• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மீட்டாத வீணை 5

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மீட்டாத வீணை

அத்தியாயம் 5

கலை விழாவில் இசைக்குழு பங்கேற்கும் நாள் நெருங்கி வந்தது. பவித்ராவின் மனதில் ஏதோ சொல்லத் தெரியாத கலக்கம் குடி கொண்டது. ஒரு பக்கம் அப்பாவிடம் உண்மையை மறைக்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சி; இன்னொரு பக்கம் தன் இசைத் திறமையை வெளியுலகிற்குக் காட்டும் ஆர்வம்; இரண்டு கட்சிகளாக மனதில் தினமும் பட்டிமன்றம் நடத்தி அவளை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்தன.
பட்டிமன்றத்தில் ஜெயித்ததென்னவோ அவளுக்கு இசையில் புதிதாக முளைத்திருந்த ஆர்வம் தான்.

இந்த முறை கலை விழாவில் கடைசி நாள் நிகழ்ச்சியில் தான் இவர்கள் வாசிக்க இருந்தார்கள். அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மும்பையில் இருந்து பிரபல பாடகி வரப்போவதாகத் தெரிந்ததில் இருந்து மாணவர்கள் எல்லோரும் குதித்துக் கொண்டிருந்தார்கள்.

கர்னாடக இசையில் தேர்ச்சி பெற்றிருந்த பாடகி கருணா, திரைப்படங்களில் ஒரு சில பாடல்கள் பாடியிருக்கிறார். அதைத் தவிர அவருடைய பக்திப் பாடல்கள், தேவாரம், திருவாசகம், நாட்டுப் பாடல்கள் எல்லாமே அமர்க்களமாக வரவேற்பு பெற்றிருந்தன.

அதுவும் சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிய
தில்லானாவும், முருகனைக் குழந்தையாக பாவித்துப் பாடிய பாட்டும் மக்கள் மனதை வெகுவாகக் கவர்ந்திருந்தன. கர்நாடக இசை தவிர ஹிந்துஸ்தானி இசையும் கற்றுத் தேர்ந்தவர். அவ்வளவு பிரபலப் பாடகியான கருணா அன்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளப் போவதாகக் கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது.

" நான் சாதாரணமாக எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. இருந்தாலும் சென்னை என்பதால் தான் ஒத்துக்கறேன். நான் வளர்ந்த ஊர் என்ற காரணத்தால், எனக்கு சென்னையின் மேல் ஒரு தனிப் பிடிப்பு, ஸாஃப்ட் கார்னர் எப்பவும் உண்டு. சென்னை வரலாம் என்கிற நப்பாசையில் தான் வரப் போறேன். அது மட்டுமில்லாமல் இன்றைய தலைமுறையான மாணவர்களின் உள்ளங்களில் இசை எவ்வளவு தூரம் கோலோச்சுதுன்னு தெரிஞ்சுக்கற வாய்ப்பு எனக்குக் கிடைக்கப் போகுது. ஆனால் ஒரு கண்டிஷன், ஏற்பாடெல்லாம் எளிமையாகவே இருக்கட்டும். எந்தவிதமான படாடோபமும் எனக்குப் பிடிக்காது" என்று கருணா சொல்லியிருந்தார்.

அவருடைய புகைப்படங்கள் கூட அதிகம் வெளிவந்ததில்லை. இப்போது அவருடைய கோயம்புத்தூர் நிகழ்ச்சி யூ டியூபில் வெளிவந்ததில் இருந்து தான் அவரை மக்கள் அடையாளம் கண்டு பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விளம்பரத்தை வெறுக்கும் பிரபலம் அவர் என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.

பவித்ராவும், அதிதியும் கூட அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அதிதி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறாள்.

" என்ன ஒரு குரல்! அப்படியே நம்ம காதில் அவங்களோட பாட்டு விழும்போது நேரே உள்ளத்துக்குள்ள இறங்கிடுது. ஜில்லுன்னு நமக்குள்ள போயி அப்படியே சிலிர்க்க வைக்குது இல்லையா? இந்த மாதிரி குரல் லட்சத்தில் ஒருத்தருக்குத் தான் அமையுது. நம்ம இசை நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜானகி அம்மா, கைலாஷ் கேர், அரிஜீத், சித் ஸ்ரீ ராம், அப்புறம் ஸ்ரேயா கோஷல் இவங்கள்ளாம் ஸ்பெஷலா லட்டு மாதிரி வரம் வாங்கிட்டு வந்து பிறந்திருக்காங்க இல்லையா! எங்க பாட்டி ஒரு விஷயம் அடிக்கடி சொல்லுவாங்க. என்ன தெரியுமா? போன ஜன்மத்தில ஸரஸ்வதிக்குத் தேனால் அபிஷேகம் செஞ்சிருந்தா இந்தப் பிறவியில் இது மாதிரி குரல் அமையும்னு சொல்லிருக்காங்க.
இவங்க தேன் மட்டுமா, இல்லை அதை விட இனிப்பா ஏதாவது இருந்து அதால அபிஷேகம் பண்ணிருப்பாங்களோ? குலோப்ஜாமூன், ரசகுல்லா கூட சரஸ்வதி தலையில் அண்டா அண்டாவாக் கொட்டியிருப்பாங்களோ? " என்று ஒரேயடியாக உளறிக் கொட்டினாள் அதிதி.

" ஓவரா எக்சைட் ஆகாதே அதிதி! உடம்புக்கு ஆகாது. நல்ல சிங்கராவே இருக்கலாம் அவங்க! அதுக்காக நீ இவ்வளவு ஓவரா அவங்களைத் தலையில் தூக்கி வச்சுட்டு ஆடறது உனக்கே எக்ஸ்ட்ரீமாத் தெரியலை? "

" போடி போ, இப்போது தான் மியூசிக்கை ரசிக்க ஆரம்பிச்சுருக்கே? உனக்கென்ன தெரியும்? நான்லாம் பலாப்பழமா இருந்தாக் கூட அப்படியே விழுங்கிட்டுக் கொட்டையும் போட்டவ, உனக்குத் தெரியாத விஷயத்தில் வாயைத் திறக்காதே. இரு, இந்தப் பாட்டைக் கேளு" என்று கருணா பாடிய ஒரு ஹிந்திப் பாடலைப் போட்டு அவளுடைய காதில் இயர் ஃபோனையும் மாட்டி விட்டாள்.

சோக ரசம் பிழியும் டியூன், கருணாவின் குரலில் உண்மையிலேயே உள்ளத்தை உருக்கியது. கண்களை மூடியபடி அந்தப் பாடலை உள்வாங்கி ரசித்துக் கொண்டிருந்த பவித்ராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சட்டென்று இயர் ஃபோனைப் பிடுங்கி அதிதியின் கைகளில் திணித்தாள்.

" ஓகே , இந்தத் தடவையும் நான் உன் கிட்டத் தோத்துட்டேன். சரண்டர்! நிஜமாவே உருக்கமாப் பாடியிருக்காங்க. வெண்ணெயில் கத்தி இறங்கற மாதிரி சட்டுன்னு மனசுக்குள்ள பாட்டு இறங்கி என்னவோ செய்யுது. இவங்க எதிரில நின்னு கீபோர்ட் வாசிக்கப் போறது பெரிய விஷயம் தான்" என்றாள். உணர்ச்சிப் பெருக்கால் உடல் நடுங்கியது பவித்ராவிற்கு.

" முதல் தடவை நீ என் கிட்ட தோத்தபோது உனக்கு மியூசிக் கத்துக்கற சான்ஸ் கிடைச்சது. கூடவே எக்ஸ்ட்ரா பெனிஃபிட்டா அநிகேத்தின் நட்பும் கிடைச்சது. இந்தத் தடவை நீ தோத்ததுக்கு உனக்கு என்னல்லாம் பரிசு கிடைக்கப்போகுதோ? ஸீ மை டியர் ஃப்ரண்ட்! அதிதி அம்மனின் அருளால் உங்கள் மனம் குளிரும் சம்பவம் சீக்கிரம் நடைபெறும்! " என்று கையை உயர்த்தி, பவித்ராவிற்கு ஆசிகளை வழங்கினாள்.

" அருள் கிடைக்கப் போகுதா இல்லை அடி, உதை கிடைக்கப் போகுதான்னு அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்! அடி, உதையில் உனக்கும் சம பங்கு உண்டு சகி" என்று சொல்லிக் கண்ணடித்தாள் பவித்ரா.

" வரட்டும், வரட்டும், யார் வந்தாலும் பின்னிப் பெடலெடுக்க மாட்டேனா என்ன? "

" அப்படியா, மாதவன் அங்கிள் உன் பின்னால நின்னு நீ பேசறதை எல்லாம் கேட்டுட்டு நிக்கறாரு. வாங்க அங்கிள், எப்படிப் பேசறா பாருங்க அங்கிள்? நல்லா வந்து திட்டுங்க , பாக்கலாம் " என்று பவித்ரா சொல்லத் துள்ளிக் குதித்துத் திரும்பிப் பார்த்தாள் அதிதி. அடக்க முடியாத சிரிப்பை அடக்கியபடி ஓடிய பவித்ராவைத் துரத்திக் கொண்டு ஓடினாள் அதிதி. அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தான் அநிகேத்.

