• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -16

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -16



பைரவி வளர வளர, அசுர வேகத்தில் அவளது பிடிவாதமும் வளர ஆரம்பித்தது. எல்லாம் ரகுவரன் மகளின் மேல் வைத்த கண்மூடித்தனமான பாசம். அவள் எள் என்பதற்குள் அவன் எண்ணெயாக நின்றால பரவாயில்லை, மனைவியும் மகன்களும் சேர்ந்து நிற்க வேண்டும் என்று கட்டளையிட்டான். வழக்கம் போல கணவனுக்காக மகளின் அராஜகத்தை எல்லாம் ஜானகி சமாளிக்க, மகன்கள் தந்தையிடம் இருந்து விலகிப் போக ஆரம்பித்தார்கள்.



ரகுவரனின் சாம்ராஜ்யத்துக்கு அவள் மகாராணியைப் போலவும் அண்ணன்மார் இருவரும் அவளது சேவகர்கள் போலவும் அவள் நடந்துகொண்ட விதம் சகோதரர்களை அவளிடம் இருந்து தூரம் நகர்த்தியது. ஜானகி என்ற பாலம் பிள்ளைகளை பெற்றவனுடன் இணைக்கப் பெரும் பாடு பட்டது. ஆனால் அந்த இணைப்பை எல்லாம் பைரவி என்ற கத்தி தகர்த்து எறிந்து கொண்டே இருந்தது.



காலங்கள் உருண்டோட, பிள்ளைகள் மூவரும் பள்ளிக்குச் செல்லும் போது ஜானகி எம்ஏ. பி.எட் முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தாள். சங்கீதத்தையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவள் அக்கம் பக்கத்தில் இருந்தவருக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் ஆசிரியர் பணியை விட்டு பாட்டையே முழு நேரத் தொழிலாக மாற்றிக் கொண்டாள்.‌



அவள் படித்து முடிக்கும் வரை பிள்ளைகளைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு அந்த தள்ளாத வயதிலும் அவளுக்கு உற்ற துணையாக இருந்த செண்பகம் சில மாதங்களுக்கு முன்பு தான் இறைவனடி சேர்ந்தார். அவரது ஆசைப்படியே ரகுவரன் தான் தாத்தா பாட்டி இருவரது இறுதி காரியங்களை செய்தான். மற்றவர் இதைப் பற்றி விமர்சனம் செய்ய முடியாத வகையில் பெரியவர்கள் இருவரும் முறையாக உயில் எழுதி வைத்திருந்தார்கள்.



பெற்ற கடனுக்கு தனது சித்தப்பாக்களுக்கு விஷயம் சொல்லி விட்டான் ரகுவரன். தாய் தந்தையின் இறுதி சடங்கில் மூன்றாவது மனிதர்கள் போல ஓர் ஓரமாக நின்று விட்டுப் போனார்கள். பாட்டியின் மறைவுக்குப் பின் ஜானகியின் பொறுப்புகள் பன்மடங்காக பெருகி விட்டது. ஆனாலும் தளராமல் இடைவிடாது உழைத்தாள்.



படித்த படிப்பையும் விடாமல் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தாள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு பிள்ளைகளின் படிப்பையும் கவனித்து தனது லட்சியத்தையும் பிடிவாதமாக எட்டிப் பிடித்த ஜானகியைக் கண்டு அவளைச் சேர்ந்த அனைவருமே வியந்து போனார்கள்.



ரங்கநாதன் அவளது பிடிவாதமான வளர்ச்சி கண்டு அரண்டு போனான். அவனுக்கு திருமணம் செய்து அவன் பங்கு சொத்தைக் கொடுத்த போது தான் ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டான். இத்தனை வருடங்களில் அந்தச் சொத்தில் இருந்து ஒரு பைசா கூட எடுக்கப்படவே இல்லை என்பது தான் அது. ரகுவரன், தனது சொந்த சம்பாத்தியத்தில் தான் தன்னைப் படிக்க வைத்துத் திருமணம் செய்து வைத்தான் என்று தெரிந்த போது மனமார ஜானகி மற்றும் ரகுவரனிடம் மன்னிப்பு கேட்டான்.



