• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பொத்தி வைத்த ஆசைகள் பட்டாசாய் வெடிக்கும் நேரம்… தீபாவளி!

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54

வந்துவிட்டது தீப ஒளித் திருநாள். வருடம் முழுவதும் வரிசைகட்டி வரும் பண்டிகைகளில் தீபாவளிதான் நிறையப் பேருக்கு ரொம்பப் பிடித்தது. இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடைகள், மிதமான மழையுடன் கூடிய காலநிலை என்று கொண்டாட்டமான மனநிலையில் நிறைந்திருக்கும் பண்டிகை.

இந்த ஆண்டு உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றால் உடை, பட்டாசு விற்பனைகள் சற்றே குறைந்திருந்தாலும் கொண்டாட்ட மனநிலை காற்றில் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு மேலாக அடைத்து வைத்திருந்த மனநிலை வெடித்துக் கிளம்ப காத்திருப்பது இயற்கைதான். இரண்டாம் அலையில் மாட்டாமல் தப்பிப்பதும், பட்டாசுகள் வெடிக்கையில் காயம் படாமல் தடுப்பதும் அதைக் காட்டிலும் அவசியம் அல்லவா?

தீபாவளிக்கு தீபாவளி எல்லா நிறுவனங்களும் விடுமுறையில் இருக்கும் நேரம், பரபரப்பாக இருப்பது தீயணைப்பு நிலையங்கள், காவல்துறை, அரசு மருத்துவமனைகள், கூடவே இப்போது டாஸ்மாக்கும். பண்டிகைக் காலத்திற்குரிய தீ விபத்துக்கள் காயங்களை எதிர்கொள்ள கூடுதல் ஜாக்கிரதை உணர்வுடன் அரசு நிறுவனங்கள் இருப்பது வழக்கம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை தீபாவளியன்று ஒரு கிராமத்திலிருந்து நிறைய நோயாளிகள் வருவதாகத் தகவல் வந்தது. தீக்காயமாகத்தான் இருக்கும் என்று அதற்கான மருந்துகளுடன் ஆயத்த நிலையில் மருத்துவமனையில் காத்திருந்தோம். வந்ததோ அடிதடி, வெட்டுக்குத்தால் மண்டை உடைந்தும் கை கால்கள் வெட்டப்பட்டும் காயமடைந்த சுமார் இருபது பேர்.

யாரோ ஒரு சிறுவன் விட்ட ராக்கெட் வெடி பறந்து போய் ஒரு வைக்கோல் போரில் விழுந்திருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து முக்கால்வாசி போர் எரிந்த நிலையில்தான் யாரோ கவனித்திருக்கிறார்கள். மூக்கையா என்பவரின் வைக்கோல் போர் அது. தன் பங்காளி தான் வேண்டுமென்றே தீப்பற்ற வைத்து விட்டான் என்று மூக்கையா குடும்பம் கூட்டமாகக் கிளம்பிப் போய் பங்காளி குடும்பத்திடம் சண்டைபோட, வாய்ச்சொற்கள் தடித்து கைகலப்பு ஆகியிருந்தது.

குடும்பச் சண்டை வெகு விரைவில் ஊர்ச் சண்டை ஆகிக் கடைசியில் போலீஸ் போய் தடியடி நடத்தியதால் தான் இருபதோடு நின்றது அடி பட்டோர் எண்ணிக்கை. அதுவும் அந்த கிராமத்தில் அன்று மதுவும் ஆறாக ஓடியிருக்க, காயத்தின் அளவுகள் கடுமையாக இருந்தன. இப்படித்தான் நல்ல நாள் துக்க நாளாக மாறி விடுகிறது சில குடும்பங்களுக்கு.

பாதுகாப்பான தூரத்தில் நின்று தரமான பட்டாசுகளை வெடிப்பவர்கள் பெரும்பாலும் விபத்துகளிலிருந்து தப்பி விடுகின்றனர்.

"பட்டாசு வெடிக்கல.. பக்கத்துல போய் உத்துப் பார்த்தேன். முகத்துல வெடிச்சுடுச்சு" என்று வருபவர்களில் கண் பார்வை இழந்தவர்கள் அதிகம். ஒவ்வொரு தீபாவளியன்றும் யாரோ வைத்துவிட்டு வெடிக்காமல் போனதால் விட்டு விட்டுப் போன வெடியைக் குனிந்து பார்த்துக் கண்பார்வை இழந்த ஒரு குழந்தையைப் பார்க்க நேர்கிறது. தாய் சமையலறையிலும், தந்தை நண்பர்களுடனும், அண்ணன் தொலைக்காட்சியிடமும் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் அந்தக் குழந்தையின் பார்வையிழப்பைத் தடுத்திருக்கலாம் அல்லவா?