முக்கியமான அந்த நாளும் வந்து விட்டது. பவித்ராவும், அதிதியும் சீக்கிரமே கிளம்பிப் போய்விட்டார்கள். இன்று வரை பவித்ரா, தான் கீபோர்டு வாசிக்கக் கற்றுக் கொண்டதை, அப்பாவிடம் தெரிவிக்காமல் வெற்றிகரமாக சமாளித்து விட்டாள். கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாட்கள் தாங்கும்? சீக்கிரம் உண்மை தனது கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்து தானே ஆகும்? அப்படி வந்தால் அதிகம் பாதிப்பு ஏற்படாமல் இறைவன் தான் அருள் புரிய வேண்டும்!

பவித்ரா மனதில் டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடியது. உடலில் ஏதோ பதற்றம் இருந்தது. அதிதியும், அநிகேத்தும் அவளை ஒரு நிலைப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதிதி தான் அன்று அவர்களுடைய நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் மற்றும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறாள். அவளும் தன்னுடைய ஸ்கிரிப்டைத் திரும்பத் திரும்ப சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மேடையில் இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரமும் வந்தது. அதிதி மேடைக்கு வந்து மைக்கை நன்றாகவே கையாண்டாள். அநிகேத் மேடையில் வந்து நின்றபோது மாணவர்கள் பயங்கரமாகக் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். பவித்ரா மேடைக்கு வந்தபோது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த கருணா மேடத்தைப் பார்த்தாள். இருவருடைய கண்களும் சந்தித்தபோது மின்னல் வெட்டியது. பவித்ராவின் உடல் என்னவோ நடுங்கியது. ஏதோ சொல்லத் தெரியாத உணர்ச்சி மனதில் பொங்கியது.

' இவங்களை எங்கேயோ பாத்த மாதிரி தோணுது? எங்கே பாத்தேன்? ஏதாவது உறவினர் வீட்டுக் கல்யாணத்திலா? இல்லை ஏதாவது வெளியூர் டிரிப் போன சமயத்திலா?' என்று மனதில் குழப்பமாக இருந்தது. ஆனால் சரியாக ஞாபகம் வரவில்லை. புன்னகை ததும்பும் முகம், பெயருக்கேற்ப கருணை சிந்தும் கண்கள், எளிமையான தோற்றம், பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் தோற்றம், இது தான் கருணா மேடத்தைப் பற்றி அவளுடைய மனதில் ஓடிய சிந்தனை.

இன்னொரு பக்கம் விதி தனது கயிறுகளை அங்குமிங்கும் இழுத்துத் தனது பொம்மலாட்டத்தை வெற்றிகரமாகத் துவங்கியிருந்தது.

சிறிது நேரத்திற்கு முன்னால் ஆரம்பித்தது முதல் கயிற்றின் அசைவு.

அதிதி, க்ரீன் ரூமில் தயாராகிக் கொண்டிருந்தபோது தான் அவளுடைய குர்த்தியில் இருந்த கறையை கவனித்தாள்.

" அச்சச்சோ, இதை எப்படி நான் கவனிக்காமல் விட்டேன். வெள்ளையில் மல்டி கலர் எம்பிராய்டரி செஞ்ச இந்த டிரஸ் என்னோட ஃபேவரைட்னு இதைக் கொண்டு வந்தேன். இந்தக் கறை அசிங்கமாத் தெரியுதே? இப்ப என்ன பண்ணுவேன்? " என்று தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

" இங்கே ஹாஸ்டல் ஸ்டூடண்ட் யார் கிட்டயாவது வேற டிரஸ் வாங்கிப் போட்டுக்கிட்டு இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ"

" சேச்சே, அதெல்லாம் சரி வராது. ஃபிட்டிங் நல்லா இல்லைன்னா மனசு அதிலயே இருக்கும். கான்சன்டிரேஷனைக் குறைத்துவிடும் . என்னால அப்புறம் இயல்பாப் பேசவே முடியாது. "

" அப்ப ஒண்ணு பண்ணலாம். அங்கிளுக்கு ஒரு ஃபோனைப் போடு. உங்க வீடு ஒண்ணும் அதிக தூரமில்லை. புரோகிராம் தொடங்க டயம் இருக்கு. அதுக்குள்ள அங்கிள் வந்துருவார்" என்று சொன்னாள் பவித்ரா.

" கரெக்ட், நல்ல ஐடியா. உடனே அப்பாவைக் கூப்பிடறேன்" என்று சொல்லி விட்டுத் தன் மொபைலை எடுத்தாள் அதிதி.

மாதவன் வந்துவிட்டார். அதிதிக்கு வேண்டிய டிரஸ்ஸுடன் இரண்டு, மூன்று டிரஸ்களைச் எக்ஸ்ட்ராவாகவே சேர்த்து எடுத்து வந்திருந்தார். வரும்போது வீட்டில் போரடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த தனது நண்பன் நாதனையும் அழைத்து வந்திருந்தார்.

அதிதியிடமோ பவித்ராவிடமோ இந்த விஷயத்தைச் சொல்லவில்லை. நாதன் வந்ததை ஸர்ப்ரைஸாக வைக்கலாம் என்று நினைத்து அவரைப் பார்வையாளர்கள் பகுதியில் கடைசி வரிசையில் உட்கார வைத்து விட்டு, தான் மட்டும் சென்று அதிதியைப் பார்த்தார்.

மேடையில் பவித்ரா கீபோர்டுடன் அறிமுகமான போது திடுக்கிட்டுப் போனார் நாதன். ' இவ எப்போ கீபோர்ட் வாசிக்கக் கத்துக்கிட்டா? என் கிட்ட இதுவரை சொல்லவேயில்லையே? ' என்று யோசித்த அவருடைய முகம் வாடிப்போனது. உள்ளமும் தான். உடல் நடுங்க ஆரம்பித்தது.

மாதவனுக்கும் இந்த விஷயம் ஆச்சரியத்தைத் தந்தது தான். ஆனால் மாதவன் அதிர்ச்சி அடையவில்லை. நாதனைப் பார்த்தவர், அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டார். ஆதரவுடன் அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டார் மாதவன்.

காதல் என்ற தலைப்பில் அவர்கள் தொகுத்து வழங்கிய பாடல்கள் அமர்க்களமாக இருந்தன. பவித்ரா அழகாக கீபோர்ட் வாசித்தாள். ஒரே ஒரு பாடல்,

": மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா மௌனமே வேதமா

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ ஆ...

மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே

ஏனோ மனம் தள்ளாடுதே

ஏதோ சுகம் உள்ளூறுதே

ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா

விருந்தைப் பெறவா?

மார்போடு கண்கள் மூடவா

மலரே மௌனமா? "


என்ற பாடலை பவித்ரா, அநிகேத்துடன் சேர்ந்து பாடியபோது ஆடியன்ஸ் அப்படியே அந்தப் பாடலின் இனிமையிலும் அவர்கள் இருவரின் குரல்களில் தெரிந்த காதல் உணர்விலும் மூழ்கிப் போய் ரசித்தார்கள்.

நாதனுக்கோ, பவித்ரா பாடிய போது இருப்பே கொள்ளவில்லை. தீப்பிழம்புகள் அவரைச் சூழ்ந்து எரிப்பது போலவே உணர்ந்தார். மாதவனும் நாதனைப் பார்த்துத் தவித்துப் போயிருந்தார். அவருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

'பவித்ரா பாடப் போறது, கீபோர்டு வாசிக்கப் போறது பத்தி எதுவுமே தெரியாதே எனக்கு? ஸர்ப்ரைஸ் தரப்போறதா நினைச்சு எதையோ செஞ்சு, குட்டையைக் குழப்பிட்டேனோ? இப்போ என்ன செஞ்சு இதை சரிக்கட்டப் போறேனோ? ஒண்ணுமே புரியலையே? இப்போ வெளியே போகலாம்னு கூப்பிட்டாலும் நாதன் வருவானான்னு தெரியலையே? ' என்று யோசித்து யோசித்துக் குழம்பிப் போயிருந்தார் மாதவன். திருதிருவென்று முழிக்கத் தான் முடிந்தது அவரால்.

நடக்கும் குளறுபடிகளுக்கு சிகரம் வைப்பது போல நடந்தது அடுத்த நிகழ்வு. இசை நிகழ்ச்சி முடிந்ததும் சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். கருணா பேச எழுந்தாள். அவளைப் பார்த்த நாதன் திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்று விட்டார். அங்கேயோ கருணா பேசத் தொடங்கியிருந்தாள்.

" இசை நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இன்றைய மாணவர்களின் இசை ஆர்வத்தைப் பார்த்து மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளும் எக்ஸ்போஷரும் அன்று எங்களுக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று மனதார வாழ்த்தினாள்.

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான்
கள் வெறி கொள்ளுதல்!
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடீ!


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: மீட்டாத வீணை 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
கருணா பவித்ரா வோட அம்மாவா இருப்பாங்களோ 🤔🤔🤔🤔🤔
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
பூகம்பம் வெடித்தே விட்டது
 
Top Bottom