• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 17

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 17



பொதுவாகவே ஒரு வீட்டில் திருமண வயதில் பெண் இருந்தால் அவளைக் கரையேற்றிவிட்டுத் தான் மகனது திருமணத்தைப் பற்றி யோசிப்பார்கள். இங்கே பைரவிக்கு பதினெட்டு வயது தான் முடிந்திருந்தது. இருபத்து நான்கு வயது மகன் திருமணம் செய்து வைக்க கேட்கிறான் என்பதால் பதினெட்டு வயதில் மகளுக்கு திருமணம் செய்ய ரகுவரன் தம்பதியருக்கு விருப்பமில்லை. பெண்ணுக்கு ஒரு டிகிரியாவது வேண்டும் என்ற காலம் போய் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கத் தொடங்கிய காலம் அது. கம்ப்யூட்டர் என்ற ஒரு பொருள் உலகத்தையே ஆட்டுவிக்கத் தொடங்கி இருந்தது.



ரகுவரனைப் பொறுத்தவரை சுந்தரம் வேலை கிடைத்துவிட்டது என்று சொன்னபோது தனது சுமையை இறக்கி வைக்கத் தோள் கிடைத்துவிட்டது, இனிமேல் தான் சற்றே இளைப்பாறலாம் என்று நினைத்துக் கொண்டார். மூத்த மகன் வேலைக்குச் சென்று பொறுப்பாக வீட்டைப் பார்த்துக் கொள்வான் என்று ரகுவரன் எப்படி நம்பினார் என்று தெரியவில்லை. உண்மையில் அவன் தந்தையைப் போலவே தான் இருந்தான். பதினாறு வயதில் தனக்கான வழியைத் தானே தேர்ந்தெடுத்து குடும்பத்தைப் பற்றிய யோசனை இல்லாமல் கிளம்பிய ரகுவரனைப் போலத் தான் அவன் இருந்தான்.



கொஞ்சம் படித்து சம்பாதிக்க ஆரம்பித்த உடன் பெற்ற தந்தைக்கே உபதேசம் செய்த ரகுவரனைப் போலத் தான் அவன் இருந்தான். தம்பிகளைப் பற்றிய அக்கறை எல்லாம் இருக்கிறதா இல்லையா என்று எப்போதும் தெரியப்படுத்தாத ரகுவரனைப் போலத் தான் அவன் இருந்தான். இதையெல்லாம் தாண்டி தனது வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுத்த ரகுவரனின் பக்கா வாரிசாக இருந்தான். மனைவியைப் போற்றும் கணவனாக இருப்பது என்பது ரகுவரனுக்கு மட்டுமே பட்டா போட்டிருக்கிறதா என்ன? அவரது மகன் அப்படி இருந்தால் தப்பா?



இப்படி எல்லாம் மனசாட்சியுடன் சேர்த்து மனைவியும் பாயிண்ட் பாயிண்டாகக் கேள்வி கேட்டதில் ரகுவரன் அமைதியாகி, “சரிப்பா.. உங்க அம்மாவே சொல்லிட்டா.. அப்புறம் அப்பீல் ஏது. நாங்க பொண்ணு பார்க்கலாமா இல்லை அதையும் பார்த்து வச்சிருக்கியா? எதுவானாலும் சொல்லு..‌ பெத்தவங்களா எங்க வேலையைச் சரியா செஞ்சிடுவோம்” என்று அடுத்த கட்டத்துக்கு தாவினார்.



அடுத்த ஒரே மாதத்தில் அவனைப் போலவே கம்ப்யூட்டரைப் படித்திருந்த மீனாட்சியைக் கைப்பிடித்தவன் அமெரிக்கா நோக்கிப் பறந்து விட்டான். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கடந்து விட்டது. இத்தனை வருடங்களில் ரகுவரன் மகனைப் பார்த்த நாட்கள் வெகு சொற்பமே. தம்பி தங்கையின் திருமணத்திற்காக நான்கு நாட்கள் வந்தான்.



ரகுவரனின் அறுபதாம் கல்யாணத்துக்கு விருந்தாளி போல முதல் நாள் காலை வந்து சேர்ந்தான். அடுத்த நாள் மாலையில் கிளம்பி விட்டான். அவன் பங்கு செலவுக்கான பணம் பைசா குறையாமல் அரவிந்தனின் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்தது.