உள்ளூரில் இருந்தாலும் அவனைத் தனிக்குடித்தனம் வைத்து விட்டான் ரகுவரன். ராமச்சந்திரன், ரங்கநாதன் இருவரும் திருமணம் செய்த பெண்கள் ஜானகிக்கு தூரத்து உறவினர் என்பதால் பிரச்சினை என்று எதுவும் இல்லை. ஆனால், ராமச்சந்திரன் தனியாக இருப்பது போல சின்னவனும் இருப்பது தான் உறவு முறிந்து போகாமல் காக்கும் என்று தனது முடிவில் உறுதியாக இருந்த ரகுவரன் முதல் முறையாக மனைவியின் அதிருப்திக்கு ஆளானான். அவளை மலையிறக்க மூச்சைப் பிடித்துக் கொண்டு பேச வேண்டியதாகிவிட்டது.



“ஜானு! நான் சொல்றத கொஞ்சம் சரியா புரிஞ்சுக்கோ. ராமச்சந்திரன் கல்யாணம் ஆனதிலிருந்து தனியா இருக்கான். ஆரம்பத்துல ரங்கநாதன் சேர்ந்திருக்கலாம்னு சொன்னால் கூட பின்னாடி ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல நாமளும் தனியாவே இருந்திருக்கலாம்னு தோணும்.”



“.....”



சேர்ந்தே இருந்தாலும் நாம பெரியவங்கன்னு ஏதாவது சொல்லப்போக அது அவங்களுக்கு பிடிக்காம போகலாம். அப்போ அவன் வந்து தனியா போறேன்னு சொன்னா, நமக்கு ஏதோ நம்மள குறை சொல்லிட்டு போற மாதிரி தோணும். தேவையில்லாமல் பேச்சு வளரும். இதுக்கெல்லாம் நாம எதுக்கு இடம் கொடுக்கணும். நான் சொல்ல வந்தது புரியுதா?”



“ம்ம்…”



“அப்பா அம்மா கூட இருக்கிறது வேற அண்ணன் அண்ணி என்றால் அது நிச்சயம் வேற மாதிரி தான். நாமளுமே தாத்தா பாட்டி கூட இருந்தாலும் உனக்கு போட்டியா உன்னை வேலை சொல்ற மாதிரி யாரும் இல்லை. இருந்திருந்தால் நாமளும் எப்படி நடந்து இருப்போம் என்று தெரியாது. அதனால மனசுல எதையும் வச்சுக்காம அவங்கள ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வை. உள்ளூர்லயே தான் இருக்க போறோம். தேவையானா நாம தான் முதல்ல போய் நிக்கப் போறோம்.”



“புரியுது.. புரியுது”



“இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. இந்த சின்னம்மாவை எத்தனை நாளைக்கு தான் ராமச்சந்திரன் வச்சுப் பராமரிப்பான். இப்பவே அங்கே என்னென்னவோ நடந்திருக்கோ, நம்ம கிட்ட எந்த பிரச்சனையும் அவன் கொண்டு வரலை. அதனால அங்கே எல்லாமே நல்லா போயிட்டிருக்குன்னு சொல்லிட முடியாது.”



“அச்சோ.. ஆமாங்க. ஒரு பத்து நாள் கூட இருந்ததே எனக்கு தலை சுத்திடுச்சு. இத்தனைக்கும் நான் அவங்க கிட்ட இருந்து ஒதுங்கிப் போனேன். இழுத்து வச்சு பத்து நிமிஷம் பேசினதுலயே அவங்க எப்படின்னு தெரிஞ்சது. இந்த மைதிலி என்ன பண்றா, எப்படி சமாளிக்கிறான்னு தெரியலையே. மூணு வருஷத்துக்கு மேல ஆகுது.”



‘இப்போ வக்கணையா கேளு. அவளும் பாவம் தானே. என்ன தான் நாம பணம் அனுப்பி வச்சாலும் நாள் பூராவும் அவங்களுக்கு சேவகம் செய்யறது அவங்க தானே. இதுக்கிடையில குழந்தை வேற. பிரசவத்திற்கு அவ அம்மா வீட்டுக்குப் போனபோது அங்கே என்ன நடந்ததுன்னு நாம கேட்கக் கூட இல்லை.”



“தப்பு பண்ணிட்டோமோ? நானாவது ராமுவ ஒரு வார்த்தை கேட்டிருக்கணும். அவங்களை இங்கே அனுப்ப சொல்லி இருக்கலாம்.”



“ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோ. அவங்க நம்ம வீட்டுக்கு வரவே மாட்டாங்க. அதனால நீயா எதையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ரங்கநாதனுக்கும் அவங்களுக்கும் நல்லாவே ஒத்துப் போகும்.‌ எட்டு மாசத்துல இருந்து அவன் கூட இருக்காங்க. அந்த பிரியம் அவனுக்கும் இருக்காதா? அதனால் இவங்களைத் தனிக்குடித்தனம் வைக்கிறது தான் நல்லது. ஒரே கல்லுல பல மாங்காய்.”



“அவனையே வீடு பார்க்கச் சொல்லலாமா இல்லை நாம பார்க்கலாமா?” என்று கேட்ட மனைவியைப் பார்த்து பெருமூச்சு விட்டான் ரகுவரன்.



“ஒரு வழியா உன் மண்டைக்குள்ள ஏத்திட்டேன். எனக்கு பேசிப் பேசி டயர்டாகிப் போச்சு. ஸ்ட்ராங்கா ஒரு பூஸ்ட் குடிச்சா தான் தெம்பு வரும்” என்று மனைவியின் அருகில் வந்தவனின் நோக்கம் புரிந்து தள்ள முயன்றாள் அவள். ஆனால் தனது தேவையைப் பெற்ற பிறகே அவளை விடுவித்தான் அவன்.



தம்பியின் தனிக்குடித்தனத்துக்கு ஏற்பாடு செய்தவன் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஊர் சுற்றக் கிளம்பி விட்டான். திருமணம் ஆகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து தனக்கே தனக்கான குடும்பத்துடன் தனியே பதினைந்து நாட்கள் சந்தோஷமாக கழித்தான்.



வட இந்தியாவில் சுற்றுப்பயணம் முடிந்து ஊர் வந்து சேர்ந்தவர்கள், புத்துணர்ச்சி கிடைக்கப் பெற்றவராகத் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர். ரகுவரனின் வேலையிடத்தில் அவனுக்குக் கிடைத்த பதவி உயர்வு அவனை முழு நேரமும் பிஸியாக வைத்திருந்தது. ஜானகி, தனது சங்கீதத்தில் அடுத்த கட்டமாக கச்சேரிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள்.



கேசவன், மகளின் வளர்ச்சி கண்டு குறுகிப் போனார் என்றால் ரகுவரன் மனைவியின் சாதனையில் பெருமிதம் கொண்டான். கூடவே அவளது அவளது நலன் பற்றிய கவலையும் இருந்தது. சமீபத்தில் தான் தங்களுக்கென்று பெரியதாக ஒரு வீடு கட்டிக் கொண்டு குடியேறி இருந்தார்கள். பெரிய வீட்டை நிர்வகிக்க ஜானகி சிரமப்பட்டாள், ரகுவரனால் முன் போல வீட்டில் மனைவிக்கு உதவ முடியவில்லை.



“உன் உடம்பையும் கொஞ்சம் கவனி ஜானு. நிறைய வேலையை இழுத்து விடாத. என்னாலயும் இப்போ வீட்டுல எந்த உதவியும் செய்ய முடியலை. சுத்து வேலைக்கு ஆள் வச்சுக்கோன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற.”



“தேவைப்பட்டால் நானே ஏற்பாடு பண்ணிடுவேன். நீங்க கவலைப் படாதீங்க” என்று ஒரு வரியில் அவனை அடக்கி விடுவாள். அதற்கான அவளது காரணமே வேறு என்பதை ரகுவரன் புரிந்து கொண்ட போது, அழுவதா சிரிப்பதா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான்.



மனைவியின் பேச்சையும் மீறி வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண்ணை நியமித்தான் ரகுவரன். சிறு வயது பெண் என்று முதலில் மறுத்த ஜானகி திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயானவள் என்று தெரிந்த பிறகே அந்தப் பெண்ணை வீட்டினுள் அனுமதித்தாள்.



வேலை கிடைத்த சந்தோஷத்தில் அந்தப் பெண் சில வார்த்தைகள் ரகுவரனிடம் பேசிவிட்டுச் செல்ல, அவனும் சிரித்தபடி அவளுக்குப் பதிலளிக்க, மறுநாளே அவளது வேலை பறிபோனது.



