• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -5

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -5


"அம்மா! இங்க பாருங்களேன்! பாரதியார் பிறந்த நாளுக்காக நடந்த பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு. எங்க வாத்தியார் எனக்காக வாங்கிட்டு வந்தாராம். இந்த புஸ்தகம் பாத்தீங்களா, பாரதியார் கவிதைகள். வீட்டுக்கு போனதும் எனக்கு வாசிச்சு காட்டுறீங்களா? நான் பெரியவன் ஆனதும் பாரதியார் மாதிரியே பெரிய மீசை வச்சுப்பேன்."

உற்சாகத்துடன் குதித்துக் கொண்டும் லொடலொடவென்று பேசிக் கொண்டும் தாயுடன் நடந்த அந்தப் பையனுக்கு பத்து வயதிருக்கலாம். வலது தோளில் அவனது பையைச் சுமந்து கொண்டு, இடுப்பில் ஒரு ஏழெட்டு மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, கையில் நான்கு வயதுப் பையன் ஒருவனைப் பிடித்துக் கொண்டு நடந்த அந்தப் பெண் மகனது கேள்விக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் மகனோ விடுவதாக இல்லை, "அம்மாஆஆஆ! அன்னைக்கு கூட சொன்னீங்களே அந்த பூனைக்குட்டி பாட்டு.. அப்புறம் அந்த ஓம் சக்தி பாட்டு.. அதை வாசிக்கறீங்களா?" அவன் கேட்ட கேள்வியில் இருந்து அவனுக்கு பாரதியை அறிமுகப் படுத்தியது அவனது தாய் தான் என்று அந்தப் பேச்சைக் கேட்ட எவருக்கும் புரிந்திருக்கும்.

"ராகவா! நீ சமத்துப் பையன் தானே. வீட்டுக்கு போனதும் நிறைய வேலை இருக்கும். அம்மாவுக்கு நேரம் கிடைக்கும்போது வாசிச்சு காட்டுவேன். உடனே வாசிக்கணும்னு அடம் பிடிக்கக் கூடாது. அஞ்சாங்கிளாஸ் வந்தாச்சே, நீயே எழுத்துக் கூட்டி வாசிச்சு பழகணும், சரியா?"

"அம்மா! அடுத்த வாரம் தமிழ் மன்றம் சார்பில் ஒரு கவிதைப் போட்டி இருக்காம், அதுலயும் நான் தான் முதல் பரிசு வாங்குவேன். நீங்க நான் பேசறதைக் கேட்க வரணும். இன்னைக்கு மாதிரி பெல் அடிக்கிற நேரத்துக்கு வராமல் சீக்கிரம் வரணும், சரியா?"

"ம்ம்.. சரி.. ஒரு வேளை அம்மாவுக்கு வரமுடியாமல் போனாலும் நீ நல்லா பேசி பரிசு வாங்கணும்." மகனுக்கு சமாதானம் என்ற பெயரில் அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வந்த போது தேவதைகள் ததாஸ்து சொல்லிவிட்டன போலும். அதை அறியாமல் அவள் மேலும் மகனுடன் பேசியபடி வீடு வந்து சேர்ந்தாள்.

கூடத்தில் கால் வைத்தவளை அங்கே இருந்த அனைவரும் ஆண் பெண் பேதமில்லாமல் முறைத்தனர்.

"இதெல்லாம் என்ன பழக்கம் சுந்தரம்? கூப்பிடு தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடத்தில இருந்து அவன் நடந்து வரமாட்டானா? இவ இரண்டு வேளையும் இப்படி போயிட்டு வந்தா, வீட்டுல இருக்கிற வேலையெல்லாம் யார் செய்யறது?" மாமியாரின் குரல் ஓங்கி ஒலித்தது. அப்போது தான் அங்கே அமர்ந்திருக்கும் கணவனைக் கவனித்தாள் அவள். கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழித்து வீடு வந்திருக்கிறான்.

