• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மீட்டாத வீணை 10

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மீட்டாத வீணை

அத்தியாயம் 10

நிகழ்காலத்துக்குள் மீண்டும் நுழைவோமா?

நாதனின் உடல்நலம் சரியானபடியால், மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்தான். டாக்டரும் இப்போதைக்கு பயம் ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டார். " சில மாதங்கள் கழித்துத் தேவைப்பட்டால் ஸ்டென்ட் வைத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு மருந்து, மாத்திரைகள் போதும் " என்று சொல்லி விட்டார்.

அநிகேத் என்னவோ அன்று ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பிப் போனவன் தான். அதற்குப் பிறகு ஆளையே காணவில்லை. கல்லூரிக்கும் வரவில்லை என்று அதிதி சொன்னாள்.

' எங்கே போயிருப்பான்? யார் கிட்டயும் எந்தத் தகவலும் கொடுக்கவே இல்லை. அப்படி என்ன எமர்ஜென்சி வந்திருக்கும்? ஃபோன் செய்தாலும், 'அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா' ன்னு வருதே? என் மேல ஏதாவது கோபமா இருக்கானோ ? ' என்று நினைத்துக் குழம்பினாள் பவித்ரா. ஆனால் வீட்டில் திடீரென்று கூடிவிட்ட வேலைகள் அவளுடைய கவனத்தை ஆக்கிரமித்தபடியால் இதைப்பற்றி யோசித்துக் கவலைப்படும் நேரம் குறைந்தது.

புதிதாக சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டார்கள். பவித்ரா ஒரு வாரமாகக் கல்லூரிக்குப் போகவில்லை. " நாளையில் இருந்து வரேன் " என்று அதிதியிடம் சொல்லியிருந்தாள். இறுதி வருடம் என்பதால் இதற்கு மேல் லீவு எடுக்க முடியாது. மாதவன் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டார். அதிதியும், அவளுடைய அம்மாவும் கூட வந்து அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்தார்கள்.

காலையில் கல்லூரிக்குக் கிளம்பும் போது அப்பாவிடம் சொல்லிக் கொண்டு விடை பெற்றாள். " அப்பா, நான் காலேஜுக்குப் போயிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன். மருந்து, மாத்திரை டயத்துக்கு சாப்பிடுங்க. பத்மினி ஆன்ட்டி உங்களுக்கு ஸுப், மதிய சாப்பாடு, சாயந்திரம் ஜுஸ் தருவாங்க. வேண்டாம்னு சொல்லாமல் சாப்பிடுங்க. ஓகேப்பா" என்று சொன்னாள். பத்மினி இப்போது வீட்டை கவனித்துக் கொள்ளப் புதிதாக வேலைக்கு வைத்துக் கொண்டுள்ள உதவியாளர்.

" பவிக் கண்ணா, அப்பா மேல உனக்குக் கோபம் வரலையா? அன்னைக்கு நான் சொன்ன விஷயங்கள் பத்தி யோசிச்சயா? இன்னைக்கு சாயந்திரம் நீ காலேஜில் இருந்து வந்ததும் நடந்ததையெல்லாம் உன் கிட்ட விவரமாச் சொல்லிடறேன்" என்றார் நாதன்.

" அச்சச்சோ, எனக்கு எந்தக் கோபமும் இல்லைப்பா. அந்த விஷயமெல்லாம் அப்புறமா நிதானமாகப் பேசிக்கலாம். முதலில் உங்க உடம்பு நல்லா சரியாகட்டும். இப்போ நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க. அதைப் பத்தியே அதிகம் யோசிச்சுக் கவலைப்படாதீங்க" என்று ஆறுதலாகப் பேசினாள்.

பத்மினியையும் கூப்பிட்டு அப்பாவின் டயட் பற்றி விவரமாகச் சொல்லி விட்டுத் தான் கல்லூரிக்குக் கிளம்பினாள். பவித்ராவின் கண்கள் கல்லூரியில் அநிகேத்தைத் தேடி ஏமாற்றமடைந்தன. யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

" ஒரு வாரமாக காலேஜுக்கும் வரலை . எந்தத் தகவலும் இல்லை" என்று அவனுடைய நண்பர்களும் கையை விரித்தார்கள். அநிகேத்துக்கு ஏதாவது விபத்தாகி அடி, கிடி பட்டிருக்குமோ என்று பவித்ராவின் மனம் பதைபதைத்தது. மதியத்திற்கு மேல் பவித்ராவின் மனம் குளிரும்படியாக அநிகேத்தின் அழைப்பு வந்துவிட்டது.

" எங்கே போயிருந்தீங்க? ஆளைக் காணோம், ஒரு மெசேஜும் காணோம். என்ன ஆச்சு? " மொபைலை எடுத்ததும் படபடவென்று பொரிந்தாள் பவித்ரா.

" கூல் கூல் பவித்ரா. உனக்கு ஒரு பெரிய ஸர்ப்ரைஸ் வச்சிருக்கேன். நீ எங்கே இருக்கே இப்போ? அங்கிள் எப்படி இருக்கார்? "

" அப்பா ஓகே. ரெகவரிங் நைஸ்லி. நான் இன்னைக்குத் தான் ஒரு வாரம் கழிச்சு காலேஜ் வந்திருக்கேன். "

" நீ என்ன பண்ணறேன்னா, உடனே கிளம்பி ஒரு ஆட்டோவைப் பிடிச்சு வீட்டுக்கு வா. நான் உங்க வீட்டு வாசலில் உன்னை மீட் பண்ணறேன்" என்று சொல்லி விட்டு ஃபோனை கட் செய்து விட்டான்.

" பாவி, பாவி, அரைகுறையாப் பேசி டென்ஷனை ஏத்தி விட்டுட்டாரே இப்படி? " என்று மனதாரத் திட்டிக் கொண்டே வீட்டுக்குக் கிளம்பினாள்.

வீட்டு வாசலில் அநிகேத் புன்னகை மன்னனாக நின்று கொண்டிருந்தான். " என்ன பெரிய ஸர்ப்ரைஸ்? உங்க கூடப் பேசமுடியாமல் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா? " என்று அவன் நெஞ்சில் வேகமாகக் குத்தினாள்.

" நோ வயலன்ஸ் ப்ளீஸ். நான் என்ன பண்ணிருக்கேன்னு தெரிஞ்சா இப்படிக் குத்த மாட்டே? கட்டிப் பிடிச்சு அப்படியே முத்தமழை பொழிஞ்சிருப்பே? " என்றான் ஆச்சரியத்துடன் பார்த்தாள் பவித்ரா.

உள்ளே அப்பாவின் அறையில் இருந்து பேச்சுக் குரல் கேட்க, " யார் வந்திருக்காங்க, நான் உள்ளே போய்ப் பாக்கறேன்" என்று அடியெடுத்து வைத்தவளைத் தடுத்து நிறுத்தினான் அநிகேத்.

" டோன்ட் டிஸ்டர்ப் , பிரிஞ்ச இரண்டு உள்ளங்கள் நடந்ததை நினைச்சு உருகிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணக் கூடாது " என்று சொல்லி அநிகேத் கண்களைச் சிமிட்ட, பவித்ராவின் புருவங்கள் வியப்பில் வளைந்தன.

" அம்மா? " என்ற கேள்வியுடன் பவித்ரா அவனை நோக்க, அநிகேத், " யெஸ்" என்று சொல்லி வளைந்து அவளை வணங்குகிற மாதிரி போஸ் கொடுத்தான்.

" எப்படி, எப்படி இதை சாதிக்க முடிஞ்சது? " ஆச்சரியம் கொப்பளித்தது பவித்ராவின் கேள்வியில்.

" அன்னைக்கு ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பியதும் நேரே காலேஜ் ஆஃபிஸுக்குப் போய், கருணா மேடத்தோட லோகல் அட்ரஸை வாங்கினேன். அவங்க காண்டாக்ட் நம்பரும் கிடைச்சது. ஆனா இந்த விஷயத்தைப் பத்தி ஃபோனில் பேசறதை விட நேரில் பேசறது நல்லதுன்னு தோணுச்சு.

