அத்தியாயம் -13
இராமேஸ்வரம் அரண்மனையில் உள்ள ஓர் அறையில் சில இருக்கைகளும், கட்டில்களும் ஆங்காங்கு காணப்பட்டன். அவைகளின் மேல் பகுதியினை முழுவதுமாக பஞ்சினால் நிறைத்து, சீனப் பட்டுத் துணியினால் மூடப்பட்டு இருந்ததால் அவை கூடத்திற்கு அழகு சேர்த்தன. ஒரு. மூலையில் மெதுவாக எரிந்து புகையாகி மறைந்த ஊதுபத்திகளின் அற்புத மணம் அந்த அறை முழுவதும் பரவி இருந்தது.
அந்த அறைக்கு வெளியே திண்ணையில் பூந்தொட்டிகளில் பூத்திருந்த ரோஜாமலர்களின் மணம் அந்த இடத்தையே ரம்யமாக்கியது. அங்கே மன்னருக்காகக் காத்திருந்த பிரதானி அவற்றை ரசித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது சேதுபதி மன்னர் விருந்து மண்டபத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார். அறையின் அழகிய சிறுபடிக்கட்டுகளில் இருந்து கூடம் வரை விரிக்கப்பட்டிருந்த சிவப்பு வண்ண கம்பளத்தின் மீது மன்னர் நடந்து வந்ததைப் பார்த்த பிரதானி, "மகாராஜா வணக்கம்” என்று மரியாதையடன் கைகூப்பி, தலை கவிழ்த்தி கும்பிட்டார்.
பதிலுக்கு வணக்கம் கூறிய மன்னர் அறையின் தெற்குப் பகுதியில் உள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்தார். மன்னரைத் தொடர்ந்து வந்த பிரதானி அந்த இருக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த அழகிய சிறு கட்டிலின் அருகே பவ்யமாக நின்றார்.
"கோவில் விழாவிற்கான ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளன?" என மன்னர் கேட்டார்.
"புதிய பிரகாரத்தில் அலங்கார வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. நாளைக்குள் அந்தப் பணி முடிந்துவிடும். பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் சுவாமியையும் அம்பாளையும் ஆரோகணித்து வைத்து இருப்பதற்கான சிறிய மேடையும் அதனை ஒட்டினாற்பபோல் சதிர்க் கச்சேரிக்கான மேடையும் அமைக்கப்பட்டுளளன. ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு தயார் செய்யவும் ஆவன செய்யப்பட்டுள்ளன. நமது நாட்டு பாளையக்காரர்களுக்கு தங்குமிடமும், சாப்பாடு வசதியும் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.”
"மிக நல்லது. அந்த அஞ்சுகோட்டை தேவரைத் தேடிச் சென்றவர்கள் வந்துவிட்டார்களா?"
"நாகாச்சி வரை வீரர்கள் நன்றாகச் சென்று தேடியதில் பயன் ஒன்றும் இல்லை. ஒருபிரிவு சேதுமார்க்கத்தில் ஆற்றங்கரை நோக்கிச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை திரும்பவில்லை, நாகாச்சியிலிருந்து கிழக்கு நோக்கி சென்றவர்கள் இரவு திரும்பிவிட்டனர். செய்தி எதுவும் கிடைச்கவில்லை. வடக்கே சென்றவர்களை நாளை எதிர்பார்க்கலாம்."
"எதற்கும் கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும்."
"உத்தரவு மகாராஜா!” பிரதானி பணிவான குரலில் மன்னரது அறிவுரையை ஏற்றுக் கொண்டார்.
“இப்பொழுது நீங்கள் சென்று வேலைகளைக் கவனியுங்கள். மாலையில் சந்திப்போம்."
"உத்தரவு!" பிரதானி அறையை விட்டு வெளியே சென்றார். அறைக்குள் வெள்ளித் தட்டில் வைத்து ஒரு செம்பையும், குவளையும் எடுத்து வந்தான் ராமுத் தேவன்.
"மகாராஜா! மன்னர் முன் தின்று குனிந்து மரியாதை செலுத்தினான்.