அவன் தான் அப்படி, அவன் மனைவி மீனாட்சி வருடந்தோறும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் தங்கிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டாள். அதனால் சுந்தரத்தின் இரு மகன்களும் உறவுகளை அறிந்திருந்தனர். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பேரப் பிள்ளைகளுடன் பொழுது போக்குவது ரகுவரனுக்குப் பிடித்தமான வேலையாகிப் போனது.



ஜானகியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பேரன்கள் வரும் போது அவளுக்குள் உறங்கும் நளன், பீமன் எல்லாம் விழித்துக் கொள்வார்கள். வீடே நெய்யில் மிதக்கும். பெயர் வைத்த, வைக்காத அனைத்து பண்டங்களும் அமெரிக்காவுக்கு பறக்கும்.



அரவிந்தன், பிஈ முடித்து விட்டு வேலைக்குச் சென்றான். மேற்படிப்பு படிக்கலாமே என்று கேட்டதற்கு எம்பிஏ படிக்கப் போகிறேன் என்று சொல்லி விட்டான். இரண்டு வருடங்கள் வேலை பார்த்த பிறகு CAT எழுதி ஐஐஎம் பெங்களூரில் எம்பிஏ சேர்ந்தான். வெற்றிகரமாக படிப்பை முடித்தவனை உள்நாட்டு வெளிநாட்டு வங்கிகள் இரு கரம் நீட்டி வரவேற்றன. ரகுவரன் கூட அவனை லண்டன் அல்லது ஹாங்காங் செல்ல விரும்பினார்.



அரவிந்தனோ லண்டனைத் தலையகமாகக் கொண்ட வங்கி ஒன்றின் சென்னை கிளையில் வேலையில் அமர்ந்தான். மாதத்தின் சில நாட்கள் வெளிநாட்டு வாசமாக இருந்தாலும் வேலையிடத்தை அவன் மாற்றிக் கொள்ளவில்லை. அவனும் வெளிநாட்டில் செட்டிலாகி விடுவான், தாய் வீட்டில் தனது ராஜாங்கத்தை தனியாக நடத்திக் கொள்ளலாம் என்று அவள் கண்ட கனவு பொய்த்துப் போனதால் வந்த ஏமாற்றத்தை காட்ட சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்க ஆரம்பித்தாள்.



பைரவி ப்ளஸ்டூவில் மிகக் குறைந்த மதிப்பெண்களே வாங்கியிருக்க, கல்லூரிகளில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பானது. அவளிடம் அதிகம் பேசாமல் இருந்தாலும் அவளைப் பற்றி அனைத்தும் அறிந்து வைத்திருந்தான் அரவிந்தன். மகளின் மதிப்பெண்களைப் பார்த்த ஜானகி ரகுவரனை நோக்கி நெற்றிக் கண்ணைத் திறக்க அரவிந்தன் அவரது உதவிக்கு வந்தான்.



"அம்மா டென்ஷன் ஆகாதீங்க. அவளுக்கு எப்போதும் படிப்பில் ஆர்வம் இருந்ததே இல்லை. ஒரு விஷயத்தில் அவ உங்களை மாதிரி.. " என்று ஆரம்பித்தவனை உடனே இடையிட்டார் ஜானகி.



"அது தெரிஞ்சு தான் பாட்டு கத்துக்கச் சொன்னேன். ஒரு இடமா உட்கார்ந்தால் தானே!"



"உங்களை மாதிரின்னு சொன்னா உடனே பாட்டு மட்டும் தானா? அவ ரூமுக்குள்ள போய் பாருங்க. நிறைய ஆர்ட் வொர்க் பண்ணுவா, நிறைய டிராயிங் பண்ணி வச்சிருக்கா. பேசாமல் அதுல ஏதாவது கோர்ஸ் சேர்த்து விடுங்க. கண்டிப்பா ஸ்கோப் இருக்கும்."



ரகுவரனும் மகளது திறமைகளைக் கவனித்து இருக்கிறார் என்றாலும் அவரைப் பொறுத்தவரை அவையெல்லாம் வீட்டில் பொழுது போகாத பெண்கள் செய்யும் வேலை. அதிலென்ன எதிர்காலம் என்று இப்போது கூடப் புரியவில்லை.



