• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -3

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -3


அந்தக் கோவிலின் உள்ளே கச்சேரிகள் மற்றும் உபன்யாசங்கள் நடக்க ஏதுவாக மண்டபம் ஒன்று இருந்தது கிட்டத்தட்ட இருநூறு பேர் வரை வசதியாக அமர்ந்து ரசிக்கும் படியான ஏற்பாடு அது. ரகுவரன், ஜானகியைப் போல நூற்றைம்பது பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் கம்யூனிட்டி அது. அதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்று சொன்னால் சென்னை நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருந்தது தான். அதே நேரத்தில் வெயில் தெரியாதபடி பச்சை பசேல் என்று மரங்களுடன் மனதிற்கு ரம்யமான ரிசார்ட் போன்ற ஓர் இடம்.

மருத்துவமனை, சூப்பர் மார்க்கெட், பார்க், கோவில், பெரிய டைனிங் ஹாலுடன் கூடிய சமையலறை, சிறிய விழாக்களை நடத்தும் படியான ஹால் என்று சகல வசதிகளையும் உள்ளடக்கியது.

நாலே முக்காலுக்கெல்லாம் கோவில் மண்டபத்தை அடைந்தார்கள் ரகுவரனும் ஜானகியும். மேடையில் சுதி பெட்டி, வயலின் மற்றும் மிருதங்கத்தோடு ஆட்கள் தயாராக இருக்க ஜானகி கணவனை மறந்து நேராக மேடைக்குச் சென்றாள். சுற்று முற்றும் பார்த்த ரகுவரன் ஜானகிக்கு நேர் எதிரே சென்று ஒரு நாற்காலியில் இடம் பிடித்தார். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருக்க ஆட்கள் வரத் தொடங்கினார்கள்.

சரியாக ஐந்து மணிக்கு அனைவருக்கும் கூப்பிய கைகளுடன் ஒரு புன்னகையைப் பரிசளித்த ஜானகியைக் கண்ட ரகுவரன் அப்போதுதான் ஒரு விஷயத்தை கவனித்தார். ஜானகியைத் தவிர மற்ற அனைவரும் ஏன் ரகுவரனும் கூட குளிருக்கு ஏதுவாக மங்கி கேப்போ மஃப்ளரோ அணிந்து கொண்டு வந்திருந்தார்கள். இதைப் பார்த்த ரகுவரனது கற்பனை எங்கெங்கோ செல்லத் தொடங்கியது.

(என்னடா இந்த ரைட்டர்.. இரண்டு எபிசோடா இந்த ஜோடிக்கு கொடுத்த பில்டப் என்ன.. இப்போ திடீர்னு தாத்தா பாட்டின்னு சொல்றது என்னன்னு யோசிக்காதீங்க மக்களே. இந்த ஜோடி எத்தனை வயசானாலும் ரொமாண்டிக் ஜோடி தான்..)

ஒரு காலத்தில் மிகப் பெரிய பதவிகளில் இருந்து, பெற்ற பிள்ளைகளை தங்களுக்கும் மேல் படிக்க வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கேயே செட்டில் ஆக வைத்தவர்கள் சிலர். உள்ளூரிலேயே இருந்தாலும் பிள்ளைகளோடு ஒத்துப் போக முடியாமல் தங்களுக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொண்டு வந்தவர்கள் சிலர். பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டவர்கள் சிலர். கடல் போன்ற வீட்டில் வயதான காலத்தில் கணவன் மனைவி மட்டுமே இருக்க பிடிக்காமல் இங்கே வந்தவர்கள் சிலர்.

மகள்களை மட்டுமே பெற்று, மாப்பிள்ளை வீட்டில் இருப்பதா என்று இங்கு வந்தவர்கள் சிலர். பிள்ளைகளோடு போகவும் முடியாமல் சொந்த வீட்டில் தனியாகவும் இருக்க முடியாமல் காடாறு மாதம் நாடாறு மாதம் என்று அலைந்து விட்டு ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய் வந்தவர்கள் சிலர்.