அவரைத் திரும்பி பார்த்த மன்னர் ஒப்புலதாகத் தலைசைக்க, செம்பில் இருந்த மோரைக் குவளையில் நிறைத்து மன்னர் அருகில் இருந்த சிறிய கட்டிலின் மீது வைத்தான் மன்னர் அந்த மோரினை எடுத்துக் குடித்து முடித்தவுடன் மீண்டும் குவளையை நிரப்பி வைத்தான்.
அதையும் அருந்திய மன்னர் போதும் என்பதாக சைகை காட்டினார். ராமுத் தேவன் வெளியே சென்றவுடன் கட்டிலில் ஓய்வாக சன் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள்.
அவரது நினைவுகள் இராமநாத சுவாமியைச் சுற்றியே வந்தன.
*************
அந்தி நேரம்.
இராமநாதபுரம் சீமையின் தென் கிழக்குக் கடற்கரையில் ஒரு தென்னந்தோப்பு. காற்று பலமாக வீசியது. கடற்கரையிலும் மக்கள் சஞ்சாரம் எதுவும் இல்லை.
தோப்பின் காவல்காரரது குடிசைக்கு எதிரில். இருந்த கயிற்றுக் கட்டிலில் நடுத்தர வயதுள்ள ஒருவர் அமர்த்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் இரு இளைஞர்கள் மரியாதையுடன் நின்று கொண்டு பெரியவருடண் உரையாடிக் கொண்டிருந்தனர்.
“நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லையா? நாம் மேற்கொண்டுள்ள வேலை மிகவும் அபாயகரமானது. ஆதலால் நிதானத்துடன் தான் நடக்க வேண்டும். என்ன குமாரா? நீ என்ன சொல்கிறாய்?”
"புரிந்தது ஐயா! ஆனால் காலம் நீடித்துக் கொண்டே செல்கிறது. இப்பொழுது எதிரி உஷாராகிவிட்ட நிலையில் இனியும் மெதுவாக காரியங்களை மேற்கொண்டால் நமது நோக்கம் தடைபடும்." தனுக்காத்த குமாரத் தேவன் சொன்னான்.
"ஆம். மகாராஜா. மறவர் சீமையின் மானம் போய் நீண்ட நாட்களாகி விட்டன. தன்மானத்தை இழந்துவிட்டு மேலும் மேலும்.
கோழைகளாகிவிட அனுமதிக்கக் கூடாது". என்று துடிப்புடன் பேசினான் மற்ற இளைஞன்.
"வீரசிம்மா! நாம் எதற்காக இந்த இரண்டு வருடமாக குடும்பத்தைத் துறத்து சன்னியாசியைப் போல, அலைந்துகொண்டு வருகிறோம். எதற்காகப் பகலிலும், இரவிலும் பயந்து பயந்து காரியங்களை செய்கிறோம். சாதாரண ஈ, எறும்பு போல நினைத்து, இந்த சமுதாயத்தை. ஏறத்தாழ. நூறு ஆண்டுகளாகக் கொடுமைப்படுத்தி நமது குலப் பெருமையை அழித்து, நமது முன்னோர் ஜெயதுங்க தேவனின் வாரிசுகளை நாசமாக்கிவிட்ட மதுரை நாயக்கர்களை பழிவாங்குவதற்குத் தானே!" என்று ஆவேசம் அடைத்தவராகத் தமது பேச்சை நிறுத்தினார் அந்தப் பெரியவர்.
மீண்டும் அவர் தொடர்த்து சொன்னார்.
"நாம் ஈடுபட்டுள்ள செயல் மிகவும் புனிதமானது. நமக்காகநாம் பாடுபடவில்லை. நமது மறவர். பெருங்குடியின் மானத்தைக்காப்பாற்றும் சமுதாயத் தொண்டாகக் கருதித்தான் அதில் ஈடுபட்டுள்ளோம். நேரடியாக மதுரை நாயக்கர்களுடன் போராடி
வெற்றி கொள்ள நம்மால் இயலாது. ஆதலால் அந்த மதுரை அரசுக்குப் பக்க பலமாக
இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மறவர் சீமை நாயக்கரது கைப்பொம்மை அல்ல என்பதை நமது மறக்குடி மக்களுக்கு புரியும்படி செய்வோம். இதற்கு இன்னும் பெரிதாக படை அமைக்கப்பட வேண்டும். இந்த இறுதிப்போருக்குத் தேவையானவைகளை விரைந்து சேகரிக்க வண்டும். இந்த இருசெயல்களும் அத்துணை எளிதானது அல்ல என்பதனை நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.”