ஆனால் மகன் சொன்னதை சட்டென்று ஏற்றுக்கொண்ட ஜானகி மகளுக்கு ஏற்ற கலைகளில் என்னென்ன படிப்பு இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்.



அப்படி பைரவிக்காக அவர் தேர்ந்தெடுத்த துறை தான் நகை டிசைன். ஏராளமான நகைகளில் தான் எத்தனை வகைகள், நகையைப் பிடிக்காத பெண்கள் இருக்க முடியுமா?



போனால் போகிறது என்று சேர்ந்தாலும், ஆர்வத்துடன் படித்து முடித்தவளை ஒரு பெரிய நகை பிராண்ட் டிசைனராக அங்கீகரித்தது. தன் கைகளில் காசைப் பார்க்க ஆரம்பித்ததும் பைரவிக்குள் சில வருடங்களாக ஒளிந்திருந்த(ஒளித்து வைக்கப்பட்ட) ஒரிஜினல் பைரவி வெளியே வந்து விட்டாள்.



அந்த சமயத்தில் அவளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் தீர்மானம் செய்து மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். ஒரு சில வரன்களை வடிகட்டி மகளின் அபிப்ராயம் தெரிந்து கொள்ள வேண்டி அழைத்தனர். அரவிந்தன் ஒரு அண்ணனின் கடமையாக அந்த வரன்களின் பின்னணி பற்றி ஆராய்ந்து தந்தையிடம் ஓகே சொன்ன பிறகே மகளிடம் வந்தனர். பைரவி சரியென்று சொன்ன பிறகுதான் மாப்பிள்ளை வீட்டாரைப் பெண் பார்க்க அழைக்க வேண்டும்.



"இந்த ஃபோட்டோ எல்லாம் பாரு பைரவி! உனக்கு யாரைப் பிடிச்சிருக்குன்னு சொல்லு. இவர் பேரு கண்ணன்.." என்று ஒவ்வொரு ஃபோட்டோவாக அவளிடம் காட்டி, பையனின் பெயரில் ஆரம்பித்துத் தேவையான விவரங்களை சொல்லிக் கொண்டே வந்தார் ஜானகி. ரகுவரன் அமைதியாக மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டார்.



அனைத்தையும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினாள் பைரவி. "அம்மா! என் கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? முதல்ல அரவிந்தன் கல்யாணம் நடக்கட்டுமே. அண்ணி கூட கொஞ்ச நாள் இருக்கேனே. நான் கொஞ்ச நாள் வேலைக்குப் போகலாம்னு நினைக்கிறேன். நான் சொல்ற வரைக்கும் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க" என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டு எழுந்து செல்ல முயன்றாள்.



அவளது பேச்சைக் கேட்டுக் கொண்டே அங்கே வந்த அரவிந்தன், அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்.

"இந்த ஆக்டிங் எல்லாம் நாங்க பாசமலர்லயே பார்த்துட்டோம். எனக்காக நீ ஒன்னும் ஃபீல் பண்ண வேண்டாம், என் பொண்டாட்டி கிட்ட நாத்தனார்னு கெத்து காட்ட ரொம்ப ஆசைப்படற போல இருக்கே. ஒண்ணும் தேவையில்லை. இப்போ ஒழுங்கா உட்கார்ந்து அம்மா அப்பா சொல்றதைக் கேளு. உன்னை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு தான் நான் என் பொண்டாட்டியைத் தேடணும்." விளையாட்டாகப் பேசுவது போல் அவளது எண்ணத்தை புட்டு புட்டு வைத்த அண்ணனைக் கண்டு திருதிருவென விழித்தாள் பைரவி. சொன்னது போல தங்கையின் தேர்வைத் தெரிந்து கொண்டு தான் அவளை எழவிட்டான் அரவிந்தன்.



