அத்தியாயம் -14
அன்று வெள்ளிக்கிழமை.
சாயங்காலம் பூஜை முடிந்தவுடன் ராமநாத சுவாமியும் பர்வதவர்த்தினி அம்பாளும் சிவிகையர் சுமந்த சப்பரத்தில் புதிய இரண்டாம் பிரகாரத்தில் உலா வந்தனர். சிறப்பான அலங்காரங்களுடன் முதன்முறையாக, புதிய இரண்டாம் பிரகாரத்தில் எழுத்தருளிய தெய்வத் திருமேனிகளை சன்னதிகளின் வடக்கு, தெற்கு, மேற்கு வாசல் பகுதிகளில் மக்கள் திரளாகக் கூடி நின்று தரிசித்து மகிழ்ந்தனர். அதற்கேற்றாற்போல் சில நிமிடங்கள் சப்பரத்தை அங்கெல்லாம் நிறுத்தினர்.
அப்பொழுது பஞ்சகச்சமாக வெள்ளைப்பட்டு வேட்டியும், குங்கும வண்ண தலைப்பாகையும் அணிந்து, புஜங்களிலும் மார்பிலும் திருநீறும் குங்குமமும் கையில் வெள்ளித்தடியுடனும் காட்சியளித்த கட்டியக் காரர் சேதுபதி மன்னர்களது விருதாவளிகளைத் தெளிவாக உர்த்த குரலில் சொல்லி வந்தார்.
தீவெட்டிகளின் பிரகாசமன வெளிச்சத்தில், தெய்வத் திருமேனிகளை அலங்கரித்த திரு ஆபரணங்களில் இருந்த விலை மதிப்பற்ற நவமணிகளின் பச்சை நீல, இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை, நிறங்கள் எதிரொளித்து காண்பவர் கண்களைக் கூசச் செய்தன.
பின்னர் பலவிதமான இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடைசியாக, மதுரையில் இருந்து வந்த நர்த்தகி பூம்பாவை தேவலோக ரதிபோல அழகிய ஒப்பனைகளுடன் வத்து சேதுபதி மன்னரை வணங்கிவிட்டு, சபையோருக்கும் வணக்கம் தெரிவித்தாள்.
அவளது நடனத்துக்கென மரப் பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அவள் சென்றவுடன் வாத்தியக்காரர்களது கூட்டு இசை ஒலிக்கத் தொடங்கியது.
பூம்பாவை நாட்டியம் ஆடத் தொடங்கினாள். இரண்டு நாழிகைக்கும் மேலாக அன்றைய நிகழ்ச்சிகளை கண்டு கொண்டிருந்த அனைவரும் தனது நடனத்தால் கட்டிப் போட்டாள்.
பூம்பாவையின் கால்கள் மேடையை மிதித்து எழுப்பும் ஓசையும் அதற்கு இணையாக இணைந்து ஒலித்த மத்தளம், சிக்கி ,குழல், வீணை, செண்டை ஆகியவைகளில் ஒலியும் நின்ற பொழுதுதான் மன்னரும் மக்களும் நிகழ்ச்சி முடிவுற்றதை உணர்ந்தனர்.
மேடையில் இருந்து இறங்கி வந்து, மன்னர் முன் பவ்யமாகப் பணிந்து தின்ற பூம்பாவைக்கு மன்னர் முத்து மாலையொன்றைப் பரிசளித்தார்.
அவளைத் தொடர்ந்து அவரது குழுவினரும் மன்னரை வணங்கி அவர் அளித்த பொற்கிழிகளைப் பெற்றுச் சென்றனர்.
இராமேஸ்வரம் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத் திருப்பணி நிறைவைக் குறிக்கும் இந்த விழா, நடன நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றதை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் பேசிக்கொண்டே கலைந்து சென்றனர்.
***********
மறுநாள் காலை.
இராமேஸ்வரம் அரண்மனையில் பெருங்கூட்டம் திரண்டு இருந்தது. குடிமக்கள் ஒவ்வொருவராக தங்களது காணிக்கைப் பொருட்களைக் கொடுத்துவிட்டு மன்னரிடம் விடைபெற்றுச் சென்றனர். நடுப்பகல் வரை அறையில் இருந்து பாளையக்காரர்களுடன் பேசி முடித்த பிறகு மன்னர் பிரதானியை நோக்கினார்.