இவ்வாறு ஒரு நாலைந்து வேலையாட்கள் நின்ற பிறகே அதன் பின்னணியை கூர்ந்து கவனித்தான் ரகுவரன். ‘ஓ.. நான் அவங்க கிட்ட பேசியதால வேலை போயிடுச்சா? அட லூசு.. உன் பொஸஸிவ்நெஸ்ஸுக்கு ஒரு அளவில்லையா?’ என்று மனதுக்குள் சிரித்தவன், அவளிடத்தில் தான் இருந்தாலும் இதை விட பிரமாதமாக ரியாக்ட் செய்திருப்பேன் என்று புரிந்தவனாக அமைதியாக இருந்தான். சொந்த தம்பியிடம் ஜானகி பேசுவதையே அவனால் தாங்க முடியாது, மனைவியின் அருகில் வந்து நின்று கொள்வான். இவ்வளவு ஏன்? பிரசவ காலங்களிலும் கூட அவளைத் தனியே தாய் வீட்டில் விடாத கணவன் அவன்.



சில தினங்களில் ஜானகியால் வேலைப்பளுவைத் தாங்க முடியாமல் போக ஒரு நடுத்தர வயது பெண்மணியை வேலைக்கு அமர்த்தினாள். இப்போது முன் ஜாக்கிரதை முத்தம்மாவாக ரகுவரன் இல்லாத நேரமாக அவளை வரவழைத்தாள்.



சில முறை காலண்டர்கள் மாறியது. மூத்தவன் பள்ளி இறுதித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தான். இளையவன் பத்தாம் வகுப்பு தேர்வெழுதக் காத்திருந்தான். மகள் ஒவ்வொரு ஆண்டும் அடித்தளத்தை ஆழமாகப் போட்டு இப்போது தான் ஐந்தாவது வகுப்பை எட்டிப் பிடித்திருந்தாள். அவள் வயதுக்கு இந்நேரம் ஏழாம் வகுப்பில் இருக்க வேண்டும். அவளைப் படிக்க வைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டாள் ஜானகி. விளைவு என்னவோ பூஜ்ஜியம் தான். எல்லாம் ரகுவரன் கொடுக்கும் இடம்.



மகன்கள் இருவரும் படிப்பில் சுட்டியாக வகுப்பில் முதலாவதாக இருக்க, மகளோ எதிலும் கவனமின்றி விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தாள். அண்ணன்மார் அவளைக் கவனித்து வழிநடத்த நினைத்தாலும் ரகுவரனின் மகள் மீதான பாசம் அதற்கு அனுமதிக்கவில்லை.



“நீங்க என்னடா என் பொண்ணை அதைச் செய் இதைச் செய்னு சொல்றது? அவளுக்கு எப்போ தோணுதோ அப்போ செய்வாள்” என்று மகளின் முன்னரே மகன்களைப் பேசி வைப்பான்.



“அப்போ, அவளை வேற ஸ்கூல்ல சேர்த்து விடுங்க. இவளால எங்களுக்கும் டீச்சர் கிட்ட கெட்ட பேரு” என்று சுந்தரம் குமுற,



“ஆமாம் பா! இவ ஹோம் ஒர்க் பண்ணலேன்னா கூட மிஸ் எங்களைத் தான் திட்டுறாங்க. உங்க தங்கச்சி தானே, நீங்க சொல்ல மாட்டீங்களான்னு கேட்கறாங்க. இவ கிட்ட ஒழுங்கா ஹோம் ஒர்க்கையாவது செய்ய சொல்லுங்க. இல்லேன்னா, ஸ்கூல்ல வந்து இது எங்க தங்கச்சி இல்லேன்னு சொல்லிட்டுப் போங்க” என்று தனது கஷ்டத்தைப் பகிர்ந்த கையோடு அதற்கொரு தீர்வையும் உடனடியாகக் கொடுத்த அரவிந்தனைப் பளாரென்று அடித்து விட்டான் ரகுவரன்.



“எதுக்குப்பா அவனை அடிக்கிறீங்க? அவன் சொன்னதுல என்ன தப்பு? இவ ஒழுங்கா படிக்காட்டாலும் பரவாயில்லை, யார் கிட்டயாவது வம்பிழுத்துட்டு வர்றா. ஸ்கூல்ல இவளால டெய்லி எங்களுக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கு தெரியுமா? டீச்சர் எல்லாம் நீங்க போய் பேரண்ட்ஸ் கிட்ட சொல்லுங்க, இல்லேன்னா அவங்களைக் கூட்டிட்டு வாங்கன்னு எங்க கிட்ட சொல்றாங்க. இவளோட டைரில அவங்க எழுதறதை எல்லாம் அம்மா கிட்ட காட்டறதே இல்லை. சரியான லூசு.. மக்குபிளாஸ்திரி..”