அவள் வாயைத் திறந்து பதில் எதுவும் சொல்லவில்லை என்றாலும் பார்வை மாமியாருக்கு அருகில் நின்றிருந்த ஓரகத்திகள் மேல் ஒரு நொடிக்கும் மேலாக விழுந்து மீண்டது. இவளது பார்வையை உணர்ந்த இருவரும் இவளை இளக்காரமாகப் பார்த்தனர்.

"அங்கே என்ன பார்வை? மூத்த மருமகள்னு உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருந்தால் தானே அவங்க இரண்டு பேரையும் கேட்க முடியும். போ.. மசமசன்னு நிக்காம சீக்கிரம் வேலையைப் பாரு. பரமன் வாழைக்காய் வாங்கிட்டு வந்தான் பாரு, காப்பி கூட சூடா பஜ்ஜி போட்டுடு, வெங்காய பஜ்ஜின்னா சுந்தரத்துக்கு ரொம்ப பிடிக்கும். அதையும் சேர்த்து செஞ்சிரு. மூஞ்சி தான் லட்சணமா இல்லை, நல்லா சமைச்சு போட்டு அவன் வயிறு நிறைஞ்சா அவன் ஏன் தள்ளிப் போறான்? புருஷனுக்கு என்ன பிடிக்கும்னு கூடத் தெரியாமல் ஒரு பொண்ணு இருந்தா அவனுக்கு வீட்டுக்கு வரணும்னு எப்படித் தோணும்?"

மருமகளுக்கு கட்டளைகளைப் பிறப்பித்த கையோடு அவளது வாழ்க்கையையும் விமர்சனம் செய்ய மறக்கவில்லை சுந்தரத்தின் தாய்.

"விளக்கமாத்துக்கு பட்டு கொஞ்சம் பேரு வச்சது மாதிரி இவ இருக்கிற லட்சணத்திற்கு சியாமளான்னு லட்சணமா ஒரு பேரு. நல்ல வேளை பேர் வச்சதும் இவ அம்மா போய் சேர்ந்துட்டா.. இல்லேன்னா.. இப்படி ஒரு பேரை ஏன்டா வச்சோம்னு தினந்தினம் நொந்து போயிருப்பா" என்று ஒரு நாளில் ஒரு பொழுதேனும் குத்திக் காட்டாமல் இருந்ததில்லை அவர். இத்தனை வருடங்களில் சியாமளாவுக்கு பழகிப்போன ஒரு விஷயமாக இருந்தாலும் தாயை நினைத்து மனம் ஏங்கும்.

'அச்சோ! அத்தை! சியாமளான்னா அர்த்தம் தெரியாமல் பேசுறீங்களே? எனக்கு எதுல பொருத்தம் இருக்கோ இல்லையோ.. பேர் வச்சதுல கருப்பான எனக்கு சியாமளான்னு பொருத்தமா பேர் வச்சிட்டு போயிருக்காங்க எங்க அம்மா' எப்போதும் போல மனதுக்குள் மாமியாருக்கு பதில் கொடுத்தவள் அமைதியாக அவ்விடத்தில் இருந்து நகர முயன்றாள்.

மாதம் ஒரு முறை எட்டிப் பார்க்கும் கணவனுடன் வாழாமலா, திருமணம் ஆகி பத்து ஆண்டுகளில் ஐந்து பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள். அதில் இரண்டு பெண் குழந்தைகள் நாள் கணக்கில் தான் உயிரோடு இருந்தன. காரணம் என்ன என்று அவளறியாள்.

"நாலு தலைமுறையா பொண்ணே பிறக்காத இந்த குடும்பத்தில மஹாலட்சுமியே வந்து பிறந்துட்டான்னு நினைச்சேனே.. இந்த மூதேவி வயத்துல வந்து பிறந்தோமேன்னு மண்ணோட போயிட்டாளே!" ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டிய மாமியார், பச்சை உடம்புக்காரி என்ற நினைவே இல்லாமல் குழந்தையைப் புதைத்த அடுத்த நிமிடமே மருமகளுக்கு வேலைகளை அடுக்கினாள்.

