• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -9

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
242
பகலிரவு பல கனவு -9

கடை முழுவதும் கண்களால் அலசி ஆராய்ந்து கொண்டிருந்த சம்யுக்தா, தேடியது கிடைக்காமல் போனதால் மனம் வாடினாள். அவள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடியப் போகின்றன. இவள் இந்தக் கல்லூரியில் தான் சேரப் போகிறேன் என்று விஷயத்தை பிரபாகரனிடம் சொன்ன போது பார்த்தது. அன்று நடந்ததை நினைக்கும் போதே அவளது முகம் கோபத்தில் ஜொலிஜொலித்தது.

கவுன்சிலிங் முடிந்த பிறகு நீட் கோச்சிங் சென்டருக்கு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்ற காரணத்தோடு வீட்டை விட்டு வெளியே வந்தாள். வந்ததன் பிரதான காரணம் என்னவோ அவள் மட்டுமே அறிவாள். எப்போதும் உடன் வரும் சரண்யா இல்லாமல் தனித்து வந்தாள். இவள் விஷயத்தைச் சொன்னதும் அவனது முகத்தில் ஏற்படும் பரவசத்தைக் காண ஆவலுடன் இருந்தவளுக்கு பெரிய சைஸ் பல்ப் ஒன்றை பரிசாகக் கொடுத்தான் பிரபாகரன்.

எந்த விஷயத்தையும் ஸ்வீட்டோடு கொண்டாடு விளம்பரம் பார்த்தே வளர்ந்தவள் அவள். அதனால் பெரிய சைரஸ் டெய்ரிமில்க் ஸில்க்கோடு நேராக பிரபாகரனின் முன்பு சென்று நின்றாள். அவள் சென்ற வேளையில் கடையில் வேலை செய்பவர்கள் தவிர வேறு யாரும் இல்லாததால் இவள் நேராக பிரபாகரனின் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

தன் முன்னே நீட்டப்பட்ட சாக்லேட்டையும் வாங்காமல் ஏதோ புதிய மனிதரைப் பார்ப்பது போல அவளைப் பார்த்து வைத்தான் பிரபாகரன். இதுவரை அவனுக்கு விஷயம் தெரியாமலா இருக்கும், இவள் முடிவு செய்த கல்லூரி வேண்டுமானால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தேசிய அளவில் பத்து இடங்களுக்குள் வந்தவள் என்ற செய்தி கூடவா தெரியாது. அதற்காக வாயைத் திறந்து ஒரு வார்த்தை வாழ்த்து சொன்னால் குறைந்தா போய்விடுவான்.

இவ்வாறெல்லாம் யோசித்தாலும் அவன் தான் முதலில் பேச வேண்டும் என்று சம்யுக்தா நினைக்கவில்லை. “ஹலோ! மிஸ்டர்.ப்ருத்விராஜ்! நல்லாவே நடிக்கிறீங்க. நான் சொல்லப் போகும் விஷயத்தையும் கேட்டுட்டு இன்னும் கொஞ்சம் அதிகமா ட்ரை பண்ணுங்க.‌ ஆஸ்காருக்கு உங்களை ரெகமண்ட் பண்றேன்” என்று ஆரம்பித்தாள். அதற்கும் அவன் அசரவே இல்லை.

“இன்னும் அஞ்சு வருஷம் டெய்லி வந்து என் மூஞ்சியைக் காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு அப்புறம் உங்க ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பாக்குறேன்” என்றபோது ஏதோ புரிந்தும் புரியாதது போல முழித்தான்.

“எல்லாம் என் நேரம். நான் நம்ம ஊரு மெடிக்கல் காலேஜ்லயே படிக்கிறதுன்னு தலையால தண்ணீர் குடிச்சு வீட்டுல பெர்மிஷன் வாங்கிட்டு வந்தா, இங்கே பாறாங்கல்லு மாதிரி ஒரு ரியாக்ஷன் வருது. இதுக்கு நான் டெல்லிக்கே போயிருக்கலாம் போலிருக்கே” என்று அலுத்துக் கொண்டு நிதானமாக கையில் இருந்த சாக்லேட்டைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தாள்.

அதுவரையில் காதலிக்க நேரமில்லை என்ற மோடில் இருந்த பிரபாகரனின் இதயம் விழித்துக் கொண்டது. அதன் பின்னர் இருவருமாக சாக்லேட்டை விளம்பரத்தில் வருவது போலவே சாப்பிட்டது தனிக் கதை. அதற்குப் பிறகும் சம்யுக்தாவின் படிப்பு பற்றி பிரபாகரன் வாய் திறந்து வாழ்த்தும் சொல்லவில்லை, அவள் தேனியிலேயே படிக்கப் போவது பற்றி கருத்தும் சொல்லவில்லை. இவற்றுக்கு பதிலாக அவள் கைபிடித்துக் குலுக்கி ஒரேயொரு புன்னகையை மட்டுமே கொடுத்தான்.

