• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மீட்டாத வீணை 9

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மீட்டாத வீணை

அத்தியாயம் 9

கருணா மனநிறைவுடன் வீட்டு வாசலில் வந்து இறங்கினாள். பவித்ராவைப் பிரிந்திருந்த தாய் மனம் ஓடிப்போய்ப் பாப்பாவை அள்ளி அணைத்து ஆயிரம் முத்தங்களைத் தந்து உச்சி முகர்ந்திடத் துடித்துக் கொண்டிருந்தது.

" நில் அங்கேயே" என்று உறுமினான் நாதன். கோபத்தில் அவனுடைய முகம் சிவந்து பார்க்கவே பயமாக இருந்தது.

" என்ன தைரியம் இருந்தா அம்மாவோட பேச்சை மீறிக் கிளம்பிப் போவே? அதுவும் பச்சைக் குழந்தையைப் பாத்துக்கச் சொல்லி அம்மா கிட்ட உத்தரவு போட்டுட்டுப் போற அளவு நீ என்ன பெரிய மகாராணியா? பாவம் அம்மாவுக்கே உடம்பு சரியில்லை. குழந்தையையும் பாத்துக்க முடியாமத் திண்டாடிப் போயிருக்காங்க! "

" இல்லைங்க, அத்தை தான் குழந்தையைத் தூக்கிட்டுப் போகவேணாம்னு சொல்லி என் கிட்டயிருந்து வாங்கிக்கிட்டாங்க" என்றாள் பரிதாபமாக. ஆனால் நாதனோ அவள் பேசுவது எதையும் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.

" அப்படின்னா அம்மா பொய் சொல்றாங்கன்னு சொல்லறியா? அவ்வளவு நெஞ்சழுத்தமா உனக்கு? ரொம்ப சாது மாதிரி இவ்வளவு நாள் நடந்துகிட்டதெல்லாம் வெறும் வெளிவேஷமா? " வார்த்தைகள் வெடித்தன நாதனின் வாயிலிருந்து. கருணா இல்லாத சமயத்தில் ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லி அவன் மனதை நன்றாகக் குழப்பி மாசுபடுத்தியிருந்தாள் பர்வதம். இசையின் மீது அவளுடைய ஆழ்மனதில் இருந்த வெறுப்பு இப்போது அப்படியே கருணாவின் மீது திரும்பி விட்டது. எரிமலைக் குழம்பாக தகித்துக் கொண்டிருந்த வெறுப்பு, கருணா தனது சொல்லை மீறி ஊருக்குப் போன செயலால் தூண்டப்பட்டு அப்படியே வெடித்துவிட்டது. கனலின் தாக்கம் முழுக்க முழுக்க கருணாவைச் சூழ்ந்தது.

கணவனின் புதிய முகத்தைக் கண்டு அதிர்ந்து போய் நின்றாள் கருணா. அம்மாவின் பேச்சைத் தட்டாதவன் என்பது கருணாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதில் பாதியளவு மதிப்பாவது தங்களுடைய கணவன், மனைவி உறவுக்குத் தருவான் என்று நம்பிக் கொண்டிருந்த கருணா, நன்றாக ஏமாந்து போனாள். தனது வாதத்தை சரியாக எடுத்து வைக்கமுடியாத அளவு உணர்ச்சிகள் பொங்கியதால், வாயில் வார்த்தைகள் வரவில்லை.

" இங்கே பாருங்க, பேப்பரில் கூட என்னோட ஃபோட்டோ வந்திருக்கு? எவ்வளவு பெருமைப் படவேண்டிய விஷயம்? "

அவளுடைய கையில் இருந்த நியூஸ்பேப்பரைப் பிடுங்கிப் பார்த்தாள் பர்வதம்.