"ஆமாம். தாங்கள் சொல்வது அனைத்தும் எங்களுக்கு உடன்பாடானவை தான். ஆனால் இப்பொழுது என்னைப் பற்றித் தீவிரமாக விசாரனை தொடங்கிவிட்ட நிலையில் காலங் கடத்துவது தான் எங்களுக்குப் பயமாக இருக்கிறது.” குமாரத் தேவன் மீண்டும் தனது அச்சத்தை வெளியிட்டு சொன்னான்.
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அத்துடன் பயப்படுகிறேன். நமது திட்டங்கள் எங்கே..” என்று வீரசிம்மன் சொல்லி முடிப்பதற்குள் பெரியவர் குறுக்கிட்டுப் பேசினார்.
"நிச்சயமாக வெற்றியடையும். விரைவில் நமக்குத் தேவையானவைகள் கிடைக்கும். கடற்கரைப் பகுதியில் மட்டும் அல்லாமல் உள்நாட்டிலுள்ள மறவர்குடி மக்களில் கணிசமான பேரை நமது அணிக்குக் கொண்டு வந்து விடுவோம். அப்பொழுது நமது இலட்சியம் நிறைவேறிவிடும். மறவர் சீமை அரசு, மறவர்களது பெருமைக்கும் புகழுக்கும் அரணாக இருக்கும்.” உணர்ச்சி வசப்பட்டவராகப் பெரியவர் பேசினார்.
“ஐயா! ஐயா” என்று குமாரத் தேவன் பதட்டத்துடன் அழைத்தான்.
"ஒன்றுமில்லை. ... ஒன்றுமில்லை..... குமாரா! சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அவ்வளவுதான்" என்று சொல்லியவாறு தமது வலது கையினால் மீசையின் நுனிகளை முறுக்கிக் கொண்டார்.
"மகாராஜா! சிறிது தண்ணீர் குடிக்கலாமா? இதோ எடுத்து வருகிறேன்." குடிசைக்குள் நுழைந்த வீரசிம்மன் கையில் தண்ணீர்ச் செம்புடன் வந்தான். இரண்டு மடங்கு தண்ணீரைக் குடித்துவிட்டு சிறிது நேரம் மௌளனமாக இருந்தார் பெரியவர்.
வீரசிம்மன் மறுபடியும் பேச்சைத் தொடங்கினான். "அடுத்து எப்பொழுது புறப்படலாம்?"
“நாளை இரவு முதல் சாமத்தில் இருந்து சரக்குகளை எதிர்பார்ப்போம். நாளைக் காலையில் சேதுக்கரையில் இருந்து படகு வரும் அதில் நாம் தொண்டி செல்லலாம்.”
"மகாராஜா! ஒரு விண்ணப்பம்" வீரசிம்மன் பணிவுடன் கூறினான்.
“நாளை தை அமாவாசை. காலையில் சேதுக்கரை கடலில் குளித்து திருப்புல்லாணிப் பெருமாளையும் தரிசித்துவிட்டு,அந்திக்குள் இங்கு திரும்பிவிடுவேன்."
"நல்லது, இப்பொழுது நீ புறப்படு. நானும் குமாரத் தேவனும்.கடற்கரை பக்கம் சென்று வருகிறோம்."' பெரியவரை வணங்கிவிட்டு, வீரசிம்மன் தோப்பிலிருந்து சென்றான்.
இரவு சாப்பாடு! சம்மந்தமாக ஏதோ சொல்லிய பிறகு இராமுத் தேவருடன் கடற்கரை நோக்கிச் சென்றார் பெரியவர்.
கடற்கரையில் காற்று முன்னைவிட வேகமாக வீசியது, அவர்களது உறுதியான செயல்பாடுகளைப் போல.
************
ரகுநாத சேதுபதியின் முன்னோர்கள் இராமநாத சுவாமி கோயில் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வந்துள்ளனர். அவர்களைப் போலவே இவரும் கோவில் திருப்பணிகளில் மிகுந்த அக்கறை காட்டினார்.
