அத்தியாயம் -11
தம்மைக் கொல்ல இரண்டாவது முறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நினைத்துப் பார்த்தபோது மன்னருக்குப் பயம் ஏற்படாவிட்டாலும், தமது ஆட்சியில் கண்காணிப்புக் குறைவும், ஆட்சிக்கு எதிராக சதியும் உருவாகி
இருப்பதுதான் அவரது உள்ளத்தை மிகவும் அழுத்தியது.
மதுரை நாயக்க மன்னர் போன்ற பேரரசர் மதித்து போற்றும் மறவர். சீமையில் அவருக்கு எதிரான உட்பகையா? உட்பகை உருவாக என்ன காரணம்? சேதுபதியின் ஆட்சியில் பொறுக்க முடியாத அநீதி இழைக்கப்பட்டது எப்பொழுது, யாருக்கு, எங்கே?
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சேதுபதியின் பட்டத்திற்கு உரிமை கொண்ட சிலர் போர்க்கோலம் பூண்டனர். அதுவும் திருமலை நாயக்கரது தலையீட்டில் முடிவு பெற்றது.
அடுத்து இவ்வளவு காலமும் மறவர் சீமையில் அமைதி கொலுவிருதந்ததாக எண்ணிக் கொண்டிருந்தது தவறான முடிவா? நெருப்பு இல்லாமல் புகை ஏற்படாதே!
அந்த விசாலமான கூடத்தில் ஒரு மூலையில் புகைந்துகொண்டிருந்த் மணம் மிக்க சந்தனப்பெட்டியில் இருந்த வந்துகொண்டிருந்த புகை மண்டலச் சுருள் போல, மன்னரது சிந்தனைகளும் அடுக்கடுக்காக வளர்ந்துகொண்டிருந்தன.
முற்பகல் பிற்பகலாகி மாலையும் மறைந்து கொண்டிருந்ததை மன்னர் உணரவில்லை. நீராவி அரண்மனை மாடங்களில் எரிந்து கொண்டிருந்த சிறிய பெரிய லஸ்தர் விளக்குகளில் இருந்து மென்மையான ஒளி, வண்ணக் கண்ணாடிச் சட்டங்களை ஊடுருவி வந்து கொண்டிருந்தது.
ஆனால் மன்னரது சிந்தனையில் படர்ந்த மையிருட்டை நீக்க அவை
பயன்படவில்லை. மன்னரது சிந்தனையில் மீண்டும் அந்தக் கட்டாரியின் நினைவு தோன்றி அவரைத் தீவிர சிந்தனையில் நிலைகொள்ளுமாறு செய்தது.
மீண்டும்... மீண்டும்... விளக்கம் பெற இயலாத அதே வினாக்கள்! கண்ணாடிப் பாத்திரத்திலிடப்பட்ட மீன்கள் அந்தக் குறிப்பிட்ட வட்டத்திலேயே சுற்றிச் சுற்றி வருவதைப் போல.
ஆனால் அதற்கான விடை....
இன்று இல்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டாலும் நாளை மறுநாள் சதியின் விளைவுகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படத்தான் வேண்டும்.
***********
நண்பகல் நேரத்தில் இராமஸ்வரம் அரண்மனையின் வாசல் முகப்பில் இரண்டு பல்லக்குகளை இறக்கி வைத்தனர். உடன் வந்த வீரர்களும் ஒருபுறமாக ஒதுங்கி பல்லக்குகளில் இருந்து வந்த சேதுபதி மன்னரருக்கும் பிரதானிக்கும் வழி விட்டார்கள்.
மன்னரும் பிரதானியும் ஆசார வாசலைக் கடந்து மாளிகையின் முன்னர் இருந்த அறைக்குள் நுழைந்தனர். பணிஆட்கள் மன்னரிடமிருந்து தலைப்பாகையையும் சால்வையையும் பெற்று அவைகளை உரிய இடங்களில் வைத்தனர்.