இப்படி, அவரவர் வசதிக்கேற்ப சிங்கிள், டபுள், ட்ரிபிள் பெட்ரூம் என்று இடத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக வாழப் பழகிக் கொண்டார்கள். சொந்தமாக வீடு வாங்காமல் வாடகைக்கு அல்லது லீசுக்கு வந்தவர்களும் உண்டு.

முடிந்தவரை தனியே சமைப்பவர்களும் உண்டு. அதே நேரத்தில் மிகவும் வயதானவர்களும் உடல்நிலை சரியில்லாதவர்களும் சமையலைப் பற்றிய கவலையில்லாமல் இருக்கும் படி சைவம் அசைவம் என்று தனித்தனியே சமையலறைகள் எல்லா நாளும் இயங்கிக் கொண்டிருந்தது. கூடுதல் ஆட்கள் வரும் போதும் ஜானகி போன்ற ஆட்களுக்கு முடியாத போதும் இந்த சமையலறை கை கொடுக்கும்.

எது எப்படி இருந்தாலும், வயதான காலத்திலாவது யாருடைய குறுக்கீடும் இல்லாமல் கணவன் மனைவி இருவருக்கும் தேவையான ப்ரைவஸி அங்கே கிடைத்தது. வருடக்கணக்கில் ஓடி ஓடி சம்பாதித்து குடும்பத்தை முன்னேறும் கடமையில் தங்களைப் பற்றி சிந்திக்க மறந்து போய் இருந்த பலரும் இப்போது தான் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள்.

தங்களை ஒத்த வயதினருடன் தங்களுக்கு ஏற்ற பொழுது போக்குகளுடன் வாழ்க்கை நன்றாகவே சென்றது. சில நேரங்களில் அதுவே பிரச்சனையாகி போனது. இதோ இப்போது ஜானகி பாடுவேன் என்று அடம்பிடிப்பது அப்படி ஒரு தருணம்.

அந்த கம்யூனிட்டியின் ஒரே ஒரு பாதகமான விஷயம் என்னவென்றால் இருக்கும் அனைவருமே வயதானவர்கள். தொண்ணூறுகளில் பெற்றோரும் அறுபதுகளில் இருந்த மகன், மருமகளுமாகக் கூட ஓரிரண்டு குடும்பங்கள் அங்கே இருந்தன. யாரையும் அவசரம் என்று மற்றவர்கள் தொந்தரவு செய்து விட முடியாது.

கம்யூனிட்டியின் பொதுவான விஷயங்களை கவனிப்பதற்கு என்று உதவி ஆட்கள் இருக்கிறார்கள் தான். தினமும் காலை மாலை இரு இரு வேளையும் எல்லா வீடுகளுக்கும் வந்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்துப் போவதற்கு என்றே ஒரு குழு இருந்தது. அவர்களையும் தாண்டி சில அசம்பாவிதங்கள் நடந்ததும் உண்டு. இன்று ஏதோ நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு உறுத்த ரகுவரனின் கவனம் கச்சேரியில் இல்லை.

ஊத்துக்காடு வெங்கட கவியின் 'ஸ்ரீவிக்ன ராஜம் பஜே' என்று ஆரம்பித்து ஒரு கீர்த்தனையை ஜானகி பாடி முடித்திருக்க, கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் ஒரு பாடலைப் பாடும்படி அனைவரும் கேட்க ஜானகியால் மறுக்க முடியாத சூழ்நிலை. ஆனால் தொண்டையில் கிச்கிச் ஆரம்பித்து விட்டது. மஃப்ளரை மறந்திருந்த ஜானகி, ஞாபகமாக ஃப்ளாஸ்கில் வெந்நீர் கொண்டு வந்திருந்தார்.

சில நிமிடங்கள் நிதானித்து வெந்நீரைக் குடித்துக் கொஞ்சம் தொண்டையைச் சரி செய்து கொண்டு,

நேயர் விருப்பத்தை நிறைவேற்ற அடுத்த பாடலைத் தொடங்கிய ஜானகிக்கு சங்கராபரணம் சாஸ்திரியைப் போல தொடர்ந்து இருமல் வர, அடுத்துப் பாட இருந்த மாமி அவசரமாக மேடைக்கு வந்து பாடலைத் தொடர்ந்தார்.

