• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -2

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -2

பழகிய கால்கள் பூஜையறை நோக்கி நகர கைகூப்பி இறைவனை வணங்கி விட்டு நெற்றியில் திருநீறு வைத்துக் கொண்டு வெளியேறிய ரகுவரனை நெய்யில் குளித்த சூடான பொங்கலும் அதற்குத் தோதாக கத்திரிக்காய் கொத்சும் கூடவே தேங்காய் சட்னியும் வா, வாவென்று அழைத்தது.

என்னதான் மனைவியை கஷ்டப்பட்டு வேலை செய்யாதே என்று கடிந்து கொண்டாலும் அவளது கைமணத்திற்கு ரகுவரனின் நாக்கு அடிமை. திருமணம் ஆன நாள் முதலாய் கணவனின் பசி, ருசியறிந்து செயல்படும் அன்னபூரணி இன்று வேறுவிதமான மனநிலையில் இருந்தாள்.

"என்னங்க? எங்க வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க? மணி ஏழரை ஆகப் போகுது பாருங்க. ஏற்கனவே லேட்டு, மசமசன்னு நிக்காம சீக்கிரம் வாங்க. கோயில் நடை சாத்துறதுக்குள்ள போயிட்டு வந்துடுவோம். ஒன்னாம் தேதியே போகலைன்னா அப்புறம் மாசம் மொத்தமும் தடைப்பட்டுப் போயிடும்." கையில் பூட்டு சாவியுடன் வாசலில் தயாராக நின்ற மனைவியை முறைத்துப் பயனில்லை என்று உணர்ந்த ரகுவரன் பசியை மறந்து அமைதியாக வெளியேற, ஜானகி கதவைப் பூட்டிவிட்டு கணவனுடன் இணைந்து கொண்டாள்.

"இப்படிப் பசியோட கோவிலுக்குப் போறதுக்கு எதுக்கு காலங்கார்த்தால பொங்கல் செஞ்சு வச்சிருக்க?" கோபமாகக் கேட்க நினைத்து ஆதங்கமாக வெளிப்பட்டது ரகுவரனின் கேள்வி. மற்ற நாட்களில் வழக்கமாக அருந்தும் கஞ்சியும் மார்கழி ஸ்பெஷல் பொங்கலால் காணாமல் போய்விட்டது.

"இதென்ன கேள்வி? மார்கழி முதல் நாள் பொங்கல் செய்ய வேண்டாமா? அதுவும், விடியற்காலைல செய்யறது தான் விசேஷம். பொங்கல் செஞ்சுட்டோம்கிறதுக்காக சாப்பிட்டுட்டு கோவிலுக்குச் போக முடியுமா? வந்த உடனே சாப்பிடத் தானே போறோம்"

கணவனின் பசியை ஆற்றாத பொங்கல், ஏற்கனவே சோஷியல் மீடியாக்கள் அனைத்திலும் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருப்பது தெரிந்தால் ரகுவரனின் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ?

"அது சரி, எதுக்கெடுத்தாலும் நல்லா வியாக்கியானம் பேசு. நாம திரும்பி வர்றதுக்குள்ள ஆறிப் போயிடும். கோவிலுக்குச் சாயங்காலம் போனால் ஆகாதா?" சூடான பொங்கல் மிஸ் ஆகுதே என்ற ஆதங்கம் வார்த்தைகளில் வெளிவந்தது.

"திருப்பாவை சொல்றதுக்கு தினமும் காலைல ஆறு மணிக்கெல்லாம் கோவிலுக்கு வரச் சொன்னாங்க, நான் தான் எனக்குப் பனி ஒத்துக்காது வரலைன்னு சொல்லிட்டேன். இப்போ தான் வெயில் வந்தாச்சே, அப்புறம் என்ன?" பொங்கலைப் பற்றிய பேச்சை அப்படியே டீலில் விட்டு கோவிலுக்குப் போவது பற்றிப் பேசிய மனைவியிடம் வார்த்தை வளர்க்க ரகுவரனின் பசி அனுமதிக்கவில்லை.