மன்னர் இருக்கை இன்றில் ஆறுதலாக அமர்ந்தார். சற்று முன்னர் திருக்கோயிலில் இரண்டாம் பிரகாரப் பணிகளை பார்வையிட்டு வந்ததால் அவைகளை நிறைவு செய்வதுபற்றிய எண்ணங்களே அவரது சிந்தனையில் நிறைந்து நின்றன. ஆதலால் திருப்பணி பற்றிப் பிரதானியிடம் கேட்டார்.
"இன்னும் எத்தனை நாட்களில் இந்த வேலைகள் முடிவு பெறும்?"
"மகாராஜா! நேரில் பார்த்தீர்கள் அல்லவா? பிரகார வேலைகளில் பிரதானமானவை முடிந்துவிட்டன. இனி தளத்தின் மட்டத்தை சரிசெய்வது, கல்தூண்யாழி முதலிய சிற்பங்களைச் சரிபார்த்தல், சுண்ணாம்பு பூச்சு போன்ற சில்லரை வேலைகள்தான் பாக்கி அத்துடன் கருவறையைச் சுற்றி சில அலங்காரங்கள். இவை அனைத்தும் இன்னும் பத்து நாட்களில் முடிவடைந்துவிடும்."
"மாசி மஹா சிவராத்திரிக்கு இன்னும் ஒருமாதம் உள்ளது. அந்த விழாவை இந்தப் புதிய பிரகாரத்தில் வைத்து நடத்தி விடலாமல்லவா?"
"மன்னர் உத்தரவு"
"இந்த முற்பகலில் ராணியார் தனுஸ்கோடி புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளைக் சாலையில் ஆதி சேதுவில் நீராட. எதற்கும் சேதுமாதவப் பெருமான் கோவில் பேஷ்காருக்கு ஓலை அனுப்பி வையுங்கள். அங்கு தேவைப்படும் பொருட்களைத் தளபதியிடம் கேட்டு சேகரித்து இன்று மாலையிலலேயே படகு மூலம் அங்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள். “
“அப்படியே ஆகட்டும் மகாராஜா!”
“ம்.. அப்புறம். . . அழகிய சிற்றம்பரக்கவிராயரது தளசிங்கமாலை ஏடுகளை வாங்கிச் சென்றீர்களே, படித்து விட்டீர்களா?”
"ஆம் மகாராஜா. கவிராயர், மகாராஜா அவர்களது பெருமைகளை மிகச் சிறப்பாக பாடியிருக்கிறார். அந்த இலச்கியம் சேது சமஸ்தானத்திற்கு கிடைத்த சிறந்த பொக்கிஷமாகும். அந்தச் சுவடிக்கு நகல் எடுத்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.!'
“நல்லது மாசித் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு அவருக்கு ஓலை அனுப்பி வையுங்கள்"
"உத்திரவு" என்று பிரதானி விடைபெற்றுச் சென்றார். பிரதானியார் விடைபெற்றுச் சென்றதும் மன்னரும் அரண்மனைக்குள் சென்றார்.
******************
மறவர் சீமையை சிறப்பாக ஆட்சி செய்யும் தம் மீது கொலையாளி குறிவைக்க என்ன காரணம்? இரண்டு முறை குறி தவறிய கட்டாரி, மூன்றாவது முறை முயற்சி செய்யாது என்று நினைத்து விட்டுவிட முடியாது. அதுவரை குற்றவாளியை பிடிக்க காத்து இருப்பது என்பது எமக்கு நன்மையைத் தருமா?
அப்படி என்னைக் கொலை செய்யத் துடிக்கும் சதிகாரன் யார்? அவன் சேது நாட்டின் மறவர் குலத்தைச் சேர்ந்தவன் என்பது உறுதியாகத் தெரிகிறது. சேதுபதி பட்டத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறி கொண்ட யாரோவாகத்தான் அவன் இருக்க வேண்டும்!
அப்படியானால்… இது பழைய பகையின் தொடர்ச்சியாகத் தான் இருக்கும் என்று ரகுநாத சேதுபதி முடிவே செய்து விட்டார்.