தம்பிக்காக நியாயம் கேட்டதோடு நில்லாமல் தங்கையின் நடவடிக்கைகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் சொல்லித் தந்தைக்குப் புரிய வைக்க சுந்தரம் செய்த முயற்சிகள் வீணாகத் தான் போனது. மகளைத் தனது தாயின் மறுபிறிவியாகவே நினைத்திருந்த ரகுவரன் மகன்களின் குற்றச்சாட்டுகளைக் காது கொடுத்துக் கேட்கவே இல்லை. மகளைக் கடிந்து ஒரு வார்த்தை சொல்லாதவன் இரு மகன்களையும் வார்த்தையால் மட்டும் இன்றி கையாலும் அடித்து விட்டான்.



அதனைக் கண்டு கைகொட்டிச் சிரித்த பைரவியிடம் இருந்து அண்ணன்மார் இருவரும் ஒதுங்கிப் போனார்கள். அவரவர் வாழ்க்கையில் திருமணம், குழந்தைகள் என்றான பின்னும் அந்த விலகல் தொடர்ந்தது.



இத்தனையும் ஜானகி வீட்டில் இல்லாத நேரத்தில் நடந்திருக்க, விஷயம் அறிந்த ஜானகி கணவனின் முன் சண்டைக்கோழியாக சிலிர்த்து நின்றாள்.



“உங்க மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்குங்க? தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைகளை இப்படித் தான் அடிப்பீங்களா? உங்க பொண்ணு அப்படி என்ன உசத்தி? பிள்ளைகளுக்கு ஓரளவுக்கு தான் செல்லம் கொடுக்கலாம். தட்டி வைக்க வேண்டிய நேரத்தில் செல்லம் கொடுத்தால் அவளுக்கும் நல்லதில்லை, நமக்கும் நல்லதில்லை. என் சொல்பேச்சை அவ மதிக்கிறதே இல்லை.. சரி.. நீங்களாவது புரிஞ்சு அவளுக்கு எடுத்துச் சொல்லுவீங்கன்னு பார்த்தா.. அது இந்த ஜென்மத்தில் நடக்காது போலிருக்கு. தயவுசெய்து அவ உங்க அம்மான்னு சொல்லாதீங்க. உங்க அம்மாவே உயிரோட இருந்தாலும் இவை இப்படி நடந்துக்கறதை அனுமதிக்க மாட்டாங்க.”



படபடவென்று பேசினாலும் ஜானகி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று ரகுவரனுக்கும் புரிந்தது. ஆனாலும்.. மகளின் மேல் வைத்த பாசம் அவனை வழுக்கி விட்டது. தான் இத்தனை சொல்லியும் அமைதியாக நின்ற கணவனைக் கண்டு பொங்கி விட்டாள் ஜானகி.



“நான் இத்தனை சொல்லியும் நீங்க கேட்கலேன்னா, நான் எதுக்கு இந்த வீட்டுல இருக்கணும்” என்றவள் அடுத்து செய்த காரியத்தில் ரகுவரனின் உலகமே ஓர் நொடி தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.



சமையலறையில் இருந்து நேற்று தான் புதிதாக வாங்கிய கத்தியை எடுத்து மணிக்கட்டில் வெட்டிக் கொண்டவளை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்றான் ரகுவரன். அதிர்ச்சியில் அவனது மூளை மரத்துப் போனது. எதேச்சையாக அங்கே வந்த அரவிந்தன் தாயின் நிலை கண்டு அலறினான். அடுத்த நொடியே வேகமாகச் செயல்பட்டு தாயை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தான். வெளியே விளையாடிக் கொண்டிருந்த சுந்தரம் தம்பியின் அலறலைக் கேட்டு தானும் உள்ளே வந்தான். அங்கே இருந்த சூழ்நிலையைப் புரிந்து கொண்டு செயல்பட்டான்.



“அப்பா! அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது. தைரியமா இருங்க” என்று தந்தையை ஆறுதல் படுத்திய சுந்தரம் அவரது கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.