இப்படியாக, பைரவியின் திருமணம் பிரகாஷுடன் நிச்சயிக்கப்பட்டது. பிரகாஷ் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்ட எம்என்சி ஒன்றின் சென்னை கிளையில் இன்டர்னல் ஆடிட்டராக இருந்தான். சீர் வரிசை பற்றி மாப்பிள்ளை வீட்டார் எதையும் பேசவில்லை. திருமணத்தை நல்லபடியாக நடத்தித் தரவேண்டும் என்பது மட்டுமே அவர்களது விருப்பமாக இருந்தது. அவர்களுக்கு பதிலாக பைரவியே தனக்கு வேண்டிய அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.



"அவங்க ரெண்டு பேரும் இன்ஜினியரிங் படிச்சாங்களே.. என்னை ஏதோ ஒரு கோர்ஸ்ல தானே சேர்த்து விட்டீங்க" என்று ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நகையோ பணமோ கொடுத்து ஈடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தாள்.



"அது சரி.. நீ ஒவ்வொரு கிளாஸ்லயும் ஸ்ட்ராங்கா போட்ட ஃபவன்டேஷனுக்கு ஆன செலவை விட நாங்க இன்ஜினியரிங் படிச்ச செலவு கம்மி தான்" என்று கேலி செய்தான் அரவிந்தன்.



ரகுவரனும் ஜானகியும் மகளது வாதாடும் திறமையைக் கண்டு வியந்து போனார்கள். இதை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கலாமே என்று தோன்றியது.



கடைசியாக பைரவி கேட்டதற்கு எல்லாம் மதிப்பு போட்ட ரகுவரன், திகைத்து நின்றார். மொத்தத்தில் அவரிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தாலும் அவள் கேட்டதை எல்லாம் வாங்கித் தந்துவிட முடியாது. மேலும் சில லட்சங்களாவது தேவைப்படும். இன்னும் நாலைந்து வருடங்கள் மட்டுமே சர்வீஸ் இருந்த நிலையில் ரகுவரன் என்ன செய்வது என்று தெரியாமல் தலைசுற்றிப் போனார்.



தங்கையின் டிமாண்ட் எல்லாம் கேட்ட சுந்தரம், "பாத்தீங்களா உங்க செல்லப் பொண்ணோட லட்சணத்தை?" என்று தான் பேச்சை ஆரம்பித்தான். "அப்பா! என் தங்கை கல்யாணத்துக்கு கண்டிப்பா நான் செய்யத் தான் போறேன். அதுக்காக அவ கேட்கிறதை எல்லாம் கொடுக்கணும்னு கட்டாயம் இல்லை. எப்படியாவது அவளுக்குப் புரிய வைங்க. நீங்க தான் பேசணும், எங்க பேச்சை எல்லாம் அவ கேட்கமாட்டா. தயவுசெய்து அம்மா தலைல இந்த வேலையைக் கட்டாதீங்க. இனிஷியலா செலவு பண்ண பணம் இருக்கா, எவ்வளவு தேவைப்படும்னு சொல்லுங்க. நான் அனுப்பி வைக்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும் பா. ஃப்ரீயா விடுங்க" என்று நல்ல வார்த்தை சொல்லி முடித்துக் கொண்டான். சரியென்று தலையாட்டினார் ரகுவரன்.



"நமக்கு ஏதோ கொஞ்சம் நல்ல வேளை இருக்கும் போல, நான் அவங்களுக்கு அப்புறமா தான் பிறந்தேன். எனக்கு முன்னாடி அவங்களுக்கு செஞ்ச செலவை எல்லாம் கணக்குல வைங்கன்னு சொல்லாமல் விட்டுட்டா" என்று சொல்லி விட்டுச் சிரித்தான் அரவிந்தன்.



அவனது சிரிப்பு அண்ணனையும் தொற்றிக் கொண்டது. "ஏன் நீ வேணும்னா உன் பாசமலருக்கு ஞாபகப் படுத்தேன்" என்று எடுத்துக் கொடுத்தான் சுந்தரம்.



"டேய் அண்ணா!" என்று பல்லைக் கடித்தவன் அண்ணனின் பக்கத்தில் இருந்த அண்ணியைக் கண்டு, "ஸாரி அண்ணி! உங்க புருஷன் கிட்ட சொல்லி வைங்க. ரொம்ப தூரத்தில் இருக்கிறதால ரொம்ப துள்ளுறார். எப்படியும் நம்ம ஏரியாவுக்கு வந்து தான் ஆகணும்" என்று அவளைத் துணைக்கு அழைத்தான்.



இப்படி பல கலாட்டாக்களுடன் பிறந்த வீட்டில் பாதியை எடுத்துச் சென்றாள் பைரவி. திருமண நேரத்தில் செய்தது போதாது என்று, தலைதீபாவளி, பொங்கல், ஆடிப் பண்டிகை என்று வாரிக் கொண்டு போனாள். அதன் பிறகு சீமந்தம், வளைகாப்பு, பிறந்த பிள்ளைக்கு சீர் என்று வரிசையாக செய்து முடித்த போது ரகுவரன் ஓய்ந்து போய்விட்டார்.



அது போதாது என்று, அடுத்து வந்த அரவிந்தனின் கல்யாணத்துக்கு, ரகுவரனின் அறுபதாம் கல்யாணத்துக்கு என்று முடிந்த வரை பிறந்த வீட்டில் இருந்து அள்ளிக் கொண்டு போனாள். அரவிந்தனின் மனைவியாக வந்த நிரஞ்சனா (என்ற ராஜராஜேஸ்வரி) ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினாள். பைரவியின் சாகசங்களை அசால்ட்டாக சமாளித்து மாமியாரை மகளிடம் இருந்து காப்பாற்றிவிடும் வேலையைச் செவ்வனே செய்தாள்.



அண்ணன் வாழ்க்கையில் கலகம் செய்ய அடிக்கடி தாய் வீடு வந்தாள் பைரவி. ஜானகியால் பெற்ற மகளை வராதே என்று சொல்ல முடியாமல் தவிக்க, அந்தப் பிரச்சினைக்கு தீர்வு பைரவியின் கணவன் மூலம் வந்து சேர்ந்தது. மும்பை தலைமை அலுவலகத்திற்கு அவனுக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்க அடுத்த பத்து நாட்களில் வந்து சேர வேண்டும் என்று உத்தரவும் கூடவே வந்து சேர்ந்தது.



பைரவியின் பிறந்த வீட்டினர், "ஹப்பாடா" என்று நிம்மதிப் பெருமூச்சுடன் அவளை வழியனுப்பி வைத்தனர். ரகுவரன் முதல் நிரஞ்சனா வரை யாரும் வாயைத் திறந்து அவளுக்கு ஏதாவது தேவையா என்று கேட்கவே இல்லை. தப்பித் தவறிக் கேட்டு வைத்து அவள் போடும் லிஸ்டில் ஹார்ட் அட்டாக்கை வரவழைத்துக் கொள்ள அவளது பிறந்த வீடு தயாராக இல்லை. அந்த வருத்தத்தை காரசாரமான வார்த்தைகளில் வெளிப்படுத்தி விட்டே மும்பை சென்றாள் பைரவி.



அரவிந்தனுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். இருவரும் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தார்கள். அவர்கள் பிறந்த சில வருடங்களில் ரகுவரன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு என்பதே இல்லாமல் அவரை முழு நேரமும் பிஸியாக வைத்த பெருமை பெரும்பாலும் நீரஜையே சேரும். "ரகுத் தாத்தா!" என்று அழைத்து அவரை அடிக்கடி பல்லைக் கடிக்க வைத்தான். வாலில்லாத வானரமாக, அரவிந்தனுக்கு நேரெதிராக இருந்த பேரனைச் சமாளிக்க நான்கு முறை சாப்பிட்டார் ரகுவரன்.



அவனது சேட்டை எல்லாம் தாத்தாவிடம் தான். பாட்டி என்று வரும் போது சமர்த்து என்பதன் மறுபெயர் நீரஜ் என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொள்வான். "ஜானு! ஓ மை ஜானு டார்லிங்!" என்று அழைத்து ரகுவரனின் காதுகளில் புகையை வரவைப்பான்.



அவனது தங்கை நர்மதா, சுட்டிப் பெண் என்றாலும் அண்ணனைப் போல சேட்டை இல்லை. செல்லம் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து மகளிடம் கற்றுக் கொண்ட பாடத்தை பேத்தியிடம் அப்ளை செய்து விட்டார், ரகுவரன்.