" பாத்தியாடா இந்த அநியாயத்தை? அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, அவரால் பாடமுடியாதுன்னு சொல்லிட்டுப் போனா. இதில பாத்தா ரெண்டு பேரும் சேந்து இல்லை பாடியிருக்காங்க? அப்பாவும் பொண்ணுமாச் சேந்து அடுக்கடுக்காப் பொய் சொல்லி நாடகம் இல்லை ஆடியிருக்காங்க! நல்ல குடும்பம்னு நம்பிப் பெண் எடுத்து உன் வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே இப்படி " என்று பர்வதம் சொல்ல, கருணா பொங்கி விட்டாள்.

" என்னை என்ன வேணாச் சொல்லுங்க. நான் உங்க குடும்பத்துப் பொண்ணாயிட்டேன். ஆனா எங்கப்பாவைப் பத்தித் தப்பாப் பேச வேணாம். அதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர் எந்தப் பொய்யும் சொல்லலை. நானும் ஒரு மகளாத் தான் என்னோட கடமையைச் செஞ்சேன். அதில எந்தத் தப்பும் இல்லை. நீங்க தான் இப்படி நடந்ததைத் திரிச்சிப் பேசி அவரை எனக்கு எதிராத் தூண்டி விடறீங்க? நீங்க தான் பொய் பேசறீங்க! " என்று கருணா கத்தி விட்டாள்.

" அய்யோ, அய்யோ, இந்த அநியாயத்தைக் கேப்பார் இல்லையா? என்னைப் பொய்க்குளிங்கறா ? என் மகன் கிட்டப் போட்டுக் கொடுக்கறேன்னு வாய் கூசாமல் குத்தம் சொல்லறாளே? எனக்கு இந்த வீட்டில் இனி மதிப்பே இல்லை. நான் இப்பவே கிளம்பி தில்லி போறேன். இவ கையால பச்சைத் தண்ணி கூட வாங்கிக் குடிக்க மாட்டேன் " என்று கத்தியபடி ருத்ர தாண்டவம் ஆடி விட்டாள் பர்வதம்.

நாதனுக்குள்ளும் அம்மாவின் ஆவேசம் புகுந்து கொண்டு ஆட்டிப் படைத்தது. சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல, கருணாவின் அருகே வந்து பளாரென்று அறைந்தான். தன்னை மறந்துவிட்டான். அறிவு வேலை செய்யவில்லை.

" நீங்க எதுக்கும்மா வீட்டை விட்டுப் போகணும்? உங்களை மதிக்காத இவ தான் இந்த வீட்டை விட்டுப் போகணும். என்னால இவளோட இனிமேல் ஒரு நிமிஷம் கூட சேந்து வாழமுடியாது" என்று கத்தியவன் உள்ளே சென்று அவளுடைய உடைமைகளை ஒரு பையில் திணித்துக் கொண்டு வந்து அவள் முன்னால் எறிந்தான்.

" போயிடு, இந்த இடத்தை விட்டுப் போயிடு. என் கண் முன்னால நிக்காத! உன்னைப் பாக்கவே எனக்குப் பிடிக்கலை" என்று கத்தினான். பர்வதமே அவனுடைய கோபத்தைக் கண்டு அசந்து போனாள். தான் ஆடிய ஆட்டத்தின் விளைவு விபரீதமாகப் போகிறதென்று அவளும் பயந்து போனாள்.

" ஆத்திரப் பட்டு எந்த முடிவும் எடுக்காதே நாதா, எனக்காக உன் வாழ்க்கையைக் கெடுத்துக்காதே" என்றாள். இப்போது கூட கருணாவை உள்ளே அழைத்துப் போக அவளுடைய தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் கருணாவை வீட்டை விட்டு அனுப்பவும் அவளுக்கு இஷ்டமில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள் பர்வதம்.

கருணாவுக்கோ கண் முன்னே நடக்கிற எதையும் ஜீரணிக்க முடியவில்லை. நாதனின் புதிய அவதாரம் அவளை சங்கடப்படுத்தியது. தவறே செய்யாத தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனையையும் வழங்கும் கணவனை அவள் மனம் மன்னிக்கத் தயாராயில்லை.

தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவள் குழந்தை பவித்ராவை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

" எங்கே போறே? பவித்ராவை உன் கூட அனுப்ப மாட்டேன். நானே என் பொண்ணை நல்லபடியா வைக்கிறேன். உன் நிழல் கூட அவ மேல படக்கூடாது " என்று நாதன் சொன்னதும், அந்த வார்த்தைகள் அவளுடைய இதயத்தில் முள்ளாகத் தைத்தன. தாங்க முடியாத வலியை அளித்தன. கண்ணீரையும் வலியையும் விழுங்கியபடி விருட்டென்று அங்கிருந்து வெளியேறி விட்டாள். அன்று பிரிந்தவர்கள் தான் நாதனும், கருணாவும்.

கருணாவின் அப்பா விஷயம் தெரிந்து துடித்துப் போனார். நாதனிடம் வந்து சமரசம் பேசக் கிளம்பியவரை கருணா தடுத்து விட்டாள்.

" நீங்க எதுக்குப்பா அவங்க கிட்டப் போய்க் கெஞ்சணும்? நியாயப்படி பாத்தா அவரு தான் வந்து நடந்ததுக்கு மன்னிப்பு கேக்கணும். நான் எந்தத் தப்பும் செய்யலை. நீங்களும் செய்யலை. பெண்ணைப் பெத்தவர்னா அவ்வளவு மட்டமா? நான் தனியா வாழ்ந்து வாழ்க்கையில் ஜெயிச்சுக் காட்டறேன்" என்று சொல்லி விட்டாள்.

கருணா, நாதனைப் பிரிந்த இரண்டே மாதங்களில் அந்தத் துயரத்தைத் தாங்கமுடியாமல் அவளுடைய அப்பா இறந்து போனார். மகளுடைய இந்த நிலைமைக்குத் தானும் ஒரு காரணம் என்று மனதிற்குள் அவர் மருகியதும் அவருடைய உடல்நிலையைப் பெரிதாக பாதித்தது.

கருணாவின் தோழியின் உதவியால் மும்பையில் ஒரு பள்ளியில் மியூசிக் டீச்சராக அவளுக்கு வேலை கிடைத்தது. மும்பை சென்று அந்த வாழ்க்கை பழகி விட, ஊரில் இருந்த சொத்துக்களை விற்று விட்டாள். மும்பை சென்றதும் அவளுக்கு இசை உலகில் முன்னேற வாய்ப்புகள் தானாகவே வந்து குவிந்தன. ஹிந்துஸ்தானி இசையையும் முறையாகக் கற்றுக் கொண்டாள்.

ஹிந்தியும், மராட்டியும் அவளுடைய நாவில் புரள ஆரம்பித்தன. கஜல் பாடல்கள் பாடிப் பிரபலமானாள். நிகழ்ச்சிகள், கச்சேரிகள் என்று அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய அவளும் படிப்படியாக முன்னேறினாள்.

நாதன், கருணா எப்படியும் திரும்பி வந்து விடுவாள் என்று உள்ளூற எதிர்பார்த்தான். பர்வதமும் அதையே சொன்னாள்.

" கருணா ஏதோ கோபத்தில விருட்டுன்னு போயிட்டா. இள ரத்தமாச்சே? உலக நடப்பு புரியலை அவளுக்கு. சம்பந்தி அவளுக்கு புத்திமதி சொல்லிக் கொண்டு வந்து விட்டுருவார் பாரேன். அவ திரும்பி வந்தா ஒண்ணும் சொல்லாம ஏத்துக்கோ நாதா. நடந்தது நடந்து போச்சு. அம்மாவையும் குழந்தையையும் பிரிக்கிறது பாவம்" என்று சொன்னாள்.

ஆனால் அவர்கள் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. மூன்று, நான்கு மாதங்கள் ஓடி மறைந்தன. பர்வதத்தின் மனதில் பயம் முளைத்தது.

' சின்ன விஷயத்தைப் பெருசு பண்ணிட்டேனோ? ' என்று குற்ற உணர்வு தோன்றியது.

" நீ வேணா ஒரு எட்டு போய்ப் பாத்துட்டு வரயா நாதா? " என்று மெதுவாக ஆரம்பித்தாள்.

" ஏம்மா, நாம தப்புப் பண்ணலைன்னா நாம எதுக்கு பயப்படணும்? அவளாத் திரும்பி வரட்டும். அங்கே போயி அவ எதுத்தாப்பல நின்னா, நான் தப்பு செஞ்சுட்டேன்னு ஒத்துக்கொண்ட மாதிரி ஆயிடும்" என்று தன் ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டினான். இன்னும் இரண்டு மாதங்கள் கழிந்தன. நாதன் ஒருவழியாக மனதிற்குள் சாதக, பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்த பின்னர் மாமனாருக்குக் கடிதம் எழுதிப் போட்டான். விலாசதாரர் இல்லை என்று கடிதம் திரும்பி வந்து விட்டது.

அன்று தான் நாதனுக்கும், பர்வதத்திற்கும் மனதிற்குள் பயம் அதிகரித்தது. ஈகோவைத் தலையில் தட்டி அடக்கி வைத்து விட்டு, நாதன் கும்பகோணத்துக்குக் கிளம்பிப் போனான். திரும்பி வந்து அவன் சொன்ன தகவல்கள் பர்வதத்தின் தலையில் இடியாக இறங்கின.

" என்னடா இது? என்னவோ சின்ன விஷயம்னு நினைச்சது இன்னைக்கு இவ்வளவு பெருசா விஸ்வரூபம் எடுத்துடுச்சே? அந்த மனுஷன் மண்டையைப் போட்டதைக் கூட கருணா நமக்கு சொல்லலையேடா? நாம என்ன விரோதிகளா என்ன? மகளோட வாழ்க்கை பாழாயிடுச்சுங்கற அதிர்ச்சி தான் அவரு உயிரைக் குடிச்சதோ? ஆனாலும் கருணாவுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம் கூடாதுடா" என்று புலம்பிக் கொண்டே இருந்தாள் பர்வதம்.

கருணா வீட்டில் இல்லாத சமயத்தில் தான் நாதனுக்கும் அவளுடைய அருமை புரிந்தது.
இவ்வளவு நாட்கள் இனிமையாகக் கழிந்த நாட்களை எண்ணி எண்ணி மனம் ஏங்கியது.

' கருணா இவ்வளவு நாட்கள் அமைதியாகத் தானே இருந்தாள்? அம்மா என்ன பேசினாலும் எதிர்ப் பேச்சு பேசியதே இல்லையே? பொறுமையாகத் தானே இருந்தாள்? அம்மா நிச்சயமாக ஏதோ தவறாகப் பேசியிருக்கணும்? நானும் அவங்க பேச்சைக் கேட்டு அவளை அடிச்சது மகாப் பெரிய தப்பு. அதுனால தான் அவளுக்குக் கோபம் வந்திருக்கணும்! இப்போ நினைச்சு என்ன பிரயோஜனம்? கருணாவை எப்படி நான் தேடிக் கண்டுபிடிப்பேன்? அக்கம் பக்கத்தில் இருக்கறவங்களுக்கும் யாருக்கும் ஒண்ணும் சரியாத் தெரியலை. கருணா நிச்சயமா என்னை வெறுத்து ஒதுக்கிட்டா. என்னை மன்னிக்கவே மாட்டா' என்று மனதிற்குள் குமைந்தான் நாதன்.

குழந்தைக்கு கருணா பிரிந்து போனபோது விவரம் தெரியவில்லை. ஆனால் வளர வளரக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள். அடுத்தடுத்து கேள்விகள் வருமோ என்று பயந்து பர்வதம், கருணா இறந்து விட்டதாக பேத்தியிடம் சொன்னாள். நாதனால் கையாலாகாதவனாக அதைப் பார்த்துக் கொண்டிருக்கத் தான் முடிந்தது. கருணாவின் இசை ஆர்வம் தான் தன்னுடைய வாழ்வை சிதைத்தது என்று நம்பிய நாதன், பவித்ராவின் வாழ்க்கையில் இசை பற்றிய பேச்சையே தவிர்த்தான்.