எருமையை விடப் பொறுமையாக சியாமளா இருக்க, அந்த வீட்டில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வேலைக்காரி ஆனாள். கொஞ்சம் சுணங்கினாலும் கன்னம் பழுத்துவிடும். இன்றும் அப்படித்தான், என்ன காரணம் என்றே தெரியாமல் கணவனிடம் அறை வாங்கினாள். அடுத்த நொடியே மாமியார் வாயை மூடிக்கொண்டார். ஒரு வேளை இவளிடம் தனக்கு மட்டுமே உரிமை என்று காட்டுவதற்கு சுந்தரம் கையில் எடுக்கும் ஆயுதமோ இந்த அறைகள் என்று அவளுக்கு அவ்வப்போது சந்தேகம் வந்ததுண்டு.

அறை வாங்கிய கையோடு கைக்குழந்தையை தூளியில் போட்டுத் தூங்க வைத்துவிட்டு வந்தவளைச் சமையலறை இழுத்துக் கொண்டது.

மூத்த மருமகள் என்று மரியாதையோ பாசமோ இல்லாவிட்டாலும் இருபத்து நான்கு மணி நேரமும் வேலை சொல்வதற்கு அந்த வீட்டில் யாரும் தயங்கியதே இல்லை. சுந்தரத்துக்கு இரண்டு தம்பிகள், இருவருக்கும் சொந்தத்தில் தான் பெண் எடுத்திருக்கிறார்கள்.

ஏழ்மையான குடும்பம் என்றாலும் பெண்கள் இருவரும் தேவலோகத்து அப்சரஸ்கள் போல அழகானவர்கள். மொத்தத்தில் அந்த வீட்டின் மொத்த சொத்துக்கும் அதிபதியான சியாமளாவிடம் இல்லாத சிவந்த தோலும் சாமுத்திரிகா லட்சணத்துடன் கூடிய உருவமும் ஊரையே விலைக்கு வாங்கும் படியான வாயும் அவர்களிடம் இருந்தது. கூடவே, பெண்களுக்கு ஒன்று என்றால் அடுத்த நொடியே கூடி பஞ்சாயத்து வைக்கும் பிறந்த வீட்டினர்.

சியாமளாவுக்கு பிறந்த உடனேயே பிறந்த வீடு என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது. அதனாலேயே அந்த வீட்டில் அனைவருக்கும் அவள் கிள்ளுக்கீரையாகிப் போனாள்.

இத்தனைக்கும் அவளது தயவில் தான் அனைவரும் உண்டு உறங்கி வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கோழி பிடிக்கலாமாமே!

இங்கே, அவளைக் கொண்டவன் அவள் முகம் பார்த்து பேசியதே இல்லை. தனது உடல் தேவைக்காக மட்டுமே அவளை அணுகுபவன், மறந்தும் அவளிடம் பேசியதே இல்லை. எப்போதும் எதையும் மனம் திறந்து பேசியறியாத சியாமளா, காலப்போக்கில் பிள்ளைகளையே தனது உலகமாக மாற்றிக் கொண்டாள்.

இப்போது மைத்துனர்களுக்கும் குழந்தைகள் வந்ததில் இவளது வேலைப்பளு தான் ஏறியிருக்கிறது. பிள்ளைகளுடன் செலவழிக்கும் நேரத்தை அவள் விட்டுக் கொடுக்க தயாராக இல்லாததால் புதிது புதிதாக ஏச்சுகளும் பேச்சுகளும் அவளை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறது. அண்ணி என்ற மரியாதையான எல்லைக்குள் நில்லாமல் மைத்துனர்களின் வார்த்தைகள் பல நேரங்களில் எல்லை மீற ஆரம்பித்திருக்கிறது. இவையெல்லாம் சுந்தரம் அறியாமலில்லை. ஆனாலும் அவன் கண்டு கொள்ளாமல் இருக்க தம்பிகள் ஆட்டம் போட்டனர்.

எதையும் கண்டுகொள்ளாமல் கருமமே கண்ணாயிருந்தாள் சியாமளா.

