• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மீட்டாத வீணை 8

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மீட்டாத வீணை

அத்தியாயம் 8


கருணா போன்ற புத்திசாலிக்கு மாமியாரை எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பாட்டு விஷயம் ஒன்றைத் தவிர, மீதி எதிலும் குற்றம், குறை சொல்ல முடியாததால் தனது மாமியாரை மன்னித்து அம்மாவாக முழுமையாக ஏற்றுக் கொண்டாள்.

அதுவும் கருணா கருத்தரித்த விஷயம் தெரிந்தவுடன் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். மகிழ்ச்சியில் கூத்தாடினாள் பர்வதம். நாதன், கருணாவின் திருமண வாழ்வின் இரண்டாவது வருடத்தில் பவித்ரா வந்து உதித்தாள். இல்லறத்தில் இன்னும் கொஞ்சம் இனிமை சேர்த்தாள்.

கருணாவின் அப்பா, கருணாவைப் பிரசவத்துக்கு அழைத்துப் போக வந்தபோது கூட அனுப்ப மறுத்து விட்டாள்.

" அங்கே யாரு பாத்துக்குவாங்க சம்பந்தி! பிரசவம்ங்கறது ஒவ்வொரு பொண்ணுக்கும் புனர்ஜன்மம் மாதிரி. வயத்து சுமையை அவ இறக்கி வைக்கற வரைக்கும் அவளை ஜாக்கிரதையாப் பாத்துக்கணும். குழந்தை பிறந்தப்புறம் குழந்தையையும் சேர்த்து இன்னும் கவனமாப் பாத்துக்கணும். நீங்க தனி ஆளா சமாளிக்க முடியாது. நாங்க பாத்துக்கறோம். இங்கே அக்கம்பக்கத்தில் இருக்கறவங்களும் எங்களுக்கு உதவிக்கு வருவாங்க. குழந்தை பொறந்து அவ உடம்பு தேறினதுக்கப்புறம் வேணா உங்க ஆசைக்குக் கொஞ்ச நாட்கள் அங்கே அனுப்பி வைக்கிறேன்" என்று ஆணித்தரமாகப் பேசினாள் பர்வதம்.

" இருந்தாலும் வழக்கம்னு ஒண்ணு இருக்கு இல்லையா சம்பந்தி? தலைப்பிரசவத்துக்குப் பொறந்த வீட்டுக்கு வரது தானே காலம் காலமாக இருக்கற வழக்கம்? " என்று கேட்டுப் பார்த்தார் பாவம் அவர்.

" அந்த வழக்கத்தை எல்லாம் நாம மாத்த வேண்டியது தான். காலத்துக்கேத்தபடி நம்மை நாமே மாத்திக்க வேண்டியது தான் சம்பந்தி. வளைகாப்புக்கு நல்ல நாள் பாத்து இங்கயே அதையும் செஞ்சுடுவோம். உங்க ஆசைப்படி பெண்ணுக்கு என்ன செய்யணுமோ அதை நீங்க செய்யுங்க. என்ன நான் சொல்லறது? " என்று மிகவும் இலாவகமாக வளைகாப்புக்கு சீர், செனத்தி செய்ய வேண்டும் என்ற விஷயத்தை மட்டும் அவர் காதில் போட்டு விட்டாள். எல்லாம் பர்வதத்தின் ஆசைப்படி தான் நடந்தது.

பவித்ரா பிறந்ததும் பேத்தியின் மேல் பாசத்தை அள்ளிக் கொட்டினாள் பர்வதம்.
ஆனால் தான் உறுதியளித்தபடி பவித்ராவிற்கு மூன்று மாதங்கள் ஆனதும் கருணாவைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். கருணாவின் அப்பாவும் பேத்தியின் முகம் பார்த்து மகிழ்ந்து போனார். உறவுக்காரப் பெண்ணை உதவிக்கு அழைத்து வைத்துக் கொண்டு பெண்ணையும் பேத்தியையும் நன்றாகவே பார்த்துக் கொண்டார்.

