னருக்கு எதிராக அதிருப்தியாளர்களை ஊக்குவித்து அவர்கள் செயல்படுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தான். ஆதலால் பெரியவரது திட்டம் நிறைவேறி புகலூர் கோட்டையில் சேதுபதி என்ற பெயருடன் பட்டமேறும் நாள் நெருங்கி விட்டதாக நம்பி வந்தான்.
அவர்களது திட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள டச்சுக் கம்பெனியாரது ராணுவ உதவிகளை எதிர்பார்த்து இருந்தனர். அதற்காகவே தணுக்காத்த குமாரத் தேவன் யாழ்ப்பாணம் சென்றிருந்தான்
***************
முன்னிரவு கடந்து விட்டது. இன்னும் கிழக்கே நிலவு எழவில்லை. காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. பெரியவர் நன்கு உறங்கிவிட்டு விழித்துக் கொண்டார்.
"வீரசிம்மா! எங்கே இருக்கிறாய்?"
"மகாராஜா! இதோ வந்து விட்டேன்." வீரசிம்மன் மெதுவாகச் சொன்னான். அதற்குள்ளாகப் பெரியவரே எழுந்து மண்டபத்தின் திண்ணைக்கு வந்து விட்டார்.
"அந்தி நேரம் புறப்பட்டிருந்தாலும் இப்போது வந்திருக்கலாம். இன்னும் வரக் காணாமே."
"வந்து விடுவார் ஐயா!"
இரு நாழிகை நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர். கடற்கரை அலைகளை அடக்கிவிட்டு ஒரு ஓசை சற்றுப் பெரியதாக எழுந்தது. அந்த ஒசை வந்த பகுதியை ஆர்வமுடன் இருவரும் கூர்மையாக உற்று நோக்கினர்.
கடற்கரையில் வள்ளத்தில் இருந்து இறங்கி மண்டபத்தை தோக்கி வந்தான் ஒருவன். அவன் தனுக்காத்த குமாரத் தேவன். வந்தவன் இருவருக்கும் வணக்கம் சொன்னான். பின்னர்,அந்த மண்டபத்தில் அமர்த்து கட்டுச் சோற்றை பிரித்து பேசிக்கொண்டே மூவரும் சாப்பிட்டாகள்.
"ஆமாம் சரக்குகளை ஏன் நம்புதாழையில் காலை நேரத்தில் இறக்கினாய்? நமது சரக்குகள் பிடிபட்டவுடன் நமது நடமாட்டம் பற்றி எதிரி எச்சரிக்கையாவதற்கும் ஏதுவாகிவிட்டதே?" என்று வீரசிம்மன் குமாரத் தேவனிடம் கேட்டான்.
"அது ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி. நெடுந்தீவில் இருந்து நடு இராத்திரியில் புறப்பட்ட தோணி தம்புதாழையின் கடற்கரைக்கு மூன்றாவது சாமத்திற்கு முன்னமே வந்து சேர்ந்து இருக்க வண்டும். நடுக்கடலில் காற்று.அடங்கி விட்டதால் தோணி சுமார் இரண்டு நாழிகை நேரம் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடியாமல் நின்றுவிட்டது. பிறகு காலை நேரத்தில் தென்திசையில் காற்று எழுந்த பிறகுதான் புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம்.
கரையில் சில மீனவர்கள் சரக்குப் பொதிகளைப் பார்த்துக் கலவரமடைந்து கூக்குரலிட்டதால், கரையில் இறக்கி வைத்த இரண்டு மூட்டைகளை மட்டும் அங்கேயே போட்டுவிட்டு, மீதமூட்டைகளை சேதுக்கரைத் தோப்பில் சேர்த்துவிட்டேன்."
"சரி யாழ்பாணத்தில் டச்சுத் தூதுவர் என்ன சொன்னார்? சாதகமான பதில்தானே?" பெரியவர் கேட்டார்.
"ஆமாம் ஐயா, பாம்பன் கால்வாய்ப் போக்குவரத்தில் அவர்கள் ஆதிக்கம் பெற வேண்டும் என்ற கொள்கையைத்தான் வலியுறுத்தினார். அந்த உரிமையை இருபது ஆண்டுகள் அனுபவித்துக் கொள்ள சம்மதம் என்பதை தெரிவித்துள்ளேன். அவர்களது உதவியைப் பெற வேறு வழியில்லை. அவரும் ஏற்றுக் கொண்டார். காரியம் முடிந்தவுடன் உரிய கவனிப்பு செய்வதாகவும் அவருக்கு ஆசைகாட்டி வந்திருக்கிறேன்.”
“அவர்கள் கம்பெனி கவர்னர் இப்போது நாகப்பட்டினம் கோட்டைக்கு வந்திருக்கிறாராம். இன்னும் இரண்டு வாரங்களில் யாழ்ப்பாணம் வந்தவுடன் அவரது ஒப்புதலை பெற்று நமக்கு தகவல் கொடுப்பதாக சொன்னார். எப்படியும் நமக்கு அடுத்த ஒரு மாதத்தில் போதிய சரக்குகள் கிடைக்கும்.”
“மிகவும் சந்தோஷம். இனி நமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இறுதித் திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று பெரியவர் சொன்னார்.
“ஆமாம். அதில் முக்கியமானது கூடுதலாக இருநூறு பேர்களுக்காவது பயிற்சி கொடுத்தாக வேண்டும். அதாவது அவர்களை அனுமந்தங்குடி ஆறுமுகம் கோட்டை கமுதி மற்றும் ராமநாதபுரம் கோட்டைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சி அளிக்க வேண்டும்.”
சில நிமிட நேரத்தில் இந்த மூவருடன் இன்னொருவர் இணைந்து கொண்டார்.
"ஐயா நமஸ்காரம்” என்று பெரியவரிடம் கரம் கூப்பினார். அனைவரும் மண்டபத்தினுள் சென்று அமர்ந்தனர்.
“வரவேண்டும் செழியா! உன்னைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஏதேனும் செய்தி உண்டா?”
"ஒரு வாரத்திற்கு முன்னர் மதுரை சென்று இருந்தேன். திரும்பும் வழியில் பெருதாழிச் சத்திரத்தில் தங்கி இருந்த பொழுது ஓலைகள் அனுப்பி சில நாட்டுத் தலைவர்களை இன்று மாலைக்குள் இங்கு வந்து சேருமாறு தகவல் கொடுத்துவிட்டு வந்தேன்" என்றான் இளஞ்செழியன்.
"ரொம்ப சரி. இரவு வரை காத்திருப்போம்” என்று சொல்லிய பெரியவர், “மதுரையில் எதாவது விஷேசம் உண்டா?” என்று கேட்டார்.
“சொக்கநாத நாயக்கர் தலைநகரை திருச்சிராப்பள்ளிக்கு மாற்றிய பிறகு மதுரை அரசியலில் விறுவிறுப்பு எதுவும் இல்லை. ஆனால் தஞ்சாவூர் படையெடுப்பிற்கு சொக்கநாதருக்கு உதவியாக சேதுபதி படைகளை அனுப்பாததால் நாயக்கர் மிகவும் கோபத்துடன் இருக்கிறாராம். அதனால் சேது நாட்டின் மீது மற்றுமொரு படை எடுப்பு நடத்தப்படலாம் என்று ஒரு வதந்தி உலாவி வருகிறது.”
“ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன்னர் திருமலை நாயக்கர் படையெடுத்தபோது மதுரை நாயக்கருக்கு ஏற்பட்ட சிரமங்களை சொக்கநாதர் அறிந்திருப்பார். அத்துடன் தஞ்சை நாயக்கருடன் அவரது உறவு சுமூகமாக இல்லாத நிலையில் சேது நாட்டு படையெடுப்பு நடக்கும் என்று நம்ப இயலாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதனையும் நமக்கு சாதகமானதாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று பெரியவர் நம்பிக்கையுடன் சொன்னார்.
“பெரும்பாலும் அவ்விதம் நிகழாது என்று தான் நான் நினைக்கிறேன். அதே நேரத்தில் நாயக்க மன்னர் அது படையெடுப்பால் நமது திட்டத்திற்கு எந்தவித சிரமமும் ஏற்படாது.”
இது போன்ற விஷயங்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு மூவரும் இரவுக்காகக் காத்திருந்தனர்.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.