"சொல்லுக் கடங்காவே-பராசக்தி

சூரத் தனங்கலெல்லாம்;

வல்லமை தந்திடுவாள்-பராசக்தி

வாழியென்றே துதிப்போம்"

சமையலறையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து சத்தமாக வாசித்துக் கொண்டிருந்த ரகுவரன், "அம்மா நான் சரியா தானே வாசிக்கிறேன்? இந்தக் கவிதையைக் தான் போட்டிக்கு சொல்லப் போறேன். எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு" என்று சொல்லி விட்டு தாயிடம் இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காதவனாக அடுத்த வரிகளைப் படிக்கலானான்.


"வெற்றி வடிவேலன் -அவனுடை

வீரத்தினைப் புகழ்வோம்;

சுற்றி நில்லாதே போ!-பகையே!

துள்ளி வருகுது வேல்!"


'என்னைச் சுத்தி பகை மட்டும் தான் இருக்கு. வடிவேலன் ஏதாவது செய்யமாட்டானான்னு தான் நானும் காத்திருக்கேன்' மனதுக்குள் கண்ணீர் வடித்தாள் சியாமளா. ஆனால் அவளது கண்ணீர் எல்லாம் கானல் நீராகவே போய்விட்டது. அவளது விஷயத்தில் அந்த வடிவேலன் கருணை காட்டவே மறுத்து விட்டான். விளைவு, அறியாத வயதில் மூன்று குழந்தைகள் தாயில்லாப் பிள்ளைகள் ஆனார்கள்."

******

தாயின் நினைவுகளில் மூழ்கி இருந்த ரகுவரனின் மனதில் அந்தக் கொடுமையான நாள் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. அன்று பள்ளியில் கவிதைப் போட்டி நடந்து கொண்டிருந்தது. நொடிக்கொரு முறை வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தது ரகுவரனின் கண்கள். ஆனால் அவன் கவிதை சொல்லி முடித்து பரிசுகளை அறிவித்த பின்னும் அன்னையைக் காணவில்லை. அவனது தன்னம்பிக்கை வெற்றியைக் கொடுத்திருக்க, அன்னை வராததால் சுணங்கிய மனதுடன் மெதுவாக வீட்டை நோக்கி நடந்தான்.

"அம்மா! நான் சொன்ன மாதிரி பரிசு வாங்கிட்டேன் பாருங்க!" என்று கத்திகொண்டே உள்ளே நுழைந்தவனுக்கு அங்கே இருந்த சூழ்நிலையைப் புரியும் அளவுக்கு வயதில்லை. நடுக் கூடத்தில் சியாமளா படுத்திருந்த அந்த நிலை இன்றும் அவரது மனதில் பசுமையாக நினைவில் இருக்கிறது.

அதன் பின்னணியையும் விளைவுகளையும் வெகு காலம் சென்றே ரகுவரன் தெரிந்து கொண்டார். அதுவும் அவர்களது நம்பிக்கையான ஒன்று விட்ட சொந்தங்களின் வாயிலாக ரத்த சொந்தங்களின் கருப்பு பக்கங்களை அறிந்த பிறகு வாழ்க்கையில் எவரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்து விட்டார்.

உலகில் இருவகையான பாடங்களை மனிதரின் நடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கும். வாழ்ந்தால் இவரைப் போல வாழ வேண்டும் என்பது ஒரு வகை, அதற்கு முற்றிலும் மாறாக இவரைப் போல வாழ்ந்துவிடக் கூடாது என்பது இரண்டாம் வகை. கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள உறவு விஷயத்தில் ரகுவரனின் தந்தை இரண்டாம் வகையான பாடத்தை மகனுக்கு அளித்திருந்தார்.

எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்த போதிலும், வாழ்க்கையின் பெரும் பகுதியை மனைவியுடன் நிறைவாகவே வாழ்ந்தவருக்கு அவளது தற்போதைய நிலை, நிலைகுலையச் செய்திருந்தது. இத்தனைக்கும் வண்ண மயமான அவர்களது வாழ்வில் சில கருப்பு பக்கங்களையும் ஜானகி காட்டியிருக்கிறார். ஆனாலும் ரகுவரனின் ஜானகிக்கான அன்பு அனைத்திற்கும் அப்பாற்பட்டது.