நடந்த அத்தனையையும் வேடிக்கை பார்த்த பைரவி முதல் முறையாக பயந்து போனாள். மணிக்கட்டில் வெட்டிக் கொண்டால் உயிர் போய்விடும் என்ற அளவுக்கு சினிமாக்களின் உதவியால் தெரிந்து வைத்திருந்தாள். ‘அம்மா இல்லாவிட்டால்..’ என்ற நினைவே அவளது பயத்தை அதிகரித்தது.



அந்த பயமெல்லாம் ஜானகி நல்லபடியாக திரும்பி வரும் வரை தான் தாக்குப் பிடித்தது. அதன் பிறகு பழைய பரமசிவமாக மாறித் தனது சுயரூபத்தைக் காட்டிக் கொண்டு தான் இருந்தாள்.



ரகுவரன் தான் ஜானகியின் செயலில் நொந்தே போய்விட்டான். அப்போது கூட அவனுக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. எத்தனையோ முறை மகளைப் பற்றிய பார்வையை மாற்றிக் கொள்வது நல்லது என்று ஜானகி சாதாரணமாகச் சொல்லி இருக்கிறாள்.



அப்பொழுதெல்லாம், “உனக்குப் பொறாமை ஜானு, பொறாமை. உங்க அப்பா உன்னை இந்த மாதிரி ட்ரீட் பண்ணலேன்னு பொறாமை. அதான் என் செல்லக்குட்டி மேல கண்ணு வைக்கிற” என்று விளையாட்டாக ஒதுக்கிவிட்டான்.



கூடவே, “நீ சொன்னதுக்காக எல்லாம் நான் அவளைத் திட்டமாட்டேன். நான் கேசவன் இல்லை, ரகுவரன்” என்று பஞ்ச் டயலாக் வேறு. (ஐந்து வருடங்களுக்கு முன் புற்றுநோயால் அவதிப்பட்டு உயிர் நீத்தார் கேசவன். வேலையில் அவர் செய்த தகிடு தந்தங்கள் தெரிந்து வேலையில் இருந்து நீக்கி விட்டனர். மிகப்பெரிய தொகையைக் கட்டிவிட்டு வெளிவந்த கேசவனுக்கு தனது உடல் நிலை கவலையளித்தது. தகப்பனுக்கு செய்யாத பணிவிடை எல்லாம் மனைவியின் தகப்பனுக்கு செய்து அதில் நிறைவடைந்தான் ரகுவரன்.)



வருடக்கணக்கில் சொல்லியும் கேட்காமல் இப்போது அவளது படிப்பும் குணமும் கேள்விக்குறியாக நிற்கும் நேரத்தில் கூட, மனைவி ஏன் இப்படிக் கடுமையாக நடந்து கொள்கிறாள் என்பதையும் உணர முடியாமல் மகள் மீதான பாசம் ரகுவரனது கண்ணை மறைத்தது.



ஜானகி ஏன் அப்படி செய்தாள் என்பதிலேயே உழன்றவன் வீட்டு விவகாரங்களில் இருந்து மொத்தமாக விலகி இருக்க முடிவு செய்து விட்டான், குறிப்பாக பிள்ளைகள் விஷயத்தில் தலையிடுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டான், அவர்களாகக் கேட்டால் தயங்காமல் ஆலோசனை வழங்கினான். பைரவியின் விஷயத்தில், தாய் சொல்லித் திருந்தவில்லை என்றால் ஊருக்கு முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை வரும் என்று புரிந்து கொண்டான்.



வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டிருந்தது. மகன்கள் இருவரும் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று மேற்படிப்பை சிறந்த கல்லூரிகளில் படித்து முடிக்க பைரவி பதினெட்டு வயதில் பத்தாம் வகுப்பை ஒரு வழியாகப் படித்து முடித்திருந்தாள்.



ஐஐடியில் பிஜி முடித்து வெளிநாட்டு வேலையுடன் வீட்டுக்கு வந்த சுந்தரம், “அப்பா! இன்னும் இரண்டு மாசத்துல நான் வேலைல ஜாயின் பண்ணனும். எனக்கு அங்கேயே தான் செட்டில் ஆகணும், திரும்பி வர்ற ஐடியா இல்லை. நான் கிளம்பறதுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்று கேட்டு ரகுவரனுக்கு ஹார்ட் அட்டாக் வரவைத்தான்.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom