• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மஹா சங்கடஹர சதுர்த்தி

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
329
எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வணங்கித் தொடங்குவது மரபு. தனக்கு உவமையில்லாத தனிப்பெரும் தலைவனாக விளங்குபவனே விநாயகர். தேவர்களும் மூவர்களும் கணநாதனை வணங்கியே செயல்களைத் தொடங்குகின்றனர் என்கின்றன ஞான நூல்கள்.

தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. அந்த நாளில் விநாயகரை வழிபட்டால் வினைகள் நீங்கும். அதிலும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி என்று சிறப்பித்துச் சொல்லப்படும்.

சங்கடஹர சதுர்த்தி (அல்லது) சங்கஷ்டி சதுர்த்தி என்பது, வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும் துன்பங்களையும் நீக்கும் விநாயகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான இந்து நாளாகும். இந்த நாளை பக்தியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறார்கள்.

‘சங்கட’ என்பது துன்பம் என்றும், ‘ஹர’ என்பது நீக்குதல் என்று பொருள். சங்கடஹர என்றால், சங்கடங்களில் இருந்து விடுதலை அல்லது துன்பங்களில் இருந்து விடுபடுதல் என்று பொருள். விநாயகரை வழிபடுவதன் மூலம், ஒருவர் துன்பத்திலிருந்து விடுபடலாம் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

மஹா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படும் அங்காரக சங்கடஹர சதுர்த்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. வருடத்தில் பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்திகள் வரும். அதில் பன்னிரண்டாவதாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தையதாக வரும் சங்கடஹர சதுர்த்தியை, ‘மஹா சங்கடஹர சதுர்த்தி’ என கொண்டாடுகிறோம். மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று நாம் விநாயகரை வணங்குவதால் பதினொரு சங்கடஹர சதுர்த்தியும் நாம் வணங்கிய பலன் கிடைக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது இந்த மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்படும் அங்காரக சங்கடஹர சதுர்த்தி.

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து, இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். வளர்பிறை சதுர்த்தியை ‘வர சதுர்த்தி’ என்றும் கிருஷ்ண பட்ச தேய்பிறை சதுர்த்தியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்றும் கூறுவார்கள். முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவகிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ளுபவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, பிள்ளையாரை வழிபட வேண்டும். அந்த நாள் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து, மாலை நேரத்தில் விநாயகரை பூஜித்து, பின்னர் சந்திரனை வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த உணவை உண்டு, விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இதனால் விரதம் மேற்கொள்ளுபவரின் சகல சங்கடங்களையும் விநாயகர் நீக்குவார் என்பது
நம்பிக்கை.
 

Author: SudhaSri
Article Title: மஹா சங்கடஹர சதுர்த்தி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top