உர்ரென்று நடந்து வந்த கணவனைக் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் வழிப்பட்டவர்களுடன் எல்லாம் மார்கழி மஹோற்சவத்தைப் பேசிக்கொண்டே நடந்தாள் ஜானகி.

பத்து நிமிட நடையில் அவர்கள் அந்தக் கோவிலை அடைந்த போது ஆண்டாள் சன்னதியில் திருப்பாவையின் இருபத்தைந்தாவது பாசுரத்தைப் பாடிக்கொண்டு இருந்தார்கள். முடிந்த வரை வேகமாகச் சென்று அந்த ஜோதியில் ஐக்கியமான ஜானகி அடுத்த பதினைந்து நிமிடங்கள் கணவனைக் கண்டு கொள்ளவே இல்லை.

வழக்கமாக கோவிலுக்குள் நுழைந்த உடன் பக்திப் பழமாக மாறிவிடும் ரகுவரனை இன்று பசியும் பொங்கலும் ஆக்கிரமித்து இருந்ததால் பக்தி வசப்படவே இல்லை. ஆரத்தி முடிந்து பிரசாதமாக வந்த ஒரு வாய் பொங்கல் ரகுவரனின் பசியை மேலும் கிளறி விட்டது. வீட்டுக்குக் கிளம்பலாம் என்றால் அவளது கூட்டத்துடன்(!?) ஜானகி மும்முரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தாள்.

காலையில் வந்த டென்ஷன் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போன்ற ஒரு விஷயம் அந்தப் பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அது பற்றிய விவரங்கள் தெரியும் போது ரகுவரனுக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஒரு வழியாக ஒரு நாளைக்குப் பலமுறை பார்க்கும் அனைவரிடமும் பிரியாவிடை பெற்ற ஜானகி, அதுவரை மறந்து போயிருந்த கணவனைத் தேடினாள். 'கொஞ்ச நேரம் தேடட்டும், மறைந்து கொள்' என்று ஒரு மனது சொன்னாலும் பசித்த வயிறு மனைவியை நோக்கி ரகுவரனை நடக்க வைத்தது.

"இங்க இருக்கீங்களா? உங்களை எங்கெல்லாம் தேடறது?" என்ற கேள்வியுடன் அருகில் வந்த ஜானகி, "வாங்க! எல்லா சன்னதியும் கும்பிட்டு வந்திடலாம்" என்று அழைத்தாள். ரகுவரனிடம் பதிலை எதிர்பார்க்காமல் நடக்கவும் ஆரம்பித்தாள். சமீபத்தில் கட்டப்பட்ட கோவில் ஆதலால், விநாயகரில் ஆரம்பித்து ஆஞ்சநேயர் வரை பல கடவுள்கள் அங்கே குடியிருந்தனர்.

மார்கழி முதல் நாள் என்று அதிகாலையிலேயே திறந்ததில், பல சன்னதிகள் ஏற்கனவே பூட்டியிருக்க, ஜானகி ஒவ்வொரு சன்னதியிலும் சின்சியராக இரண்டு நிமிடம் நின்று வணங்கி விட்டு நடந்தாள். கஷ்டப்பட்டு பசியைப் பற்றிய சிந்தனையைக் கட்டுப்படுத்திய ரகுவரனும் பக்தியுடன் மனைவியைப் பின்பற்ற, இருவரும் வீடு வந்து சேர்ந்த போது கடிகாரம் காலை மணி ஒன்பதரை என்றது.

வீட்டுக்குள் நுழைந்த உடன் மறந்திருந்த பசி தலைதூக்க, ரகுவரனின் கால்கள் சமையலறை நோக்கிச் சென்றன. கணவனுக்கு முன்பே வேகமாக உள்ளே ஜானகி, இருவருக்குமான பொங்கலைத் தட்டில் பரிமாறி, டைனிங் டேபிளுக்கு எடுத்து வந்தாள். ஆறிப் போன பொங்கல் என்றாலும் பரவாயில்லை என்று
ரகுவரனின் கையும் வாயும் வேகமாக வேலை செய்ய ஆரம்பிக்க, ஜானகி கணவனை முறைத்தாள்.