மார்கழி முதல் நாள் என்று எல்லாரும் சென்ட்டிமென்ட் ஆனதில் கச்சேரி ஒரு புறம் நடக்க, ஜானகியை மற்றவர்கள் கவனித்தார்கள். மெதுவாக மேடையை விட்டு இறங்கிய ஜானகியால் இருமலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. வெந்நீர் எடுத்து வந்த ஜானகி பஃப் எடுத்து வரவில்லை. தொடர்ந்து இருமியதில் நெஞ்செல்லாம் வலித்தது. மனைவியை முறைத்தபடி ரகுவரன் அருகில் வர கண்ணில் தாரை தாரையாக வழியும் நீரோடு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அவரைப் பரிதாபமாகப் பார்த்து வைத்தார் ஜானகி.

வீட்டுக்கு சென்று விடலாம் என்று நினைத்தவர்களை அங்கே இருந்தவர்கள் தடுத்து ஆம்புலன்ஸை வரவழைத்தார்கள். ஆம்புலன்ஸில் ஏற மாட்டேன் என்று அடம் பிடித்த ஜானகியை, "கார், ஆட்டோ மாதிரி இது இப்போ ஜஸ்ட் ஒரு ட்ரான்ஸ்போர்ட் வெஹிகில் தான் ஆன்ட்டி. சாதாரண செக்கப்கு தானே போறோம். ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி அனுப்பிடுவாங்க. பயப்பட ஒன்னும் இல்லை" என்று அங்கே உதவிக்கு வந்த இளைஞர்கள் பலவித சமாதானங்கள் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்த கம்யூனிட்டியில் வசிக்கும் அனைவரது உடல்நிலை பற்றிய அனைத்து விவரங்களும் அந்த மருத்துவமனையில் தனித்தனிக் கோப்புகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஜானகியின் கோப்பில் அவரது வயது, ஆணா/பெண்ணா, உயரம், எடை, ப்ளட் க்ரூப், எத்தனை குழந்தைகள், சிசேரியனா/ நார்மலா என்பது போன்ற பொதுவான தரவுகள் மட்டுமே விரிவாக இருந்தது. மற்றபடி அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, எல்லாமே நார்மல் என்றிருக்க, டாக்டர் குழம்பிப் போனார். இந்த தொடர் இருமல் வரப் பல காரணங்கள் இருந்தாலும், சட்டென்று ஒரு நாளில் இவ்வளவு மோசமாகி விடக் கூடியதல்ல என்பதால் அந்த குழப்பம்.

ஜானகியிடம் கேட்ட கேள்விகளுக்கும் சரியான பதில் இல்லை. அரைமணி நேர விசாரணைக்குப் பின் மருத்துவரால், பல வருடங்களாக அவர் பாடுகிறார் என்று மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது. மற்ற உபாதைகளை எல்லாம் ஜானகி அவ்வப்போது கோடி காட்டினாலும், "இதெல்லாம் யுனிவர்சலா நம்ம ஊர் பெண்கள் எல்லாருக்கும் இருக்கிறது தானே டாக்டர். எனக்கு மட்டும் தனியாவா இருக்கு" என்று வெகு சாதாரணமாகவே சொல்லி முடித்து விட்டார்.

ஆனால் அவரது உபாதைகள் என்று சொன்ன பல விஷயங்கள் ரகுவரனுக்குத் தெரிந்திருக்கவே இல்லை என்பது அவரது திகைத்த பார்வை மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

தேவையான முதலுதவி செய்து, வீக்காக இருக்கிறார் என்று ட்ரிப்ஸ் போட்டு அதிலேயே தற்காலிகமாக மருந்தைச் செலுத்தி, உறக்கத்திற்கும் மருந்து கொடுத்து கூடவே கட்டாயம் செய்ய வேண்டிய டெஸ்டுகள் என்று ஒரு பெரிய லிஸ்ட்டையும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார் டாக்டர்.

"என்ன இந்த டாக்டர்? கிடைச்சது சான்ஸூன்னு இவ்வளவு பெரிய லிஸ்ட்டையே கொடுத்திருக்கார். ஒரு சாதாரண இருமலுக்கு இவ்வளவு அக்கப்போரா? உடம்பு சூடு தான் காரணமா இருக்கும். நல்லா எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சா அடங்கிடப் போகுது" எம்பிபிஎஸ் படிக்காமலே தீர்வு சொன்ன ஜானகியை மற்றவர்கள் முன் கடிந்து கொள்ள முடியாமல் அமைதியாக இருந்தார் ரகுவரன். என் மனைவி, என் உரிமை, என் சொத்து, எங்கள் இருவருக்குள்ளும் ஒளிவு மறைவு என்பதே கிடையாது, மொத்தத்தில் எங்களைப் போல ஒரு ஆதர்ச தம்பதிகள் உண்டா என்று வருடக்கணக்கில் கெத்தாகத் திரிந்தவருக்கு எங்கேயோ சறுக்கிவிட்டது போலத் தோன்றியது.

அவர்களுடன் உதவிக்கு வந்த இளைஞர் பட்டாளம் ஜானகியை அப்படி எளிதில் விட்டுவிடவில்லை. "ஹெல்த் விஷயத்துல எதையும் ஈஸியா எடுத்துக்கக் கூடாது ஆன்ட்டி. அதுவும் இந்த வயசுல, கேர்லஸா இருக்கவே கூடாது" என்று ஒருவன் சொல்ல, இன்னொருவன், "இந்த இருமல் எவ்வளவு நாளா இருக்கு ஆன்ட்டி? நிச்சயம் ரொம்ப நாளா இருக்கணும்.. நீங்க சிங்கர் இல்லையா? குரலுக்காக கவனமா இருந்திருப்பீங்க தானே. அதையும் தாண்டி பிரச்சினை இருக்குன்னு சொன்னா, ஒன்னு உங்க ஜெனரேஷன் லேடீஸ் நிறைய பேர் பண்ற மாதிரி நீங்க கண்டுக்காம இருந்திருக்கணும்.. இல்லேன்னா நீங்களே கைவைத்தியம் பாத்திருக்கணும். பாடும் போது ஏதாவது வித்தியாசமா தோணி இருக்கணுமே?" என்று கேட்டே விட்டான்.

அவனது கணிப்பு சரிதான், ஜானகி சின்னதோ பெரிதோ தனது எந்த உபாதையையும் கணவன் மற்றும் குழந்தைகளிடம் காட்டிக் கொண்டதே இல்லை. ஆனாலும் மூன்றாவது நபரிடம் ஜானகியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. "எனக்கு டஸ்ட் அலர்ஜி ரொம்ப நாளாவே இருக்கு. வீட்டைப் பெருக்கினால் கூட பிரச்சினை தான். சில நேரம் வீஸிங் கூட வரும். எப்போதும் பஃப் யூஸ் பண்ணினா சரியா போயிடும். இன்னைக்கு என்னவோ ரொம்ப படுத்திடுச்சு. ஆளாளுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி ஆகிடுச்சு" என்று சலித்துக் கொண்டார். அந்த இளைஞர்களுக்கு விஷயம் புரிந்து அமைதியாகி விட்டார்கள்.

"மறக்காமல் மருந்து சாப்பிடுங்க ஆன்ட்டி. நல்லா தூங்குங்க. நாங்க காலைல எட்டு மணிக்கு வரோம். டாக்டர் சொன்ன டெஸ்ட் எல்லாம் செஞ்சிடலாம். குட் நைட் அங்கிள், டேக் கேர்" என்று அவர்களை வீட்டில் விட்டு கிளம்பி விட்டார்கள்.

கதவைத் திறந்து உள்ளே வந்த ரகுவரனின் கண்கள் கடிகாரத்தை நோக்க, அது இரவு மணி எட்டு என்றது. ஒரு மூன்று மணி நேரத்தில் எத்தனை களேபரம்.