நான் அந்த அட்ரஸுக்குப் போறதுக்குள்ள அவங்க கிளம்பி ஏர்போர்ட் போயிட்டாங்க. வேகமாக ஏர்போர்ட் போனா, அதுக்குள்ள அவங்க ஃப்ளைட், டேக் ஆஃப் ஆயிடுச்சு. உடனே மும்பைக்கு டிக்கெட் வாங்க முயற்சி பண்ணினேன். அடுத்த நாள் தான் கிடைச்சது.

மும்பையில் எப்படியோ திண்டாடி ஒரு வழியா அவங்களோட வீட்டு அட்ரஸைக் கண்டுபிடிச்சு அங்கே போனேன். அவங்களோட ஃபேன்னு சொல்லி ஒருவழியாக அவங்களை நேரில் சந்திக்க அனுமதி வாங்கினேன். அதுக்குள்ள இன்னும் ரெண்டு நாட்கள் ஆயிடுச்சு. அவங்களைப் பாத்துப் பேசி, உன்னைப் பத்தி, நாதன் அங்கிள் பத்தியெல்லாம் சொல்லி, எனக்கு உண்மையெல்லாம் தெரியும்னு சொன்னேன். அவங்களை உடனே சென்னை திரும்பச் சொல்லிக் கூப்பிட்டேன்.

அவங்க முதலில் வர மறுத்தாங்க. அப்புறம் நாதன் அங்கிள் உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடல் இருக்கற விஷயத்தையும், நீ தனியா இங்கே தவிக்கற விஷயத்தையும் சொன்னதும் அப்படியே நெகிழ்ந்து போயிட்டாங்க. இருந்து கையோடு அவங்களைக் கூட்டிட்டு வரணும்னு முடிவு செஞ்சதினால அங்கேயே தங்கிட்டேன். உனக்குப் பெரிய ஸர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைத்ததால, உன் கிட்டப் பேசறதை அவாய்ட் பண்ணினேன். எப்படி என் வேலை? ஐ டெஃபனட்லி டிசர்வ் எ கிஃப்ட் ஃபார் திஸ்" என்று பெருமிதத்துடன் சொல்லி விட்டுத் தலை நிமிர்ந்து நின்றான். அப்படியே அவனைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் தனது ரோஜா இதழ்களை அழுத்தமாகப் பதித்தாள் பவித்ரா.

அங்கே உள்ளே என்ன நடக்கிறதென்று எட்டிப் பார்க்கலாமா?

திடீரென்று கருணா தன்னெதிரே வந்து நின்றதும் திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்றார் நாதன். " கருணா, கருணா" என்று உதடுகள் அரற்றின. அதற்கு மேல் வார்த்தை ஒன்றும் அவருடைய வாயிலிருந்து வரவில்லை.

கருணாவும் நாதனின் எதிரே நெகிழ்ந்து போய் மௌனச் சிலையாக நின்றாள். நாதன் வேகமாக அவளருகில் வந்து கைகளைப் பிடித்துக் கொண்டான். " என்னை மன்னிச்சுடு கருணா. பெரிய பாவம் பண்ணிட்டேன். இத்தனை நாட்கள் கழிச்சு மன்னிப்புக் கேக்கறானேன்னு தோணுதா? நல்லா என்னை வாயார மனசாரத் திட்டு. என்னை அடிக்கணும்னா அடி. ஆனா என்னை விட்டு மட்டும் போயிடாதே கருணா! நீ இல்லாத நரக வாழ்க்கை இனிமேலும் எனக்கு வேணாம் " என்று கத்திக் கதறினார் நாதன்.

" நீங்க மட்டுமா தப்புப் பண்ணினீங்க? நானும் தான் வீம்பு பிடிச்சு நின்றேன். அப்பா எவ்வளவோ சொல்லியும் சென்னை வர மறுத்தேன். அப்பா அந்த துக்கத்தோடயே போய்ச் சேர்ந்தாரு. அவரு இறந்து போன விஷயம் கூட உங்களுக்கு நான் தெரிவிக்கலையே? அதுவும் தப்பு தானே? குழந்தைக்காகவாவது ஈகோவை விட்டுக் கொடுத்திருக்கலாம். அது கூடச் செய்ய மனசு வரலையே! " என்று கருணாவும் நாதனின் தோளில் சாய்ந்து விம்மினாள்.