அவரது அம்மான் சடைக்கன் சேதுபதி ரகுநாதனை முறைப்படி வாரிசாக அறிவித்து இருந்தார். அதனால் நாடு முழுவதும் தன்னுடையது என்ற நினைப்பில் இருந்த ரகுநாதனுக்கு திருமலை நாயக்கரின் தலையீடு துளியும் பிடித்தமாக இல்லை. எப்படியாகிலும் சேதுபதி பட்டம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று தான் தம்பித் தேவரது ஆட்சியில் குழப்பங்களையும் கலகங்களையும் ஏற்படுத்தி வந்தார்.
அனைத்தையும் தாண்டி மறவர் சீமை மூன்றாகப் பிரிக்கப்பட்டதை ரகுநாதனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதனால் தான் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்த போது, தம்பித் தேவரும் தனுக்காத்த தேவரும் மறைந்த பிறகு, காளையார் கோவில் மற்றும் திருவாடானை சீமையில் வேறு யாரும் வாரிசுகள் இருக்கிறார்களா என்று சற்றும் யோசிக்காமல் அவசரம் அவசரமாக மறவர் சீமையை மீண்டும் ஒன்றாக்கினார்.
காளையார் கோவில் சீமையைப் பெற்று ஆட்சி செய்த தம்பித்தேவருக்கு உரிய வாரிசு இல்லை. திருவாடனைச் சீமையை ஆட்சி செய்த தனுக்காத்த தேவருக்கு ஆண் வாரிசு இல்லை. அவரது மனைவி தளவாய் சேதுபதியின் மகள். அவரது தாயார் கங்கை நாச்சியார் இராமேஸ்வரம் போரில் வீர சொர்க்கமடைந்த “நாடு கலக்கி” வன்னியத் தேவரது மனைவி. அவரது தமையன் இப்பொழுது சேது நாட்டைக் கட்டிக் காக்கும் ரகுநாத சேதுபதியாகிய யாமே தான். அப்படி இருக்கையில் தனுக்காத்த தேவரின் வாரிசு நானாகத் தான் இருக்க முடியும்.
இப்போது கிளம்பி இருக்கும் பகை காளையார் கோவிலில் இருந்து தான் என்பது உறுதி. கட்டாரி அஞ்சு கோட்டை வீரனுடையது தான் என்று உளவுத்துறைத் தளபதி உறுதி செய்திருக்கிறாரே?
தம்பித் தேவரின் வழியினர் வேறு யாரும் இருக்கலாமா? இருந்திருந்தால் இதுவரை யாரும் இந்த பதினைந்து வருட ஆட்சியில் எந்த உதவியும் கேட்டு வரவில்லையே! அவர்கள் இருக்கிறார்களா?
வேறு யாராக இருக்கும்?
வேறு யாராக இருக்கும்? இப்படியே அடுக்கடுக்காக வினாக்கள். மன்னரது தலை வெடித்து விடுவது போன்ற வேதனை. பொறுக்க முடியாத வேதனை!
“இராமநாதா! எல்லாம் உனது கருணை" என்ற வேதனை விரவிய மன்னரது சொற்கள் அப்பொழுது தான் அங்கு வந்த மகாராணியாரின் காதுகளில் விழுந்தன.
"மகாராஜா! தங்களுக்கு என்ன ஆயிற்று? நான் என்றும் கேட்டிராத வேதனையடன் தங்களது வாய் குழறியதே" மகாராணியார் பதட்டத்துடன் வினவினார். தொடர்ந்து, "இரண்டு நாழிகை தேரமாக தங்களது வரவை எதிர்பார்த்துக் காத்து இருந்தேன். வழக்கத்துக்கு மாறாக இந்த அறையில் தாமதித்து இருந்ததையும், வாய்விட்டு தங்கள் வேதனையை வெளியிட்டு இருப்பதையும் இப்பொழுது தான் கண்டேன். இங்கே என்ன நடந்தது? நான் கூட தெரிந்துகொள்ளக் கூடாதா எண்ன?" என்று கேட்டுக் கொண்டே மகாராணியார் மன்னரின் அருகில் வந்தார்.