"ஆனாலும், இன்னைக்கு நீங்க கொஞ்சம் ஓவராத் தான் பண்றீங்க. தினமும் கோவிலுக்கு சாப்பிட்டுட்டா போறோம். இன்னைக்குத் தான் புதுசா கோவிலுக்குப் போறோம்னு நினைப்பா? இந்தப் பழக்கத்தை ஆரம்பிச்சு வச்சது யாரு? இத்தனை வருஷமா இல்லாத பசி, இன்னைக்கு மட்டும் வந்திடுச்சா?" விடாமல் அர்ச்சனை செய்தவளை நிமிர்ந்தும் பார்க்காமல் காரியத்தில் கண்ணாக இருந்த ரகுவரனின் தட்டு மின்னல் வேகத்தில் காலியானது.

திருமணம் ஆகி தனிக்குடித்தனம் வந்த புதிதில், காலையில் தம்பதி சமேதராகக் கோவிலுக்குச் செல்வது நல்லது என்று யாரோ சொல்லக் கேட்டு வருடக்கணக்கில் அதைப் பின்பற்றும் தம்பதியர் அவர்கள்.

வேலை காரணமாக எந்த ஊருக்குச் சென்றாலும் நடக்கும் தொலைவில் ஏதாவது கோவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ரகுவரனின் வழக்கம். அவர்களைப் பின்பற்றி பலரும் அந்தப் பழக்கத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்து இருந்தனர். இப்போது இருவருக்கும் நிறைய நேரம் இருந்ததால் காலை ஒரு வேளை கோவில் தரிசனம் என்று இருந்த நிலை மாறி காலை மாலை என்று இரு வேளையாக மாறி இருந்தது.

"நான் ஆரம்பிச்ச பழக்கம் தான். டிஃபன்னு சாலிடா(solid) எதுவும் சாப்பிடாமல் தான் கோவிலுக்குப் போறோம். ஆனால் டெய்லி ஓட்ஸ், சத்துமாவுன்னு ஏதோ ஒரு கஞ்சியைக் குடிச்சு வயித்தை நிரப்பிட்டு தானே போறோம். பசியோட போனா பக்தி வருமா சொல்லு. எந்தக் கடவுளும் பட்டினி கிடந்து என்னை வந்து பாருன்னு சொல்லவே இல்லை. அதுவும் சுடச்சுட ஒரு பொங்கலைச் செஞ்சிட்டு, அதை ஆறிப்போய் தான் சாப்பிடணும்னு சதி பண்ணினா எப்படி?" நிரம்பிய வயிறு ரகுவரனை நான் ஸ்டாப்பாகப் பேச வைத்தது.

"அது சரி, உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? உங்களைப் பேச விட்டா நான் பூராவும் பேசிக்கிட்டே இருப்பீங்க. அப்போ மட்டும் பசி தாகம் எல்லாம் தெரியாது" என்று ஒரு கொட்டு வைத்தவள்,

"ஆனால் நானும் கூட உட்கார்ந்து இப்படியே பேசிட்டு இருந்தா, மதியம் பூவாவுக்கு என்ன பண்றது? நீங்க ஃபோன்ல யாரையாவது பிடிச்சு உங்க பேச்சுவார்த்தையைக் கன்டிநியு பண்ணுங்க. நான் போய் அடுத்த வேலையை பார்க்கிறேன்" என்று எழுந்து செல்ல, ரகுவரன் வேறு வழியின்றிப் பேச்சை நிறுத்தி விட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க வேண்டியதாயிற்று.

சமையலறை சென்ற ஜானகி, மதிய சமையலுக்கான ஆயத்த வேலைகளை ஆரம்பித்தாள். புளியை ஊற வைத்து, அரிசியையும் பருப்பையும் அடுப்பில் வைத்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு வந்தாள்.