"ஃப்ரெண்ட் சேலஞ்ச் பண்ணினான். அதனால கையில வச்சு வெடியைப் பத்த வச்சுத் தூக்கிப் போட்டேன்" என்று கையைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டு வரும் இளைஞர்களும் ஒவ்வொரு ஊரிலும் உண்டு தானே?

காலம் ஓடியிருக்கும். சவால் விட்ட நண்பனும் ஊர் மாறிப் போயிருப்பான். காயம் கூட ஆறியிருக்கும். ஆனால் கையில் ஏற்பட்ட தழும்பால் போலீஸ் வேலை, மிலிட்டரி வேலை மறுக்கப்பட்டு வண்டி ஓட்டவும் எழுதவும் ஆயுசு முழுமைக்கும் சிரமப்படுவான், கையில் வைத்து வெடியைப் பற்ற வைத்தவன்.

வெடிக்காத பட்டாசை எல்லாம் ஒன்று சேர்த்து தேங்காய் சிரட்டையில் இறுக்கமாகப் பொதிந்து தீயில் தூக்கிப் போட்ட சாதனை மட்டுமல்ல, அது வெடித்து டிரான்ஸ்ஃபார்மரில் பட்டு டிரான்ஸ்ஃபார்மர் புதைந்துபோன வேதனையும் நடந்திருக்கிறது.

பட்டாசால் மட்டுமல்ல, மன்னன் திரைப்படம் போல முதல் நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்துக் காயம் ஏற்படுவதும், டாஸ்மாக் உபயத்தால் விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்படுவதும் ஆண்டுதோறும் தொடர்கதையாகிறது. பண்டிகை நாளன்று இத்தகையக் களேபரங்கள் என்றால் தீபாவளிக்குப் பிந்தைய நாட்களில் அதிக இனிப்பு சாப்பிட்டு சர்க்கரை அளவு ஏறிப்போய் மயக்க நிலையில் கொண்டு வரப்படும் முதியவர்களும், பழைய பலகாரங்களை சேர்த்து வைத்து உண்டு வயிற்றுப்போக்குடன் அவதிப்பட்டு சிகிச்சைக்கு வருவோரும் சகஜம்.

ஒவ்வொரு பண்டிகையும், ஒவ்வொரு இனிப்பும், ஒவ்வொரு உடையும் அவரவர் மனதில் அதனுடன் தொடர்புடைய வேறு ஏதோ நினைவுகளை எழுப்புவது போல, ஒவ்வொரு உடல் பிரச்சனையும், ஒவ்வொரு விபத்தும் வேறு ஏதோ ஒரு நோயாளியின் நினைவை மருத்துவரான என் மனதிலும் கிளப்பி விடுவது வாடிக்கை.

அப்படி தீக்காயங்களைக் கண்டபோதெல்லாம் என் மனதில் வந்து நிற்பவள் ரதிதேவி. அவளது பெயர் எனக்கு பரிச்சயமானது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. தாயார் திட்டிவிட்டார்; அதுவும் 15 வயதுப் பெண்ணை அவளது ஒழுக்கத்தைக் குறை கூறி விட்டார் என்ற காரணத்துக்காகத் தன் உடல்மேல் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு சிகிச்சைக்காக வந்தாள் ரதிதேவி. பெயருக்கு ஏற்றாற் போல் களையான முகம், கருப்புத் தங்கம் போல இருந்தாள். உடல் நெடுகிலும் 40 முதல் 50 சதவீதம் வரை தீக்காயம். பதினைந்து வயது குழந்தை அத்தனைத் தீக்காயத்துடன் ஒரு சொட்டு அழுகை கூட இல்லாமல் இருக்கமாக இருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

முதல் ஒரு வார சிகிச்சைக்குப்பின் அவள் சற்றுத் தேறி எழுந்து அமர்ந்திருந்த நேரம், மனநல ஆலோசனைக்காக அவளை என் அருகில் அமர வைத்தேன். அப்போது என்னிடம், "டாக்டர்! என்னை நினைவிருக்கிறதா?" என்று கேட்டாள். நான் சந்தேகமாகப் பார்க்கவும், "என் முகத்தை நினைவிருக்காது. என் கையப் பாருங்க. உங்களுக்கு ஞாபகம் வந்துடும்" என்று கூறித் தன் உள்ளங்கையைக் காட்டினாள். அதில் நடுவில் ஒரு தீக்காயத் தழும்பு.