ஜானகி உடைமாற்றச் செல்ல, ரகுவரனுக்குப் பசித்தது. கம்யூனிட்டி கிச்சனில் டின்னருக்குச் சொல்லலாம் என்றால், ஜானகிக்கு அதில் விருப்பம் இருக்காது. "நான் இன்னும் உசிரோட தானே இருக்கேன். கையும் காலும் நல்லாவே வேலை செய்யுது" என்று பொங்கி விடுவார். அமைதியாக கிச்சனை ஆராய்ந்த போது மதியம் செய்த உணவே மீதம் இருப்பது தெரிந்தது. பொரியல் மட்டுமே இல்லை, அதனால் என்ன.. இருக்கவே இருக்கிறது ரகுவரனின் ஃபேவரைட் ரிப்பன் பக்கோடா.

சாம்பார், ரசம் போன்றவற்றை சுடவைத்து டைனிங் டேபிளில் வைத்தார். பல வருடங்களாக ஜானகியின் இரவு உணவு என்பது ஒரு கிண்ணத்தில் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்கும் உணவு போல நான்கு வாய் சாதத்தில் முடிந்துவிடும்.

வெயில் காலம் என்றால் அது தயிர் சாதமாகவும் மழைக்காலத்தில் ரசம் சாதமாகவும் இருக்கும். அதுவும் பஃபே முறையில் அவசர கதியில் கிச்சனுக்குள்ளேயே முடிந்து விடும். குடும்பத்தினர் தவிர மற்ற யாருக்கும் ஜானகி இரவு சாப்பிடுவதே தெரியாது. ரகுவரன் என்றுமே அதையெல்லாம் கவனித்ததே இல்லை.

சமீப காலமாகத் தான் மனைவியையும் தன்னுடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார். சேர்ந்தே சாப்பிட்டாலும் ஜானகி தான் அவரது தட்டைக் கவனித்துப் பரிமாற வேண்டும், அவரது கவனம் எல்லாம் சாப்பிடுவதில் மட்டுமே இருக்கும். இதில் எங்கே மனைவியின் சாப்பாட்டைக் கவனிக்க? இனிமேலாவது கவனிக்க வேண்டும் என்று மனது சொன்னது.

அன்றே அதைச் செயல்படுத்தவும் செய்தார். சாப்பாட்டு நேரம் முடிந்த உடன் அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது.

"ஏங்க! இன்னைக்கு என் முகத்தைப் பார்த்தாலே ராஜூ எனக்குப் பிரச்சினைன்னு கண்டுபிடிச்சுடுவான். கையில வேற இந்த வென்ஃப்ளான எடுக்க வேண்டாம்னு சொல்லிட்டீங்க. அவசியம் ப்ளட் டெஸ்ட் பண்ணியே ஆகணுமா? நான் தான் எனக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்றேனே"

"நீ எப்போ எம்பிபிஎஸ் படிச்ச?" என்று போலியாக வியந்த ரகுவரன், "நாளைக்கு க் கண்டிப்பா ப்ளட் டெஸ்ட் பண்ணியே ஆகணும். உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னு அது சொல்லட்டும். புதுசா உனக்கு வெயின்ஸ் தேடறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தான் தெரியும்" இதுவே என் கட்டளை என்று முடித்துவிட்டார்.

"ம்ச். இப்போ ராஜூ கேட்டா என்ன செய்யலாம்? பேசாம நெட் கனெக்ஷன் கிடைக்காத மாதிரி பண்ணிடலாமா?" தீவிரமாகக் கேட்டாள் ஜானகி.

"ஐடியா நல்லா இருக்கே. ஆனால் இன்னைக்கு ஃபோன்ல உன் மூஞ்சியைக் காட்டலேன்னா நாளைக்கு அவன் கிட்ட நேர்ல காட்ட வேண்டியதா இருக்கும், பரவாயில்லையா" என்ற ரகுவரனின் குரலில் இருந்த நக்கலில் ஜானகியால் திருதிருவென விழிக்கத்தான் முடிந்தது.