வருடாந்திர விடுமுறையில் சுந்தரத்தின் பிள்ளைகளும் சேர்ந்து கொள்ள வீடு பிள்ளைகளின் அட்டகாசத்தில் களைகட்டும். பைரவியின் பிள்ளைகளும் சில சமயங்களில் மாமன் மக்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அன்னையைப் போல இல்லாமல் சொந்தத்தை நாடுபவர்களாக இருந்ததால் அடுத்த தலைமுறை ஒற்றுமையாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது முதியவர்களுக்கு.



வருடங்கள் உருண்டோடி சுந்தரத்தின் இரண்டு மக்களுக்கும் திருமணம் நடந்தேறியது. அமெரிக்க குடிமக்களான அவர்கள் அவர்களைப் போலவே அங்கே இருந்த குடும்பத்தில் இருந்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்தது என்னவோ சென்னையில் தான். வழக்கம் போல ரகுவரனும் அரவிந்தனும் அனைத்து ஏற்பாடுகளையும் முகம் சுழிக்காமல் செய்து முடிக்க, சுந்தரம் தான் பெற்ற பிள்ளைகளின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் வந்தான்.



இந்த ஒரு விஷயத்தில் யாராலும் அவனை மாற்ற முடியவே இல்லை. அண்ணன் மகளை மருமகளாக்க நினைத்து காய் நகர்த்திய தோல்வியைத் தழுவிய பைரவி, சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள். அவளது பார்வை தற்போது நர்மதாவைக் குறிவைத்துக் காத்திருக்கிறது.



இத்தனை வருடங்களில் நிரஞ்சனா தனது பி.எச்டியை முடித்து விட்டு தனது துறைத் தலைவராகியிருந்தாள். நீரஜ் மருத்துவத்தில் இளங்கலை முடித்து விட்டு முதுகலைப் பட்டம் பெற ராயல் காலேஜ் செல்வதற்கான முயற்சியில் இருந்தான். நர்மதா, சென்னை ஐஐடியில் இளநிலை பட்டம் பெற்று எம்பிஏ படிப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறாள்.



ரகுவரன் எண்பது வயதை நெருங்கிய வேளை அது. மனதளவில் ஆரோக்கியமாக ,"முதுமை எனும் பூங்காற்று…" என்று பேரனுக்குப் போட்டியாகப் பாடுபவர் தான். ஆனாலும் தேக ஆரோக்கியம் என்பது முற்றிலும் மாறுபட்டதாயிற்றே.



தாய் தந்தை இருவரும் தாத்தா பாட்டியுடன் இருக்கிறார்கள் என்ற நிம்மதியுடன் நீரஜ் லண்டன் கிளம்ப நினைத்துக் கொண்டிருக்கும் போது அரவிந்தனும் லண்டன் செல்ல வேண்டிய அவசியம் வந்து சேர்ந்தது. அவர் வேலை செய்யும் வங்கியின் லண்டன் அலுவலகத்தில் இருந்து ஒரு ப்ராஜெக்ட்டை முடித்து தர வேண்டும் என்று கட்டளை இட்டது.



குறைந்தது நான்கு வருடங்கள் அங்கே இருக்க வேண்டும். நான்கு வருடங்கள் என்றதும் நிரஞ்சனாவும் கணவனுடன் செல்ல விரும்பினாள். பெற்றோரை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அத்தனை வருடங்களுக்கு அனுமதி இல்லை.. டூரிஸ்ட் விசாவில் சில மாதங்கள் தங்கிச் செல்லலாம். என்ன செய்வது என்ற குழப்பத்தில் அனைவரும்.



அந்த சமயத்தில் பிரகாஷுக்கு மறுபடியும் சென்னைக்கு மாற்றல் வந்தது. மொத்த குடும்பமும் சென்னை வந்து சேர்ந்தது.



நடக்காது என்று தெரிந்தும் தங்கையிடம் உதவி கேட்டு நின்ற அரவிந்தனுக்கு பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஆலோசனை சொல்லி அனுப்பினாள், ரகுவரன் பாராட்டி சீராட்டி வளர்த்த மகள். அதற்கு முன் சொத்துக்களை பிரித்து விடவும் ஐடியா கொடுத்தாள்.



