• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மீட்டாத வீணை 7

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மீட்டாத வீணை

அத்தியாயம் 7

நாதன் மருந்துகளின் தாக்கத்தால் நன்றாகத் தூங்கி எழுந்தார். அவர் கண் விழித்த சமயத்தில் பவித்ரா அவரருகினில் தான் இருந்தாள்.

" உன் கிட்ட உண்மைகளை எல்லாம் எடுத்துச் சொன்னதுக்கப்புறம் தான் மனம் லேசாகி இருக்கு. என்ன நடந்திருக்கும்னு குழப்பமா இருக்கா? சீக்கிரமே எல்லாம் தெரிஞ்சுக்குவே? " என்றார் நாதன்.

வீட்டுக்கு வந்ததும் பெரியப்பாவிடம் பேசினாள். அப்பாவின் உடல்நிலை பற்றிய தகவலைச் சொன்னாள்.

" இப்போ எப்படியிருக்கான்? ஜாக்கிரதையாப் பாத்துக்கோம்மா. எனக்குக் கீழே விழுந்து அடிபட்டதில் காலில் அடிபட்டிருக்கு. மாவுக்கட்டு போட்டுருக்காங்க. என்னால டிராவல் பண்ண முடியாது. கால் சரியானதும் நேரில் வந்து பாக்கறேன். பணம் ஏதாவது தேவைன்னா சொல்லு. அனுப்பறேன்" என்றார்.

" அதெல்லாம் தேவையிருக்காது பெரியப்பா. நான் மேனேஜ் பண்ணிடுவேன். நீங்களும் உடம்பைப் பாத்துக்கோங்க. அப்புறம் பெரியப்பா, ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்டப் பேசணும் " என்றவளின் குரலில் தயக்கம் தெரிந்தது.

" அது வந்து பெரியப்பா, என்னோட அம்மாவைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? "

சிறிது நேரம் மௌனம் சாதித்தார் பெரியப்பா. அப்புறம் தான் பேசினார்.

" எதுக்கும்மா இந்தக் கேள்வியை இப்போ திடீர்னு கேக்கறே? "

" அது வந்து எனக்கே அம்மா உயிரோட இருக்கற விஷயம் இன்னைக்குத் தான் தெரியவந்தது. அம்மாவும், அப்பாவும் எதுனால பிரிஞ்சாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? "

" முழு விவரமும் தெரியாது. ஆனா நாதன் நிறைய எங்கம்மா பேச்சைக் கேட்டு ஆடினதால தான் பிரச்சினை. எனக்கு கருணா மேல எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அட, பாட ஆசைப்பட்டா. அது ஒரு பெரிய தப்பா? அம்மா ஊதின மகுடிக்கு நாதன் ஆடிட்டான். இந்த விஷயத்தினால் தான் எனக்கும் அவனுக்கும் மனஸ்தாபம் வந்தது. டைவர்ஸ் கூட ஆகலை ரெண்டு பேருக்கும். திடீர்னு கருணா வீட்டை விட்டுப் போயிட்டான்னு சொன்னாங்க. பாவம், குழந்தையா இருந்த உன்னைக் கூட அவ கிட்டேயிருந்து வலுக்கட்டாயமாப் பிரிச்சுட்டாங்க. சரிம்மா, இப்போவாவது உன் கிட்ட உண்மையைச் சொன்னானே? இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது. எனக்குப் பிடிக்காத விஷயத்தைப் பத்திப் பேசவும் அதிக விருப்பமில்லை. உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீ இப்பக் கூட உங்கம்மா கூடச் சேரலாம். குட் லக்" என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். உணர்ச்சி பொங்கி வந்ததால் அவராலும் அதிகம் பேச முடியவில்லை.

என்னதான் நடந்திருக்கும் நாதன், கருணாவின் இல்லற வாழ்வில்? நாமே கடந்த காலத்துக்குப் பயணித்து எட்டிப் பார்த்து விட்டு வரலாம்.

பல வருடங்களுக்கு முன்னால் ஒரு திங்கட்கிழமை காலை எட்டு மணி இருக்கலாம். நாதன் ஆஃபிஸிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

" அம்மா, போயிட்டு வரேம்மா. சாயந்திரம் வரும்போது உங்களுக்கு நாராயணி தைலம் வாங்கிட்டு வரேன். வேற ஏதாவது வேணுமா?" அக்கறையோடு கேட்டபடி கிளம்பினான். எப்போதும் அம்மாவின் மீது தனி அக்கறையும் கரிசனமும் நாதனுக்கு உண்டு.

நாதன் படித்து முடித்து தமிழக அரசு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். நாதனின் அப்பா அப்போது உயிரோடு இல்லை. நாதன் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார்.

சென்னையில் வேளச்சேரியில் இருந்த அவர்களது வீட்டில் நாதனும், அவனுடைய அம்மா பர்வதமும் மட்டுமே வசித்து வந்தார்கள். நாதனின் அண்ணா திருமணமாகி தில்லியில் ஸென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலையில் இருந்தார். நாதன், அவருடைய அண்ணன் இரண்டு குழந்தைகள் தான் அவர்களுடைய பெற்றோருக்கு.

அண்ணனின் மனைவி தில்லியிலேயே பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். திருமணம் ஆனதில் இருந்து அவர்கள் தனிக் குடித்தனம் தான்.

" வேற ஒண்ணும் வேண்டான்டா. அப்புறம் அந்தக் கல்யாணத் தரகர் வந்தா என்ன பதில் சொல்லறது? கும்பகோணத்தில் இருந்து வந்ததே அந்த ஜாதகம் நல்லாப் பொருந்திருக்கு. பொண்ணு ஓரளவு படிச்சிருக்கா. ஃபோட்டோல பாக்க நல்லாத் தான் இருக்கா. இந்த வாரக் கடைசியில் ஒரு எட்டு போயிப் பாத்துட்டு வந்துரலாமா? " என்று கேட்டாள்.

" எல்லாம் நீங்களே பாத்து முடிவு பண்ணுங்க. என்னைக்கு நீங்க சொன்னதைத் தட்டி இருக்கேன் நான்? அப்புறம் அண்ணாவுக்கும் கடுதாசி போட்டு ஒரு வார்த்தை கேட்டுக்கங்க எதுக்கும்" என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான்.

அது தான் நாதனின் குணாதிசயம். அம்மா எது சொன்னாலும் நல்லதுக்குத் தான் என்று நம்பும் அம்மா பிள்ளை அவன். அமைதியாக இருப்பான். எதுவும் வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டான். அதனாலேயே அம்மாவுக்கும் அவன் மேல் தனிப் பிரியம் தான்.

' அம்மாவை நல்லா சந்தோஷமா வச்சுக்கணும். அண்ணா எத்தனை தடவை வருந்தி வருந்திக் கூப்பிட்டாலும் அம்மா போறதில்லை. நாதன் தனியா இருப்பான், வெளியே தினம் தினம் சாப்பிட்டா, அவன் உடம்பு என்னத்துக்கு ஆகும் என்று சொல்லியே அண்ணாவிடம் தட்டிக் கழிச்சிருக்காங்க அம்மா. எவ்வளவு பதிலுக்கு செஞ்சாலும் அம்மா நமக்காகவே உழைப்பதற்கு ஈடு செய்ய முடியாது' என்று தான் நாதன் நினைப்பான்.

அந்த வாரக் கடைசியில் அம்மாவும், மகனும் கிளம்பி கும்பகோணத்துக்குப் போய் , கருணாவைப் பார்த்தார்கள். பார்த்ததும் பர்வதத்துக்குப் பிடித்துவிட்டது. கருணாவின்
அப்பா ஒரு சங்கீத வித்துவான்.

" ஊருக்குப் போய்க் கடுதாசி போடறோம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் என்ற கெத்து காண்பிக்க வேண்டாமா?