"எனக்கு அஞ்சு வயசா இருக்கும் போது நீங்க எங்க ஊரு ஆஸ்பத்திரியில வேலை பாத்தீங்க. அப்ப எங்க அம்மா இதே மாதிரி தான் நான் காசு திருடிட்டேன்னு குத்தம் சொல்லி என்னை சூடத்தைக் கையில கொழுத்தி சத்தியம் பண்ண சொல்லுச்சு. அதுல வெந்து போன என் கையை அப்போ உங்ககிட்ட தான் வந்து காட்டினோம். நீங்க எங்க அம்மாவை பயங்கரமா திட்டிட்டு தினம் மருந்து போட்டு காயத்தை ஆத்தி விட்டீங்க. அதுக்கப்புறமும் எங்கம்மா என்னைத் திட்டுறத நிறுத்தவே இல்லை. நீங்க என்னை மறந்துட்டீங்க. ஆனா நான் உங்களை மறக்கவே மாட்டேன்" என்றாள் அந்தப் பதினைந்து வயதுக் குழந்தை.

ஐந்து வயதில் நடந்தது இந்தக் குழந்தைக்கு அவ்வளவு நினைவிருக்கிறதா என்று நினைத்து வியந்தேன். அந்த முறை தீக்காய சிகிச்சைக்காகக் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எங்கள் மருத்துவமனையில் இருந்தாள். நடுவில் ஒரு முறை மாடியிலிருந்து குதிக்கப் போகிறேன் என்றெல்லாம் கூறி பதட்டம் கூட்டினாள். பதற வைத்தாள். தொடர்ந்த சிகிச்சையிலும், செவிலியர்கள், பணியாளர்களின் அக்கறையிலும் உயிர் பிழைத்து வீட்டுக்குச் சென்றாள். மீண்டும் அவள் ஒரு தவறான முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காக நான் வேண்டாத கடவுளை எல்லாம் வேண்டி அவளை அனுப்பி வைத்தேன்.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இன்று மீண்டும் ரதிதேவியைச் சந்தித்தேன். இருபது வயது ஆகிவிட்டது அவளுக்கு. ஒரு ராணுவ வீரருடன் நல்லபடியாகத் திருமணமாகி நிறைமாத கர்ப்பிணியாக வந்திருக்கிறாள். வாய் நிறைய சிரிப்புடன், 'என்னைத் தெரியுதா? நல்லா இருக்கீங்களா?' என்று கேட்கிறாள். கணவர் வீட்டில் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்களாம்‌, அம்மா கூட இப்போது திட்டுவது இல்லையாம். தீபாவளிக்குள் குழந்தை பிறந்துவிடும் என்று அவளைப் பரிசோதித்த மகப்பேறு மருத்துவர் கூறினாராம். அவளது தீக்காயங்கள் எல்லாம் நன்றாக ஆறிப் பெரிய பெரிய தழும்புகளாக மாறிவிட்டன.

அவள் கடந்து வந்த வழியையும், அந்தக் குழந்தையைச் சுட்ட வார்த்தைகளையும், நெருப்பையும் இந்தத் தழும்புகள் அவளுடைய ஆயுள் முழுமைக்கும் நினைவு படுத்தப் போவதை நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போகிறது. இன்னொரு ரதிதேவி வேண்டுமா? சீதையைப் போல நெருப்பில் இறக்கித் தான் நமது குழந்தைகளை சுத்தமானவர்கள் என்று நம்பப் போகிறோமா?

தீபாவளிக்குள் அவளுக்கு குழந்தை பிறந்து விடட்டும். அது அவளைப் பார்த்து சிரிக்கும் சிரிப்பில் அவளுக்குப் பழைய துன்பங்களின் நினைவெல்லாம் மறையட்டும் என்ற இன்னொரு வேண்டுதலுடன் தீபாவளிக்குத் தயாராகிறேன் நான்!

பாதுகாப்பான தீபாவளி! பத்திரமான தீபாவளி!! இனிக்கட்டும் அனைவருக்கும்.
 
Top Bottom