"பண்றதை எல்லாம் பண்ணிட்டு இப்போ முழிச்சா என்ன பண்றது? நான் சொல்றது தான் எடுபடல.. அவன் சொன்னாலாவது ஏதாவது உன் மண்டைல ஏறுதான்னு பார்ப்போம்" என்று ராஜூ என்றழைக்கப்படும் நீரஜின் ஃபோனுக்காக காத்திருக்கத் தொடங்கினார்.

ரகுவரனின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், சரியாக இரவு ஒன்பது மணிக்கு, "ஹேய் ரகு தாத்தா! வேர் இஸ் மை ஜானு டார்லிங்?" என்று ஆர்ப்பாட்டமாக வந்த குரலுக்குச் சொந்தக்காரனின் பார்வை ஸ்கீரினில் அங்கும் இங்கும் தேடியது.

"டேய்! என்னை ரகு தாத்தான்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்றது" என்று கோபப்பட்ட ரகுவரனை அவன் கண்டு கொள்ளவே இல்லை. அவன் அப்படிக் கூப்பிடும் போதெல்லாம் அவரது மண்டைக்குள் பாக்யராஜ் வந்து 'ஏக் காவ் மே.. ஏக் கிசான்.. ரகு தாத்தா' என்று ராகத்துடன் சொல்வதை அவரால் தவிர்க்க இயலாமல் போனதால் வந்த கோபம் அது.

"தாத்தாவைத் தாத்தான்னு தான் கூப்பிட முடியும் ரகுத் தாத்தா. " என்று ஒரு வாக்கியத்தில் ஏகப்பட்ட தாத்தா போட்டவனின் குரலில் இருந்த நக்கலில் கொதித்துப் போனாலும் பேரனின் பேச்சு அவரோடு அவனுக்கு இருந்த நெருக்கத்தைக் காட்டியது. அந்த நேரத்தில் அவருக்கு இதமாகவே இருந்தது. கடந்த சில மணி நேரமாக அவர் பட்ட வேதனை அப்படி.

ரகுவரனைப் பொறுத்தவரை தனது கவலைகளையோ உடல் உபாதைகளையோ அவ்வளவு எளிதாக யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டார். ஆனால், மனைவி சற்றே முகம் வாடினாலும் குணா கமல் போல, "எனக்கு என்ன காயம்னாலும்…என் உடம்பு தாங்கிடும்…உன் உடம்பு தாங்குமா' என்னும் நிலைக்குப் போய்விடுவார்.

"ஹோய்.. தாத்தா! என்ன ஏதோ ட்ரீம் லேண்டுக்குப் போயிட்ட மாதிரி இருக்கு? இரண்டே மாசம்.. வெயிட் பண்ணு, உன் எண்பதாம் கல்யாணம் முடிஞ்ச உடனே என் டார்லிங்கோட ஜோடியா ஸ்விட்சர்லாண்ட் போகலாம். கூட நானும் என் ஜோடியோட வருவேன், டீல் ஓகேன்னா சொல்லு. நான் இனிமேல் தான் என் ஜோடியைத் தேடணும்."

"ஓ.. இப்படி சொன்னா நான் உன்னை நம்பிடுவேன்னு நினைப்பா? நீ ஓட்டுற ரீலை எல்லாம் உன் பாட்டி வேணும்னா நம்புவா. நானில்லை" பேரனுக்கு சரியாகப் பேசினார் ரகுவரன்.

"நீ என்னைக்கு தான் என்னை நம்பியிருக்க?" என்று செல்லமாக அலுத்துக் கொண்டவன், "என் டார்லிங் மேல ப்ராமிஸ் தாத்தா. இத்தனை நாள் சீனியர் இரண்டு பேர் இருக்காங்களே ஸ்னோ சுத்தி வந்த பொண்ணுங்களை எல்லாம் கண்டுக்காம விட்டேனா… இப்போ நான் கமிட் ஆக ரெடின்னு டாட்டூ கூட போட்டு பாத்துட்டேன். யாரும் என்னைத் திரும்பிப் பார்க்க மாட்டேங்கறாங்களே.. நான் என்ன செய்வேன்??" என்று புலம்பினான்.