" பொண்ணு நல்லா இருக்கா? காலேஜ் படிப்பும் படிச்சிருக்கா. அது நமக்குப் போதும். பாட்டு நல்லாப் பாடறா. நல்ல குரல். பாடிக் காண்பிச்சா. ஆனா பாட்டு, கீட்டு எல்லாம் நம்ம குடும்பத்துக்கு அவசியம் இல்லை. நீ என்ன நினைக்கிறே நாதா? " மகனிடம் நேரடியாகக் கேட்டாள்.

நாதனுக்கு என்னவோ கருணாவைப் பார்த்த உடனே பிடித்து விட்டது. எளிமையான அவளுடைய அழகு அவன் மனதை அசைத்து விட்டது. கற்பனையில் அவளுடன் வாழவே ஆரம்பித்து விட்டான். ஆனால் அம்மாவின் எதிரே தன் விருப்பத்தை வெளிப்படையாக சொல்வதற்குக் கூச்சமாக இருந்தது அவனுக்கு.

"உங்க இஷ்டம்மா. உங்களுக்கும் பிடிச்சிருந்தா எனக்கு ஓகே தான்" என்று பூடகமாகத் தன் மனதிலிருந்ததைச் சொல்லி விட்டான்.

" பொண்ணு என்னவோ தொடச்சு விட்ட மாதிரி இருக்கா. குடும்பப்பாங்கான அமைதியான பொண்ணாத் தெரியறா. ஆனா என்ன அம்மா இல்லாத பொண்ணு! ஆத்திரம், அவசரத்துக்கு உதவிக்கு வரலாம்னு சொல்ல அவங்க வீட்டில பொம்பளைங்க யாரும் இல்லை. கூடப் பொறந்தவங்களும் இல்லை. ஒத்த வாரிசு. உறவுன்னு யாரும் அவங்க பக்கம் அதிகம் இல்லை" என்று அவர்கள் பக்கம் இருந்த எதிர்மறையான விஷயங்களை முதலில் அடுக்கினாள்.

நெகட்டிவான இந்த சிந்தனைகள் பர்வதத்தின் மனம் சம்பந்தப்பட்டவை தான். உண்மையில் இவையெல்லாம் பெரிய விஷயங்களே இல்லை என்று அவளுக்கே தெரிந்திருந்தது.

" ஆனா இன்னொரு பக்கம் யோசிச்சுப் பாத்தா இதெல்லாம் நல்லதுக்குத் தான் அப்படின்னும் தோணுது. அவங்க பக்கம் விசேஷம், அது இதுன்னு அடிக்கடி நமக்குச் செலவும் வராது. அலைச்சலும் இருக்காது. அவங்க அம்மா இல்லைன்னா என்ன? அது தான் நான் இருக்கேனே? நானே என் பொண்ணாப் பாத்துக்குவேன்" என்று பர்வதம் சொன்னபோது நாதனுக்குப்
பெருமிதமாக இருந்தது.

' மேம்போக்கா வாய்க்கு வந்தபடி ஏதாவது பேசினாலும் அம்மாவுக்கு நிஜமாவே நல்ல மனசு தான்' என்று நினைத்தான்.

" அவங்கப்பா பெரிய சங்கீத வித்வான். பேரும் புகழும் சம்பாதிச்ச அளவுக்குப் பணம் சேத்து வச்ச மாதிரி தெரியலை. இருந்தாலும் பரம்பரைச் சொத்துன்னு கொஞ்சம்
நிலபுலன், வீடுன்னு எல்லாம் இருக்கு. அவங்கம்மாவோட நகைகளும் இருக்காம். அதுனால சீர், செனத்தியெல்லாம் எந்தக் குறையும் வைக்காமல் செஞ்சுருவாரு. ஒரே பொண்ணு தானே? சொத்தெல்லாம் நாளைக்கு அவளுக்குத் தானே வரும்? " என்று சொன்னபோது பர்வதம், ஒரு சராசரி மாமியாராகத் தெரிந்தாள் நாதனின் கண்களுக்கு. அம்மாவை எதிர்த்து ஒன்றும் சொல்லாமல் வாய் மூடி மௌனியாக நின்றான்.