இப்படி மனதில் பல சிந்தனைகளோடு ரகுவரன் உழன்று கொண்டிருக்க, ஜானகியை நகரின் ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்து, அவரது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்று ஆராய ஆரம்பித்திருந்தார்கள். ஆம்புலன்ஸ் மருத்துவமனை வந்து நினாறதையோ, ஜானகியுடன் அவரும் இறங்கியதையோ, இதோ இப்போது ஐசியு வாசலில் தவமிருப்பதையோ ரகுவரன் அறிந்தாரில்லை. பேரன் பொறுப்பாகச் செயல்பட்டு தாத்தா பாட்டி இருவரையும் பார்த்துக் கொண்டான்.

நீரஜ் ஒரு மருத்துவன் என்பதாலும் பாட்டியைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருப்பதாலும் அந்த மருத்துவர் குழுவுக்கு தன்னால் இயன்ற அளவு உதவிக்கொண்டிருந்தான்.

ஜானகி இன்னும் மயக்கத்திலேயே இருந்தார். அது மயக்கம் தான் என்று மருத்துவர்கள் முடிவு செய்தாலும், ஆக்சிஜன் அளவும் குறைய ஆரம்பித்ததால் வென்டிலேட்டர் பொருத்தி விட்டு அடுத்த கட்ட சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது என்று மருத்துவர்கள் முடிவு செய்து நீரஜிடம் தெரிவித்தார்கள். தான் ஒரு மருத்துவன் என்பதையும் மீறி வென்டிலேட்டர் என்ற வார்த்தை நீரஜை கலங்க வைத்தது. ரகுவரனின் ஒப்புதல் இல்லாமல் தானே இந்த விஷயத்தில் முடிவெடுப்பது சரியா என்பதும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் ஜானகி இருந்த நிலை...

"வெல் டாக்டர்.நீரஜ்! உங்களுக்கு தெரியாததில்லை. இந்த மாதிரி சிச்சுவேஷன்ல பேஷண்ட் உயிரோடு இருக்கறது தான் முக்கியம். அப்போ தான் நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்னு டிசைட் பண்றதுக்கு டைம் கிடைக்கும். அப்படியே விட்டா she may slip into coma. பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் வராம எந்த ட்ரீட்மென்ட்டும் ஸ்டார்ட் பண்ணவும் முடியாது, please co-operate" என்ற‌ தலைமை மருத்துவரின் பேச்சை உள்வாங்கிய நீரஜ் தாத்தாவைத் திரும்பி பார்த்தான்.

"கிவ் மீ டூ மினிட்ஸ் டாக்டர்!" என்று தாத்தாவை நோக்கி நகர்ந்தவனுக்குத் தலையை அசைத்து ஒப்புதல் அளித்தார் அந்த மருத்துவர்.

ரகுவரனின் அருகில் வந்து அவரது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அமர்ந்தான் நீரஜ். அவனது தொடுகையை உணர்ந்தாற் போல அமைதியாக அவனைத் திரும்பிப் பார்த்தவரின் கண்களில் தெரிந்த உணர்வு என்னவென்று நீரஜூக்குப் புரியவே இல்லை. "தாத்தா!" என்று ஆரம்பித்து அவன் சொன்ன விஷயம் அவர் செவிகளைத் தாண்டி உள்ளே சென்றது போலத் தோன்றவே இல்லை.

தனது இக்கட்டான நிலையை எண்ணி ஒரு பெருமூச்சு விட்டவன், என்ன செய்வது என்று முடிவெடுத்து விட்டான். தாத்தாவின் கைகளை விடுவித்து விட்டு எழுந்து சென்றான்.

"இட்ஸ் ஓகே டாக்டர். நீங்க உங்க ப்ரோசிஜர் ஃபாலோ பண்ணிக்கோங்க. எனக்கு என் ஜானு டார்லிங், ஐயாம் சாரி.. என் பாட்டி நல்லபடியா திரும்பி வரணும். தட்ஸ் இட்" என்று அவரது கையைப் பிடித்துச் சொல்லி விட்டுப் புன்னகைத்தான்.