"இன்னும் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? என்னைக் கொன்றுவிட சதிகாரன் ஒருவன் புறப்பட்டு இருக்கிறான். என்மீது கட்டாரியை வீச இருமுறை முயற்சி செய்துள்ளான். நமது இராமநாத சுவாமியின் கருணையால் அவன் முயற்சி வெற்றி பெறவில்லை. அத்துடன், அவன் யாரென்பதும் கடந்த ஒரு வருடமாக நமது கண்களுக்கு புலப்படவில்லை. அவனது இரண்டாவது கொலை முயற்சி பற்றி செய்தி இன்று பிற்பகலில் தான் கிடைத்தது. அதே சிந்தனையில் இருந்ததால் நேரம் போவதை அறியாமல் இங்கே அமர்ந்துவிட்டேன்.”
மன்னர் சொல்லச் சொல்ல மகாராணியின் முகம் வெளுத்துப் போனது.
“தங்களுக்கு எதிரிகளா? தற்போது மதுரை நாயக்கர் கூட நண்பராகி விட்டாரே! வேறு யாராக இருக்கும்?” என்று வினவினார்.
“இது வெளியில் இருந்து வந்த பகை அல்ல. உள்ளே இருந்து கொல்லும் பகை. மறவர் சீமையிலேயே தான் எனக்கு எதிராக யாரோ கிளம்பி இருக்கிறார்கள்.” மன்னரின் முகத்தில் உள்நாட்டு சதி என்று சொல்லும் போதே சொல்லொணா வேதனை தெரிந்தது. அது மகாராணியையும் தாக்கியது.
“உள்நாட்டிலேயே தங்களைக் கொல்ல சதியா?” என்று கேட்டவர், “கவலை வேண்டாம். தாங்கள் நல்லவிதமாகவே ஆட்சி செய்து வருகின்றீர்கள்.இராமநாத சுவாமியும் பர்வத வர்த்தினி அம்மையும் நம்மைக் கைவிட்டு விட மாட்டார்கள். தைரியமாக இருங்கள்" என்று ஆறுதல் கூறினார்.
"எனது தைரியத்திற்கு குறைவில்லை. ஆனால் திருப்புல்லாணி திருக்கோயில் திருப்பணியும் அடுத்து இராமேஸ்வரம் இரண்டாம் பிரகாரம், கோபுரத் திருப்பணியும் தடை பட்டு விடக்கூடாதே என்ற அச்சம் தான் என்னுள் விரவி நிற்கிறது."
"வாருங்கள். நமது பயத்தையும் வேதனையையும் இறைவனிடம் சொல்வோம். இன்று தங்களுக்காக சொக்கநாத சுவாமி கோவிலில் ஆயுஷ் ஹோமம். நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தாங்களும் அர்த்தம ஜாம பூஜைகளில் கலந்து கொள்வதாக கோவில் பேஷ்காரிடம் சொல்லி அனுப்பினீர்கள்.அல்லவா? நினைவு இருக்கிறதா?"
"ஆமாம். இப்பொழுது கோவிலுக்குப் புறப்படலாம்"
மன்னர் சொன்னவுடன் ராணியாரும் மன்னரும் அறையின் வாசலுக்கு வந்தனர்.
அங்கே இரண்டு பல்லக்குகளுடன் பல்லக்குத் தூக்கிகள் காத்திருந்தனர். அவர்களது மரியாதையை ஏற்றுக் கொண்டு? இரண்டு பல்லக்குகளிலும் அமர்ந்தனர் மன்னரும் ராணியாரும்.
அவர்களைத் தூக்கிச் சுமந்தவாறு பல்லக்குகள் கோட்டையின் மேற்குப் பகுதியில் அரண்மனைக்கு தெற்கே உள்ள சொக்கநாத சுவாமி கோவிலை நோக்கி நகர்ந்தனர்.
*************
பாம்பன் கோட்டை.
