விழிகள் தீட்டும் வானவில் -5
சௌமி வீட்டில் நடந்த அந்த ரணகளத்திலும் ஒரு குதூகலமாகச் சில பல டிஜிட்டல் ஆல்பங்களை அங்கிருந்து சுட்டு வைக்க மறக்கவில்லை நேத்ரா. தன் ஐபோனில் கடத்தி வந்திருந்ததை இப்போது ஒவ்வொன்றாக நகர்த்தியபடி ஏதோ நினைவில் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“அம்மு.... தூங்கிட்டாம்மா இருக்கே....?” லேசாக அறைக் கதவை திறந்தபடி மாலதி குரல் கொடுக்க, சட்டென்று முகத்தை இயல்பாக்கிக் கொண்டவள், “இல்லம்மா... தூங்கல....” கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அம்மாவை பார்த்தபடி திரும்பி படுத்தாள்.
“ஏன்டா கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே...?” மாலதி அருகில் வந்து அமர, நெகிழ்ந்திருந்த மனதுடன் இருந்தவள், “தூக்கம் வரலேம்மா....” அப்படியே நகர்ந்து அவருடைய மடியில் தலை வைத்துக் கொண்டாள்.
“ஏம்மா.... இவ்வளவு லேட்....?” மகளின் தலையை மாலதி இதமாகக் கோதிக் கொடுக்க, நேத்ரா சுகமாய் நெளிந்தபடி தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். மாலதி அருகில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் செகண்டரி கிரேட் ஆசிரியையாக இருக்கிறார்.
“எப்பயும் வர்றதுக்கு இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டேன்டி.... கடைக்குப் போய்க் கொஞ்சம் கிராசரிஸ் வாங்கிட்டு வந்தேன்.... உனக்குப் பிடிச்சதா செஞ்சு போட்டு உடம்பை கொஞ்சம் தேத்தணும்டா... இளைச்சு போயிட்ட... அப்பாவும் புலம்புறாங்க.....”
ஹாஸ்டலில் விட்டு வைக்கும் எல்லாப் பெற்றோர்களைப் போலவே இவர்களும் பெண்ணின் உடல் நலத்தை எண்ணி கவலைப்பட்டார்கள்.
“நான் எப்பயும் போலதான்ம்மா இருக்கேன்.... நீங்க வேற....?” நேத்ரா அலுப்பாகச் சொன்னாலும்,
“இந்த வாரம் எக்ஸாம் முடிச்சுட்டா, அடுத்த வாரம் புல்லா நான் லீவ் தான். என்னென்ன வேணும்னு சொல்லு... அப்படியே கொஞ்சம் முறுக்கும் பக்கோடாவும் போட்டு வைக்கிறேன். ஊருக்கு எடுத்துட்டு போக...” மாலதி தன் செல்ல மகளைக் கவனிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டம் போடுவதை நிறுத்தவில்லை.
“சரி.... எழுந்து கீழ வா, அம்மு.... நானும் போய் ட்ரஸ் மாத்திட்டு வரேன்... செல்வி உனக்குன்னு பஜ்ஜி மாவு கரைச்சு வச்சிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கு.. எந்திருச்சு வாடா..” அவளை உசுப்பி விட்டு செல்ல, நேத்ராவும் முகம் கழுவிவிட்டுக் கீழ் தளத்திற்குச் சென்றாள்.
அவள் படி இறங்கும்போது தான் அவள் தந்தை ரவியும், தாத்தா சோமசுந்தரமும் அலுவலக அறைக் கதவை திறந்து ஹாலில் வந்து அமர்ந்தார்கள்.
“என்னப்பா டீ குடிச்சிட்டீங்களா....? தாத்தா நீங்க...?” அவர்களிடம் கேட்ட நேத்ரா, “நாங்க குடிச்சாச்சும்மா.... நீ ஏதாவது சாப்பிடு....” அவர்களின் பதிலை கேட்டபடி உள்ளே செல்வி தயாராகப் போட்டு வைத்திருந்த டிபனையும் தேநீரையும் எடுத்துக் கொண்டு அவர்களருகில் வந்து அமர்ந்தாள்.
மாலதியும் வந்து சேர, “படிப்பு எப்படிப் போகுது...?”
“காலேஜ் எப்படி நடக்குது...?”
“ஹாஸ்டல் சாப்பாடு எப்படி இருக்குது....?”