" நாம ரெண்டு பேரும் இப்போ மன்னிப்புக் கேக்க வேண்டியது பவித்ரா கிட்டே தான். நாம பிரிஞ்சதால பாதிக்கப்பட்டது அவ தானே? அம்மா கூட கடைசிக் காலத்தில் உன்னை நேரில் பார்த்து மன்னிப்புக் கேக்கணும்னு துடிச்சாங்க. மனசில அந்தக் குறையோடயே போய்ச் சேந்தாங்க" என்றார் நாதன்.

" அவங்க பெரியவங்க. அவங்க மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஊரில உலகத்தில இருக்கற மத்த மாமியார் மாதிரி இல்லாமல் எங்கிட்ட எவ்வளவோ பிரியமாத் தான் இருந்தாங்க. ஆனா நான் மியூசிக்ல இன்ட்ரஸ்ட் காமிச்சது மட்டும் தான்
அவங்களுக்குப் பிடிக்கவேயில்லை. அதுக்கும் அவங்க கடந்த காலத்தில் நடந்த ஏதோ கசப்பான அனுபவம் காரணமா இருந்திருக்கலாம். எனக்கு உங்க மேல தான் வருத்தம். என்னைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்கலை நீங்க" என்று வருத்தத்துடன் கருணா பேசினாள்.

" நீ சொல்லறது உண்மை தான் கருணா. முட்டாள் தனமா நடந்துகிட்டேன்" என்று தலைகுனிந்து நின்றார் நாதன்.

" இன்னும் எவ்வளவு நேரம் ஒருத்தர் கிட்ட ஒருத்தர் மன்னிப்புக் கேட்டுக் கிட்டே நிக்கப் போறீங்க? " என்று கேட்டுக் கொண்டே பவித்ரா உள்ளே நுழைந்தாள். அவள் பின்னால் சிரித்த முகத்துடன் அநிகேத்தும் நுழைந்தான். கருணா அவளை அருகில் அழைத்து ஆசை தீர அணைத்தாள். உச்சி முகர்ந்து கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள். " இந்த அம்மாவை மன்னிச்சுடு கண்ணம்மா " கண்ணீருடன் புலம்பினாள் கருணா.

" உங்க குடும்பம் ஒண்ணு சேர்ந்த இந்தத் தருணத்தை என்ஜாய் பண்ணுங்க. நான் கிளம்பறேன்" என்று அநிகேத் கிளம்பினான்.

" நீயும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தன் தானே இனிமேல்? உன்னோட முயற்சியால தானே நாங்க ஒண்ணு சேந்துருக்கோம்? ஆனாலும் அநிகேத் நிச்சயமா நல்ல ஹஸ்பண்டா இருப்பான். என்னை மாதிரி யூஸ்லெஸ் வாழ்க்கைத்துணையா இருக்கமாட்டான்" என்று நாதன் மீண்டும் புலம்ப ஆரம்பித்தார்.

" அய்யோடா, என்னப்பா நீங்க! சினிமா மாதிரி டயலாக் பேசிட்டே இருக்கீங்க? டயத்தை வேஸ்ட் பண்ணாமல் அம்மாவோட ரொமான்ஸ் பண்ணுங்க. நானும் அநிகேத்தும் வெளியே போய் நின்னுட்டு டூயட் பாடறோம்" என்று பவித்ரா மிரட்டினாள்.

எல்லோருமாகச் சேர்ந்து சத்தமாகச் சிரித்த போது அந்தச் சிரிப்பொலி தெரு முழுக்கக் கேட்டது.

மாதவனும் அதிதியும் விஷயம் தெரிந்து நாதனின் வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கே பொங்கி வழிந்த ஆனந்தம் அவர்களுடைய மனங்களிலும் நிறைந்தது.


நிறைவு,

புவனா சந்திரசேகரன்.


அடுத்த பதிவில் அடுத்த குறுநாவலின் முதல்பகுதி வரும். வீணை சீரிஸின் மூன்றாவது மற்றும் இறுதிக் கதை.
 

Author: Puvana
Article Title: மீட்டாத வீணை 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சூப்பர்👌👌👌👌 , நல்லபடியா ஒண்ணு சேர்ந்தார்கள், இனிமேல் இசை ஆட்சி செய்யும்
 
Top Bottom