"ஹா… ஹா… ஹா… " என்று சத்தமாகச் சிரித்த ரகுவரன், "உன் கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன், ஏதாவது டிப்ஸ் வேணும்னா கேளுன்னு. அதெல்லாம் நானே பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, இப்போ என்னாச்சு பாரு.. இப்போ கூட ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா சொல்லு" என்று மீண்டும் சிரித்தார்.

"அட போ தாத்தா.. இப்படி ஆகும்னு தெரியுமா? என்னைப் பத்தி என் டார்லிங்க்கு நல்லா தெரியும். அவங்க பார்த்து சொல்லட்டும். அது வரைக்கும் நீ கொஞ்சம் வாயை மூடி பேசவும். இப்போ என் டார்லிங்க சீக்கிரம் கூப்பிடு. இந்த டயத்துக்கு நான் பேசுவேன்னு தெரியும் தானே. இவ்வளவு நேரம் என்ன செய்யறாங்க?" என்று சொன்ன போதே அவன் கண்களில் சந்தேக மின்னல்கள் தோன்றி மறைந்தது.

"ரகுத் தாத்தா! எனி ப்ராப்ளம்? நீ என் கிட்ட எதையாவது மறைக்கிறியா? ஜானு எங்கே? வழக்கமா என்னை முறைச்சிட்டே இரண்டு வார்த்தை பேசற நீ இன்னைக்கு இவ்வளவு நேரம் பேசறேன்னா… சம்திங் ராங்.. என்னாச்சு?" என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ரகுவரன் அமைதியாக இருக்க, தயக்கத்தோடு திரையில் தோன்றிய ஜானகியிடம் பல நொடிகள் நிலைத்துப் பின் ரகுவரனை முறைத்தது நீரஜின் கண்கள்.

ஏற்கனவே சிவந்த நிறத்தில் இருக்கும் ஜானகி இடைவிடாத இருமலால் முகம் இன்னும் செக்கச் செவேலென்று மாறி இருக்க ஒரே நாளில் ஓய்ந்து போய் காணப்பட்டார். கச்சேரி செய்யப்போன ஜானகிக்கு இப்போது வாயைத் திறந்தால் பேச்சே வரவில்லை, இருமல் தான் வந்தது. பாட்டியைக் கூர்ந்து பார்த்தவன்,

"ஒன் மினிட் தாத்தா" என்று அழைப்பை ஹோல்டில் போட்டு லேப் டாப்பில் ஏதோ செய்தான்.

"மா! எங்க இருக்கீங்க?!" என்று தாயை அழைத்தவன் எழுந்து போய்விட்டான்.

"சுத்தம்!! நான் சொன்னது தான் நடக்கப் போகுது. நாளைக்கு ராத்திரி நேர்ல லெக்சர் கேட்கத் தயாரா இரு" என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டார் ரகுவரன்.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
I am guessing some form of Cancer! Thyroid Cancer or Lymphoma... let's wait and watch.

Feeling bad for both of them
 

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
I am guessing some form of Cancer! Thyroid Cancer or Lymphoma... let's wait and watch.

Feeling bad for both of them
stop.. stop.. the story is not dealing with any illness. raghu and jaanu are always romantic you know:cool::cool:
 
  • Love
Reactions: VPR

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
stop.. stop.. the story is not dealing with any illness. raghu and jaanu are always romantic you know:cool::cool:
ஹப்பாடா, என் வயிற்றில் பாலை வார்த்து... அதில் குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய், முந்திரி பிஸ்தா எல்லாம் போட்டுடீங்க... ஷப்பா
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சாதா இருமல் தானே, பெரிய பிரச்சனை ஒண்ணுமில்லையே,, நீரஜ் சூப்பர்👌👌👌, அருமையான பேரன், தாத்தா பாட்டிக்கு ரொம்ப க்ளோஸோ?
 
Top Bottom