“உன் பிரெண்ட்ஸ் எல்லாம் என்ன பண்றதா இருக்காங்க..?”
எப்பொழுது லீவுக்கு ஊருக்கு வந்தாலும் முதல் நாளில் வரும் வழக்கமான அதே வினாக்கள்; ஒரே டோனில் ஒலிக்கும் ஸ்டீரியோ டைப் கேள்விக் கணைகளை நினைத்து ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும், அவர்களுடைய கவலையைப் புரிந்து பாந்தமாகவே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் நேத்ரா.
“அப்புறம் அம்மு... உன்கிட்ட முக்கியமா ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்....” பெரிய பீடிகையுடன் ஆரம்பித்த ரவி,
“அடுத்த வருஷம் நீ இன்டர்ன்ஷிப் பண்ணணும்னு சொன்னியே... இங்க கோயமுத்தூர்லயே என் பிரண்ட் வேதாவோட பையன் இருக்கான்ல. அவனோட ஹாஸ்பிடலே இருக்கு. தன் பையனை கேட்டுட்டு அங்கயே உனக்கு அரேன்ஜ் பண்ணிடலாம்னு சொல்லியிருக்கான்... நீ அதுக்குத் தகுந்த மாதிரி பிளான் பண்ணிக்க....”
ரவி முடிவு பண்ணி விட்டதைப் போல அழுத்தமாகச் சொல்ல, நேத்ரா அவரைச் சின்ன அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவள் முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த மலர்ச்சி மறைந்து ஒரு தீவிர பாவம் வந்தது.
அருகில் இருந்த தாத்தாவையும் அம்மாவையும் ஒருமுறை பார்த்தாள். அவர்களுக்கும் இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்பது போல இருந்தது அவர்களது முகபாவம்.
எதிரே இருந்த மற்ற இருவரின் மனநிலை எப்படியோ, ஆனால் தன் தந்தையின் மனதில் ஓடுவதை அப்படியே துளியும் பிசகாமல் படிக்க முடிந்தது அவளால். அவரது விறைப்பான பார்வையில் இருந்தே ஏன் இந்தத் திடீர் திட்டம் என்றும் உணர்ந்து கொள்ள முடிய,
“ம்ம்.. யோசிக்கிறேன்.” “பார்க்குறேன்...” “கேட்டுட்டு சொல்றேன்..” இந்த மாதிரி எந்த தட்டிக் கழிக்கும் உத்தேசமும் இல்லை அவளிடம். சிறு யோசனையுடன் இரு நிமிடங்கள் நிதானித்தவள், ஒருவித உறுதியுடன் நிமிர்ந்தாள்.
“இல்லப்பா.... அதெல்லாம் சரிப்பட்டு வராது. நான் எங்க ஹாஸ்பிடல்லயே பிளான் பண்ணியாச்சு.... அதை டிஸ்டர்ப் பண்ற மாதிரி எந்த சேஞ்சும் வேண்டாம்..... என்னோட பிஜி என்ட்ரன்ஸ் பிரிப்பரேஷனுக்கும் இது தான் ஹெல்ப்புல்லா இருக்கும்....”
தீர்க்கமான குரலில் தெளிவாகச் சொல்லிவிட்டு, ‘இதற்கு மேல் இந்தப் பேச்சு வேண்டாம்’ என்கிற தினுசில் டீக்கோப்பையுடன் எழுந்து போர்டிகோவுக்குச் சென்று விட்டாள்.
*****************************************
மஞ்சள் வெயில் மாலை நேரம்…
கலர் கலர் பட்டாம்பூச்சிகள் எல்லாம் வெள்ளை கோட் போட்டுகொண்டு உலா வரும் மருத்துவக் கல்லூரி வளாகம்...
அங்குப் படிக்கும் ஆண்களும் பெண்களும், பயிற்சி மருத்துவர்களும், ஆசிரியர்களும் என அந்த கேம்பஸ் கலவையாக நிரம்பி வழிந்தாலும், அங்கிருந்த பொது மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்களின் கூட்டமும் அந்த இடத்தில் விரவி கலந்திருந்தது.
மூன்று மணியில் இருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வார்டுகளுக்கு விசிட் செய்து, சீனியர் மருத்துவர்களின் குறிப்புகளை அமல்படுத்தி, சார்ட்டுகளை அப்டேட் செய்து, மாலை நேர ட்யுட்டிக்கு வந்த செவிலியர்களிடம் க்ரிடிக்கல் விவரங்களை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திவிட்டு, களைத்து போய் வெளியே வந்தார்கள் நேத்ராவும், சுஜி, பரத்தும்...