ஃப்ரிட்ஜில் இருக்கும் காய்கறிகளை ஆராய்ந்து, என்ன பொறியல், குழம்பு செய்யலாம் என்று முடிவு செய்து அந்தக் காய்களை அலம்பி அவற்றை நறுக்குவதற்குத் தேவையானவற்றையும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

ஜானகி, இன்னமும் அரிவாள்மனை காலத்தில் தான் இருக்கிறாள். நின்று கொண்டே கத்தியால் காய் நறுக்குவது என்பது அவளுக்குப் பிடிக்காத ஒன்று. முடிந்தால், கேஸ் ஸ்டவ்வைக் கூட கீழே வைத்து பழைய காலம் போல உட்கார்ந்து கொண்டு சமையலை முடித்து விடுவாள். குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் தான் உடலுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு நல்லது என்று தத்துவம் பேசும் ஜெனரேஷனை சேர்ந்தவள்.

அளவுக்கு அதிகமாகவே குனிந்து நிமிர்ந்து வேலை பார்த்து முதுகை பங்க்சர் ஆக்கி, இனிமேல் இதெல்லாம் செய்யவே கூடாது என்று ஒரு பெரிய லிஸ்ட்டையே டாக்டரிடம் வாங்கி வைத்திருப்பவள். ஆனால் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல், சட்டென்று தரையில் உட்காருவது குனிந்து எதையாவது வெயிட்டான பொருளைத் தூக்குவது என்று செய்துவிட்டு நாள் பூராவும் வலியுடன் அவஸ்தைப்படுபவள்.

இந்த விஷயத்தில் ரகுவரனும் தீவிரமாக இருக்கவில்லை என்பதே உண்மை. வீட்டு வேலைகளில் ராமருக்கு அணில் போல உதவி செய்தாலும் பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் ரகுவரனின் சுவை நரம்புகள் மனைவியின் கையால் செய்த பட்சணங்களுக்காக ஏங்கத் துவங்கிவிடும். ஜானகி பவன் என்று கடை துவங்கி விடும் அளவுக்கு வீடு நிரம்பி வழியும். மணிக்கணக்கில் எண்ணெய் சட்டியில் காய்ந்த பிறகு சாப்பிடக் கூடத் தோன்றாமல் ஜானகி அசதியில் படுத்த நாட்கள் அதிகம்.

ரகுவரனையும் நொறுக்கு தீனியையும் என்றுமே பிரிக்க இயலாது. இப்படி வீட்டில் சாதாரணமாக இருக்கும் போது கூட ரகுவரனின் கைக்கும் வாய்க்கும் வேலை இருந்து கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட பத்து கிலோ பிடிக்கும் அளவிளான ட்ரம்களில் ரிப்பன் பக்கோடா, ஓமப்பொடி, முறுக்கு என்று ஏதோ ஒரு பட்சணம் இருக்க வேண்டும்.

அது தவிர பண்டிகை நாட்கள் தனி. வெயில் காலம் வந்துவிட்டால் வடாம் சீசன் வந்துவிடும். இன்று வரை ஜானகியின் இந்த ரொட்டீனில் எந்த மாற்றமும் இல்லை. சொல்லப் போனால் குடும்பம் பெரிதான போது வேலைகள் அதிகமானதே ஒழிய அவளுக்கு ஓய்வென்பதே இல்லை. காலத்திற்கு ஏற்ப புதிது புதிதாகக் கற்றுக் கொண்டு செய்யவேண்டியதாக இருந்தது.

அதுவும், வாராது வந்த மாமணியாக அவர்களது மகள் வந்த பிறகு ஜானகிக்கான ரகுவரனின் பிரியம் பங்கு போடப்பட்டது. மகளின் பங்கு பல நேரங்களில் அதிகமாகப் போகும் போதெல்லாம் அக்மார்க் மாமியாராக மாறி ஜானகியை ஒரு வழியாக்கிவிடுவாள் மகள், தாய் சொல்லைத் தட்டாத தனயனாக ரகுவரன்.