வருடங்கள் ஓடின. கருணாவைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அம்மாவும் தில்லி போய்விட்டார். அண்ணன் தான் விஷயம் தெரிந்ததும் நாதனைக் கோபித்துக் கொண்டார்.

" கடுகளவு விஷயத்தை உன்னோட முட்டாள்தனத்தால மலையளவு பெருசாக்கிட்டயே நாதா? அம்மா பேச்சைக் கேட்டுத் தப்பு மேல தப்பா செஞ்சிருக்கயே இப்படி? மனைவிக்கு நாமும் மரியாதை கொடுக்கணும். மனைவியை மதிச்சு நடத்தணும். நமக்காகத் தன்னோட பிறந்த வீட்டையே விட்டுட்டு வராங்களே பெண்கள்? அது எவ்வளவு பெரிய விஷயம்? ஒரு செடியை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுகிற மாதிரி தானே இதுவும்? புது இடம், புது சூழ்நிலை, புது உறவினர்னு எல்லாத்தையும் நமக்காக அவங்க ஏத்துக்கும் போது நாம் ஏன் சின்னச் சின்ன விஷயங்களிலாவது அவங்களுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது? சமமா நடத்ததலைன்னாலும் அடிமையா நினைக்கக் கூடாது. அவங்களுக்குன்னு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருக்காதா என்ன? அது கூடப் புரியலைன்னா இல்லறத்துக்கு அர்த்தமே இல்லை" என்று திட்டினார் அவனை.

இந்த விவாதத்தால் தான் அண்ணன், தம்பி இரண்டு பேருக்கும் மனஸ்தாபம் வந்ததே!
அதன் பிறகு நாதன் தில்லி போவதையே குறைத்துக் கொண்டான். அம்மாவின் இறுதிக் காலத்தில் மட்டும் போய் வந்தான்.

இப்போது சமீபகாலமாகத் தான் கருணா இசையுலகில் நல்ல பேர் வாங்கியதைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டான். இப்போது கூட அவன் முயற்சி செய்திருந்தால் கருணா எங்கேயிருக்கிறாள் என்று கண்டுபிடித்திருக்கலாம்.

பவித்ராவுக்கு உண்மைகள் தெரிந்தால் தன்னை வெறுத்து விடுவாளோ என்று பயந்தான். பவித்ரா, கருணாவுடன் போய் விடுவாளோ என்று நினைத்தான்.

அந்த பயத்தினால் தான் தேடும் முயற்சியைத் தவிர்த்தான் நாதன். குற்றவுணர்வு அவனை வாட்டியது. ஆனால் விதி அவனை அன்று பவித்ராவின் கல்லூரிக்கு மாதவன் மூலமாக அழைத்துச் சென்று கருணாவைப் பார்க்க வைத்துவிட்டது. கருணாவும், பவித்ராவும் ஒன்றாக மேடையில் தோன்றிய காட்சி கோடாரியாக அவனுடைய நெஞ்சைப் பிளந்து விட்டது.

காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்!

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: மீட்டாத வீணை 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
லூசு நாதன், அறிவு கெட்ட பர்வதம் இவளோட அர்த்தமில்லாத பிடிவாதத்தால பையன் வாழ்க்கையே போச்சு
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
லூசு நாதன், அறிவு கெட்ட பர்வதம் இவளோட அர்த்தமில்லாத பிடிவாதத்தால பையன் வாழ்க்கையே போச்சு
நன்றி
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டுனு சொன்னது நாதன் விஷயத்தில் சரியா போய்டுச்சு 🙄🙄🙄🙄🙄🙄
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள்
ஒரு தவறை மறைக்க பல தவறுகள்
ஒரு குற்றத்தை மறைக்க பல குற்றங்கள்
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள்
ஒரு தவறை மறைக்க பல தவறுகள்
ஒரு குற்றத்தை மறைக்க பல குற்றங்கள்
நன்றி
 
Top Bottom