பாம்பன் கடல் துறையை அடுத்த வயிரவத் தீர்த்ததிற்கு அருகில் வடக்கே அமைந்து இருந்தது இந்தக் கோட்டை. சிறு கோட்டை. இதன் முகப்பில் அன்னசத்திரமும் உள்ளே சேதுபதி மன்னர் இராமேஸ்வரம்பயணத்தில் தங்கிச் செல்வதற்கான சிறுதளத்துடன் கூடிய சிறு மாளிகையை மன்னர் ரகுதாத திருமலை சேதுபதி அங்கு அமைத்து இருந்தார்.
அன்னசத்திரத்திற்கு. அருகிலேயே கோட்டைச் சேர்வைக்காரர் அலுவலக அறையும் அமைந்திருந்தது. சுமார் முப்பது வயதிற்குட்பட்ட இளைஞர் ஒருவரை அன்று முற்பகவில் கோட்டைச் சேர்வைக்காரர் விசாரித்துக்கொண்டிருத்தார். அன்று அதிகாலையில் இந்த இளைஞர் மட்டும் ஒரு படகில் வந்து தனியாக பாம்பன் துறைக்குச் சற்று கிழக்கே உள்ள மணல் திட்டுப் பகுதியில், கரை இறங்கியதால், காவல் பணியில் இருந்த பாம்பன் காவலர்கள் அவரை பிடித்து கோட்டைக்குக் கொண்டு வந்தனர்.
"ஆமாம் நீங்கள் இந்த சேது நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது இலங்கைக்கு செண்றீர்கள், என்ன காரணமாகச் சென்றீர்கள் என்பதற்கான ஆவணங்களை காட்ட முடியுமா?"
“இல்லை. என்னிடம் எந்த ஆவணமும் இல்லை.’
"அப்படியானால் உங்களது வார்த்தைகளை எப்படி நம்புவது?"
"உண்மையைத்தான் சொல்கிறேன். உண்மைகள்அணைத்தையும் ஆதாரத்துடன் சொல்ல முடியாதே. நான் சொல்வதனைத்தையும் நம்ப வண்டும் என்று நான் உங்களைக் கட்டாயப்படுத்த முடியுமா?"
"சரி. இந்தத் தீவில் பாம்பன், புங்கடி, இராமேஸ்வரம், தனுஷ்கோடி என்ற துறைமுகங்கள் வழியாக நாள் தோறும் வணிகர்களும், பயணிகளும் இந்த தீவிற்கு வந்து போகிறார்கள். நீங்கள் மட்டும் தனியாக அரசாங்கத்திற்குத் தெரியாத வகையில் துறைமுகத்திக்கு அப்பால் கரை இறங்கியதற்கான காரணத்தையாவது சொல்வீர்களா?"
"நான் பயணம் செய்த தோணி யாழ்ப்பானத்தில் உள்ள டச்சுக்காரர்களுக்குச் சொந்தமானது. ஏதோ முக்கியமான சரக்குகளை உடனோ தொண்டி துறைமுகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக அந்த தோணி நேற்று மாலையில் புறப்பட்டது. காற்று சரியாக இல்லாததால் இன்று அதிகாலைதான் இங்கு வத்து
சேர்ந்தது. நான் புங்கடியில் இறங்க வேண்டும் எனக் கேட்டுக்
கொண்டேன். காலை கும்மிருட்டில் நான் இறங்கிய இடம் புங்கடிஎன்று தான் நினைத்தேன்."
"நீங்கள் இந்தப் பகுதிக்கு ஏற்கனவே வந்து போய் இருக்கிறீர்களா?"
"இல்லை. இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள பேய்க்கரும்பில் எனது உறவினர்கள் இருப்பதாக அறிந்தேன். அவர்களைச் சந்தித்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் உத்தேசத்துடன் வந்தேன்."
"அந்த உறவினர்கள் யார் சொல்லுங்கள்"
"அவர்கள் அந்த ஊரின் பூர்வீக குடிகள் என்று மட்டும்தான் தெரியும்.”
"சரி. உங்கள் பெயர்? ஊர்?"
