• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விழிகள் தீட்டும் வானவில் -6

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
19
விழிகள் தீட்டும் வானவில் -6

அந்தச் சிறிய இரும்புக் கதவை காலால் உந்தித் திறந்தபடி பைக்கை உள்ளே செலுத்தினான் ஆகாஷ். வாசலில் இருந்த மஞ்சள் நிற குண்டு பல்பு மங்கிய ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்க, வீட்டின் நடை இருண்டிருந்தது. இவனுடைய வண்டி சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்த ராமநாதன் ஹால் கதவை விரிய திறந்து வைத்தார்.

இப்போது கூடத்து வெளிச்சம் வராண்டா சுவர்களில் பட்டுப் பாளம் பாளமாக நிழல் விழுந்தது. “வாடா...... “ அவர் உதடுகளை மெல்ல அசைத்தபடி தாங்கி தாங்கி முன்னால் நடந்து வந்தார்.

ஒரு காலத்தில் நல்ல உயரமும் ஆகிருதியுமாக வாட்ட சாட்டமாக இருந்தவர் மூப்பின் காரணத்தினால் இப்போது இளைத்துப் போய் இருந்தார். பிளாஷ் அடிக்கும் வழுக்கையில் காதோரம் மட்டும் சில நரை முடிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

“எதுக்கு இப்ப அனாவசியமா நடக்குறீங்க, தாத்தா ...? பேசாம உட்கார வேண்டியது தானே....” அதட்டல் போட்டபடி கையிலிருந்ததை அவரிடம் கொடுத்துவிட்டு உள்ளே வந்தான் ஆகாஷ்.

“அம்மு கொண்டாந்து கொடுத்துடுச்சா.... காலைலயே வாங்கி வச்சிட்டேன்னு போன் பண்ணிச்சு...” ராமநாதன் பேசிக் கொண்டே பேரனை பின் தொடர, டிவி திரையில் இருந்து கவனம் கலைந்த பார்வதி இருவரையும் திரும்பிப் பார்த்தார்.

“வந்துட்டியாப்பா...” ஆகாஷைப் பார்த்து தலையசைத்த பார்வதி, “ஏன்டா.... வெளி லைட் ப்யூஸ் போயி இரண்டு நாளாச்சு.... அதை இன்னும் சரி பண்ணாம இருக்கியே... உங்க தாத்தா இன்னிக்குச் சாயந்திரம் செருப்பு தட்டிவிட்டு விழுந்துருப்பாங்க....” அவனைக் கண்டதும் நினைவு வந்தவராகப் புலம்பத் தொடங்க,

பின்னந்தலையை த்தட்டிக் கொண்டவன், “சுத்தமா மறந்துட்டேன் பாட்டி... இருங்க... இப்ப போய் வாங்கிட்டு வந்துடுறேன்....” ஆகாஷ் மீண்டும் வண்டி சாவியைக் கையில் எடுத்தான்.

“அதெல்லாம் இப்ப ஒண்ணும் போக வேணாம்... காலைல பார்த்துக்கலாம்...” அவனைத் தடுத்த ராமநாதன் மனைவியைக் கடுமையாக முறைத்தார்.

“வயசாயிடுச்சே தவிர உனக்கு அறிவுங்கிறதே கிடையாது...... அவனே நேத்து நைட்டு போய்ட்டு இப்பதான் வர்றான்... வந்ததும் வராததுமா இதெல்லாம் சொல்லணுமா...?” அவர் அடிக்குரலில் எரிந்து விழ, “இல்ல... இல்ல.... வந்து.... சொன்னேன்....” இழுத்த பார்வதி கப்பெனத் தன் வாயை மூடிக் கொண்டார்.

மகன் வந்ததும் அவன் வயிற்றைக் கவனிக்கத் தோசை கல்லை அடுப்பில் ஏற்றியிருந்த சுகந்தி அவசரமாக வெளியே எட்டிப் பார்த்தார், எங்கே அவன் மீண்டும் கிளம்பி விடுவானோ என்ற கவலையில்.

“சாப்ட்டுட்டு அப்புறமா போவியாம்ப்பா....” அவர் வேகமாகச் சொல்ல, களைப்பினாலோ என்னவோ வழக்கத்தை விடச் சோர்வாகத் தெரிந்தவன், “இல்லம்மா.... இப்ப போகல.... நீங்க பொறுமையா பண்ணுங்க...” என்றான்.

‘யார் பேச்சையும் கேக்காதவன் இப்பல்லாம் தாத்தா பேச்சுக்கு மறு வார்த்தை பேசுறது இல்ல...’ சமீப வருடங்களில் மாறிவிட்ட அவன் சுபாவத்தை நினைத்து புன்னகைத்த சுகந்தி தேங்காயை துருவ ஆரம்பித்தார்.

“தாத்தா ரொம்ப போர் அடிக்கிறாரு.... எப்ப பாரு ஒரே அட்வைஸ்....” தன் பதின் பருவத்தில் முறுக்கிக் கொண்டு திரிந்தவனுக்குள் எவ்வளவு மாற்றம்....!

‘அது சரி.... மாறினது உன் பையன் மட்டும் தானா....?’ தன் அடிமனதில் எழுந்த கேள்விக்கும் அவர் இதழ் கடையோரம் புன்னகையே. என்ன, இந்தமுறை துளி கசப்பு படர்ந்த முறுவல்.

“ஹா..ம்.... அடுத்த செக்-அப் தானே... சொன்னா... என்னிக்குன்னு கேட்டுட்டு கூட்டிட்டு போறேன் தாத்தா...” ஆகாஷ் சொல்லிக் கொண்டிருக்க, வெளியே எழுந்த பேச்சுக் குரலில் தன் கவனம் கலைந்த சுகந்தி அங்கே காதுகளைக் கொடுத்தார்.

“அடிக்கடி எனக்கு மருந்து மாத்திரைன்னு தேவையில்லாத செலவு... இதுல உன் வேலையைக் கெடுத்துகிட்டு செக்அப் அது இதுன்னு... என்னமோ போப்பா....” எல்லா வயதானவர்களைப் போலவே ராமநாதனும் மற்றவர்களுக்குத் தன்னால் சிரமம் என்று குறைபட்டுக் கொண்டிருந்தார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல... நீங்க தேவையில்லாம கவலைப்பட்டுகிட்டு இருக்காதீங்க....” பேரனின் சமாதானத்தில் கொஞ்சம் மனம் தெளிந்தவர்,

“ஏன்ப்பா.. அம்முக்கு வரிசையா வர்ற மூணு நாளும் லீவு தானே. மண்டேவும் கவர்ன்மென்ட் ஹாலிடே... பேசாம கையோட இங்க கூட்டிட்டு வந்துருக்கலாமில்ல...“ எதார்த்தமாகக் கேட்க, ஆகாஷ் என்ன சொல்லுவதென்றே தெரியாமல் விழித்தான்.

கடைசியாக அவள் தன்னை ஏறிட்டு பார்த்து விட்டு சென்ற பார்வை வேறு மனதை அறுக்க, “பாவம்... அதுக்கும் நல்லா இருக்கும். நம்ம சௌமிக்கும் பொழுது போகும்..... அதுவும் தான் எங்க போகுது? வருது...?” தாத்தாவின் பேச்சு அவனது குற்றவுணர்வை இன்னும் தூண்டி விட்டது.

“அதெல்லாம் வேணாம் தாத்தா.... அவங்கப்பாவே ஒரு மாதிரி.... எதுக்கு வீணா...?” என்றவன், “அவளே வர்றதுன்னா வரட்டும்... நானா கூப்பிட்டா நல்லா இருக்காதுல்ல....” தன் மனதுக்கும் ஆறுதல் சொல்வது போல மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டான்.

அவன் முகத்தையே இரு நொடி ஊன்றிப் பார்த்த ராமநாதன், “அப்புறம் தம்பி... நீ என்ன போன தடவை அந்தப் பொண்ணு இங்க வந்தப்ப கொஞ்சம் கோபமா பேசிட்டியாம்...? சௌமி சொன்னுச்சு.... நம்ம வீட்டு கோப தாபத்தையெல்லாம் வீட்டுக்கு வந்த பொண்ணுகிட்ட காட்டக் கூடாதுப்பா...” பேரனைக் கண்டித்து அவர் புத்தி சொல்ல,

அவன் “ப்ச்....” என்றபடி தலையை மேலும் கீழும் ஆமோதிப்பது போல லேசாக ஆட்டிக் கொண்டான். அது சலிப்பா, இல்லை சுயக் கோபமா என்று வகைப் பிரிக்க இயலாத பாவனை...

‘நான் ஒழுங்கா தான் பேசிட்டு இருந்தேன்... திடீர்னு அந்த லூஸு பைத்தியம் மாதிரி உளற ஆரம்பிச்சா......? எல்லார் கண்ணுக்கும் நான் தான் வில்லன் மாதிரி தெரியறேன்.....’ அலுப்பாக எண்ணிக் கொண்டவன், அருகில் அமர்ந்து இருந்த தாத்தாவை வெறுமனே பார்த்தான்.

வளர்ந்த பையனிடம் ஓரளவுக்குத் தான் அறிவுரை சொல்ல வேண்டும் என்ற கொள்கையுடைய ராமநாதன் நல்லவேளை, அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. அதோடு தன் அட்வைஸை தூக்கி ஓரமாக வைத்து விட்டு தானும் தன் மனைவியுடன் சேர்ந்து சீரியல் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்.

அதே நேரம் தன் அறையில் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த நேத்ராவும் இதைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

‘வர வர திமிரு ரொம்ப ஜாஸ்தியா போயிடுச்சு.... பெரிய இவன்... இவன் கூப்பிடலைன்னா குடியா முழுகிப்போயிடும்....?’ கரித்துக் கொட்டி கொண்டிருந்தவளின் எண்ணத்தில் பெட்ரோல் ஊற்றுவதைப் போல மொபைலில் வந்து விழுந்தது ஒரு செய்தி.

‘இவ ஒருத்தி..... வீட்டுக்குள்ள ஒரு உர்ராங்குட்டானை வச்சுக்கிட்டு என் உசுரை வாங்குறா.....’ கடுப்படித்துக் கொண்டவள் வேகமாக ஒரு மெசேஜை தட்டி அனுப்பினாள்.

“அசிஸ்ட்டிங் வேலை இருக்கு.... ரியலி பிஸிடா... நாட் திஸ் வீக்.....” இதைப் பார்த்ததும் சௌமி முகம் எப்படிச் சுருங்கும் என்று நேரில் பார்க்காமலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது.

இப்போதெல்லாம் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு காரணம் கண்டுபிடித்துச் சௌமியை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிறது நேத்ராவுக்கு. ‘இந்த வாரமாவது இங்க வாயேன்’ என்று சௌமி ஒவ்வொரு வாரமும் கொக்கி போட, தட்டிக் கழிக்க இல்லாத மூளையைத் தட்டி தட்டி அவள் யோசிக்க வேண்டியிருந்தது.

பெயருக்குத் தட்டில் இருந்ததைக் காலி செய்தவள், கைகளைக் கழுவி கொண்டு படுக்கையில் வந்து அமர்ந்தாள்.

மொபைலின் ஒலியைக் குறைத்து தலையணைக்கு அடியில் வைத்து அதில் தலை சாய்த்தவளின் பார்வை பக்கத்துப் படுக்கையில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த சுஜியை ஏக்கமுடன் பார்த்தது.

இவளுக்குத் தூக்கமும் வரவில்லை. எழுந்து உட்கார்ந்து புத்தகங்களை விரிக்கவும் பிடிக்கவில்லை. படிப்பதற்கு மலையளவு இருந்தது. ஆனாலும், படிக்க மூட் இருந்தால் தானே...!?

மனசு கேட்காமல் சிறிய ஒலியில் ஒலித்து ஒலித்து அடங்கிய போனை மீண்டும் எடுத்துப் பார்த்தாள். “நீ இப்பல்லாம் ரொம்ப மாறிட்ட...” என்று ஆரம்பித்து என்னன்னவோ பினாத்தி வைத்திருந்தாள் சௌமி.

‘எங்க இரண்டு பேருக்கும் இடையில போயிட்டு இருக்கிற கோல்ட் வார் பத்தி தெரியாம பேசுறாளே, இவளை....!?’ சௌமியுடைய நட்பின் நெருக்கத்தை நினைத்தால் ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், இன்னொரு புறம் தன் நிலையை எண்ணிய குழப்பத்தில் அவள் அடி மனதில் இனம்விளங்கா அச்சமும் இடற தவறவில்லை.

‘எப்பயிலிருந்து இவன் இப்படி மூஞ்சை தூக்க ஆரம்பிச்சான்....?’ யோசித்துப் பார்க்க கூடத் தேவையில்லாமல் அந்த நாள் தெளிவாக அவள் நியாபகத்தில் வந்தது. இரண்டு வருடங்கள் இருக்குமா...?

அதற்கும் முன்பு என்னென்னவோ நடந்து இரு குடும்பங்களுக்கும் இடையிலான சுமூகத்தில் பெரிய பிளவு ஏற்பட்டு இருந்தாலும் கூட, ஆகாஷ் இவள் வரையில் முகம் காட்டியதில்லை.

இவளும் தன் அப்பாவிற்குப் பயந்து அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு செல்லமாட்டாள். மாதம் ஒரு முறை, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை என்று போனாலும் கூட “வா....” என்ற அழைப்பிலோ, “எப்படி இருக்க..?” எனும் சாதாரண விசாரிப்புகளிலோ அவன் குறை வைத்ததில்லை.

என்ன, அவள் முதல்முதலாகப் பார்த்த ஆகாஷ் மாதிரி சிரித்துப் பேச மாட்டான். உதடு காணாத புன்னகையுடன் தான் எனினும் இரண்டு வார்த்தைகள் பேசவே செய்வான்.

அவ்வளவு ஏன் ? இவளுடைய மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் நேரத்தில் கவுன்சிலிங்குக்குத் துணைக்கு வந்ததே ஆகாஷ் தான்.

“அந்தப் பையனுக்கு என்ன தெரியும்...? இதே பீல்ட்ல இருக்கிற யாராச்சும் கூட வந்தா உபயோகமா இருக்கும். என் கிளப்ல எத்தனை டாக்டர்ஸை எனக்குத் தெரியும்... அவங்களையெல்லாம் விட்டுட்டு....” அவளுடைய தந்தை ரவி வெகுவாகச் சலித்துக் கொண்டாலும் நேத்ரா ஒரேபிடியாக நின்றாள்.

“இல்லப்பா.... ப்ளீஸ்... காலேஜ் செலக்ட் பண்றதுல ஆகாஷ்க்கு நல்ல க்நாலெட்ஜ் இருக்கு... அவரைக் கண்டிப்பா கூட்டிட்டு போகணும்.... நீங்களே போன் பண்ணி சொல்லுங்க... அப்பதான் அவர் வருவாரு....” மகள் பழசுக்கும் சேர்த்து கொட்டு வைத்துப் பிடிவாதம் பிடிக்க, மாலதியும், சோமசுந்தரமும் கூட நேத்ரா சொன்னதையே தான் சொன்னார்கள்.

வேண்டாவெறுப்பாக ரவி அவனை உதவிக்கு அழைத்தாலும், அவன் வர உடனே ஒத்துக் கொள்ளவில்லை. அவளுடைய தாத்தா இவன் தாத்தாவிடம் சொல்லி, ராமநாதன் சிபாரிசு செய்து ஒருவழியாக வந்தான் என்று அதற்கப்புறம் சௌமி வழி செய்தி வந்து நேத்ராவை சேர்ந்தது.

ஆனால் நேரில் பார்த்தபோது, அந்தத் துறையில் அவனுக்கு இருந்த ஆளுமையைப் பார்த்து ரவியே அசந்துதான் போனார். போன ஐந்து ஆண்டுகளின் மருத்துவ கட்-ஆப் மதிப்பெண்கள், முன்னிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதகம் என்ன, பாதகம் என்ன என்பது முதற்கொண்டு,

எந்தக் கல்லூரியில் எந்தப் பேராசிரியரின் வகுப்புப் பிரசித்தம், எந்த வருடம் யார் விசிட்டிங் ப்ரொபசராக வருவார்கள், எந்த கல்லூரியில் எந்த பிஜி வகுப்புச் சிறந்தது, எவையெவை வெளிநாட்டுப் பல்கலைகழகங்களுடன் தொடர்புடையது என்பது வரை அவன் தெளிவாக வரையறுத்து வடிகட்டியதைப் பார்த்து அவரே ஆடிப் போய் விட்டார்.

மகளின் பிடிவாதத்திற்காக அவனை அழைத்து விட்டாலும், ‘அவனுக்கு என்ன தெரியும்...?’ என்ற கடுப்புடன் சென்னை வந்து இறங்கியிருந்தவர்,

“எங்களுக்கு ஒண்ணுமே புரியல.... கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு.... எது நல்லா இருக்கும்னு நீயே டிசைட் பண்ணுப்பா.... பணம் கொடுக்கிறதா இருந்தா கூடக் கொடுத்துடலாம்.....”

நெஞ்சில் உறுத்திய குற்றவுணர்வுடன் அவர் அந்தக் கடைசி வரியை சொன்னாலும் கூட, அவனது திறமையை முழுதாக மதித்தார்.

கடைசியில், ‘பாண்டிச்சேரியா? சென்னையா?’ அவள் முன் இரண்டு ஆப்ஷன்கள் இருந்தாலும் நேத்ரா உறுதியாகச் சென்னையையே ‘டிக்’ அடித்தாள். எல்லா வழமைகளையும் முடித்துப் பணம் கட்டி விட்டு ஊர் திரும்பும்போது ரவியே வாய் விட்டு சொன்னார்.

“நான் அப்ப இந்தப் பையனை சரியா ஜட்ஜ் பண்ணல.... தப்பு பண்ணிட்டேன்....” சுயவிளக்கம் போலச் சொல்லிக் கொண்டவரை காரில் இருந்த மற்ற மூவருமே அதிருப்தியுடன் பார்த்தார்கள் என்றால் நேத்ரா சற்று கூடுதலாகவே....

“சாதாரணத் தப்பு இல்லப்பா.... இனிமே சரி செஞ்சுக்கவே முடியாத தப்பு... நாங்க எவ்ளோ சொன்னோம். நீ தான் கேட்கவே மாட்டேன்னுட்ட...” அவள் மனதில் இருந்ததைத் தாத்தா வாய்விட்டே சொல்லிவிட, அப்பா என்ற பாசத்தையும் தாண்டி நேத்ரா தன் தந்தையை வெறுத்து மீண்ட கணம் அது.

அதற்குப்பின் இவள் வரைக்கும் எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது, இரண்டு வருடங்கள் முன்பு வரைக்கும்.

அந்தமுறை வந்த நீண்ட விடுப்பில் நேத்ரா தன்னுடன் ஊருக்கு வரும்படி சௌமியை தொணத்திக் கொண்டிருந்தாள். சௌமிக்கும் ஆசை தான், தோழியுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதற்கு. அவளும் எங்கே போகிறாள், வருகிறாள், வீடு விட்டால் காலேஜ், காலேஜ் விட்டால் வீடு, அவ்வளவு தான்.

முதலில் சுகந்தி ‘அதெல்லாம் வேணாம்மா’ என்று சொல்லிவிட்டார். சௌமியும் நேத்ராவும் மாறி கெஞ்ச, கொஞ்ச, ஒருகட்டத்துக்கு மேல் அவராலும் தடைபோட முடியவில்லை.

அவருடைய அடிமனதில் சில வருத்தங்கள் இருந்தாலும் பிள்ளைகள் வரை கொண்டு போகக்கூடாது என்று மகளுடைய விருப்பத்துக்கு வளைந்து கொடுக்க நினைத்தார். எப்படியோ நொச்சு பண்ணி வீட்டில் எல்லோரிடம் பெர்மிஷன் வாங்கி விட்டார்கள் தோழிகள் இருவரும்.

ஆனால் ஆகாஷ் மட்டும் கடைசி வரை சம்மதிக்கவே இல்லை. தாத்தா, பாட்டி சிபாரிசு செய்தும் கூட, “வேணாம்... அங்கல்லாம் அனுப்புறதா இல்ல... வாயை மூடிக்கிட்டு வீட்டுல உக்காரு. இல்லன்னா ஏதாவது கிளாஸ்க்கு போய் உருப்படுற வழியைப் பாரு...” காட்டுக்கத்தலாகக் கத்தி அவன் கண்டிப்பாக மறுத்து விட,

அதற்கு மேல் அண்ணனை எதிர்த்து எதுவும் பேச முடியாத சௌமி ‘மூச்மூச்’சென்று அழுதாள் என்றால், நேத்ரா வீரமங்கை நாச்சியார் கணக்காக வீறு கொண்டு கிளம்பினாள். ‘யாரங்கே...?’ என்று கத்திவிட்டு குதிரையைத் தட்டி ஏறாதது மட்டும் தான் குறை.

அன்றும் இன்று போலவே தான் அவன் வரும் நேரமாகப் பார்த்து அவள் கேண்டீனுக்குச் செல்ல, “என்ன கிளாஸ் ஹவர்ஸ்ல இங்க சுத்திட்டுருக்க....” இவளைப் பார்த்ததும் ஆகாஷ் சாதாரணமாகத்தான் கேட்டான்.

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க...” அங்கிருந்த சேரை இழுத்து போட்டு அவள் சட்டமாக அமர்ந்து கொண்டாள்.

முறைப்பும் உரிமையுமாக ஒலித்த அவள் குரல் எரிச்சலை விதைக்க, சிறு கண்டனத்துடன் அவளை பார்த்தவன், “சரி வேணு... நீங்க குடோனுக்குத் தானே போறீங்க... பத்து நிமிஷத்துல நானும் அங்க வந்துடுறேன்... நாம பேசலாம்.” என்று சொல்லி தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞனை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

“என்ன விஷயம்...? எனக்கு வேலை இருக்கு...” அவனது ரப் அண்ட் டப்பான கேள்வி என்னமோ செய்தது அவளை.

ஏற்கனவே பற்ற வைத்த பட்டாசு மாதிரி சுறுசுறுசுறுவென்று வந்திருந்தவள், இப்போது இன்னும் சூடாகிப் போக, “எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் தான்..” என்றாள் சுள்ளென்று.

“ஏன்... பழசை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு உங்க தங்கச்சியை எங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேங்குறீங்களா....? உங்க இஸ்யூஸ் உங்களோட....” எடுத்த எடுப்பிலேயே படபடவென்று பொரிந்து கொட்ட, இவள் இந்த மாதிரி பேசுவாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை போலும்.

கடுப்புடன் ஏறிட்டாலும் கூட, “சின்னப் பொண்ணு நீ... எதுக்குப் பெரியவங்க விஷயத்தையெல்லாம் பேசுற...?” அவன் குரல் அப்போதும் அமைதியாகத்தான் ஒலித்தது.

அந்த நிதானம் கூட அவனுடைய அதிகாரத்தையே காட்ட, “உங்க பிரச்சனையை எல்லாம் எங்க பிரண்ட்ஷிப்குள்ள கொண்டு வராதீங்க.... ப்ளீஸ்... எல்லோரும் சரின்றாங்க... நீங்க மட்டும் என்ன..?”

“இவரு மட்டும் பெரிய இதாக்கும்.....? ஏன் உங்க தங்கச்சி என்ன வெல்லகட்டியா..? நாங்க அப்படியே தூக்கிட்டுப் போய்க் கரைச்சு குடிச்சுடுவமாக்கும்...?”

முணுமுணுவென்று அவள் காய்ந்து கொண்டே போக, அவள் பேசிய வேகத்தில் அவனுக்குக் கோபம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

“ஓவரா பேசுறே.... ஆமா... என் தங்கச்சியை உங்க வீட்டுக்கு அனுப்ப முடியாது... இப்ப என்னங்கிறே.....?” சிவந்து போன முகத்துடன் அவனும் குரலை உயர்த்த, எங்கிருந்து தனக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்று இப்போது கூட அவளுக்குப் புரியவில்லை.

வெகு நாட்களாக உள்ளே ஊறிக் கொண்டிருந்தது உடைத்துக் கொண்டு வெளியே வந்த மாதிரி ஒரு வித அசட்டுத் துணிவுடன் சொல்லியே விட்டாள்.

“சரி... அனுப்பாதீங்க.... உங்க தொங்கச்சியை உங்க வீட்டுலயே வச்சுக்குங்க...” என்று விடைத்துக் கொண்டவள்,

“நாளைக்கு நமக்குக் கல்யாணம் ஆகி நான் உங்க வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் எப்படி எங்க இரண்டு பேரையும் பிரிக்கிறீங்கன்னு நானும் பார்க்கிறேன்.... ”

ஸ்பஷ்டமாகச் சொல்லிக் கொண்டே போனாள். ஏதோ பரிசம் போட்டு, பாக்கு வெற்றிலை மாற்றி, தாலி கட்ட நாள் குறித்துத் தயாராக இருப்பது போல அவள் இலகுவாகப் பேசுவதைக் கேட்டவன், அதிர்ச்சியில் விக்கித்துப் போனது தான் நிஜம்.

காதில் விழுந்ததை நம்ப முடியாமல் விழிகள் தெறிக்க அவன் முறைக்க, எந்தச் சலனமுமில்லாமல் உறுதியான விஷயத்தை அறிவித்த தினுசில் அவள் இயல்பாக நின்று கொண்டிருந்தாள்.

தானே எதிர்பார்க்காத மாதிரி திடுதிப்பென்று தன் மனதில் இருந்ததைக் கொட்டி விட்டதால் பாரம் நீங்கி இருந்தவளின் முகத்தில் இப்போது புன்னகையும் சிறுவெட்கமும் விரவியிருந்தது.

அவனையே ஆவலாக நோக்கிக் கொண்டிருந்த அந்த நீண்ட நயனங்களில் குறும்பும் ஆர்வமும் சரிவிகித சமானமாகக் கலந்திருக்க, “விளையாட்டுத்தனமா எதையாவது உளறாத.... யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க....?”

அப்போது கூட அவள் தீவிரமாகச் சொல்வது போல அவனுக்குத் தோன்றவில்லை. ஏதோ சொல்ல வந்து எதையோ உளருகிறாளோ என்று தான் தோன்றியது.

“ஹலோ... நான் ஏன் விளையாடுறேன்.....? நான் சீரியஸா தான் சொல்லுறேன்... என்னை விட்டா உங்க மூஞ்சுக்கு வேற எந்த மாங்கா மடச்சி கிடைக்கப்போறா....?” மூக்கை சுருக்கி குறும்பாக முறைத்தன அவள் விழிகள்.

“என்ன...? சின்ன வயசுல குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிக் கொடுக்கிறதா சொல்லிட்டு இப்ப என்னை ஏமாத்த பார்க்கிறீங்களா....?” நாக்கை துருத்தி அழகு காட்டியபடி வில்லங்கமான கேள்வியை வேறு அவள் கேட்டு வைக்க,

அதுநாள் வரை, தான் கண்டு கொள்ளாமல் போனால் கூட வலிய வலிய அவள் வந்து பேசுகையில் தோன்றும் சிறு நெருடல் இப்போது முற்றுமுழுசாக உண்மை எனப் புரிந்து போக, அவனுக்கு ஆத்திரம் தான் வந்தது.

“மரியாதையா இங்க இருந்து ஓடி போயிடு... இப்படியெல்லாம் பேசிட்டுத் திரிஞ்சீன்னா பல்லை கழட்டி கையில கொடுத்துடுவேன்... இனிமேல என் கண்ணுல பட்டுடாத..... வீட்டுப் பக்கமும் வந்துடாத...“

வந்த கோபத்தில் வாள்வாளென்று அப்போது அவன் கத்தியது இன்னும் காதுகளில் ஒலிப்பது போல இருக்க, ‘போடா துர்வாச முனி.....’ நேத்ரா சிரித்தபடி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
 

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
135
அட அம்மணி நேராவே கல்யாணத்தை பத்தி போட்டு உடச்சாச்சு 😄😄😄😄😄
 
Top Bottom