இதோ இப்பொழுது கூட, இவள் ஒரு ஓரத்தில் அமர்ந்து காய்கறி நறுக்க ஆரம்பிக்க, ரகுவரன் கைகளில் ரிப்பன் பக்கோடா சகிதமாக வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு டிவியை ஆன் செய்ய, திரையில் மோகனாம்பாள் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?" என்று பாடிக் கொண்டிருந்தார்.

"ஆஹா.. இவ்வளவு நேரம் போச்சே…" என்ற ஆதங்கத்துடன், இந்தப் படத்தை லட்சத்து ஓராவது தடவையாகப் பார்த்தாலும் ரகுவரனின் ரசனை குறையாமல் இருந்தது.

பத்மினியைச் சிலாகித்துக் கொண்டிருந்த போதே உள்ளே சென்ற பொங்கல் வேலை செய்ய ஆரம்பிக்க, மோகனாம்பாளும், சிக்கல் சண்முகசுந்தரமும் சவால் விட்டுக் கொண்டிருந்த போது ரகுவரனின் குறட்டை சப்தம் அந்த சவாலையும் மீறி ஒலித்தது.

டிவியை ஆஃப் செய்து விடலாம் என்றால் ரிமோட் ரகுவரனின் கைகளில் இருந்தது. கர்ணனின் கவசகுண்டலம் போல ரகுவரனுக்கு டிவி ரிமோட். ரகுவரன் வீட்டில் இருக்கும் போது வேறு யாரும் டிவி பார்த்து விடமுடியாது. அவசரத்திற்கு ஓய்வறை செல்லும் போது கூட ரிமோட்டை பீரோவில் வைத்துப் பூட்டி விட்டுச் செல்லும் உயர்ந்த மனிதன்.

"இந்தப் படத்தில அப்படி என்ன தான் இருக்கோ? எத்தனை தடவை தான் பார்க்கிறது?" என்று சத்தமாக முணுமுணுத்த ஜானகிக்கு படம் பிரச்சினையா அல்லது பத்மினியை ரகுவரன் ரசித்தது பிரச்சினையா என்பதை அவளே அறிவாள். ஒரு பெருமூச்சுடன் வேலையை முடித்த ஜானகியால் சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை. மரத்துப் போன கால்களை மெதுவாக நீட்டிச் சரி செய்தவள் எழுந்திருக்கும் முன் குக்கர் கூவி அழைத்தது.

அந்த சத்தத்தில் திடுக்கிட்டு விழித்த ரகுவரனை, திரையில் "நலந்தானா?" என்று தில்லானா மோகனாம்பாள் கேட்ட கேள்வி நிமிர்ந்து உட்கார வைத்தது. ஆஹா ஓஹோ என்று பாராட்டியபடி ரகுவரன் படம் பார்த்து முடித்த போது மதிய‌ சாப்பாடு தயாராகி இருந்தது.

ரகுவரனின் வற்புறுத்தலால் இருவரும் சேர்ந்தே உணவருந்தினர். ஆஹா ஓஹோ என்று மனையின் சமையலும் பாராட்டியபடி ரகுவரன் ஆனந்தமாகச் சாப்பிட, ஜானகியோ கடனே என்று சாப்பிட்டாள். காரணம் சாப்பாட்டின் ருசி. அவள் செய்த சமையல் தான், அதன் சுவைக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம்.

ரகுவரனுக்கு காரம் என்று ஒரு சுவை இருக்கிறது என்பதே தெரியாது. மிளகாய் என்று சொன்னாலே, அய்யோ காரம் என்று அலறும் பிரகஸ்பதி. வெறும் தேங்காயை அரைத்து வைத்தாலே சட்னி பிரமாதம் என்று புகழும் ரகம். சமீப காலமாக பிபி எகிறிக் கொண்டு இருப்பதால் உப்பையும் குறைத்தாயிற்று. ரசத்தைப் பிரமாதம் என்று ரகுவரன் பாராட்டினால் அதில் உப்பு போட ஜானகி மறந்து விட்டாள் என்று அர்த்தம்.