"எனது பெயர் தனுக்காத்த குமாரத் தேவர். ஊர் அஞ்சுக்கோட்டை நாட்டு ஓரியூர். இந்த விபரங்கள் போதுமா?"
"இல்லை. நீங்கள் யார் என்பதை அறிய இது போதாது. அனுமதியின்றி இந்த நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததற்கான தண்டனைக்கு ஆளாக வேண்டி இருக்கும்."
"இதற்கு மேல் எதுவும் சொல்ல என்னால் முடியாது. இது எனது நாட்டின் ஒரு பகுதி. இங்கே வருவதற்கு யாருடைய அனுமதியும் பெறவேண்டியது இல்லை. அத்துடண் நான் செம்பி நாட்டு மறவன். இத்த நாட்டு மன்னரது கிளையைச் சேர்ந்தவன்."
இதைக் கேட்ட சேர்வைக்காரனது முகத்தில் சினத்துக்கான அறிகுறி தென்பட்டது. தான் ஒரு அரசு அலுவலர் என்பதை அறிந்திருந்தும் தனது வினாக்களுக்கு பணிவும் பயமும் இல்லாமல் பதில் அளிக்கும் இந்த இளைஞனை என்ன செய்யலாம் என சேர்வைக்காரரது சிந்தனை சுழன்றது. சில நிமிட மெளனத்திற்குப் பிறகு அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார்.
‘இந்த மனிதன் நமக்குக் கட்டுப்பட மாட்டான் இவனை இராமநாதபுரம் கோட்டைக்கு அனுப்பிவிடுவோம்.’
குதிரைச் சேவகர்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளுடன் கோட்டைச் சேர்வைக்காரர் முன் வந்து நின்றனர். அவர்களில் தலைமைச் சேவகரிடம் ஓலையைக் கொடுத்துவிட்டு, "இந்தஓலையும் ஓரியூர்த் தேவரையும் இராமநாதபுரம் கோட்டையில் ஒப்படைத்துத் திரும்புங்கள்."
ஓரியூர் தேவரைப் பார்த்து சேர்வைக்காரர் சொன்னார். "உங்களது கருத்துப்படி நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்கலாம். ஆனால் எனது முடிவுப்படி நீங்கள் தக்க ஆவணம் எதுவும் இல்லாமல் நடு இரவில் இந்தச் சீமைக்குள் அத்துமீறல் புரிந்துள்ள குற்றவாளி. சேதுமன்னரது மேலாண்மையையும் மக்களது பாதுகாப்பையும் கண்காணிக்கும் அரசியல் அதிகாரி என்ற முறையில் மேல் விசாரணைக்கும் தீர்ப்பிற்கும் உங்களை இராமதாதபுரத்திற்கு அனுப்புகிறேன். இத்த வீரர்களுடன் பயணம் செய்வதற்கு முன்னர் உங்களை விலங்கிட வேண்டியது எமது கடமை...."'
சேர்வைக்காரர் சொல்லி முடிப்பதற்குள் தனுக்காத்த குமாரத் தேவர் கேபம் கொப்பளிக்க உரத்த குரலில் ஓலமிட்டார்..
"யாரைப் பார்த்து குற்றவாளி என்று சொன்னீர்? இந்த மறவர் சீமையின் மானத்தை, தன்னாட்சி உரிமையைக் காத்த வீரத் தியாகிகளது வாரிசு நான். தளவாய் சேதுபதி மீது போர் தொடுத்த மதுரை தளபதி இராமப்பய்யனைப் பொருதி மரணகாயமுறச் செய்த சேதுபதியின் மைத்துனர் வன்னியத் தேவனின் வலது கையாக நின்று போரிட்டு வீர சொர்க்கம் புகுந்த ஆளஞ்சாத் தேவரது பேரன் நான். இந்த இராமேஸ்வரத்தின் புனித மண்ணை ஏர் சொண்டு கிளறி உழுவதே பாவம் என்று கருதும் இந்தச் சேதுவில், பல்லாயிரக்கணக்கான வீரர்களது குருதியை ஆறாக ஓடவிட்ட திருமலை நாயக்கனைப் பழிவாங்கத் துடிக்கும் சுத்த வீரன் நான்.