அந்தப் பார்வையில் அடங்கிய பொருளினைப்புரிந்துகொண்ட பிரதானி,
"மகாராஜா! நேற்று முன்தினம் உப்பூர்வரை சென்ற வீரர்கள் இன்று காலையில்தான் திரும்பினார்கள். அவர்கள்சேகரித்துள்ள தகவல்படி, ஆற்ற கரைக்கும் முடிவீரன்பட்டினத்திற்கும் இடைப்பட்ட கடற்கரையில் சில நாட்களாக அந்தியர்கள் நடமாட்டம் இருந்து வருகிறதாம். இன்னும் துல்லியமான தகவல்சளைப் பெறுவதற்காக முடிவீரன்பட்டினத்து மீனவர்களில் ஒருவரை உளவு பார்த்துச் சொல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது."'
"சில நாட்களாக... சில அன்னியர்கள்... அவர்கள்யாராக இருக்கக் கூடும்? அவர்களது. நடமாட்டம் எதற்காக ... .உம்..." மன்னருக்கு எதுவும் விளங்கவில்லை.
"மகாராஜா! கிழக்கு, தெற்கு கடற்கரையில் சில சமயங்களில் இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களைக் கொண்டு வந்து இறக்குவார்கள். நமது நாட்டில் இல்லாத விளை பொருட்களான கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை ஆகியவைகளை இலங்கையில் இருந்து நமது நாட்டவர்கள்தான் கொண்டு வருவார்கள்.
ஆனால் நமக்கு இப்பொழுது கிடைத்துள்ள செய்தி, அவர்கள் அன்னியர்கள் என்பது. விரைவில் முழுவிபரமும் பெற்றபிறகு இதுபற்றி முடிவு செய்யலாம்.”
“அப்படியானால் இந்த குமாரத் தேவர் என்ன ஆனார்? எங்கு சென்றார்?"
"நமது கிழக்குப் பகுதியில்தான் இருக்க வேண்டும். இந்த தீவிற்குள் இன்னும் வரவில்லை என்பது உறுதியாகிவிட்டது. பேய்க்கரும்பு சென்று வந்த உளவாளிகளுக்கு அங்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. மண்டபம் தோணித்துறையிலும் பாம்பன்துறையிலும் பயணிகளை தோட்டமிட ஏற்பாடு செய்யப்பட்டுஇருக்கிறது."
"சொந்த ஊர் அஞ்சுகோட்டை நாட்டு ஓரியூர் என்றுதானே அவன் தெரிவித்துள்ளான்?"
"ஆம். பாம்பன் கோட்டை சேர்வைக்காரரது ஓலையிலும் அப்படித்தான் வரைந்து இருக்கிறார்."
"ஓரியூர். கோட்டைத் தளபதிக்கு ஓலை அனுப்பி.குமாரத் தேவன் பற்றிய் விவரங்களை பத்து நாட்களுக்குள் சேகரித்து அறிக்கை அனுப்புமாறு தெரிவியுங்கள்"
"உத்தரவு"
“மாங்காடு, புங்கடி பகுதிகளைப் பார்வையிட்டு அங்கே யாழ்ப்பாணத்துடன் வணிக வசதிகளைப் பெருக்க, பண்டகசாலைகளை அமைக்க வாய்ப்புள்ளதா என்பதை நேரில் கண்டறிய வேண்டும். தாளைக் காலையில் பூஜை முடிந்தவுடன். புறப்பட வேண்டும். குதிரை அணி ஒன்று ஆயத்தமாகட்டும்."
"உத்தரவு, அப்படியே செய்கிறேன்."'
"நாளை காலையில் சந்திப்போம்" என்று கூறிவிட்டு.
அறையில் இருந்து மன்னர் விருந்து மண்டபத்திற்குள் செண்றார்.
ராமுத் தேவன் அவரைப் பின்தொடர்ந்து சென்றான்.
**************
திருப்பத்தூர் கோட்டை. பிற்பகல் நேரம்.
மதுரையில் இருந்துதிருச்சிராப்பள்ளிக் கோட்டைக்குச் செல்லும் ராஜபாட்டையில் இருவாசலுடன் அமைந்திருந்தது. கோட்டைக்குள் நுழைந்தவுடன் திருத்தனியாண்ட நாயனார் திருக்கோயில் உள்ளது. அதன் மதிலையடுத்து தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திருஞான சம்பந்த மடத்தில் திருமலை சேதுபதி மன்னர் கடந்து இரண்டு நாட்களாகத் தங்கி இருந்தார். மடத்தின் விசாலமான நடுக்கூடத்தில்அமர்ந்து எதனையோ சிந்தித்தவாறு அமர்ந்திருந்தார்.