சடைக்கன் சேதுபதி காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட கோபுர வேலைகள் இடையே வந்த போரினால் தடைப்பட்டுப் போனது. ரகுநாத சேதுபதியின் காலத்தில் அப்பணி மீண்டும் தொடரப்பட்டது.
மேலும் அந்தக் கோயிலின் ஏற்றத்திற்கும், தோற்றத்திற்கும் ஏதுவாக அமைந்துள்ள நீண்ட விசாலமான இரண்டாவது பிரகாரத்தினை அமைக்க சேதுபதி மன்னர் முடிவு செய்தார்.
இந்தக் கோயில் மணற்பாங்கான பகுதியில் அமைந்து நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள தீவாக இருந்தது . பிரகாரத்தின் கட்டுமானத்திற்கு பெரிய கற்கள் தான் தேவை. அவைகளைத் திருச்சி, மதுரை, நெல்லை சீமைகளின் குன்றுப் பகுதிகளில் இருந்து எவ்விதம் கொண்டு சேர்ப்பது? நீண்ட தொலைவில் இருந்து பார வண்டிகளில் ஏற்றி எதிர்க்கரையான மண்டபம் தோணித்துறைக்கு கொண்டு வந்து விடலாம் .
ஆனால் அவைகளைக் கடலைக் கடந்து இராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பது எப்படி? இந்த வினாக்களுக்கான விடைகளைப் பல நாட்கள் சிந்தித்த பிறகு சேது மன்னர் கண்டுபிடித்தார். கோயில் திருப்பணிக்குத் தேவையான கற்களைத் தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் இருந்து வெட்டிக்கொண்டு வந்து சேர்ப்பதற்குப் பதிலாக, கல் தச்சர்களையும், ஸ்தபதிகளையும் எதிர்க்கரையில் உள்ள இலங்கை நாட்டின் மலையிலிருந்து வெட்டிச் செதுக்கிக் கொண்டு வருவது என முடிவு செய்து அதற்குத் தேவையான அரசு அனுமதியைக் கண்டியில் உள்ள இலங்கை மன்னரிடமிருந்து பெற்றார்.
பொதுவாகத் திருப்பணி நடக்கும் கோயில் பகுதிக்குக் கற்பாலங்களைக் கொண்டு வந்து செதுக்கித் தக்க வேலைப்பாடுகளை அதில் செய்து பின்னர் கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவது என்பது அன்றையப் பழக்கமாக இருந்தது. இந்த முறைக்கு மாற்றமாக சேதுபதி மன்னர் திட்டமிட்ட வரைவுபடங்களுடன் ஸ்தபதிகளையும், கல் தச்சர்களையும் திரிகோண மலைக்கு அனுப்பி அங்கேயே தேவையான அளவிலும், அமைப்பிலும், கல்துண்களையும், பொதிகைக் கட்டைகளையும், மூடு பலகை கற்களையும் தயாரித்துப் பெரிய தோணிகளில் இராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து இறக்கு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருப்பணி வேலைகளும், இராமேஸ்வரம் திருக்கோயிலில் தொடர்ந்தது. இவைகளை நேரில் கண்காணித்துத் தக்க உத்தரவுகளை வழங்குவதற்கு ஏற்றவாறு சேது மன்னர் இராமேஸ்வரத்திலேயே தங்குவதற்கும் திட்டமிட்டார். இராமேஸ்வரம் வடக்கு ரத வீதியும், மேற்கு ரத வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு அரண்மனை ஒன்றையும் மன்னரது இருப்பிடமாக அமைத்தார்.
கன்னடப் படைகளுடன் போரிட்டு வெற்றி பெற்று வந்த பிறகு ஆண்டில் பெரும்பாலான பகுதியை மன்னர் இந்த இராமேஸ்வரம் மாளிகையிலேயே கழித்து வந்தார். அவரது இருப்பால் வேலைகள் துரிதமாக நடைபெற்று இதோ முடிந்தும் விட்டது.
இராமநாத சுவாமியும் பர்வதவர்த்தினி அம்மையும் அந்தப் பிரகாரத்தில் எழுந்தருளும் நாள் இதோ வந்தே விட்டது என்று நினைத்த போது மன்னரின் உள்ளம் பரவசத்தில் ஆழ்ந்தது.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.