வெகு நாட்கள் வரையிலும் அந்தப் புன்னகையின் அர்த்தம் சம்யுக்தாவிற்கு விளங்கவே இல்லை. அதனால் தானோ என்னவோ தினசரி பிரபாகரனின் கடைக்கு வந்தாள். கல்லூரிப் பேருந்தில் இவள் நிறுத்தம் மாறி இறங்குவது பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

கடையில் இவளைப் பார்த்ததும் இது ஆப்பிள் திங்கள், மாதுளை செவ்வாய், ஆரஞ்சு புதன் என்று புரிந்து அதற்கேற்ற ஜுஸைக் கொடுத்து விடுவார்கள். இவளும் கடனே என்று அதனை உறிஞ்சிக்கொண்டு பிரபாகரன் இருக்கிறானா என்று தேடுவாள். பிறகு ஏமாற்றத்துடன் வீடு திரும்புவாள்.

ஒரு நாள் சரண்யாவைக் கடையில் பார்த்தாள். இருவரும் பார்த்ததும் கண்களில் ஒரு ஷாக் ரியாக்ஷன் கொண்டு வந்தனர். “ஏய் சம்யூ! நீ என்ன இந்தப் பக்கம்? காலேஜ் பஸ் தான் உங்க வீட்டு பக்கத்துலயே நிக்குமே. எதுக்கு இங்க வரைக்கும் வந்திருக்க, எதுவும் வாங்கணுமா?” என்று அதிசயித்தாள் சரண்யா. அவள் சம்யுக்தாவின் மனம் இன்னும் பிரபாகரனை நினைத்துக் கொண்டு இருக்கும், அவர்களின் உறவு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கும் என்று கனவிலும் நினைத்தாள் இல்லை.

“அடடே சரண்யா பொண்ணு! ரொம்ப நாள் ஆச்சு உன்னைப் பார்த்து, என்ன ஜுஸ் போடட்டும்?” என்று கேட்டபடி வந்தார் முருகேசன். அவர் அடுத்து சொன்னது தான் சரண்யாவிற்கு ஹார்ட் அட்டாக் வரவழைக்கும் போலிருந்தது.

“என்னம்மா சம்யூ! நான் தான் சொல்றேன்ல, இப்படி டெய்லி அலையாத மா. தம்பி கம்பம் கிட்ட தோட்டம் போடற வேலைல பிஸியா இருக்காரு. இன்னும் மூணு கடை ஆரம்பிக்கப் போறாங்க போல. அதான் இங்க கடைக்குக் கூட வரதில்ல. ஃபோன்ல தான் விசாரிக்கிறாரு. எப்படியும் இன்னும் இரண்டு மாசம் ஆகிடும் அங்க வேலை முடியறதுக்கு. புரிஞ்சுக்க மா.”

இதைக் கேட்ட சம்யுக்தா அவரது கண்களையே தீர்க்கமாகப் பார்க்க அவர் அவசர வேலை இருப்பது போல நகர்ந்து விட்டார். பின்னே, பிரபாகரன் பகல் பொழுது முழுவதும் இங்கே தானே இருக்கிறான்.‌ கடைக்கு வரவே இல்லை என்று அவர் கூசாமல் வாய்ப்பு கிடைத்தது என்று அள்ளி விட்டாள் சம்யுக்தா நம்பி விடுவாளா என்ன?

இந்த நிகழ்வைக் கண்ட சரண்யா‌, “சம்யூஊஊஊ! என்னடி நடக்குது இங்க? அந்த அண்ணா என்ன சொல்லிட்டு போறார்?” என்று அலறினாள். சம்யுக்தாவிடம் அமைதி, அமைதி, அமைதி மட்டுமே.

“சம்யூ! என்னடி பேசாம இருக்க, அவரு தம்பின்னு சொன்னது அவங்க ஓனரையா? நீ இன்னும் அவனைப் பாக்கிறதை விடலையா? ஏதாவது சொல்லித் தொலையேன்டி. எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு” என்று சம்யுக்தாவை உலுக்கி எடுத்தாள்.

“ஆமா… அவன் தான்… அதுக்கென்ன இப்போ?” அசராமல் கேட்ட சம்யுக்தாவை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தாள் சரண்யா. ‘அய்யய்யோ! அதான் இவ இங்கேயே படிக்கிறேன்னு ஒத்தக்கால்ல நின்னாளா? நான் கூட நம்ம ஃப்ரண்ட்ஷிப்புக்காகன்னு பெருமையா நினைச்சேனே! இவ வீட்டுல மாட்டும் போது என்னையும் சேர்த்து தொங்க விட்டுறுவாங்களே’ என்று மனதுக்குள் அலறியவள் வெளியே தோழியை முறைத்து வைத்தாள்.

அவளிடம் பொறுமையாகப் பேசித்தான் புரிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். “சம்யூ! நாளைக்கு சனிக்கிழமை உனக்கு லீவ் தானே. இல்லேன்னா லீவ் போட்டு எங்க வீட்டுக்கு வாயேன், அம்மா கூட இருக்க மாட்டாங்க. நாம ஜாலியா ஆட்டம் போட்டு நாளாச்சு” என்று கொக்கியை போட அதை அசால்ட்டாக தூக்கி போட்டாள் அடுத்தவள்.