“மன்னருக்கு வணக்கம். திரு மய்யம் கோட்டைத் தளபதி காத்து இருக்கிறார்” என்று வீரர் ஒருவர் வந்து நின்றார்.
"வரச் சொல்"
"உத்தரவு" வீரர் அங்கிருந்து சென்றார்.
அவனையடுத்து நடுத்தர வயதுள்ள மனிதர், அங்கே வந்தார். நல்ல உடலமைப்பு. நடையிலே கம்பீரம். கண்களில் பெருமிதம். கூப்பிய கரங்களை உயர்த்தி மன்னரை கும்பிட்டவாறு மன்னரின் முன் வந்து நின்றார்.
"மகாராஜா! உத்தரவு."
"என்ன பல்லவராயரே! நலந்தானா? உங்கள் பகுதி குடிமக்கள் பற்றி ஏதாவது செய்தி உண்டா? மதுரை நாயக்கரது ஒற்றர்கள் நடமாட்டம் அங்கு இருக்கிறதா? பத்து நாட்களுக்கு முன்னர் இங்கு நடந்தவைகளைக் கேள்விப் பட்டீர்கள் அல்லவா?"
"ஆம். மகாராஜா! சுவாமி தரிசனம் செய்ய வந்திருப்பதாக சொல்லிய மதுரை வடுகரது சிறு கூட்டம் இந்தக் கோட்டைப் போர் வீரர்களை திடீரென தாக்கி சிறிது நேரத்தில்
கோட்டையை தங்களது பொறுப்பில் எடுத்துக்கொண்டார்களாம். ஆனால் மூன்று நாட்களில் பக்கத்தில் உள்ள பட்டமங்கலம், கண்டிராமாணிக்கம், கொங்கரத்தி, நடுவிக் கோட்டை நாட்டார்கள் அனைவரும் திரண்டு வத்து மதுரை சொக்கநாத நாயக்கரது வீரர்களை திடீரெனத் தாக்கி அவர்களை மதுரைக்கு ஓட்டம் பிடிக்கச் செய்தார்கள் எனக் கேள்வியுற்றேன். ஆனால் எங்களது திருமயம் கோட்டை நிலை வேறு. பெரும் படையுடன் திருச்சிராப்பள்ளி நாயக்கர் அங்கு வந்து முட்டினாலும் கூட ஒன்றும் நடக்காது. நமது மக்களும் சரி, வீரர்களும் சரி, கூலிப் படைகள் அல்ல. நாட்டுணர்வும் ராஜவிசுவாசமும் மிக்கவர்கள் மகாராஜா!"
"மகிழ்ச்சி பல்லவராயரே! இந்தச் சேதுபதி சீமை தொடர்ந்து இதே கட்டுக் கோப்புடனும் வலிமையுடனும் திகழவேண்டும் என்பதுதான் நமது நோக்கம். சரி, இந்த ஆண்டு விவசாயம் எப்படி, கண்மாய்களில் தண்ணீர் இருக்கிறதா? குடிமக்கள். அமைதியாக இருக்கிறார்களா?"
"மகாராஜா மக்களுக்கு குறை ஒன்றும் இல்லை. நல்ல மழை பெய்தது. ஆனால் நல்ல வேளாண்மை இல்லை. இருந்தாலும் வழக்கம் போல சோழநாட்டில் இருந்து வண்டிகள் ஏராளமாக வருகின்றன. ஆதலால் தான்ய தவசங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை. தெற்குப் பகுதிகளில் ஆடு மாடுகள் கணை நோயினால் சிறிது சேதம். இதைத் தவிர மன்னருக்குத் தெரிவிக்க வேண்டியது ஒன்றுமில்லை."
"மகிழ்ச்சி! ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அறந்தாங்கி வழியாக விரைவாக ஓலையை இராமதாதபுரத்திற்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் சென்று வரலாம்."
"உத்தரவு"
திருமெய்யம் கோட்டைத் தளபதி பல்லவராயர் மன்னரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். மீண்டும் சேதுபதி மன்னர் தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்த்து இருந்தார். ஒரு வீரன் வத்து பணித்து நின்று, "கவிராயர் வத்து இருக்கிறார்” என்றான்
"உம். வரலாம்" என்ற மன்னரது மறுமொழியில் மதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் வந்தார்.
"மகாராஜா! வாழ்க!"