நான் குற்றவாளியா? என்னைக் குற்றவாளியாக கைகளைப் பிணைக்கும் விலங்கினைப் பூட்டிக்கொள்ள அனுமதிக்க மாட்டேன்”
"ராஜ விசுவாசத்தைப் பற்றி பேசும் நீங்கள், ராஜ்யத்தின் சட்டதிட்டங்களை ஏற்றுக் கொள்வதும் ராஜவிசுவாசம்தான் என்பதைஅறியவில்லை.”
"அல்ல அந்தச் சட்டம் எந்தக் குற்றமும் செய்யாத எனக்குப் பொருந்தாது. அதனை சேதுபதி மன்னரிடம் தெரிவிப்பதற்கும் நான் தயார்."
வேறுவழியில்லாமல் கோட்டைச் சேர்வைக்காரர் தனுக்காத்த குமாரத் தேவரை விலங்கு பூட்டாமல், பத்து வீரர்களது பாதுகாப்பில் இராமநாதபுரத்திற்கு அனுப்பிவைத்தார்.
மாலை நேர வெளிச்சம் சுருங்கிக் கொண்டிருந்தது. இராமதாதபுரம் கோட்டைக்கு மேற்கே வானில் அந்தி மேகங்கள் தங்களின் கருத்த நிழலினால் கதிரவனிடையே ஒளிமாற்றத்தைத் தொடங்கின.
அப்பொழுது கோட்டை அகழியைக் கடந்து கோட்டை வாயிலில் நுழைந்தபொழுது கோட்டைக் காவலர்கள் ஆரவாரம் செய்தார்கள். பேரிகை, தாரை, சங்கு ஆகியவைகளை முழக்கி வரவேற்பு அளித்ததில் இருந்து சேதுபது மன்னரும் அங்கு இருக்கு வேண்டுமென்பதை ஊகித்த பாம்பன் அணியினர் கோட்டை மதிலை
ஒட்டி ஒதுங்கி நின்றனர்.
சில நிமிடங்களில் கோட்டைவாயிலுக்கு வந்தகோட்டைச் சேர்வைக் காரர் இந்த அணியினரைக் கவனித்தவுடன் கோட்டைக்குள் வருமாறு சைகை காட்டினார். கோட்டைக்குள் சென்று பாம்பன் கோட்டை சேர்வைக்காரர் அனுப்பிய ஓலையை அவரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அழைத்துவந்து தனுக்காத்த குமாரத் தேவரைக் குறிப்பிட்டு ஏதோ அவரிடம் சொன்னார்கள்.
ஒரு சேவகன் மூலம் இந்த ஓலையை சேர்வைக்காரர்அறையில் இருந்த பிரதானிக்கு அனுப்பி வைத்து அவரது
மறுமொழி பெற்று வருமாறு செய்தார்.
அரை நாழிகை நேரம் கழித்து வந்த சேவகன் தனுக்காத்த தேவரை இரு வீரர்களுடன் அறைக்குள் அழைத்துச் சென்றான். அறையின் முகப்பில் இருந்த பிரதானி, தனுக்காத்த குமாரத் தேவரை அழைத்துச் சென்று சேதுபதி மன்னரின் முன் திறுத்தினார்.
"மகாராஜா! வணக்கம்"
தனுக்காத்த குமாரன் தேவர் மரியாதையாகச் சொன்னார். அவரை இரு நிமிடம் ஆழ்ந்து நோக்கினார் சேதுபதிமன்னர். அடுத்த திமிடம் ஏதோ பழகிய மனிதரைச் சந்திப்பதைப் போன்ற உணர்வு மன்னருக்குள் வந்தது. அது அவரது முகத்திலும் பிரதிபலித்தது.
அதைக் கண்ட பிரதானியின் உள்ளத்தில் ‘இந்த மனிதரை மன்னர் எப்பொழுது, எங்கே சந்தித்தார்?’ என்ற வினாக்கள் எழுந்தன.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் -11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.