“எதுக்கு திடீர்னு வீட்டுக்கு கூப்பிடற? எனக்கு ஏதாவது அட்வைஸ் பண்ற ஐடியா இருந்தா அப்படியே மூட்டை கட்டி வச்சிடு. நான் என்ன செய்யறேன்னு நல்லா தெரிஞ்சு தான் செய்யறேன். என் ஃப்ரெண்டா நீ எனக்கு ஹெல்ப் தான் பண்ணனும். புரிஞ்சுதா?”

சரண்யாவிற்கு தோழியின் வார்த்தைகளைக் கேட்டு வயிற்றில் ரயில் எஞ்சின் ஓடியது. ‘இதென்ன மிட்டாய் வாங்கும் விஷயமா, தோழி என்று உதவி செய்வதற்கு? நல்ல தோழியாக இதிலுள்ள சாதக பாதகம் எல்லாம் எடுத்துச் சொல்வது தானே சரி’ என்று அவளால் நினைக்கத் தான் முடிந்தது.

“சரி விடு. இப்போ வீட்டுக்கு போகலாமா, இல்ல… இங்கேயே இருந்து டைம் வேஸ்ட் பண்ணப் போறியா?”

“வரேன், வரேன்.‌ ஆனால் நீ…”

“என் வாய்க்கு பெரிய ஜிப் போட்டேன் தாயே. வாயைத் திறந்து பேசவே மாட்டாள் இந்த சரண்யா” என்று சம்யுக்தாவை அழைத்துச் சென்றாள்.

போகும் வழியெங்கும் அவளது மூளை சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டே இருந்தது. இதைப் பற்றி யாரிடம் பேசினால் நல்லது என்று யோசித்து யோசித்து கடைசியாக பிரபாகரனிடமே பேசுவது என்று முடிவு செய்து கொண்டாள்.

*****

“வாம்மா சரண்யா! ரொம்ப நாளா ஆளையே காணோம். படிப்பெல்லாம் எப்படி போகுது?” சாதாரணமாக விசாரித்து வைத்தான் பிரபாகரன்.

“வரவேண்டிய சிச்சுவேஷன் வந்துச்சு. அதான் வந்திருக்கேன்” என்று பதில் சொன்னாள் சரண்யா. குரலில் சற்றே காரம் தூக்கலாக இருந்தது.

“ஹச்.. ஹப்பா என்ன நெடி.. என்ன நெடி? மொளகா ரொம்ப காரமா இருக்கும் போலிருக்கே” என்று சிரித்தவனை மேலும் முறைத்தாள் சரண்யா.

“சரி.. முறைச்சது போதும், வந்த விஷயத்தைச் சொல்லு.”

“உங்களுக்கு தெரியாதா?”

“எனக்கு எப்படி தெரியும்? இதுக்கு முன்னாடி நாம எதுவும் பேசி இருக்கோமா?”

“ம்ச்.. சும்மா நடிக்காதீங்க அண்ணா! சம்யூ விஷயமா தான் பேச வந்திருக்கேன். அவளைப் பத்தி உங்க அபிப்பிராயம் என்னன்னு எல்லாம் கேட்க மாட்டேன். அது எனக்கே தெரியும். ஆனால் எது வந்தாலும் சமாளிக்க முடியும்னு உங்களுக்கு தோணுதா? உங்களால அவ படிப்பு பாதிக்காத மாதிரி செய்ய முடியுமா? அவங்க பேரன்ட்ஸ் ஜாதி எல்லாம் பார்க்க மாட்டாங்க. பட் கண்டிப்பா ஸ்டேடஸ்னு வரும் போது அவங்க எப்படி நடந்துப்பாங்கன்னு சொல்லவே முடியாது” மூச்சு வாங்க பேசியவளை அமைதியாகப் பார்த்து வைத்தான் பிரபாகரன்.

“நான்…..”

“நீங்க அதையெல்லாம் யோசிக்கிறீங்கன்னும் புரியுது. அதனால தான் இப்போ அவளை அவாய்ட் பண்றீங்கன்னும் தெரியுது. அவ இதுவரைக்கும் ஏதாவது கேட்டு இல்லைன்னு ஆனதே கிடையாது. உங்க விஷயத்திலும் அப்படி நடந்தால் நல்லா இருக்கும், நடக்குமா?” என்று கமல்ஹாசன் மாதிரி கேள்வி கேட்டவள் பிரபாகரனின் கவனம் வேறெங்கோ இருப்பதை அறிந்து திரும்பினாள்.

அங்கே இடுப்பில் கை வைத்து நெற்றிக் கண்ணைத் திறந்து இரு
வரையும் பொசுக்கி விட முயற்சி செய்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
52
தேடித்தேடி அலைகிறேன் உன் தரிசிக்க ஆனால் நீ என் கண்பார்க்க மறுக்கிறாய்..என் நிழலைக்கூட கண்டு அஞ்சுகிறாய்
 
Top Bottom