"வாருங்கள் கவிராயரே! சென்ற ஆண்டு நவராத்திரி விழாவின் பொழுது சந்தித்தது அல்லவா?"
"ஆமாம். மகாராஜா. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?தாங்கள் இங்கு வந்திருப்பதாக நேற்று அறிந்தேன். உடனே புறப்பட்டேன், இப்பொழுதான் வத்து சேர முடிந்தது."
"மகிழ்ச்சி, அண்மையில் இங்கு நடந்த மதுரைப் படைகளது ஆக்கிரமிப்புப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதொடர்பாக திடீரென இங்கு வர வேண்டிய கட்டாயம்."
"ஆமாம். கேள்விப்பட்டேன். மகாராஜா அவர்கள் மதுரை மண்ணிற்காகச் செய்துள்ள தியாகங்கள் மகத்தானது. மதுரை நாயக்க அரசு பரம்பரையினர் காலமல்லாம் நினைவுகொள்ள வேண்டியது. ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் செய்த உதவியை மறந்து மேற்கண்ட இந்தப் படையெடுப்பு நன்றி கொன்ற செயல்."
திருக்கோயில் மணியோசையினால் கவிராயரதுபேச்சு தடைபட்டது.
"சரி வாருங்கள் கோயிலுக்குச் சென்று பூசையில் கலந்துகொண்டு திரும்புவோம்" என்ற மன்னரைத் தொடர்ந்து கவிராயரும் சில வீரர்களும் சென்றனர்.
******
அடுத்த நாள் காலை நேரம். சேதுபதி மன்னரும் அழகிய சிற்றம்பலக் கவிராயரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர் இயற்றிய தளசிங்கமாலை பற்றிய பேச்சு வந்தது.
“ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவ்
வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர
வேயுறு வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத்
தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே“
இப்பாடலின் பொருள்:
சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து
விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய,
தென்றல் வீச, மூங்கிலையொத்த அழகிய வளையங்கள், விரக
தாபத்தினால் சோர்ந்து விழ, நான் உன்னை வந்து சேர்வதற்குத்
தாய் குறுக்கே நிற்கின்றாளே என்பதாம்.
அதன் பிறகு பேச்சு பக்தி மார்க்கத்தில் பயணித்தது. திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் போற்றிப் புகழ்ந்துள்ள திருப்பத்தூர் தேவாரங்கள் பற்றிய சிறப்புக்களை கவிராயர் மன்னருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
"அதெல்லாம் சரி. இந்த கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள பெருமாள் கோவில் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" மன்னர் சுவிராயரைச் கேட்டார்.
அதற்கு கவிராயர், "மகாராஜா அவர்கள் சொல்லுகிற சிற்பத்தைப் பார்த்தேன். அங்கு பூதேவியும் பெருமாளைப் பார்த்தவாறுஅமர்ந்து இருக்கிறார். இதைத் தவிர அங்கு உள்ள கண்ணன் குழல் ஊதுவது, இரண்ய சம்ஹாரம் போன்ற சிற்பங்களையும்
கவனித்தேன். திருப்பத்தூர் கோயிலில் உள்ள சிற்பங்களில்இவைதான் மிகவும் தொன்மையானவை என எனக்குப்படுகிறது.
முற்காலத்தில் பெரும்பாலான ஆலயங்களில் சைவ வைணவ பேதங்கள் இல்லாத வகையில் தான் வழிபாடுகளும் விழாக்களும்நடந்து வந்திருக்கின்றன. இன்று சைவர்களுக்கு மிகச்சிறந்தபுனிதத்தலமான சிதம்பரத்திலேயேநடராஜர் சன்னதியை நோக்கி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியும் அமைந்திருக்கிறதே! அரியும் சிவனும் ஒன்று என்ற பாமர மக்களின் நம்பிக்கையைத்தான் இது பிரதிபலிக்கிறது."
"சரியாகச் சொன்னீர்கள் ஐயா! இன்னும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அது தங்களுக்கு உடன்பாடா இல்லையா என்பது தெரியவில்லை."
“சொல்லுங்கள் மகராஜா!”
"அதாவது இத்தக் கோயில், சீதளியாண்டார் கோவில்” என்று வழங்கப்படுகின்றது அல்லவா? "சீ" என்றாலே இலக்குமியைத்தானே குறிக்கும். திருமகளைக் கொண்ட பெருமான் என்றுதானே கொள்ளலாம். மேலும் மயூரகிரி புராணத்தில் இலக்குமி கோயிலின் குளத்தில் நீராடி சிவபருமானை வழிபட்டார் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் இந்தக் கோயில் தேவார காலத்திற்கு முன்பே மிகச்சிறந்த வைணவத் தலமாக இருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து."