மூவர் கையிலும் அவர்களுடைய குறிப்பு நோட்டுகள் இருக்க, தோளில் வெள்ளை கோர்ட்டும் ஸ்டெதஸ்கோப்பும் அலங்காரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.
“அந்த ஜான்வி பேஷண்ட்டை பார்த்ததுல எனக்கு மயக்கமே வந்துடுச்சு... இன்னும் அந்த பொண்ணுக்கு இன்பெக்ஷன் சரியாகாம படுத்துதுல்ல, பாவம்.... நாளைக்கு மார்னிங் முதல் வேலையா டாக்டர் மேத்தா கிட்ட கேக்கணும்...” சுஜி வேலை நிமித்தமாய்ப் புலம்பியபடி நடக்க,
“ஹாஸ்பிடல்ல இருந்து வெளிய வந்துட்டா வியாதி, ரத்தம், மருந்துன்னு அதைப் பத்தியே நினைச்சிட்டு இருக்கக் கூடாது மேடம்.... அதுதான் டாக்டர்ஸ் படிக்க வேண்டிய முதல் பாடம்....“ பரத் அறிவுரை சொல்லிக் கொண்டு வந்தான்.
“போடா... அன்னிக்கு சரவணன் டாக்டருக்கு அசிஸ்ட் பண்ண போயிட்டு இரண்டு நாளு சாப்பிடாம திரிஞ்ச ஆளு தானே, நீ...” சுஜியும் பரத்தும் மாறி மாறி பேசிக் கொண்டு வந்தாலும் நேத்ரா அவர்களுடன் அமைதியாக நடந்து வந்தாள்.
“அப்புறம் இன்னிக்கு ஈவினிங் என்ன ப்ரோக்ராம்....?” கொட்டாவி விட்டபடியே அலுப்பாகக் கேட்டாள் சுஜி.
“வெளில என் கேர்ள் பிரண்ட் வெயிட்டிங்.... இசிஆர் பக்கமா லாங் ட்ரைவ். அது தான் இன்னிக்கு பிளான்...” சிரித்துக் கொண்டே பரத் பதில் கூற, அவன் சிரிப்பில் தன் யோசனை கலைந்த நேத்ரா கையில் இருந்த புத்தகத்தினாலேயே அவன் முதுகில் ஒன்று வைத்தாள்.
“யாராவது கேட்டா உண்மைன்னே நினைப்பாங்க... சாவித்திரி மேடம் கிட்டயே சொல்றேன் இரு...” சுஜியும் தன் பங்குக்கு அவனை அடிக்க,
“இவனை இவ்வளவு பேச வச்சு கெடுக்கிறதே அவங்க கொடுக்கிற செல்லம் தான்....” விளையாட்டாக அவனை முறைத்த நேத்ரா, “கொடுத்து வச்ச மகராசன் நீ.... எவ்வளவு பீல்ட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குது உனக்கு...?” ஏக்கமாக முணுமுணுத்தாள்.
அரசாங்க ஆஸ்பத்திரியில் பணி செய்து ஓய்வு பெற்ற சாவித்திரி அவ்வப்போது புறநகர் பகுதிகளுக்குச் சென்று அங்குத் தேவைப்படும் மருத்துவ உதவிகளைச் செய்து வருபவர். தன்னார்வம் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களை உதவிக்கு என அவர் அழைத்துப் போவதை தான் இந்த லட்சணத்தில் சொல்லி வைத்தான் பரத்.
இப்படி மாலை வேளைகளில் வெளியே போய் வர, தொலைவில் உள்ள மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ள, சுஜி வீட்டிலும் சரி, நேத்ரா வீட்டிலும் சரி, பெரிய சிகப்பு விளக்காகப் போட்டு விட்டார்கள். ஹாஸ்டலில் இருக்கும் நேரக் கட்டுப்பாடுகளும் ஒத்து வராததால் இவர்களால் அடம் பிடித்தேனும் உடன் செல்ல முடியவில்லை.
“அடுத்த ஜென்மத்துலயாவது ஆம்பிளையா பொறக்கணும்... நாம மட்டும் என்ன படிச்சாலும், என்ன வேலை பார்த்தாலும் நினைச்ச இடத்துக்கு நினைச்ச நேரம் போக முடியுதா...?”
எப்போதும் போல இப்போதும் கடுப்புடன் பேசிக் கொண்ட இரு பெண்களும், “சரி... சரி... கிளம்பு... எங்களுக்கும் சேர்த்து சேவை செஞ்சுட்டு வா...” என்று அவனை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.
“நேத்ரா.... இன்னிக்கு லைப்ரரி போகச் சுத்தமா மூட் இல்ல... பேசாம ஹாஸ்டலுக்கே போயிடலாமா..? டிபன் சாப்டுட்டு ஒரு தூக்கம் போடணும்... ” சுஜி அழைக்க,
“இல்ல சுஜி... நீ போ... நான் அங்க போய்ட்டு வந்துடுறேன்....” நேத்ரா கண்களால் காட்டிய திசையைப் பார்த்த சுஜி, “ம்ம்..... ம்ம்.... நடத்து.... நடத்து....” கேலியாகச் சிரிக்க, “அட போடி... நீ வேற... கிளம்பு... நான் வந்துடுறேன்......” சிரித்தபடி நேத்ரா மேலே நடந்தாள்.
அவள் உள்ளே நுழைந்த அந்த உணவு விடுதி மருத்துவமனைக்கும் கல்லூரிக்கும் பொதுவாக இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே நடுநாயகமாக உட்கார்ந்திருந்தது.
வயிற்றுக்கும் பர்ஸ்க்கும் கேடு விளைவிக்காத மாதிரி மெனுவும் விலைப் பட்டியலும் இருப்பதால் அங்கு எப்போதுமே ஓரளவு கூட்டம் அலை மோதும். அவள் இப்போது வந்த நேரம் ‘பீக் சமயம்’ என்பதால் கேட்கவே வேண்டாம், மனித தலைகளால் கேண்டீன் நிரம்பி வழிந்தது.
ஒரு பக்கம் ஓபி பார்ப்பவர்கள், நோயாளிகளின் உறவினர்கள், பொது ஜனங்கள் என்று நிரம்பி இருந்தார்கள் என்றால், ஹாஸ்டல் உணவு பிடிக்காமல் மாற்றம் தேவைப்படும் நாக்குகளுக்குப் புகலிடம் கொடுப்பதால் கல்லூரி மாணவர்களும் பயிற்சி மருத்துவர்களும் ஆங்காங்கே குழு குழுவாக அமர்ந்திருந்தார்கள்.
இரண்டொரு தெரிந்த முகங்களைப் பார்த்து தலையசைத்து சிரித்த நேத்ரா, யாரிடமும் நின்று பேசாமல் வேகமாக உள்ளே சென்றாள். “நேரம் ஆயிடுச்சுன்னா அது வேற வம்பு.... இன்னிக்கு எப்படியும் பார்த்து கொடுத்துடணும்...”
முதலில் வந்த சமையல் கூடத்தைக் கடந்து வலது பக்கம் இருந்த சிறிய கதவை தட்டிவிட்டு அறைக்குள் எட்டிப் பார்த்தாள். செவ்வக கண்ணாடி சட்டம் வழியே ஆகாஷ் இருப்பது தெரிந்தது. எதிரே வேறு யாரோ அமர்ந்திருந்தார்கள்.
அவனும் இவளை பார்த்துவிட்டு “வா...” என்பது போலக் கையசைக்க, நேத்ரா உள்ளே போனாள்.
“வாம்மா... நல்லா இருக்கியா...?” உள்ளே நுழைந்தவளை யாரெனத் திரும்பிப் பார்த்த சதாசிவம் புன்னகையுடன் நலம் விசாரிக்க, “நல்லா இருக்கேன் அங்கிள்... நீங்க எப்படி இருக்கீங்க....? ஆன்ட்டி, நரேன் எல்லாம் நல்லா இருக்காங்களா....?” நேத்ராவும் முறுவலுடன் கேட்டாள்.
அவள் அந்தச் சமயத்தில் அவரை இங்கே எதிர்பார்க்கவில்லை. என்னவோ டக்கென்று தோன்றியதை கேட்டு வைத்தாள். “உட்கார்ந்து பேசேன்....” எதிரில் இருந்த ஆகாஷ் சொல்ல, “ம்ம்...” என்றபடி இருக்கையில் அமர்ந்தாள்.
“சரிப்பா.... இந்த ஸ்டாக் லிஸ்ட் நேத்து எடுத்தது... பார்த்துக்கோ.... அப்புறம் இந்த மாசத்துக்கான பில் நாளைக்குத் தான் ரெடியாகுமாம். கணேஷ் போன்ல சொன்னாரு....”
சதாசிவம் தன் போக்கில் விவரம் சொல்லிக் கொண்டிருக்க, ஆகாஷ் பதில் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க, இவள் கொஞ்ச நேரம் மௌன சாமியார் மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டியிருந்தது.
‘ஏன்... இதையெல்லாம் அப்புறம் பேசிக்கிட்டா குறைஞ்சு போயிடுமாக்கும்... இவன் போடுற சீன் இருக்கே....!?’ உள்ளுக்குள் அங்கலாய்த்தபடி, வெளியே பச்சைப் பிள்ளை போன்ற முகத்துடன் அவள் சுற்றி வர பார்த்துக் கொண்டிருக்க,
‘இட்ஸ் ஓகே அம்மு... குடும்பத்துல ஒருத்தராவது சின்சியரா இருக்கணும்ல.... இல்லன்னா நாளைக்கு புவ்வாவுக்கு என்ன பண்றது...?’ அவள் மனமே அவளை நொடித்து வைத்ததில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
இவளுடைய அஷ்டக்கோணலை கவனித்த ஆகாஷ் ஒரு நொடி இவள் முகத்தைப் பார்த்துவிட்டு தன் கண்களைத் திருப்பிக் கொண்டான்.
“சரி தம்பி... நரேன் வந்தான்னா அவன்கிட்ட கேட்டுக்க..... அவனுக்குத்தான் தெரியும்....” சிறிது நேரத்தில் பேசி முடித்து எழுந்த சதாசிவம், “சரிம்மா.... நான் வரேன்.... உங்க தாத்தா எப்படி இருக்காரு..? நான் கேட்டதா சொல்லு...” இவளிடம் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.
அவர் எழுந்து செல்லவும் நேத்ரா நிமிர்ந்து அமர்ந்தபடி அவனைப் பார்த்தாள். ஆனால், அவளுடைய ஆவலுக்கு நேர்மாறாக, “அப்புறம்... என்ன இங்க...?” அசுவராஸ்யமான அவன் கேள்வியைக் கண்டு அவளுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது.
பதிலுக்கு நக்கலாக எதையாவது பேசவேண்டும் என்று தான் அவள் உதடுகள் துடித்தன. ஆனால் எங்கே..? எதிரில் இருப்பவனைப் பார்த்த மறு நொடி கண்கள், மனசு, மூளை என எல்லாமும் சேர்ந்து கூட்டணி போட்டுக் கொண்டு முழுசாக சரண்டராகிக் கிடக்கையில், அவளால் வேறு என்ன செய்ய முடியும்?
“சும்மா தான்....” சம்பிரதாயமாகச் சொன்னாள்.
அவன் மேலே எதுவும் பேசாமல் கையில் இருந்த டேபை (Tab) பார்த்தபடி அமைதியாக இருக்க, அப்படியே அந்தக் கன்னத்தில் இரண்டு கொடுக்க வேண்டும் போன்ற ஆத்திரம் கிளம்பியது.
அதற்கு மேல் பொறுமையில்லாமல் போக, வேகமாகத் தன் பேகில் இருந்து ஒரு கவரை எடுத்து டேபிளில் வைத்தாள்.
“இதைத் தாத்தாகிட்ட கொடுத்துடுங்க.... டூ வீக்ஸ் கழிச்சு ஒரு நாள் கூட்டிக்கிட்டு வரணும்.... அப்பாயின்ட்மெண்ட் வாங்கிட்டு நானே டேட், டைமை மெசேஜ் பண்ணுறேன்....” என்றவள்,
“வேணாம்... விடுங்க.. நான் தாத்தாகிட்டயே பேசிக்கிறேன்..”
அவள் விறைப்பாகச் சொல்லிக் கொண்டு போக, அவள் வைத்த மருந்து பாட்டில்களை, மாத்திரை பட்டிகளை ஆகாஷ் கவரிலிருந்து எடுத்துப் பார்த்தான். அவனுடைய தாத்தாவின் ஆர்த்தரைட்டீஸ்க்கான மருந்துகள் அவை.
இந்த இரண்டு வருடங்களாக அவருடைய மருத்துவத் தேவைகளை நேத்ராவே கவனித்துக் கொள்ள, அவனுக்கு இருக்கும் வேலைப் பளுவில் அது எவ்வளவு பெரிய உதவியாக இருக்கிறது என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
எனினும், மனதில் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாகப் பாராட்டி சொல்லாமல் “தேங்க்ஸ் நேத்ரா...” என்று மட்டும் சொன்னான்.
நெகிழ்ந்திருந்த அவன் குரலிலேயே அவன் உணர்வுகள் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். வேண்டுமென்றே “எதுக்கு தேங்க்ஸ்...?” என்றாள். அவன் பொதுவாகத் தோளைக் குலுக்கிக் கொள்ள, சிறு அலுப்புடன் அவனைப் பார்த்தாள்.
“நான் இங்க தான் இருக்குறேன். இங்க தான் படிக்கிறேன்... அது ஞாபகம் இருக்கா....?” அவளுடைய எந்தக் கேள்விக்கும் அவனிடத்தில் பதில் இல்லை.
“எதுக்குமே வாயை திறந்துடாதீங்க... பார்க்கலாம்.... இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வாயை மூடிக்கிட்டே இருக்கீங்கன்னு நானும் பார்க்கிறேன்....” உணர்ச்சி வேகத்தில் அவள் குரல் உயர, கூடவே கண்களின் ஓரம் ஒரு துளி நீர்.
எந்த உணர்ச்சியுமின்றி அவளையே ஒரு நிமிடம் பார்த்தவன், “உன் டைமை வேஸ்ட் பண்ணாதே.... அவ்வளவு தான் சொல்லுவேன்....” உறுதியாகச் சொல்லிவிட்டு மௌனமாகப் பேனாவை உருட்டிக் கொண்டிருக்க, அதற்கு மேல் அங்கே உட்காரமுடியாமல் அவள் எழுந்து விட்டாள்.
“பை...” என்று கூடச் சொல்லாமல் விருட்டென்று திரும்பியவள், அறைக் கதவைத் திறந்து வெளியேறப் போகும் நிமிடம், “நேத்ரா...” அவனுடைய அழைப்பு அவளை நிறுத்தியது.
“இப்ப கை எப்படி இருக்கு.....?”
எரிந்து கொண்டிருக்கும் தணலில் ஒரு துளி நீர் பட்டது போல அங்கே அலையலையாகத் தூபம் எழும்பியது.
அவனுடைய அக்கறை கொடுத்த இதத்தில் வந்த கோபமெல்லாம் ஆவியாகி காற்றோடு கலந்து விட, சட்டென்று புன்னகைத்தவள், சிரித்தபடி அவன் முன்னால் வந்து நின்றாள்.
“கை தானே? கண்றாவியா இருக்கு.... போதுமா....?” குர்த்தாவின் முனையை மடித்து விட்டு தன் கரத்தை அவன் முன்னால் திருப்பித் திருப்பிக் காட்ட, பளிங்காகப் பளபளத்த சருமத்தில் ஆங்காங்கே ஆறியிருந்த பிரவுன் நிற வடுக்கள்.
அவன் அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை. வெறுமனே பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்தான்.
‘தேவையில்லாம இந்தக் கேள்வியைக் கேட்டுட்டோமோ....?’
அவன் மனதில் நினைப்பதை அந்தக் கண்கள் வழியே அவளால் தெளிவாக உணர முடிந்தாலும் அவன் ‘கம்மென்று’ இருப்பதைச் சட்டை செய்யவில்லை நேத்ரா.
“இத்தனை நாள் கழிச்சு இப்ப தான் இந்தக் கேள்வியைக் கேக்கணும்னு தோணுச்சு இல்ல...” டேபிளில் சாய்ந்து நின்றபடி அவனை முறைத்தாள்.
அவள் சௌமி வீட்டுக்கு சென்று வந்து ஒண்ணு ஒண்ணரை மாதத்துக்கு மேல் ஆகியிருந்தது. நடுவில் அவன் அவளைப் பார்க்கவில்லை. ஆனால் அவள், போக வர என அவனைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
“காது கேக்குதா இல்லையா...?” அவளுடைய அதிகாரமான பாவனையில் அவனும் லேசாகச் சிரித்து விட்டான்.
“உன்னை நேர்ல பார்க்கவும் ஜஸ்ட் ஞாபகம் வந்துச்சு.... கேட்டேன்.... தப்புன்னா விட்டுடு....” விடாக்கொண்டனாக அவன் பேச, “ஹப்பா.... சாமி... நீங்க ஆணியே புடுங்க வேணாம்.... நான் கிளம்புறேன்...”
சிலிர்த்துக் கொண்டவளாக அவன் கையில் இருந்த பேனாவை பிடுங்கி தூக்கி போட போனவள், “ஹான்..... ஒரு நிமிஷம்....” நினைவு வந்தவளாக ஏதோ ஒரு நம்பரை அவன் முன்னால் இருந்த பேப்பரில் எழுதினாள்.
“இங்க என்னோட அக்கவுண்ட்ல இருக்கிற பேலன்ஸ்... செட்டில் பண்ணிக்குங்க....” அசால்ட்டாக அதை அவனிடம் நகர்த்த,
“நல்ல கதையா இருக்கே.... என் கான்டீன்லயே சாப்பிட்டுட்டு என்கிட்டயே பில் கட்ட சொல்லுறியா... பொழச்சிப்ப....” அவன் நக்கலாகத் தலையை ஆட்டினான்.
“இனிமேல நான் இங்க காசு கொடுத்தெல்லாம் சாப்பிடுறதா இல்ல... நானெல்லாம் உங்க ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுறதே பெருசு.... இதுல பைசா வேற கொடுக்கணுமாக்கும்...” சிரிப்புடன் உதட்டை சுளித்தவள்,
“அது தான் அன்னிக்கு சொன்னீங்கல்ல... எங்கப்பா காசை மிச்சப்படுத்துறாருன்னு..... இப்படியெல்லாம் பணம் சேர்த்தாதான் எனக்குப் பெரிய்...ய டாக்டர் மருமகனா பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க முடியும்....சோ தட்ஸ் வொய்.....” பெரிய விளக்கம் வேறு கொடுத்தாள்.
அவள் சொன்ன விதத்தில் அவனுடைய முகம் சிவந்து போனது. அது கோபத்தினால் பாதி என்றால், இவளுடைய நொச்சினால் மீதி என்கிறமாதிரி “ம்ம்ம்.... ந..ல்ல்..ல பேமிலி....” கடுப்புடன் சொன்னான்.
“வேணும்னா கணக்கு வச்சுக்குங்க.... வரப்போற மாப்பிள்ளைக்கிட்ட இருந்து வட்டியோட சேர்த்து வாங்கித் தந்துடுறேன்.....” அவள் மேலும் வெறுப்பேற்ற,
“சரி... நீ இங்கயே உட்கார்ந்து பேசிக்கிட்டு இரு.... எனக்கு வேலை இருக்கு... நான் கிளம்புறேன்....” அவன் மேசையில் இருந்ததை ஒழுங்குபடுத்திவிட்டு தன் சீட்டில் இருந்து எழுந்தே விட்டான்.
“வீட்டுக்கா போறீங்க....?”
அவள் ஆர்வமாகக் கேட்டபடி அவனுடன் சேர்ந்து நடக்க, “ம்ம்.... ஆமா.... எதுக்குக் கேக்குற....?” நின்று திரும்பியவன் அவளைக் கூர்ந்து பார்த்தான்.
இப்போது அவனுடைய குரலில் லேசான எரிச்சலை உணர முடிய, ஏனோ அந்தக் கணம் அவளுடைய அகமும் முகமும் அப்படியே சுண்டிப் போய் விட்டது.
‘ஒரு பேச்சுக்கு கூடவா ‘வீக் எண்ட் தானே... வீட்டுக்கு வாயேன்.. தனியா இங்க இருந்து என்ன பண்ண போற?’ ன்னு சொல்ல மாட்டே.... நீ கூப்பிட்ட உடனே நான் வரபோறதில்லை தான்.. இருந்தாலும்...’
அவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்திருந்த உற்சாகப் பாதரசம் மீட்டரிலிருந்து சர்ரென்று கீழே இறங்க, “ப்ச்... சும்மா கேட்டேன்... ஓகே... சீ யூ...” சட்டென்று தோன்றிய தளர்வான எண்ணத்துடன் தன் ஹாஸ்டல் இருக்கும் திசை நோக்கி அவள் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.