ரகுவரனுக்கு நேரெதிராக ஜானகிக்கு உப்பு உரைப்பு எல்லாம் தூக்கலாக இருக்க வேண்டும். திருமணம் ஆன புதிதில் இந்த வேறுபாட்டில் திணறியவள் பின்னர் சுதாரித்துக் கொண்டாள். கணவனுக்கு ஏற்றபடி சமையல் செய்ய ஆரம்பித்தாள். அதற்காகத் தனது விருப்பத்தை மாற்றிக் கொண்டாள் என்று இல்லை. தனது சாப்பாட்டில் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகுத்தூள் போன்றவற்றைத் தனியாகச் சேர்த்துக் கொள்வாள். இதனால் முடிந்தவரை கணவனுடன் சேர்ந்து சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவாள்.

ஆனால் வருடங்கள் கடந்து, இப்போது இருவரும் மட்டுமே இருக்கும் போது, ரகுவரன் மனைவியுடன் சேர்ந்து சாப்பிட விரும்பும் போது ஜானகியால் மறுக்க முடிவதில்லை. முகத்தில் எதையும் காட்டாமல் சாப்பிட்டு எழுந்து விடுவாள். கணவன் தனது கைமணத்திற்கு அடிமை என்ற திருப்தியே அவளது விருப்பங்களை இரண்டாம் நிலையில் ஒதுக்கி வைத்தது. அதனால் மனைவியின் பல விருப்பங்கள் ரகுவரனுக்குத் தெரியாமலே போனது. ஆனாலும் ஜானகிக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. தன்னைத் தானே திருப்திப் படுத்தக் கற்றுக் கொண்டிருந்தாள்.

மனைவியுடன் சேர்ந்து சமைத்த பாத்திரங்களை அலம்பி வைத்த ரகுவரன் டிவி பார்த்தபடியே அடுத்த ரவுண்ட் தூக்கத்திற்கு செல்ல, ஜானகி தனது பாட்டுப் புத்தகங்களை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள். இடையில் ஒரு பத்து நிமிடம் இருந்த இடத்திலேயே கையைத் தலையணையாகக் கொண்டு கோழித்தூக்கம் போட்டவள் மாலை நான்கு மணிக்கெல்லாம் காஃபி தயாரிப்பில் இறங்கினாள், கூடவே சூடான பக்கோடா.

மார்கழிக் குளிருக்கு இதமாக காஃபி வித் ஜானு என்று ரசித்துக் கொண்டிருந்த ரகுவரனுக்கு மனைவி அடுத்து சொன்ன வார்த்தைகளில் புரையேறியது.

"ஏங்க! அஞ்சு மணிக்கு கோவில்ல கச்சேரி இருக்கு. நான் தான் முதல் நாள் பாடணும். சீக்கிரம் கிளம்புங்க. நானும் போய் ரெடியாகுறேன்"

"ஜானு…!" என்று பல்லைக் கடித்த ரகுவரனின் அடுத்த வார்த்தைகளைக் கேட்க மனைவி அங்கே இல்லை.

பத்து நிமிடத்தில் பச்சை நிற பட்டுப் புடவையில் காது, மூக்கு, கழுத்து என்று வைரங்கள் மின்ன மஹாலக்ஷ்மி போல வந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்த ரகுவரனுக்கு அந்த நாளின் முடிவை நினைத்துக் கவலையாக இருந்தது.

"ஜானு! காலைல தான் இருமலோட அவ்வளவு சிரமப்பட்டிருக்க.." என்று ஆரம்பித்த ரகுவரனுக்கு ஏதோ தோன்ற, "ஓ.. அப்போ இதனால தான் வீட்டுக்கு வந்ததுல இருந்து இருமலைக் கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்க.. நான் கூட வெயில் வந்த பிறகு கொஞ்சம் பரவாயில்லை.. இருமல் வரல போலன்னு நினைச்சிட்டேன்.

இப்போ அவசியம் பாடணுமா? உன் தொண்டை ஒத்துழைக்குமா? இப்போ வெயில் இருந்தாலும் நேரம் ஆக ஆக பனி ஜாஸ்தி ஆகும். கொஞ்சம் யோசி."

"என்னை மதிச்சு எல்லாரும் அவ்வளவு கேட்கும் போது முடியாதுன்னு எப்படி சொல்றது. அதெல்லாம் எதுவும் ஆகாது. தைரியமா வாங்க."

"ஹுக்கும்.. நீ ஈஸியா சொல்லிடுவ. அப்புறம் நீயும் அவஸ்தைப் பட்டு என்னையும் பேச்சு வாங்க வைப்ப. இன்னைக்கு நான் நிம்மதியா தூங்க முடியாதுன்னு நல்லா தெரிஞ்சு போச்சு. வா, போகலாம்"

முன்ஜாக்கிரதையாக கையோடு ஃப்ளாஸ்க் எடுத்து வந்த ஜானகியை முறைத்து விட்டு ரகுவரன் நடக்க, உள்ளூர ஒரு பயம் இருந்தாலும் அதை கவனமாக மறைத்துக் கொண்டு அமைதியாக கணவனைப் பின்தொடர்ந்தாள் ஜானகி.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
தன்னை, தன் உடல்நிலையை பின்னுக்குத்தள்ளி மற்ற எல்லாவற்றையும் பற்றி கவலைப்படும் அக்மார்க் இல்லத்தரசி ஜானகி. முகத்திற்கு நேரே என்ன நடக்கிறதென்ற கவனம் இல்லாமல் என்றோ ட்ரெண்டிங்கில் இருந்த தில்லானாமோகனாம்பாளை ரசிக்கும் கனவா(ணவ)னாக ரகுவரன்.

இத்தனை உடல் கோளாறுகள் இருக்கும்போது தன் உடல்நிலையை இந்த ஜானகி கொஞ்சம் கவனிக்கூடாதோ! அல்லது, ரகுவரனுக்கு விழிப்புத்தட்ட ஜானகிக்கு ஏதேனும் கொக்கி வைக்கப்போகிறீர்களா? உ-ம். மெனோபாஸ் பிரச்சினை!!!

எங்கிருந்து எந்த ரூபத்தில் திருப்புமுனை வரப்போகிறதென்று காண ஆவலாக இருக்கிறேன்.
 

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
தன்னை, தன் உடல்நிலையை பின்னுக்குத்தள்ளி மற்ற எல்லாவற்றையும் பற்றி கவலைப்படும் அக்மார்க் இல்லத்தரசி ஜானகி. முகத்திற்கு நேரே என்ன நடக்கிறதென்ற கவனம் இல்லாமல் என்றோ ட்ரெண்டிங்கில் இருந்த தில்லானாமோகனாம்பாளை ரசிக்கும் கனவா(ணவ)னாக ரகுவரன்.

இத்தனை உடல் கோளாறுகள் இருக்கும்போது தன் உடல்நிலையை இந்த ஜானகி கொஞ்சம் கவனிக்கூடாதோ! அல்லது, ரகுவரனுக்கு விழிப்புத்தட்ட ஜானகிக்கு ஏதேனும் கொக்கி வைக்கப்போகிறீர்களா? உ-ம். மெனோபாஸ் பிரச்சினை!!!

எங்கிருந்து எந்த ரூபத்தில் திருப்புமுனை வரப்போகிறதென்று காண ஆவலாக இருக்கிறேன்.
மெனோபாஸா ... இது அதையும் தாண்டி ...:p:p
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
மெனோபாஸா ... இது அதையும் தாண்டி ...:p:p
அச்சச்சோ! இப்போவே என் கற்பனைக்குதிரை கன்னாபின்னாவென்று பறக்கிறதே
 
Top Bottom