அங்கிருந்தே அவரது குழுவினருக்குத் தேவையான குறிப்புகளைக் கொடுத்தவர்,

"If you don't mind.. ஜஸ்ட் ஒரு சீனியரா உங்களுக்கு ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன்" என்றார்.


அவரை யோசனையுடன் பார்த்தபடி

"Please go ahead Doctor.. " என்றான் நீரஜ்.

"ஒரு டாக்டரான நீங்களே இப்படி வென்டிலேட்டரான்னு யோசிச்சா சாதாரண மக்கள் என்ன பண்ணுவாங்க? உங்களுக்கு வரும் பேஷண்டை எப்படி கன்வின்ஸ் செய்வீங்க? ஒரு டாக்டருக்கு முதல் கடமை பேஷண்டை உயிரோடு வைக்கிறது தான். அப்போ தான் அடுத்த லெவல் டெஸ்ட் அதுக்கான ட்ரீட்மென்ட்னு நிதானமா யோசிக்க முடியும். இந்த வசூல் ராஜா படத்தில் வர மாதிரி இந்த மாதிரி சமயங்களில் நாம டாக்டரா மட்டும் நடந்தால் தான் எல்லாருக்கும், especially பேஷண்டுக்கு நல்லது" என்று இடைவெளி விட்டார்.

"யெஸ் டாக்டர்.. " என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னவனைக் கண்டு தனது அறிவுரையை மேலும் தொடர்ந்தார் அந்த மருத்துவர்.

"நீங்க உங்க ஜானு டார்லிங் மேல ரொம்ப பிரியம் வச்சிருக்கீங்கன்னு தெரியுது. அவங்க நல்லபடியா திரும்பி வருவாங்க. அதுக்கு ட்ரீட்மென்ட் கூடவே தேவையான இன்னொன்று நம்பிக்கை. Let us hope for the speedy recovery (சீக்கிரம் குணமாகும்னு நம்புவோம்)" என்றவர் சிறிய இடைவெளி விட்டு, "Hope you have taken my opinion in the right sense (நான் பேசியதை நல்லவிதமாக எடுத்துக் கொண்டீர்கள் என்று நம்புகிறேன்)" என்றார் அவனைத் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டு.

"ஹான்… thank you very much sir.. " என்று அவனது புரிதலை ஒரு புன்னகை கலந்த நன்றியுடன் வெளிப்படுத்தினான். அத்தனை பெரிய உயரத்தில் இருக்கும் மருத்துவர், இவ்வளவு பேசுவார் என்று அவன் நினைத்திருக்கவில்லை. பல முறை தொழில் தொடர்பான கருத்தரங்குகளில் சந்தித்திருக்கிறான். ஹாய், ஹலோ, ஹவ் டூ யூ டூ? என்ற அளவில் பேசியிருக்கிறான். அவரது மகன் நீரஜூடன் படித்தவன், நெருங்கிய நட்பில்லை என்றாலும் அடிக்கடி தொடர்பில் இருப்பவர்கள். அந்த அடிப்படையில் தான் ஜானகிக்கு இந்த மருத்துவமனையை அவன் சட்டென்று தேர்ந்தெடுத்தது.

சில மணி நேரத் தவிப்பு அடங்கிய நிலையில் அவனது மனம் ஒரு நிலைக்கு வந்தது. இப்போது தான் சுற்றுப்புறம் உறைத்தது. ஜானகியின் உடல்நலம் பிரதானமாக இருக்க கடகடவென்று முடிவெடுத்து விட்டான். இப்போது தான் பதட்டத்தில் அவன் செய்யாமல் விட்ட விஷயங்கள் ஞாபகத்தில் வந்தது. "அச்சோ!" என்று தலையில் கை வைத்து ரகுவரனின் அருகில் உட்கார்ந்து கொண்டான்.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
ரகுவரனின் இளமைக்காலம் படிக்கவே மனம் கனக்கிறது.
சியாமளாவைப்போல பல அப்பாவிகள் பந்தாடப்படுகிறார்கள்
 
Top Bottom