பல்வேறு கோணங்களில் இந்த சம்பந்தத்தின் சாதகமான, பாதகமான விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்த்த பின்னர் திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டி விட்டாள். நாதனின் அகமும், முகமும் மலர்ந்தன.

திருமணம் விமரிசையாக நடந்து முடிந்தது. அண்ணன் குடும்பத்தினர் வந்து கலந்து கொண்டார்கள். கருணா வலது காலை எடுத்து வைத்து அவர்களுடைய வீட்டில் நுழைந்தாள்.

வந்ததுமே அந்த வீட்டில் பர்வதத்தின் ஆட்சி தான் என்பதை புத்திசாலியான கருணா புரிந்து கொண்டு விட்டாள்.

அம்மாவின் அன்புக்கு ஏங்கிக் கொண்டிருந்த கருணாவின் கண்களுக்கு பர்வதம் அம்மாவாகத் தெரிந்ததால் அவளுக்கு ஒன்றும் அது பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை.

தன்னிடம் மரியாதையாகவும், அதே சமயத்தில் உண்மையான பிரியத்துடன் நடந்து கொண்ட கருணாவை, பர்வதத்துக்கும் பிடித்திருந்தது.

" நாதா, கருணாவைக் கூட்டிட்டு எங்கேயாவது வெளியே போயிட்டு வாடா. நாள் முழுக்க வீட்டில் உக்காந்து அவளுக்கும் போரடிக்கப் போகுது" என்று, தானே முன்வந்து அவர்களை, சினிமா, பார்க் , பிக்னிக் என்று அனுப்பி வைத்தாள். பர்வதத்தையும் அவர்கள் அழைத்தால் உடன் வரச்சொல்லி அழைத்தால் நாசூக்காக மறுத்து ஒதுங்கி விடுவாள்.

நாதனின் அன்பும், பண்பும், பழகும் விதமும் கருணாவிற்கு மிகவும் பிடித்திருந்தன.
" பெத்த அம்மா கிட்ட இவ்வளவு பிரியமாப் பாத்துக்கற பையன், நாளைக்குத் தன் மனைவியையும், குடும்பத்தையும் நல்லாப் பாத்துக்குவான்" என்று தான் கருணாவின் அப்பாவும் அவளிடம் சொன்னார். அப்பாவைப் பற்றிய கவலை தான் அவள் மனதில் ஓடியது.

' பாவம் அப்பா, கல்யாணம் ஆகி நானும் வந்ததிலிருந்து வீட்டில் தனியா என்ன பண்ணறாரோ? பக்கத்திலயும் இல்லை. சட்டுன்னு நினைச்சாக் கெளம்பிப் போக முடியாது' என்று மனதுக்குள் வருந்தினாள்.

அவளுடைய வருத்தம் புரிந்ததாலோ என்னவோ, பர்வதமும் மகனையும், மருமகளையும் மறு வீடு, ஆடி, தீபாவளி என்று அடிக்கடி அனுப்பியும் வைத்தாள். எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தன. ஒரே ஒரு விஷயம் மட்டும் கருணாவிற்கு நெருடலாக இருந்தது.

கருணா சாயந்திர வேளையில் தம்பூராவை எடுத்து வைத்துக் கொண்டு பாட உட்கார்ந்தால் மட்டும் பர்வதத்திற்குப் பிடிக்கவில்லை.

" இன்னைக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு. நாளைக்கு பிராக்டிஸ் பண்ணிக்கோ" என்பாள்.

" இன்னைக்கு ராத்திரி பால் கொழுக்கட்டை செய்யலாம்னு நினைச்சேன். கிச்சனில் நிறைய வேலையிருக்கும். வா, பாக்கலாம் " என்று கூட்டிக் கொண்டு போவாள்.

" கிருஷ்ணன் கோயிலில் நெய் தீபம் போடறதா வேண்டிக்கிட்டேன். போய் இந்த நெய்யையும், திரியையும் கொடுத்துட்டு அர்ச்சனை பண்ணிட்டு வா. அவசரமாத் திரும்ப வேணாம். நிதானமாப் பூஜையெல்லாம் பாத்துட்டு வா" என்று அனுப்பி விடுவாள்.

கருணாவிற்கு அப்போது, தான் பாடுவது மட்டும் மாமியாருக்குப் பிடிக்கவில்லை என்று நன்றாகப் புரிந்து விட்டது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாகப் பாடுவதை நிறுத்தி விட்டாள். பர்வதத்திற்கும் நிம்மதியாக இருந்தது.

இதற்குப் பின்னால் ஒரு மனோதத்துவ ரீதியான காரணம் இருந்தது. நாதனின் அப்பாவிற்கு, பர்வதத்தைப் பேசுவதற்கு முன்னால் அவருடைய முறைப்பெண்ணைப் பேசி நிச்சயம் கூட செய்து வைத்திருந்தார்களாம். அந்தப் பெண் நன்றாகப் பாடுவாள் என்றும் இனிமையான குரல் வளம் என்றும் புகுந்த வீட்டினர் பேசிக் கொண்டிருந்தது பர்வதத்தின் செவிகளை எட்டியிருந்தது. ஏதோ அற்ப காரணத்தால் அந்தத் திருமணம் நின்று போக, பர்வதத்துடன் அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைத்தார்கள்.

திருமணம் நடந்து முடிந்த பிறகு, ஒருமுறை நாதனின் அப்பா, பர்வதத்திடம், " பாடத் தெரியுமா? " என்று யதார்த்தமாகக் கேட்டது அவளை மிகவும் பாதித்து விட்டது. அவர் மனதில் அந்த முறைப்பெண் தான் இன்னமும் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள். பர்வதத்திற்குச் சுட்டுப் போட்டாலும் பாட வராது. அதற்கேற்ற குரலும் இல்லை. கற்றுக் கொள்ளும் ஆர்வமும் கிடையாது. இப்போது மனதில் முளைத்த சந்தேகம் அவளை இசை என்றாலே வெறுக்க வைத்தது.

கருணாவைப் பெண் பார்த்து விட்டு வந்தபோது கூட இந்த ஒரு விஷயம் தான் அவளை மிகவும் தொந்தரவு செய்தது. ஆனால் கருணாவை ஏனோ பார்த்ததுமே பர்வதத்திற்குப் பிடித்து விட்டது. தன் மகன் மனதையும் கருணா கவர்ந்து விட்டாள் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அதனால் அந்த சமயத்தில் மனதை சமாதானம் செய்து கொண்டு கருணாவை மருமகளாக ஏற்றுக் கொண்டாள். ஆனால் அவளைப் பாட மட்டும் விடக் கூடாது என்று அந்த நிமிடமே மனதில் வைராக்கியம் எடுத்துக் கொண்டாள்.


சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ!
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானம் கருமை கொல்லோ!
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடீ!


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: மீட்டாத வீணை 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
ஏதோ ஒரு சப்பை காரணத்தால் இவங்க வாழ்க்கைய பாழாக்கிட்டு அந்தம்மா போய் சேர்ந்துடுத்து
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
112
ஒருத்தருக்கு ஒரு விஷயம் பிடிக்கலைனா அவங்க கூட இருக்குறவங்களும் அதில் சம்பந்த படக்கூடாதுனு நினைக்குராங்க, இப்படியும் கொஞ்ச பேர் இருக்காங்கதான்
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஒருத்தருக்கு ஒரு விஷயம் பிடிக்கலைனா அவங்க கூட இருக்குறவங்களும் அதில் சம்பந்த படக்கூடாதுனு நினைக்குராங்க, இப்படியும் கொஞ்ச பேர் இருக்காங்கதான்
நன்றி
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏதோ ஒரு சப்பை காரணத்தால் இவங்க வாழ்க்கைய பாழாக்கிட்டு அந்தம்மா போய் சேர்ந்துடுத்து
நன்றி
 
Top Bottom