அவளிடம் சண்டையிடக் கிளம்பிய மகனிடம், "வேண்டாம் ராஜூ. விட்டுடு. அவ அப்படித்தான்னு தெரிஞ்சும் கேட்டது என் தப்பு. நான் எங்க ஆஃபீஸ்ல வேற ஏதாவது ஆப்ஷன் இருக்கான்னு கேட்டுப் பார்க்கிறேன். ஒரு வேளை கட்டாயம் போய்த்தான் ஆகணும்னு சொன்னா, வேற வேலை தேட வேண்டியது தான்" என்று எளிதாகத் தீர்வு சொல்லி விட்டான் அரவிந்தன்.



இளம் வயதிலேயே தாய் தந்தையரை விட்டுப் பிரிய மனமில்லாமல் உள்ளூரில் வேலை தேடிக் கொண்ட அரவிந்தனைப் பற்றி அவனது மகன் நன்கு அறிவான்.



சில நாட்கள் தொடர்ந்து வெளியே சென்று வந்தவன், கண்டுபிடித்த வழி தான் அந்த ரிட்டையர்மென்ட் கம்யூனிட்டி. நகரத்தின் நடுவில் இருந்த அந்த கம்யூனிட்டியில் ஒரு வீட்டை வாங்கியவன் தாத்தா பாட்டியுடன் அங்கே குடியேறினான். பெற்றோரை லண்டன் அனுப்பி வைத்தான். இரண்டு மாதங்கள் வரை அங்கேயே தங்கி இருந்து திருப்தி அடைந்த பின்னரே அவன் லண்டன் கிளம்பினான். ரகுவரனும் ஜானகியும் திருமணம் ஆகிப் பல வருடங்கள் கழித்து தனிக்குடித்தனத்தை ஆரம்பித்தனர். இமைக்கும் நேரத்தில் மூன்று வருடங்கள் கடந்து விட்டது. நீரஜ் மேற்படிப்பு முடித்து அங்கேயே வேலை செய்ய ஆரம்பித்தான்.



தினந்தோறும் தாத்தா பாட்டியுடன் பேசுபவன் அவ்வப்போது நேரில் வந்து பார்த்துச் சென்றான். இருவரும் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுவதில்லை என்று அறிந்த நாள் முதல் தாய்நாடு திரும்பி விட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தான்.



இந்த நிலையில் அவன் எது நடந்து விடக் கூடாது என்று நினைத்தானோ அது நடந்தே விட்டது.



சுந்தரத்தின் மகனுக்கு இப்போது தான் குழந்தை பிறந்திருக்கிறது. கொள்ளுப் பேரனைக் கைகளில் ஏந்தும் நாளுக்காக ரகுவரனும் ஜானகியும் காத்திருக்கும் வேளையில் ஜானகி நினைவிழந்து மருத்துவமனையில் இருக்க ரகுவரன் மனைவி கண்விழிக்கக் காத்திருந்தார்.



இரவு முழுவதும் மாத்திரையின் உபயத்தில் தூங்கிவிட்ட ரகுவரன், விழித்திருக்கும் நேரம் எல்லாம் தனது வாழ்க்கை பக்கங்களை புரட்டியபடி இருந்தார். முதல் நாள் காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜானகி மறுநாள் மாலை வரை நினைவில்லாமல் இருந்தார். மருத்துவனான நீரஜுக்கே பாட்டியின் நிலையை நினைத்துக் கலக்கமாக இருந்தது. அவனது பெற்றோர் எந்த நேரத்திலும் இங்கே வந்து விடுவார்கள். அரவிந்தன் வரும் போது அவனது அன்னை விழித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவசரமாக ஒரு வேண்டுதல் வைத்தான்.



சரியாக அந்த நேரத்தில் மருத்துவர்களின் அழைப்பு வந்தது. தாத்தாவிடம் சொல்லி விட்டு அவசரமாக ஐசியூவில் நுழைந்தவனது பார்வை அங்கே இருந்த பாவையின் மேல் நிலைத்து நின்றது
.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
43
அவனுக்கான ஜோடியை கண்டு பிடித்து விட்டானா.
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
முதலிரண்டு அத்தியாயங்களுடன் இந்த அத்தியாயம் சரியாக நூல் இழை பிரியாமல் கோர்த்துவிட்டது அருமை.

ஆராக்கும் ஈ பாவை?
 
Top Bottom