• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பொங்கல் பொங்கட்டும்! வீரம் நிலைக்கட்டும்!!

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
பொங்கல் பொங்கட்டும்! வீரம் நிலைக்கட்டும்!!


பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. கூடவே ஜல்லிக்கட்டும். 500 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதி, அனைவரும் கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும், வழக்கத்தை விட 50% குறைவான பார்வையாளர்கள் தான் இருக்க வேண்டும், அனைவரும் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்தி சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களுடன் இந்த ஆண்டுக்கான களம் தயாராகிறது.

அண்மையில் வாசித்த ஒரு செய்தி தீபாவளி முதலே மாடுகளுக்கான பயிற்சிகள் தொடங்கி விட்டதாகக் கூறுகிறது. மாடுபிடி வீரர்கள் பயிற்சி எடுப்பது போலவே மாடுகளுக்கும் பயிற்சி நடக்கிறது. அதில் முக்கியமானது நீச்சல் பயிற்சி. இந்த முறை அனைத்து நீர்நிலைகளும் நல்ல மழையால் நிரம்பியிருப்பதால் வாரம் இருமுறையாவது காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில காளைகள் 15 நிமிடத்தில் சோர்வடைந்து விடுமாம், சில பழக்கப்பட்ட மாடுகள் ஒரு மணி நேரம் வரை விடாமல் நீந்துமாம். இதனால் மாடுகளின் வயிற்றுப்பகுதி, கால் பகுதி தசைகள் பலம் பெறுவதாக உரிமையாளர்கள் கூறுகிறார்கள். மணல் மேடுகளை முட்டச் செய்வதும் ஈர மணலை முட்டச் செய்வதும் பயிற்சியின் வேறு சில அம்சங்கள். அதுபோக மண் சாலையில் தினமும் 5 கிலோ மீட்டர் வரை நடக்க வைக்கிறார்கள், நல்ல சத்துள்ள தீவனம் கொடுக்கிறார்கள், முறையாகப் பரிசோதனை செய்கிறார்கள். பெற்ற குழந்தையை விட காளைகள் அதிகப் பாசத்துடன் பராமரிக்கப்படுகின்றன.

போட்டியின் போது காளைகளின் இரத்தத்தில் நிகோடின், கோகெயின், ஆல்கஹால் கலந்திருக்கிறதா என்றும் சோதிக்கிறார்கள். மாடுபிடி வீரர்களுக்கும் இதே வகையிலான மருத்துவப் பரிசோதனைகள், வெகுவாகத் தள்ளி அமைக்கப்பட்டிருக்கும் பார்வையாளர் இருக்கைகள் என்று உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போது செய்யப்படுகின்றன.

நாம் அனைவரும் அறிந்தது போல ஆதிகாலம் முதலே ஜல்லிக்கட்டு நடந்ததாக வரலாறு கூறுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்களில் ஏறுதழுவும் காட்சி வரையப்பட்டிருக்கிறது. சங்ககாலப் பாடல்களிலும் ஜல்லிக்கட்டு குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. கலித்தொகை, மலைபடுகடாம் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் ஏறுதழுவுதல் குறித்த செய்திகள் வருகின்றன. கலித்தொகையின் முல்லைக்கலி பகுதியில் மாடுகளின் வகை, அவற்றின் நிறம், வளர்ப்பு, ஏறுதழுவுதல் நிகழ்ச்சி, அதைக் காணும் பெண்களின் மனநிலை, அவர்களது பெற்றோரின் வாழ்வு முறை இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சல்லிக்காசுகள் அடங்கிய பை மாட்டின் கொம்பில் கட்டப்பட்டிருக்க, அதை எடுப்பதே விளையாட்டின் குறிக்கோள் என்ற விதிமுறை வழக்கிலிருந்த காரணத்தால் ஜல்லிக்கட்டு என்ற பெயர் வந்திருக்கிறது. உண்மையில் ஏறுதழுவுதல் என்ற சொல்லே இதற்குப் பொருத்தமானது. வாடிவாசலில் மாடு நுழைந்தது முதல் வெளியேறும் வரை இருக்கக்கூடிய 15 மீட்டர் தூரம் வரை மாட்டின் திமிலை அணைத்தவாறு கடப்பதுதான் வெற்றி பெறுவதற்கான இலக்கு. மற்றபடி சில திரைப்படங்களில் வருவது போல் மாட்டைத் தரையில் போட்டு அமுக்கி விட்டு, அடக்கினேன் என்று கூறுவதும், வெற்றி பெறாத மாட்டை உரிமையாளர் துப்பாக்கியை எடுத்து சுடுவதும் சரியான சித்தரிப்புகளாகத் தோன்றவில்லை.

போட்டியில் கலந்துகொள்ளும் பெரும்பாலான மாடுகள் வாடிவாசலில் நுழைந்து நேராக வெளிவாசல் வரை ஓடிவரப் பயிற்சி பெற்றவை. சில மாடுகள் 'நின்று விளையாடும்' என்பார்கள். அவை மைதானத்தில் கம்பீரமாக நின்று போட்டியாளரை தைரியமாக நோக்கி 'வா! வந்து பாரு!' என்பது போன்ற உடல் மொழியுடன் அழைக்கும். அதைப் பார்த்தே மிரண்டு போட்டியிலிருந்து பின்வாங்கி விடுபவர்கள் உண்டு. மற்றபடி சில சமயம் பலம் குறைந்த மாடுகளைக் களம் இருக்குவார்களாம். அவை சமாளிக்க முடியாமல் படுத்துவிடுமாம். அப்படிப்பட்ட மாட்டின் மேல் முப்பது பேர் பாய்ந்து அமுக்கிக் கொண்டு 'அடக்கி விட்டேன்!' என்று கொக்கரிப்பது உண்மையில் வீரத்தில் சேர்த்தியா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட மாடுகளை 'சப்பை மாடுகள்' என்பார்களாம். விதிமுறைகளின் படி இவை இப்போது அனுமதிக்கப்படுவதில்லை என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அதுபோல போட்டியின் போது வாலைப் பிடிப்பது, கடிப்பது போன்ற செயல்களைச் செய்பவர்களும் தகுதிநீக்கம் செய்யப் படுகின்றனர். பண்டைய காலத்தில் வெகு சீராகத் துவங்கிய ஏறுதழுவுதல் நடுவில் சில இடங்களில் சற்றுத் தடம்மாறி இப்போது மீண்டும் சீர்திருத்தங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

என்னதான் அரசு கண்ணில் விளக்கெண்ணை விட்டு கண்காணித்தாலும் அந்தக் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு முறையான அனுமதியின்றி விதிகளைப் புறக்கணித்து ஜல்லிக்கட்டு நடத்தும்
கிராமங்கள் இப்போதும் இருக்கின்றன. பத்து வருடங்கள் இருக்கும்.. மதுரை மருத்துவக் கல்லூரியில் நான் கண் மருத்துவத்தில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவசர சிகிச்சை பிரிவுக்கு தலையில் துண்டை கண்ணைச் சுற்றி கட்டிக்கொண்டு ஒரு நபர் வந்தார். வலதுபுறக் கண்பந்து கபாலத்தில் இருந்து வெளியே வந்து தொங்கிக்கொண்டிருந்தது. மூளைக்கும் கண்ணுக்கும் இணைப்பான கண் நரம்பின் மூலமாக ஆடிக்கொண்டிருந்தது. 'என்ன ஆச்சு?' என்று கேட்டதற்கு, 'வரப்பில் கால் தடுக்கி விழுந்து விட்டேன். கல் குத்தி விட்டது' என்றார். எங்கள் பேராசிரியை அறுவை அரங்கில் இருக்கவே வேகமாக அவரிடம் சென்று காயத்தின் தன்மை குறித்து விளக்கமாகக் கூறினேன். ஒரே ஒரு கேள்விதான் கேட்டார் அவர். "பணியாரச் சட்டியில் பணியாரத்தைத் திருப்பிப் போட்ட மாதிரி இருக்கா?" என்று. "ஆமா மேடம்!" என்றேன், எவ்வளவு பொருத்தமான உவமை என்று மனதினுள் சிலாகித்தபடி. "அப்ப அது ஜல்லிக்கட்டுல ஏற்பட்ட காயம் தான். மாடு தன்னோட கொம்பால் இப்படித்தான் பணியாரம் மாதிரி புரட்டிப்போடும். உடனே தியேட்டருக்கு ஷிஃப்ட் பண்ணுங்க" என்று கூறினார். வேகமாக முன்னேற்பாடுகள் நடந்து பாதிக்கப்பட்ட கண் பாதுகாப்பாக அகற்றப்பட்டது, இல்லையெனில் பாதிப்பு மூளை வரை பரவியிருக்கும்.