"மகாராஜா அவர்களது கருத்தும் பொருத்தமானதுதான். மறவர் சீமை வைணவ சமயங்களின் சங்கம ஸ்தலம்தான். பக்கத்தில் உள்ள திருக்கோட்டியூரில்
மூம்மூர்த்திகளும் ஒன்றுகூடி இருப்பதே அதற்குச் சான்று. நம்மிடையே பல சமயங்கள் இருந்தாலும் அவைகளின் சாரம் ஒன்றுதான்” என்று கவிராயர் சொல்லிமுடித்தார்.
"இத்தகைய ஒன்றுபட்ட சமரச சமய உணர்வு தழைத்திட எமது முன்னோர்கள் பாடுபட்டார்கள். அந்த வழியில்நானும் சென்று கொண்டிருக்கிறேன்.”
“நிச்சயம் மகாராஜா!”
“அடடா, முற்பகல் பொழுது போனதே தெரியவில்லை” என்று மன்னர் பணியாளை அழைத்தார். உணவு பறிமாற உத்திரவிட்டார். இருவரும் சமையல்கட்டுக்குச் சென்றனர். விருந்து முடிந்ததும் தாம்பூலத் தட்டு மன்னர் முன் கொண்டுவந்து
வைக்கப்பட்டது.
மன்னர் ஒரு பணமுடிப்பை அந்தத்தட்டில் வைத்து,புலவரிடம் தீட்டினார்.
"வழிச் செலவிற்கு வைத்துக்கொள்ளுங்கள்" புலவர் பணிந்து பெற்றுக்கொண்டார்.
"சேதுபதிகளது கொற்றம் வாழ்க!” மன்னர் சுவிராயருக்கு விடை கொடுத்து அனுப்பினார். உவப்பத் தலைகூடி உள்ளம் பிரிதல் தான் அறிவாளிகளது செயல்.
அப்பொழுது அஞ்சல் சேவகர் இருவர் வந்து சேதுபதி மன்னரைப் பணிந்து நின்று அறத்தாங்கி கோட்டைச் சேர்வைக்காரர் அனுப்பினார் என்று சொல்லி திருமுகம் ஒன்றை அளித்தார். ஓலையைப் படித்து முடித்த மன்னர், "நாளைக் காலையில் இங்கிருந்து புறப்பட்டு அங்கு வருவதாகச் சேர்வைக்காரரிடம் சொல்" என்றார்.
மன்னரது பதிலைக் கேட்ட அஞ்சல் சேவகர் மீண்டும் வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றார். அறந்தாங்கியில் என்ன நடக்கிறது? அறந்தாங்கியில் கோட்டைத் தளபதி அவசரமாக ஓலை அனுப்ப வேண்டியக் காரணம் என்னவாக இருக்கும்?
கடந்த மாதம் மதுரைச் சொச்கநாதரது படைகள் திடீரென மறவர் சீமைக்குள் புகுந்து மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர் கோட்டைகளை அவர்களது வசப்படுத்திக் கொண்ட செய்தி மறவர் சீமையின் வடக்குப் பகுதியில் உள்ள குடிமக்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருக்க வேண்டும். திருப்பத்தூர் கோட்டையில் இருந்து நாயக்கப் படைகள் மிகுந்த இழப்புகளுக்கிடையில் மதுரைக்கு ஓட்டம் பிடிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். என்றாலும், மறவர் சீமையில் ஏற்பட்ட திடீர் நிகழ்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இராமதாதபுரம் மன்னரது ராஜவிசவாசத்தை முறித்துக்கொண்டு சுயாட்சி பெற முயன்றனர். முந்தைய அறந்தாங்கி தொண்டமான் வழிவந்த சேதுப் புரையர்களை, ஆயுதத்தைப் பயன்படுத்தி அடக்குவதற்கு அறந்தாங்கிக் கோட்டைச் சேர்வைக்காரர் அந்த ஓலையில் அனுமதி கோரி இருத்தார்.
மறவர்களது குருதி வீணாக மண்ணில் சிந்தக் கூடாது என்பது மன்னரின் எண்ணம். அதனால் ஒரு சமரச முயற்சியாக சேதுபதி மன்னர் அறந்தாங்கிப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார்.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.