' இந்த மூணு மாசமும் பிறந்த வீட்டில் இருக்கற வரைக்கும் பாட்டை நல்லா பிராக்டிஸ் பண்ணி ஆசையைத் தீத்துக்க வேண்டியது தான். அப்பா கிட்ட இந்த விஷயத்தைப் பத்திப் பேசலாமா, வேண்டாமான்னு புரியலையே? வேண்டாம், சொல்லவேண்டாம். தெரிஞ்சா நிச்சயமாக வருத்தப்படுவார். அதுவும் அத்தை கிட்டப் போயி இவரு எதையாவது கேட்டு வச்சார்னா எனக்குத் தான் கஷ்டம்' என்று முடிவு செய்த கருணா, தந்தையிடம் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவில்லை. குழந்தைக்குத் தூளியாட்டிக் கொண்டே பாடல்களைத் தாலாட்டுகளாகவே பாடி மகிழ்ந்தாள்.

" என்னம்மா, பாட்டெல்லாம் பிராக்டிஸ் பண்ணறயா, இல்லையா? "

" இல்லைப்பா, அதுக்கெல்லாம் நேரம் கெடைக்கறதே இல்லைப்பா"

" அப்படியெல்லாம் சொல்லாதேம்மா. மனமிருந்தால் மார்க்கம் உண்டு. நம்ம இஷ்டப்படி யாருக்குமே நேரம் தானாக் கிடைக்காது. நாம தான் கஷ்டப்பட்டுத் தேடி எடுத்துக்கணும். நல்ல குரலை ஆண்டவன் உனக்குக் கொடுத்திருக்கான். என் மூலமா
சங்கீதம்ங்கற சொத்தையும் கொடுத்திருக்கான். அதைப் பொக்கிஷமாப் பாதுகாத்து வச்சுக்கோம்மா. நாளைக்கு உன் பொண்ணுக்கும் நீ கத்துத் தரணும். தலைமுறை தலைமுறையா இது தொடரணும். இது நான் என்னோட மகளா நீ எனக்கு செய்ய வேண்டிய கடமை" என்று பேசிய அவருக்குத் தன் நிலைமையை எப்படிப் புரிய வைப்பது என்று புரியாமல், சரியென்று அப்போதைக்குத் தலையாட்டி வைத்தாள் கருணா.

பிறந்த வீட்டில் இருந்து சென்னை திரும்பி விட்டாள் கருணா. மாமியார் வெளியே போயிருக்கும் சமயங்களில் எல்லாம் முடிந்தவரை பாட்டுப் பயிற்சியைத் தொடர்ந்து வந்தாள். சோதனையாக ஒரு வாய்ப்பு அவளைத் தேடி வந்தது.

கருணாவின் அப்பா அன்று அதிசயமாக அவளை ஃபோனில் அழைத்தார். அவர்கள் வீட்டில் லேன்ட் லைன் தொலைபேசி இருந்தது. மொபைல் ஃபோன் மார்க்கெட்டில் வந்திருந்தாலும் இன்றைய காலம் மாதிரி எல்லோரிடமும் அப்போது இல்லை.

" கருணா, நீ உடனே கிளம்பி இங்கே வரமுடியுமா அம்மா? எனக்கு உன் கிட்ட இருந்து ஓர் உதவி அவசரமாத் தேவையா இருக்கு" என்றார் அவர். இருமியபடி பேசினார்.

" என்னப்பா ஆச்சு? உடம்பு, கிடம்பு சரியில்லையா? குரலே நல்லா இல்லையே? "

" உடம்புக்குக் கொஞ்சம் சரியில்லை தான். ஜலதோஷம், இருமல், அதோட ரெண்டு நாட்களாக் காய்ச்சலாவும் இருக்கு. அது பரவாயில்லை. ரெண்டு நாளில சரியாயிடும். நான் இங்கே பக்கத்து ஊர்க் கோயிலில ஒரு கச்சேரிக்குத் தேதி கொடுத்திருந்தேன். வர ஞாயிற்றுக்கிழமை கச்சேரி. என்னால பாடமுடியும்னு தோணலைம்மா. அந்தக் கச்சேரியை கேன்ஸல் பண்ண முடியாது. அதுனால நீ கெளம்பி வந்தால் எனக்கு பதிலா நீ பாடலாமேன்னு நினைச்சேன்" என்றார்.

" இப்போ என்னால கெளம்பி வரமுடியுமான்னு எனக்குத் தெரியலையேப்பா. அவரும் ஆஃபீஸ் வேலையா வெளியூர் போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும். வேற யாரையாவது கேட்டுப் பாருங்கப்பா" என்றாள்.

பர்வதம், கருணா பேசுவதைக் கேட்டுக் கொண்டு அருகிலேயே தான் நின்று கொண்டிருந்தாள்.

" இல்லைம்மா. இங்கே எனக்குத் தெரிஞ்சவங்களை எல்லாம் ஏற்கனவே கேட்டுப் பாத்துட்டேன்மா. யாரும் அன்னைக்கு ஃப்ரீயா இல்லையாம். இதுவரை நான் வாக்குக் கொடுத்துட்டுப் பின்வாங்கினதேயில்லை. அது தான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு. நீ உடனே கிளம்பி வந்து, ரெண்டு நாட்கள் நம்ம பக்கவாத்தியக்காரங்களோட உக்காந்து ப்ராக்டீஸ் பண்ணினேன்னா மேடையில் ஏறிக் கச்சேரி செய்ய சரியா இருக்கும் " என்று அப்பா கெஞ்சினார்.

" சரிப்பா, முயற்சி பண்ணறேன்பா" என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தபோது பர்வதம், அவளை முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

" என்ன ஆச்சு கருணா? உங்கப்பாவா பேசினாரு? என்ன விஷயமாம்? ஃபோன் பண்ணற அளவு என்ன எமர்ஜென்சி வந்துடுச்சாம்? " என்று எகத்தாளமாகக் கேட்டாள். அவள் பேசிய விதத்தில் இருந்து பேசிய விஷயம் அரைகுறையாக அவள் காதில் விழுந்து விட்டது என்று கருணாவிற்குப் புரிந்தது.

" அத்தை, அப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லையாம். பக்கத்து ஊரில் ஏதோ கச்சேரிக்கு ஒத்துக்கிட்டிருக்காராம். இப்போ அவரால் பாட முடியாத நிலைமை. என்னை வந்து அப்பாவுக்கு பதிலாப் பாடச் சொல்லிக் கேக்கறாரு அத்தை" என்றாள். நிச்சயமாக பர்வதம் இப்போது பொங்கி எரிமலையாக வெடிக்கப் போகிறாள் என்ற பயம் கருணாவின் மனதில் இருந்தாலும் உண்மையை மறைக்காமல் சொல்லி விட்டாள்.

அதைக் கேட்டு பர்வதம் என்னவோ கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அமைதியாகவே பதில் சொன்னாள்.

" அதெப்படி கைக்குழந்தையை வச்சுக்கிட்டு மேடையில் ஏறிப் பாட முடியும்? உங்கப்பாவுக்குத் தான் மூளையில்லைன்னா உனக்குமா இல்லை? பச்சைப்புள்ளையை மடியில போட்டுக்கிட்டுப் பாடுவயா? " என்று கேலியாகக் கேட்டாள்.

" அது தான் நீங்க இருக்கீங்களே அத்தை? அவரும் ஊரில் இல்லை. நம்ம மூணு பேருமா உடனே கிளம்பிப் போகலாம். நான் கச்சேரிக்குப் போகும் போது நீங்க பாப்பாவைப் பாத்துக்குங்க. கச்சேரி முடிஞ்ச உடனே திரும்பிடலாம்"

" ஏதாவது யோசிச்சுத் தான் பேசறயா? நாதன் ஊரில் இருந்து வரட்டும். அவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறமாப் போயிக்கலாம்" என்றாள்.

" இல்லை அத்தை. அவர் வர இன்னும் ஒரு வாரம் இருக்கு. கச்சேரி இப்ப ரெண்டு நாள் கழிச்சு இருக்கு. அப்பா, கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்கற ஒரே காரணத்துக்காகத் தான் கடைசி முயற்சியா என்னைக் கேக்கறாரு. பாவம் அத்தை. கிடந்து தவிக்கறாரு. இந்த ஒருமுறை போயி அவருக்கு உதவி செய்யறேனே? " என்று கெஞ்சினாள்.

" அப்பா பாவம்னா, அப்பாவோடயே பிறந்த வீட்டில் இருந்திருக்க வேண்டியது தானே? எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இன்னொரு வீட்டுக்கு வரணும்? நான் என்ன உன்னோட வேலைக்காரியா? குழந்தையைத் தூக்கிட்டு உன் பின்னால் திரிஞ்சு ஆயா வேலை பாக்கச் சொல்லறயா? அப்பாவுக்கு ஃபோனைப் போட்டு, வர முடியாதுன்னு இப்ப உடனே சொல்லிடு. இது தான் என்னோட இறுதி முடிவு. இதைப் பத்தி இனிமே ஒரு வார்த்தை பேச வேணாம்" என்று சொன்னாள்.

" இல்லை அத்தை. இது தப்பு. என்னால ஏத்துக்க முடியலை. ஒரு மகளா, எங்க அப்பாவுக்குத் தேவையான சமயத்தில் உதவி செய்ய வேண்டிய கடமை எனக்கும் இருக்கு. நீங்க வரலைன்னாப் பரவாயில்லை. நான் குழந்தையோடக் கிளம்பிப் போயிட்டு வரேன்" என்று தீர்மானமாகச் சொன்னாள். பர்வதம் என்ன சொன்னாலும் எதிர்த்து நிற்க மனதில் உறுதி கொண்டு விட்டாள் கருணா. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் புரிந்து கொள்ளத் தவறினாள் பர்வதம்.

" அவ்வளவு திண்ணக்கமா உனக்கு? இந்த வீட்டில என் வார்த்தையை ஆம்பளைங்க கூட மீறினதில்லை! நீ நேத்து வந்தவ. ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரா? என் பேச்சை மீறிப் போனா, இந்த வீட்டில் திரும்பக் காலடி எடுத்து வைக்கக் கூடாது" என்று உறுமினாள் பர்வதம்.

ஒரு நிமிடம் நின்று யோசித்தாள் கருணா.
' என்ன வந்தாலும் பாத்துக்கலாம். இப்போ அப்பாவுக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம். ஊருக்குப் போயிட்டு வந்து அத்தையை சமாதானப்படுத்திக்கலாம். அத்தைக்குப் புரியலைன்னாலும் நாதன் நிச்சயம் புரிஞ்சுக்குவாரு. நமக்கு ஸப்போர்ட் பண்ணுவாரு' என்று முடிவு செய்தவள், உள்ளே சென்று தனக்கும் குழந்தைக்கும் தேவையானவற்றை அவசர அவசரமாக பேக் செய்து கொண்டாள்.

தோளில் குழந்தையை சாய்த்தபடி ஒரு டிராவல் பேக்குடன் வந்தவளை நடுக்கூடத்தில் நிறுத்தினாள் பர்வதம். குழந்தையை அவள் கையில் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டாள்.

" நீ எக்கேடு கெட்டோ போயிக்கோ. ஆனாக் குழந்தையை மட்டும் இங்கயே விட்டுட்டுப் போ" என்று சொல்ல, ' அதுவும் நல்லதுக்குத் தான். பவித்ராவை அங்கும் இங்கும் அலைக்கழிக்க வேண்டாம்' என்று நினைத்த கருணா, தான் மட்டும் கிளம்பி விட்டாள். பவித்ராவை விட்டு விட்டு கருணா தனியாக நிச்சயம் போக மாட்டாள் என்று நினைத்துத் தான் பர்வதம் குழந்தையை அவள் கையிலிருந்து பறித்தாள். அப்படியும் கருணா கிளம்பியதால் திகைத்துப் போய் நின்று விட்டாள். கோபம் தலைக்கேறியது. அவளுடைய ஈகோ அடிபட்டு விட்டது. கொம்பேறி மூக்கனாக நின்றவள், கருணாவுக்குப் பெரிய தண்டனை அளிக்க அந்த நிமிடமே முடிவு செய்து விட்டாள்.

நிலைமையின் தீவிரம் புரியாத கருணா, அப்பாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய,
கும்பகோணத்திற்குப் பயணித்தாள். மனதிற்குள் கலக்கமாக இருந்தாலும் அப்பாவை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை கருணாவிற்கு.

கும்பகோணத்தை அடைந்த கருணாவை சந்தோஷமாக வரவேற்றார் அவளுடைய அப்பா.

" ஏம்மா தனியா வந்திருக்கே? குழந்தை எங்கம்மா? உன்னைப் பாத்ததும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு. எப்படியோ பிராக்டிஸ் பண்ணி என் பேரைக் காப்பாத்திடும்மா. அதுக்குள்ள உடம்பு சரியாயிட்டா, நானும் நீயுமாச் சேந்து கூட மேடையில் பாடலாம்" என்று பெருமூச்செறிந்தார் அவர்.

" குழந்தையை அத்தை பாத்துக்கறேன்னு சொல்லிட்டாங்க. அவளுக்கு அலைச்சல் வேண்டாமேன்னும் தோணுச்சு. அவளைக் கூட்டிட்டு வந்தா எனக்கும் பாடறதில கவனம் இருக்காதுன்னு அத்தை சொன்னாங்க" என்று முழுப் பூசணியை சோற்றில் மறைத்துப் பேசிய கருணா, புகுந்த வீட்டின் பெயரைக் காப்பாற்றினாள்.

அவள் பேச்சை அப்படியே நம்பிய அப்பா அகமகிழ்ந்து போனார். " எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க உன்னோட மாமியார்! நான் இனிமேல் நிம்மதியாக் கண்ணை மூடுவேன். மாப்பிள்ளையும் சொக்கத் தங்கமா இருக்கார். மகளை ஒரு நல்ல இடத்தில் தான் கொடுத்திருக்கேன்" என்று பெருமையாகப் பேசிய அப்பாவைப் பரிதாபமாகப் பார்த்தாள் கருணா.

' உண்மையைச் சொன்னா மனசு வருத்தப்படுவாரோன்னு நானே கதை கட்டி விட்டேன். அப்பா பாவம் இவ்வளவு அப்பாவியா இருக்காரே? சொன்னதை எல்லாம் அப்படியே நம்பிட்டாரே? ஆனா உண்மையைச் சொன்னா, உடம்பு சரியில்லாத சமயத்தில் அவரால் அதைத் தாங்க முடியாது. அப்புறம் என்னைப் பாட வேண்டாம்னு சொல்லித் திருப்பி அனுப்பினாலும் அனுப்பிடுவாரு' என்று நினைத்த கருணா, நடந்த எதையும் அவரிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள்.

நிகழ்ச்சி நல்லபடியாக நடந்தது. கருணாவின் அப்பாவிற்கும் மகளைப் பார்த்ததுமே மனதில் நம்பிக்கை வந்துவிட்டது. உடம்பும் ஓரளவு சீரானது. இரண்டு பேருமாகச் சேர்ந்தே பாடினார்கள். நிகழ்ச்சி பயங்கர ஹிட். உள்ளூர் செய்தித்தாளிலும் அப்பாவும், மகளும் சேர்ந்து பாடும் ஃபோட்டோவைப் பிரசுரித்திருந்தார்கள்.

அடுத்த நாள் காலையிலேயே கருணாவை டாக்ஸி வைத்து அனுப்பி விட்டார் கருணாவுடைய அப்பா. " மாப்பிள்ளை கிட்டயும் உங்க மாமியார் கிட்டயும் என்னோட தேங்க்ஸைச் சொல்லிடும்மா. சமயத்தில் உன்னை அனுப்பிக் கொடுத்து எனக்குப் பெரிய உதவி செஞ்சிருக்காங்க. அதுவும் உன்னோட மாமியாருக்கு ரொம்ப நல்ல மனசு" என்று மனம் நெகிழ்ந்து பேசினார் அந்த முதியவர்.

ஆனால் அந்த நல்ல மனசோ, கருணாவின் மீது விஷம் கக்கத் தயாராக நின்று காத்துக் கொண்டிருந்த விஷயம், பாவம் அந்த நல்லவருக்குத் தெரியவில்லை!

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்!
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ!
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ!
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்!


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: மீட்டாத வீணை 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
அச்சோ நாதன் வேற அவன் அம்மா என்ன சொன்னாலும் சரின்னு ஏத்துக்குவானே 😳😳😳😳😳
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
வாதத்துக்கு மருந்து உண்டு,
பிடிவாதத்துக்கு மருந்தில்லை
 
Top Bottom