அதற்கு ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பு அதே மருத்துவக்கல்லூரியில் என் பயிற்சி மருத்துவ வாழ்வின் போது நடந்தது இது. ஜல்லிக்கட்டு என்ற பெயரைக் கேட்டாலே அந்தக் காட்சிதான் என் கண்முன் வரும். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மோசமான நிலையில் உள்ள நோயாளிகளைப் போலவே உயிரிழந்த நோயாளிகளையும் கொண்டு வருவார்கள். நேராக போஸ்ட்மார்ட்டத்திற்குச் செல்ல வேண்டிய உடல்களை வீணாகக் கீழே இறக்காமல் மருத்துவரே ஆம்புலன்சில் ஏறி இறப்பை உறுதி செய்வது வழக்கம். ஒரு மாட்டுப் பொங்கல் தினம் அது. "மேடம்! ஒரு ஜல்லிக்கட்டு பாடி" என்று அட்டெண்டர் கூற, நான் ஆம்புலன்சில் ஏறினேன். பட்டுவேட்டி சட்டையில் இருந்த ஒரு இளைஞர் படுக்க வைக்கப் பட்டிருந்தார். சட்டை மட்டும் ரத்தத்தில் குளித்திருந்தது. இதயம் முழுதாக நெஞ்சுக் கூட்டை விட்டு வெளியே வந்திருந்தது. அதிர்ச்சியுடன் நான் பார்க்க அருகிலிருந்த உறவினர், "புது மாப்பிள்ளைம்மா! கார்த்திகை கடைசி முகூர்த்தத்துல தான் கல்யாணம் ஆச்சு. தலப்பொங்கலுக்கு வந்தவரு. வேடிக்கை பார்க்கப் போனவரு தான். படுபாவிக எவனோ மாட்டு கண்ணுல மிளகாப்பொடியப் போட்டுருக்கான்.. மாடு மிரண்டு தட்டிக்குப் பின்னாடி நின்னுக்கிட்டு இருந்த மனுசனை வந்து முட்டிருச்சும்மா" என்றார் கண்ணீருடன். அதே மாட்டினால் காயம்பட்டு, குடல் சரிந்து, முகம் கிழிந்து வேறு சிலர் வருவதாகவும் கூறினார். புதுமாப்பிள்ளையின் மெருகு குறையாத புதிய தங்கச் சங்கிலி புலிநக டாலருடன் அந்த இதயத்தின் அருகே அமைதியாகக் கிடந்தது.

ஸ்பெயினில் நடைபெறும் மாடுபிடி விளையாட்டான ஸ்பானிஷ் புல் ஃபைட் ஒரு அரக்கத்தனமான விளையாட்டு (barbaric event) என்றே கூறுவார்கள். அந்த விளையாட்டின் இலக்கு நீளமான ஆயுதத்தால் மாட்டினை நேராக இதயப்பகுதியில் குத்திக்கொல்வது தான். அதற்கு மாறாக நமது நாட்டின் பாரம்பரிய மாட்டு வகைகளைப் பாதுகாக்கும் விதமாகவும் மனிதன் அதன் மேல் கொண்டுள்ள பாசத்தை, தன்னுடைய வீரத்தை வெளி உலகத்துக்குக் கூறுவதாகவும் உயரிய நோக்கத்துடன் அமைக்கப்பட்ட ஏறுதழுவுதலை இப்படிப்பட்ட துஷ்டர்கள் வீணாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தீவிர கண்காணிப்பு, விதிமுறைகள் தண்டனைகள் தவிர, மக்கள் மத்தியில் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பரப்புரைகளும் செய்யப்பட வேண்டும்.

மிளகாய்ப்பொடி வீரர்களும், கிரியா ஊக்கி (மது) அருந்தி சலம்பும் வீரர்களும் இல்லாத ஜல்லிக்கட்டு நிச்சயமாகத் தமிழனின் பெயர் சொல்லும் வீர விளையாட்டு தான்!
 

Author: siteadmin
Article Title: பொங்கல் பொங்கட்டும்! வீரம் நிலைக்கட்டும்!!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom